Sunday, August 28, 2016

அருட்ஜோதி ஆலாபனை - 8


                          அருட்ஜோதி ஆலாபனை





வினைக்கரம் வந்துஆட உனைக்கரம் என்றுஓத
உதைப்படும் கன்மமோட                - அணுவான

இணைப்பதம் கண்டுபாட அணுக்களும் இன்பமாக
இறப்புகள் வென்றுவாழ                 - நிறைவாக

இரக்கமும் இங்குநாட உடல்உயிர் இன்றிஈக
இறைக்கடல் நம்மதாக                    - மனமோக

நிலைக்குறும் அந்தமாக சிலைத்தகும் பெண்மையாக
உனைத்தொடும் பந்தமாக               - மணமாக

மதக்கலம் விஞ்சிஊது மடத்தனம் நஞ்சுஊது
மயக்கமும் அன்றிஊது                    - திடமாக

சமக்களம் என்றுபாடு இறக்கம் விண்டுபாடு
திருச்சபைக் கண்டுபாடு                   - இசையாக

இறைச்சுகம் உண்டுஆடு நடுச்சுடர் ஒன்றிஆடு
அணுக்கம்  அண்டமாடு               - அனலாக

அகச்சுகம் ஒன்றைநாடு அகத்தினம் அண்டநாடு
புறத்தினம்  ண்டைஓடு                  - அறமாக

படுத்திடும் பண்மைசாடு கடத்திடும் வெண்மைகூடு
நடத்திடும் உண்மைவீடு                  - நலமாக

விடத்திலும் பொய்மைசாக சரத்திலும் தின்மைவேக
மனத்திலும் வன்மைபோக              - வருஞ்ஜோதி!
---------------------------------------------------------------------------
 ஈரமன தாயிருக்க ராமலிங் கா - எனக்
காசைமிக தாயிருக்கு ராமலிங் கா

வானமய மாயிருக்க ராமலிங் கா - அந்த
ஞானநட நாடிருக்கு ராமலிங் கா

நாதமய மாயிருக்க ராமலிங் கா - நானும்
பாடஇனி தாயிருக்கு ராமலிங் கா

வீடுஎன நீஇருக்க ராமலிங் கா - நானும்
காடுவிட ஊரிருக்கு ராமலிங் கா

பாடுஎன ஆணையிட்ட ராமலிங் கா - என்னை
நீடுஎன வாழவிட்ட ராமலிங் கா

யாருமறி யாதிருக்க ராமலிங் கா - உடல்
யாவுமதி யாயிருக்கு ராமலிங் கா

நானுமது வாயிருக்க ராமலிங் கா - அருள்
தூதுசொல ஏவதென்ன ராமலிங் கா

காடுமலை போயிருக்க ராமலிங் கா - மனம்
சாகநிலை யாயிருக்கு ராமலிங் கா

மாறுமுட லாயிருக்க ராமலிங் கா - என்னை
றுகெட கூடுவித்த ராமலிங் கா

ஞானஉட லாயிருக்க ராமலிங் கா -  உயிர்
ஊனஉட லாயிருக்கு ராமலிங் கா
--------------------------------------------------------------------------------------
உன்னுருவங் கண்டிடவே ராமலிங் கா -  நானும்
என்னுருவங் கண்டிலனே ராமலிங் கா

மெய்யுருவங் கொண்டிடவே ராமலிங் கா - இந்த
பொய்யுருவங் கொண்டனனோ ராமலிங் கா

அன்பனெனும் சொல்படவே ராமலிங் கா - அந்த
இன்பமதில் சென்றிடவோ ராமலிங் கா

கண்நடுவில் ஊன்றிடவே ராமலிங் கா - அந்த
எண்திரையும் நீங்கிடவா ராமலிங் கா

பஞ்சமுதம் தோன்றிடவே ராமலிங் கா - நின்ற
அன்புமகன் ஏங்கிடவா ராமலிங் கா

என்னறிவும் ஓங்கிடவே ராமலிங் கா - உந்தன்
வெஞ்சுடரில் தூங்கிடவா ராமலிங் கா

கண்நடுவும் தூண்டிடவே ராமலிங் கா - இந்த
மண்வெளியும் ஆண்டிடவா ராமலிங் கா

என்னிதயப் பூக்களிலே ராமலிங் கா - நீயும்
வந்துகளிப் பூட்டிடவா ராமலிங் கா

உன்னறிவுக் கூட்டினிலே ராமலிங் கா - நானும்
என்னறிவைப் போக்கிடவா ராமலிங் கா

உன்னடியன் பாட்டினிலே ராமலிங் கா - நின்று
உன்னுருவம் காட்டிடவா ராமலிங் கா
---------------------------------------------------------------------------------
                                     தி.ம.இராமலிங்கம் – கடலூர்