Saturday, December 23, 2017

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு நவம்பர் - 2017

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு
நவம்பர் - 2017

தேதி விவரம் வரவு செலவு இருப்பு
01.11.2017 இருப்பு கீ/கொ              6,538.50
27.11.2017 All the Children - Donation paid (ஆதவற்ற குழந்தைகள் காப்பகம் - சென்னை - நன்கொடை அளித்தது            1,000.00          5,538.50
27.11.2017 வங்கிக் கட்டணம்                    3.00          5,535.50
29.11.2017 திரு.என்.ஆனந்தகுமார் அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றது             350.00            5,885.50

நவம்பர் மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.5,885.50 மட்டும் உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

நவம்பர் மாதம் சென்னையில் (வியாசர்பாடி) இயங்கிக்கொண்டிருக்கும் ஆதரவற்ற அரசு அங்கீகாரம் பெற்ற “All the children” என்ற ஆதவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு நமது அறக்கட்டளை சார்பாக உரூபாய் 1000/- நன்கொடை அளிக்கப்பட்டது.

          சென்ற 25-11-2017 அன்று காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா குருபூசை அன்று அன்ன தானம் மற்றும் ஜோதி வழிபாட்டு செலவாக ச.மு.க. அறக்கட்டளை மூலம் ச.மு.க. வழிவந்தோர்கள் உரூபாய் 12,068/- ஐ ரொக்கமாக செலவு செய்துள்ளனர்.

          மேலும் ஐயாவின் குருபூசைக்காக கடலூர் நத்தப்பட்டு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அவர்கள் அரிசி 50 கிலோ, 250 எண்ணிக்கையில் வாழை இலைகள் மற்றும் வாழைக்காய் அன்பளிப்பாக அளித்துள்ளார்.

          கடலூர் திரு.மு.சந்தானம் ஐயா அவர்கள் ஒரு கிலோ நெய் அன்பளிப்பாக அளித்தார். கடலூர் ஆனைக்குப்பத்தைச் சார்ந்த திரு.கலியமூர்த்தி ஐயா அவர்கள் தமது வாகனத்தை அளித்து உதவி செய்தார்.

          கடலூர் முனைவர் அ.நலங்கிள்ளி-சுசீலா அவர்கள் ச.மு.க. அருள் நிலையத்திற்காக 6 இருக்கைகள், 2 சாப்பாட்டு டேபிள் ஆகியவைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.

          எம் கவனத்திற்கு வராமல் இன்னும் சில உதவிகளை சிலர், ஐயாவின் குருபூசைக்காக செய்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் பேரருள் கிடைப்பதாக. 

          தம்மை யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.

                                                                                           இங்ஙனம்
                                                                                      T.M.Ramalingam
                                                                                              Trustee

சித்தர்கள் பார்வை - ஆழ்ந்த ஞானம்

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:

சித்தர்கள் பார்வை
ஆழ்ந்த ஞானம்

சித்தர்கள் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

        இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். "வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது" என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

        அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

        சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு,   உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நாடியை உணரும் முறை
        நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின.  மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.

சித்த மருத்துவத்தில் ஜோதிடத்தின் பங்கு
        வேத நூல்களின் முக்கியமான அங்கமாகிய ஜோதிடக் கலை,  மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. வெவ்வேறு கிரக நிலைகளில், வெவ்வேறு லக்கினங்களுக்கு உரியவர்களுக்கு, உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் வைத்தியம் செய்ய உலோகங்களையும், ரத்தினக்கற்களையும் பக்குவம் செய்து உபயோகித்தார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது.

      மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. 

        முனிவர்கள் உணர்ந்து அளித்த யோகம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே உடற்குறைகளைக் கண்டறிந்து அவற்றை அறவே நீக்கும் முறைகளைப் பின்பற்றுவது, கொடிய வியாதிகளின் கடுமையை இயன்றவரையில் குறைப்பது ஆகிய மூன்றுமே அந்த முக்கியமான அம்சங்களாகும்.

        சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் - நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்குமுன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும்.

        சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்றூ சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.

சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு
           பூஜைக்குப் பயன்படும் மகாவில்வ தளம், துளசிதளம் போன்றவை சிகிச்சைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. மூலிகைகள் வளரும் மண், அவை பறிக்கப்படும் நேரம், பறிக்கும் முறை எல்லாவற்றுக்குமே விதிகள் இருந்தன. காற்றில் ஏற்படும் அசுத்தங்களை ஹோமங்கள் செய்வதன் மூலம் நீக்கலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருந்தார்கள். நாயுருவி (பாதரசம்), எருக்கு ( சூரியன் ), பலாசம் ( சந்திரன் ), வன்னி ( சனி ), அருகம்புல் ( குரு - ராகு ), தர்ப்பை ( கேது ) போன்ற ஹோமத்துக்கு உரிய பொருட்கள், சிக்கலான மருத்துவ முறைகளுக்கும், உரியவை என்பது அவர்கள் கண்டறிந்த தத்துவம் ஆகும்.

        உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள்  தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.

        பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

        ரசவாதம் பணம் சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. உடலின் உறுப்புகளைப் புதுப்பிக்கவும், நீண்ட ஆயுளைக் கொடுக்கவும், மூப்பை நீக்கி மீண்டும் இளமையைத் தரவும் பயன்பட்டன. காயகல்பம் என்ற மருத்துவமுறை இவ்விதம் இளமையை மீட்டுத் தரவல்லது. இரும்பு போன்ற உலோகம் தங்கம் போன்ற உலோகமாக மேன்மையுறச் செய்யும் பக்குவத்தைக் கண்டறிந்து, அவர்கள் மனிதப் பண்புகளையும், மேம்படச் செய்தார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் மந்திர முறைகள், விஷங்களைப் போக்கவும் பயன்பட்டன.

மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்

        இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.

உடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள். சாவு நேரிடும் வரையில் நரம்பு தளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள். உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள்.

 இன்றைய மருத்துவத்தில் சித்தர்களின் பங்களிப்பு
          இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இறைவனின் அருளை நம்பி, வேதாந்திகளாகவே வாழ்ந்தார்கள். சித்தர்களின் அபூர்வ மருத்துவ பயன்களைப் பெற விரும்பும் மக்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து, பக்திமார்க்கத்தை ஒட்டி, தூய பண்புகளுடன் வாழ்ந்தாலே முழுப் பயன்பெற முடியும்.

நன்றி – திரு. எஸ்.கண்ணன்கோபாலன்

மாதம் ஒரு மகான் – ஏகநாதர்

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:

மாதம் ஒரு மகான்


ஏகநாதர்




மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.
ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர் – 2

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:


நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர் – 2



--தி.ம.இராமலிங்கம்.


“…96 கலையே 96 தத்துவமாய்ப் பிண்ட வடிவாயிற்று. அக்கினிகலை 64-ன் குணங்கள் சைவத்தில் 64 திருவிளையாடல்கள் ஆகவும், உண்மை அடியார்கள் 63 அதீதம் ஒன்று ஆகவும் வழங்குகின்றன. சந்திரகலை (சூரியகலை என்பதை சந்திரகலை என்று தவறுதலாக அச்சடித்துள்ளார்கள்) 12மே வைஷ்ணவ பரத்தில் துவாதச ஆழ்வார்களாக வழங்குகின்றன. மற்ற 20 கலையும் கெளமாரம், பாசுபதம், மஹாவிரதம், சாத்தேயம், காணாபத்தியம், காபாலம், செளரம், மகம் மதீயம் (இஸ்லாம்), பெளத்தம், கிறிஸ்துவம் முதலிய சமயங்களில் வழங்குகின்றன. இவற்றின் அனுபவங்களைக் குரு முகத்தில் அறிக.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-351)
அக்கினிகலை 64
சூரியகலை 12
சந்திரகலை 16+4 (நட்சத்திரக்கலை 4)


ஆக மொத்தம் 96 கலைகளையுடையது நமது உடம்பு. நமது உடம்பின் தத்துவத்தை விளக்கவே சமய மதங்கள் முற்படுகின்றன. ஆனால் எச்சமயமும், மதமும் அதனை முழுமையாக விளக்க முடியாமல் குறை இயல்போடு இருக்கின்றன என்பதனை நாம் மேற்காணும் வள்ளலாரின் வாக்கினை வைத்து உணரலாம். அக்கினிகலை 64-னை விளக்க வந்தது சைவ சமயம். சைவ சமயத்தில் உள்ள திருவிளையாடல் புராணமும், பெரிய புராணமும் அதனை கதைகளாக விளக்கி சொல்கின்றன. கதையின் முடிவில் “இக்கதையிலிருந்து நாம் என்ன தெரிந்துக்கொள்கின்றோம்?” என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டு அக்கதையிலிருக்கும் நீதியினை எடுத்துக்கொண்டு ஒழுக வேண்டுமே தவிர அக்கதையில் வரும் மாந்தர்களை கடவுளாகவோ, குருவாகவோ, அடியவர்களாகவோ கொண்டு அவர்களை வழிபட்டு வருகின்ற மூடத்தனத்தை அறவே விடவேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு.

கலை என்பது என்ன? நமது உடம்பிலுள்ள ஆன்மாவின் அறிவு (ஆன்ம அறிவு) வளர்ச்சியே கலை எனப்படும். கடவுள் நமக்குள் இயங்கும் நிலையை கலை என்கின்றோம். 96 கலைகளும் பூர்த்தியடைந்த ஆன்மாவே மஹாத்மாவாக பரமாத்மாவாக முத்தேக சித்தியராக அருட்பெருஞ்ஜோதியாக பரிணமிக்க முடியும். இந்த 96 கலைகளும் வள்ளற்பெருமானின் உடலிலுள்ள ஆன்மாவில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து முழுமை பெற்றதை நாம் அவரது அனுபவப் பாடல்களைக் கொண்டு அறியலாம். “அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது…” என்று தமது பேருபதேசத்தில் வள்ளலார் கூறுவார். அற்ப அறிவு என்று அவர் கூறுவது நமக்கெல்லாம் இருக்கின்ற உலக அறிவோ, சமய மத சாதி அறிவோ, அறிவியல் அறிவோ, மற்ற எண்ணற்ற படிப்பறிவோ, அனுபவ அறிவோ அல்ல. நாமெல்லாம் இதுவரை ஒரு சிறிதும் கண்டிராத ஆன்ம அறிவின் குறைவினை அவர் ‘அற்ப அறிவு’ என்கின்றார். அனேகமாக அவர் குறிப்பிடும் அந்த அற்ப அறிவு என்பது 96 கலைகளில் இறுதியில் உள்ள 64 கலைகளின் வளர்ச்சியினை குறிப்பிட்டிருக்கலாம்.

64 கலைகளில் ஒரு கலையை நமது ஆன்மா பெற்றுவிட்டால் நாம் ஒரு நாயன்மாருக்கு சமம். இப்படி 64 கலைகளையும் / அறிவினையும் நமது ஆன்மா பெற்றுவிட்டால் 64 நாயன்மார்க்கு சமமாகிவிடுவோம். நமது ஆன்ம வளர்ச்சிக்கு மேற்காணும் சமய மதங்களில் புக வேண்டாம் என்பதே வள்ளலார் கண்ட கலையாகும். ஆன்ம நேய ஒருமைபாட்டோடு ஜீவகாருண்ய இரக்கத்துடன் இருந்தால் நமது ஆன்ம கலைகள் வளர்ந்து இப்பிறப்பிலேயே முதிர்ச்சி அடையும் என்பதே வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கம் ஆகும்.

இவ்வுலகில் சுத்த சன்மார்க்கம் வழங்கும் முன்னர் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த சித்தர் பெருமக்கள் இப்படிப்பட்ட ஆன்ம கலைகளை வளர்க்க யோக முறையினை நாடினர். குறிப்பாக குறிப்பிட வேண்டுமாகில் திருமூலர் என்கின்ற சித்தர் இந்த யோக நெறியினை விளக்கமாக கூறியுள்ளார். நமது உடம்பில் ஓடும் சுவாசக் காற்றினை சந்திரக் கலை, சூரியக் கலை, அக்னி கலை என்று பிரித்தனர். விந்து அல்லது இடது புறம் ஓடும் நாசிக்காற்றினை சந்திரக்கலை என்றனர். நாதம் அல்லது வலது புறம் ஓடும் நாசிக்காற்றினை சூரியக்கலை என்றனர். விந்து நாதம் இவையிரண்டும் இணைந்து ஓடும் சமமாக ஓடும் நாசிக்காற்றினை அக்னி கலை என்றனர். 

சந்திர கலை 16+4= 20 வகையான ஆன்ம அறிவுடையது அல்லது ஆன்ம வளர்ச்சியுடையது அல்லது ஆன்ம அனுபவமுடையது. கலை என்பதை ஆங்கிலத்தில் Division  என்று சொல்லலாம். சந்திர கலை என்பது இடது நாசி ஓட்டத்தின்போது ஏற்படும் ஆன்ம அனுபமாகும். இவ்வனுபவம் நமது ஆன்ம வளர்ச்சியின் முதல் கட்டம் எனலாம்.

சூரிய கலை 12 வகையான ஆன்ம வளர்ச்சியுடையது. சந்திர கலைக்கு பிறகு சூரிய கலை வளரும். சூரியகலை முழுதும் வளர்ச்சியடைந்து விட்டால் நமது ஆன்மா 32-ஆவது கலை நிலையில் நிற்கும். சூரிய கலை என்பது வலது நாசி ஓட்டத்தின்போது வளரும். இவ்வனுபவம் நமது ஆனம வளர்ச்சியில் இரண்டாம் கட்டம் எனலாம்.

அக்னி கலை 64 வகையான ஆன்ம வளர்ச்சியுடையது. சந்திர கலை, சூரிய கலைக்கு பிறகு இறுதியாக அக்னி கலை வளர ஆரம்பிக்கும். அக்னி கலை முழுதும் வளர்ச்சியடைந்துவிட்டால் நமது ஆன்மா 96 – ஆவது கலையில் நிற்கும். இதற்கு மேற்பட்டு கலைகள் கிடையாது. ஆன்மா தனது இயற்கை ஒளியை பெற்று நிற்கும். ஆயிரங்கோடி சூரிய பிரகாசத்தை அடையும்.  பரிபூரணம் இதுவே. அக்னி கலை வளர்ச்சியானது நடுநாடி அல்லது சுழுமுனையில் ஓடும்போது (இருபக்க நாசியிலும் சமமாக சுவாசம் ஓடுவது) உருவாகும். அக்னி நாடி சுவாசம் சாதாரணமாக அரிதாகவே ஏற்படும். யோகத்தால் மட்டுமே இதனை தொடர்ந்து சுவாசிக்க முடியும். இவ்வனுபவம் நமது ஆன்ம வளர்ச்சியில் இறுதி கட்டம் எனலாம்.

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.

எட்டுஎட்டு அனலின் கலையாகும் ஈராறுள்
சுட்டுப் படும் கதிரோனுக்கும் சூழ்கலை
கட்டப்படும் ஈர் எட்டாம் மதிக்கலை
ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே.

எட்டுஎட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
கட்டிட்ட சோமனில் தோன்றும் கலைஎன்ப
கட்டப்படும் தாரகைக் கதிர்நூல் நால்உள
கட்டிட்ட தொண்ணூற்றாறு ஆறும் கலாதியே.

எல்லா கலையும் இடைபிங்கலை நடு
சொல்லா நடுநாடி ஊடேதொடர் மூலம்
சொல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணி நிற்பரே.

சூரிய கலை 12, சந்திர கலை 16, நட்சத்திர கலை 4, அக்னி கலை 64 என 96 கலைகள் உள்ளதை மேற்காணும் திருமந்திரம் கூறுகின்றது. மூலாதாரத்திலிருந்து மூன்று நாடிகளிலும் அதாவது சூரிய, சந்திர, அக்னி நாடிகளிலும் சுவாசத்தை ஒரு சேர சேர்த்து தலைவரை கொண்டு சேர்ப்பவரே திருவடியை அடைவர் என்கின்றது திருமந்திரம். இவ்வாறு 96 கலைகள் உடைய ஆன்மாவே அருட்பெருஞ்ஜோதியாக பரிணமிக்க முடியும் என்று ஏற்கனவே பார்த்தோம். ஆனால் சுத்த தேகம் எடுக்க இந்த 96 கலைகள் மட்டும் போதுமா? என்றால் போதாது. திருமந்திரம் உட்பட சமய மதங்கள் எல்லாம் இந்த 96 கலைகள் அல்லது தத்துவத்திற்குள் அடங்கிவிடுகின்றன. அதற்கு மேற்பட்ட அனுபவத்தை அவைகள் காட்டாது. திருமந்திரம் உட்பட சமய மத மார்க்கங்களில் காட்டப்பட்டுள்ள சாகாக் கல்வி என்பது இந்த 96 தத்துவத்திற்குள் அடங்கிய சாகா அனுபவத்தையே சொல்லியும் அடைந்தும் காட்டியிருக்கின்றது. உண்மையில் இது சாகாக் கல்வியல்ல என்பது வள்ளலாரின் அனுபவ வாக்கு.


“…இது போல் சமயத்திலும் தேகசித்தியும் ஏமசித்தியும் முள. மேற்குறித்த சமய மதங்களில் விரிவு அனந்தகோடி. அந்த சித்திகள் யாவும் அவ்வச்சமய மதங்களின் கர்த்தா மூர்த்தி தலைவன் தலைவி முதலியவர்கள் பதப்பிராப்தி வரையிலும் நிற்கும்…” (திருவருட்பா-உரைநடைநூல்-பக்கம்-387)

எனவே யோகத்தால் 96 தத்துவங்களை / கலைகளை அடைதல் கூடாது. “யோகம் செய்தல் வேண்டுவதில்லை…மூடம் உண்டாகும்…உண்மை” (திருவருட்பா-உரைநடைநூல்-பக்கம்-388) என்று வள்ளலார் கூறுவதை பார்க்கின்றோம். சதா அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தையே சிந்தித்து கொண்டிருத்தல் வேண்டும். சமய வாதிகள் அவ்வச்சமய மந்திரங்களை சிந்தித்தல் நலம். யோகம் வேண்டுவதில்லை என்பதே இங்கு முக்கியம். யோக நூலான திருமந்திரம் வேண்டுவதில்லை என்பதே இங்கு முக்கியம். வள்ளற்பெருமான் யோகம் செய்து இந்த 96 கலைகளை அடையவில்லை என்பது இங்கு முக்கியம்.

“கடவுளின் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடாது…” (திருவருட்பா-உரைநடைநூல்-பக்கம்-98) இவ்வாறு இரக்கத்தால் மட்டுமே நாம் நமது ஆன்மாவின் 96 கலைகளை அடைய முற்படவேண்டும். அவ்வாறு அடைவது மட்டுமன்றி அதற்கும் மேற்பட்டு இருக்கின்ற சுத்த தேகத்தை அடைதல் வேண்டும். 96 தத்துவங்களுக்கும் மேற்பட்டு இருக்கும் தனிப் பொருள் வெளியை அடைய வேண்டும். 96 கலைகளும் இறைவனின் வசம் உள்ளன. அவ்வாறு இருக்கும் 96 கலைகளையும் தன்வசப்படுத்த வேண்டும்.

தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி (47)

தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே (1141)

யோக நிலையில் 96 கலைகளை அடைந்தவர்க்கும் இரக்க நிலையில் 96 கலைகளை அடைந்தவர்க்கும் அருள் நிலையில் மிகுந்த வேறுபாடு இருக்கும். நடுக்கத்துடனும் உடல் வலிமை குன்றியும் உள்ள 96 வயது அன்பருக்கும், திட ஆரோக்கியத்துடனும் திட மனதுடன் உள்ள 96 வயது அன்பருக்கும் உள்ள விக்தியாசத்தை முறையே நாம் அவ்விரு நிலைக்கும் காணலாம். சைவ சமயத்தில் அக்னி கலையில் சொல்லப்பட்டிருக்கின்ற 64 கலைகளும் யோக மார்க்கத்தில் வந்தவையே. யோக மார்க்கத்தில் உண்டாகும் 64 சித்திகளையே பெரியபுராணமும், திருவிளையாடல் புராணமும் கதைகளாக சித்தரிக்கின்றன. நாம் இனி நாயன்மார்களின் கதைகளில் காணப்படும் ஒவ்வொரு கலையினையும் அது தரும் சித்தியினையும் பற்றி காண்போம்.

--தொடரும்…

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை தொடர் - 13

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை

                                               தொடர் - 13

                                        --தி.ம.இராமலிங்கம்


வாடுத னீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி-102

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை இயற்ற துவங்கும் முன்னர் திருவாரூர் மன்னர் மனுநீதி சோழனின் பெருமையினை எடுத்துரைத்துரைக்கின்றார். வள்ளற்பெருமானும் மனுநீதி சோழனின் பெருமையை மிக விரிவாக சிறுகதை வடிவில் எழுதியுள்ளார். அக்கதையில் மணி மன்றம் உருவகப்படுத்தப்படுவதை நாம் அறிவோம்.

தனது கன்றை இழந்த தாய்ப்பசுவானது மிகவும் வாடிநின்று என்ன செய்வதென்று திகைத்து தனது உயிரற்ற கன்றையே பார்த்து நிற்கின்றது. பின்னர், அந்நாட்டில் அரசாளும் மன்னர் நீதி வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மணி மன்றத்தை நோக்கிச் சென்று அங்குள்ள மணியினை அடிக்கின்றது. மணி ஓசை கேட்ட மன்னர் ‘குடி மக்களுக்கு என்ன நேர்ந்ததோ?’ என்று அஞ்சி அம்மணி மணிமன்றத்துக்கு ஓடி வருகின்றான். அங்குள்ள பசுதான் அம்மணியை அடித்தது என அறிந்து அதன் துயரை உணர்ந்தறிகின்றான். அப்பசுவின் துயருக்கு காரணமான தனது ஒரே மகனை கொல்ல ஆணையிடுவதின் மூலம் அப்பசுவின் துயரை துடைக்க முற்படுவது அக்கதையின் சாரம் ஆகும்.

அக்காலத்தில் திருவாரூரில் அமைக்கப்பட்டிருந்த மணி மன்றம் என்பது உயிர்களின் துயர்களை போக்கவும், தவறு புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடமாகவும் இருந்தது. அதுபோன்றதொரு துயர் துடைக்கும் ஒரு மணி மன்றம் நமது உடம்பிலும் இறைவன் அமைத்துள்ளான் என்பதை இங்கே வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார். நாம் எதற்கெல்லாம் வாடுகின்றோம்? பிறர் மரணத்தைக் கண்டு வாடுகின்றோம். பிறர் பிறப்பைக் கண்டு வாடுகின்றோம். (பிறப்பு மகிழ்ச்சியானதல்ல) பிறர் வறுமையைக் கண்டு வாடுகின்றோம். பிறர் பசியை உணர்ந்து வாடுகின்றோம். இவையெல்லாம் நமக்கும் இருக்கின்றதே என்று நம்மை கண்டும் வாடுகின்றோம். வாடிய பயிரைக் கண்டு வாடுகின்றொம். பிற உயிர்கள் கொலைபடுவதைக் கண்டு வாடுகின்றோம். இப்படிப்பட்ட வாடுதலை நீக்கி சுகம் பெற வேண்டுமாகில் நாம் மணி மன்றம் சென்று முறையிட வேண்டும். நாம் என்பது நமது ஆன்மாவைக் குறிக்கும். நமது ஆன்மா இருக்குமிடம் ஆன்மாகாசம். ஆன்மாகாசத்தில் மணி மன்றம் என்கின்ற சிற்சபை அமைந்துள்ளது. அங்குதான் நமது மன்னரின் ராஜ்ஜியம் விளங்கிக்கொண்டிருக்கின்றது. அங்கு நமது துயரொலியை எழுப்பினால், அது கேட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அம்மணி மன்றிடையே எழுந்தருளி நமது துயரத்தை போக்குவான்.

நமது ஆன்ம உருக்கம் என்கின்ற ஆன்ம வாட்டமும் அது எழுப்பும் மணி ஓசையும் (இறைவனின் புகழைப் பாடுதலும் நமது குறைகளை எடுத்தியம்புவதும் “மணி ஓசை” எனப்படும்.) அறிந்தும் கேட்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடனே நமது ஆன்மாவின் அருகில் எழுந்தருளி நமது வாட்டத்தை நீக்கியருள்வான். 

எனது அகத்தும் புறத்தும் ஆடுகின்ற ஆடல் வல்லானே! என்று நான் உன்னை புகழ்ந்து பாடியும், எனது குறையினை உன்னிடம் எடுத்தியம்பியும் மணி ஓசையாய் முழங்கினேன். அது கேட்டு எம்மணி மன்றிடையே எனக்கருகே எழுந்தருளி எனது மரணம் என்கின்ற பெரும் வாட்டத்தை போக்கியருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. 

நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி-104

தமது குடிமக்கள் எதனை செய்ய வேண்டும், எதனை செய்யக்கூடாது என அந்நாட்டு மன்னன் அம்மக்களை நாடி வந்து சொல்லி அவர்களை வழிபடுத்துவான். மழை நீர் நிரம்பி வெள்ளம் வரப்போகின்றது…. கரையோர மக்கள் எல்லாம் அவ்விடத்தை விட்டகன்று செல்லும்படி மன்னர் கேட்டுக்கொள்கின்றார் என அம்மக்களை நாடிவந்து உரைப்பது போன்று வள்ளற்பெருமானை நாடிவந்து அவரது அகத்திலே, (நாடு+அகம்=நாடகம்) இறைவனான எனது திருச்செயலை நீ உரைக்க வேண்டுமென அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகின்றார். “நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன்தன் வார்த்தை” (திருவருட்பா-5594) என்று வள்ளலார் இதனை ஞானசரியையில் பாடுவார். இறைவனுடைய திருச்செயல் என்ன?... வேறென்ன…? மனித உடலுக்கு மரணமில்லா பெருவாழ்வை அளிப்பதுதான் இறைவனுடைய மேன்மையான திருச்செயலாகும். அந்த திருச்செயலை நான் எவ்வாறு… யாருக்கு செய்வேன்? என்று நீ இந்த உலகியல் மக்களுக்கு உரைக்க வேண்டும் என்று பெருத்த சிவந்த பொன்னொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் வள்ளலார் அகத்தை நாடி வந்து உரைக்கின்றார்.

ஆடகம் என்றால் தங்கம். தங்கத்தில் நான்கு வகைகள் உண்டு.

1. சாதரூபம் – இயற்கையாக இருக்கும் தங்கம்.
1.   கிளிச்சிறை – கிளையை போல சற்றே பச்சை நிறங்கொண்ட தங்கம்.
2.   ஆடகம் – காய்ச்சிய சற்று குங்கும நிறம் கொண்ட தங்கம்.
3.   சாம்பூநதம் – ஒளி மங்கிய தங்கம்.

நாம் விரும்புகின்ற குழந்தைகளை பொன்னே… மணியே… கண்ணே… என கொஞ்சுவது போல, இறைவனை வள்ளற்பெருமான் பொன்னே… என தங்கத்துக்கு நிகராக இயம்புகின்றார். அதுவும் அத்தங்கம் குங்கும நிறம் கொண்ட ஆடகத் தங்கமாக சற்று சிவந்த நிறத்தில் ஒளிர்வதாக கூறுகின்றார். இறைவனின் ஒளி எப்படிப்பட்டது என்றால்?... சற்று சிவந்த பொன்னொளியாக இருக்கின்றது என்று இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது. 

          எமது அகத்தை நாடி வந்து, நினது திருச்செயல் என்னவென்று சொல்லிய சிவந்த பொன்னொளியாம் பொதுவொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
          கற்பனை முழுவதுங் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி-106

இறைவனை கற்பனையால் வடித்தெடுக்கின்றன மதங்கள். சிவந்த பொன்னொளியாக இறைவன் இருப்பதாகக் கண்டோம். இதனை ‘பொன்னார் மேனியன்’ என்றும் சிவந்த ஒளியை ‘சிவன்’ என்றும் சைவம் கற்பனை செய்துக்கொண்டது. மதங்களும் சமயங்களும் பொய் என்று சொல்லும் சுத்த சன்மார்க்கமும் இறைவனை ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று சொல்கின்றது. இதுவும் கற்பனையே. இறைவனின் இயல்பை மனதால், சொற்களால், எழுத்தால் யாராலும் நிறுவிட முடியாது. எனினும் அவ்விறைவன் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற சொல்லை தமது நிலையாக, வெளிப்படையாக தமக்கு அறிவித்ததாக வள்ளற்பெருமான் நமக்கு உரைக்கின்றார். அவ்வகையில் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற நிலையினை நாம் இறைவனாக தொழுகின்றோம்.

கற்பனை என்பது இங்கு இருள் என்ற பொருளை தருகின்றது. ஒளி எங்கே தேவைப்படுகின்றது? இருளான இடத்திற்குத்தான் ஒளி தேவைப்படும். ஆனால் இங்கே கற்பனை என்கின்ற இருளில் ஒளி பாய்ந்து அக்கற்பனையை இன்னும் மெருகூட்டும் வேலையினை இவ்வொளி செய்ய வில்லை. அந்த கற்பனை என்கின்ற இருட்டை கடந்துவிடுகின்றது இந்த ஒளி. கற்பனை என்கின்ற சமயங்கள் மதங்கள் என்கின்ற இருட்டுக்குள் இறைவனுடைய ஒளி செல்லவே இல்லை. அவைகள் இன்னும் இருட்டாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட கற்பனை இருளைக் கடந்து ஒளி மட்டுமே இருக்கக்கூடிய அற்புதமான இடத்தில் (சுத்த சன்மார்க்கத்தில்) மேலும் ஒளியினை தந்துக்கொண்டே இருக்கின்ற அற்புதச் செயலை நமது சிற்சபை செய்துக்கொண்டிருக்கின்றது. சிற்சபை என்பது இருள் இல்லா இடம். எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டிருக்கக் கூடிய அற்புத இடம். அவ்விடத்தில் ஒளியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கின்றார்.

இருளான கற்பனைகளை கடந்து இருளில்லா இடத்தில் ஒளியை தருகின்ற அல்லது ஒளியாக இருக்கின்ற அற்புத சிற்சபையில் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. 

ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி-108

பெற்றெடுத்து வளர்த்த தாய் தன் மகனை கண்மூடித்தனமாக அடித்துக்கொண்டிருந்தாள். பையன் கதறி அழுதும் அவனை விடவில்லை. அவளது கணவன் தடுத்தபோது அவள் அடிப்பதை நிறுத்தவில்லை. பையன் அலறும் சப்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். அந்த தாயின் கையைப் பிடித்துத் தடுத்தபடி, ‘எதுக்கம்மா இந்த பச்சைப்பிள்ளையை போட்டு இந்த அடி அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவள் கோபமாக, ‘கிளாஸ்ல, பக்கத்தில உட்கார்ந்து இருந்த பையனிடம் இருந்து பென்சிலையும், ரப்பரையும் திருடி விட்டு வந்து விட்டான். எங்கே இருந்து வந்தது இந்த திருட்டு புத்து? என்றாள். ‘சரி விடுங்கள், சின்ன பையன்தான், தெரியாமல் தப்பு பண்ணிட்டான்’ என்று சமாதானப்படுத்தினர்.

இப்போது முன்பைவிட கொஞ்சம் சமாதானமானார் அந்த தாய். ‘பென்சிலையும் ரப்பரையும் திருடி விட்டு வந்து இப்படி மானத்தை வாங்குகின்றானே…! எங்கிட்ட கேட்டிருந்தால்… நான் வேலை பார்க்கும் ஸ்கூலில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்க மாட்டேனா…? என்றாள் அந்த தாய். இதைக்கேட்ட அங்கிருந்தோர் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

இவ்வளவு கோபமாக இருந்த அந்தத் தாயிடமிருந்தே அந்த திருட்டு குணம் அவள் பிள்ளைக்கு சென்றிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இப்படிப்பட்ட தாய் நற்றாயா…? இப்படித்தான் தாயுள்ளத்துடன் இறைவன், அவன் பிள்ளைகளான நமக்கும் அருள்வானா…? தன்னை வணங்காதவர்களின் பொருளை திருடி தன்னை வணங்கும் மனிதர்களுக்கு கொடுப்பானா?

மீண்டும் ஒரு கதை… ஒரு ஊரில் ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு ஒரு மகன். அம்மகனோ ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான். ‘மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான். அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த அந்த தாசி அவனைத் துரத்தியடித்தாள்.

அவனோ மோக மயக்கம் முற்றி… ‘உனக்கு என்ன வேண்டும் சொல்… கொண்டு வருகின்றேன் என்று அவள் காலில் வீழ்ந்தான். அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, ‘உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்’ என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தன் தாயிடம் ஓடினான். அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா’ என்றழுதான்.

தாய் கேட்டாள்… ‘அதன் மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளா மகனே?’

இருப்பாள்!... என்றான் மகன். தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக்கொள்ளும்படி தாய் கூறினாள். அவன் தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். தனது வலது கையில் ஏந்தியவாறு தாசி வீடு நோக்கி ஓடினான். வழியில் கல் தடுக்கிக் கீழே வீழ்ந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.

அடிபட்டு விழுந்த தனது மகனைப் பார்த்து அந்த தாய் இருதயம் சொன்னது…

‘ஐயோ!... வலிக்கின்றதா மகனே!... நான் உயிரோடில்லையே… உனக்கு மருத்துவம் செய்ய…!

மகன்… ‘அம்மா!!! என்று அலறினான். அவன் ஆவியும் அங்கே பிரிந்தது.

இப்படிப்பட்ட குணம் உடையவள் தாய். நற்றாய். தன் மகன் தீயதை விரும்பினாலும் அவ்விருப்பத்தை தன்னை அழிப்பதின் மூலம் நிறைவேற்றுவாள். பக்கத்து வீட்டாளின் இருதயத்தை எடுத்துச்செல்ல துணை போகமாட்டாள்.

இறைவனும் இவ்வாறே… தமது பக்தர்களுக்கு அவர்கள் தீயதை விரும்பினாலும், நல்லதை விரும்பினாலும் அதனைக் கொடுத்து வேடிக்கை பார்க்கின்றான்.

ஆன்ம அறிவுடையோரை தடுத்தாட்கொண்டு தாம் விரும்பியதை அவர்களுக்கு அளிக்கின்றான். தாயின் கருணை உள்ளமானது தமது மகனுக்காக தம் உயிரை மாய்க்கின்றது. ஆனால் அந்த தாயின் கருணையை விட இறைவனின் பெருந்தயவானது தம் பிள்ளைகளை தம்முடனே கலக்கவைத்துவிடுகின்றது. தன் பிள்ளைக்கு தாய் கொடுக்கமுடியாத இன்பத்தை, இறைவனின் பெருந்தயவானது பேரின்பமாக கொடுத்துவிடுகின்றது. இதனையே ‘தாயினும் இனிய பெருந்தயவு’ என்கின்றார் வள்ளலார்.

பெற்ற தாயைக் காட்டிலும் இனிய பெருந்தயவான பேரின்பத்தை  சிற்சபை எங்கும் நிறைத்து வைத்திருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. 

இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி-110

          பக்தன் ஒருவன், இறைவனிடம் தனக்கு காட்சியளிக்க வேண்டுமென வெகு காலமாக வேண்டிக்கொண்டு வந்தான். இறைவனும் ஒரு நாள் திடீரென அந்த பக்தனுக்கு காட்சியளித்து ‘வேண்டுவன கேள்’ என்றார்.

          பக்தனுக்கு ஆச்சரியம்… அதிர்ச்சி… எதிரே நிற்பவன் இறைவன். நான் அவனிடம் எதைக் கேட்பது…? ஏதாவது முக்கியமானது விடுபட்டுவிட்டால் என்ன செய்வது…? என்ற குழப்பத்தில் அமைதியாக இருந்தான்.

          அவன் குழப்பத்தை புரிந்துக்கொண்ட இறைவன்... ‘மகனே, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அதை நான் அப்படியே தந்துவிடுவேன். அதே நேரம் உன் எதிர் வீட்டில் உள்ள ஏகாம்பரத்துக்கு நீ கேட்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுத்து விடுவேன்… என்றான் இறைவன்.

          இப்போது பக்தனுக்கு மேலும் குழப்பமாயிற்று. எனது ஒரே எதிரியான எதிர்வீட்டு ஏகாம்பரம் என்னால் இரு மடங்கு பணக்காரனாகிவிட்டால்… அதை என்னால் பொறுக்க முடியாது என்று யோசித்தான்.

          ‘இறைவா… என்னை எல்லா விதத்திலும் டென்ஷனாக்குவதே அந்த எதிர் வீட்டு ஏகாம்பரம்தான். அப்படி இருக்க அவன் உங்கள் வரத்தால் என்னை விட பெரியவனாக எப்படி விடுவேன்…? அதனால் எனக்கு ஒரு கண்ணை குருடாக்கிவிடும்’ என்றான்.

          தாம் பெற்றிருக்கின்ற பொருள் மற்றவர்களுக்கு உபயோகமானதாக இருக்க வேண்டும் என்றில்லாது… மற்றவர்கள் பொறாமை படும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய மாந்தர்களுக்கு உள்ளதை மேற்காணும் பக்தனின் வேண்டுதலால் அறிகின்றோம்.

          இதே கேள்வியினை, ‘நீ வேண்டுவன கேள்’ என்று காரைக்கால் அம்மையாரிடம் சிவபெருமான் கேட்கின்றார். அதற்கு அந்த அம்மையார், ‘பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க’ என்றார்.

          இங்கேயும் கேட்கின்ற வரத்தில் சந்தேகம் தலைகாட்டுகின்றது. பிறவாமை வேண்டும் என்றால் முடிந்துவிட்டது. அதனை கொடுக்கும் சக்தி சிவனிடம் இல்லாதிருந்தால் என்ன செய்வது…? அதனால், ‘மீண்டும் பிறந்தால்…’ என்று நம்பிக்கையில்லாத பக்தியை நாம் இங்கே காண்கின்றோம்.

          இதே கேள்வியினை, ‘நீ வேண்டுவன கேள்’ என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரிடம் கேட்கின்றார்… அவ்வளவுதான்… கடகடவென கேட்பதை பாருங்கள்…

          “அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும், ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும், எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும், செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும், தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும், தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டும், அடிமுடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும், பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும், புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும், எய்யாத அருட்ஜோதி என்கையுறல் வேண்டும், இறந்த உயிர்தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும், நையாத வண்ணம் உயிர் காத்திடல் வேண்டும், நாயக நின்தனைப் பிரியாதுறுதலும் வேண்டும், அழிய்யாத தனிவடிவம் நான் அடைதல் வேண்டும், கண்ணார உனை எங்கும் கண்டிட வேண்டும், காணாத காட்சி எல்லாம் கண்டுகொளல் வேண்டும், பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும், பரமானந்தப் பெருங் கூத்து ஆடிடல் வேண்டும், உண்ணாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும், உனைப்பிரியா துறுகின்ற உறவது வேண்டும், அருட்பெருஞ் ஜோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும், செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும், திருச்சபைக்கே அடிமைகளாகச் செய்வித்தல் வேண்டும், ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும், எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டும், அருட்பெருஞ் ஜோதியைப் பெற்றே அகமகிழ்தல் வேண்டும், வரைசேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும், மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும், புரைசேரும் கொலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும், உரைசேர் மெய்த்திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஒங்குதல் வேண்டும், அண்டமெலாம் பிணடமெலாம் கண்டுகொளல் வேண்டும், துடிசேர் எவ்வுலகமும் எத்தேவரும் எவ்வுயிரும் சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும், படிவானும் படைத்தல் முதல் ஐந்தொழில் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும், ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டும், ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும், இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும், எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும், ஏகசிவ போக அனுபோகம் உறல் வேண்டும், தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்தோங்குகின்ற தன்மையும் வேண்டும், ஆறந்த நிலைகள் எல்லாம் அறிந்து அடைதல் வேண்டும், எச்சார்புமாகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும், எனை அடுத்தார் தமக்கெல்லாம் இன்பம் தரல் வேண்டும், இச்சாதி சமய விகற்பங்கள் எல்லாம் தவிர்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும், உச்சாதி அந்தமில்லாத் திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டும், ஐந்தொழில் நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும், செறியாத கரணமெல்லாம் செறித்தடக்கல் வேண்டும், சித்தாந்த வேதாந்தப் பொதுநிற்றல் வேண்டும், எறியாது என் எண்ணமெல்லாம் இனிதருளல் வேண்டும், பிறியாது என்னோடு கலந்து நீ இருத்தல் வேண்டும், பெருமான் நின்தனைப் பாடி ஆடுதல் வேண்டும், அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும், மருளாய உலகமெலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்திட வேண்டும், இருளாமை உறல் வேண்டும், எனை அடுத்தார் சுகம்வாய்ந்திடல் வேண்டும், எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும், பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும், ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடி நிற்க வேண்டும், எமனாதித் தடை என்றும் எய்தாமை வேண்டும், எல்லாம் செய்வல்ல திறன் எனக்களித்தல் வேண்டும், கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும், விமலாதி உடையஒரு திருவடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டும், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும், பொய்மை பேசாதிருக்க வேண்டும், பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும், மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும், உனை மறவாமல் இருக்க வேண்டும், மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும், நோயற்ற வாழ்வில் நான் வாழ்தல் வேண்டும்…” 

          அப்பப்பா…. வள்லலாரின் அப்பா மயங்கிவிட்டார். வள்ளலாருக்கு எவ்வளவு பேராசை பாருங்கள்!... கேட்டுக்கொண்டே இருக்கின்றார். “கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கொண்டே இருங்க…” என்று சூரியன் எஃப்.எம்.-மில் சொல்வார்களே அதுபோல இறைவனும் வள்ளலாரிடம் சொல்லிவிட்டார் போலும்! கேட்டுக்கொண்டே இருக்கின்றார். ஆனால்… கேட்டதை கொடுத்தாரா அவரது அப்பாவான இறைவன்?

          “கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்லப்
           பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் – தெள்ளமுதம்
           தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
           எந்தாய் கருணை இது.” (திருவருட்பா-3895)

இதுபோன்று வள்ளலார் கேட்டதை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி கொடுத்துவிடுகின்றார். இறுதியில் தன்னையே கொடுத்துவிடுகின்றார். அதற்கு மேல் கொடுக்க, இருப்பதுதான் எது…?

          இவ்வாறு என் உள்ளத்தில் எண்ணிவாறு எண்ணியவாறு நான் இன்புறும் வண்ணம் அன்பாக தருகின்ற சபையாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.