Saturday, March 28, 2015

கொல்லாமை Nonkilling

கொல்லாமை
(தி..இராமலிங்கம்)


முன்னுரை

     ரு மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மற்றொரு மனிதனைக் கொல்வது இவ்வுலகில் நியாயமாக பேசப்படுகின்றது. இப்படியே ஒரு சமுதாயம், நாடு ஆகியவையும் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள மற்றொரு சமுதாயத்தையோ, நாட்டையோ தாக்குகின்றன. இங்கு தாக்குவதும் தாக்கப்படுவதும் ஒரே இனமான மனித இனம்தான் என்பதால், இந்த தாக்குதலை நிறுத்தி, கொல்லாமையை இவ்வுலகம் ஏற்று அதனை உறுதிபட நமக்கு நாமே அறிவித்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மிக உயர்ந்த கொள்கையில் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டியது இந்த காலகட்டத்தில் மிகமிக தேவையான ஒன்றாகும். மனித வாழ்வின் ஒவ்வொரு துறையிலும், தொழிலிலும், உணவிலும், ஆன்மீக நெறியிலும் கொல்லாமை கடைபிடிக்கக்கூடிய, கொல்லாமை மக்களே உலகில் இருக்க வேண்டியது நமது இலட்சியமாக இருப்பினும், இந்த உரையில் கொல்லாமை என்ற சொல் மனிதனை மனிதன் கொல்லாமை என்ற மிகக்குறுகிய பொருளில் கையாளப்படுகின்றது. எனினும் இந்த மிகக்குறுகிய கொள்கை நிறைவேறவே நாம் மிகப்பெரிய திடமான செயல்களை  மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. கொல்லாமை சமுதாயம் சாத்தியாமா? அதற்கு இம்மனித குலம் எடுக்க வேண்டிய திடமான செயல்கள் யாவை? என்பதை நாம் இங்கு சற்று ஆராய்வோம்.

கொல்லாமை சமுதாயம்

      னிதர்களை கொல்லாத, மனிதர்களை கொல்லப்போவதாக அச்சுறுத்தாத, மனிதர்களைக் கொல்லக்கூடிய ஆயுதங்கள் இல்லாத, அத்தகு ஆயுதங்களை பயன்படுத்தத் தேவையில்லாத, தான் நிலைத்திருக்க அல்லது மாற்றமடைய கொலை அல்லது கொலை அச்சுறுத்தலை பெற்றிராத, மனித உயிரைப் போக்குவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத, ஆயுதங்களன்றி கை, கால்கல் போன்ற மனித உடலுறுப்புகள் மூலம்கூட மனிதர்களைக் கொல்லாத, மரண தண்டனையான கொல்லும் ஆணையும் இல்லாத  சமுதாயமே கொல்லாமை சமுதாயமாகும். இச்சமுதாயத்தை நினைத்துப்பார்க்கவே எவ்வளவு மகிழ்வாகவும், அமைதியாகவும் உள்ளன. ஆனால் மனிதக்கொலைகளை மனிதர்கள் ஏன் புரிகின்றனர் என்பதையும் அதற்கான தீர்வுகளையும் கண்டுபிடித்து அதனை மாற்றியமைத்தால்தான் நாம் கொல்லாமை சமுதாயத்தில் வாழமுடியும்.
 
உள்நாட்டு காரணிகள்
    
     ப்பூமியில் மனிதர்கள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து தங்கள் குழுவிற்காக ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியினை தங்கள் எல்லைகளாக நாற்புரங்களிலும் அமைத்துக்கொண்டு தங்களுக்கென ஒரு வரைமுறைகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு சட்டம் என்ற பெயர் கொடுத்து அச்சட்டத்திற்கு உட்பட்டு அக்குழுக்கள் வாழ வழிவகை செய்துக்கொண்டன. அவ்வாறு வழிவகை செய்துக்கொண்டனவே இப்போது இப்பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் எனலாம்.

     அவ்வாறு தங்கள் குழுக்கள் வாழ வழிவகை செய்யப்பட்ட சட்டத்தை, தங்களது குழுவில் உள்ளவர்கள் யாரேனும் மீறினால் அவர்களுக்கு இன்னென்ன தண்டனை என்பதனையும் ஒவ்வொரு குழுவும் அல்லது நாடும் வரையறுத்துள்ளன. அவ்வாறு வரையறுக்கப்பட்ட தண்டனையில் மனிதக்கொலைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதாவது மரணதண்டனைகளும் உள்ளன.

     கொல்லாமை அரசியல் வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். ஆனால் தற்போது அரசியலின் பல்வேறு மாறுபட்ட பணிகள் வன்முறை வழியாகவே நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. அந்நிலை மாறவேண்டும். உயர்ந்த பட்சம் உயிருள்ள வரை சிறை தண்டனை அளிப்பதே, குற்றம் புரிந்தவர்களுக்கு போதுமானது, என்ற தெளிவு அக்குழுக்களுக்கு அல்லது அந்நாட்டு மக்களுக்கும் அக்குழுவின் தலைமைக்கும் வருதல் வேண்டும். பாலியல் வன்முறைகள், தனி மனிதன் சிலக்காரணங்களுக்காக வேறொரு மனிதனைக் கொல்வது போன்ற மனித தரத்திற்கும் கீழான செயல்களில் ஈடுபடும் மனிதர்களுக்கும் மரண தண்டனை கொடுத்து கொல்லக்கூடிய சமுதாய தலைமை இருக்கக்கூடாது.

     "கொல்லாதிருங்கள்" என்று ஒரு குழுவின் அல்லது ஒரு நாட்டின் மக்கள் அந்தக்குழுவின் தலைக்கு உத்தரவிட்டால், அந்தக்குழு தலைமை, "முழுமனிதராக இல்லாத அவரைக் கொல்லலாம், அல்லது அவர் நமது குழுவிற்கு எதிரி, தீயவன் எனவே அவனைக்கொல்வதே அறம்" என்று கூறும். சில நேரங்களில் அக்குழு மக்களே அக்குழுவில் குற்றம்புரிந்தவர்களை கொன்றுவிடுகின்றனர் அல்லது மரணதண்டனைக்கு அவனை அக்குழு தலைமைக்கு பரிந்துரை செய்கின்றனர். இந்நிலைகளும் மாறுதல் வேண்டும். குற்றம் புரிந்தோருக்கு கொல்லாமை தண்டனை தவிர்த்து வேறு எந்த தண்டனையும் அவனுக்கு கொடுப்பதில் தவறேதும் இல்லை.

     குற்றத்தை தடுக்க மரணதண்டனை தீர்வாக அமையப்பெறவில்லை என்பது நடைமுறையில் தெரியவருகின்றது. சில நாடுகளில் உள்நாட்டு பிரச்சனைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் மரண தண்டனை கொடுத்து நிறைவேற்றி கொண்டே வருகின்றார்கள். எதிர்காலத்திலும் நிறைவேற்றுவார்கள். இதிலிருந்து குற்றம் புரிபவர்கள் பின்னாளில் தனக்குக் கிடைக்க இருக்கும் மரணதண்டனையை நினைத்து பயந்து குற்றம் புரியாமலிருப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது. தற்போது பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளிலும் சிறையில் உள்ள குற்றவாளிகளை இருபது நபர்கள், நாற்பது நபர்கள் என்று தூக்கிலிட்டு கொன்றுக்கொண்டே இருப்பதையும் நாம் காண்கின்றோம். எனினும் அந்நாட்டில் குற்றங்கள் குறையவில்லையே எப்படி? ஆகையால் தனிமனிதன் செய்யும் அதே கொலைக்குற்றத்தை அரசாங்கமும் செய்தல் அறிவீனம். பழிக்குப்பழி என்ற வக்கிர மனப்பான்மை நமது மக்களிடமிருந்து களையப்பட வேண்டும்.

      பாலியல் வன்முறையும், கொலையும் உன்வீட்டில் நடந்தால்தான் அதன் வலி தெரியும்! என சிலர் உணர்ச்சி வேகத்தில் கூறலாம். அதே பழிவாங்கும் உணர்ச்சி எனக்கும் உண்டு என்பதால் என் எதிரி செய்ததை நானும் அவனது குடும்பத்தில் செய்யலாமா? அதற்கு சட்டம் இடம் கொடுக்குமா? கொடுக்காது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டம் கூட கொலை செய்யக்கூடாது என்பதே கொல்லாமை சமுதாயத்தின் நோக்கமாகும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக சாகும்வரை கடுமையான சிறைதண்டனை அளித்தல் வேண்டும் என்பதில் எந்தஒரு மாற்றுகருத்துமில்லை. அல்லது உயர்ந்தபட்ச தண்டனையாளர்களை மருத்துவத்துறையினருக்கு கொடுத்துவிட வேண்டும். அவர்கள் தண்டனை பெற்றவர்களை தங்களது பல்வேறுபட்ட மருத்துவ ஆய்விற்காக அவர்களை சிலமனித உரிமைக்களுக்கு உட்பட்டு பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். இதனால் அவர்களும் சமுதாயத்திற்கு உபயோகமாக இருப்பதுடன் தண்டனைக்கும் உட்பட்டவராகின்றனர்.


மரண தண்டனையை நீக்கிய நாடுகள்:
1971 ஆம் ஆண்டு 16 நாடுகள்
2000 ஆம் ஆண்டு 73 நாடுகள்
2010 ஆம் ஆண்டு 96 நாடுகள்
1971 ஆம் ஆண்டில் 16 நாடுகளாக இருந்தவை, கிட்டத்தட்ட 40 வருடங்களில் 2010 ஆம் ஆண்டு 96 நாடுகளாக கூடியுள்ளன. அதாவது 80 நாடுகளும் அந்த 16 நாடுகளுடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. மரணதண்டனையை நீக்கியதால் குற்றச்செயல்கள் அந்த 16 நாடுகளில் அதிகரித்து இருக்குமேயானால் கூடுதலாக 80 நாடுகள் எப்படி தங்களது நாட்டில் மரணதண்டனையை ரத்து செய்திருக்கும்? எனவே மரணதண்டனை என்பது குற்றங்களைக் குறைக்க கொடுக்கப்படும் தண்டனை என்று சொல்வது தவறு. அது பழிக்குப்பழியாகவும், தங்களது வக்கிர மனப்பான்மையை தீர்த்துக்கொள்ளவுமே ஒரு அரசால் நிறைவேற்றப்படுகின்றது என்பதே உண்மை. இதனால் பழிவாங்கும் வன்முறை செயல்கள் ஒரு வட்டம்போன்று முடிவில்லாமல் அந்த நாட்டில் நடந்துக்கொண்டேதான் இருக்கும் என்பதும் உண்மையிலும் உண்மை.

     இவ்வாறு உள்நாட்டு காரணங்களால் முதலில் ஒரு அரசு கொல்லும் உரிமையை விடுத்து கொல்லாமையை கையில் ஏந்த வேண்டும். இந்தியா இன்னும் கொல்லாமைக்கு வரவில்லை என்பது இந்திய மக்களான நமக்கெல்லாம் இழுக்கான ஒன்றே. இந்த இந்தியாவில்தான் உலகிலேயே முதன்முதலில் அகிம்சை சமயமான சமண மதம் ரிஷபதேவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இந்தியாவில்தான் புத்தர் பிறந்து கொல்லாமையை வலியுறுத்தினார். இந்த இந்தியாவில்தான் திருவள்ளுவர் பிறந்து கொல்லாமையை வலியுறுத்தினார். இந்த இந்தியாவில்தான் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற கொல்லாமையை வள்ளலார் பிறந்து வலியுறுத்தினார். இந்த இந்தியாவில்தான் அகிம்சையை அரசியலில் கண்டு வெற்றிபெற்ற காந்தி பிறந்து கொல்லாமையை வலியுறுத்தினார். ஆனால் இந்த இந்திய அரசு இன்னும் கொல்லாமையை உணரவில்லை என்பது வியக்கத்தக்கதாகும். இந்த இந்தியாவில் பகவத்கீதை என்ற ஒன்று இந்துக்களின் வேதங்களின் ஒன்றாக கூறப்படுகின்றது. இந்த பகவத்கீதையில் கொல்லும் வன்முறை கருத்துக்களே நிறைந்துள்ளன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஏன் இந்துக்களின் மற்ற வேதங்களில் கூட "உன்னுடைய எதிரியை கொன்றுவிடு" என்ற வன்முறை சொற்களே அதிகம் காணப்படுகின்றது. எனவேதானோ என்னவோ இந்தியாவில் ரிஷபதேவர் முதல் காந்தியடிகள் வரை யார் வந்தாலும் இந்த வேதக்கருத்தினை மாற்ற இதுவரை யாராலும் முடியவில்லை. எனினும் எதிர்காலத்தில் இந்தியாவிலும் கொல்லாமை ஏற்கப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.





வெளிநாட்டுக் காரணிகள்

      வெளிநாட்டினரிடமிருந்து தமது உள்நாட்டு மக்களை பாதுகாக்கவே தற்போதய பெரும்பான்மையான நாடுகள் போர்கருவிகளையும் படைப்பிரிவுகளையும்  உருவாக்கிக்கொண்டுள்ளன என்று நாம் நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஏதேனும் காரணத்தால் ஒரு நாடு மற்றொரு நாட்டை தாக்கினால், தாக்கப்பட்ட நாடும் தன்னை தாக்கிய நாட்டை திரும்பத்தாக்க தயங்காது. ஆக எதிர் தாக்குதலினால் அனைவரும் அழியவே இன்றைய போர்கருவிகளும் படை பிரிவுகளும் பயன்படுகின்றன. குறைந்தபட்சம் எதிர்தாக்குதல் நடத்தவாவது போர்கருவிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றைய நிலையில் தேவைப்படுகின்றது என்பது உண்மை

     "ஒருவரோ, சிலராலோ அல்லது பலராலோ ஆளப்படும் அரசியலில் சொத்துடையவர் ஆயுதம் வைத்துக் கொள்கின்றனர். அடிமைகளை கீழ்ப்படிதலில் வைத்திருக்கவும் எதிரிகள் நம்மை அடிமைகளாக்கி விடாது தடுக்கவும் படைகள் அவசியமாகும்" என அரிஸ்டாட்டில் "அரசியல்" என்னும் தமது நூலில் குறிப்பிடுகின்றார். கொல்லாமை சமுதாயம் சாத்தியமற்றது என்று அமெரிக்காவில் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறும் முக்கியமான மூன்று காரணங்கள்,

     1. மானிடர் இயல்பிலேயே கொலைகாரர்கள், அவர்கள் கொல்வதில் ஈடுபடக்கூடிய சாத்தியமுள்ள மிகவும் ஆபத்தான சமூக விலங்குகள்.

     2. அரிதான வளங்கள் எப்போதும் போட்டியை, பூசலை, கொலையை உண்டாக்கிவிடும்.

     3.    கற்பழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு எப்பொழுதும் இருப்பதால் தமக்கு உறவான பெண்களைக் காக்க ஆடவர் அத்தகையோரைக் கொல்வதற்குத் தயாராக இருக்க வேண்டியுள்ளது.

     கொல்லாமை அரசியல் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்பதற்கு மானிட இயல்பு, பொருளாதார பற்றாக்குறை, பாலியல் தாக்குதல் ஆகிய முக்கிய வாதங்களே போதுமானதாக உள்ளதாக அறிகின்றோம். இதனையும் மீறி ஹிட்லர் போன்றவர்களையும் அவர்களால் ஏற்படும் பேரழிவுகளையும் எவ்வாறு அகிம்சையால் தடுக்கமுடியும்? என்ற பெரும் கேள்விகளுக்கு கொல்லாமை சமுதாயத்தால் பதில்கூற முடியுமா? குடிமக்களை ஆக்கிரமிப்பிலிருந்து காக்கக் கொல்வது நீதியானது என்றே எப்பொழுதும் கருத வேண்டும். குற்றவாளிகளைக் கொல்வதும் அச்சுறுத்துவதும் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும். ஆயுதங்களை யாரும் இல்லாமல் செய்துவிட முடியாது. கொலைக்கான கருவிகள் எப்பொழுதும் இருந்து வரும். கொல்லாமைச் சமூகம் ஒன்று வரலாற்றில் இருந்ததற்கான சான்று இல்லை. அத்தகு சமூகத்தை நினைத்தும் பார்க்க முடியாது என்றெல்லாம் தடைகளுக்கான கருத்துக்கள் வந்துக்கொண்டே உள்ளன.   

     பொதுவான கேள்வி ஒன்றினை ஒருவர் கேட்கும்பொழுது அங்கு தத்துவம் துவங்குகின்றது. மேற்கண்ட கேள்விகளுக்கும் தத்துவார்த்தமாக பதிலை தரவும் முடியும். சாத்தியமற்றது போலத் தோன்றுவதை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலை தேடும்போது ஒரு புதிய அமைதியும், அறிவியலும், நாகரிகமும் தோன்றும். மேற்காணும் மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் "மனிதர்களின் மனம் மாற்றமடைய வேண்டும்" என்பதே அந்த பதில். ஆம், மானிடர்கள் இயல்பிலேயே அகிம்சை வாதிகள் என நினையாது கொலைகாரர்கள் என நினைப்பதும், அரிதான வளங்களை முறைப்படி பகிர நினையாது அதனை ஆக்கிரமிக்க மனம் நினைப்பதும், சகோதரத்துவத்தை மனம் நினையாது கற்பழிக்கும் சாத்தியக்கூறுகளை மனம் தேடுவதும்தான் ஒருவனை ஒருசமுதாயத்தை கொலைக்குத் தூன்டுகின்றது.

     அடிப்படை கல்வியில் அகிம்சையை வலியுறுத்தும் பாடங்களை வருகின்ற தலைமுறைகளுக்கு புகுத்துவதினால் மட்டுமே உலக அளவில் மனமாற்றம் அடைந்த கொல்லாமை சமுதாயம் உருவாக முடியும். நடந்து முடிந்துபோன வரலாறு என்ற கொடூர பாடத்திட்டம் அனைத்தும் இவ்வுலகிலிருந்து நீக்கப்பட்டாக வேண்டும். ஏனெனில் இவ்வரலாறுதான் நமது இளைய தலைமுறைகளுக்கு முந்தய கொலைச்செயல்களை எடுத்துரைத்து அதற்காக நாம் பழிவாங்க வேண்டும் என்ற உந்துதலை மறைமுகமாகவோ நேரடியாகவோ எதிர்கால தலைமுறைக்கு எடுத்துச்செல்கின்றது. உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாய கலாச்சாரங்கள், சடங்குகள், சாதிகள், மதங்கள், இனங்களே கொல்லாமை சமுதாயத்திற்கு பெரும் தடைகளாக உள்ளன. எனவே இவைகள் உலக மானிடர்கள் நலம் கருதி இவ்வுலகம் விட்டொழித்து ஓர் புதிய பாதையில் நடைபயில முன்வர வேண்டும்.

     மக்கள் எளிமையாகவும் அகமலர்ச்சியுடனும் இயற்கையுடனும் வாழும் பொழுது போர் ஆயுதங்களை யாரும் பயன்படுத்தவோ உருவாக்கவோ பயிற்சி செய்யவோ மாட்டார்கள். இயல்பான எதிரிகள் என்று சொல்லப்படும் பூனையும் எலியும் கூட்டுறவாக வாழ முடியும் என்பதை அறிவியல் வரலாற்றில் முதல் முறையாக பரிசோதனை வாயிலாக துலேன் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் லொ டசெங் டசை (Tulane University - Loh Tseng Tsai)நிருபித்துக்காட்டியுள்ளார். கொலை மிருகங்கள் பழக்கத்தினாலேதான் அவைகள் கொலை புரிந்து வாழ்கின்றன. அதனை நல்ல முறையில் பழக்குவித்தால் கொல்லாமை மிருகமாக மாற்றமுடியும் என வள்ளலார் தனது திருவருட்பாவில் கூறியுள்ளதை இவ்வாய்வு நிருபிக்கின்றது. மிருகங்களை மனிதர்கள் பழக்குவிக்கலாம், ஆனால் மனிதர்களை யார் பழக்குவிப்பது? பழக்குவிப்பார் இல்லாததால்தான் மனித இனம் மனித இனத்தாலே கொலைசெய்யப்படும் ஓர் அவல நிலையில் இவ்வுலகில் மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்.

     போர்கள் மானிட மனத்தில் தோன்றுவது போல, அமைதியும் மானிட மனதிலேயே தோன்ற வேண்டும். போரைக் கண்டுபிடித்த அதே இனம் அமைதியையும் கண்டுபிடிக்க வேண்டும், கண்டுபிடிக்கும். வரலாற்றில் இதுவரை வாழ்ந்த மக்கள் எவரும் இன்று வாழும் மக்கள் போலத் தங்களது மூளையில் வன்முறை கொலை வெறிப் படிமங்களின் பதிவுகளைப் பெற்றவர்கள் இல்லை எனலாம். அமெரிக்க சமுதாயத்தில் குழந்தைகள் கூட ஆயுதம் ஏந்திக்கொண்டுதான் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆயுதம் வைத்திருக்கவும் ஏற்கவும் மக்களுக்குரிய உரிமையில் தலையிடக்கூடாது என்று அமெரிக்கச்சட்டம் கூறுகின்றது. தற்போது உலகெங்கும் குழந்தைகளுக்கு அதிகாரபூர்வமாகவோ அல்லது மறைமுகமாகவோ வீடியோ கேம் என்ற போர்வையில் போரிடவும், கொலைசெய்யவும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. அவர்களுக்கு வன்முறை உணர்ச்சிகளை குழந்தைப்பருவத்திலேயே ஊட்டப்படுகின்றது.

கொல்லாமை சமுதாயத்திற்கு தீர்வு

            பொருளாதாரத்தில் மேலே உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தையும், போர் தளவாடங்களையும், அணு ஆயுதங்களையும் அவ்வளவு சீக்கிரம் தாங்களாகவே கைவிடுவார்களா? என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கான பதில் உலக மக்களிடம்தான் உள்ளது. 2001 ஆம் ஆண்டின் கணக்கின்படி படைகள் இல்லாத நாடுகள் என 27 நாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டன. ஆனால் இவைகள் அனைத்தும் சிறிய நாடுகள். இவற்றில் 8 நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கு மற்ற நாடுகளிடம் ஒப்பந்தம் போட்டுள்ளன. எப்படியோ படைகள் இல்லாத நாடுகளும் இப்பூமியில் இருப்பதே, கொல்லாமை சமுதாயம் உருவாக்க மானிடர்களால் முடியும் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. இந்த 27 என்ற எண்ணை கூட்டிக்கொண்டே வரவேண்டும் அவ்வளவுதான். ஒவ்வொரு நாடும் தங்களைப் பாதுக்காக்க ஆயுதங்கள் செய்யவே மிக அதிகமான பொருளாதாரத்தை செலவிடுகின்றன. ஒவ்வொரு ஆயுதமும், மிதக்கவிடப்படும் ஒவ்வொரு போர்க்கப்பலும், ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் உணவின்றி பட்டினியாக இருக்கும் மற்றும் ஆடையின்றி குளிரில் நடுங்குபவரிடமிருந்து திருடப்பட்டதாகும். எந்த உண்மையான பொருளில் நோக்கினாலும், இது ஒரு வாழ்க்கை முறையே அன்று.

     கொல்லப்படாமல் இருக்கும் உரிமையையும், கொல்லாமல் இருக்கும் பொறுப்புணர்வையும் உலகளாவிய அளவில் இலக்காகக் கொள்ளவும் அதனை செயல் படுத்தவும், இவ்வுலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஓர் புதிய அமைப்பை ஏற்படுத்தி யாகவேண்டும். அந்த அமைப்பு உலக நீதிமன்றமாக, தன்னுள் அனைத்து அதிகாரங்களையும் உடையதாக விளங்க வேண்டும். இந்த அமைப்பிடம் அனைத்து நாடுகளும் தங்களிடம் உள்ள போர்கருவிகளை, அணு குண்டுகள் முதல் இரட்டை குழல் துப்பாக்கி வரை அனைத்து கருவிகளையும் ஒப்படைத்துவிட வேண்டும். ஒப்படைத்ததை உடனே இந்த அமைப்பு அழித்துவிட வேண்டும். உலக நாடுகள் தங்களுக்குள் ஏதேனும் எல்லை பிரச்சனைகள் மற்றும் அதிகார பிரச்சனைகள் எதுவாக இருப்பினும் இந்த அமைப்பிடம் வழக்கிட்டு அந்த அமைப்பு சொல்லும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த அமைப்பில் அதிகாரம் செலுத்துபவர்கள் ஒருவாராக இருக்கக்கூடாது. பல நாட்டு நீதிபதிகளும் இணைந்தே ஒரு தீர்வை வெளிப்படுத்தும் அமைப்பாக இது இருக்க வேண்டும்.

     இப்படிப்பட்ட உலக அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பின் கீழ் அனைத்து நாடுகளும் வந்துவிடுமானால் இவ்வுலகில் இனி போர் என்ற கொலைச்செயல் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு நாடும் நிம்மதியாக, படைத்தளவாடங்களுக்கு ஒதுக்கும் மிகப்பெரிய நிதியினை இனி அந்தந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தினால் இவ்வுலகம் சுவர்க பூமியாக விளங்கும். தேசப்பற்று இருக்குமே ஒழிய தேசபற்று என்ற போதை மக்களுக்குள் இருக்காது. இந்த தேசப்பற்று என்ற போதையை ஒவ்வொரு அரசாங்கமும் தமது மக்களிடம் ஊட்டி கொலை செய்யவும் கொலைப்படவும் செய்யும் சதி வேலைகளை இனி பார்க்க முடியாது. தற்போது உள்ள ஐக்கிய நாட்டு சபையே இதனை செய்யலாமே என்றால், அதனால் இது முடியாது. ஏனெனில் அதன் அதிகாரம் வல்லரசு நாடுகளிடம் இருக்கின்றது. அதனை அதிகாரம் செலுத்தும் நாடுகள் இருக்கின்றனவே ஒழிய அது அதிகாரம் செலுத்தும் அமைப்பாக தற்போது அது இல்லை. அதனால் இந்த ஐக்கிய நாட்டு சபையை கலைத்துவிடுதல் வேண்டும். அதே பெயரில் மேற்காணும் ஓர் புதிய அமைப்பை தொடங்குவதும் நன்றுஇந்த பெரும் முயற்சி இந்தியாவில் இருந்துதான் தொடங்கப்பெறுதல் வேண்டும். யார் தொடங்குவது என்பதை கூடிய விரைவில் காலம் பதில் சொல்லும்.

            கொல்லாமல் இருக்கும் உறுதியை நம்பிக்கையை செயல்பாட்டினை உலக மக்களுக்கு, உலகத் தலைவர்கள் கொடுக்கக்கூடிய காலம் மிக விரைவில் வரும். கொல்லாமை சமுதாயம் மட்டுமே மிக உயரிய பாதுகாப்பினை இவ்வுலக மக்களுக்கு தரக்கூடிய ஒரே சக்திவாய்ந்த பாதுகாப்பாகும். அணுவில் அமைந்த பேரழிவை தனது பாதுகாப்பாக நினைக்கும் இவ்வுலகம், மிக விரைவில் அன்பெனும் அணுவில் அமைந்த பேரொளியைக் காணும் நேரம் நெருங்கிவிட்டது.


(எழுத்துக்கள் முற்றும், அதன் இயக்கங்கள் தொடரும்)

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqNXpyR1o0TWc5dnc/view?usp=sharing