Saturday, January 25, 2025

தீட்டு

சன்மார்க்கத்தில் சமுசாரிகளில் மாதவிலக்கு, பிறப்பு இறப்பு தீட்டுகள் பற்றி வள்ளற் பெருமான் என்ன கூறுகின்றார்?

Mr.D.Jagadeeswaran - Erode

RAMALINGAM T M


பிறப்பு இறப்பு தீட்டுகள் என்பன சுத்த சன்மார்க்கத்தில் கிடையாது. இதனைப் பற்றி வள்ளற் பெருமான் வெளிப்படையாக ஏதும் கூறவில்லை. எனினும் வள்ளற் பெருமானின் புரட்சி கருத்துக்களை ஆழ நோக்கில், பிறப்பு இறப்பு தீட்டு என்பதைப் பற்றி ஏதும் கூறாமையால், அவர் அதனை முற்றிலும் தவிர்த்திருப்பது நமக்கெல்லாம் புரியவருகின்றது.

இறந்தவர்கள் திரும்ப எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம், எனவே எவ்வளவும் துன்பப் படாமலும் அழுகுரல் செய்யாமலும் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். இறந்தவர்களை தகனம் செய்யாமல் சமாதி வைக்க வேண்டும். ஒரு தினத்திற்குள் (24 மணி நேரத்திற்குள்) தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து அடக்கம் செய்விக்க வேண்டும். அத்தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.” என்று இறப்பு நேரிட்ட இல்லத்தார்களுக்கு வள்ளலார் அறிவுறுத்துகின்றார்.

சடலத்திற்கு மாலை அணிவித்தல், குளிப்பாட்டுதல், புத்தாடை உடுத்தல் போன்ற சடங்குகளை தவிர்க்க வேண்டும். ”கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகவேண்டும்என்பார் வள்ளலார். இங்கே வள்ளலார் இறப்பு நிகழ்ச்சியினை ஒரு துக்க நிகழ்வாக பார்க்கவில்லை. அதனால் இதனை மகிழ்ச்சிகரமாகவும் வள்ளலார் பார்க்கவில்லை. எந்நிகழ்வையும் சமத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்வதாகக் கருதாலம். எனவே இங்கு தீட்டு என்பதை நாம் அறவே புறந்தள்ள வேண்டும். எப்போதும் போல சகஜமாக இருக்கவும் பழகவும் சுத்த சன்மார்க்கத்தில் இடமுண்டு.

இறந்தாரை தூக்கிச்சென்ற பிறகு அவர் இருந்த வீட்டினை சுத்தம் செய்தல், இடுகாடு சென்று வந்தப் பின்பு குளித்தல் போன்ற நிகழ்வுகள் இடம், மனம் சார்ந்த சுத்தத்தை பொறுத்தது. அதனை தடைச் செய்தல் தேவையற்றது. மற்றபடி வேறு எந்த சடங்குகளும் கர்ம காரியங்களும் நினைவாஞ்சலியும் செய்யக்கூடாது. எனவே பிறப்பு இறப்பு தீட்டுகளெல்லாம் சுத்த சன்மார்க்கத்தில் அறவே கிடையாது.

இப்போது நாம் சமுசாரிகளில் மாதவிலக்கு தீட்டு பற்றி வள்ளலார் ஏதேனும் கூறியிருக்கின்றாரா என்று பார்ப்போம்.

நாம் முன்னரே கூறினார்ப் போன்று வள்ளலார் யாதொரு இடத்திலும் எவ்வகையானத் தீட்டுகள் பற்றியும் சொல்லவில்லை. பெண்கள் யோகம் முதலியக் கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என பெண் சமத்துவம் பேசுவார் வள்ளலார். சுத்த சன்மார்க்க அனுபவத்தில் ஆண் என்றும் பெண் என்றும் பாலின வரையறை தோன்றாது என்பார் வள்ளலார். எனவே சமுசாரிகள் என்பதைவிட பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு என்பது ஓர் இயற்கைத் துன்பம் எனலாம். அந்தத் துன்பத்தினால் ஆனவர்கள்தான் நாமெல்லாம். எனவே நமக்கெல்லாம் மூலம் அதுதான். எனவே அதனைத் தீட்டு எனச் சொல்லி, பெண்களை அவமானப்படுத்துவது அறிவின்மை. தீட்டு என்பதெல்லாம் மூடமான சடங்குகள் வழி வருவதால், அச்சடங்குகளை எல்லாம் மிகவும் கண்டித்தவர் வள்ளலார் என்ற நோக்கில் பார்த்தால், வள்ளலார் இந்த மாதவிலக்கு தீட்டு என்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவே நாம் கருதுதல் வேண்டும். பெண்கள் எப்போதும் போல் சகஜமாக இருத்தல் வேண்டும்.

ஆனாலும், இரவில் பெண்ணிடத்தில் தேக சம்பந்தம் செய்தப் பிறகு இருவரும் குளித்துவிட்டு பின்பு வந்து உறங்க வேண்டும் என்பார் வள்ளலார். தேக சம்பந்தம் செய்தலை வள்ளலார் தீட்டாகக் கொள்கிறார். இன்னும் ஆழச் சொல்ல வேண்டுமெனில் பெண்களை தொட்டாலே தீட்டுதான் என்பதாய் வள்ளலார் பல இடங்களில் பெண்களை பற்றி பெண் போகம் பற்றி இழிவாகப் பாடுகின்றார். தன்னுடைய ஆன்மீக இலக்கான மரணமிலா பெருவாழ்வைப் பெறுவதற்கு பெண் போகம் தடையாக இருப்பதால், அவ்வாறு பாடியிருக்கின்றார்,


மின்னைப் போலிடை மெல்இய லார்என்றே
      விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
      புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
      சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
என்னைப் போல்வது நாய்க்க்குலம் தன்னிலும்
      இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே. (திருவருட்பா-2739)
 
புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
      புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
      பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
      மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
      கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே. (திருவருட்பா-2778)

இப்படிப்பட்ட கருத்துக்கள் கொண்ட திருவருட்பாவினை கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.

எனவே தேக சம்பந்தம் தவிர, தீட்டு என்பது எவ்வகையிலும் சுத்த சன்மார்க்கத்தில் கிடையாது என்றே புத்தியை தீட்டு.   

 -T.M.Ramalingam – Cuddalore

 https://vallalarr.blogspot.com/2016/04/blog-post_8.html 

for PDF

https://drive.google.com/file/d/1UVMx8P15WuoxULcjhHX5Ak8cpwx7qlwk/view?usp=drive_link



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.