Friday, November 22, 2019

95-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு

95-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு
+++++++++++++++++
அன்புடையீர்!
நிகழும் வள்ளலார் வருடம் 197 / தமிழ் எழில்மாறல் (ஸ்ரீ விகாரி) வருடம் கார்த்திகை 17-ஆம் நாள் செவ்வாய் கிழமை அவிட்ட நட்சத்திரம் (03-12-2019) காலை 10.00 மணியளவில் வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயாவின் 95-ஆம் ஆண்டு குரு பூஜை அருள் நிலையத்தில் நடைபெறவுள்ளது. அவ்வமயம் வள்ளற்பெருமானின் அருள் அவரது அணுக்கத்தொண்டருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் அவரவர்கள் அனுபவத்திற்கு ஏற்ப கிடைப்பது உறுதி.
காரணப்பட்டில் வசிக்கும் புற இனத்தார்கள் எல்லாம் விரைவில் அக இனமாக மாற வேண்டும் என, வள்ளற்பெருமான் காரணப்பட்டு மக்களையும் உலக மக்களையும் அவ்வாறே இங்கு அழைக்கின்றார். எனவே சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் டிசம்பர் 03-ஆம் தேதி காலை 10-மணியளவில் சமரஜ பஜனையாம் ஜோதி வழிபாட்டில் கலந்துக்கொண்டு அருள் நிலையத்தின் அருளை பெற வேண்டுகின்றோம்.
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.
காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி
மேலும் விவரங்களுக்கு 9445545475 என்கின்ற எண்ணினை தொடர்பு கொள்ளவும். நன்றி.
இங்ஙனம்
திருவருட்பிரகாச வள்ளலார்
ச.மு.க. ஐயாவின் வழித்தோன்றல்கள்
சுத்த சன்மார்க்க அன்பர்கள்
காரணப்பட்டு கிராம மக்கள்

Sunday, October 6, 2019

மலைகளும் நதிகளும் - 1


அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை              அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்



முகவுரை:

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையினைக் காண இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நாமெல்லாம் தற்போது பயணம் செய்யப்போகின்றோம். ஆம்… இது எமது பயணக்கட்டுரை ஆகும். நான் சென்ற இடங்களுக்கெல்லாம் தற்போது நீங்ளும் மனதளவில் பயணம் செய்யப்போகின்றீர்கள். இதற்கு முன்னர் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 06-ஆம் தேதி சிக்கிம் மாநில சுற்று பயணத்தை பயணக்கட்டுரையாக “எனது சிந்தனையில் சிக்கிம்” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். அவ்வகையில் “மலைகளும் நதிகளும்” என்கின்ற இப்பயணம் எமது இரண்டாவது பயணநூலாகும். ”சார் தாம்” என்று சொல்லப்படுகின்ற நான்கு புனித இடத்திற்கு சென்று வந்ததின் அனுபவ வெளிப்பாடே இந்நூல். யமுனாத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் என்பதே அந்த நான்கு புனித இடங்களாகும். யாத்திரை சென்றுவர மொத்தம் 14 நாட்கள் ஆகியது. வள்ளற்பெருமானின் புனிதப் பெயரைத் தாங்கிய பெரியவர், சிவ அடியார் திரு.இராமலிங்கம் ஐயாவின் வழிகாட்டுதலில், இப்புனிதப் பயணம் அமைந்தது. (ஸ்ரீ சாய் சுற்றுலா – எம்.எஸ்.இராமலிங்கம், எண்.12,பாரி வள்ளல் தெரு, சாந்தி நகர், லாஸ்பேட்டை, புதுச்சேரி, கைப்பேசி – 9442440879) நாங்கள் மொத்தம் 16 நபர்கள். அதில் 7 நபர்கள் எமது உறவினர்கள். நான் என்கின்ற தி.ம.இராமலிங்கம், முனைவர்.அ.நலங்கிள்ளி, திருமதி.சுசீலா நலங்கிள்ளி, திரு.பெரும்வழுதி, திருமதி.லட்சுமி பெரும்வழுதி, திரு.சேனா.இரமேஷ், திருமதி.ஜெயா ரமேஷ் ஆகிய 7 நபர்களும் எமது உறவினர்களாவர். நான் இப்பயணத்தில் கலந்துக்கொள்ள காரணமாக இருந்த முனைவர்.அ.நலங்கிள்ளி மற்றும் திருமதி.சுசீலா நலங்கிள்ளி அவர்களும், எம்மை இப்பயணத்திற்கு அனுமதித்த எமது பெற்றோர் திரு.அ.திருநாவுக்கரசு, திருமதி.மல்லிகா திருநாவுக்கரசு அவர்களுக்கும், எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டு இப்புனித பயணத்தை தொடர்கின்றேன்.

கடலூர்  - சென்னை: 



            05-09-2019 – வியாழன்: இரவு 11.00 மணியளவில் 7 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வாகனத்தில் கடலூரிலிருந்து சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு பயணமானோம். நாளை காலை 6.00 மணிக்குத்தான் ரயில் பயணம். அதனால் மெதுவாகவே சென்று காலை 3.30 மணியளவில் ரயில் நிலையம் சென்றடைந்தோம். புனித யாத்திரையின் நடத்துனர் திரு.இராமலிங்கம் ஐயா மற்றும் யாவரும் சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு தனித்தனியாக வந்து சேர்ந்துவிட்டனர். தற்போது 16 நபர்களும் காலை 06.00 மணி ரயிலுக்காக காத்திருக்கின்றோம்.

சென்னை – நிஜாமுதீன் (டில்லி)
  
          06-09-2019 – வெள்ளி: மூன்று மாதத்திற்கு முன்பே இப்பயணத்திற்கான ரயில் டிக்கெட், விமான டிக்கெட், ஹெலிகாப்டர் டிக்கெட் மற்றும் ஆங்காங்கு தங்கும் விடுதிக்கான அனுமதிகளை முன்பதிவு செய்தாகிவிட்டது. ஆகையால் ரயில் வந்தவுடன் யார் யாருக்கு எந்த இடமோ அங்குச் சென்று அமரவேண்டியதுதான். நாங்கள் செல்ல இருப்பது “ராஜதானி எக்ஸ்பிரஸ் - 12433” ரயில் முழுதும் குளிர்சாதன வசதி கொண்டதாகும். சரியாக காலை 5.30 க்கு நாங்கள் அனைவரும் ரயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்துவிட்டோம். சரியாக 6.00 மணிக்கு ரயில் சென்னையிலிருந்து டில்லி நோக்கி கிளம்பிவிட்டது. சென்னையிலிருந்து நிஜாமுதீனுக்கு 2175 கி.மீ. தொலைவு உள்ளது. இடையில் 8 இடங்களில் மட்டுமே நமது ரயில் நின்று செல்லும். 9 ஆவது இடம் நிஜாமுதீன் ஆகும். மறுநாள் 07-09-2019 அன்று காலை 10.25 க்கு ரயில் நிஜாமுதீன் சென்றுவிடும். மொத்தம் 28 மணி நேரம் 15 நிமிடத்தில் 2175 கி.மீ. தொலைவினை ரயில் கடக்கின்றது. 28 மணி நேரத்தில் உள்ள நான்கு வேளை உணவும், சைவ உணவாக ரயில்வே எங்களுக்கு வழங்கியது. ரவா உப்புமா, ரவா கேசரி, காபி இவை காலை உணவாகும். சிறிது அரிசி சாதம், சப்பாத்தி இரண்டு, குருமா மற்றும் சாம்பார் இவைதான் மதியம் மற்றும் இரவு உணவாகும். இடையில் உணவிற்கு சற்று முன்பு சூப் தருகின்றார்கள். நமக்கு இவை எதுவுமே பிடிக்கவில்லை. ரவா உப்புமா தவிர. காபி என்று சொல்லி காபி கலந்த சுடு தண்ணீர், சர்க்கரை, பால் பவுடர் பாக்கெட் சிறியது என தனித்தனியாக தருகின்றனர். இவைகளை கலந்து காபியாக நாம் சாப்பிடும்போது சுத்தமாக நன்றாக இல்லை. சூப் தரும்போது நீண்ட உருளையாக இரண்டு வரிக்கை தருகின்றார்கள். மற்றும் அதனுடன் அமுல் வெண்ணை பாக்கெட் ஒன்றையும் தருகின்றார்கள். (உணவிற்கு சேர்த்துதான் ரயில் பயணக் கட்டணம் வாங்குகின்றார்கள்.) ரயில் தூய்மையாகவும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளை போர்வை, தலையனை, துண்டு மற்றும் கரும் கம்பளி போன்றவையும் சுத்தமாகவே இருந்தன. இப்படியாக எங்களது முதல் இரவு ரயிலில் கடந்தது. 


நிஜாமுதீன் -  ஹரிதுவார்
           
07-09-2019 – சனிக்கிழமை: ரயிலின் நேர அட்ட்வனைப்படி அரை மணி நேரம் முன்னதாகவே நமது ரயில் சென்றுக்கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாரா விதமாக நிஜாமுதீனுக்கு இன்னும் 20 கிலோ மீட்டர் என்ற தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு ரயில் பாதை செப்பனிட்டுக்கொண்டிந்தார்கள். அதனால் மிகவும் சீராகவும், பல நிமிடங்கள் நின்றும் ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இரண்டு மணிநேரம் லேட்டாக எங்களது ரயில் நிஜாமுதீன் சென்றடைந்தது. 12.30 க்கு நிஜாமுதீன் இறங்கி அங்கிருந்து இரண்டு வாகனங்கள் மூலம் நாங்கள் அனைவரும் புதுடில்லி ரயில்வே நிலையத்திற்கு சென்றோம். நிஜாமுதீனிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளபு புதுடில்லி ரயில்வே நிலையத்திற்கு 20 நிமிடத்தில் சென்றோம். செல்லும் வழியில் இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை (ராஷ்ட்ரபதி பவன்) வழியே எங்களது வாகனம் கடந்து சென்றதை பார்க்க முடிந்தது. 


           

 புதுடில்லி இரயில்வே நிலையம்

சுமார் ஒரு மணியளவில் புதுடில்லி ரயில்வே நிலைய கேண்டீனில் மதிய உணவு உண்டோம். வழக்கம்போல் சாதம், சப்பாத்தி, குருமா இவைகள்தான் கிடைத்தது. எங்களில் சிலரும் நானும் சப்பாத்திக்கு பதில் சாதம் மட்டும் கேட்டு வாங்கினோம். ஆனால் சாதத்தில் போட்டு சாப்பிட குழம்பு, சாம்பார் என எதுவும் இல்லை. பிறகு சப்பாத்திக்கு கொடுக்கப்பட்டுள்ள குருமா வகைகளை உபயோகித்து சாப்பிட்டால் நன்றாகவே இல்லை. எங்களுடன் வந்தவர்களுள் நிறைய நபர்கள் அப்படியே குப்பை தொட்டியில் கொட்டிவிட்டார்கள். நான் முடிந்தவரை சாப்பிட்டுவிட்டு மீதியை கொட்டிவிட்டேன். பிறகு அங்கிருந்து மூன்று ப்ளாட்பாரம் தாண்டி செல்ல வேண்டும். அதற்காக லக்கேஜ் பேட்டரி வண்டியில் பைகளை எல்லாம் ஏற்றிவிட்டு நாங்களும் பயணியர்கள் பேட்டரி காரில் குறிப்பிட்ட ப்ளாட்பாரம் சென்றடைந்தோம். இடையில் எனது பெரிய பெட்டியில் ஜிப் சரியில்லை, அதனை அங்கு வந்த ரிப்பேர் செய்யும் ஆட்களிடம் ரூ.200 கொடுத்து சரி செய்துக்கொண்டேன்.

மதியம் 3.00 மணியளவில் புதுடில்லியிருந்து டேராடூன் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தோம். இதற்கான முன்பதிவும் முன்னரே செய்தாகிவிட்டதால், அவரவர்கள் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டோம். 3.30 மணியளவில் ரயில் புறப்பட்டது. இங்கிருந்து 212 கி.மீ. தொலைவில் உள்ளது ஹரிதுவார். 4 மணி நேரம் 15 நிமிடத்தில், சுமார் இரவு 8.15 மணியளவில் ஹரிதுவார் வந்து இறங்கினோம். ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் இரவு தங்கும் விடுதிக்கு சென்றோம். டேராவால் பவன், பல்லா ரோடு, காவல் நிலையம் எதிரில் உள்ள டேராவால் பவன் என்னும் தர்மசாலாவில் மூன்றாவது மாடியில் உள்ள அறைகளில் நாங்கள் எல்லோரும் தங்கினோம். மூன்று நபர்களுக்கு ஒரு அறை என ஒதுக்கப்பட்டது. (டேராவால் பவன் – தொடர்பு எண்: 01334-227221, 9359946520).

நாங்கள் அங்கு சென்றவுடன் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சமையல்காரர்கள் எங்களுக்காக இட்லி, சட்னி, சாம்பார் செய்து அருமையாக விருந்தளித்தனர். இரவு இட்லி சாப்பிட்டு பசியினை தீர்த்துக்கொண்டோம். இந்த சமையல்காரர்கள் இனிமேல் எங்களுடனே வருவார்கள். நாங்கள் இனி தங்கப்போகும் இடங்களில் அவர்கள் சமையல் செய்து வழங்குவதாக முன்னமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் சாப்பாட்டுக்கு பயப்படத்தேவையில்லை. நாங்கள் சென்ற நேரம் விநாயகருக்கு பிறந்த நாள் வழிபாடு அந்த டேராவால் பவனில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு பெரிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடந்தது. அதனை பார்த்துவிட்டு எங்களது அறையில் சென்று, எங்களது இரண்டாவது இரவினை இனிதே கழித்தோம்.




தொடரும்...

மலைகளும் நதிகளும் இரண்டாம் தொடரை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்.

https://vallalarr.blogspot.com/2020/04/2.html

Friday, April 5, 2019

MONTHLY POOSAM - 2019-20




அன்பர்களே...! நடப்பு நிதி வருடத்தில் 02-04-2020 வியாழன் அன்று நமது வடலூரில் மாதப்பூசத்தன்று பக்தர்கள் இன்றி ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூர் வரலாற்றில் இவ்வாறு நடைபெற்றது முதல் முறையாகும். கொரோனா (கோவிட்-19) தொற்றால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது. எனினும் தருமச்சாலை மட்டும் தினமும் இயங்கி வருகின்றது மகிழ்ச்சியளிக்கின்றது. 



02-04-2020 அன்று பக்தர்கள் இன்றி வடலூரில் ஜோதி தரிசனம் நடந்ததை ஒரு அன்பர் தமது கைப்பேசியில் வீடியோ எடுத்த காட்சி மற்றும் புகைப்படம். 


உலகம் முழுதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருப்பினும், நமது வடலூர் தருமச்சாலை பணிகள் மட்டும் என்றும் உயிர்ப்பு நிலையில் இருப்பதை தந்தி தொலைக்காட்சி மூலம் காணவும்.