Monday, June 16, 2014

அருட்பிரகாசர் - கிளிக் கண்ணிகள்



அருட்ஜோதி வாழ்க! ஆளும்தாள் வாழ்க!                        16.06.2014      
சுமைஒன்றும் காணாது உள்ளிருந்து ஓங்கும் தாள் வாழ்க!
சித்தெல்லாம் ஆண்ட சிற்சபை அரசன் தாள் வாழ்க!
அருட்பாவாகி நின்று அருள் தருவான் தாள் வாழ்க!
கருணையாம் அருட்பெருஞ்ஜோதி அடி வாழ்க!

காலன் கெடுத்துஆளும் கருணீகன்அடி வெல்க!
இறப்பு அறுக்கும்நம் இதயகழல்கள் வெல்க!
சிறப்பு உடம்பெடுத்ததன் சீர்கழல்கள் வெல்க!
அகஇனத்தார் உள்மகிழும் அருங்கழல்கள் வெல்க!
சகத்திலோர் சபைக்கண்ட ஞானகழல் வெல்க!


அருட்பிரகாசர் - கிளிக் கண்ணிகள்

நெஞ்சம் நிறைந்தே நீடு வாழ்பவரிடம்
      தஞ்சம் அடைந்தேனடி - கிளியே
      தயவைப் பெற்றேனடி.                            (1)

உடலின் உதிரமான உயிரின் சுவாசமான
      கடலை அடைந்தேனடி - கிளியே
      கருணைப் பெற்றேனடி.                            (2)

இடமும் வலமும் இருவொரு நடுவுமான
      வடலூர் அடைந்தேனடி - கிளியே
      வரம்பல பெற்றேனடி.                             (3)

நிலவாய்க் கதிராய் நின்றோங்கு மவர்நற்
      குலம் அடைந்தேனடி - கிளியே
      கதிர்நலம் பெற்றேனடி.                            (4)

சோகமான பார்வையால் சாமிஅவர் பார்க்க
      மோகம் அடைந்தேனடி - கிளியே
      மோதகம் பெற்றேனடி.                            (5)

கட்டிய கைகள் கட்டுமோ என்னுடலையென
      எட்டியே அடைந்தேனடி - கிளியே
      எந்தயைப் பெற்றேனடி.                            (6)

கதிர்சூடுபட காலிரண்டும் கடக்குமோ பாதுகையாய்
      பதியடியை அடைந்தேனடி - கிளியே
      பரமனைப் பெற்றேனடி.                           (7)

ஏடெடுத்து அவர்நிலை அழகைப் பாடவே
      கூடெடுத்து அடைந்தேனடி - கிளியே
      கூடும்நிலை பெற்றேனடி.                          (8)

தனித்துரிய அமுதுடன் துளிர்விட்டு எழுந்து
      தனித்தே அடைந்தேனடி - கிளியே
      தலைவனைப் பெற்றேனடி                         (9)

ஞானக் கொழுந்தனை ஞானசபையரைக் கண்டே
      ஆனந்தம் அடைந்தேனடி - கிளியே
      அருளைப் பெற்றேனடி.                            (10)

உனைப் பார்க்கவே எழுவேன் மன்றில்
      தனைப்பார்க்க அழுவேனடி - கிளியே
      தரித்திரக் காரியடி                                (11)

எனையல்லால் கூடுவாள் அவரோடு யாரோ
      வினைவந்து தடுக்குதடி - கிளியே
      விசித்திரக் காரியடி.                               (12)

சாதியும் மதமும் சமயமும் கோயிலும்
      வீதியில் தேடுவேனடி - கிளியே
      விதிவழிக் காரியடி.                               (13)

முகத்திலே பளிச்சிட்டு மதிகெட்ட மூடனை
      அகத்திலே வைப்பேனடி - கிளியே
      அகந்தைக் காரியடி.                               (14)

பசித்தோரைப் பாராது பணத்தைப் புதைத்து
      புசித்திருக்கும் புலையனடி - கிளியே
      புண்முகக் காரியடி.                               (15)

குணமொன்றும் இல்லா கொல்லாநெறித் தெரியா
      பிணந்திண்ணும் உண்ணியடி - கிளியே
      பித்தலாட்டக் காரியடி.                            (16)

சித்திவளாகச் சித்தரிருக்க செத்தவரெல்லாம் சித்தரென்ற
      வித்தைக்கற்ற சொத்தையடி - கிளியே
      விழியாட்டக் காரியடி.                             (17)

சதுரனவன் புகழைச் சாராது சூதுவாதுசெய்து
      மதுகுடிக்கும் மடமாதரடி - கிளியே
      மதிகெட்டக் காரியடி.                              (18)

முலைக்காட்டி மலம்சார் முகம்காட்டி முறுவலுடன்
      விலைப்போகும் ஏந்தலடி - கிளியே
      விகற்பக் காரியடி.                                (19)

தவறேது செய்யினும் திருந்தி உன்பாதமலரைத்
      தவம்செய்யும் கூட்டமடி - கிளியே
      தவசியக் காரியடி.                                (20)

ஆமையாய் இருந்தும் அவராண்மை என்வசமாக
      ஊமையாய் இருந்தேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (21)

தன்சிறு முடியும் தலைவனடிக் காணஎழ
      என்நிலை மறந்தேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியொ?                       (22)

விழித்திருந்தும் காணா விழியோனை புறம்
      அழித்தே கண்டேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (23)

சன்மார்க்கம் பேசியும் சுயஞ்ஜோதியைப் பாடியும்
      என்னோடிருக்கக் காணேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (24)

துன்பம் போக்க துரிசுநீக்க பசித்திருந்தேன்
      என்னவராய் வந்தாரடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (25)

வருவேனென சென்றார் வரும் நாள்வரை
      அருட்பாவைச் சேர்ந்தேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (26)

பசலையால் மெலிந்தேன் பசுந்திரை நீக்கி
      அசலைக் காண்பேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (27)

பொருள் கொடுத்தாலும் பொருட்டாகார் அவர்
      அருள்ஜோதி மாயரடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (28)

மன்மதன் வருவானோ மன்னவனிடம் நீபோய்
      என்பெயரைக் கூராயடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (29)

கண் மூன்றானார் காணாநடுக் கண்ணானார்
      எண்ணாரை எண்ணேனடி - கிளியே    
      உண்மைதான் என்னடியோ?                        (30)

இறைவனுடன் பேசவே ஆசைப்பட்டேன் பேசினும்
    குறையொன் றுள்ளதடி - கிளியே
    குரல்கேட்க வில்லையடி.                            (31)

நான்பேசினும் என் நாயகன் பேசவில்லை
    ஏன்என கேட்பாயடி - கிளியே
    என்நிலை விளக்காயடி.                            (32)

பேசும்மொழி அறியலையோ பாசமது புரியலையோ
    வீசுகாற்றும் விளக்குமடி - கிளியே
    வன்தமிழ் அறியுமடி.                            (33)

காதுகேட்க வில்லையோ கருவிவாங்கித் தருகிறேன்
    ஈதுபொருத்தி வாருமடி - கிளியே
    இறைச்செவிடு கேட்குமடி.                            (34)

வீதியோரக் கடைகளிலே விலங்கினங்கள் ஓலமிட்டு
    நீதிக்கேட்டு கத்துதடி - கிளியே
    நியாயம்கேட்டு மாளுதடி.                            (35)

கொதிக்கின்ற நீரினிலே கோழிதனை மூழ்கடிப்பார்
    கொதிப்பார் இல்லையடி - கிளியே
    கடவுளும் கருதாரடி.                            (36)

சுடுகாட்டுப் பாடையிலும் சடலமருகில் உயிர்க்கோழிக்
    கூடு தொங்குதடி - கிளியே
    காருண்யம் இல்லையடி.                            (37)

குலாவுகின்ற கோழிகளை குலைநடுங்க தலைக்கீழாய்க்கட்டி
    உலாவுகின்ற மனிதரடி - கிளியே
    உணர்வற்ற மிருகமடி.                            (38)

கூட்டம்கூடி ஆட்டமிட்டு குலதெய்வத்திற்க்கு என்று
    ஆட்டை வெட்டுவாரடி - கிளியே
    ஆணவம் கொள்வாரடி.                            (39)

கத்தும்போது உணவிட்டு காசுக்காக வெட்டுகின்ற
    பித்துபிடித்த மனிதரடி - கிளியே
    பாசமொன்றும் இல்லையடி.                        (40)

மேனித் துடிக்கஆட்டின் மேல்தோலை உரித்தே
    பேனிக் காப்பாரடி - கிளியே
    பணம் பண்ணுவாரடி.                            (41)

ஆய்ந்த பாவங்கள் ஆன்றோர் சொற்களாவும்
    வாய்ச்சொல் ஆனதடி -  கிளியே
    வாய்மை இல்லையடி.                            (42)

மடிச்சொரிந்து பாலீனும் மாடெல்லாம் இறுதியில்
    அடிமாடு ஆனதடி - கிளியே
    ஆன்மநேயம் இல்லையடி.                            (43)

வலையிட்டு மீன்பிடித்து வந்து சமைத்து
    இலையிட்டு உண்பாரடி - கிளியே
    இரக்கமொன்று மில்லையடி.                        (44)

உயிரீனும் முட்டையை உடைத்து ஊற்றி
    லயித்து உண்பாரடி - கிளியே
    லட்சியம் இல்லையடி.                            (45)

காட்டு மிருகமதைவிட கண்டதைத் தின்னும்
    நாட்டு மிருகமடி - கிளியே   
    நாறியப் பிண்டமடி.                                (46)

தயவின்றி கொன்றுத் தின்னுங் கொடிய
    சுயநலக் காரனடி - கிளியே
    சகத்திலோர் சூரனடி.                            (47)

மலந்தின்னும் பன்றியை மனிதன் தின்னுங்
    குலமிது பாரடி - கிளியே
    கொலை செய்வாரடி.                            (48)

எல்லா உயிர்களும் என்னுயிர் என்று
    வல்லான் சொன்னானடி - கிளியே
    வரக்காணோ மடி.                                (49)

இறை என்றிருந்தால் ஊன் உண்பாரை
    அறையச் சொல்லடி - கிளியே   
    ஆண்மைத் துடிக்குதடி.                            (50)




ஊமைஎனை பேசவைத்து உண்மைதனை புரியவைத்து           
      தீமைதனை விலக்கினாரடி - கிளியே
      தயவுநிலை பெற்றேனடி.                                      (51)

தண்டபாணி பெயரோனை தவிர்த்து அவர்பெயரை
      தெண்டனிட்டே வைத்தேனடி - கிளியே
      தேனமுது உண்டேனடி.                                        (52)

கடவுள் நிலையறிந்து கடக்க முயன்றேன்
      இடமொன்று கண்டேனடி - கிளியே
      அம்பலம் அடைந்தேனடி.                                      (53)

அம்பலத்தே ஆடல்செய்யும் அப்பனைக் கண்டே
      சம்பளம் பெற்றேனடி - கிளியே
      சதுரனை அடைந்தேனடி.                                      (54)

கண்மூடி பழக்கமெலாம் கருணாகரன் தயவில்
      மண்மூடி போனதடி - கிளியே
      மயக்கம் தெளிந்தேனடி.                                       (55)

சிதைக்கும் வழக்கொழித்து செத்தாரை எல்லாம்
      புதைக்கச் செய்தேனடி - கிளியே
      பார்க்க எழுவாரடி.                                            (56)

குலதெய்வ பக்தியெலாம் குடிக்கெட்டுப் போக
      நலமொன்று கண்டேனடி - கிளியே
      நல்லதே நிலைக்குமடி.                                        (57)

பலிகேட்ட கடவுளெல்லாம் பொய்யெனப் போகவே
      கலிகாலம் சென்றதடி - கிளியே
      கருணையுகம் வந்ததடி.                                       (58)

புறவின மக்களெல்லாம் பரமனின் அகஇனந்தேடி
      பறந்தே சேர்வாரடி - கிளியே
      பயமினி இல்லையடி.                                         (59)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழஇனி
      எல்லோரும் நினைப்பாரடி - கிளியே
      உயிர்க்கொலை செய்யாரடி.                                    (60)

பொய்கள் பொலிந்துப் புறத்திருக்க உண்மை
      தொய்ந்திருப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (61)

சந்தையில் பிறப்பெடுத்து சித்தன் என்றானப்பின்
      தந்தைதாய் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (62)

உளவு பார்த்து உண்மை தெரிந்தப்பின்
      தளர்வது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (63)

கடை விரித்தாய் களித்து வாங்கியப்பின்
      தடைவிதிப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (64)

அரிய மானிடப்பிறவி அறிந்தேன் அடுத்து
      துரியநிலை ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (65)

ஆக்கை அழியாதிருக்க ஆசை வந்தப்பின்
      தூக்கம் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (66)

மயக்கம் மாய்ந்தது மருளும் நீங்கியப்பின்
      தயக்கம் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (67)

மடமாதர் ஆசையெலாம் மாண்டுப் போனப்பின்
      திடதேகம் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (68)

அத்திக் காயும் எட்டிப்பழமும் எனக்கு
      தித்திப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (69)

மறதியும் அவனே மதிநினைவும் அவனே
      துறப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (70)

ஏகமே இறையெனில் அநேக மாய
      மேகஉருவானது எப்படி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (71)

எந்திரம் தந்திரம் எமனைத் தடுக்குமோ
      மந்திரம் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (72)

இனமான உயிர்களை இச்சித்து உண்போருக்கு
      மனசாட்சி எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (73)

இதயத்துள் துடிக்கும் இறைவனைக் காண
      மதங்கள் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (74)

தன்னைப் போலவே தலைவனும் என்போருக்கு
      மன்னிப்பு எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (75)

குணமின்றி கூடிக் குலாவி சண்டையிட
      மணம்புரிவது எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (76)

கண்ணிருந்தும் பசித்தோரைக் காணாத கயவர்க்குஇம்
      மண்ணும் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (77)

தங்கமான உடலை தனித்து விட்டோருக்கு
      மங்களம் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (78)

சோதிடம் பார்த்தும் சோதனை வந்திடநவகல்
      மோதிரம் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (79)

தாள் பணிந்து தலைவனை ஏற்காது
      மாள்வது எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (80)

சித்தெல்லாம் வல்ல சித்தன் ஒருவன்
      தித்திக்க வருவாண்டி - கிளியே
      திண்பண்டம் தருவாண்டி.                                      (81)

மறைந்தவன் இதோ மீண்டும் இங்கே
      இறையென வருவாண்டி - கிளியே
      இன்பெலாம் தருவாண்டி.                                      (82)

பூட்டியதைத் திறந்தே பலர்காண இறைவனைக்
      கூட்டியே வருவாண்டி - கிளியே
      கூறியதைத் தருவாண்டி.                                      (83)

அழுதிருக்க இருப்போரை அற்பமாய் செத்தாரை
      எழுப்பவே வருவாண்டி - கிளியே
      எல்லாம் தருவாண்டி.                                         (84)

அடி கண்டோரை ஆள்வதற்கே இரண்டரைக்
      கடிகையில் வருவாண்டி - கிளியே
      கரும்புச்சாறு தருவாண்டி.                                     (85)

பொன்னான மேனியுடன் பொற்பாத அடியெடுத்து
      சொன்னபடி வருவாண்டி - கிளியே
      சொத்தெல்லாம் தருவான்டி.                                   (86)

அன்பானவன் அருளானவன் என்கைப் பிடித்தே
      என்னோடு வருவாண்டி - கிளியே
      என்னையும் தருவாண்டி.                                      (87)

அளித்த அருட்பாக்களை அன்புடனே படிப்போர்க்கு
      வெளிப்பட வருவாண்டி - கிளியே
      வெல்லக்கட்டி தருவாண்டி.                              (88)

பற்பல கற்பங்களிலும் பலர்காண நடமாட
      அற்புதன் வருவாண்டி - கிளியே
      அமிழ்தம் தருவாண்டி.                                        (89)

சாகாக் கல்விஅருளிச் சாகாவரம் தரவே
      ஆகாயன் வருவாண்டி - கிளியே
      ஆதாயம் தருவாண்டி.                                         (90)

நாயினும் ஒப்பிலேன் நாயகனை பாடினேன்
      ஆயினும் அருள்வாண்டி - கிளியே
      ஆயிரம் தருவாண்டி.                                          (91)

புழுவிலும் இழிந்தேன் புகழோனை புகழ்ந்தேன்
      அழுகையாய் அருள்வாண்டி - கிளியே
      அழகைத் தருவாண்டி.                                        (92)

மலந்தின்ற பன்றியேன் மாதவனை ஏற்றினேன்
      நலமென்று அருள்வாண்டி - கிளியே
      நல்லன தருவாண்டி.                                          (93)

காமமரக் குரங்கேன் காதலாகிக் குழைந்தேன்
      ஏமசித்தி அருள்வாண்டி - கிளியே
      ஏற்றவரம் தருவாண்டி.                                        (94)

மாதரைஈ எனமொய்த்தேன் மன்னவனை அடைந்தேன்
      சாதகம் அருள்வாண்டி - கிளியே
      சாகாதேகம் தருவாண்டி.                                       (95)

மதத்திலும் பொய்யேன் மெய்யோனை வையேன்
      இதமாய் அருள்வாண்டி - கிளியே
      இன்பம் தருவாண்டி.                                          (96)

எதனினும் கடையேன் என்னவனை எண்ணினேன்
      பதமாய் அருள்வாண்டி - கிளியே
      பழமொன்று தருவாண்டி.                                      (97)

மலத்தினும் நாறினேன் முயங்கியே ஏறினேன்
      இலக்கொன்று அருள்வாண்டி - கிளியே
      இலக்கணம் தருவாண்டி.                                      (98)

சாதியில் லயித்தேன் சுத்தனை சுகித்தேன்
      சோதியாய் அருள்வாண்டி - கிளியே
      சோதனைத் தருவாண்டி.                                      (99)

அறியாதச் சிறியேன் அறிந்ததாய் பிதற்றினேன்
      எறியாது அருள்வாண்டி - கிளியே
      எதையும் தருவாண்டி.                                        (100)
 

தி.ம.இராமலிங்கம் - கடலூர்
T.M.RAMALINGAM - CUDDALORE