Tuesday, December 24, 2013

கிறுத்து பிறந்தநாள் வாழ்த்துகள்

ஒரு ஏழைத் தச்சனுக்குப் பிறந்தவர் இயேசு. அன்றைக்கு நடப்பில் இருந்த மதத்தை எதிர்க்க வேண்டும் என்றால் இயேசுவின் அந்தஸ்து மற்றதைவிட மிக உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டுமல்லவா? இயேசு சஞ்சலமின்றி கூறினார்,

"என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்"

என்றார். தேவனாகிய கர்த்தரே தனது பிதா என்றும், தான் சாட்சாத் அவரின் குமாரன் என்றும் கூறினார். இல்லையெனில் அவரின் புதிய சிந்தனைகளுக்கு அங்கே கேட்கும் செவிகளே இருந்திருக்காது. அப்போது யூதர்கள் அவருக்கு செவி சாய்க்கவில்லை. அவர்கள் கேலி பேசினார்கள். அவர்களை நோக்கி இயேசு மீண்டும் கூறினார்,

"நீங்கள் தாழ்விலிருந்து உண்டானவர்கள். நான் உயர்விலிருந்து உண்டாவன். நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் அல்ல". என்றார்.

மரியாளின் கணவன் யோசேப்புவின் கனவில், கர்த்தருடைய தூதன் தோன்றி, "தாவீதின் குமாரணாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. ஏனெனில் அவர் தனது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்".

இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்

இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த கணக்கறியீர் - (திருஅருட்பா)

உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்

ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர் - (திருஅருட்பா)

உலகியலர் அனைவருக்கும் எமது கிறுத்து பிறந்தநாள் வாழ்த்துகள்.

Sunday, December 15, 2013

வடலூர் வழக்கும் வரலாற்றுத் தீர்ப்பும்

வடலூர் வழக்கும் வரலாற்றுத் தீர்ப்பும்
 பேரன்புடையீர்! 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய வள்ளலார், தமது திருஅருட்பா கவிதைகள் மூலம் செய்தவற்றைப் புரட்சிகரமான பிரகடனங்கள் என்றே கூறலாம்.
மந்திரசக்தி வாய்ந்த அவருடைய வார்த்தைகளும் செயல்களும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று சேர்ந்தன. சாதி, மத பேதங்களை நமது முன்னேற்றத்திற்குத் தடைகள் என்று அவற்றின் மீது 150 ஆண்டுகளுக்கு முன்பே கடுமையான தாக்குதலைத் தொடுத்தவர் வள்ளலார்.
அவருடைய 50 ஆண்டு வாழ்வில் கடைசிப் பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானவை. அக்காலத்தில்தான் உருவமற்ற வழிபாடு முறையை அவர் நமக்கு அளித்தார். இது ஒரு திருப்புமுனையை உண்டாக்கிய சீர்திருத்தச் சிந்தனையாகும். அருவுருவ வழிபாட்டை அறிமுகப்படுத்திய வள்ளலார், சக மனிதர்களின் மீது அளவற்ற நேசம் காட்டி அருளுரைகளை திருஅருட்பாவாக வழங்கியுள்ளார்.
1866-ல் ஒரிசா மாநிலத்தில் உண்டான கொடிய பஞ்சம் நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆயிரங்கணக்கில் மக்கள் பட்டினியால் மடிந்தார்கள். இச்செய்திகளை அறிந்த வள்ளலாரின் மனம் பதைபதைத்தது. மழையில்லாமல் வாடுகிற பயிர்களை நினைத்து மனம் நொந்தார்.
அதனால்தான் பசித்தவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டுமென்று துடித்தார். பசியுள்ளவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், பசித்துயத்தைப் போக்க 1867-ல் தருமசாலையை வடலூரில் நிறுவி அன்னம் பாலிப்பை மேற்கொண்டார். இதுதான் மருதூர் இராமலிங்கரை மகான் வள்ளலாராக உயர்த்தியது.
சத்திய ஞானசபை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் விதிகளின்படியும் வள்ளலார் தயாரித்த வரைபடத்தின் அடிப்படையிலும் வடலூரில் எண்கோண வடிவில் தெற்கு நோக்கிய வாயிலோடு புதுமையாகக் கட்டப்பட்டது. திருச்சபை நடுவே மேடை அமைந்திருக்கும். அம்மேடை நடுவே ஜோதி பீடம் அமைந்திருக்கும். அதன் முன்னர் ஜோதியைத் தன் பரப்பு முழுவதும் உள்வாங்கிப் பிரதிபலிக்கும் அகன்ற உயர்ந்த கண்ணாடி அமைந்திருக்கும். கண்ணாடி முன்பு ஏழு நிறங்களில் திரைகள் அமைந்திருக்கும்.
அவரவர் ஆன்மாவே சபை. ஆன்மாவின் உள் ஒளியே ஆண்டவரின் அருட்சக்தியாகிய ஜோதி. ஆன்ம விளக்கத்தை மறைக்கும் திரைகள்தான் அந்த ஏழு திரைகள். அத்திரைகள் நீங்கினால்தான் ஜோதியாகிய ஞானம் புலப்படும். ஞானசபையில் உருவமில்லை. உருவமில்லாததால் நீராட்டும் சடங்குகளும் இல்லை. சடங்குகள் இல்லாததால் அலங்கரிக்கும் பணிகள் இல்லை. ஆரவாரப் பூசைகள் இல்லை. கடவுளும் தரிசிப்போருக்கும் நடுவில் எவருக்கும் இடமுமில்லை. எவ்விதப் பணியுமில்லை.
ஞான சபையைக்கட்ட வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் தங்கியிருந்தார். 18.07.1872-ஆம் ஆண்டில் அவர் வகுத்த விதிகளின்படி ஞானசபையில் வழிபாடு தொடங்கப்பட்டது. வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் ஒளிதேகம் பெற்ற 1874-க்குப் பிறகு சில ஆண்டுகள் சபை திறக்கப்படாமல் இருந்தது. அன்பர் சிலர் முயற்சியால் பின்னர் திறக்கப்பட்டு வழிபாடு தொடர்ந்தது.
 வள்ளலாரால் நியமிக்கப்பட்டவர் எனத் தானே விளம்பரப்படுத்திக் கொண்ட "சபாநாத ஒளி சிவாச்சாரியார்" என்பவர், ஞான சபையைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். ஞானசபையில் சிவலிங்கப் பூசையைப் புகுத்தினார். சன்மார்க்க மெய்யன்பர்கள் மனம் வருந்தினர். சமாதான முறையில் சபாநாத ஒளியாரிடம் பேசினார்கள். பயனில்லை.
 ஆதீனங்களில் இளைய பட்டங்கள் இருப்பதை போலவோ, நிறுவனங்களுக்கு வாரிசுதாரரை நியமிப்பது போலவொ யாரையும் வள்ளலார் நியமிக்கவில்லை. பல்வேறு விதமான தகராறுகளுக்கு இது இடம் தந்தது.
வள்ளலாரைப் பின்பற்றுவதாகச் சொல்லி வந்த அந்த சபாநாத ஒளி சிவாச்சாரியார் வள்ளலாருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார். வடலூரில் உள்ள சத்திய ஞானசபையின் பாரம்பரிய அர்ச்சகர் "அரூர் சபாபதி சிவாச்சாரியாரின்" வாரிசுதாரராகக் கூறிக்கொண்ட சபாநாத ஒளி சிவாச்சாரியார் அர்ச்சகர் பணியை வாரிசு உரிமையாகவே கோரத் தொடங்கினார்.
அவர் கோரிய அந்த வாரிசு உரிமையை மறுத்து இந்து சமய இணை ஆணையர் 18.09.2006-ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பாக ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். அதை எதிர்த்து 03.04.2007-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள இந்து சமய ஆணையரிடம் சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார்.
 அவரும் மறுத்து அனுப்பிய உத்தரவை எதிர்த்து விழுப்புரம் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு 06.07.2007 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை இணை ஆணையரும் சென்னை ஆணையரும் சிவாச்சாரியாருக்கு எதிராக உத்தரவிட்டது செல்லும் என்று விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு மாண்புமிகு நீதிபதி "திரு.கே.சந்துரு" அவர்களின் விசாரணைக்குச் சென்றது.
 நீதிபதி தமது தீர்ப்பில் வள்ளலார் வகுத்த கொள்கையின் மையக்கருத்தை, அவருடைய பாடல்களை மேற்கோளாகக் காட்டி நிறுவி வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
1. எல்லாச் சமயங்களும் பொய்ச் சமயங்கள் என்று ஆண்டவர் தமக்குத் தெரிவித்ததாக வள்ளலார் பாடுகிறார்.
2. சமயங்களின் நூல்களான வேதாகமங்களைப் படிப்பது சந்தைப் படிப்பாகும். அது சொந்த அனுபவமாகாது என்கிறார் வள்ளலார்.
3. சாதி, சமயம், மதம், சாத்திரம், கோத்திரம் எனத் தொடர்ந்து சண்டையிட்டுப் பயனில்லாமல் மடிந்து போவது மனிதர்களுக்கு அழகல்ல என்றும் அவர்களைச் சுத்த சன்மார்க்க நிலைக்கு உயர்த்தி உத்தமனாக்க வேண்டுமெனக் கூவி அழைக்கிறார்.
4. வள்ளலார் தமது அனுபவங்களை அவர்தம் பாடல்களில் அருளுரைகளாக வெளியிட்டுள்ளார்.
 5. உருவமற்ற ஒரு மெய்ப்பொருள் எல்லாமாகி, உருவ அருவ நிலைகளைக் கடந்து சிற்குணமாகி, குணமும் கடந்து எங்கும் நிறைந்து நுண் உணர்வாய் விளங்குகின்றதை வியந்து பாடி அவர் வழிபடுகிறார்.
மேற்கூறிய ஐந்து கருத்துகளின் அடிப்படையில் பரிசீலித்தால், வள்ளலார் உருவ வழிபாட்டைத் தவிர்த்ததும் ஜோதி வழிபாட்டை ஏற்றதும் தெளிவாகிறது. இந்த ஐந்து கருத்துகள் பற்றியும் கூற மற்ற மதங்களுக்கு உரிமை ஏதுமில்லை. ஆனால், மனிதநேயத்திற்கு மட்டும் அந்த உரிமை உண்டு.
சாதி அல்லது பிறப்பின் அடிப்படையில் மக்களை எவ்விதத்திலும் வேறுபடுத்துதல் கூடாது. மனிதர்களை நேசிக்கும் குணமாகிய சீவகாருண்யத்திற்கு மட்டுமே இதில் தலையிட உரிமை உண்டு. வன்முறைக்கு இதில் இடமில்லை. வள்ளலார் தாம் உண்டாக்கிய வழிபாட்டு முறைக்கான விதிகளைத் தெளிவாகவே எழுதியிருக்கின்றார். இந்நிலையில், அவருடைய வழிபாட்டு விதிகளை எதிர்த்து வாதிட எவருக்குமே உரிமையில்லை.
இந்து மத அறநிலையத்துறை அதிகாரிகள் வள்ளலார் கொள்கைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அவர் வகுத்த விதிகளினின்றும் விலகாமல் அறநிலையத் துறை இணை ஆணையரும் தலைமை ஆணையரும் வழிபாடு நடத்துமாறுதான் உரிய உத்தரவிட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாகவும் வழிகாட்டுதலாகவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.
 இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில் உள்ள 25, 26-ஆம் விதிகள் ஒரு மதத்தில் உள்ள சடங்குகளை அம்மதத்தின் இன்றியமையாத ஒரு பிரிவாக அந்த இரு விதிகளும் ஒப்புகொள்கின்றன.
அதேசமயம், மதம் சாராத சடங்குகளைக்கூட மதப்போர்வையால் மறைத்து வைத்துக்கொள்ளவும் 26-ம் விதியை வியாக்கியானம் செய்ய அது இடம் தருகிறது. அவ்வாறு வியாக்கியானம் செய்தால், புறச்சடங்குகளைக் கூடச் சமயச் சடங்குகளாகச் சித்தரித்துக் காட்டிவிட முடியும். எனவே, ஒவ்வொரு சமயச் சடங்கிற்கும் அரசியல் சாசனச் சட்டம் பாதுகாப்பளிக்கிறது என்பதை ஏற்க இயலாது.
 அதற்கு மாறாக, ஒரு மதத்தில் இணைந்துள்ள இன்றியமையாத மதச் சடங்குகளுக்கு மட்டுமே சட்டம் பாதுகாப்பளிக்கிறது என்பதை 1962-இல் தாக்கலான துர்கா (எதிர்) சையத் உசேன் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1972-இல் தாக்கலான சேஷம்மாள் (எதிர்) தமிழ்நாடு மாநிலம் வழக்கிலும் ஒரு மதத்தின் அல்லது மதச் சடங்கின் இன்றியமையாத ஒருங்கிணைந்த பகுதி எது என்பதை அம்மதத் தத்துவங்களைக் கொண்டோ அல்லது அம்மதத்தினைப் பின்பற்றுபவர்களின் கருத்துகளைக் கொண்டோதான் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1994-இல் தாக்கலான இஸ்மாயில் ஃபரூக் (எதிர்) இந்திய ஒன்றியம் வழக்கிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறே தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மதம் மற்றும் அறக்கட்டளை எனும் நிறுவனம் ஏற்படுத்துகிற உரிமையானது, மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்றாலும் அதைச் செயல்படுத்துகிற உரிமையைச் சட்டம் மூலம் கட்டுபடுத்தலாம். அவ்வாறு சட்டத்தால் கட்டுப்படுத்த முடியுமானால், மதத்தில் உள்ள அப்பிரிவு இன்றியமையாத பகுதி அல்ல.
 அரசு அதிகாரிகளோ, சட்டப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகளோ அத்தகைய மத நிறுவனங்களைத் திறமையாக நிர்வகிக்க மட்டுமே சட்டம் வகை செய்கிறது என 1996-இல் தாக்கலான பான்சிலால் பிட்டி (எதிர்) ஆந்திரப்பிரதேச மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 மனிதன் உணவு உண்ணும் முறையும் ஆடை உடுத்தும் விதமும் குளிக்கும் பழக்கமும் கூட மதச்சடங்குகளாகக் கருதப்படலாம். மனிதனின் இத்தகைய செயல்களை எல்லாம் மதச் சடங்குகளாகக் கருதி அரசியல் சாசனம் பாதுகாப்பு அளிப்பதில்லை.
மதச் சடங்குகள் அல்லது நம்பிக்கைகள் இன்னது என வரையறுப்பது மிகவும் கடினமாதலால், அரசியல் சாசன விதி 25, 26-ன் படி பாதுகாப்பளிக்க, ஒரு அணுகு முறையை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
 இந்தியாவில் வெவ்வேறு வழிபாடுகள், சடங்குகளைப் பின்பற்றும் பலப்பல மதங்கள் உள்ளன. இந்துக்களிலும் பல பிரிவினரும், குழுவினரும் வேறு வேறு நம்பிக்கையுடன் சடங்குகளைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
 ஒரு மதக் குழுவினர்க்குத் தத்துவம் முக்கியமாகலாம். இன்னொரு மதத்தாருக்கு கொள்கையே முக்கியமானதாகப் படலாம். மற்றொரு மதக் குழுவினருக்குச் சடங்குகளும் பிறிதொரு மதக் குழுவினருக்கு நன்நடத்தைகளே மதமாகப் படலாம்.
ஒரே மத நம்பிக்கை உடையவர்களின் மத்தியில் கூட, அம்மதத்தின் சில பகுதிகள் மட்டுமே அம்மதத்தின் அடையாளம் எனக் காண்பவர்கள் உண்டு.
 ஆதலால், விதி 25 அல்லது 26 பாதுகாப்பளித்துள்ள மத உரிமை என்பது, முழு உரிமையோ அல்லது கட்டுப்படுத்தப்படாத உரிமையோ ஆகாது. பொருளாதாரச் சேவைகளை அரசு முறைபடுத்துவது போன்றவையே அவை. சமுதாய நலன் கருதி மாநில அரசால் சட்டத்தின் மூலம் அமல்படுத்தப் படுபவையாகவே அவை உள்ளன.
மதத்தின் இன்றியமையாத பகுதி அல்லது சடங்கு இன்னதெனக் கருத, ஒவ்வொரு வழக்கிலும் உள்ள உண்மையான, சட்டப்படியான, வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டுமென 1996-இல் தாக்கலான நாராயணத் தீட்சிடுலு (எதிர்) ஆந்திரப்பிரதேச அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை அம்சம், மதச் சடங்குகளையும் மதச் சார்புடையவற்றையும் ஒருங்கிணைக்கக் கூடிய நோக்கமுடையது.
 அந்த அம்சம், மதத்தின் ஒரு பகுதியாக இல்லாதவற்றையும் அவசியமில்லாத எல்லா விதமான கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் செயல்களையும் கண்டிப்பதில் கவனம் செலுத்துகிறது.
எடுத்துக்காட்டாக - இந்து சமய நம்பிக்கையின் ஒரு பகுதியாகத் தீண்டாமை நம்பப்பட்டது. ஆனால் மனித உரிமை அதனை மறுக்கிறது.
 இந்திய அரசியல் சாசனச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே எது வழக்கத்தில் இருந்தது என்பதற்கான சான்று ஏதும் இல்லாத போது, அத்தகைய வழக்குகளை அல்லது பழக்கங்களை வற்புறுத்துவதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
 கோயிலை நிறுவியவர் அல்லது கோயில் தர்மக்காரியங்களில் ஈடுபட முழு உரிமை உடையவர் ஏற்படுத்திய வழக்கத்திற்கோ அல்லது பழக்கத்திற்கோ போதிய ஆதாரம் இருந்தால் ஒழிய, நீதிமன்றம் அவற்றை அனுமதிக்காது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் (எதிர்) ஆதித்யன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இங்கு காண்பது அவசியம்.
ஆகம விதிப்படி, கோயிலில் தெய்வங்களுக்குரிய வழிபாட்டை நடத்த வேண்டுமானால், அதில் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்ற தகுதி உடையவர் மட்டுமே அவ்வழிபாட்டை நடத்தலாம்.
எடுத்துகாட்டாக - சைவ, வைணவக் கோயில்களில் அங்கு எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கும் தெய்வ உருவங்களுக்குப் பொருத்தமான சடங்குகளைச் செய்வதற்கும் மந்திரங்களை ஓதுவதற்கும் தகுதியுடையவரை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம்.
 மரபு அல்லது வழக்கத்தின் காரணமாக பிராமணர்கள் பூசை செய்து வருகிறார்கள் என்பதால், பிராமணரால்லாதவர் பூசை செய்யத்தடை விதிக்கலாம் என்பதல்ல இதன் பொருள்.
பிராமணரல்லாதவர் வேதங்களை அறியவும், ஓதவும், அவற்றில் புலமை பெறவும், சடங்குகளைச் செய்யவும், பூணூல் அணியவும், வீட்டிலும் பொது இடங்களிலும் சடங்குகளாலான பூசைகளைச் செய்யவும் தடுக்கப்பட்டதால், கோயில்களில் பூசை செய்யும் நிலையில் பிராமணர் அல்லாதவர் இல்லை.
 அதனால், பிராமணர் அல்லது மலையாளப் பிராமணருக்கு மட்டுமே சடங்குகளைச் செய்ய இந்திய அரசியல் சாசன விதி - 25-ன் படி உரிமையும் சுதந்தரமும் தரப்பட்டிருக்கின்றன என்று வற்புறுத்துவதை நியாயப்படுத்த இயலாது.
குறிப்பிட்ட தெய்வங்களுக்குரிய பூசைகளைச் செய்வதில் நல்ல தேர்ச்சியும் உரிய பயிற்சியும் தகுதியும் உடையவர் எவரேனும் நியமிக்கப்பட்டால், அவருடைய சாதியைக்காட்டி அவருடைய நியமனம் செல்லாதென நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க முடியாது.
 மனித உரிமை செல்வாக்கு, சமூக சமத்துவம் ஆகியவற்றை மீறுவதாக உள்ள எந்த மரபும் செயல் முறையும் இந்திய அரசியல் சாசனச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே உள்ளது என ஆதாரத்துடன் காட்டப்பட்டாலும், அது இந்திய நீதி மன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
 உருவங்களை மட்டுமே வழிபட்டு, அவற்றின் மெய்ப் பொருளை மக்கள் கைவிடுகிறார்கள் என்றும் தமக்குள்ளே அவர்கள் சண்டையிடுகிறார்கள் என்றும் வள்ளலாரே அறிந்திருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் உண்டான உருவமற்ற பூசை முறையும் மத ஆசார எதிர்ப்பும் அவர் காலத்திலும் அதற்கு பின்பும் பல எதிர்ப்புகளை உருவாக்கின. அவருடைய திருஅருட்பாவினை எதிர்த்தும் வாதிட்டுள்ளனர். அவை தோற்றும் போயின.
 வேதங்களை விலக்கி சமரச வேதம் கண்டவர் வள்ளலார் என அவரைப் பலர் சாடினர். எனினும் அவர்கள் எவரும் வெற்றிப் பெறவில்லை.
வள்ளலார் ஒரு படி மேலே சென்று, மக்கள் அருவுருவ வழிபாட்டையும் கடந்து மேலேறுவர் என்பதைத் தாம் சித்தி அடையும் முன்பே தெளிவாக்கியுள்ளார்.
 அதனால், அவர் வகுத்த விதிமுறைகளுக்கு எதிராகச் சிவாச்சாரியார் தொடுத்த வழக்கை இந்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
 
தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் கே.சந்துரு அவர்களின் இந்தத் தீர்ப்பை சுத்த சன்மார்க்க சங்கத்திற்கான சாசனம் என்றே கருதலாம்.
 அரசியல் சாசனச் சட்ட விதிகளின்படி மட்டுமல்லாமல், சன்மார்க்கத்தின் வேதப் புத்தகமாக உள்ள 5818 அருட்பாக்களையும் காலம் செலவழித்துப் படித்துப் புரிந்து கொண்டு வள்ளலார் கட்டியெழுப்பிய ஞானசபையின் வழிபாட்டு விதிகள் எவ்வாறு அவரால் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொண்டு 1 முதல் 15 பிரிவுகளில் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார்.
 இந்தத் தீர்ப்பு சபாநாத ஒளி சிவாச்சாரியார் தாக்கல் செய்த வழக்குக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த ஞானசபையைப் பராமரிக்கப் பொறுப்பேற்றுள்ள இந்து அறநிலையத் துறையையும் வள்ளலார் வகுத்த விதிமுறைகளை மீறக்கூடாது எனக் கட்டுப்படுத்துகிற தீர்ப்பாகும்.
ஒருவேளை, நீதியரசர் இந்துக் கோயில்களில் உள்ளதைப் போன்ற பூசைமுறைகள் இங்கு இல்லை என்பதனையும் இந்துக் கோயில்களில் ஒன்றாக் ஞானசபை இல்லாமல் வித்தியாசமாக இருப்பதையும் புரிந்து கொண்டிருக்கலாம்.
ஏனெனில் வடலூர் தெய்வ நிலையங்களை இந்து அறநிலையத் துறையிடமிருந்து விடுவிக்கத் தமிழக  முதலமைச்சரின் பொது நிர்வாகத் துறையின் கீழ் வைக்கப்பட்டால், உத்திரப்பிரதேசத்தில் உள்ள சாரநாத் போல இது விளங்கும் என்ற கோரிக்கை சுத்த சன்மார்க்கிகளிடையே வலுப்பெற்று வருவதையும் நீதியரசர் ஒருவேளை புரிந்துக்கொண்டிருக்கக்கூடும்.
அவ்வாறு நோக்கினால், ஞான சபை என்பது சமயம் கடந்த சமயக் கோயிலாக உள்ளது என்பதையும் அதில் இந்து சமயச் சடங்குகள் புகுந்து விடக்கூடாது என்பதையும் நீதியரசர் கவனத்தில் கொண்டுள்ளது இத்தீர்ப்பில் இழையொடுவதை உணர முடியும்.
உண்மை இவ்வாறு இருக்கும்போது, ஞானசபையின் பிராகாரத்தில் சிவலிங்கப் பூசை செய்வதும் அருள்வாக்குச் சொல்வதுமான காரியத்தைச் செய்வதற்கு சிவாச்சாரியார் வாரிசு உரிமை கோரியது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க இயக்கத்திற்குச் செய்த தீங்காகும்.
 அதனால்தான், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பெற்றுக்கொண்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், காவல் இணை ஆணையர், காவல் துறை உதவியுடன் ஞானசபைப் பிரகாரத்தில் அத்துமீறிப் புகுந்துவிட்ட விக்கிரக வழிபாட்டை உடனடியாக அப்புறப்படுத்தினார்.
2007-ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்குக்கான தீர்ப்பை 24.03.2010 அன்று வழங்கிய பொழுது, ஆதாயத்திற்காகக் கடவுளைக் கையாண்டவர்களைத் தாட்சண்யமில்லாமல் கண்டித்ததொனியின் ஓசையை அதில் கேட்க முடிந்தது.
 வள்ளலாரால் நம்பிக்கையோடு நியமிக்கப்பட்ட சிவாச்சாரியார் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒருவர், அந்த வம்சத்தில் வந்த வசதியானவர், வள்ளலாரின் அருட்பாவையோ, அவருடைய உள்ளத்தில் நிரம்பி வழிந்த ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்யும் கருணையையோ கடுகளவேனும் புரிந்து கொள்ளாமல், பொருள் சம்பாதிப்பதற்காக அருள்வாக்கை ஞானசபைப் பிரகாரத்திலேயே சொல்ல தொடங்கியது, சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் இது சிவில் வழக்காக இருந்ததால் அவர் தப்பித்துச் செல்ல நேர்ந்து விட்டதாகவே கருதலாம்.
 ஞானசபைக்குள் பிரவேசித்த வாதியின் வழக்கு உண்மையில் வன்முறை சார்ந்த வழக்குத்தான். புலால் உண்ணுகிற புற இனத்தாரைக்கூட, பசியுடன் வரும்போது அவருக்கும் உணவளிக்கும் வள்ளலாரின் கொள்கை, சிவாச்சாரியாருக்கு எப்படிச் சிறைதண்டனை பெற்றுத் தரும்?
 நீதியரசர் கே. சந்துரு அவர்கள் பதவி ஓய்வு பெற்று நீதிமன்றங்களிலிருந்து வெளியே வந்த போது, அவருக்காக ஏற்பாடு செய்ய இருந்த பிரிவு உபச்சார விழாவை ஏற்க அன்போடு மறுத்துவிட்டார். உபச்சாரமில்லாமல் உயர்நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்குப் போன முதல் நீதிபதி அவர்தான்!
அதுமட்டுமல்ல, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்டு அரசு அமைக்கும் விசாரணைக் குழுவில் இடம்பெறமாட்டேன் என்று அறிவித்தவரும் அவர்தான்.
 ஆழ்ந்த சட்டப்புலமை அவர் பெற்றிருப்பது ஆச்சரியமில்லை. ஆனால், அவருடைய எளிமைத் தோற்றம் அவருக்கு எதுவும் தெரியாது என்பது போலக் காட்டக்கூடியது.
அத்தகைய நீதிபதி ஒருவர் வடலூர் வழக்கிற்கு வழங்கிய தீர்ப்பைப் படித்தபோது இந்தத் தீர்ப்பு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பு அல்ல. அவருடைய உள்ளத்தில் புகுந்து வள்ளலாரே வழங்கிய தீர்ப்பு என்று வடலூர் இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி திரு.கிருஷ்ணகுமார் கூறியதைக்கேட்டு நெகிழ்ந்தவர்கள் பலர்.
 (நன்றி: சித்ரகுப்தன் மாத இதழ்)
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!
 அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

Saturday, December 14, 2013

நம் தலைமேல் ஒரு பாரம்

நம் தலைமேல் ஒரு பாரம்

வணக்கம்! ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில சிறப்பு நிலையின் வரலாற்றை நாம் இப்பகுதியில் சற்று சுருக்கமாக காண்போம்.


மெளண்ட்பேட்டன் திட்டம்

இந்தியாவிற்கு சுதந்தரம் அளிக்கப் படுவதற்காக மார்ச் 1947-ல் கிளமன்ட் அட்லி, மெளண்ட்பேட்டன் பிரபுவை இந்தியாவிற்கு அனுப்பினார். இதுவரை எந்த வைசிராய்க்கும் அளிக்காத அதிகாரங்களை எல்லாம் அவருக்கு அளித்து இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இவர் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பேசி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதற்கு "மெளண்ட்பேட்டன் திட்டம்" அல்லது "பிளான் பால்கன்" (Mount Batton Plan or Plan Balkanisation) என்று பெயர். இதன்படி இந்தியா மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா என உருவாக்கப்பட தீர்மானிக்கப்பட்டு, இத்திட்டம் இங்கிலாந்து மந்திரி சபையின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இங்கிலாந்து மந்திரிசபை இதனை அங்கீகரித்தது.

இந்தியாவில் உள்ள சமஸ்தானங்கள் தம் விருப்பத்திற்கு ஏற்றவகையில் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. இம்முடிவுகளின் அடிப்படையில் ஜூலை 1947-ல் இந்திய சுதந்தரச் சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆகஸ்டு 14, 1947-ல் பாகிஸ்தானும், ஆடஸ்டு 15, 1947-ல் இந்தியாவும் சுதந்தரம் பெற்றன.


காஷ்மீர் மன்னர்கள்
டெல்லி சுல்தான்கள் ஆட்சி முடிவடையும் காலத்தில் வட இந்தியப்பகுதியில் சிறு சிறு அரசுகள் சில தோன்றின. அவ்வகையில் காஷ்மீரை "சிக்கந்தர் ஷா" என்பவர் ஆண்டுவந்தார். இவருக்கு ஐடேல் பிரக்கர் (Idol Breaker) அல்லது (Butshikhan) பட்சிகான் எனப்பெயர்.

காஷ்மீரில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பாக வைஷ்ணவம் சிறந்து விளங்கியது. 18-ம் நூற்றாண்டில் இறுதியில் இப்பகுதியின் சிறந்த மன்னராக "சாகிகான்" என்ற மன்னர் விளங்கினார். இவரது வேறுபெயர் "ஜெயிலுனாபுடின்". இவர் இந்துக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியை நீக்கியதால் இவருக்கு "காஷ்மீரின் அக்பர்" (Akbar of Kasmir) எனப்பெயர்.

இவர் காஷ்மீரத்தின் வூலார் ஏரியில் (Wular lack) மத்தியில் அழகிய தீவு ஒன்றினை உருவாக்கி அதற்கு (Zaina Lanka) ஜைனா லங்கா எனப்பெயரிட்டார்.

இவ்வாறு இறுதியில் இந்தியா சுதந்தரம் அடைந்தபோது ஒரு சீக்கிய மன்னர் "ஹரிசிங்" என்ற மன்னர் காஷ்மீரை ஆண்டுவந்தார்.


காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு
 
பாகிஸ்தான், தனது எல்லையோரம் அமைந்துள்ள காஷ்மீர் மன்னருக்கு பல வகையிலும் நெருக்கடிகள் தந்தது. எல்லையோரம் வசித்த பழங்குடியினர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, காஷ்மீரைக் கைப்பற்றத் தூண்டியது. அந்தப் பழங்குடிகள், காஷ்மீர் மீது போர் தொடுத்தார்கள். பாகிஸ்தான் ராணுவமே அவர்களுடன் சேர்ந்து தலைநகர் நகர் நோக்கி வந்தது. அப்போது, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவிடம் உதவி கேட்டு, ஜவஹர்லால் நேருவிடம் முறையிட்டார்.
காஷ்மீர் மகாராஜாவின் ராணுவ உதவி கோரிக்கை குறித்து அக்டோபர் மாதம் 25ந் தேதி இந்தியாவின் இராணுவ குழு இதுபற்றி விவாதித்தது. இந்த கூட்டத்திற்கு மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை தாங்கினார். இறுதியாக காஷ்மீர் சமஸ்தானத்திற்குள் இந்தியா நுழைய கூடாது என்றும், ஆனால் காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைவதாக சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டால் , இராணுவ உதவி அளிக்கலாம் என்று மவுண்ட்பேட்டன் கூறினார்(Lord Mountbatten final advise was that Indian troops should not enter into an independent country but should do so only when the State had acceded to India) . இதன் அடிப்படையில் இந்தியாவின் சார்பாக வி.பி.மேனன் உடனடியாக ஜம்மு சென்று மகாராஜாவின் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 26ந் தேதி முறைப்படி இணையும் ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். இந்த இணைப்புக்கு இந்தியாவின் சார்பாக மவுண்ட்பேட்டன் தனது ஒப்புதலை அளித்தார்.இதன் பின்னர் உடனடியாக ஸ்ரீநகருக்கு இந்திய ராணுவம் விரைந்து சென்று மலைவாழ் பழங்குடிக் கூட்டத்தினரைத் தடுத்து நிறுத்திக் காஷ்மீர் காக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ந் தேதி முறைப்படி காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ருப்பினும் காஷ்மீரின் மூன்றில் ஒருபகுதியினை பாகிஸ்தான் கைபற்றியது. அதனை சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா கூறுகிறது. காஷ்மீரின் மூன்றில் இரண்டுபங்கைத்தான் இந்திய இராணுவத்தால் தக்கவைக்க முடிந்தது. ிறகு ஹரிசிங்குக்குப் பதில் அவரது மகன் கரன்சிங், மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.



 

ஐக்கிய நாட்டுசபை தலையிடுதல்
 
இந்தியாவிடம் இணைந்த காஷ்மீரை பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விகாரம் 1948 ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம்.

ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால் தான் இது வரை ஓட்டெடுப்பு நடத்தவில்லை.


தனித்தன்மைகள் காக்கப்படும் - உறுதிமொழி
ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த நமது பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதி மொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஓட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்ததது, வருகின்றது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை 5வது மாநிலமாக அறிவித்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியை கில்ஜித் பல்திஸ்தான் என்ற பெயரில் புதிய மாகாணமாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

இதுதொடர்பான முடிவுக்கு பிரதமர் கிலானி தலைமையில் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி கில்ஜித் பல்திஸ்தான் என்று பெயரிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியான உள்நாட்டு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

பாகிஸ்தான் அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, இன்னொரு முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துளளன. மற்ற கட்சிகள் நிராகரித்துள்ளன.

நிபந்தனை / உறுதிமொழி / 370-வது பிரிவு


 
அப்போது செய்யப்பட்ட இணைப்பு உடன்பாட்டில் காஷ்மீரின் சூழ்நிலைகள், சிறப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சில சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் கேட்டதற்கு இணங்கவே இந்திய அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு காஷ்மீருக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. அதற்கான ஜனாதிபதியின் பிரகடனம் 1952 நவம்பர் 17-ம் தேதி அமலுக்கு வந்தது.
1. பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே இந்திய அரசிடம் கையளிக்கப்படும்.

2. இந்திய அரசின் வாக்குறுதி: ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டுச் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பின்னர் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசுடனான இணைப்பு இறுதியாக்கப்படும்.

இந்த அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு உருவாக்கப்பட்டு சுயாட்சி உண்மைகள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்க அனுமதி இல்லை"

காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார்.

ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951 ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார்.

காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை.
 

இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு அதன் படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இது குறித்து இந்திய அரசியல் சாசனம் பின்வருமாறு கூறுகிறத

ஆனால் () கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,

இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தத


The Constitution of Jammu and Kashmir
Preamble. - We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves - ………
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.

இது என்ன கூறுகிறது?

ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்.

சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?.

அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள். (இரட்டை குடியுரிமை என்றால் அங்கு இந்தியக்கொடியையுமம், காஷ்மீரக்கொடியையும் சேர்த்தே பறக்கவிடவேண்டும். ஒன்றைவிட்டு ஒன்றைமட்டும் ஏற்றுதல் தவறு)

மேற்கண்ட காஷ்மீர் அரசியல் சாசனத்தில் காஷ்மீரின் தேசியக் கொடி எது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை இந்திய அரசியல் சாசனமும் ஒப்புக் கொள்கிறது.

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.

144. Flag of the State:


144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஒரு மசோதா விவாதித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டால், குடியரசு தலைவர் எத்தனை முறை வேண்டுமானலும் திருத்தம் செய்ய கோரி மாநிலத்திற்க திருப்பி அனுப்பலாம். துமிழகத்தில் நில உச்ச வரம்பு மசோதாவிற்கு ஆறு முறை திருத்தம் செய்ய வேண்டி திருப்பி அனுப்பட்டது. ஆனால் காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஒரு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு சென்றால் அனுமதி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இரண்டாவது முறையாக காஷ்மீர் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து விட்டால், குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக்கப்படும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஷேக் அப்துல்லா 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ந் தேதிக்கு முன் பாகிஸ்தான் சென்ற காஷ்மீர் முஸ்லீம்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுடன், அவர்களின் பூர்வீகச் சொத்தும் மீட்டுக் கொடுக்கப்படும் என்ற வகையில் Resettlement Act-ஐக் கொண்டு வந்ததை மறந்து விடக்கூடாது.

இந்தியா ஒப்பந்தத்தை மீறுதல்

அந்த இணைப்புச் சாசனத்தில் கையெழுத்திட்ட மவுன்ட்பேட்டனும் இணைப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்றால், அந்த மக்களின் சம்மதத்தையும் கேட்ட பின்னரே செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையோடு இணைப்பு தற்காலிகமானதுதான் என்ற நிலையில் அதனை ஏற்றார். 1947 நவம்பர் இரண்டாம் நாள் இந்திய வானொலியில் ஆற்றிய உரையிலும் 'ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அம்மக்களே தீர்மானிப்பார்கள்' என்று நேரு கூறினார். பின்பு, 31 டிசம்பர் 1947இல், .நா. சபைக்குக் கொடுத்த புகாரிலும் அந்த மாநில மக்களின் கருத்தை அறிய, .நா. சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் நேருவின் காலத்திலேயே மீறப்பட்டன. ‘வாக்கெடுப்பு பற்றி காஷ்மீரில் குரல்கள் ஒலித்தபோதெல்லாம் ரொம்பவும் கவனமாகத் தட்டிக்கழித்தார்.

பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.

இதன் பின்னர் 370 வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது. இந்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசுக்குச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தந்தது. பக்ஷி குலாம் முகமதின் அரசும் அதற்கு ஒப்புதலளித்தது. இதன்படி, இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 வெறும் காகிதப் புலியாயிற்று.

பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது. ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது.

1958இல் இன்னுமொரு சட்டம் ஜம்மு-காஷ்மீரை மத்திய நிர்வாகச் சேவையின் கண்காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்தது.


காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அரசியலமைப்புச் சட்ட விதி 370 ன் படி கூடுதல்அதிகாரம் வேண்டுமானால் வழங்கலாம் என்றது.
ாஷ்மீர்மக்களின் நிலை

காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அங்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளதென்றாலும் நிர்வாகத்தின் பிடி ராணுவத்தின் கையில்தான் என்பதை உணரலாம். இம்மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இரண்டு ராணுவக் கமாண்டர்கள் (15 corps மற்றும் 16 corps). காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் ஜனத்தொகை 35 லட்சம். ஆனால், அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் எங்கும் நிறைந்துள்ளனர். 50 மீட்டரிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இவர்கள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருப்பது சர்வசாதாரணமான காட்சி. எங்களுக்குப் பயமெல்லாம் தீவிரவாதிகளைவிடத் துப்பாக்கி ஏந்தி ரோந்திலிருந்த இந்த ராணுவத்தினர்மீதுதான் அதிகமிருந்தது. இவர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் எந்த வாரண்டும் இல்லாமல் கைதுசெய்யலாம், கொல்லலாம், மாயமாக மறைய வைக்கலாம். அதற்காக யாருக்கும் - இந்திய நாடாளுமன்றத்துக்குக்கூட - பதில் சொல்லத் தேவையில்லை. எல்லையற்ற இந்த அதிகாரத்தை அவர்கள் யார்மீது செலுத்தினாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். எனவே, கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு போன்றவை மலிந்துள்ளன. கிராமப்புறங்களில் இவர்களது கெடுபிடிகள் சற்று அதிகம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சோதிக்கப்படுவார்கள்.


காஷ்மீர் மக்கள்மீதுள்ள நமது பார்வை
'காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படுத்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது. ஆனால், இவர்கள் காட்டுவதெல்லாம் இந்திய விரோத மனோபாவம்தான்.' இதுதான் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றி ஏற்படுத்தியுள்ள பிம்பம்.


என்ன தீர்வு
காஷ்மீரை பொறுத்தவரை மாஹாராஜா ஹரிசிங், இந்தியா, பாகிஸ்தான், .நா. எல்லோரும் சிலபல தவறுகளை செய்துவிட்டனர். இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரம் அடைந்த அன்று மாநிலங்கள் இவ்விரு நாட்டில் எந்நாட்டில்வேண்டுமானாலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றே இங்கிலாந்து அறிவித்து நமக்கு சுதந்தரம் அளித்தது. ஆனால் இந்த ஹரிசிங் தனது சுயலாபம் மிகுதியால் தான் ஆண்ட காஷ்மீரை முதலில் பாகிஸ்தானுடன் இணைக்கவும், பிறகு இந்தியாவுடன் இணைப்பதற்கும் பேரம் பேசியதின் விளைவாகவும், திடமாக ஏதேனும் ஒரு நாட்டில் இணைக்க தவறியதாலும், இன்று இந்திய மக்களும், காஷ்மீரிகளும், பாகிஸ்தானியரும் அமைதியின்றி தவிக்கின்றோம்.

இறுதியில் ஹரிசிங் தமது மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க கையொப்பமிட்டப்பின்பு, காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்ரமித்தது மிகப்பெரியத் தவறு.

இந்தியா அப்போது பாகிஸ்தானின் ஆக்ரமிப்பை தடுத்து நிறுத்தியதே அன்றி, அது ஆக்ரமித்தப் பகுதியினை மீட்காமல் விட்டது தவறு. மேலும் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக சிறப்பு நிபந்தனைகளை நீக்காமல் அதனை மீறியது தவறு. ஐக்கிய நாட்டு சபையுடன் செய்த ஒப்பந்தப்படி காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த தவறியதும் தவறு.

.நா. காஷ்மீர் மக்களின் தனிநாடு விருப்பத்தையும் வாக்கெடுப்பில் சேர்த்தது தவறு. ஒன்று அம்மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிக்கவேண்டும். அல்லது பாகிஸ்தானுட இணைய விருப்பம் தெரிவிக்கவேண்டும். மூன்றாவதாக தனிநாடு கோரிக்கையினை வளர்த்தது ஐ.நா.வின் தவறு. இந்திய சுதந்தரம் அன்று பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாக செல்ல அங்கீகரித்தது இங்கிலாந்து. மற்ற மாகானங்கள் யாவும் இந்த இரண்டுநாட்டில் ஒன்றில் ஐக்கியமாகவேண்டுமே தவிற மேலும் ஒருதனிநாடாக உருவாக எந்த மாகானமும் முயலக்கூடாது.

ஒருவாறு நீதிப்படி நடுநின்று பார்த்தால் காஷ்மீர் மக்களிடையே தனிநாடு கோரிக்கையினை எடுத்துவிட்டு, இந்தியாவா? பாகிஸ்தானா? என்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்தி இரண்டில் ஒரு நாட்டுடன் காஷ்மீரை இணைப்பதே சிறந்தது.

ஆனால், இன்றைய நிலையில் காஷ்மீரின் ஒருபகுதி ஏற்கனவே பாகிஸ்தானிடம் உள்ளது. அதனை பாகிஸ்தானின் ஐந்தாவது மாநிலமாக அறிவித்தாகிவிட்டது. அதனை இந்தியாவும் ஒன்றும் செய்யமுடியா நிலையில் உள்ளது. இந்தியாவிடம் உள்ள மற்ற காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானோ, மற்ற உலக நாடுகளோ, .நா. அமைப்போ ஒன்றும் செய்துவிடமுடியாது. எனவே இந்தியாவிடம் உள்ள காஷ்மீரிகள், நாங்களும் முழுமையான இந்தியர்களே! என்று தங்களை தேசிய நீரோட்டத்தில் தாங்களாகவே முன்வந்து கலந்துவிடுவதே சிறந்தது. தங்கள் மாநிலத்திற்கு என்று எவ்வித சிறப்பு அந்தஸ்தும் வேண்டாம், தனிக்கொடி வேண்டாம் என்று மற்ற இந்தியர்களை போல ஒன்றிணைவதே அவர்களுக்கு நல்லது. இல்லையேல் இந்திய அரசு காஷ்மீரிகளுக்கு அளித்து வருகின்ற தற்காலிக சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு அவர்களையும் சட்டரீதியாக ஒரு முழுமைப்பெற்ற இந்தியர்களாக அறிவித்துவிடுவதே நல்லது. இதனால் காஷ்மீர் மக்களும் இந்திய இராணுவத்திடமிருந்து விடுதலை அடைவார்கள். அவர்களது வாழ்க்கையும், பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். இந்தியாவும், பாகிஸ்தானும் இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் மக்களின் பெரும்பான்மையான வரிப்பணம் மிச்சப்படுத்தப்பட்டு அந்தந்த நாட்டு முன்னேற்றத்திற்கு செலவிட ஏதுவாகும்.

சமீபத்தில் நமது தலைமை நீதிமன்றம் சிவப்பு விளக்கினை யார் யார் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளது. தலைமை நீதிமன்றம் கூறியவுடன் நேற்று உடனே (13.12.2013) ஜம்மு மற்றும் காஷ்மீர் டி.ஜி.பி. தன் வாகனத்தில் இருந்த சிவப்பு நிற விளக்கை அகற்றியதோடு, மற்ற அதிகாரிகளையும் அகற்றும்படி உத்தரவிட்டார், என்ற செய்தியினை இன்றைய நாளேட்டில் படிக்கமுடிந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிவப்பு சுழல் விளக்குடன் வேகமாகவந்ததை தடுத்து நிறுத்தி அதனை அகற்றி ஊதாநிற சுழல்விளக்கை மாற்றிக்கொண்டு செல்ல உத்தரவிட்ட ஜம்மு காஷ்மீர் நடமாடும் நீதிமன்ற நீதிபதியையும் பாராட்டவேண்டும். ஆனால் அதனால் காத்திருந்த நேரத்தில் ஒரு உயிர் பிரிந்தது வேதனையளிக்கிறது. இந்த எடுத்துக்காட்டுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் இன்றைய இந்தியாவின்மீதுள்ள பற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆனால் நேற்று சென்னையில் நடந்த (13.12.2013) மாவட்ட ஆட்சித்தலைவர்களின் மாநாட்டில் பெரும்பாலான அதிகாரிகள் சிவப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தில் வந்து கலந்துக்கொண்டார்கள். இந்தியர்களாகிய இவர்கள் நமது தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உத்தரவினைமட்டும் மக்கள் மதிக்கவேண்டுமாம். தமிழர்கள் காஷ்மீரிகளை பார்த்து திருந்தவேண்டும்.

உலக மக்கள் சுதந்தரமாகவும், அச்சமின்றியும், பொருளாதார முன்னேற்றத்துடனும் வாழவேண்டும் என்பதே நமது கனவாகும்.

Wednesday, December 11, 2013

குருபூஜை நிறைவு - 2013

குருபூஜை நிறைவு - 2013

அன்புடையீர் வணக்கம்!

சென்ற 08.12.2013 அன்று காரணப்பட்டு கிராமத்தில் சமரச பஜனை ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் 89 ஆம் ஆண்டு குருபூஜை மிகவும் சிறப்பாக திருவருள் சம்மதத்துடன் நிறைவேறியது. முதலில் திருஅருட்பிரகாசரின் பொன்னடியினை தாங்கிய பாதகுரடுக்கு பூஜை செய்யப்பட்டது. அவ்வமயம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இவ்வுலகிற்கு அருள் புரிந்தார். திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களும் அவ்வமயம் அங்கு அரூபநிலையில் தமது மாணக்கரின் சமாதி நிலையினை வாழ்த்தியருளினார். திருஅருட்பிரகாசர் அவர்கள், செத்தாரை எழுப்புதல் என்ற அருள்நிலையினை துவங்குவதற்கு காலம் மிக சமீபத்தில் உள்ளது. அந்த அற்புத நிகழ்ச்சியினை காரணப்பட்டு ஐயா அவர்களின் சமாதி நிலையத்திலிருந்தே துவங்குவார் என்ற அன்பர்களின் எண்ணங்களுடன் / வேண்டுகோளுடன் காரணப்பட்டாரின் குருபூஜை இனிதே நிறைவுற்றது.

காலை 9.00 மணியளவில் சன்மார்க்க சங்கத்தவர்களின் அகவல் ஓதலுடன் இனிதே துவங்கியது குருபூஜை. 11.00 மணியளவில் காரணப்பட்டு வாழ் சமரச பஜனை அன்பர்கள் திருஅருட்பா பாடல்களை இசைத்தார்கள். அவ்வமயம் ஒரு அன்பர் பேசும்போது ஒரு புதிய செய்தியினை கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். அதாவது திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள், தாம் பாடிய திருஅருட்பாவினை காரணப்பட்டு ஐயாவை பாடச்சொல்லி கேட்பார்களாம்! என்ன ஒரு பாக்கியத்தை காரணப்பட்டு ஐயா பெற்றிருக்கிறார்கள்! என்று வியந்தோம். பிறகு புதுச்சேரியில் வந்திருந்த அருள்திரு.என்.அருள்ஜோதி - உதவி ஸ்கூல் - முதல்வர் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனைத்தொடர்ந்து பேராசிரியர் முனைவர். .நலங்கிள்ளி - கடலூர், அவர்களும் சொற்பொழிவு ஆற்றினார்கள். இறுதியாக கடலூர் நிலவள வங்கி தலைவர் திரு.இராமலிங்கம் - காரணப்பட்டு, அவர்கள் நன்றியுரையுடன் சொற்பொழிவுகள் முடிவுற்றன.

கன்னியாக்குமரி தங்கஜோதி ஞானசபையைச் சேர்ந்த இரண்டு அன்பர்கள் இவ்விழாவினில் கலந்துக்கொண்டு, ஞானதானம் செய்ததுடன் சன்மார்க்க புத்தகங்களையும் காணிக்கை பெற்றுக்கொண்டு தேவைப்படுபவர்களுக்கு அளித்தார்கள்.

காரணப்பட்டு ஐயாவின் சமாதி நிலையத்தை கவனித்துவரும் திரு.பழனி ஐயா அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு விட்டதால் கடந்த ஒரு மாதக்காலமாக சமாதி நிலையத்தினை அவரால் கவனிக்கமுடியாமல் போனது. அவ்வமயம் திரு.நடராஜன் ஐயா - காரணப்பட்டு அவர்கள் மிக நல்ல முறையில் நிலையத்தினை கவனித்துவந்தார்கள். இன்றைய குருபூஜையில் திரு.பழனி ஐயா அவர்கள் நடக்க முடியா நிலையிலும் மதியம் 2.00 மணியளவில் வந்து கலந்துக்கொண்டது சிறப்பு.

இறுதியாக மதியம் 2.00 மணியளவில் கடலூர் நிலவளவங்கித் தலைவர் திரு. இராமலிங்கம் அவர்களது இல்லத்தில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்திற்காக அரிசி முதலிய இடுபொருள்களை வழங்கிய அன்பர்களுக்கு என்றும் திருஅருட்பிரகாச வள்ளலார் உறுதுணையாக இருப்பாராக.

இப்பூஜை சிறப்புற நடக்க புறக்காரணமாய் இருந்த காரணப்பட்டு கிராமவாசிகளுக்கும், சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், காரணப்பட்டு ஐயாவின் வாரிசுதாரர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்...

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி