Sunday, August 24, 2014

மனித இரகசியம்



மனித இரகசியம்

ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம்,

நான் யார்? என்ற கேள்வியை மனிதன் உட்பட வேறு எந்த உயிரினமும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டால், பதில் என்னவாக இருக்கும் என்பதனை பல மதத்து ஞானிகள் விடைகண்டுபிடித்து இவ்வுலகிற்கு தெரிவித்துவிட்டார்கள். பொதுவாக அனைத்து ஞானிகளும் நான் என்பது நம்மில் உள்ள ஆன்மா என ஒப்புக்கொள்கின்றனர். இது நிற்க.

இறைவன் யார்? என்ற கேள்விக்கும் பல மதத்திலுள்ள ஞானிகள் விடைகண்டுபிடித்து இவ்வுலகிற்கு தெரிவித்துவிட்டார்கள். பொதுவாக அனைத்து மத ஞானிகளும் இறைவன் ஒருவனே, அவன் உருவமில்லாதவன் என ஒப்புக்கொள்கின்றனர். ஆதியும் அந்தமும் அற்ற அநாதி என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இதனை மனிதர்களாகிய நாம் ஒப்புக்கொள்கிறோம், ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். வேறு வழியில்லை. இது நிற்க. 

மனிதன் யார்? என்ற கேள்விக்கு எந்த மதத்து ஞானியாவது சரியான பதிலை இவ்வுலகிற்கு கூறியிருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது. ஒருவர் கூறுவதை ஒருவர் ஒப்புக்கொள்ளமுடியா கருத்தாகவே அவைகள் எல்லாம் இருக்கின்றன. அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஓர் பொதுவான பதில் இதுவரை இவ்வுலகில் எழவில்லை. இவ்வுலகில் தோன்றிய முதல் மனிதன் யார்? அவன் ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய முடியவில்லை. இதுபோலவே மற்ற உயிரங்களையும் நாம் எடுத்துக்கொண்டாலும் பதில் காணமுடியாது. இவ்வுலகில் பிறந்த முதல் நாய் எது? முதல் ஆடு எது? முதல் கோழி எது? முதல் மாடு எது? முதல் பன்றி எது? முதல் காகம் எது? முதல் கிளி எது? முதல் பாம்பு எது? முதல் தவளை எது? முதல் மீன் எது? முதல் யானை எது? முதல் சிங்கம் எது? முதல் புலி எது? முதல் தாவரம் எது? முதல் அணு எது? முதல் ஆன்மா எது? முதல் ஜீவன் எது? போன்ற கேள்விகளுக்கு விடைதான் என்ன?

இருப்பினும் இவ்வுலகில் தோன்றிய சில மத அறிஞர்களும் அறிவியலாளர்களும் முதல் மனிதத் தோற்றம் இப்படிப்பட்டதுதான் என்று வரையறுத்துள்ளார்கள். அது எப்படிப்பட்டது? அதன் மறுபக்கம் என்ன என்பதனை நாம் இங்கே காண்போம்.

மனித தோற்றம் பற்றி கிறித்துவ மதம் கூறுவது என்ன?

ஆதியாகமம் 1ம் அதிகாரம்

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.
      
பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார்.

சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது.

பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று

12ம் வசனத்தில் புல் புண்டுகளையும் கனிகொடுக்கும் மரங்களையும் படைத்துவிட்டார். 27,28,29ம் வசனங்களில் ஆணும் பெண்ணுமாக மனுஷரை படைத்து பிற உயிர்களை ஆண்டுகொள்ள அவர்களுக்கு  அனுமதி அளித்துவிட்டார். 6ம் நாள் முடிந்துவிட்டது.

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்.

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
            
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

2ம் அதிகாரம் 7ம் வசனத்தில் மீண்டும் மண்ணினால் மனிதனைப் படைக்கிறார். ஜீவவிருட்சத்தின் கனிகளைப் புசித்தால் சாகவே சாவாய் என்று கட்டளையிடுகிறார்.

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

3ம் அதிகாரம்

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்.

ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.

நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

அதிகாரம்.4

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

சிலநாள் சென்றபின், காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். இது நிற்க.

மேற்கண்டவாறு கிறித்துவ மதமானது மனிதத் தோற்றத்தை விளக்குகின்றது.

இங்கு நமக்கெழும் கேள்விகள் பலவற்றுள் சில,

1. கர்த்தர் ஏழே நாட்களில் வெளிச்சம் முதற்கொண்டு மனிதனையும் மற்ற உயிரினங்களையும் படைத்ததாக கூறுவதால், இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிரன வகைகளும் ஏழு நாட்களுக்குள்ளாகவே தோன்றிவிட்டனவா?

2. முதல் மனிதன் ஆதாம் என்ற ஆணும் இரண்டாம் மனிதன் ஏவாள் என்ற பெண்ணும் தாங்கள் பிறந்த உடனே உரையாடுகின்றார்கள். இவர்கள் குழந்தை பருவத்திலிருந்து பிறந்து வளராமல் எடுத்தவுடன் பெரிய மனிதர்களாகவே பிறந்தார்களா? பிறந்தவுடன் இவர்கள் உரையாடுகின்ற மொழி தோன்றிவிட்டதா? 

3. இறைவன் மனிதனை தனது சாயலாகவே படைத்ததாக கூறுவதால், இறைவன் உருவமுடையவனா? அந்த உருவம் மனித உருவமா?

4. இவ்வுலகின் முதல் மனிதன் ஆதாமும், ஏவாளும் தம்மைப்படைத்த இறைவனுடன் பல நேரங்களில் உரையாடுவதால், இறைவன் யார்? என்று தெரிந்தப்படியால் இவர்களில் இருந்து தோன்றிய மனித இனத்திற்கும் அந்த ஓரிறைவன் கர்த்தர் தான் என்ற உண்மை தலைமுறை வளர்ச்சியாக வந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் தற்போது வெவ்வேறு இறைவனை மனிதர்கள் வணங்குவது எப்படி?

5. கணவன் மனைவி, சகோதரன் சகோதரி என்ற குடும்ப உறவுகளும், விவசாயம் பார்ப்பதும், விலங்குகளை மேய்க்கும் தொழிலும் மனிதன் தோன்றிய போதே வந்துவிட்டதா?

6. மனிதன் - நன்மை எது? தீமை எது? என்று தெரியாமலிருக்கவும், நிர்வான நிலையில் இருக்கவும்தான் இறைவன் விரும்பினானா? அப்படியெனில் பைபிள் எதற்கு?

இங்கே வள்ளலார் அவர்கள் ஏழு நாட்களில் உலகைப்படைத்ததின் உண்மையையும் மனித தோற்றம் பற்றியும் தமது உபதேசப் பகுதியில் தெரிவித்துள்ளதையும் நாம் காண்போம்,
  
"கிறிஸ்தவர்கள் 7 நாளில் இந்த உலகத்தைப் படைத்ததாகச் சொல்லுவதின் உண்மை - அது வல்ல - யாதெனில்: சில அனுபவ விஷயங்களை அது விரிக்கின்றது. கைந்நொடிப்பொழுதில் 60-ல் 7 பாகம் கலையில் முடிந்தது. மேற்படி கலைகளாவன பெண்பாகத்தில் 4, ஆண்பாகத்தில் 3 - ஆக 7. ஒவ்வொரு கலையில் தாது அணுவாய்ச் சேர்ந்து, 7-வது கலையில் கரு சம்பூர்ணமாய்ச் சப்த தாதுவுங் கூடிய பிண்டாகும்."


சப்த தாதுக்கள் என்பன, தோல், அஸ்தி, திசை, மூளை, சுக்கிலம், இரத்தம், இரசம் ஆகியனவாகும். இவ்வாறு இந்த ஏழு தாதுக்கள் கூடி மனித உடல் உருவாவதை தெரிவிப்பதுவே, கிறிஸ்துவர்களின் ஆதாம் ஏவாள் கதையின் உண்மை ஆகும் என வள்ளலார் அருளுகிறார்.
அடுத்ததாக, மனித தோற்றம் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? எனப் பார்ப்போம்,


சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம்.
அல்குர்ஆன் 15 : 26

"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?
அல்குர்ஆன் 19 : 67

அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25 : 54

அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.அல்குர்ஆன் 96 : 2

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.
அல்குர்ஆன் 30 : 20

மேற்கண்டவாறு இஸ்லாம் மதமானது மனிதத் தோற்றத்தை விளக்குகின்றது.

இங்கு நமக்கெழும் கேள்விகள் பலவற்றுள் சில,

1. சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் மனிதன் படைக்கப்பட்டான், தண்ணீரால் மனிதன் படைக்கப்பட்டான், கருவுற்ற சினை முட்டையிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என மூன்று வழிமுறைகளை இஸ்லாம் கூறுவதால், இதில் எது உண்மை எனத் தெரியவில்லை.

2. "தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் "ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்'' (அல்குர்ஆன்  3 : 47)
தமது படைப்புத் தொழிலை "ஆகு" என்று சொல்லியே அல்லாஹ் படைப்பதாக கூறப்பட்டுள்ளதால், மனிதனை மட்டும் அவ்வாறு "ஆகு" என்று சொல்லி படைக்காமல் போனதற்கு காரணம் என்ன?

3. மண்ணினால் வடிவமைக்கப்பட்டு மனிதன் பிறந்ததால், நமக்கெல்லாம் அந்த கருப்பு களிமண்தான் தந்தை எனச் சொல்லலாமா?

4. மனித உடம்பில் உள்ள எலும்பு, தோல், தசை, நரம்பு, முடி, கண்கள், இதயம், இரத்தம், நுரையீரல், கல்லீரல், குடல், இனப்பெருக்க உறுப்புகள், கருப்பை, கிட்னி, மூளை போன்ற உறுப்புகளை களிமண்ணால் செய்து அதனை களிமண் உடம்புக்குள்ளும் புறமும் வைத்து உருவாக்கப்பட்டது என்று சொன்னால் இதனை நம்பமுடியவில்லையே? இந்து மதத்தினர் பிள்ளையார் பிடித்த கதை போல் இது உள்ளதாக தோன்றுகிறது.

5. மற்ற உயிரனங்களையும் இப்படியே களிமண்ணால்தான் உருவாக்கப்பட்டதா? ஏனெனில் மற்ற உயிரினங்களிலும் மேற்கண்ட அனைத்து உறுப்புகளும் உள்ளனவே!


6. களிமண்ணால் மனிதனை படைத்த உடனே அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் அளித்தான் என்பது நம்பக்கூடியதாக இல்லையே. ஆதி மனிதர்கள், திருமண உறவின்றியும் இரத்த சம்பந்த உறவுகள் இன்றியும் காட்டு மிராண்டியாக அல்லவா இருந்தார்கள்.

7. மனிதன், முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றதே, அந்த நிலை எப்படிப்பட்டது? எந்த பொருளாகவும் இல்லாத நிலையில் எப்படி மனிதன் இருக்க முடியும்?

மனித தேகம் கிடைத்தது பற்றி வள்ளலார் கூறுவதைக் காண்போம்,

"ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது."

அதாவது ஒருவனுக்கு மனிதப் பிறவி எப்படி கிடைத்தது என்று கூறும்போது, ஒவ்வொரு பிறவியிலும் நாம் இறந்தப் பிறகு நமது ஆன்மா அடுத்த பிறவி பிறக்கும் வரையில் மண்ணில் மறைந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு ஒவ்வொரு கற்பத்திலும் ஒவ்வொரு பிறவி எடுத்து இறுதியாக நாம் இந்த கற்பத்தில் மனிதப் பிறவி எடுத்துள்ளதாக அருளுகின்றார்.

இறப்பிற்கும் பிறப்புக்கும் இடையில் நாம் இருக்கும் இடம் நரகமோ சொர்கமோ அல்ல. இந்த பூமியில் உள்ள மண்ணில்தான் மறைந்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார். இந்த மண்ணிலிருந்து ஆன்மாவானது நீர் வழியாக அம்மண்ணில் உள்ள வித்தில் ஏறி, பிறகு அந்த வித்தில் இருந்து முளைத்த தாவரத்திலிருந்து கிடைக்கும் காய் கனிகளில் சென்று, அக்காய் கனிகள் எந்த உடம்பின் வயிற்றுக்குள் உணவாகச் செல்கிறதோ அங்கிருந்து சுக்கிலமாகி அந்த உடம்பின் குழந்தையாக இம்மண்ணில் பிறவி எய்துகிறது என்பது வள்ளலாரின் தத்துவமாகும்.

இதன் உண்மைகளை இஸ்லாம் மதம் ஏற்காது. மறுபிறவியினை இஸ்லாம் நம்புவது இல்லை. இந்து மதத்தைப் போலவே சொர்க்கம், நரகம் என்பதனை கையாள்கிறது. வள்ளலார் சொர்க்கம் நரகம் என்பது இல்லை என்கிறார். நமது வினைக்கேற்ப நமக்கு அடுத்த பிறவி கிடைக்கும். இவ்வுலகில் பிறவி எடுத்து அனைத்து உயிர்களும் தனது முன்வினைக்கேற்ப அனுபவகிக்கும் இன்பத் துன்பங்களே சொர்க்கம் நரகம் என்பதே வள்ளலாரின் தத்துவம்.


இஸ்லாம், மேற்கண்ட வள்ளலார் கூறும் இவ்வுண்மைகளையே வேறு நடையில் "மண்ணில் இருந்து மனிதன் படைக்கப்பட்டான்" என்று கூறுவதாக நான் கருதுகிறேன்.

மனிதத் தோற்றத்தைப் பற்றி இந்து மதம் ஏதும் கூறவில்லை. இந்து மதத்தில் இல்லாத கதைகளே கிடையாது. அப்படியிருக்க இதற்கொரு கதையை யாரும் சொல்லாமல் விட்டது அதிசயமாக உள்ளது. சரி போகட்டும்.
 
அறிவியல் முதல் மனிதத் தோற்றத்தைப் பற்றி என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்,

சார்லஸ் ராபர்ட் டார்வின் (12-02-1809 - 19-04-1882) கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றின் பல எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட போது, அவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிந்தார். அவைகளைக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) எனும் நூலில் விவரித்துள்ளார். இதனை பரிணாமக் கொள்கையென கூறுகின்றார்கள். இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்புக் கொள்கையாகும்.

சார்லஸ் டார்வின் அவர்கள், மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.



சார்லஸ் ராபர்ட் டார்வின் அவர்களின் மேற்கண்ட தத்துவத்தை இந்து மதம் எதிர்க்க வில்லை. டார்வின் தத்துவத்தை இந்து மதமானது தமது "தசாவதாரம்" என்ற இறைவனின் அவதாரக் கதைகளில் ஏற்கனவே கூறியிருப்பதாக சொல்கிறது.

1)முதல் அவதாரம் - மீனாவதாரம்..இது நீரில் மட்டும் வாழும் தன்மை கொண்டது..

2)இரண்டாவது அவதாரம் - ஆமை அவதாரம்.. இது நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழும் தன்மை கொண்டது..

3)மூன்றாவது அவதாரம் பன்றி அவதாரம் - இது நிலத்தில் வாழும் உயிரினம் ..ஆனால் இது ஆமையின் அடுத்த பரிணாம வளர்ச்சியுடையது...

4)நான்காவது அவதாரம் நரசிம்மர் - இது மனிதன் பாதி மிருகம் பாதி.

5)ஐந்தாவது அவதாரம் - வாமன அவதாரம் - இது மனிதனின் முதல் பரிணாமம்.

6)ஆறாவது அவதாரம் - பரசுராமர் - இந்த அவதாரம் கையில் கோடாலியுடன் - இது தான் மனிதன் முதலில் உபயோகம் செய்த அயுதம்.

7) எழாவது அவதாரம் - ராமாவதாரம் ... இந்த அவதாரம் வில்லுடன் கூடியது .. வில் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகும்

8 & 9) எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரம் - பலராமர் மற்றும் கிருஷ்ணர்- இவர்கள் இருவரும் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியை வெளிபடுத்தினர் -- அது இவர்களுடைய போர் திறனில் வெளிப்பட்டது.

10) பத்தாவது அவதாரம் (எடுக்க போவது) கல்கி - இந்த அவதாரம் குதிரை மீது இருப்பதாகும்.. இந்த யுகத்தின் முடிவில் பெட்ரோலின் தட்டுபாடு வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றது. அதானால் தான் கல்கி அவதாரம் குதிரை மீது...

ஆகையால் டார்வினின் பரிணாம வளர்ச்சி தியரி  இந்து மதத்தில் ஏற்கனவே சொல்ல பட்டுள்ளது என்கிறது அம்மதம்.


மேற்கண்ட தசாவதாரத்தைப் பற்றி வள்ளலார் என்ன கூறுகிறார் என பார்ப்போம்,

மாலின் 10-வது அவதாரம் அயக்கிரீவ அவதாரம், அயம் என்பதற்குப் பொருள் பிராணவாயு, கிரீவம் என்பது கழுத்து, ஆகவே அயக்கிரீவம் என்பது பிராணவாயுவையே கழுத்தாகக் கொண்டது. இப்படியே மற்ற அவதாரங்கள் என்பவற்றிற்கு வெவ்வேறு பொருள் உண்டு.

வள்ளலார் அவர்கள் மேற்கண்ட பத்து அவதாரமும் தத்துவமே என்கிறார். தத்துவம் என்பது புறத்தில் உள்ளதாக கூறுவதெல்லாம் பொய். ஆனால் அவை நமது பிண்டத்தில் உண்மையாக உள்ளது என்பதைக் குறிக்கும். எனவே வள்ளலாரின் கூற்றுபடி தசாவதாரம் என்பது பொய்யாகும். (அயக்கிரீவம் என்பது கல்கி அவதாரம்.) இது நிற்க.

டார்வின் கூறிய தியரியை கிறிஸ்துவ மதமும் இஸ்லாம் மதமும் எதிர்க்கின்றது. ஏனெனில் இவர்களுக்கு என்று ஒவ்வொரு கதைகளை ஏற்கனவே தங்களது மறைகளில் கூறப்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். எனவே அதனை நியாயப்படுத்தவே முனைகின்றனர். எனினும் அவர்கள் டார்வினின் தியரி தவறு என எடுத்து வைக்கும் வாதத்திலும் உண்மை இருக்கவே செய்கின்றது. ஒரு இஸ்லாமிய நண்பர் இதனை தவறு என கீழ்காணுமாறு விளக்குகின்றார்,



எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனித னுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.


ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.

டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

'என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு' எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.

எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.
இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் - நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.

இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.

ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.

யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?

பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?

இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.

மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.

மேற்கண்டவாறு டார்வின் கொள்கையினை மறுத்துள்ளார் நமது இஸ்லாமிய நண்பர்.

இதற்கிடையில் ஆதி மனிதன் எங்கு தோன்றினான் என்கிற ஆராய்ச்சியும் உலகில் நடந்தவண்ணம் உள்ளது.
 
ஆதிமனிதத் தோற்றம் மத்திய கிழக்குப் பகுதியில் (இன்றைய சவூதி, பாலஸ்தீனம்) தான் அமைந்துள்ளது என அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஆழமான சிந்தனைக்குரியதாகும்.



ஆதிமனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர், என்றும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் பரவினர் என்றும் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வு ஆதி மனிதத் தோற்றம் மத்திய கிழக்கில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு பல ஆதாரங்களைத் தருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை இருந்து வந்த கருத்துகள் தொல்லியவாளர்களின் கருதுகோள்கள் யாவற்றையும் இந்த புதிய ஆய்வு மாற்றியுள்ளதாக, மானுடவியல் துறை அறிஞர்கள் கூறுகின்றனர்.

டெல்அவிவ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆதிமனிதத் தோற்றம் குறித்த ஆய்வுக்கு அறிஞர்கள் அவி கோஃபர் மற்றும் நான்பர்காய் ஆகியோர் தலைமையேற்றனர். இந்தக் குழுவினர் இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ரோஷ்ஹா அய்ன் என்ற இடத்திற்கு அருகில் உள்ளகெசம்குகையில் இன்றைய மனிதப்பற்களின் அமைப்போடு மிகவும் பொருந்திப்போகிற, 8 மனிதப் பற்களைக் கண்டு பிடித்துள்ளனர். இப்பற்களின் வயதை ஆய்வு செய்தபோது, இவை நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஆதிமனிதத் தோற்றத்திற்கான ஆதாரங்கள் இருநூறாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டவை. மத்திய கிழக்கில் கிடைத்துள்ள ஆதிமனித ஆதாரங்களோ நானூறாயிரம் ஆண்டுகள் தொன்மையானவை. இவை மத்திய பெலிஸ்டோசின் என்ற காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகின்றன.

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஆதிமனிதர்கள் 70ஆயிரத்திலிருந்து 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடபகுதி, மத்தியகிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக இதுவரைக் கூறப்பட்டது.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு, கடலோரப் பாதைகளைப் பயன்படுத்தி ஆதிமனிதர்கள் செய்த இடப்பெயர்ச்சி குறித்து, டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் தி ஜர்னி ஆஃப்தமென், (The Journey of the men) என்ற ஆவணப் படத்தைத் தயாரித்தார்.
 
இதுநேஷனல்ஜாக்ரபிக்தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பானது.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரரேலியாவுக்கு இடம்பெயரும்போது, இடையிடையே மனிதக் கூட்டங்கள் தங்கிவருவதும், பிறகு பல்கிப் பெருகுவதும், அவ்வாறு பயணித்தவர்களின் மரபணுக்களிடையே ஒற்றுமை இருந்ததையும், டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் வெளிப்படுத்தினார்.

இந்தப் பயண மார்க்கத்தில், தமிழகத்தின் மதுரையும் அமைந்திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை ஒரு கடலோர நகரம் என்ற செய்தி ஆச்சரியம் தான். இமயமலையே கடல் இருந்த இடம் என்பதற்கானத் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இமயமலையின் உச்சியில், கடல்தாவரங்களின் படிவுகள் கிடைத்துள்ளன. இறைவனின் படைப்பில் இப்படி ஏராள ஆச்சரியங்கள் உண்டு.

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் ஏராளமானவர்களின் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ், அலங்காநல்லூரைச் சேர்ந்த விருமாண்டி என்பவருக்கு ஆப்பிரிக்க ஆதி மனிதக் கூட்டத்தின் மரபணு தொடர்ச்சி இருப்பதைக் கண்டறிந்தார்.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதக் கூட்டம் பயணித்திருக்கலாம். ஆனால் ஆதி மனிதத் தோற்றம் ஆப்பிரிக்காவில் தான் நிகழ்ந்தது என்பதற்கு எதிரான பல ஆதாரங்களை இன்றைய ஆய்வுகள் வெளிக்கொணர்கின்றன. மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று கூறும் குறைமதியாளர்கள் ஆப்பிரிக்காவின் கடும் வெப்பம், வேறுநிலையில் இருந்து மனித நிலைக்கு வர உதவியதாகச் செல்வதுண்டு.

எனவேதான், ஆப்பிரிக்காவில் தான் மனிதத் தோற்றம் நிகழ்ந்திருக்க முடியும் என்று கூறினர். சமீபகால ஆய்வுகளில் ஸ்பெயினிலும், சீனாவிலும் கிடைத்த ஆதாரங்கள், ஆப்பிரிக்காவில் ஆதி மனிதன் தோன்றியதைக் கேள்விக் குள்ளாக்கின.

மத்திய கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டு நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படும் மனிதப் பற்கள் தான் இன்றைய மனிதப் பற்களோடு அமைப்பால் பொருந்தி இருப்பதைஅமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்கல் ஆந்த்ரோ போலஜி, என்ற ஆய்வுப் பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கின் ஆதி மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்த வேட்டையாடவும், சுரங்கம் தோண்டவும், அறிந்திருந்ததாகக் கூறும் ஆய்வாளர் குழு, சிறப்பான சமூக வாழ்வை ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கும் ஆதாரங்களை அளித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்சர் பால் மெல்லர்ஸ் உள்ளிட்ட மானுடவியல் நிபுணர்கள், மத்திய கிழக்கில் ஆதிமனிதத் தோற்றம் நிகழ்ந்ததாகக் கூறும் ஆய்வு முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

என்ன அன்பர்களே, ஒரே குழப்பமாக உள்ளது இல்லையா?

1. பரமபிதாவால் படைக்கப்பட்ட ஆதாம் முதல் மனிதனா?
2. அல்லாவால் படைக்கப்பட்ட களிமண் மனிதன் முதல் மனிதனா?
3. டார்வின் கூற்றுபடி குரங்கில் இருந்து பிறந்தவன் முதல் மனிதனா?
4. ஆப்பிரிக்காவில் பிறந்தவன் முதல் மனிதனா?
5. சவூதி அரேபியாவில் பிறந்தவன் முதல் மனிதனா? 

மதங்களுக்கு உள்ளே இருப்பவர்கள் அந்தந்த மதக்கருத்தினை உண்மை என நிரூபிக்கின்றனர். அறிவியலுக்கு உள்ளே இருப்பவர்கள் அறிவியல் கூறுவதை உண்மை என நிரூபிக்கின்றனர். சில ஆன்மீக வாதிகள் முதல் மனிதனின் உருவாக்கம் இறையாணையன்றி வர வாய்ப்பே இல்லை. எனவே அவன் எப்படி வந்தான்? எங்கு வந்தான்? என்பது தேவையற்றது என எண்ணுகின்றனர்.



மனிதனாவன், தமது ஆதியை தேடி கண்டுபிடிக்கும் அளவிற்கு இறைவன் அந்த ஆதியின் அடையாளங்களை இப்புறவுலகில் ஏற்படுத்தி வைக்கவில்லை என்பதே எமது கருத்தாகும். எனவே ஆதியின் அற்புதங்களை மதங்களும், அறிவியலும் நிச்சயமாக கூறமுடியாது. மதங்களும் அறிவியலும் இதுவரை கூறியதெல்லாம் பொய் பொய்யே. மனிதன் ஆதிமூலம் நமது அகத்திலேதான் உள்ளது. முயன்று கண்டுபிடியுங்கள். ஆன்மீக இரகசியங்களில் எது ஒன்றும் நமது அகத்திலே அன்றி புறத்திலே தேடினால் கிடைக்காது. புறத்திலே கூறவேண்டும் என்றால், அந்த முதல் மனிதன் நீங்கள்தான்!!! நீங்கள் இயற்கை உண்மையில் இருந்து உருபெற்று வந்துள்ளீர்கள்!!! அந்த இயற்கை உண்மைக்கு மரணம் இல்லை. அழிவு இல்லை. எல்லாம் இயற்கை உண்மை மயம்தான். அதுதான் நமக்கெல்லாம் ஆதியாக உள்ளது.