Monday, February 29, 2016

"சன்மார்க்க விவேக விருத்தி" - மார்ச் 2016





அன்புடையீர் வந்தனம்!

"சன்மார்க்க விவேக விருத்தி" என்னும் மின்னிதழ் மாதந்தோறும் ஒன்றாந் தேதி வெளியிடப்படுகின்றது. மார்ச் 2016-ஆம் மாதத்திற்கான மின்னிதழை நீங்கள் கீழே உள்ள இணைப்பை சுட்டி பெற்றுக்கொள்ளலாம். நன்றி.



https://ta.wikipedia.org/s/4scl

மார்ச் மாத மின்னிதழில் நீங்கள் படிக்க இருப்பது....

1. கெளரவ ஆசிரியர் திருவருட்பிரகாச வள்ளற்பிரானின் உபதேச குறிப்பும் அதற்கு ஆசிரியரின் சிறு விளக்கமும்.
2. சியாச்சின் சிதறல்கள்
3. சிவராத்திரியின் உண்மை
4. சுத்த சன்மார்க்கர் திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "வள்ளலாரைப் புரிந்துக்கொள்ளுங்கள்" தொடர்...
5. அருள்திரு.சீனிசட்டையப்பர் எழுதிய சன்மார்க்க குரவர் நால்வரில் கல்பட்டு ஐயாவின் வரலாற்றுத் தொடர்...
6. திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய "இந்து மதம் எங்கே போகிறது?" தொடர்
7. காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா எழுதிய "சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்" தொடர்
8. "இராமலிங்க அகவல்" தொடர்
9. "சிவபெருமானும் வள்ளற்பெருமானும்" தொடர்
10. கண்மூடி வழக்கம்
11. மாதம் ஒரு மகான்
12. சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி
13. சத்விசாரம்
14. சுத்த சன்மார்க்க நீதி
15. மார்ச் மாதத்தில் அன்று
16. "கிறிஸ்து", "இஸ்லாம்", "புத்தம்" மற்றும் "சமணம்" போன்ற மதங்களின் கருத்துக்கள்.
17. கடவுளைத் தேடி...
18. ஆங்கில மொழிபெயர்ப்பில் தொடராக வருகிறது, வள்ளலார் போதித்த பேருபதேசம்.

மற்றும் சில விளம்பரங்களுடன்.... மார்ச் மாத மின்னிதழ் உங்களின் சிந்தனையை சன்மார்க்கத்தின்பால் ஈர்க்கும். படிக்கத் தவறாதீர்கள்...

Saturday, February 20, 2016

தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின் 127-ஆம் ஆண்டு நினைவுதினம்



வள்ளலாரின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின் 127-ஆம் ஆண்டு நினைவுதினம்:

 

'நம் பிள்ளை நமக்குக் கிடைத்தாய்' என்று வள்ளற்பெருமானின் சொல்லில் ஆட்கொள்ளப்பட்டவரும், திருக்குறள் பாடத்தை வள்ளற்பெருமான் சொல்லிற்கிணங்க நடத்தியவரும், வள்ளற்பெருமானின் பாடல்களை திருவருட்பா எனவும் அதனை ஆறு திருமுறைகள் என வகுத்தவரும், தம் குருநாதருக்கு திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயர் வைத்தவரும், வள்ளற்பெருமானால் உபயகலாநிதி பெரும் புலவர் என்ற பட்டத்தை பெற்றவரும், வள்ளற்பெருமானின் முதல் மாணாக்கருமான "தொழுவூர் வேலாயுத முதலியார்" அவர்கள் 21-02-1889-ஆம் ஆண்டு வள்ளல் மலரடியில் மலர்ந்தார். பெருமகனாரின் 127-ஆம் ஆண்டு நினைவுதினம் நாளைய தினம் மலர இருக்கின்றது. சன்மார்க்க அன்பர்கள் அன்றைய தினம் அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்து குருவருள் பெற முயலவும். உலகில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்களிலும் அங்குள்ள அனையா தீபத்திற்கு அருகில் பெருமகனாரின் நினைவாக அன்றைய தினம் ஒரு ஜோதி ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அங்குள்ள அறிவிப்புப் பலகையில் பெருமகனாரின் நினைவு தினத்தை குறித்து வைக்க வேண்டும். சிறப்பு அன்னதானம் வழங்குதலும் நல்லது. இப்படி எவ்வகையிலாவது அன்றைய தினம் பெருமகனாருக்கு நாம் நமது நன்றியினை தெரியப்படுத்த வேண்டும். இவரது ஜீவசமாதி சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது. அந்த சமாதி நிலையம் ஒரு பள்ளிக்கூடத்தில் யாரும் கவனிக்காத நிலையில் விளங்கி வருகிறது. அதனை வடலூர் தலைமை நிலையம் ஏற்று அதனை பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும். வள்ளற்பெருமானும் இதற்கு தக்க முயற்சி எடுப்பார் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமும் நமது விண்ணப்பத்தை வைப்போம்.

தொழுவூரார் மனைவிக்கு வள்ளற்பெருமான் செய்த சோதனை:-

வடலூரில் தொழுவூரார் மனைவி சீரங்கம்மாள் நகை இல்லையே என்று வருந்தியது உணர்ந்து நம்பெருமான் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார். சில நாளில் அந்த நகை களவு போய்விட்டது. அது கேட்டு வருந்திய வள்ளல் 'நகை களவு போனபோது என்ன சொல்லி அழுதார் என்று கேட்டார்." என் நகை, போனதே என்று அழுதார் என்றனர். "சாமி நகை போனதே என்று சொல்லி இருந்தால் சாமி காத்திருப்பார்." என்று பூடகமாகச் சொல்லி வள்ளல் சிரித்தார்.

தொழுவூரார் மகனுக்கு வள்ளற்பெருமான் கொடுத்த ஆற்றல்:-

புதுச்சேரி தந்தி அபீஸ் மானேஜர் பிநாகபாணி முதலியார் (ஏழெட்டு பாஷையில் வல்லவர்) "வெறுங்கும்பல் சேர்ந்து சும்மா சாப்பிட்டு விட்டுப் பொழுது போக்குகின்றார்கள்" என்று சாலையிலுள்ள கூட்டத்தாரைச் சிறிது இகழ்ந்தனர் என்ப. அவர் வள்ளலாரிடம் வருவதற்கு முன்னரே வள்ளலார் 'ஒருவர் புத்திசொல்ல வருகிறார்' என்றனர். முதலியார் வந்து அரைமணிநேரம் அவ்விஷயமாகவே பேசியபின் வள்ளலார், தொழுவூர் முதலியாருடைய மகனாகிய திருநாகேச்சரம் என்னும் நான்கு வயதுள்ள சிறுவனைத் தன்கையாற் பிடித்துப் பிநாகபாணி முதலியாரெதிரே நிறுத்தி 'உமக்கு எத்தனை பாஷைகள் தெரியும்' என்ன, ஐந்தாறுபாஷை தெரியும் என்றனர். வள்ளலார் 'எந்தப் பாஷையில் எந்த விஷயம் வேண்டுமானாலும் இந்தப்பிள்ளையைக் கேளுங்கள்' என்றனர். முதலியார் மூர்ச்சையாகி ஊமையாயினர். வள்ளலார் சிறிது நேரம் பொறுத்துப் பொறுத்து ஏழுதரம் "கேளும், கேளும்" என்றனர். அரை மணி நேரம் கழித்து மன்னிக்க வேண்டுமென்று முதலியார் நினைக்கவே  வள்ளலார் 'பிச்', என்ற வுடனே வாய்திறந்து பேசி வணங்கிச் சென்றனர்.




Thursday, February 18, 2016

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் துதி

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் துதி

தி.ம.இராமலிங்கம்

(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

சுத்த சன்மார்க்கம் சுகம் பெறவே
    சத்தியன் என்னை சகத்தே வைத்து
சித்த னாக்கிய செங்கழுநீர் அம்மனே
    சுயஞ் ஜோதியாகி சுடர் ஓங்கி
எத்திக்கும் அருளை அளித்துக் காக்கும்
    எங்கள் குலதெய்வ ஒளியே திரு
முத்திரையர் பாளைய மணி ஒலியே
    மரண மில்லாநிலை மகிழ்ந் தருளே.        1

அருட்பெருஞ் ஜோதி அருள் பெறவே
    அன்னை எனவந்த மர்ந்த நல்மலரே
உருவ மில்லா உண்மைப் பொருளாய்
    உள்ள மினிக்கும் என்தனித் தாயே
திருமுத்திரையர் பாளையம் திக ழொளி
    தயவால் என்னை தூயனாக்கி அன்றே
கருவில் செங்கழுநீராய் கலந்த அம்மனே
    கண் நிறைந்த கருணை வடிவே.            2

சுவர்ண தேகியே செங்கழுநீர் அம்மையே
    சுக மளித்து சீர்செய்யும் சிற்ஜோதியே
புவன சுந்தரியாகி புகழோங்கு முத்திரையர்
    பாளையம் அமர்ந்த புண்ணியத் தாயே
தவம் உடையார்க்கு தருகின்ற வரத்தை
    தயவில்லாத எனக்கும் தந்த தருவே
கவர்ந் திழுக்கும் காந்தக் கனலேஎன்
    குலதெய்வக் குடிலே கருணைக் கடலே.    3

செங்கழுநீர்த் தாயேஎன் செங்கமலப் பூவே
    சிந்தாதத் தேனே சிந்தைசெய் தேனே
மங்காத ஒளியே மார்கழிக் குளிரே
    மலர்ந்த முகமே மங்கையர் மாண்பே
தங்கமே அங்கமாகித் தகிட தகிடவென
    தில்லையில் ஆடியத் திருத் தாள்களே
எங்கள் குலதெய்வ முத்திரையர் பாளைய
    இடம் வசிக்கும் இனிய உறவே.            4

எனக்குற்ற தந்தையாகி ஈன்றத் தாயாகி
    இன தெய்வமாகி கற்பிக்கும் குருவாகி
மனம் மகிழும் மனைவியாகி எனக்கேற்ற
    மணாளனாகி பெற்ற மக்களாகி ஈட்டும்
தனமாகி என்னைத் தாங்கும் நண்பனாகி
    தான் தோன்றிய முத்திரையர் பாளைய
சனமாகி உலகாளும் செங்கழுநீர் அம்மனே
    சுயம்பு தேவியே காத்தருள் நீயே.        5

அகண்ட வெளியாகி அணுவுள் அணுவாகி
    ஆனந்தக் காற்றாகி இன்றாகி நாளையாகி
பகலாகி இரவாகி பார்முழுதும் நீயாகி
    பிறக்கின்ற உயிராகி பார்க்கின்ற பொருளாகி
இகமாகி பரமாகி யார்க்கும் உறவாகி
    இங்கெனக் கமைந்த குலதெய்வ மாகி
சிகரமாகி ஓங்கும் செங்கழுநீர் அம்மனே
    சீர் பெற்ற முத்திரையர் பாளையமே.        6

கல்வியும் செல்வமும் கைநிறைய தந்திடும்
    காத்திடும் அரசியல் அதிகாரமும் வந்திடும்
பல்லோர் போற்றும் புகழும்வந் தெய்திடும்
    புண்ணிய செயலாம் தருமமும் செய்திடும்
நல்லதோர் வாய்ப்பும் நன்றாய் அமைந்திடும்
    நாடெல்லாம் சுற்றிடும் நாளும் நாடிடும்
எல்லோரும் முத்திரையர் பாளையம் வந்திடும்
    அந்நாளே செங்கழுநீர் அம்மன் தந்திடுமே.    7

சித்தம் ஒன்றாகி சிந்தித்து இருப்போர்முன்
    சத்த மின்றி சடுதியில் வருவாயே   
பித்தம் போக்கியே புண்ணியச் செயலால்
     பற்று நீக்கும் செங்கழுநீர் அம்மனே
முத்திரையர் பாளைய மாமணியே எந்தன்
    முக்திக்கு முந்தி முன்னிற் பவளே
முத்தேகம் எடுக்க மன்றாடும் என்னில்
    மலர்ந்து வாசம் வீசுகின்ற முப்பூவே.        8

தொட்டகுறை இதுவோ தாயே நானுமுன்
    தாள் வணங்கிப் பாடியது தீதுறுமோ
விட்டகுறை எதுவோ வள்ளற் பெருமானை
    விழைந்த நான்இனி விடுவேன் உனையே
துட்டனென நினையாது மகனை மன்னித்து
    துக்கமேதும் வாராது காப்பாய் எனையே
சிட்டம் நீக்கவே முத்திரையர் பாளையம்
    செங்கழுநீர் அம்மன் உன்னை பாடினேனே.    9

மக்களெல்லாம் நோயற்று மகிழ்ந்து வாழவே
    மங்கள தீபமாய் இருந்து காப்பாய்நீயே
எக்காலமும் உயிர்கள் இன்புற்று வாழவே
    எங்குமாய் விளங்கி துன்பம் துடைப்பாய்நீயே
சக்கரமாய் இருந்து உலகை முன்னேற்றி
    சுத்த சன்மார்க்கம் விரைந்து சார்வாய்நீயே
தக்கநேரம் இதுவே முத்திரையர் பாளையம்
    தாண்டி செங்கழுநீர் அம்மனே வருவாயே.    10

Monday, February 8, 2016

சன்மார்க்க விவேக விருத்தி



சன்மார்க்க விவேக விருத்தி

அன்பர்களே!

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமான் அருளிய "சன்மார்க்க விவேக விருத்தி" என்கிற மாதாந்திர மின்னிதழ்களை கீழ்காணும் இணைப்புகளை சுட்டி பதிவிறக்கம் செய்து படித்து பயனுறலாம்.

ஆகஸ்ட்-2015
http://www.vallalarspace.com/user/c/V000018145B
செப்டம்பர்-2015
http://www.vallalarspace.com/user/c/V000018398B
அக்டோபர்-2015
http://www.vallalarspace.com/user/c/V000018772B
நவம்பர்-2015
http://www.vallalarspace.com/user/c/V000019017B
டிசம்பர்-2015
http://www.vallalarspace.com/user/c/V000019587B
ஜனவரி-2016
http://www.vallalarspace.com/user/c/V000019795B
பிப்ரவரி-2016

அல்லது கீழ்காணும் இணைப்பிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆகஸ்ட்-2015
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWdFp5bmVfejVCY2M/view?usp=sharing
செப்டம்பர்-2015
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWSDQ0c2VfUGlWVDA/view?usp=sharing
அக்டோபர்-2015
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWczBpd0gwN1lsajQ/view?usp=sharing
நவம்பர்-2015
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWM1ZjTzNlQWIyTWc/view?usp=sharing
டிசம்பர்-2015
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWTmlKS2pIYnpxSm8/view?usp=sharing
ஜனவரி-2016
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWOVVIdXdfeE04Tlk/view?usp=sharing
பிப்ரவரி-2016
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWaFZBN3poemJhV2s/view?usp=sharing

இராமலிங்க அந்தாதி - 701-800



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                      இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா


ஆடுகின்ற திருவடியில் அன்பு கொண்டு
பாடுகின்றேன் திருவருள் பாடலே - நீடு
வாழவே காதலாகி வந்தேன் ராமலிங்கமே
வீழ வைக்குமோ வினை.

வினை செய்யும் வீண் செயலெல்லாம்
எனை விட்டு ஓடியதுகாண் - நினையே
காதல் புரிந்து கசிந்தேன் ராமலிங்கமே
சாதல் எனக்கில்லைநீயே சான்று.

சான்றாகிய மூன்றையும் சாமிக்கே கொடுத்து
நான்என்ற நாயை நகைத்தேன் - ஊன்செய்
காதலை உயிர்க் காதலாக்கி ராமலிங்கமே
மாதவம் புரிந்தேன் மண்ணில்.

மண்ணில் எடுத்த மலமொத்த தேகத்தை
எண்ணில் மண்ணும் ஈடாகாது - கண்ணே
மணியேஎன காதல் மொழியால் ராமலிங்கமே
அணிசெய்ய வந்தேன் உன்னை.

உன்னை நினைந்து உள்உருகிக் காதலால்
என்னையே தந்தேன் உனக்கு - உன்னுடல்
பொருள் ஆவியை புனைய ராமலிங்கமே
அருள் செய்வாய் எனக்கு.

எனக்கும் உனக்கும் இசைந்தக் காதலால்
தினமும் பாடுவேன் திருவருளை - கன
நேரமும் காதலாலுனை நாடி ராமலிங்கமே
பேரதிசம் புரிவேன் பாராய்.

பாராமுகங் காட்டும் புண்ணியா நானுனை
நேராய்ப் பார்க்கும் நாள்தான் - வாராமல்
போனால் திருவருள் பாடுமோ ராமலிங்கமே
ஊனாகி உயிராகி உளன்.
உளமுனது வசம் உறைந்து காதலால்
களவு கண்டு களித்தேன் - அளவின்றி
கொடுத்த பொற் கரங்களை ராமலிங்கமே
எடுத்து ஒற்றினேன் எந்தாய்.

என்தனி அன்பே என்னுயிர்க் கலப்பே
என் இறையாம்காதலே என் - துன்பம்
போக்கும் அரும் பொருளே ராமலிங்கமே
தூக்கம் போனது தூரம்.

தூரம் என்றிருந்தேன் தலைவாநீ அருகே
ஈரமாய் இருப்பதை அறியேன் - தாரமாய்
நானிருக்க உனக்கு நாணமோ ராமலிங்கமே
வானில்லாத இடத்தில் வரவா.                           710

வரமொன்று கேட்டு வந்தேன் என்காதலா
தரமன மில்லையோ தலைவா - இரக்கம்
உனக்கே இல்லை என்றால் ராமலிங்கமே
எனக்கேது அந்த அருள்.

அருளின் பொருளே அன்பின் குணமே
கருவின் அணுவே காதலிலே - உருகி
பசலை வந்தது பாராய் ராமலிங்கமே
அசதி கொடுப்பது அழகோ.

அழகே என்அறிவே ஆருயிர் பதியேநீ
அழவைத்து எனை அடிப்பது - அழகோ
காதலால் உனைக் கூடவே ராமலிங்கமே
நாதமுடி கடந்தேன் நான்.

நான்தானே உந்தன் நடன அழகிஐயா
ஏன்என் நடத்திற்கு இரங்காய் - வான்
போல அம்பலம் பாராய் ராமலிங்கமே
காலமின்றி கலந்து கூடாய்.

கூடும் சுகத்தைக் கூட்ட வருவேன்
ஆடும் அடிக்கு அணியாய் - ஏடு
நிறையப் பாடி நிற்பேன் ராமலிங்கமே
இறைமுடி காண இன்பம்.

இன்பச் சோலையிலே இனிய மலராக
அன்புத் தேனுடவே இருந்தேன் - பொன்
வண்டென நீயே வருவாய் ராமலிங்கமே
கண் மூடாது காத்திருப்பேன்.

காத்திருக்கும் காலத்தில் காலன் வந்திடுமோ
நாத்திகக் காதல் நடந்திடுமோ - ஆத்திரத்தில்
உயிர் விடும் உணர்ச்சியுறுமோ ராமலிங்கமே
பயிலேன் சன்மார்க்கப் பாடம்.

பாடங் கேட்கவே பறந்தோடி வந்தே
மாட மேறினேன் மன்னா - ஆடக
ஒளியில் உன் அழகை ராமலிங்கமே
களித்து காதல் கற்றேன்.

கற்றதெல்லாம் நலனே காதலாகி நான்
பெற்ற தெல்லாம் பயனே - உற்றமொழி
உரைத்த நின்பாத அடியில் ராமலிங்கமே
கரைந்தே இருக்கக் கடவேன்.

கடவுள் நிலையறிந்து கடவுளாகும் ஓர்
நடனத்தை எனக்கே நல்கினாய் - உடல்
நிலைக்கவே உயிர் நிற்க ராமலிங்கமே
வலை யிட்டு வைத்தேன்.                               720

வைத்தியம் பார்த்து வெந்ததைத் தின்று
பைத்தியம் போல் பாடைஏறேன் - கைத்
தலமிருகப் பற்றி தீர்வேன் ராமலிங்கமே
உலகம் நாமின்றி உருளாது.

உருவம் மறையும் உண்மையை எனக்கு
கருவிலே சொன்ன காதலா - இருளும்
மறைக்க அருளும் மறைக்க ராமலிங்கமே
இறையுள் மறைய இசை.

இசை யமுதினை இசைக்காது காதலால்
அசையும் மனதை அசைக்காது - தசை
தடவ ஆசையுற்று துவள ராமலிங்கமே
மடயனுக் களித்தாய்நவ மணி.
  
மணி அறிந்தேன் மந்திரமும் அறிந்தேன்
பணியும் அறிந்து பாடுகின்றேன் - பிணி
மூப்பு மரணமிலா மருந்தை ராமலிங்கமே
காப்பாய் எனக்குக் கொடு.

கொடுக்க கொடுக்க காதல் பெருகுதே
ஒடுக்கநிலை எனைவந் தாளுதே - தொடுத்
தப்பாட்டில் திருவருள் தீண்டுதே ராமலிங்கமே
எப்பாலவர்க்கும் நாமே இறை.

இறைவனே என்னுயிர் உடையானே ஏழ்
மறைதிரை நீக்கும் மாயோனே - குறை
யில்லாக் காதல் இன்பமே ராமலிங்கமே
எல்லா உயிரு மானேன்.

ஆனவரைப் பாடியே ஆண்டவனு மாவேன்
போனப் பிறவிபோல் போகேன் - ஊனக்
கண்ணுக்குத் தோன்றா கதியை ராமலிங்கமே
எண்திரை விலக்கி அளி.

அளித்த மரணங்களுள் அம்மரணமே இறுதி
புளித்துப் படுத்தேன் பாடைதோறும் - வளி
யெனவந்தேன் வீழேன் இனி ராமலிங்கமே
கனக தேகங் கொண்டேன்.

கொண்ட கோலமதில் கண்டிடுவே னுனை
தொண்ட னெனக்குநீயே துணை - கண்
ணிரண்டில் கலந்த ஒளியே ராமலிங்கமே
இரக்கம் இருக்க இறவேன்.

இறப்பதற்கா பிறந்தோம் என்ற கேள்வியை
உறவோடு கேட்டு உணர்த்தினாய் - அறங்
காவல் புரியும்திரு கருணீக ராமலிங்கமே
ஏவல் செய்வேன் உன்னடிக்கு.                           730

அடியும் முடியுமில்லா அண்ட விலாச
மடியைத் தொட்டு முத்தமிட்டு - இடி
மின்னல் காற்றை முகர்ந்து ராமலிங்கமே
இன்ன லின்றி இருப்பேன்.

இருக்கும் சூரியசந்திர எல்லைக் கப்பால்
ஒருபெரும் பரமாகாசம் உள்ளது - மரு
தூர்தலை வன்ஆங் குள்ளான் ராமலிங்கமே 
ஓரிறைவன் இடம் அது.

அதுவிருக்கு மிடத்தில் அண்ட கோடிகளாய்
மதுகுடித்தார் போல் மயங்கினேன் - எது
வென்று அறிவேன் அவனை ராமலிங்கமே
அன்று சொன்ன அருட்ஜோதியது.

அருட்ஜோதி ஆடுகிற அம்பலம் கண்டு
ஒருமையில் நின் றிருந்தேன் - அருமை
பதிக ளெல்லாம் புறமிருக்க ராமலிங்கமே
மதித் தெனையே மணந்தான்.
மணஞ்செய் வல்ல மணாளா உனையன்றி
பண முடையாரைப் பார்ப்பேனோ - குணம்
வேறாயினு மெனை விரட்டாய் ராமலிங்கமே
ஈறேழு உலகமும் ஈந்தாய்.

ஈந்த அத்தருணம் என்னிலை மறந்து
சாந்த சித்தம் சென்றேன் - காந்தக்
காதலால் கவர்ந்து காமுற்று ராமலிங்கமே
சாதனம் என்று சாய்ந்தேன்.

சாய்என்றப் பெயரைச் சூட்டி நாயாகிப்போன
தாய்க்குல மரபானதே தமிழ்க்குலம் - பேய்
பிடித்தப் பிள்ளையைப் பாராய் ராமலிங்கமே
குடிப்பெய ரில்லையோ கூறாய்.

கூறிய வாய்மொழி கொதிப்பெலாம் குளிர்ந்து
ஆறின உன்சத்திய அருட்பாவால் - ஏறிய
சமயமத சாதி சழக்கெலாம் ராமலிங்கமே
இமயம் விட்டு இறந்தன.

இறந்தாலும் உன்னடியில் இறப்பேன் இனிநான்
பிறந்தாலும் உன்மடியில் பிறப்பேன் - உறவு
உனையன்றி வேறு அணையேன் ராமலிங்கமே
நினைவாகி இறவாமல் நிற்பேன்.

நிற்கும் அழகால் நின்றன கண்கள்நீ
விற்கும் பொருளை வாங்கி - நற்
குலமாக ஆகக் கண்டேன் ராமலிங்கமே
மலங்கள் வீழ மலர்ந்தேன்.                              740

மலர்ந்த மலரொன்றை மணந்து எனக்கே
குலமோங்க கொடுத்த கணவா - உலகம்
வியக்க வந்தஎன் வானவா ராமலிங்கமே
இயக்கம் நீயன்றி இல்லை.

இல்லை என்பதில்லை இனிநீயன்றி எனக்கேது
மில்லை இறப்பதற்கும்நான் இல்லை - எல்லை
என்ற காலமும்எனக் கில்லை ராமலிங்கமே
உன்பெயருக் கோர் இழிவில்லை.

இழிவு சொல்லாத இனியசெந்நாப் புலவனே
அழிவு அறியாமுத்தேக அறிஞனே - குழியில்
வீழாத செங்கோல்மா வீரனே ராமலிங்கமே
ஊழான உலகம் உனக்கில்லை.

உனக்கும் எனக்குமோர் உறவுண்டு அது
மனத்தால் கூடும் மணவுறவு - இனமும்
பெயரும் குணமும் பொருந்த ராமலிங்கமே
உயர்ந்து வாழ்வோம் உலகில்.

உலகெலாம் நீயெஎன உணர்ந்து ஓதியே
பலமெலாம் நான் பெற்றேன் - சிலகாலம்
வாழ்ந்து செல்ல வரவில்லை ராமலிங்கமே
ஊழி தோறுமூழி ஓங்கினேன்.

ஓங்கிய முச்சுடர் ஒளிகளும் என்னைத்
தாங்கிய அத்திரு தாள்களும் - வாங்கிய
முத்தேக வடிவமும் முறையே ராமலிங்கமே
நித்தியனான உனக்கே நல்கினேன்.

நல்கியதிரு வருள்யாவும் நாட்டில் பலர்
பல்கியே வாழப் பாடினேன் - எல்லா
உயிரும் இன்புற்று உயரவே ராமலிங்கமே
பயில் வித்தப் பாட்டிது.

பாட்டிலே பொருளாய் பொருளிலே அருளாய்
ஏட்டிலே எழுத்தாய் இருப்பவனே - நாட்டிலே
திருவருள் படிப்பாரைத் திருத்தி ராமலிங்கமே
குருவருள் புரிவாய் குளிர்ந்து.

குளிர்ந்தக் கண்களால் காதலை செலுத்தி
அளித்த சுகத்தை என்னென்பேன் - வளி
மண்டல வானமும் மிரள ராமலிங்கமே
அண்டமும் அழுதது இன்பத்தில்.

இன்பமே இனிதுன்பம் இல்லை உலகீர்
அன்பினால் அவனை அழைத்து - தன்
குறை இயம்ப கடவுளாய் ராமலிங்கமே
அறை திறந்துவந்து அருள்வான்.                         750

அருள்வாய் விரைந்து என்முகம் பார்க்க
வருவாய் மகிழ்ந்து வருக - இருத்தல்
எத்தனை நாளோ அறியேன் ராமலிங்கமே
பத்து மாதம் போலானேன்.

ஆனவரை ஆற்றி இருந்தும் இன்னும்
போனவரை நேர் பாரேன் - ஏனவர்
என்மீது கோப முற்றார் ராமலிங்கமே
என்றும் உனக்காக ஏங்குவேன்.

ஏங்கும் ஏழையின் உள்ளம் அறியாது
ஆங்கே அறையில் என்னவேலை - ஓங்கி
வளர்ந்தக் காட்டில் வாடுகிறேன் ராமலிங்கமே
இளமையில் கூட எழுந்திரு.

எழுந்தோடி வந்து ஏக்கப்பெரு மூச்சுவிட்டு
அழுத முகத்துடன் அடைந்தும் - தழுவ
மனமில்லை ஏனோ மன்னவா ராமலிங்கமே
தனம் விம்மியும் தயவில்லை.

தயவுக்கு தலைவனே தருமத்தின் தலைவனே
நயமாய் அழைத்தும் நினைவில்லை - பயன்
கருதிப் பாடிலேன் கருணீககுல ராமலிங்கமே
குருதி ஓட்டத்தால் குறித்தேன்.

குறித்துப் பாடினும் காதலால் வளைத்து
கூறினும் என்ன கண்டேன் - நாறிடுமென்
உடம்பு நாறுமோ அழியுமோ ராமலிங்கமே
இடமின்றி இருக்கவே இச்சை.

இச்சை ஒன்றுண்டு அதுஎன்கால சக்கர
அச்சை காண்பதன்றிவே றல்ல - பச்சை
விலகியப் பின் வருவான் ராமலிங்கமே
நிலவுலகு காட்டி நிற்பான்.

நிற்கவோ தயவில்லை நடக்கவோ சுதந்தரமில்லை
கற்கவோ அறிவும் காலமுமில்லை - விற்கவோ
பொருளில்லை இந்தப் பாவிக்கு ராமலிங்கமே
அருளு மில்லையோ உன்னில்.

உன்னையே கதியென்று ஊர்தோறும் சொல்லி
என்னையே கொடுத்து இறந்தேன் - அன்பாய்
இறந்தோனை எழுப்பி அருளும் ராமலிங்கமே
மறவேன் என்றும் மறியேன்.

மறிந்தோ ரெல்லாம் மாண்புற மண்ணுலகம்
அறிய எழுந்துவரும்கால மிது - வறியோரும்
செல்வராகி இன்பம் சூழக்காண ராமலிங்கமே
எல்லாம் செய்வான் இனி.                               760

இனியொரு விதியும் எனக்கான நற்கதியும்
கனியக் காத்திருக்கும் கைக்கிளை - தனிப்
பெண் என்னை பார்க்காமல் ராமலிங்கமே
கண்மூன்றி ருந்தும்பயனேது காண்.

காண்பது கானலாய் காதலும் ஒருதலையாய்
வேண்டு வதெல்லாம் விழலாயாகாது - தூண்டி
எனைப் பாடவைத்த என்னில் ராமலிங்கமே
சினையாய் வர சிந்தைசெய்.

சிந்தனை ஒன்றாகி சிற்சபைத் தலைவனை
வந்தனம் செய்து வரவேற்றேன் - சந்தனம்
பூசி நறுமணப் பன்னீர்த்தூவி ராமலிங்கமே
ஆசிபெற உனை அலங்கரித்தேன்.

அலங்கரித்தேன் சபையை ஆடல் புரிந்து
கலந் திருக்கக் கருதாயோ - நலமோடு
உடலுடன் உயிர் உறவாட ராமலிங்கமே
கடலூர் வருக களித்து.

களித்திருக்க என்வீட்டு கதவைத் திறந்து
ஒளிந்திருந்த காதல் ஒளியே - சளிப்புக்
காணாது இன்பங் கொடுக்க ராமலிங்கமே
வீணான வெட்கம் விலக்கு.

விலகிச் செல்லவே வெள்ளாடை உடுத்தி
இலகுவாய் சென்றால் இனியும் - கலங்கா
திருக்க தனம்மா ளில்லைநான் ராமலிங்கமே
உரு மறைத்தாலு முனைவிடேன்.

உனையன்றி வேறொரு உறவை கனவிலும்
நினையேன் கண்ணீர் நனைய - எனையே
அழவைப்ப துனக்கு அழகோ ராமலிங்கமே
பழம் அழுகாமுன் பசித்தீர்.

பசியில்லா மருந்தே பாசமில்லா உறவே
புசிப்பில்லா சுவையே பாரில் - வசிப்பில்லா
உடலே அவ்வுடலுறு முயிரே ராமலிங்கமே
படமில்லா உருவே புகழ்.

புகழ்வேண்டா தருமமே பள்ளிசெல்லா அறிவே
இகழில்லாப் பெயரேமரு தூரில் - பகலிரவில்லா
பிறப்பே மரணமிலா பெருவாழ்வே ராமலிங்கமே
இறப்பில்லா பிறப்பே இதம்.

இதமில்லா உலகிலே இன்னாகூறாப் பாடலே
மதமில்லா மன்னனே மன்றில் - கதவில்லா
அறையே உருவில்லா அணியே ராமலிங்கமே
மறையில்லா மணியே மாண்பு.                          770

மாண்புடையக் காதல் மன்னா என்
வேண்டுதல் கேட்டு வந்தால் - ஆண்
மயில் அகவலில் மயங்கி ராமலிங்கமே
பயில்வேன் காதல் பாடம்.

பாடம் கற்கவே படிகடந்து வந்துஉன்
ஓடம் ஏறிய ஒய்யாரிநான் - நாடகச்
செயலா லெனைச் சூடி ராமலிங்கமே
தயவா லெனைத் தாங்கு.

தாங்குமுன் தோளில் தழைத்து நான்
தூங்கவே ஆசை தலைவா - ஏங்கு
மென் ஏக்கம்நீக்கி எனை ராமலிங்கமே
உன் கரத்தால் அணை.

அணைத்த சுகம் அனையெனப் பெருகி
கணைத் தேடி கைபோகும் - இணைய
நாள் இதுவே நேரமிதுவே ராமலிங்கமே
தாள்வை என் தலைமீது.

தலைவாரி பூச்சூடி தலைவா உனக்காக
மலையேறி வந்த மான் - கலையான
காதல் சொல்லி காமுற்று ராமலிங்கமே
பாதம் தொட்டுப் பணிந்தேன்.

பணிந் தழைக்கும் பாவைஎன் உயிரை
அணிந் திருக்கும் ஆணழகா - மணி
ஓசை கேட்கும் ஓரடியை ராமலிங்கமே
ஆசைதீர என்னுள் இசை.

இசைத்தல் எங்ஙனமோ வென்று உன்னை
அசைக்கவும் முடியா தென்றேன் - பசைப்
பொருளாம் காதல் பாட்டில் ராமலிங்கமே
இருவரும் இசைய இணைந்தோம்.

தோம்தோமென்று போடு தாளம் நாமொன்றா
னோமென்று சங்கூதி ஆடிப்பாடும் - ஓம்ஓமென
ஐந்து பாகத்துள் ஒளிந்தோடி ராமலிங்கமே
அந்த பிரணவமென அறி.

அறியா பருவத்தில் என்னுள் இணைந்தே
பிறிவிலா தமர்ந்த பரமனே - உறியில்நீ
இருப்பினும் என் உரிமை ராமலிங்கமே
உருகிப் போகிறாளிவ் வேழை.

ஏழைப் படும்பாடென்று அன்றுநீ பாடியதை
வாழையடி வாழையென வந்தென் - ஊழை
ஒழிக்க நானும் ஓதுகிறேன் ராமலிங்கமே
வழிகாட்டி எனை வாழ்த்து.                              780

வாழ்த்திய வள்ளல் வாய்மொழிச் சொல்
ஏழ்பிறவி கடந்தும் இனிக்கும் - ஆழ்
மனக் காதலால் மன்மத ராமலிங்கமே
எனக்கு மாலை இட்டான்.

இட்ட கட்டளைகளை இசைந்தே செய்து
பட்ட மரத்தை பூக்கச்செய்வேன் - வட்ட
மையம் புகவே முயன்றேன் ராமலிங்கமே
ஐயமின்றி புகுந் தாடுவேன்.

ஆடும் அருட்ஜோதி யழகில் கலந்து
பாடும் திருவருள் பாட்டே - கூடுங்
குறிப்பை இரு கண்களால் ராமலிங்கமே
அறிவித்த நயம் அறிவேன்.

அறிவிலே புகுந்து என்னன்பிலே நுழைந்து
பொறியிலே கலந்த புண்ணியா - குறித்த
மகா மந்திர மாமனிதனே ராமலிங்கமே
சிகாரப் பதியே சரணம்.

சரண மடைந்தேன் சன்மார்க்க சாமியே
மரணம் வாரா மாண்பைக்காமியே - பர
மாகாச வெளி மைந்தனே ராமலிங்கமே
ஏகாந்த இனிமையே அருமை.

அருகே நீஇருந்தால் அந்த மரணமும்நின்
அருளே என்றுநான் ஏற்பேன் - கருவாய்ப்
பிறந்து ஜென்மம் பலவும் ராமலிங்கமே
உறவெனப் பாடியுனை அடைவேன்.

அடையும் நாள்காட்டி அறையுங் காட்டி
மடை திறந்த மாணிக்கமே - விடை
பெற்று வந்து பேரொளியாய் ராமலிங்கமே
பெற்ற பெருவாழ்வு பெறுவேன்.

பெறுகின்ற அருளால் பேரருள் பாட்டினை
உறுதியாய் உரைக்கின்றேன் உலகீர் - மறுப்
பேது மில்லா இறவாகதியை ராமலிங்கமே
சாதுவாய் வந்து சொன்னான்.

சொன்னபடி சுத்த சன்மார்க்க நெறிகாட்டி
அன்னதான மளித்து ஒளியாகி - தன்தே
கத்தை ஒளித்துக் காட்டி ராமலிங்கமே
சத்திய மென சார்ந்தான்.

சார்ந்தோ ரெல்லாம் சாதிமதம் விடுத்து
நேர்வழிச் சென்று நிலைத்தார் - ஓர்
இறைவன் நீஎன இருக்க ராமலிங்கமே
கறைபடுமோ என் காதல்.                                790

காதல் கடலில் கப்போலோட்டி நீதான்
சாத லன்றிவாழ சாதித்தாய் - வேதம்
நான்கினும் உயர் நாமமே ராமலிங்கமே
ஊன் ஒளியாய் ஆனாய்.

ஆனாலும் தீதான ஆசையால் மோசம்
போனாலு முனை பிறியேன் - வானாலும்
காற்றாலும் எனைக் கூடிய ராமலிங்கமே
கூற்றொழிந் ததெனக் கூறு.

கூறுகின்ற மதங்களில் கூற்று மிருப்பான்
ஏறுகிறோ மென்று விழுந்து - வாறுகிறீர்
கூற்றில்லா மார்க்கம் கண்ட ராமலிங்கமே
ஆற்று படுத்தினா னன்று.

அன்றொரு நாள் என்கைப் பிடித்துவா
என்று இருள்கடக்க உதவிய - உன்பே
ரருளை நினைந் தழுவேன் ராமலிங்கமே
இருத்தலை நான் அறிந்தேன்.

அறிந்த நாள்முதல் உன்னை அன்றி
எறிந்த சாமிகள் ஏராளம் - மறித்த
மத மெல்லாம் மாய்த்து ராமலிங்கமே
பதமென கொண்டேன் பக்தி.

பக்தியென்று கல்லுக்கு பூச்சூடி பால்வார்த்து
சக்தி வருமென்று மயங்கினேன் - முக்தி
எதுவென தெரியாது ஏங்கினேன் ராமலிங்கமே
அதுவிது வென அலைந்தேன்.

அலையாய் எழுந்தும் இறப்பெனும்கரை கடக்க
மலைத்து மண்ணில் மடிந்தேன் - கலையுரைத்தக்
கற்பனைக் கடலில் குளித்தேன் ராமலிங்கமே
அற்பவயதே அதிகமென இருந்தேன்.

இருஎன்றாலும் இல்லாத இடத்திற்கும் தாழ்ந்து
உருண் டோடுகிறது எம்மனம் - திருமலையில்
ஏறதிரு வருட்பாபாடுவ தில்லையே ராமலிங்கமே
உறவென எனக்கா உன்பெயர்.

உன்நிலை யறிந்தும் உன்னுடல் இறந்ததென
வன்மையாய் சொல்லும் வஞ்சகன் - துன்மார்க்கம்
வீழாதிருக்க சன்மார்க்கம் விடுத்தேன் ராமலிங்கமே
ஏழாந்திருமுறை ஏன் என்றேன்.

என்னுயிரின் வடிவமே என்னுடலில் கலந்து
இன்புறும் உயிர்ச்சுகம் அறியேன் - துன்புறும்
உடல்சுகம் ஒன்றே உடையேன் ராமலிங்கமே
இடம்வலம் நடுவும் அறியேன்.                           800


(இராமலிங்க அந்தாதி - தொடரும்)