Tuesday, June 25, 2013

கால் மாற்றும் கலை


கால் மாற்றும் கலை

அன்புடையீர் வணக்கம்!

கால் மாற்றும் கலையினைப் பற்றி நாம் இப்பதிப்பின் மூலம் தெரிந்துக்கொள்வோம். இந்தக் காலும் கலையும் பற்றி நம்பெருமானார் வள்ளலார் கூறுவது யாது? ஒரிடத்தில் 'கால் மேல் கால் போடவும் பயந்தேன்' என்று காலைப்பற்றியும், 'கலையுரைத்த கற்பனையெலாம் நிலை என கொண்டாடும் உலகீர்' என்று கலையைப் பற்றியும் பாடியிருப்பதைக் காண்கிறோம். ஆனால், நாம் இங்கே பார்க்கப்போவது அந்தக் காலும் கலையும் அல்ல.

இங்கே கால் என்பது காற்றை குறிக்கும். அதாவது மூச்சுக்காற்று. கலை என்பது அதனை தமது விருப்பத்திற்கு பழக்கும் வித்தையை குறிக்கும். இவ்வுலகில் நமது தமிழ் சித்தர்கள் தவிர வேறு எவரும் மூச்சுக்கலையைப் பற்றி விரிவாக கூறவில்லை எனலாம். அதிலும் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடல் என மொத்தம் எண்ணாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். (திருமூலர் மொத்தம் 8000 பாடல்கள் பாடியுள்ளதாக வள்ளலார் கூறுகிறார், அவற்றில் 3000 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன, மேலும் திருமூலர் 3000 ஆண்டுகள் அல்ல, 8000 ஆண்டுகள் பரு உடலுடன் வாழ்ந்துள்ளார்) இதிலிருந்து எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்கள் இந்த மூச்சுக்கலையை பற்றி அறிந்திருந்தனர் என்று ஒருவாறு சொல்லலாம். இவர் பாடிய திருமந்திரத்தில் இந்த மூச்சுக்கலையை பற்றி பல விஷயங்களை நாம் அறிய முடிகிறது. இவருடைய சமாதிஇடம்தான், சிதம்பரம் கோயில் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே. திருமந்திரத்தை வள்ளலார் கூறும்போது, 'இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமெனில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்' என்கிறார்.

இந்து மதங்களில், எங்கெல்லாம் பாம்பு படங்கள் சிலைகள் உள்ளனவோ அவைகள் எல்லாம் மூச்சுக்காற்றைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகும். நமது மூச்சுக்காற்றையே பாம்பாக உருவகப்படுத்தினார்கள் இந்துக்கள். அரசமரத்தடியில் இருக்கும் இருபாம்புகள் பின்னி நிற்குமாறு கல்லில் செதுக்கியிருப்பார்கள். அவை நமது இடங்கலைமூச்சும், பிங்கலை மூச்சும் இணைந்த சுழுமுனை மூச்சை குறிக்கும் அடையாளம். அதாவது அரசமரத்தடியில் அமர்ந்து சுழுமுனை இயக்கத்தில் தியானம் செய்ய இறையருள் கிடைக்கும் என்பதனை புறத்திலே இவ்வாறு செய்திருக்கிறார்கள். சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு, முருகனின் காலடியில் இருக்கும் பாம்பு, விநாயகரின் வயிற்றில் சுற்றியுள்ள பாம்பு, விஷ்ணு பாம்பின்மேல் படுத்திருப்பது, கண்ணன் பாம்பின்மீது நடனம் ஆடுவது போன்ற அனைத்தும் ஒவ்வொரு தத்துவத்திலுள்ள மூச்சுக்காற்றை குறிக்கிறது என்பதை அறியவேண்டும். ஆனால் இந்துக்கள் அதன் உண்மைதெரியாமல் பால், பழம், முட்டை வைத்து குருட்டு பூஜை செய்து செய்துவருகிறார்கள். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையும் இந்த நமது மூச்சின் நடனத்தையே குறிக்கும்.

நமது வள்ளலாரும் இந்த மூச்சுப்பயிற்சி பற்றி சில இடங்களில் தமது திருவருட்பாவில் கூறியுள்ளார். எனவே திருஅருட்பா, திருமந்திரம் மற்றும் சித்தர் கருத்துகள் போன்றவை கூறும் சர பயிற்சியினை பற்றிக் காண்போம்.

அதற்கு முன்னர் பொதுவாக மூச்சுக்காறு பற்றின உண்மையினை காணலாம். நமது நாசியின் வழியே உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கும் காற்றுதான் மூச்சுக்காற்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மூச்சுவிடுகிறோம்? ஏன் நமக்கு ஒரு நாசித்துளைக்கு பதிலாக இரு நாசித்துளைகள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு கண்ணுக்கு பதிலாக இரு கண்கள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு காதுக்கு பதிலாக இரண்டுக் காதுகள் உள்ளன? என்று சிந்தித்தோமா?

இரண்டு கண்கள், காதுகள் இருந்தாலும் பார்க்கும் பார்வையும், கேட்கும் சத்தமும் ஒன்றாகவே உள்ளன! பிறகு ஏன் இரண்டு? ஒன்று பழுதானால் இன்னொன்றை பயன்படுத்திக்கொள்ள இறைவன் நமது உடலில் அமைத்த கூடுதல் பாதுகாப்பு (Step-in) அவையங்கள் என்று கூறலாம். ஆனால் மூக்கிற்கு ஏன் இரண்டு துவாரங்கள்? இரண்டு துவாரங்களுமே ஒரே செய்கையினை செய்கிறதா? என்று ஆராய்ந்தால், இரண்டு துவாரங்களும் வெவ்வேறு இரண்டுவித செய்கையினை செய்வதை அறியலாம். மேலும் மூன்றாவதாக ஒரு செயலையும் செய்வதைக் காணலாம்!  எப்படி?

நமது முன்னோர்கள், நமது இடதுபுறம் உள்ள நாசித்துவாரத்தை 'இடகலை' / 'சந்திரகலை' என்றும் வலது புறம் உள்ள நாசித்துவாரத்தை 'பிங்கலை' / சூரியக் கலை என்றும் கூறுவர்.

1. மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு.

2. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.

3. இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.

ஆக இம்மூன்றுச் செயல்களையும் நமது நாசி செய்துவருகிறது. இதனை 'சரவோட்டம்' என்பார்கள். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.  

இந்த சர ஓட்டம் இயற்கையாகவே சுமார் ஒன்றறை மணித்துளிகளுக்கு ஒருமுறை மாறி மாறி இயங்கும். இம்மாற்றத்தை நமது விருப்பத்திற்கு இனங்க மாற்றுவதுதான் 'கலை' என்கிறோம்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்
இவை முன்னோர் வாக்கு. சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன்  பொருள் சர கலையை இயக்கத்தெரிந்தவனிடம் சரசம் என்று விளையாட்டுத் தனமாக நடந்துக்கொண்டால் சரம் கற்றவன் சீறி சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்துவிடும். ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம், வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.
நீண்டநாள் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசம் செய்யவேண்டும். எனவேதான் வடலூர் ஞானசபையில் இதனை உணர்த்தும் வகையில் நம்பெருமான், ஞானசபையினை சுற்றி  21600 வளையங்கள் கொண்ட இரும்புச் சங்கிலியினைப் பொருத்தியுள்ளார்கள்.
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும்    ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள்  216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே. (திருமந்திரம்)
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள் என்று திருமந்திரம் கூறுகிறது.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது    25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின்  போதும்,  கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.  இந்த மூச்சினுடைய  அளவு எவ்வளவு  மிகுதியாகிறதோ  அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான், நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் 'மெல்லென நடைபயில வேண்டும்' என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார், 'ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக்கொண்டால், அவன் 1000 வருடங்கள் வாழலாம்' என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 மூச்சுதான் செலவாகும், அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது, நாம் தூங்கும்போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டம் அடைகிறது. எனவே, 'தூங்காதே தம்பி தூங்காதே'! அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது (64-12=52). எனவே, 'உனது கோபம் உன் எதிரிக்கு இலாபம்' என்பதை அறியவேண்டும். கோபம் என்பது 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பார் வள்ளுவரும். அதுபோல் உடலுறுவு செய்யும்போதும் நமக்கு 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது. எனவே வள்ளலார், இதில் மாதம் இருமுறை மட்டுமே இல்லறத்தான் ஈடுபடவேண்டும் என்கிறார். 'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்பார்களே அது இதற்காகத் தான்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம். 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'! (அ+உ+ம=ஓம்).
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)
இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார் திருமூலர்.
ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (திருமந்திரம்)

இவ்வுலகில் மிக அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் ஆமை. அது ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கும். இதன் ஆயுள் சராசரியாக 200 வருடங்களுக்கும் மேல். 1000 வருடங்கள் வயதுள்ள ஓர் கடலாமை சமீபத்தில் இறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் வருதே!

ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார். வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் 8000 வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தனர். இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். ஆமைதான் உலகில் நீண்ட நாள் உயிர்வாழும் பிராணி என்று அறிவியலார்கள் தற்காலங்களில்தான் கண்டுபிடித்தார்கள்.

"எப்போதும் பயத்தோடு இருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கக்கூடாது. எப்போதும் மன உற்சாகத்தோடு இருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல் (ஓடுதல்), வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு (மூச்சுக்காற்று) அதிகமாகச் செலவாகாமல் ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்" (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம்339)

'அருகுநுனி பனியனைய சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்' (திருப்புகழ்)

ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழவைக்கக்கூடிய உயிர்ச்சக்தியினை பெற்றிருக்கின்றன. இயற்கையாக  நாம் 120 வருடங்கள் வாழ்வதற்கும், குறை ஆயுள் அடையவும் நம் தந்தைதான் காரணம். எப்படி?

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே. (திருமந்திரம்)

விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆயிரம் பிரைகள் காணமுடியும். ஆனால் மாத்திரை குறைய குறைய அதற்கேற்றாற்போல குழந்தையின் ஆயுளும் குறையும் என்கிறார் திருமூலர்.

மலம், ஜலம் தடைபடுமானால் என்ன செய்ய வேண்டும்?

மலங்கழிக்கின்ற போது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும்போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும்.

மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும்.

ஜலம் தடைபட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜல வுபாதி கழித்தல் வேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 333)

அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும்.

நமது விருப்பம்போல் சூரியக்கலையினையும், சந்திரக்கலையினையும் மாற்றுவது எப்படி?

நாம் இடதுபக்கம் சாய்ந்து படுத்தால், சற்று நேரத்தில் நம் சுவாசம் வலதுபக்கம் (சூரியக்கலையில்) ஓட ஆரம்பித்துவிடும். நாம் வலதுபக்கம் சாய்ந்து படுத்தால், சற்று நேரத்தில் நம் சுவாசம் இடதுபக்கம் (சந்திரக்கலையில்) ஓட ஆரம்பித்துவிடும். இது மிக மிக எளிமையான வழி. முயன்று பாருங்கள்.

தேகசம்பந்தம் பற்றி வள்ளலார் கூறுவது யாது?

1. பகலில் தேகசம்பந்தங்கூடாது.
2. முதலில் மனதைத் தேக சம்பந்தத்தில்  வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். மூச்சு அதிர்ந்து மேலிடாது மெல்லென பெண்போகம் செய்தல் வேண்டும்.
3. தொடங்கிய போது அறிவு வேறுபடாமல், மன முதலிய கரண சுதந்திரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும்.
4. புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும்.
5. அவ்வுபாயமானது பிராணவாயுவை (மூச்சுக்காற்றை) உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே உலாவச் செய்து கொள்ளுதலாம்.
6. தேகசம்பந்தம் ஒரு முறையன்றி அதன் மேலுஞ் செய்யப்படாது.
7. தேகசம்பந்தம் செய்தப்பின், குளித்துவிட்டு இறைவனை நினைந்து தியானம் செய்துவிட்டு பிறகு படுக்க வேண்டும்.
8. எந்தக்காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடது கை பக்கமாகவே படுக்கவேண்டும். (அப்போதுதான் மூச்சுக்காற்று எப்போது சூரியக்கலையில் இருக்கும்)
9. இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற்கு ஒருமுறை செய்வது அதம பசஷம் (அதர்மம்). சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும்.
10. 8 தினத்திற்கு ஒரு முறை செய்வது மத்திம பசஷம் (நடுவுநிலை).
11. 15 தினத்திற்கு ஒரு முறை செய்வது உத்தம பசஷம் (உத்தமம்)
12. அதன் மேற்படில் (15 தினத்திற்கும் மேல் செய்யவில்லை எனில்) சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும்.
13. இரவில் சொப்பனம் வராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.
14. காலைப்புணர்ச்சி, பகற்புணர்ச்சி, அந்திப்புணர்ச்சி, இரவு முன்பங்குப்புணர்ச்சி கூடாது.
15. ஜீவன் என்கின்ற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மட்டும் எடுத்துவிடவேண்டியது. அதாவது 15 தினத்திற்கு ஒருமுறை தேக சம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும்.
16. ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக முடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்தில் செய்யலாம் என்றது மந்தரத்தையுடையவனுக்கே அன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 339,340,341,344,423)

கரு உற்பத்தி பற்றி வள்ளலார் கூறுவது என்ன?

ஆணிடத்திலிலுள்ள சுக்கிலத்திலும், பெண்ணிடத்திலிலுள்ள சுரோணிதத்திலும் கடவுள் ஆவி உள்ளது. கோசத்தின் முன் விஷம் (சத்தி) ஒரு பாகம், அதை அடுத்து பூதம் (அறிவு) ஒரு பாகம், அதற்கு மேல் அமுதம் (விந்து) அரை பாகம், என சுக்கிலம் இரண்டரை வவராகன் எடை அளவுக்கொண்டது. இவ்வாறு பெண்பாலிடத்தும் உண்டு.

முன்னுள்ள விஷ பாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம்.

பூதம் வெளிப்பட்டால் வியாதி.

அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி.

கடவுள் அருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார்.

இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை. மேலும் விந்துவளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் இவற்றாலும் கர்ப்பம் இல்லை. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 360)

குழந்தைகளின் பாலின உருவாக்கம் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?

சுரோணிதப் பையிடத்தில் (கர்ப்ப பை) மூன்றுமணி சேர்ந்த கொத்து ஒன்று வலது புறத்திலும், நான்கு மணி சேர்ந்த கொத்து ஒன்று இடது புறத்திலும் இருக்கின்றன. சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பந் தரிக்கின்ற காலத்தில், மூன்று சேர்ந்த கொத்தில் (வலது புறத்தில் உள்ளது) சம்பந்தப் பட்டால் ஆண் குழந்தையும், நான்கு சேர்ந்த கொத்தில் (இடது புறத்தில் உள்ளது) சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும்.

புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாக புணர்ந்தால் ஆணும், இடது புறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 360)

சூரியக்கலை (பிங்கலை), சந்திரக்கலை (இடகலை) பற்றி வள்ளலார் கூறுவது என்ன?

1. சாதாரண ஜீவர்கள் சந்திரக்கலையில் இறப்பதும் பிறப்பதும் இயற்கை.
2. பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பதும் இறப்பதும் இயற்கை.
3. சூரியகலை அனுபவம் கிடைப்பது கஷ்டம்.
4. தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்தக் கண்களில் செலுத்தல் வேண்டும்.
5. சூரியக்கலையில்தான் தியானம் செய்யவேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 398)

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றின் தோன்றாமை நன்று."

என்பார் திருவள்ளுவர். ஒருவன் புகழோடு தோன்றுவது அவன் கையிலா இருக்கிறது. பிறக்கும்போது ஒன்றும் தெரியா குழந்தையாக பிறந்து அழுகிறோம். அக்குழந்தைக்கு, நாம் புகழோடு தோன்றினோமா, என்று எவ்வாறு தெரியும்?

இங்கு வள்ளலார் கூறியுள்ளதை சற்று பார்ப்போம். பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பார்கள் என்று கூறியுள்ளார். இது எவ்வாறு முடிகிறது? பக்குவர்கள் சூரியகலையில் இறப்பார்கள் என்கிறார் வள்ளலார். எனவே சூரிய கலையில் மூச்சு சரம் ஓடுகையில் ஒருவன் இறந்தால், அவனது மறுபிறவி கட்டாயம் சூரியகலை மூச்சு ஓட்டத்தில் ஆரம்பமாகும். இவ்வாறு சூரிய கலையில் பிறப்பவர்களே ஞானிகளாக ஆகமுடியும். எனவே நாம் நமது இந்த வாழ்நாளில் எப்போதும் சூரியக்கலையில் இருக்க பழகிக்கொள்வோம். முக்கியமாக இறக்கும் தருவாயை, நாம் உணர்ந்தால் சூரியகலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 

அப்படியில்லையேல் சுத்த சன்மார்க்க நெறியில் சாகா வரம் பெற்று அடுத்துத் தோன்றாமை / பிறவாமை நன்று. என்பதே இக்குறளின் உண்மை பொருளாக உள்ளது.


சூரிய சந்திரக் கலைகள் இயற்கையாக நிகழும் நாட்கள் எவை எவை?

சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும்.

1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க வேண்டும்.

திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் - தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும்.

புதன் அன்று சூரியக்கலை ஓடினால் - மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும்.

வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் - பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும்.

2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும்.

சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும்.

ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும்.

செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.

3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும்.

வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும்.

மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.

காரிய சித்திபெற சர ஓட்டம் பார்ப்பது எப்படி?

நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன், அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம் பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம் தோல்வியை தழுவாது, வெற்றியை கொடுக்கும்.

நமக்கு வலப்புறம் (பிங்கலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-

1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு.
12. உறங்குவதற்கு.

மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சூரியகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.

நமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட வேண்டிய காரியங்கள்:-

1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல்.
2. பொருள் வாங்குதல்.
3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு.
4. சொத்துகள் வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.
5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு.
6. புதுமனை புகுதல்.
7. சிகை அலங்கரிக்க.
8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.
9. விவசாய நாற்று நடுவதற்கு.
10. தாலுக்கு பொன் வாங்குவதற்கு.
11. தாலி கட்டுவதற்கு.
12. கிணறு வெட்டுவதற்கு.
13. புதிய படிப்பு படிக்க.
14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.

மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சந்திரகலையில் இருக்கும்போது செய்ய, அவை சுபமாக முடியும், என்று ஞான சர நூல் கூறுகிறது. சந்திர கலை பெண் தன்மையுடையது.

நமக்கு இருபுற நாசியிலும் (சுழுமுனை) மூச்சோட்டம் சில நேரங்களில் மட்டுமே செல்லும். அந்நேரத்தில் நாம் இறைநினைப்புடன் தியானம் செய்ய சமாதி நிலை கிட்டும். முனிவர்கள், சித்தர்கள், இறையாளர்கள், அருளாளர்கள் எப்பொழுதும் தமது கலை திறனால் தமது மூச்சினை சுழுமுனையில் நிறுத்தி யிருப்பார்கள். அப்போதுதான் இறைநிலை விரைவில் கிடைக்கும்.

யாருக்கேனும் சுழுமுனை ஓட்டம் இருப்பின் அவர்கள் மெளனமாக அமைதியாக இருக்கவேண்டும். ஏனெனில் அந்நேரத்தில் நாம் என்ன சொன்னாலும் அது பலிக்கும். நல்லது மற்றும் கெட்டது என்ற விக்தியாசம் இல்லாமல் எது சொன்னாலும் பலித்துவிடும். எனவேதான் மேற்கண்ட இறையாளர்கள் கடிந்து ஒரு சாபமிட்டால் அது பலித்துவிடும். சுழுமுனை அழிவின் சக்தியாக உள்ளது. அதீத சக்தியுடையது. ஆண், பெண் தன்மையற்ற அலி தன்மையுடையது. எனவே சரம் தெரிந்தவர்களிடம் நாம் விளையாட்டாக நடந்துக்கொள்ளக்கூடாது.

பெரும்பாலும் சுழுமுனை இயக்கம் பகல் 12 மணி அல்லது இரவு 12 மணிக்கு நடைபெறும். பாதி இரவில் பாவியேனை எழுப்பி தன்னுடன் இறைவன் கலந்ததாக வள்ளலார் கூறுவார். இறைவன் பாதி இரவில் வரக்காரணம், அந்நேரத்தில்தான் நமக்கு சுழுமுனை இயக்கம் நடைபெறும்.

இன்னும் சில உபாயங்களைக் காண்போம்.

1. எந்த ஒரு பயணத்தையும் சந்திரக்கலையில் துவங்கி சூரியக்கலை நடக்கும்போது செல்லவேண்டிய இடம் சென்றால் சென்ற காரியம் நிச்சம் வெற்றி.

2. சரம் ஓடும் பக்கம் "பூரணம்" என்று பெயர். சரம் ஓடாத பக்கம் "சூன்யம்" என்று பெயர். நம் வழக்கில் நாம் வெற்றிபெற, நம்மை பார்க்க வருபவரை சூன்ய பாகத்தில் நிறுத்தி, அதாவது நமக்கு மூச்சு ஓடாத பாகத்தில் அவரை நிறுத்தி பேசினால் நமக்கு வெற்றி கிடைக்கும். இதனை, அவர் சந்தேகம் ஏற்படாதவாறு செய்யவேண்டும். அல்லது சர கலை தெரிந்தால் அவர் எந்தப்பக்கம் இருக்கிறாரோ அந்த பக்கத்தில் நமது மூச்சின் ஓட்டத்தை தடுத்து மறு பக்கத்தில் ஓடவிடுவதின்மூலம் இதனை சுலபமாக செய்யலாம்.

3. சந்தரக்கலை நடக்கும்போது மேற்கும், தெற்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.

4. சூரியக்கலை நடக்கும்போது வடக்கும், கிழக்கும் நோக்கிப் போனால் எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.

5. மூச்சு உள்ளே இழுக்கும்போது வேண்டிய விருப்பம் நினைக்க அவை கைகூடும்.

6. மூச்சு வெளியே போகும்போது நமக்கு வேண்டாததையும் வெளியே தள்ளலாம். காமமே போ, சினமே போ, வறுமையே போ, சாவே போ என்பது போல சிந்தனை செய்ய அவை நடக்கும்.

சரஓட்டத்தின்படி தம்பதிகள், விரும்பிய குழந்தைகளை பெறுவது எப்படி?

'நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூப நமோ நம்' (திருப்புகழ்)

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தை தெரிவித்த பின்புதான் இறைவனுக்கே வணக்கம் செலுத்துகிறார் அருணகிரிநாதர். ஏனெனில் இந்த நாத விந்து இயக்கங்கள்தான் இவ்வுலகத்திற்கு அச்சாரம். 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்பார் வள்ளலார். அப்படி எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ இந்த நாதமும் விந்துவும் தேவைப்படுகிறது. இவைகள் இன்றி இந்த உலகம் இயங்காது. எனவேதான் நாதத்தை சக்தியாகவும், விந்துவை சிவனாகவும் உருவகப்படுத்தி இந்து மதம் பல கதைகளை சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நாதவிந்து சொரூபிகளே!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகுமாகில் தரணி முழுதாளும்
பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம்)

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாம் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம்)

கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பக்கம் மூச்சு சென்றால் அதே சமயம் பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும்.
மாறாக பெண்ணுக்கு வலப்பக்கம் மூச்சும் ஆணுக்கு இடப்பக்கம் மூச்சும் சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும்.
இரண்டு பேருக்கும் ஒரே பக்கம் மூச்சு ஒத்திருந்தால் பிறக்கும் உயிர் அலியாகும்.
விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

எனவே, நாம் விரும்பும் குழந்தையினை பெற்றெடுக்கும் இரகசியம் நமது மூச்சில்தான் உள்ளது.
கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன?
கருதரித்துவிட்டது, இனி நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் தம்பதிகளும், சொந்தங்களுக்கும் அதிர்ச்சிதரும் ஒரு விஷயம் இந்த கருச்சிதைவு என்பதாகும். இதி ஏன் ஏற்படுகிறது?
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே (திருமந்திரம்)

தேகசம்பந்தத்தின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

குறையுள்ள குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது' என்பார் ஒளவை ஞானிகள்.

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே (திருமந்திரம்)

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம்,
தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம்.

ஊமை குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம்,
தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் ஜலம் (சிறுநீர்) மிகுந்திருத்தலே காரணம்.

பார்வைதிறன் அற்று குருடனாக குழந்தைகள் பிறக்க காரணம்,
தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம், ஜலம் (சிறுநீர்) சேர்ந்து மிகுந்திருத்தலே காரணம்.

பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே (திருமந்திரம்)

குழந்தைகள் குள்ளமாக இருக்க காரணம் என்ன?
தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்.


குழந்தைகள் முடமாக (நொண்டி) இருக்க காரணம் என்ன?
தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை முடமாக இருக்கும்.

குழந்தைகள் கூனனாக இருக்க காரணம் என்ன?
தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் நீளமும் திடமும் ஒருசேர குறைந்து வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை கூனனாக இருக்கும்.

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார்.


முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். "தண்டம்" என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து "T " அல்லது "Y " வடிவத்தில் இருக்கும்.
அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்து விட்டால், சுவாசம் திசை மாறும்.
வலது நாசி சுவாசத்தை நிறுத்த, வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே, இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த, இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும்.
இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள். ஆனால், சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வென்றும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?
அதாவது, நாம் செய்த காரியம் சரியாக நடக்கவில்லை என்றால், அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உடனே, தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே, சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில், மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது, அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
நம் முன்னோர்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததால் தான் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தாலோ, சாப்பிடும் பொழுது கைகளை ஊன்றி சாப்பிட்டாலோ அவ்வாறு செய்யாதே என கூறுவார்கள். கை மற்றும் உடலின் பாகங்கள் அழுத்தம் கொண்டால் உடலில் நாடி சலனம் ஏற்படும். சலனம் ஏற்படுவதால் நம் இயல்பான உடல் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்க படலாம்.
நாடி சலனத்தை சோதனை முறையில் செய்யுங்கள், தொடர்ந்து செய்யக்கூடாது. சரியான குருவின் வழிகாட்டுதலில் நாடியிடம் விளையாடுவது நல்லது.
நமது உடலின் நாடிகள் அனைத்தையும் தூண்டி ஆன்மீக நிலைக்கு இட்டு செல்லும் தன்மை சுழுமுனை நாடிக்கு உண்டு. அதனால் மலைக்கு மேல் கோவிலை கட்டிவிடால் இருகால்களையும் பயன்படுத்தி சம அளவு அழுத்தத்துடன் ஏறும் பொழுது உடலில் சுழுமுனை நாடி இயற்கையாகவே வேலை செய்யும். மலைக்கோவிகளுக்கு இனி செல்லும் பொழுது உங்கள் சுவாசத்தை கவனிக்க தவறாதீர்கள். மலைக்கோவிலை அடைந்ததும் உங்கள் சுவாசத்தை கவனித்தால் அவை இரு நாசிகளிலும் சரியான அளவாக வந்துகொண்டிருக்கும்.
உங்கள் உடலின் வலப்பகுதியில் அழுத்தம் கொடுக்கபட்டால் இடது நாசியில் சுவாசம் வரும் . அதாவது இடகலை நாடி வேலை செய்ய துவங்கும். இடப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் வலபகுதியில் சுவாசம் ஏற்பட்டு பிங்கள நாடி வேலை செய்யும். இருபக்கத்திலும் அழுத்தம் கொடுத்தால் ஸுக்‌ஷமணா நாடி வேலை செய்து இரு நாசியிலும் சுழுமுனை வேலை செய்யும்.
மேற்கண்ட விஷயத்தை ஒரு சோதனையாக நீங்களே செய்து பாருங்களேன். உங்களுக்கு எந்த நாசி துவாரத்தில் சுவாசம் வருகிறது என பாருங்கள். பிறகு சுவாசம் வரும் பகுதியில் உள்ள உங்கள் கைகளை நிலத்திலோ அல்லது மேஜையிலோ நன்றாக ஊன்றிக்கொள்ளுங்கள். சில நிமிடங்களில் கவனித்தால் உங்கள் சுவாசம் அடுத்த நாசியில் வரத்துவங்கும். இடது நாசியில் சுவாசம் வருவதாக இருந்தால் இடது கையை ஊன்றுங்கள். வலது பக்கம் சுவாசம் சில நிமிடத்தில் வரத்துவங்கும்.

இம்முறைக்கு நாடி சலனம் என பெயர். எந்த நாசியில் சுவாசம் நடந்தால் எந்த காரியம் செய்ய வேண்டும் என தெரிந்து செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு சரவித்தை தெரிந்திருக்க வேண்டும்.  

அன்பர்களே! மேற்கண்டவாறு சரம் பார்த்து காரியம் செய்வது என்பது வள்ளலார் வழிநடக்கும் சுத்த சன்மார்க்கிகளுக்கு தேவையற்ற ஒன்று. எனினும் இதனை தெரிந்து வைத்திருப்பதால் தவறில்லை. இதற்கு அடிமையாகிவிடாதீர்கள். நமக்குத் தேவை இறைவன் அருள் மட்டுமே. அந்த அருளையடைய முற்படுங்கள். அருளையடைய முற்படும்போது இறைவன் அதற்கேற்ப நமது சரங்களை நமக்குத்தெரியாமலேயே சரிசெய்வான். எனவே நமது முயற்சியால் இதனை செய்வதைவிட, இறைவன் சுதந்திரத்தில் இதனை விட்டுவிடுதல் நலம்.

இறைவன் அருள் எப்படிப்பட்டது? என்று வள்ளலார் கீழ்கண்டவாறு கூறுகிறார்,

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும் நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும், அறிவார் அறியும் வண்ணங்களும், அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும் ஆகிய சர்வசத்தி வண்ணங்களும், தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளக்குகின்ற பூரண விளக்க வண்ணத்தையுடையது என்று அறிய வேண்டும்.

இவ்வருள் எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றது என்று அறிய வேண்டும்.

அந்த அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் மட்டுமே பெறக்கூடும், வேறு எதனாலும் பெற முடியாததாக உள்ளது. இவ்வருளை பெற்றால் துரும்பும் ஓர் ஐந்தொழில் செய்யும் வல்லமை பெறும்.

வியாதிகள் நீங்க வள்ளலார் கூறும் மருந்து என்ன?

சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால் - அந்த ஜீவகருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்திசெய்து, விஷேஷ செளக்கியத்தை உண்டுபண்ணு மென்பது உண்மை.

குழந்தை பாக்கியம் அற்றவர்களுக்கு வள்ளலார் கூறும் மருந்து என்ன?

பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண்ணுமென்பது உண்மை.

நீண்ட ஆயுள் பெற வள்ளலார் கூறும் மருந்து என்ன?

அற்பவயது என்று குறிப்பினால் அறிந்துக்கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்புத் தீர்க்காயுளை உண்டுபண்ணும் என்பது உண்மை.

கல்வியும் செல்வமும் பெற வள்ளலார் கூறும் வழி என்ன?

கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி, பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை உண்டுபண்ணுமென்பது உண்மை.

ஜீவகாருண்ய விரதத்தால் அடையும் பலனாக வள்ளலார் கூறுவது யாது?

பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளுக்கு,

1. கோடையில் வெயில் வருத்தாது.
2. மண்ணும் சூடு செய்யாது.
3. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்க மாட்டா. (தற்போது உத்ராகண்ட் மாநிலத்தில் பெய்யும் பெருமழையில் இப்படிப்பட்ட சமுசாரிகள் மாட்டிக்கொண்டிருந்தால் இவர்களையெல்லாம் எவ்வித இயற்கை பேரழிவும் எதுவும் செய்யமுடியாது.)
4. விடூசிகை, விஷக்காற்று, விஷசுரம் முதலிய அஜாக்கிரதைப் பிணிகளும் உண்டாகாது.
5. ஆற்று வெள்ளத்தாலும், கள்ளர்களாலும், விரோதிகளாலும் கலக்கப் படார்கள்.
6. அரசர்களாலும், தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள்.
7. இவர்களது விளைநிலத்தில் பிரயாசையில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும்.
8. வியாபாரத்தில் மேன்மேலும் தடையில்லாமல் இலாபங்களும் உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும்.
9. சுற்றங்களாலும், அடிமைகளாலும், சூழப்படுபவர்கள் துஷ்ட மிருகங்களாலும், துஷ்ட ஜெந்துக்களாலும், துஷ்டப் பிசாசுகளாலும், துஷ்ட தெய்வங்களாலும் பயம் செய்யப்படமாட்டார்கள்.
10. எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதியினாலும் ஊழ் வகையாலும் சத்தியமாக வராது.
11. இவர்களே தெய்வமென்று உண்மையாக அறியவேண்டும். மேலும் பல சிறப்புகளை வள்ளலார் தனது திருஅருட்பாவில் இவர்களைப்பற்றி கூறியுள்ளார்.

எனவே நாம் அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை  நமது வாழ்நாளில் கடைபிடித்து, இறையருள் பெற்று மரணமிலா பெருவாழ்வு அடைவோம். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி



 



🔥 சரகலை பயிற்சி 🔥- சாஸ்திரங்களும் மற்றும் ரகசியங்களும் 🔥 ஒருமாத வகுப்பு 📞8220667120 ✅ Booking Closes soon 🧘 7 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு! 🧘 23 நாள் டெலிகிராமில்(Telegram group) சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் 🗓 ஜனவரி 18 முதல் 24 வரை, 2025. 🕒மாலை 8.00 - 9.00 மணி வரை. 🎟 நுழைவுக் கட்டணம்: ரூ 5000/- * 👉 முன்பதிவு செய்ய: https://rzp.io/l/ESc8zCz 📞 தொடர்புக்கு: +91-8220667120.













































 













 








 





  





  


54 comments:

  1. ஐயா, இரவில் சொப்பனம் வராமல் தூக்குவதற்கு என்ன பண்ண வேண்டும்

    ReplyDelete
  2. ஐயா, வள்ளல் பெருமான் சொன்னது போன்று இடது பக்கமாகவே சாய்ந்து உறங்கினால் சொப்பனம் வருவதை தவிர்க்கலாம். மேலும் அதிகாலை ஐந்து மணிக்கு மேல் உறங்குவதை தவிர்க்கவும். மேற்கொண்டு இதுபற்றி எனக்குத் தெரிய வந்தால் உங்களுக்கு பின்னர் தெரிவிக்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு நண்பரே , மிக்க நன்றி.

    உட்காரும் போது எவ்வாறு உட்கார வேண்டும், சூரிய கலையில் என்றால் அது எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்கவும்

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இயல்பாக இருங்கள்.

      Delete
  5. ஐயா, கலைகளையும், கால்-ஐயும் தெளிவாக புரிய வைத்தீர்கள். மிக்க நன்றி!!

    ReplyDelete
  6. காலத்தால் அழியாத உடல் தத்துவங்கள்.. நன்றி ஐயா

    ReplyDelete
  7. அருமையான பதிவுகளே. தகவலுக்கு நன்றி ஐயா...!

    ReplyDelete
  8. நல்ல வார்த்தைகளும் நல்ல விளக்கங்களும்.நல்ல பதிவுகளையும் தந்த உங்களுக்கும் .அதற்கு காரனமாக உள்ள வள்ளல் பெருமானுக்கும் கனக்கிலடங்கா நன்றிகளும் வணக்கங்களும் பல......வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. Replies
    1. அருட்பெருஞ்ஜோதி... நன்றி ஐயா

      Delete
  10. இதை பள்ளியில் பாடமாக வைத்தால் மனித குலம் சிறக்கும், நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. அருள் ஆட்சி நடைபெறும்போது எல்லாம் செயல் கூடும் ஐயா...அருட்பெருஞ்ஜோதி... நன்றி ஐயா

      Delete

  11. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
    பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
    தாண்மிகுமாகில் தரணி முழுதாளும்
    பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம்)

    இதற்கு விளக்கம் கூறுங்கள் ஐயா 🙏

    ReplyDelete
    Replies
    1. விரைவில் முயல்கின்றேன் ஐயா. அருட்பெருஞ்ஜோதி... நன்றி ஐயா

      Delete
  12. இடக்கலையை பிங்கலையாக மாற்றுவதற்கு வழி சொன்னதை போல சுழிமுனையாக மாற்றுவதற்கும் எளிய வழிமுறைகள் கூறுங்கள் ஐயா 🙏

    ReplyDelete
    Replies
    1. விரைவில் இறையருளால் முயல்கின்றேன் ஐயா. நன்றி

      Delete
  13. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  14. Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  15. இது பற்றி மூடி மறைத்து வைத்துக் காெண்டு பயிற்சி என்று காசு பார்க்க நினைக்கும் கூட்டத்தின் செயல்களுககு செம அடி இந்த பதிவு ...! இதை படித்தபின் விளக்கம் அறிந்தபின் அது பாேன்ற கயவர்களை நாடமாட்டார்கள் என்பது சர்வ நிச்சயம் ...

    //அன்பர்களே! மேற்கண்டவாறு சரம் பார்த்து காரியம் செய்வது என்பது வள்ளலார் வழிநடக்கும் சுத்த சன்மார்க்கிகளுக்கு தேவையற்ற ஒன்று. எனினும் இதனை தெரிந்து வைத்திருப்பதால் தவறில்லை. இதற்கு அடிமையாகிவிடாதீர்கள். நமக்குத் தேவை இறைவன் அருள் மட்டுமே. அந்த அருளையடைய முற்படுங்கள். அருளையடைய முற்படும்போது இறைவன் அதற்கேற்ப நமது சரங்களை நமக்குத்தெரியாமலேயே சரிசெய்வான். எனவே நமது முயற்சியால் இதனை செய்வதைவிட, இறைவன் சுதந்திரத்தில் இதனை விட்டுவிடுதல் நலம்.//...என்பது சரியான ...உண்மை யான கருத்து...! எல்லாம் அவன் செயல் என்று எண்ணினாலே ...நலம் ...நலம் ...நலமே ...நல்ல பதிவை அளித்த தங்களுக்கு நன்றி ....!!

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  16. உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சு என்கிறிர்கள் ...15.மூச்சு என்பது எந்த நிலையில் ...விளக்குவிர்களா அய்யா ...!

    ReplyDelete
    Replies
    1. இறையருளால் முயல்கின்றேன் ஐயா. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  17. Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா..

      Delete
  18. சரம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா..

      Delete
  19. அருமையான, அவசிமான தகவல்கள், நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா..

      Delete
  20. அருமை ஐயா, மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா..

      Delete
  21. Amavaasai Thursday Varum pothu Enna Saran seiya vendum as soon as possible

    ReplyDelete
    Replies
    1. இறையருளால் விரைவில் பகிர்கின்றேன் ஐயா. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா..

      Delete
  22. இதுபோன்ற தெள்ளத் தெளிவான விளக்கத்தை நான் எங்கும் கண்டதில்லை ஐயா.. மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  23. ஐயா நானும் வள்ளலார் பிறந்த கடலூர் மாவட்டதை சேர்ந்தவன்தான்.. எனக்கும் அன்னதானம் செய்ய விருப்பம்.. வடலூர் வள்ளலார் சபையில் அரிசி மூட்டையாக வாங்கி கொடுக்கலாமா ஐயா...

    ReplyDelete
  24. வாங்கித் தரலாம் ஐயா... அருட்பெருஞ்ஜோதி அருள் கிடைக்கும்.

    ReplyDelete
  25. நல்ல பதிவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  26. மிகவும் சிறப்பு ஐயா

    ReplyDelete
  27. நன்றி இறையருளே

    ReplyDelete
  28. Ivai Aangalukka ? pengalukka?

    ReplyDelete
  29. இருவருக்கும்...

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.