Thursday, June 13, 2013

சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள்


சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள்

அன்பர்களே! உலக நடைமுறைகளில் எந்த ஒரு அமைப்பிற்கும் அதனதன் குறிக்கோள்களை அடைவதற்கு என நடைமுறை விதிகளை வகுத்திருப்பார்கள். நமக்கு அந்த குறிப்பிட்டுள்ள இலக்கினை அடைய அந்தந்த அமைப்பின் நடைமுறை விதிகள் உதவி செய்கின்றன. இப்படிப்பட்ட நடைமுறைவிதிகளைத்தான் நாம் 'ஒழுக்கம்' என்கிறோம்.

ஒரு இலக்கினை நாம் அடைய, அந்த இலக்கினைக் கொண்ட அமைப்பு என்ன வழிமுறைகளை கூறுகிறதோ அதனை மட்டுமே பின்பற்றவேண்டும். ஏனெனில் அந்த இலக்கை ஏற்கனவே அடைந்தவர்கள் சென்ற பாதையாக அது இருப்பதால், அவ்வழி எளிமையாகவும், எளிதில் உடனே அடையக்கூடியதாகவும் அது இருக்கும். அவ்வழிக்கு நல் ஒழுக்கம் எனப்பெயர். மாறாக அதே இலக்கை அடைய நாம் நம் மனம் போனப்படிச் சென்றால் அவ்வழி நம்மை எங்கு இட்டுச் செல்லும் என்று யாரும் அறியார். இப்படிப்பட்ட வழிக்கு தீய ஒழுக்கம் எனப்பெயர்.

'மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்' என்று கூறுவதும் இதனால்தான். 'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்' என்று வள்ளுவம் கூறுவதும் இதைத்தான். நல்லொழுக்கத்தை கடைபிடிக்கும் பொழுது, அது நமக்கு பழக்கத்திற்கு வரும்வரை கடினமாகத் தோன்றும். ஆனால் அதன் முடிவான பயனானது நாம் எதிர்பார்த்ததைவிட நம்மை ஏறாநிலைமிசை நம்மை ஏற்றிவிடும் என்பதில் ஐயம் வேண்டாம். எனவே அவ்வொழுக்கத்தை உயிரினைவிட மேலானதாக கருதி ஒழுகவேண்டும். இதனையே வள்ளுவர் 'ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று கூறுகிறார்.

நமக்கெல்லாம் ஒழுக்கம் (Discipline) என்றவுடன் நினைவுக்கு வருவது எது? ஒவ்வொரு நாட்டினரும் தத்தமது நாட்டினை காக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் இராணுவ அமைப்பும், அவற்றில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒழுக்கங்களேயாகும். மிகுந்தக் கட்டுப்பாட்டுடன் இருக்க ஒவ்வொருவரும் பழக்கப்படுத்தப்பட்டிருப்பார்கள். நமது பள்ளி, கல்லூரி NCC மாணவர்களுக்கு இவ்வொழுக்கத்தைப் பற்றி ஓரளவு தெரியும். அங்குள்ள மூத்த இராணுவ அலுவலரின் கட்டளைக்கு, ஏன்? எதற்கு? என்ற எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கீழ்பணிந்து செயல்படுவதே மற்றவர்களின் முக்கிய கடமையாகும். "I will obey to your order, utmost my satisfaction sir" "நான் உங்களின் கட்டளைக்கு கீழ்படிந்து என்னால் முடிந்தவரை செயல்படுவேன் ஐயா" என்று ஒவ்வொருவரும் உறுதிமொழியளிப்பதைப் பார்க்கிறோம்.  இந்த உறுதிமொழி நம்மை மனதளவில்  ஒழுக்கத்தை கடைபிடிக்க தயார் செய்கிறது. பிறகு அதுவே நடைமுறையில் வரவேண்டும்.

மேலே உள்ள ஒழுக்கம் ஒரு இராணுவத்திடமிருந்தால்தான் ஒருநாட்டை காப்பாற்றமுடியும். அகிம்சைமுறையில் ஒருநாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், அதற்கும் இதைப்போல் பல ஒழுக்கங்களை நமது காந்தியடிகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதனையும் நாம் அறிவோம். ஆக, ஒழுக்கம் என்பது அடிப்படையாக உள்ளது.

எந்த ஓரு உயிருக்கும், அது எடுத்த உடம்பே அதற்கான நாடாகும். அந்த உடம்பு என்னும் தனது நாட்டை, அழிவிலிருந்து காப்பாற்ற அவ்வுயிருக்கு அடிப்படையான உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்க யாருக்கும் அதாவது மற்ற நாட்டவர்களுக்கு உரிமையில்லை. 'எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்த உரிமையாய் இருக்கவேண்டும்' என்று வள்ளலார் கூறுவது இதனைத்தான். 

அதுவும் மனித நாட்டை (உடலை) அடைந்த உயிருக்கு, அந்நாட்டைக் காப்பாற்ற உரிமையுடன் கடமையும் உள்ளது. அப்படிப்பட்ட நமது நாட்டைக் காப்பாற்ற உரிமையுடன் நம்மை நாடுவதுதான் 'சுத்த சன்மார்க்கம்' என்னும் அமைப்பாகும். நமது நாட்டில் (உடம்பில்) உள்ள ஐம்பொறி வீரர்களையும் அடக்கி / கட்டுபடுத்தி அதாவது அதற்கு ஒழுக்கங்களைக் கூறி, அதன் வழியில் செயல்படுத்தவைப்பதே இவ்வுடலை எடுத்த உயிருக்கு கடமையாகும்.

'புலனைந்தனையும் அடக்கியவன் வீரமே வீரம்' என்பார் திருவள்ளுவர். இவ்வாறு நாம் கோழையாக இல்லாமல் வீரத்துடன் ஒழுகினால் இந்நாட்டை (இவ்வுடலை) அழிவிலிருந்து காப்பாற்றிவிடலாம். மரணமிலா பெருவாழ்வு வாழ்வதற்கான இராணுவ ரகசியங்களை வள்ளலாருக்கு முன் யாரும் அறியவில்லை அல்லது யாரேனும் அறிந்திருந்தாலும் அதனை முழுமையாக வெளியில் கூறவில்லை. வள்ளலார் ஒருவரே, இறையருளாள் அந்த இராணுவ இரகசியங்களை உள்ளங்கை நெல்லிக் கணி என தெளிவுபடுத்தி கூறியதுடன் அவ்வழி நடந்தும் காட்டுகிறார்.

நமது நாட்டை (உடம்பை) காப்பாற்ற நமது இராணுவ வீரர்களுக்கு (நமது உடம்பில் உள்ள ஐம்பொறிகள்) தேவையான ஒழுக்கம் என்ன? என்று வள்ளலார் 'சுத்த சன்மார்க்கம்' என்னும் இராணுவ அமைப்பின் மூலம் சொல்லியிருப்பதை இனிக் காண்போம். 'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது' என்று நாமக்கல் வே.இராமிலிங்கம் பிள்ளை கூறுவது போல இங்கு நமது வள்ளல் இராமலிங்கமும் அகிம்சைமுறையிலே தமது ஒழுக்கத்தை கூறி பின்பற்றசொல்லுகிறார். சத்தியத்தை நம்பும் யாவரும் இந்த யுத்தத்தில் சேர்ந்து பலனடையலாம்.

நம்பெருமானார் இவ்வொழுக்கங்களை நான்கு வகையாக பிரிக்கின்றார். அவை:-

1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்

என்பதாகும். இவற்றைப்பற்றி நாம் தெளிவாகக் காண்போம்,

1. இந்திரிய ஒழுக்கம் தன்னுள் இரண்டு வகையினைக் கொண்டுள்ளது. அவை:-

(i) கன்ம இந்திரிய ஒழுக்கம்
(ii) ஞான இந்திரிய ஒழுக்கம்

என்பதாகும். இதனைப்பற்றி விளக்கமாக பார்ப்பதற்கு முன்னர், 'இந்திரியம்' என்றால் என்ன? என்பதனை பார்ப்போம்.

சாதாரணமாக 'இந்திரியம்' என்றால் உயிரணு (விந்து) என்று பொருள். இங்கு இதன் பொருள், 'நமது உடலில் உள்ள ஐந்து புலன்களை' குறிக்கிறது. ஐம்புலன்கள் என்றால், கண், வாய், மூக்கு, காது, உடம்பு (உடம்பு என்பது, கழுத்துக் கீழே உள்ள அனைத்து அவையங்களையும் குறிக்கும்) என்ற இந்திரியங்களைக் குறிக்கிறது. இவற்றிற்கான செயல்பாடு வழிமுறைகளை நெறிபடுத்துவதே 'இந்திரிய ஒழுக்கம்' என்பதாகும்.

(i) கன்ம இந்திரிய ஒழுக்கம்:-
கன்மம் என்பது வினை அல்லது கருமம். இந்த வினை சிற்றறிவின் காரணமாகத் தோன்றும் விருப்பு, வெறுப்புகளைக் கொண்டு நிகழ்வது. மனம், வாக்கு, காயம் மூன்றாலும் இக்கன்மம் செய்யப்படுகிறது. கன்ம இந்திரிய ஒழுக்கத்தில் உள்ள நடைமுறை கட்டுப்பாடுகளை காண்போம்:-
(a) இனிமையாகப் பேசவேண்டும்.
(b) பொய் சொல்லாதிருக்க வேண்டும்.
(c) உயிர்களுக்கு ஏதேனும் இடையூறு / தீங்கு ஏற்படும் பொழுது, எந்தவித தந்திரத்திலாவது அதனை தடை செய்ய வேண்டும்.
(d) பெரியவர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
(e) நமது உயிருக்கு உதவும் பொருட்டு / ஜீவோபகார நிமித்தமாய் சாதுக்கள் இருக்கும் இடங்களிலும் வேறு இடங்களிலும் சென்று உலாவுதல் வேண்டும். / சஞ்சரித்தல் வேண்டும்.
(f) நன்முயற்சியிற் கொடுத்தல் எடுத்தல் முதலியன செய்தல் வேண்டும். (கருணை எண்ணங்களுடன் தருமம் கொடுக்க வேண்டும், கருணை எண்ணங்களுடன் தருமம் பெறுதல் (எடுத்தல்) வேண்டும்.)
(g) மலம், சிறுநீர், சுக்கிலம் போன்ற கழிவுகளை அநியாயமாக அன்றி நியாயமாக நிற்கச் செய்வித்தல் வேண்டும். 

எப்படி எனில்,

மித ஆகாரத்தால் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும், 
மித போகத்தால் தடை நேர்ந்தால் பெளதிக மூலங்களாலும், 
கால பேதத்தால் தடை நேர்ந்தால் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும்,
உஷ்ண ஆபாசத்தால் தடை நேர்ந்தால் மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும் 
மல ஜல தடைகளை நீக்குதல் வேண்டும். 

ஓஷதி வகைகள் -  மூலிகை மருந்து (Medicinal Herbs)

பெளதிக மூலகங்கள் -  பூமியிலிருந்து/மண் மூலக்கூறுகளிலிருந்து கிடைக்கக் கூடிய மருந்துகள். உதாரணம் தங்க பஸ்பம். A purging medicine; stimulates evacuation of the bowels. பெளதிகம் என்பதற்கு வள்ளலார் கூறும் விளக்கம், "பெளதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி 64 பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது ஒருவாறு பூதகாரிய தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பெள+தீ+அகம்=பெளதீகம். பெள-மூடல், அகம்-உள், தீ-அக்கினி, ஆதலால் தீயை உள்ளடக்கியது பெளதீகம். தீ என்பது காரண உஷ்ணம், பெளதிகங்களென்பவை வீரம் பூரம் முதலிய 64 சரக்குகள்" (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம்391)

சரபேத அஸ்தபரிச தந்திரம் - சரம்=மூச்சோட்டம், பேதம்=வேறுபாடு, அஸ்த=மறைந்து, பரிச=தொடுஉணர்ச்சி, தந்திரம்=செய்கை.
மலங்கழிக்கின்ற போது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும்போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும்.

மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும்.

ஜலம் தடைபட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜல வுபாதி கழித்தல் வேண்டும்.

அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.

மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பம் - 
ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.
ஓம் என்பதே பிரணவம் ஆகும். ஓம் என்ற பிரணவம் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம். உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு) " உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இங்கு மூலாங்கமாக விளங்குவது ஓம் என்னும் பிரணவ நாதம் ஆகும். அதனை தியானம் செய்வதின் மூலம் உஷ்ண ஆபாசத்தால் உண்டான மல ஜலத் தடை நீங்கும்.

மந்தத் தரம் -  சுக்கிலத்தை அக்கிரம அதிக்கிரமத்தில் விடாது நிற்றல். இல்லறத்தார்கள் மாதமிருமுறை மட்டும் சுக்கிலத்தை வெளியேற்றுவது மந்தத் தரம் ஆகும்.

தீவிரத் தரம் = சுத்த சன்மார்க்களுக்கு உரியது. எவ்விதத்திலும் சுக்கிலத்தை வெளிப்படுத்தக் கூடாது.

(h) இடைவிடாது கோசத்தை / உடம்பை கவசத்தால் / உடையினால் மறைத்தல். இது போல தலை உச்சி, மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்.
(i) சஞ்சரிக்கும் காலத்தில் / வெளியில் உலாவுகின்ற பொழுது காலில் கவசந்தரித்தல். (பாதணிகள் அணிவது)
(j) அழுக்காடை உடுத்தாதிருத்தல்
மேற்கண்டவை யாவும் கன்ம இந்திரிய ஒழுக்கம் ஆகும்.
(ii) ஞான இந்திரிய ஒழுக்கம் என்பவை:-
(a) கொடிய சொல் செவியில் புகாவண்ணம் நாதம் முதலிய அருள்பாடல்களை கேட்டல்.
(b) அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல். அதாவது கெட்ட நோக்குடன் ஒருவரின் தேகத்தை தொடாமல், தயவுடன் மெல்லெனத் தொடவேண்டும்.
(c) குரூரமாகப் பாராதிருத்தல். தயவுடன் எதனையும் பார்க்கவேண்டும்.
(d) உருசி விரும்பாதிருத்தல். நமது நாக்கிற்கு தேவையான ருசியை விரும்பாது பசியறிந்து உண்ணவேண்டும்.
(e) சுகந்தம் விரும்பாதிருத்தல். நமது மூக்கிற்கு பிடித்த சுவாச வாசனையை கொடுக்கும் வத்தி, திரவியங்கள் இப்படிப்பட்ட செயற்கை வாசனைகளை விரும்பாமல், நமது உடம்பில் இயற்கையான கற்பூர மணம் வீச முயலவேண்டும்.
சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், ஞான இந்திரியங்கள் அஞ்சையும் முறைபடுத்த வேண்டும்.

காதின் கேட்டல் ஆகாய சத்வ குணம்.
தோலின் தொடுணர்ச்சி வாயுவின் சத்வ குணம்.
கண்களோட பார்த்தல் அக்னியின் சத்வ குணம்.
நாக்கோட ருசித்தல் நீரோட சத்வ குணம்.
மூக்கின் நுகர்தல் மண்ணின் சத்வ குணம்.
இவைகள் ஞான இந்திரிய ஒழுக்கங்கள் ஆகும்.
2. கரண ஒழுக்கம்:- கரணம் என்பது நமது அக உடம்பில் உள்ள ஐந்து அந்தக் கரணங்களை குறிக்கும். அவை - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம் என்பவையாகும். இவைகளை கட்டுக்குள் வைப்பதே கரண ஒழுக்கம்.
இந்த மனம் இச்சையால அலைஞ்சு கொண்டே இருக்கு. இதோட நிறைவேறாத ஆசைகளாலதான் அடுத்த பிறவியே வருது. அதனால இத அதோட இஷ்டப்படி அலைய விடாமல் தடுக்கணும். மனம் என்கிறது வாயுவின் தத்துவம். அதனால சலித்து (நிலையா இல்லாம அலைபாய்ந்து) கொண்டே இருக்கும்.

புத்தி அக்னி தத்துவம். அதனால அது விஷயங்களை வெளிச்சம் போட்டு தெளிவா, பிரகாசமா காட்டிகிட்டே இருக்கும்.
சித்தம் நீர் தத்துவம். அதனால் அது ஒண்ணுலேந்து ஒண்ணை பற்றிகிட்டு போய்கிட்டே இருக்கும். எண்ண ஓட்டம் என்கிறது இதுதான்.
அகங்காரம். இது நில தத்துவம். அதோட குணம் எதையும் கடினமா எதிர்த்து நிக்கிறது. அதே போல அகங்காரம் மத்த யார் சொல்கிறதையும் கேக்காம எனக்கு நிகர் யாரும் இல்லைன்னு சொல்லிகிட்டு பிடிவாதமா நிக்கும். இதை நீக்க செய்கிற எல்லா முயற்சிகளையும் அது கடுமையா எதிர்க்கும்.
உள்ளம் என்கிறது ஆகாய தத்துவம். அதனால் மற்றா எல்லா அந்தக்கரண காட்சிகளுக்கும் இடம் கொடுக்கும். அதான் அதோட வேலை.
(a) நமது மனதைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல். இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச் செய்தல்.
கிருதி என்றால் இசையினை ஒன்றினைத்தல் (Musical composition) என்று பொருள்.  அறிவாகிருதி என்றால் அறிவினை ஒன்றினைத்தல் எனலாம். நமது மனதை ஒன்றினைந்த அறிவாகிய சிற்சபை என மாற்றவேண்டும். பிறகு சிற்சபையின் முன்னே புருவமத்தியில் நமது மனதை நிற்கச் செய்யவேண்டும். (புருவமத்தி என்பது இருபுருவ நடுவாகிய நெற்றிக்கண்ணையே குறிக்கும். புறத்திலுள்ள இரண்டு ஊணக்கண்களை குறிக்காது)

(b) துர்விஷயங்களை / தீயச் செய்திகளை பற்றாதிருக்கச் செய்தல்.

(c) சீவதோஷம் விசாரியா திருத்தல். உயிர்கள்படும் துன்பத்தை விசாரிக்கக்கூடாது.

(
d) தன்மதிப்பில்லாதிருத்தல். தன்னை மதியாதிருக்க வேண்டும். நான் என்ற எண்ணம் அறவே வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
(e) இராகாதிநீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல். தீய குணங்களால் ஏற்படும் கெடுதிகளை நீக்கி இயற்கையான சத்துவ குணமாக மாறுதல் வேண்டும்.
இராகாதி என்பது ரஜோ, தமோ குணத்தை குறிக்கும். இது செயற்கையான குணமாகும்.
மனிதர்களிடம் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்கள் உள்ளன. சத்துவ குணம் சாந்தம், தியாகம், பொறுமை, பக்தி ஆகிய நல்ல பண்புகளையுடையதாகும். இது இயற்கையான குணமாகும். இதன் நிறம் வெண்மை.
ரஜோ குணம் கோபம், சுய நலம், காமம், பொறாமை ஆகிய தீய பண்புகளை உடையதாகும். இதன் நிறம் சிவப்பு
தமோ குணம் சோம்பல், முயற்சியின்மை ஆகிய குணங்களை உடையது. இக்குணமுடையவர்கள் உண்ணவும், உறங்குவதுமன்றிச் செயல்படாத நடைப் பிணம் போன்றவர்கள். இதன் நிறம் கருமை.
(f) தனது தத்துவங்கள்ளை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல். அதாவது நமது எண்ண சக்திகளை நியாயமான வழியில் செலுத்தவேண்டும். தவறான வழியில் நமது எண்ணங்கள் சென்றால் அதனை கண்டிக்கவேண்டும்.
3. ஜீவ ஒழுக்கம்:- (ஜீவன் என்றால் உயிர்) ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.
4. ஆன்ம ஒழுக்கம்:-  யானை முதல் எறும்பீறாகத் தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனித் தலைவன் ஆதலால், அவ்வச் சீவர்களின் ஜீவான்மாவே திருச்சபையாய் அதனுள் பரமான்மாவே பதியாய் நிற்பதால் யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.
ஆன்மா என்பது உயிரை இயக்கும் உள் ஒளியாகும் {Hermeneutic}. வ்வுலகிலுள்ள எல்லா உயிருள்ளும் மறைந்திருந்து அவ்வுயிரை இயக்கும் தனித்தலைவனாக இந்த ஆன்மா உள்ளது. எனவே எல்லா ஜீவராசிகளிலும் உள்ள உயிரே திருச்சபையாகும். அந்த திருச்சபையினுள்ளே இறைவனாய் விளங்குவது இந்த ஆன்மா. எனவே நாம் அனைத்து ஜீவராசிகளிடத்தும் எது ஒன்று கருதியும் அதனிடம் நாம் காட்டும் தயவினை நீக்கிவிடாமலும் எவ்விடத்தும் எவ்விதத்தும் வேறுபாடு காணாமல் எல்லா உயிர்களையும் தன்னுயிராய் கருதவேண்டும். இதுவே ஆன்மநேய ஒருமைப்பாடு. இதுவே ஆன்ம ஒழுக்கம் ஆகும்.
மேற்கண்ட நான்கு ஒழுக்கத்தையும் நாம் கடைபிடித்தால் நமக்கு கிடைக்கு இலாபம் என்னவெனில்,
1. ஏமசித்தி
2. சாகாக்கல்வி
3. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்
4. தத்துவ நிக்கிரகம்.
இந்த நான்கு புருஷார்த்தங்களும் / உறுதியான பொருட்களும் நமக்குக் கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.


1. ஏமசித்தி:- ஏமம் என்றால் பாதுகாப்பு எனப்பொருள். ஏமசித்தி என்றால் நமதுடலை பாதுகாக்கும் வித்தை. எப்படி எனில், எவையொன்றும் தன்னுடையதல்ல என்று அறிந்து அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைப்பதின் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது.
அனைத்தும் நம் தேவையை அறிந்து திருவருளால் வழங்கப் பெற்றவைகளே. ஆவைகள் அவனுடையவை. இந்த உடல் இறைவன் கருனையால் கொடுத்தவை. என்ற நினைவானது நம் உள்ளத்தில் பெருகினால் நம் உடல் முதலியன திருவருள் மயமாகிவிடும். இறைவனின் கருனையை சதா சிந்தித்திருத்தல் என்பதே இது. இதனை
'சத்'விகாரம் என்பர் இதன் பயன் ஏம சித்தி. ஏமாமாக்குதல் என்பதன் விளக்கம் ஆன்மாவை இயற்கையாக உள்ள குற்றத்தினால் ஆணவத்தினால் இந்திரியம், கரணம்,ஜீவன் ஆகியவைகளை தன்னுடையன, தற்சுதந்திரமுடையன என நினைத்தலை மாற்றி திருவருட் சுதந்திரமாக்குதல் என்பதே ஏமசித்தி யாக்குதல் ஆகும். மற்றபடி சிலர் கூறுவது போல தங்கம் செய்யும் வித்தை அல்ல இது.
2. சாகாக்கல்வி:- ஏமசித்தி கிடைத்த பின்பு 'சாகாக்கல்வி' பயிலும் நிலை வந்தெய்தும். இந்த சாகாக்கல்வியின் மூலம் நமக்கு சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்ற முத்தேகங்களும் கிடைக்கும்.
3. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்:- நமக்கு ஞான தேகம் கிடைத்தப் பின்பு கடவுளின் நிலை என்ன? என்பதனை நாம் அறிவோம். அதாவது இந்த ஞான தேகத்தில் கடவுள் நிலையாக இருப்பதை அறிந்து, ஞான தேகத்தின் நிலையும் கடவுளின் நிலையும் வேறல்ல என்பதனை அறிந்து கடவுள்மயமாகிவிடுவோம்.
கடவுளின் நிலை எப்படிப்பட்டது என்பதனை எவறாலும் கூறமுடியாததாக உள்ளது. அது நமது எண்ணம், மனம், புலன்கள், கற்பனை, தத்துவம் இப்படி எவ்வகையிலும் அறியமுடியாததாக உள்ளது. ஞான தேகம் பெற்றவர்கள் மட்டுமே அந்நிலையினை தெரிந்துக்கொள்ளமுடியும். ஞான தேகம் பெற்றவர்களாலும் அதனை இவ்வுலகில் உள்ள மொழியால் எடுத்தியம்புவது கடினம். எடுத்தியம்பினாலும் அது நமக்கு புரியாது. வள்ளலார் அவர்கள் தம்மால் இயன்ற அளவில் தனது திருஅருட்பாவில் உலகியலருக்கு புரியும்படி கூறியுள்ளார்.
அதாவது இவ்வுலகில் நமக்கெல்லாம் தெரிந்தது முப்பரிமானங்கள் மட்டுமே. உதாரணமாக, வீணையில் பயன்படுத்தப்படும் நீள 'கம்பி'யினை முதல் பரிமானம் எனலாம். இதற்கு நீளம் மட்டுமே உள்ளது. அடுத்ததாக நாம் படுக்க பயன்படுத்தும் 'பாய்' யினை இரண்டாம் பரிமானம் எனலாம். இதற்கு நீளம் மற்றும் அகலம் உள்ளது. அடுத்ததாக 'செங்கல்' லை மூன்றாம் பரிமானம் எனலாம். இதற்கு நீளம், அகலம், உயரம் இவை மூன்றும் உள்ளன. இப்படியாக இந்த முப்பரிமானத்தைத் தாண்டி நம்மாலும் / எந்த ஒரு விஞ்ஞானியாலும் நான்காவது பரிமானப் பொருள் இருப்பதாக சிந்தனைக்கூட செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். அந்த நான்காவது பரிமானம் எப்படி இருக்கும்? என்று எவ்வளவு சிந்தித்தாலும் நம்மால் அதனை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. ஆனால் மூன்று பரிமானங்கள் தாண்டி மொத்தம் ஏழு பரிமானங்கள் இருப்பதாக மெய்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த ஏழு பரிமானங்களையும் தாண்டியதுதான் இறைநிலை. இப்போது சொல்லுங்கள் இறைநிலையை வெளியில் எழுத்துமூலமாகவோ, சொல் மூலமாகவோ கூற முடியுமா?
'நினைந்து நினைந்து' என்று துவங்கும் திருஅருட்பா பாடலை உள்ளார்ந்துப் பாடி அழுது அழுது உருகினால் மட்டுமே அந்த ஏழு நிலைக்கும் அப்பால் உள்ள எட்டாமல் உள்ளவனை எட்டமுடியும். எனவே நம்பிக்கையுடன் வள்ளலார் கூறிய ஒழுக்கங்களை கடைபிடிப்போம்.
4. தத்துவ நிக்கிரகம்:- தத்துவம் என்றால் குணம். நிக்கிரகம் என்றால் அழித்தல். தத்துவ நிக்கிரகம் என்றால் குணத்தை அழித்தல். அதாவது நாம் கடவுள்மயமாகிவிட்டப்பின்பு நமக்கென்று எந்த ஒரு குணமும் இல்லாது, இறைவனால் அக்குணங்கள் அழிக்கப்படும். நம்மிடம் இறைகுணங்கள் மட்டுமே தழைத்தோங்கும்.
சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் ஒருவாறு முற்று பெற்றது. ஆனால் இன்னொரு முக்கியமான ஒழுக்கம் ஒன்றுள்ளது. அது இல்லையேல் மேற்கண்ட நான்கு ஒழுக்கத்தையும் நிறைவேற்ற முடியாது. நிறைவேறவில்லையெனில் நான்கு புருஷார்த்தங்களும் கிடைக்காது.
அது என்ன? இந்திரிய ஒழுக்கமும், கரண ஒழுக்கமும் நம்முடைய தீவிர முயற்சியில் கடைபிடித்து வெற்றி காணலாம். ஆனால் ஜீவ ஒழுக்கமும், ஆன்ம ஒழுக்கமும் இறைவனின் அருள் இல்லாது அதனருகே நம்மால் நெருங்கமுடியாது.
சரி, இறைவனின் அருள் கிடைக்க என்ன வழி?
அது தான் "ஜீவகாருண்ய ஒழுக்கம்" இந்த ஒழுக்கத்தின் துணைக்கொண்டு இறை அருளை பெற்ற பின்புதான் ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களை நம்மால் பூர்த்தி செய்ய முடியும். எனவே "ஜீவகாருண்ய ஒழுக்கம்" மிக மிக முக்கியம். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ற வள்ளலார் வாக்கு சத்திய வாக்காகும்.
"ஜீவகாருண்ய ஒழுக்கம்" பற்றிய விளக்கம் மிகப் பெரிதாக உள்ளதால் அதனை வேறொரு பதிவில் காண்போம்.
வணக்கம். நன்றி அன்பர்களே!
அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி
 
 











 













        












 














   



  
  
    







14 comments:

  1. gunangalai odukkamal entha nilaikkum sella mudiyathu. Gunanglai Odukinal Ellam Thanaga Kaikudum. Gungalai Odukkamal Payilumpothu ethavathu oru mayaikkul sikkuvarkal. Sanmargathil sertha udane gunankal than velipadum.

    ReplyDelete
  2. நன்றி ஐயா..,

    ReplyDelete
  3. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  4. அருமையான விளக்கம் 🌷🙏நன்றி ஐயா

    ReplyDelete
  5. நன்றி அய்யா

    ReplyDelete
  6. மிகவும் அருமையான பதிவு,சன்மார்க்க ஆய்விருக்கைக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவு தேவைப்படில் உபயோகப்படுத்தவும். நன்றி.

      Delete
  7. Thank you 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.