பெருவெளி ஆக்ரமிப்பு
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று நாம் காணப்போகும் தலைப்பு ஆக்கிரமிப்பு என்ற தலைப்பாகும். என்ன ஆக்கிரமிப்பு என்கிறீர்களா? வடலூர் பெருவெளி ஆக்கிரமிப்பு பற்றிதான் நாம் இன்று பேசப்போகிறோம் நண்பர்களே.
இந்த ஆக்கிரமிப்பின் வேர் எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். 1869 ஆம் ஆண்டு, வள்ளற்பெருமானை ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் அவர்கள் சந்திக்கிறார். இவர் சிதம்பரம் வட்டம் கே.ஆடூர் என்னும் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அர்ச்சகர் ஆவார். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க செயல்பாட்டினை அறிந்து அவரிடம் இருந்தால், நாம் பிழைத்துக்கொள்ளலாம் என எண்ணி தந்திரமாக, எனக்கு ஜாதி, சமய பற்றெல்லாம் இல்லை எனக்கூறி வள்ளலாரை அணுகிறார். வள்ளலாரும், எளிதில் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு, நூல் என்றால் கோல் ஆடுமோ? என்று ஆடூர் சபாபதியை நோக்கி கோபமாக கூறுகிறார். அதாவது நூல் என்பது ஆடூர் சபாபதி அய்யர் அணிந்திருக்கும் பூணூலை குறித்து வள்ளலார் சொன்னது ஆகும். கோல் என்றால் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை குறிக்கும். பூணூலுக்கு சுத்த சன்மார்க்க அடிபணியுமோ? என்பதே “நூல் என்றால் கோல் ஆடுமோ? என்ற வாக்கியத்திற்கு பொருளாகும்.
இதனை உணர்ந்த ஆடூர் சபாபதி குருக்கள், உடனே வள்ளலார் முன் தனது பூணூலை கழட்டி எறிந்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வள்ளலார், ஆடூர் சபாபதியை தன்னுடன் இருக்க அனுமதிக்கின்றார்.
வள்ளலார் ஞானசபையை தோற்றுவித்தவுடன், அதன் நிர்வாகத்தை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களிடமும், பூஜை செய்யும் அதிகாரத்தை ஆடூர் சபாபதி குருக்களிடமும் ஒப்படைத்தார்.
ஆடூர் சபாபதி குருக்களின் வாரிசுகள், தாங்கள்தான் பரம்பரை அர்ச்சகர்கள் என்று கூறி, ஞானசபையில் லிங்க வழிபாடுகளையும், உருவ வழிபாடுகளையும் சைவ சமயத்தின்படி நடந்திக்கொண்டிருந்தனர். அதாவது, சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரான வழிபாட்டு முறைகள் ஞானசபையில் நடந்துக்கொண்டிருந்தது. பிறகு 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம், சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரான உருவ வழிபாடு ஞானசபையில் கூடாது என்று தீர்ப்பு வழங்கி, அந்த சிவாச்சாரியார்களை ஞானசபையிலிருந்து வெளியேற்றியது.
வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட பிறகு, இந்த ஆடூர் சபாபதி குருக்கள்தான் முதன்முதலில் பெருவெளி ஆக்ரமிப்பில் ஈடுபடுகிறார். அதன் பிறகு சிறிது சிறிதாக பிற மக்களாலும், மன்னிக்கவும் பிற மாக்களாலும் பெருவெளி ஆக்ரமிக்கப்படுகிறது. முறையாக சட்டப்படி, வள்ளலாரின் வாரிசுதாரர்களுக்குத்தான் இந்த 80 காணி நிலங்களும் சென்றிருக்க வேண்டும். சத்திய தருமச்சாலைகளும், ஞானசபை பொறுப்புகளும், சுத்த சன்மார்க்க சங்கமும் வள்ளலாரின் வாரிசுகளால் பரம்பரையாக ஆண்டு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், வள்ளலாரின் வாரிசுகளில் யாரும் இப்பொறுப்புகளை சுமக்க முன்வராததால், இந்த வடலூர் பெருவெளி தற்போது தமிழக அரசின் ஆளுமைக்கு வந்துள்ளது. இதேபோல், வள்ளலார் பிறந்த மருதூர் வீட்டினையும், வள்ளலார் வாரிசுகள் பொது மக்கள் வழிபாட்டிற்காக அரசுக்கு கொடுத்துவிட்டனர். அவர்களது பெருந்தன்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
1934 ஆம் ஆண்டு, வடலூர் பெருவெளி அன்றைய ஆங்கிலேயர்களின் ஆட்சியில், இந்து நலத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்றைய ஆண்டில்தான் 80 காணி நிலங்களை அதாவது 105.67 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்த போது, வெறும் 71.24 ஏக்கர் மட்டுமே ஆளுமையில் இருந்ததை இந்து நலத்துறை கண்டுபிடித்தது. மீதம் 34.43 ஏக்கர் நிலம் மாக்களால் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டது.
ஆக்ரமிப்பின் தற்போதய அளவீடாக அரசு தெரிவித்திருப்பது 27.86 ஏக்கர் மட்டுமே. மீதம் 6.57 ஏக்கர் எங்குச் சென்றது? எனத் தெரியவில்லை.
சரி, மக்களே அரசு குறிப்பிடும் அளவான இந்த 27.86 ஏக்கர் நிலத்தையாவது விரைவில் மீட்டு பெருவெளி கணக்கில் ஒப்படைக்க வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எதிர் மனுதாரராக நியமிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவர்கள், இந்து நலத்துறையுடன் ஒன்றிணைந்து கூடிய விரைவில் பெருவெளி இடங்களை மீட்க வேண்டும் என்பது உலக தமிழர்கள் அனைவரின் எண்னமாகும். சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி 269 ஆக்ரமிப்பு மாக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறை துவங்கியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மக்களின் சார்பாக பாராட்டுக்கள். நிலம் ஆக்ரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டு 92 ஆண்டுகள் கழித்து இன்றைக்குதான் ஆக்ரமிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கையே எடுக்கப்படுகிறது என்பது வருந்த தக்கது. என்றாலும் மகிழ்ச்சி தரும் நீதி நடவடிக்கை இதுவாகும்.
இன்னொருவரின் நிலங்களை ஆக்ரமிப்பு செய்து, சமுதாயத்தில் நல்லவர்கள் போல் வாழ்பவர்களின் வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா? ஆக்ரமிப்பு எனத் தெரிந்தும் இதற்கும் வக்காலத்து வாங்கும் வழக்கறிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்?
சரி, நண்பர்களே, நாம் அடுத்த பதிவில் சந்திபோம் மக்களே. நன்றி, நன்றி. நான் உங்கள் டி.எம்.ராமலிங்கம், கடலூர். - 9445545475

