Wednesday, June 22, 2016

இராமலிங்க அந்தாதி -12



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                          இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா

சுத்த சன்மார்க்க சத்தியசங்க சமரச
சித்தன் எங்கள் சிற்சபை - அத்தன்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
கருப் பொருளாம் களிக்க.

களிப்பு மேலிட காரிருள் புறமேவ
வளிசூழ வான் வெளி - ஒளியாம்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
உருவம் காத்த உத்தமன்.

உத்தமனாகி ஓங்கி உயிர்ப் பிணிகளை
வித்தகம் செய்து விரட்டிய - சத்திய
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
தருமச் சாலைகளின் தலைவன்.

தலைவன் நமக்குநல் துணைவன் சாகாக்
கலை உரைத்த கலைஞனென - நிலைத்த
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
அருஉருவ முத்தேக அமலன்.

அமலனாகி சன்மார்க்க அகிலம் படைத்த
கமலமலரே கடவுளே என்னில் - அமர்ந்த
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
அருட்பா ஓதிய அந்தாதி.

ஆதியும் அந்தமுமில்லா அரசன் வடலூர்
வீதியில் உலாவரும்சுத்த வீரன் - ஊதிய
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
ஒருமை ஓங்கிய ஒருவன்.

ஒருவன் இவனென்று ஒருமை இதுவென்று
கருவிலே எனக்குக் காட்டியே - பருவத்தே
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
இருமை இன்றி ஒன்றினான்.

ஒன்றி உரசினால் ஓராயிரம் ஒளியென
நின்று வெளிச்சம் நீட்டுவான் - நன்றி
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
இருளில்லா இன்ப மடைந்தேன்.

தேன்என இனிக்கும் தெய்வீகச் சுடரே
வான்நிறை அருள் வானனே - நானென
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
இருப்பதை நான் அறிந்தேன்.

அறிந்தும் கெட்டேன் எனநான் இருப்பனோ
எறிந்தனன் சாதிசமயமத எரிச்சலை - குறித்து
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
கருதியக் கல்வியைக் கற்றேன்.                                                   1110

கற்பதும் கேட்பதும் காண்பதும் உரைப்பதும்
பற்றாய் எழுதுவதும் பணிவதும் - பெற்றேன்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
அருளன்றி எனக்கு ஏதுமில்லை.

இல்லை என்பதில்லை இருப்பது மில்லை
கல்கண்ட நாயென குரைத்து - நல்லவன்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
கருணை காட்டென கழித்தேன்.

கழிகொண்டு நடப்பவன் கண்பார்வை யாய்
இழிஉலகியலில் நடந்து மிங்கு -  அழிவனோ
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
குருவென்றால் வருமோ குற்றம்.

குற்றமும் குணமும் குறித்து என்செய்வேன்
சுற்றமெலாம் சூதாய் சூழினும் - சுற்றுவேன்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
மருந்தென உண்டு மகிழ்வேன்.


மகிழ்ந்தேன் என்னுயிர் மறைப்பை நீக்கி
பகிர்ந்து என்னுள்ளத்தே புகுந்த - அகிலன்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
திருவருள் திறம் தா.

தாதாதா தாதாதா தாதா, தாதாதா தாதாதா
தாதாதாதா சன்மார்க்க தாதாஎன் - நாதா
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
இரும்பு எனை எட்டிப்பிடி.

பிடிக்கும் காந்தமென பரமன் நீயிருக்கஉன்
அடியில் ஒட்டிய அணுவாய்நான் - நடிக்க
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
விரும்பினே னெனைஏற்க வாராய்.

வாராய் என்தெய்வமே வந்தெனை சூழாய்
சீராய் அளிக்கும் சங்கமேஎனைப் - பாராய்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
கருந்திரை மறையக் காட்டு.

காட்டு விலங்கென காமமுற்று நல்லவனென
நாட்டிலே நடித்த நயவஞ்சகன் - பாட்டிலே
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
கருவாய்ப் பாட கழன்றனகாமம்.

காமஜோதி தன்னில் களித்தக் கடையேன்
ஏமஜோதி காண ஏக்கமுறேன் - வாமஜோதி
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
பருத்த உடம்பிதில் புழுத்தேன்.                                                            1120

புழுத்த வரெல்லாம் புன்னகைப் பூத்து
எழுந் தருணம் இதுபாரீர் - தொழுவீர்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
பொருளென ஏற்றி பாடுவீர்.

பாடுகிறது பரவெளி புலைகொலை தவிர்த்து
ஆடுகிறது அண்டவெளி எழுதுமிந்த - ஏடும்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
வருகிறான் என வாயாடுகிறது.


வாய்பந்தல் இல்லை வம்மின் உலகீர்
சேய்போல் அழைத்தேன் சத்தியத் - தாய்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
அருகதை உடைய ஆண்டவன்.

ஆண்டவன் இவனே ஆள்பவன் இவனே
தீண்டாது உயிர்களை தயவுடனே - காண்
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
அருமை எம்மக்களை ஏற்றிடு.

ஏற்றிடும் சங்கமென இசைந்து சமயமதத்தை
முற்றிலும் கைவிட்டு முயல்வீர் - நற்றுணை
அருட்பெருஞ் ஜோதி என் ராமலிங்கமே
புருவ மத்தியில் புகுந்தருள்.                                                        1125

அருட்பெருஞ்ஜோதி

(இராமலிங்க அந்தாதி - முற்றும்)


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் "இராமலிங்க அந்தாதி" - 05-07-2015 அன்று துவங்கப்பட்டு 14-06-2016 அன்று முற்று பெற்றது. இதன் கையெழுத்துப் பிரதி என்று ஏதுமில்லை. இவ்வந்தாதி முழுதும் எம்மால் நேரடியாக கணிணியில் தட்டச்சு செய்யப்பட்டது.

திருவருட்பிரகாச வள்ளலாரை போற்றி இதற்கு முன்னர் அவரது அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா மட்டுமே "திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் சற்குரு வெண்பாவந்தாதி" என்று 1108 அந்தாதி பாக்களை இயற்றியுள்ளார்கள். இதனை அவர் வெளியிட்ட பிரபந்தத்திரட்டு என்னும் நூலில் பக்கம் 239 -இருந்து 391- வரை (அ.திருநாவுக்கரசு பதிப்பு)காணலாம்.

அதன் பிறகு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே தற்போது எம்மை கருவியாகக் கொண்டு மீண்டும் திருவருட்பிரகாச வள்ளலாரைப் போற்றி இந்த 'இராமலிங்க அந்தாதி' எழுந்துள்ளது. இதில் மொத்தம் 1125 பாக்கள் அமைந்துள்ளது.

                                                          அருட்பெருஞ்ஜோதி அடிமை
                                                                 தி.ம.இராமலிங்கம்

Tuesday, June 21, 2016

சமண அவதூறுகள்



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

சமண அவதூறுகள் - இரா.பானுகுமார்-சென்னை

தேனினினும் இனியது நம் தமிழ் மொழி. அம்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுப் பட்டோர் பலர். அவர்களுள் சமணர்கள் தனித்துவம் மிக்கவர்கள். ஆம். தமிழின் இனிமையைத் தனியாய் உணர்ந்தவர்கள் அவர்கள். இதனாற்றான் ஒரு புலவன்,

"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்
" - தனிப் பாடல்

          அந்தச் சமண காலத்தில் எழுந்த தமிழ் நூற்கள்தான் எத்தனை! எத்தனை!! ஐம்பொரும் காப்பியங்களில் மூன்றையும், ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஐந்தையும் வழங்கி தமிழன்னைக்கு அழகுப் பார்த்தது சமணம்! அதுமட்டுமா? தமிழுக்கு முதல் முதல் இலக்கணம் (தொல்காப்பியம்) கண்டது சமணமே. அவ்வளவு ஏன்? நாம் இப்போது பயன்படுத்துவதும் சமண இலக்கணமே!!-(நன்னூல்).

          இவையனைத்தும் நமக்கு அருளினோர் சமணர்களேயாவர். அதுவும் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். இவர்களுக்கு தமிழ் நாட்டில் விளைந்த இன்னல்கள் ஏராளம்! ஏராளம்!! எதற்காக இந்த இன்னல்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருந்த போதும், மிக முக்கியமானதாக ஒரே ஒரு காரணத்தைகூறுவோம்!
         
          அந்த முக்கியக் காரணம். வைதிக வேதத்தை எதிர்த்ததுதான். வேதத்தை ஏன் எதிர்க்கவேண்டும்? யாகம் என்ற பெயரால் அப்பாவி உயிர்களை பலியிட்டது வைதிக வேதம். யாகத்தில்  மிருகங்கள்
 பலியிடுவதன் மூலம் அவை நற்கதியே அடைகின்றன என்று அச்செயலுக்கு அவை நியாயமும் கற்பிக்க முனைந்தன.
இதனை எதிர்த்து எழுந்ததுதான் தமிழ்மறை!

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
" - திருக்குறள் (259)

          சமணம் உயிரின்பாற்ப் பட்டது. எல்லா உயிரும் ஒன்றே! உயிர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உயிர்கள் தங்கள் தங்கள் செயல்களினாலே உயர்வும், தாழ்வும் அடைகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வை அவை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.

"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.." - திருக்குறள் (972)
 என்றும்,
"பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று
" -
                                         அருங்கலச் செப்பு (37)

என்றது. நீலகேசி,(கி.பி. நான்காம் நூற்றாண்டு) என்னும் நூலில் இதுப்பற்றி கூறியதைப் படித்துக் கொள்க.

          சுருக்கமாக, சொல்வோமானால் சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது! வேதமதம் வேளாளச் சைவத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு சமண மதத்தை அழிக்கத் தலைப்பட்டது. சமணத்தைப் பற்றிய அவதூறுகளை மக்களிடையே பரப்பப்பட்டன. இப்பொய் பிரசாரத்தை மக்களும் நம்பலானார்கள்
                                                                                    -- தொடரும் --


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl