அருளாளர்
மு.பா. அவர்களின் சத்விசாரம்
1. இந்திரிய ஒழுக்கம் என்ற பகுதியில் மலம் தடைபடுமானால்
சரபேத ஹஸ்த ஸ்பரிச தந்திரத்தாலும் ,மூலாங்கப்
பிரணவ தியானத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளுதல் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் தேவை.
2.நமுதன் முதல் பல நன்மையுமாம்
என்ற வரி அருட்பாவில் உள்ளது. நமுதன் என்ற சொல்லுக்கு என்ன பொருள்.
அகராதியில் கிடைக்கவில்லை.
3.மரணமிலாப் பெருவாழ்வு
என்பதன் விளக்கம் என்ன? நமது பெருமானார் அதை அடைந்தார்களா. அடைந்தார் என்றால் அவர் உடலுடன் இருக்கிறாரா? அவர் அந்த வாழ்வை எப்படி அடைந்தார்?அவர்
அதற்குச் செய்த முயற்சி என்ன?
4. வள்ளலாருக்குப்பின் யாராவது
அந்த மரணமிலாப் பெருவாழ்வை அடைந்திருக்கின்றார்களா?
5. யாராவது அடைந்திருந்தால்
அவர் யார்? யாரும் அடையவில்லை என்றால் ஏன்
அடையவில்லை.
6.நம்மால் அடையமுடியுமா?
முடியாதென்றால் சன்மார்க்கம் என்?
7.அடைய முடியும் என்றால்
என்னென்ன செய்யவேண்டும்
வள்ளலாரின்
இணைய தளத்தில் பங்கேற்கும் அன்பர்கள் இந்த விளக்கங்களில் பங்கு கொண்டால் வழி தெரியாத
என்னைப் போன்றோருக்கு வழி காட்டிய புண்ணியம் கிடைக்குமே? நன்றி வந்தனம்.
மேற்கண்ட 7 விதமான சத்விசாரங்களை திருவருள் ஆட்டுவிக்க,
அருளாளர் மு.பா.ஐயா அவர்கள் துவக்கிவைத்துள்ளார்கள். இதனை விசாரஞ்செய்ய மிக நுண்ணிய அறிவு நமக்கு வேண்டும்.
அருளாளர் மு.பா. ஐயா அவர்களே இதன் விளக்கத்தை கூறும் அளவிற்கு நுண்ணறிவு பெற்றவர்கள்
என்பதில் ஐயமில்லை, எனினும் மற்ற அன்பர்கள்மூலம் இதன் விளக்கத்தைப்பெற்று அதனை திருத்த
முயலுகிறார்கள் என கருதுகிறேன். தற்போதய நிலையில் எமக்கு எந்த அறிவும் இல்லை. இருப்பினும்
ஏதோ ஒரு உள்ளுணர்வு இதனை விசாரஞ் செய்தேயாக வேண்டும் எனத்தோன்ற எழுந்த சிறு விளக்கம்...
விசாரம் எண் 1 : இந்திரிய ஒழுக்கம் என்ற
பகுதியில் மலம் தடைபடுமானால் சரபேத ஹஸ்த ஸ்பரிச தந்திரத்தாலும் ,மூலாங்கப் பிரணவ தியானத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளுதல்
என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் தேவை.
இந்திரிய ஒழுக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று - கன்ம
இந்திரிய ஒழுக்கம், மற்றது - ஞான இந்திரிய ஒழுக்கம். கன்ம இந்திரிய ஒழுக்கத்தில்,
"மலஜல உபாதிகளை அக்கிரமாதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில்,
மித ஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல்,
கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பெளதிக
மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும்
செய்வித்தல்..." (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம் - 413) என்று குறிப்பிட்டுள்ளார்
வள்ளலார்.
மேலும் நித்திய கரும விதியில்,
மலங்கழிக்கின்ற போது, வலது கையால் இடது
பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும்போது, இடது கையால் வலது
பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில்,
வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும்.
மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச்
சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி
கழித்தல் வேண்டும்.
ஜலம் தடைபட்டால், வலது பக்கமாகச் சற்றே
படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜல வுபாதி
கழித்தல் வேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 333)
அதாவது, மல
ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது
மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க
வேண்டும் என்கிறார் வள்ளலார்.
அடுத்து திருவருண்
மெய்ம்மொழி என்னும் பகுதியில்,
மலஜல உபாதைகள் அளவு மீறாமலும் கிரமங்குறையாலும்
அளவை போல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல்...
(திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம் - 460) என்கிறார் வள்ளலார்.
மலஜலத்தைக்குறித்து இந்த மூன்று விளக்கங்கள்
திருஅருட்பா உரைநடைப்பகுதியில் காணக்கிடக்கிறது. இங்கு மலம் ஒன்று, ஜலம் இரண்டு என
மூன்று வகை எனக்கொள்ளவேண்டும். ஜலம் என்பது சிறுநீர் மற்றும் விந்துவைக்குறிக்கும்,
ஆக மலத்தோடு சேர்ந்து மூன்று வகை. மலம், சிறுநீர் தடை ஏற்பட்டால் நித்திய கருமவிதியை
கடைபிடிக்கவேண்டும்.
காலபேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் மலஜலம்
தடைநேர்வது என்பது மேற்சொன்ன மூன்றுவகைகளையும் சேர்த்தே குறிப்பிடுகின்றார். 'மித போகம்'
என்பது விந்து என்ற ஜலத்தை குறித்து நிற்கிறது என்பது தெளிவு.
மலஜலங்கள் தடைபட இரண்டு காரணங்களில்
ஒன்று - காலபேதம் அதாவது சரியான காலத்தில் செய்யாமல் சில உலகியல் காரணங்களால் தள்ளிப்போடுவதால்
ஏற்படும் தடை, மற்றது உஷ்ண ஆபாசம் அதாவது உடல் சூட்டினால் முறைதவறி தடை ஏற்படுதல் ஆகிய
இரண்டு காரணங்களால் ஏற்படும் மலஜல தடைகளை நீக்க 'ஓஷதி வகைகளாலும் பெளதிக மூலங்களாலும் சரபேத
அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும்' ஆகிய நான்கு வழிகளில்
தடையினை நீக்குதல் வேண்டும் என்கிறார்.
1. ஓஷதி வகைகள்: ஒஷதி என்றால்
மூலிகை மருந்து (Medicinal
Herbs),
2. பெளதிக மூலங்கள்: பெளதிக
மூலங்கள் என்றால் பூமியிலிருந்து/மண் மூலக்கூறுகளிலிருந்து கிடைக்கக் கூடிய மருந்துகள்.
உதாரணம் தங்க பஸ்பம். (A
purging medicine; stimulates evacuation of the bowels) . பெளதிகம் என்பதற்கு வள்ளலார்
கூறும் விளக்கம், "பெளதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி
64 பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது ஒருவாறு பூதகாரிய
தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பெள+தீ+அகம்=பெளதீகம். பெள-மூடல், அகம்-உள், தீ-அக்கினி,
ஆதலால் தீயை உள்ளடக்கியது பெளதீகம். தீ என்பது காரண உஷ்ணம், பெளதிகங்களென்பவை வீரம்
பூரம் முதலிய 64 சரக்குகள்" (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம்391)
3. சரபேத அஸ்தபரிச தந்திரம்:
சரம்=மூச்சோட்டம், பேதம்=வேறுபாடு, அஸ்த=மறைந்து,
பரிச=தொடுஉணர்ச்சி, தந்திரம்=புணர்தல்.
அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
4. மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பம்:
ஒன்பது என்னும்
எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது
எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற
எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும்
எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.
ஓம் என்பதே
பிரணவம் ஆகும். ஓம் என்ற பிரணவம் "அ" என்பது எட்டும் "உ"என்பது
இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம். உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது
போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண்
அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு) " உ '
எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு
இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற பிரணவம்
96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை
8 x 2 x 6 = 96.
இங்கு மூலாங்கமாக
விளங்குவது ஓம் என்னும் பிரணவ நாதம் ஆகும். அதனை தியானம் செய்வதின் மூலம் தம் மனதை
உறுதிசெய்துக் கொள்வது. இதன்மூலம் மலஜல தடைகளை நீக்கலாம் என்கிறார்.
மேலும் மூலாங்கப்
பிரணவமாகிய அகர சக்ஷணம் ஒருவாறு,
1. ஊன்றல்
வாமை.
2. சுழித்தல்
ஜேஷ்டை
3. விசிரிம்பித்தல்
ரெளத்திரி
4. மடித்து
மேலேறல் காளி
5. அங்கிருந்து
கீழ்வரல் கலவிகரணி
6. மேல் புடைபெயர்த்தல்
பலவிகரணை
7. கீழ்த்தாழல்
பலப்பிரமதனி
8. கீழ் ஊன்றி
நிற்றல் சர்வபூததமனி
9. வரிவடிவாதல்
மனோன்மணி
இதில் விந்து
நாதம் முதலிய நவநிலைகளு முள. என வள்ளலார் கூறியிருப்பதையும் கவனிக்கவேண்டும். (திருஅருட்பா
உரைநடைப்பகுதி பக்கம்-388)
இவ்வாறு கால பேதத்தாலும்
(வேறு வழியின்றி கட்டாயத்தால்) உஷ்ண ஆபாசத்தாலும் (உடலில் சூடு ஏறி அதன்மூலம் விந்து
வெளியேறும் போது) தடை நேர்ந்தால், அதாவது நமது ஒழுக்கத்திற்கு தடை நேர்ந்தால் மேற்கண்ட
வழிகளில் அதனை நியாயமான முறையில் அத்தடை இனி நேராவண்ணம் மேற்கண்ட நான்கு முறைகளில்
ஏதேனும் ஒருமுறையினை பின்பற்றி கிரம (ஒழுக்க) முறையில் கொண்டுவரவேண்டும் எனலாம்.
விசாரம் எண் 2: நமுதன் முதல் பல நன்மையுமாம்
என்ற வரி அருட்பாவில் உள்ளது. நமுதன் என்ற சொல்லுக்கு என்ன பொருள்.
நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே... (4316)
உரை:
- சான்றாகுபவன்; பொறுப்பாளன். நம்மைத் தாங்கும் பொறுப்பு
முதல் நலம் பலவும் தருபவன் எனக் குறித்தற்கு, “நமுதன் முதற் பல நன்மையுமாம் ஞான வமுதர்”
எனக் கூறுகின்றார். நமுதன் - நமோது எனவும் வழங்கும். (இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட
விளக்கம்)
விசாரம் எண் 3: மரணமிலாப் பெருவாழ்வு
என்பதன் விளக்கம் என்ன? நமது பெருமானார் அதை அடைந்தார்களா. அடைந்தார் என்றால் அவர் உடலுடன் இருக்கிறாரா? அவர் அந்த வாழ்வை எப்படி அடைந்தார்?அவர்
அதற்குச் செய்த முயற்சி என்ன?
(i) சுத்த உடம்பு, பிரணவ
உடம்பு, ஞான உடம்பு என்ற மூன்று நிலைகளையும் படிப்படியாக பெற்ற ஊன் உடம்பே மரணமிலா
வாழ்வைப் பெற்ற உடம்பு ஆகும். மரணமிலா பெருவாழ்வு என்பது ஞான உடம்புடன் என்றென்றும்
நிலைப்பது.
(ii) நமது பெருமானார் மட்டுமே
அந்த ஞான உடம்பினை பெற்ற முதல் மற்றும் இறுதி மனிதர் ஆவர்.
(iii) மரணமிலா பெருவாழ்வு
என்பது உடலுடன் இருப்பதுதான்.
(iv) தயவு கருணை தவம் மூலம்
அடைந்தார் என்பதைவிட, இறைவனே வலிந்து அளித்த அருளால் அதனைப் பெற்றார் எனலாம்.
(v) அருள்பெறின் துரும்பும்
ஓர் ஐந்தொழில் செய்யும், எனவே அருள் பெற முயலுக... என்று பெருமானார் சொல்வதினால், அவர்
தனக்கே உரிய ஆன்ம தயவு, கருணை மற்றும் தவத்தினால் இறை அருளை பெற முயற்சித்து அதில்
அவர் வெற்றியும் பெற்றார்.
விசாரம் எண் 4: வள்ளலாருக்குப்பின் யாராவது
அந்த மரணமிலாப் பெருவாழ்வை அடைந்திருக்கின்றார்களா?
இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
வள்ளலாருக்குப் பிறகு ஞான உடலை பெறுபவர் நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.
விசாரம் எண் 5 : யாராவது அடைந்திருந்தால்
அவர் யார்? யாரும் அடையவில்லை என்றால் ஏன்
அடையவில்லை.
யாரும் அடையவில்லை. உலகியலில்
சிக்குண்டதால் நாம் ஓர்சிறிதேனும் இறைஅருள்பெற முயலவில்லை. நமது உடல் பொருள் ஆவி இம்மூன்றையும்
இறைவனிடம் ஒப்படைக்கவில்லை போன்ற எண்ணற்ற காரணங்களை கூறலாம்.
விசாரம் எண் 6: நம்மால் அடையமுடியுமா?
முடியாதென்றால் சன்மார்க்கம் என்?
மூவராலும் தேவராலும் முத்தராலும்
சித்தராலும் முடியாது. ஆனால் நம்மால் (சாதாரன மனிதனால்) மட்டுமே மரணமிலா பெருவாழ்வை
அடையமுடியும்.
'சாகாதவனே சன்மார்க்கி'
எனவே சுத்த சன்மார்க்கத்தால் முடியும்.
விசாரம் எண் 7 : அடைய முடியும் என்றால் என்னென்ன
செய்யவேண்டும்
இந்திரிய ஒழுக்கம், கரண
ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், ஜீவகாருண்ய ஒழுக்கம் போன்றவைகளை தம்வாழ்வில்
கடைபிடிக்கவேண்டும். 'நினைந்து நினைந்து...' என்ற பாசுரம் உணர்த்தும் உண்மை ஆன்ம நெகிழ்வை
நாம் அடைய இமைப்பொழுதும் நீங்காது இறை சிந்தனையில் இருந்து தவம் புரிதல்வேண்டும். இறையருளை
பெறுகின்ற பாத்திரத்திரமான நமது மனத்தையும் உடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சன்மார்க்கிகள் சுத்த சன்மார்க்கிகளாக ஆகவேண்டும். மேலும் உலகில் உள்ள ஒரே சாகாக்கல்வி
நூல் திருஅருட்பா அதற்கு வழிகாட்டும்.