Wednesday, September 8, 2021

கால சங்காரம்

 


கால சங்காரம்

மார்க்கண்டர்க்காக ருத்திரமூர்த்தி இடது காலால் எமனை உதைத்ததற்கு நியாயம்:- மார்க்கண்ட ரென்பது மயக்கமாகிய மறைப்பென்னும் மரணத்தைத் தவிர்த்தது. ருத்திர னென்பது தனித்த ஆன்ம அறிவு. எமனென்பது மயக்கத்தைத் தரத்தக்க வெகுளி சினம் முதலிய. இடது காலால் எமனை யுதைத்த தென்பது: இடது என்பது சந்திர கலை, காலென்பது பிராணவாயு. ஜனன மரணத்தை உண்டு பண்ணுவது சந்திரசூரியசக்தி. ஆதலால், அஞ்ஞான பாசத்தால் சினமாகிற கூற்றுவன் கட்ட, விவேகியென்னும் மார்க்கண்டன் ருத்திரனென்னும் ஆன்மஅறிவோடு கூடவே, மேற்படி ருத்திரன் பிண்டநஷ்டஞ் செய்கின்ற இடகலையை மேலேற்றி, குணங்களாகிய சூலத்தால் கூற்றையொழித்து, அருளாகிய சத்துவ மயமாய் நீடிக்கச் செய்வது - எமசம்மாரம். 

-- வள்ளலார்...

 

            ஆயுள் விருத்தியாகும் என்ற நப்பாசையால் சைவ சமயத்தினர் திருக்கடவூர் சென்று வழிபடுவர். ஏன் திருக்கடவூர் செல்ல வேண்டும்? அங்குதான் எமனிடமிருந்து மார்க்கண்டரை சிவன் காப்பாற்றினான் என்கிற புராணக் கதை நிலவுவதால், நம்மையும் அந்த சிவன் காப்பாற்றமாட்டானா? என்ற ஏக்கத்தில் செல்கின்றனர். காப்பாற்றினானா? என்றால், இல்லை. எனினும் எல்லோரும் செல்கிறார்கள். நாங்களும் சென்று வழிபடுகிறோம் என்ற மனப்போக்கில் மார்க்கண்டரைப்போல் 16 வயதில் செல்லாமல் 60 வயது 70, 80 வயதிற்கு மேற்பட்ட தாத்தா பாட்டிகளெல்லாம் அங்குச்சென்று ஒரு பூஜை செய்தால்தான் அவர்கள் நிம்மதியாக போய்ச்சேர்வார்கள் போலும். அங்கு வந்து பூஜை செய்வோர் யாவரும் எமனிடமிருந்து என்னை காப்பாற்றும் ஆண்டவரே, என்று அங்குள்ள லிங்கத்தைச் சென்று கட்டிப்படிக்க முடியுமா? அப்படியே கட்டிப்பிடித்து கதறினாலும் சிவன் வந்து காப்பாற்றிவிடுவாரா? இதெல்லாம்   நடக்காது  என்று   பூஜை  செய்வோருக்கே தெரியும்.

 எனினும் தமது ஆயுளில் சற்று கூடுதலாக போட்டுத் தந்தால் நல்லா இருக்கும் இறைவரே! என்ற ஒரு சிற்றாசையில் அங்கு கூடுகிறார்கள்.

            சிவனால் ஆயுளை கூட்டித்தர முடியுமா? யாராலும் முடியவே முடியாது. நாம் வாங்கும் மூச்சிக்காற்றில் ஒரு மூச்சு அளவுக்கூட யாராலும் இனாமாக நமக்குக் கொடுத்துவிட முடியாது. ஆனால் அவரவர்கள் முயன்றால் அவர்களாகவே தங்களது ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும். அதனைச் செய்ய முடியாத மந்தர்கள்தான் நாம்.

            மார்க்கண்ட புராணத்தின் தத்துவம் என்ன என்பதை நமது கெளரவ ஆசிரியர் வெளிப்படுத்தியிருப்பதை நாம் கண்டு உணர்ந்து அதன்வழி செல்ல முயலுவோம்.

 

                        மார்க்கண்டர் - விவேகம் / புத்தி

                        ருத்திரன் - ஆன்ம அறிவு

                        எமன் - வெகுளி, சினம்

                        இடது கால் - இடது நாசியில் ஓடும் பிராணவாயு

 ஆசை என்னும் பந்த பாசத்தால் சினம் வரவே, உடனே புத்தியானது ஆன்ம அறிவோடு கூடி பிண்டம் நஷ்டம் செய்கின்ற சந்திர கலையில் ஓடும் பிராணவாயுவை மேலேற்றியதால் நற்குணம் தோன்றி சினத்தை அழித்தது.

            சினத்தை ஒழித்து நற்குணமான சாத்விக குணத்தில் நாம் என்றும் இருப்பதுவே எமசம்மாரம் ஆகும்.

 # சத்போதம் - உண்மையான அறிவு / ஞானம் / போதனை - விளக்கம்

# சத்கர்மம் - உண்மையான ஒழுங்கு / சீர் / முறைமை

# சத்சங்கம் - உண்மையான கூட்டம் / கழகம்

# சத்காலம் - உண்மையான நேரம் / பொழுது

# சத்விசாரம் - உண்மையான ஆராய்ச்சி / சிந்தனை / எண்ணம் / யோசனை

# சத்பாத்திரம் - உண்மையான உறுப்பினர் / ஒருமையுள் ஒன்றிவிடும் நபர்

# சத்ஜனம் - உண்மையான மக்கள் / பிறப்புகள்

# சத்செய்கை - உண்மையான வெளிப்பாடு

 மேற்கண்ட எட்டு வகைகளும் சத்துவ குணத்தை சார்ந்தது,

 # கொல்லாமை

# பொறுமை

# சாந்தம்

# அடக்கம்

# இந்திரிய நிக்கிரகம் - (ஐம் பொறிகளையும் அடக்கி ஆளுதல்)

# ஜீவகாருண்யம்

 

மேற்கண்ட ஆறு வகைகளும் சத்துவ குணத்தின் இயல்பாகும் / குணமாகும். இவ்வகை உண்மையைக் கொண்டு சத்துவகுணத்தின் இயல்புகளை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்.

 சமய சன்மார்க்கத்தின் / சத்துவ குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

 1. தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல்

2. புத்திரனாகப் பாவித்தல்

3. சிநேகிதனைப் போலப் பாவித்தல்

4. தன்னைப்போலப் பாவித்தல்

 இது ஜீவ நியாயமாகும்.

 மத சன்மார்க்கம் என்பது,  நிர்க்குண லட்சியம் செய்வதாகும்.

 நிர்குணம் என்பது யாதெனில், மேற்படி சமய சன்மார்க்கத்தின் எண் குணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று அதிலிருந்து மேலேறி லட்சியானுபவம் பெறுதல் ஆகும்.

 லட்சியம் / லட்சியானுபவம் யாதெனில்,

 # சோகம்

# சிவோகம்

# தத்வமசி

# சிவத்துவமசி

 என்னும் மேற்படியான வாக்கியத்தில் அமைந்த முக்கிய அனுபவமாகும்.

            முக்கிய அனுபவம் என்பது,  மத சன்மார்க்கத்தின் / நிர்குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

 1. தான் கடவுளுக்கு அடிமையாதல்

2. தான் கடவுளுக்கு புத்திரனாதல்

3. தான் கடவுளுக்கு சிநேகனாதல்

4. தான் கடவுளுக்கு நிகராதல் (கடவுளேதானாதல்)

            இது சத்துவ மற்றும் நிர்குணத்தின் / சமய மற்றும் மத சன்மார்க்கத்தின் முடிவு ஆகும்.

            இதே தத்துவத்தில் நாம் மரணத்தை வெல்லமுடியாது ஆனாலும் ஆயுளை விருத்தி செய்ய முடியும். மத சன்மார்க்கத்தின் முடிபாக "கடவுளே தானாதல்" என்ற நிலையிலும் மரணம் உண்டு. எவ்வாறெனில், இவர்கள் மூர்த்திகளையே கடவுளாக எண்ணி வணங்குவதால், தான் வணங்கும் மூர்த்திகளின் ஆயுள்வரை மட்டுமே அந்நிலை பெற்றவர்களால் ஆயுளை விருத்தி செய்து இருக்கமுடியும். அதற்கு மேற்பட்டு மரணம் வாய்க்கும்.

            சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே முத்தேக சித்தி உண்டு. இங்கு "கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்ற, உண்மைக் கடவுள் யார் என்று அறியப்பட்டு அதன் பிறகே அவரது மயமாதல் நடைபெறுகிறது. எனவே இங்குதான் உண்மையில் மரணம் என்பதே இல்லை.

            இடது காலை தூக்குவது என்பது இடப்பக்க சுவாசக்காற்றை சுழுமுனையில் நிற்க செய்தல் ஆகும். ஞானிகள் எல்லாம் சுழுமுனை சுவாசம் உடையவர்களாவர். சுழுமுனை என்பது இருபக்கமும் ஒருங்கே சுவாசத்தை ஓட விடுவது. இது எல்லோருக்கும் அமையாது. எனினும் நாம் இடப்பக்க சுவாசத்தை தவிர்த்து எந்நேரமும் வலபக்க சுவாசத்தை ஓடும்படி செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம். இதெல்லாம் சித்தர் மார்க்கம். இதனால் நமக்கு பெருவாழ்வு கிடைக்காது.

 சிவவாக்கியர் எனும் சித்தர், கிராமத்து உதாரணம் ஒன்றின் மூலம் நம்மை ஒரு பிடி பிடிக்கிறார்: ‘அடேய்… நீ காதலித்துக் கல்யாணம் செய்த உன் மனைவியை, ஒரு ரவுடி கண் வைத்து, அவளை என்னிடம் அனுப்பு என்றால், நீயே கொண்டு போய் அவனிடம் சேர்ப்பாயா? ‘வெட்டிவிடுவேன்’ என்று புறப்படுவாய் அல்லவா! அதேபோல், நாம் ஆசை ஆசையாக வளர்த்த இந்த உடம்பை அந்த எமன் கண்வைத்து ஓலைவிட்டதும் மயானம்வரை கொண்டு போய்ப் போடலாமா? முட்டாள்… காலனைக் கபளீகரம் பண்ணவேண்டாமா?’ என்கிறார்.

     ‘வடிவு கண்டு கொண்ட பெண்ணை

    வேறொருவன் நத்தினால் விடுவனோ

    அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே

    நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்

    சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’

 

என்ன அழகான உவமை?! ‘காற்றைப் பிடித்தால் கூற்றை (எமனை) உதைக்கலாம்!’ என்கிறார் திருமூலர்.

            "சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது." (திருவருட்பா-உரைநடைப் பகுதி - பக்கம்-408) என்கிற வள்ளற்பெருமானின் வார்த்தைக்கு இணங்குவோம். மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வோம்.

(2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் - “சன்மார்க்க விவேக விருத்தி” மின்னிதழில் வெளிவந்தது)


--தி.ம.இராமலிங்கம்...

 

 


Tuesday, September 7, 2021

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 183-ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று:

 

வள்ளல்பெருமானின் அணுக்கத்தொண்டர் - சமரச பஜனை  - காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 183-ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று:

                            =============++++++++++========

19-ஆன் நூற்றாண்டில் 07-09-1838 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம், காரணப்பட்டு என்னும் கிராமத்தில் ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் வள்ளல்பெருமானுக்கு தொண்டு செய்யும் பொருட்டு பிறப்பெய்தினார்கள். அவருடைய பிறந்தாநாளான இந்த இனிய நாளில், அவர் இயற்றிய “காரணப்பட்டு ஸ்ரீ சுந்தர விநாயகர்” பதிகங்களில் அமைந்துள்ள சில முக்கிய குறிப்புகளை நாம் தெரிந்துக்கொள்வோம்.

திருஅருட்பிராகச வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களும் தமது கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசுந்தரவிநாயகரைப் போற்றி 33 பதிகங்கள் இயற்றி மகிழ்ந்துள்ளார். அதில் காப்பு செய்யுளிலும் வாழி செய்யுள்களிலும் "சுந்தரவிநாயகர்" என்ற பெயர் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்கள். மற்ற செய்யுள்களில் அச்சுந்தர விநாயகரை "அருட்ஜோதிக்கடவுள்" என்றே புகழ்ந்துரைக்கின்றதை நோக்கும்போது அவரது சமரச தழுவலைத் தெள்ளத்தெளிவாக உணரமுடிகிறது.

மேலும், தாம் இயற்றிய 31 செய்யுள்களிலும் தாம்வாழும் ஊரின் பெயரான 'காரணப்பட்டு' என்னும் தான்வருவிக்க உற்றஊரை ஒருவித பற்றுதலுடன் புகழ்ந்துரைக்கிறார்.

மேலும், அவ்வூரின் சிறப்புகளை எடுத்தியம்புகையில் முதலில் அவ்வூர்வாழ் மங்கையரைப் புகழ்ந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதன்பிறகே அவ்வூர்வாழ் ஆடவரைப் புகழ்ந்திருக்கிறார். இறுதியில் அமைந்த வாழி செய்யுளில் "வாழி காரணப்பட்டி லமர்ந்துளோர்" என்று தமதூரில் வாழும் மக்களை வாழ்தும் வாழ்த்தானது என்றைக்கும் உயிர்த்தன்மையுடன் விளங்கும்.


# சீரோங்கும் செல்வத் திருஞானச் செல்வியர்வாழ் பாரோங்கும் காரணப்பட்டு,

# அருட்பெரும்புருஷார்த் தமைந்திடும் அன்பர்சூழ் திருக்காரணப்பட்டு,

# மகமெலா முறையாச் செயுமாந்தர்கள் மல்குங் காரணப்பட்டு,

# கவிசொலுங் கற்றவர்சூழுங் காரணப்பட்டு,

# எழிற் காரணப்பட்டு,

# கல்வி கேள்வியைப் பெற்றுக் கதிபெறக் கருதுவோர் வாழுங் காரணப்பட்டு,

# பேதமுஞ்சென்ற பேறுவிரும்பிடும் பெரியர் வாழ்ந்திடுங் காரணப்பட்டு,

# நல்லோர் பரவுங் காரணப்பட்டு,

# மெய்வாழ்வு என்றும் திகழுங் காரணப்பட்டு,

# சீரெலாம் வாய்ந்திடுந் திருக்காரணப்பட்டு,

# தொண்டுசெய்யும் அன்புளோர் ஆர்ந்த காரணப்பட்டு,

# தப்பில்லாத செல்வம் பெறுந்தக்கவர் சாருங் காரணப்பட்டு,

# என்பெலாங் கரைந்தேத்திடும் பத்தர்கள் என்றும் வாழ்ந்திடும் காரணப்பட்டு,

# நற்கல்வியைப் போதிக்கும் சன்மார்க்கத்தவர்கள் எந்நாளும் தழைத்தோங்கும் தலமெனத் தகுங் காரணப்பட்டு

# கருவுள் சேராக்கதியைக் கருதுவோர் களித்து வாழ்ந்திடும் காரணப்பட்டு

தாம் இயற்றிய சுந்தரவிநாயகர் பாமாலையில் மேற்கண்டவாறு தாம் பிறந்து வளர்ந்து பேறு அடைந்த தமது கிராமத்தில் வாழும் மக்களின் நற்பண்புகளை எடுத்துரைக்கிறார். அவர் அருள்செய்து 100 வருடங்கள் கடந்தும் இன்றும் என்றும் காரணப்பட்டு வாழ் மக்களின் நற்குணங்கள் போற்றுதலுக்குத் தக்கவாறே திருவருளால் அமையப்பெறுவது அவ்வூரின் சிறப்பு.

பன்மார்க்கப் பொதுவென்னப் பலன் தரும்

பரமனன் பிற்பரிந்திடுந் தெய்வமே

புன்மார்க்கத்தவம் போக்கி மெய்ப்போதமார்

பொருணிறைந்த நற்கல்வியைப் போதிக்குஞ்

சன்மார்க்கத்தவர் எந்நாளும் தழைத்தோங்கும்

தலமெனத் தகும் காரணப்பட்டினில்

துன்மார்க்கச் சிறியேனுக்கு அருள் தூயனே

தோன்றலே அருட் ஜோதிக் கடவுளே. 

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 183-ஆவது பிறந்தநாள் அன்று இறையருளால் ஒரு வேண்டுகோள், விரைவில் அவ்வூர் மக்கள் புலால் மறுப்பாளர்களாக தாவர உணவாளர்களாக மாற்றம் அடையவேண்டும் என்பது ச.மு.க.அருள் நிலையத்தின் வேண்டுதலாக உள்ளது. நன்றி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி.


--தி.ம.இராமலிங்கம்.




Friday, September 3, 2021

நடந்த வண்ணம் உரைத்தல்

 நடந்த வண்ணம் உரைத்தல்




கல்வி கேள்விகளால் சிறந்த அறிவுடையவர்களுக்கு
வந்தனஞ்செய்து வெளிப்படுத்துகை.

அட்சய வருஷம் 5ந் தேதியில் கூடலூரைச் சார்ந்த திருப்பாதிரிப் புலியூர்க்கு அடுத்த பெண்ணை நதித் தென்கரையில் உண்ணாமுலைச் செட்டிச் சாவடிக்குச் சமீபத்தில், ஓர் நைமித்தியத் திருவிழாவைப் பற்றி அறிவுடையோர் அநேகர் கூடினர். அவ்விடத்தில் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளும் இருந்தனர். அப்போது பிரமசமாஜம் சம்பேடு ஸ்ரீதர சுவாமி நாயக்கர் சிலருடன் வந்திருந்தனர்.

அதற்கு முன் திருப்பாதிரிப்புலியூரில், ஸ்ரீதரசுவாமி நாயக்கர் செய்த பிரசங்கத்தினால் சந்தேகத்திலழுந்திய சிலர், தமது சந்தேகத்தை நீக்கிக் கொள்வதற்கு இஃதோர் தருணமென்று கருதி அக்கூட்டத்தில் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளை நோக்கி, "ஐயா! பிரம்மத்தை நினைப்பது தகுதியென்றும், விக்கிரக ஆராதனை செய்வது தகுதியல்ல வென்றும் இங்கே வந்திருக்கின்ற ஸ்ரீதரஸ்வாமி நாயக்கரவர்கள் எங்கள் முன்பாகப் பலமுறை பிரசங்கித்தார்.

 அதனால் எங்களுக்குச் சந்தேக முண்டாகி இருக்கின்றது. அந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
அப்போது சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் "பிரம்மத்தை அறியத் தொடங்கினோர் அறிதல் வேண்டும், விக்கிரக ஆராதனை செய்யத் தொடங்கினோர் செய்தல் வேண்டும். இவ்விரு வகையும் அது அதற்குரிய பக்குவர்களுக்கு அடுத்த வகைகள் என்று அறிய வேண்டும்" என்று சொல்லினர்.

அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் நாயக்கரைப் பார்த்து "இது விஷயத்தில் தங்கள் கோட்பாட்டை வெளிப்படுத்தி நிறுத்தல் வேண்டும்" என்றார்கள். நாயக்கர், லிகித மூலமாய் வெளிப்படுத்துவேன் என்றார்.

அதுகேட்டு, "ஓர் சபையில் மாறுபட்ட இருவர் தங்கள் தங்கள் கோட்பாடுகளை அந்தச் சபையில் அறிஞர் அறிய எடுத்துரைத்து அதற்குத்தக்க சாட்சி. அநுமானம், உவமானம், சத்தம் முதலிய பிரமாணங்களும் உடன்படல், மறுத்தல், ஒருசார் உடன்பட்டு மற்றொருசார் உடன்படாமை, முற்றும் உடன்படல் போன்று உடன்படாமை முதலிய கோட்பாடுகளுக்கமைந்த பலவகை யுக்திகளும், அநுபவத்தோடு தர்க்க, உபதர்க்க, லட்சண உபலட்சணங்களுக்குப் பொருந்த விரித்து விவகரித்து அந்த விவகாரத்திற் சந்தேக விபரீத மயக்கத்திற்கு இடங் கொடாமல் முடிந்த நிச்சயத்தைப் பின்னர் லிகிதமூலமாய்ப் பிறரறிய வெளிப்படுத்தல் மரபேயல்லது,

 மாறுபட்டோர் இருவரும் வேறு வேறு இடங்களிலிருந்து அறிஞர் சபாதிபத்யமின்றித் தங்கள் தங்கள் மனஞ் சென்ற வழி அளவை எல்லையைக் கடந்து எழுதிக் கொள்வதில் ஞானந் தோன்றாது என்றும், ஒழியாத லிகிதச் சண்டையாக முடியுமென்றும் அது தர்க்க மரபல்லவென்றும்" சுவாமிகள் சொல்லினர்.

அங்கிருந்தவர்களில் சிலர் நாயக்கரைப் பார்த்து "ஐயா! தங்கள் கோட்பாட்டை வெளியிட்டுப் பிரமாணத்தால் நிலைபெறச் செய்து எங்களையும், அவ்வழியில் நடத்துவிப்பதற்கு அடுத்த தருணம் இதுவாக இருக்க அத்தருணத்தில் இப்படிச் சொல்வது தங்கள் கோட்பாட்டிற்கு அழகல்ல" என்றார்கள்.

உடனே நாயக்கர் "நித்திய - நிரஞ்சன - நிர்மல - நிராலம்ப சொரூபமும் அவாங் மனோகோசரமுமான பிரமத்தை நினைப்பது தக்க தென்பதும், விக்கிரக ஆராதனை செய்வது தகாது என்பதும் எங்கள் பிரம்மசமாஜ, வேதசமாஜ கோட்பாடு" என்று வெளியிட்டார்.

"அவாங் மனோகோசரமான பிரமம், மனதினால் எப்படி நினைக்கப்படும்? ஆகாயம் அடியாலும் படியாலும் அளக்கப்படும். காற்று கையாற் பிடிக்கப்படும். என்பவைபோல் வார்த்தை மாத்திரத்தால் அன்றி அர்த்த லட்சியானுபவங்களுக்கு இடம் பெறவில்லையே" என்று சுவாமி வினவினர்.

" மிதக்கியானமுள்ள நம்மிட மனத்திற்குப் பரிமித வஸ்துவைப் போல் அடங்காது என்று சொன்னதே யல்லாது ஏகதேசம் மனத்திற்கு விளங்காதென்று சொன்னதல்ல" என்று நாயக்கர் உத்தரித்தனர்.

"மனத்திற்கு அகோசரமென்பது, மனத்திற்கு விஷயப்படாததென்று பொருள் படுமேயல்லாது சிறிது விஷயமாகிப் பெரிது விஷயமாகாதென்று பொருள்படாதென்றும் அவ்வாறு பொருள் கொள்வது லட்சண உபலட்சண விதியல்லவென்றும் ஒரு காலத்தில் ஒரு பொருள் சிறிது விஷயமானால், மற்றொரு காலத்தில் சிறிது விஷயமாகும், பிறிதொரு காலத்தில் சிறிது விஷயமாகும். இவ்வாறு முழுவதும் விஷயமாகுமென்றும், அவாங் மனோகோசரமென்றதில் மனத்திற்குச் சிறிது விஷயமான படி வாக்குக்கும் சிறிது விஷயமாதல் வேண்டும் என்றும், இங்ஙனம் மனவாக்குகளுக்குச் சிறிது விஷயமாகுமென்று கொண்டபோது கண், காது, மூக்கு, மெய், வாய், கை, முதலிய மற்ற இந்திரியங்களுக்கும் விஷயமாகுமென்பது தானே விளங்குதலால் பிரம்ம லட்சணத்தோடு விரோதப்படுமென்றும் மன முதலான அந்தக்கரணங்களுக்கும் கண் முதலான இந்திரியங்களுக்கும் நாம ரூபக்கிரியைகள் விஷயமாகுமல்லது தத்துவாதீதமாகிய பிரமம் விஷயமாகுமென்பது விபரீத உணர்ச்சி என்றும்

மனோலயம் கிடைத்த பின்னர் பிரம்மானுபவம் கிடைக்கும் என்றும், மனம் சிறிது தோன்றினும் ஆத்மஞானம் விளங்காது என்றும் மனம், அசத்து, சடம், அநித்தியம், துக்கம், அசுத்தம் உடையது. பிரமம், சத்து, அறிவு, நித்தியம், இன்பம், சுத்தம், உடையது. ஆகலின் மனத்திற்குப் பிரம்மம் எவ்வகையினும் விஷயமாகாது என்றும் இவ்வாறே வேதம் முதலிய கலைகளினும் ஆப்த வாக்கியங்களினும் ஆணையிட்டு இருப்பதென்றும் பிரம்மம் மனத்திற்கு விஷயப்படாதென்றும் பிரம்மம் மனத்திற்கு விஷயப்படாதென்பது அநுபவத்திற்கும், மற்ற ஹேதுக்களுக்கும் யூகங்களுக்கும் பொருந்துகின்ற பட்சமென்றும்" சுவாமிகள் சொல்லினர்.

பின்னர் சிலபொழுது நாயக்கர் சும்மா விருந்தனர். அங்கிருந்தவர்களில் சிலர் நாயக்கரைப் பார்த்து, "சும்மா விருக்கப்படாது. உத்தரிக்க வேண்டும்" என்றார்கள். நாயக்கர் சற்று நேரம் சென்று மீளவும் "மனத்தினால் பிரம்மத்தை நினைக்கக்கூடும்" என்று முன் சொல்லியதையே சொல்லினர்.

"தங்கள் இஷ்டப்படி விதியைக் கடந்த விவகாரமும் தடைப்படுகின்றது. பிரமம், மனத்திற்கு விஷயமாகுமானால் கண்ணுக்கும் விஷயாமாகும். இவைகளுக்கு விஷயமாகுமானால் மற்ற இந்திரியங்களுக்கும் விஷயமாகும் என்று நான் முன் சொல்லியதைத் தாங்கள் சிறிது உய்த்துணர வேண்டும்" என்று சுவாமிகள் சொல்லினர்.

நாயக்கர் - சற்று நேரம் சென்று "மனத்திற்கு விஷயமாவதெல்லாம் கண்ணுக்கும் விஷயமாகுமோ?" என்றார். சுவாமிகள் ஆகுமென்றார்.
நாயக்கர் "மற்ற இந்திரியங்களுக்கு விஷயமாகாமல் மனத்திற்கே விஷயமாகத் தக்கது ஒன்றுமில்லையோ? ஒன்றுமில்லையோ!" என்று பல முறை வியந்து வினவினார்.

"மனத்திற்கே விஷயமாகத்தக்கது யாது? அதனைத் தாங்களே வெளிப்படுத்தல் வேண்டும்" என்று சுவாமிகள் சொல்லினர்.
"ஆனந்தம் மனத்திற்கே விஷயமாவது" என்று நாயக்கர் சொல்லினர்.

"ஒரு ரூப விஷயத்தைக் கண்கள் கண்டு, அந்த ரூபவிசேஷத்தால் ஆனந்த விருத்தியை அடைந்து பின்னர் அதன் வழியாக மனத்திற்கும் அவ்வானந்தத்தை அடைவிக்குமென்றும், கண்கள் முன்னர் ஆனந்தத்தை அடைந்ததற்கு அடையாளம், அக்கண்களிலிருந்து சிந்துகின்ற பாஷ்பங்களே என்றும், அதை ஆனந்தபாஷ்பமென்று வழங்குவதே போதுமான பிரமாணமென்றும், இஃதன்றி நேத்திரானந்தம், சிரவணானந்தம் என்று அறிவுடையோர் பிரயோகிப்பதை யூகிக்கவேண்டும் என்றும் இங்ஙனம் கண் முதலிய இந்திரியங்களும் மனம் முதலிய கரணங்களும் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாதலால் அவைகள் ஆனந்தம் அடைந்தனவென்பது

உபசரிப்பென்றும் ஆனந்தம், பிரத்யேக ஆன்மஞான விஷயமென்பது உண்மையென்றும் சுவாமிகள் சொல்லினர்.

பின்னர் சற்று நேரம் சென்று "ஓர் இந்திரியத்திற்கு விஷயமாவது வேறோர் இந்திரியத்திற்கும் விஷயமாகுமென்றது எப்படி? காதுக்குப் புலப்படுவது மூக்குக்குப் புலப்படாது, கருத்துக்குப் புலப்படுவது கண்ணுக்குப் புலப்படாது" என்று நாயக்கர் சொல்லினர்.

முன்னர் அவாங் மனோகோசரமென்றதற்கு தாங்கள் கொண்ட கருத்தின் படி வாக்குக்கும் மனத்திற்கும் பிரமம் சிறிது விஷயமானால் கண்களுக்கும் கைகளுக்கும் சிறிது விஷயமாகுமென்று தாங்களே யூகித்து அறியலாமென்றும் ஒரு பொருள் மனத்தினால் நினைக்கப்படுமானால் காதினாலும் கேட்கப்படும். காதினால் கேட்கப்பட்டது கண்ணினால் காணப்படும். கைகளினால் பிடிக்கப்படுமென்பது

உபதர்க்க உபலக்கணமென்றும் ஸ்தூலசூக்கும கரண பூதங்களால் உருவாகித் தோன்றுகின்ற பொருளினிடத்து மனமுதலான கரணங்களுக்கும் கண் முதலான இந்திரியங்களுக்கும் விஷயங்களாகத்தக்க பண்புகள் உண்டாயிருக்குமென்று அறிந்த பட்சத்தில் ஒரு பொருள் ஒரு பண்பினால் ஓர் இந்திரியத்துக்கு விஷயமாகுமானால் அந்தப் பொருள் மற்றொரு பண்பினால் மற்றோர் இந்திரியத்திற்கும் விஷயமாகுமென்று சாதாரண ஜனங்களாலும் அறியப்படும் என்றும்,

அட்சயோக ஞானத்தாலும், இந்திரியங்களின் சொரூபரூப சுபாவ வியாபக வியத்தி விசேஷ சாமாநிய முதலியவைகளையும் வெளிப்படுத்து கின்ற தத்துவ சாத்திரங்களாலும் பிரகிருதி சாத்திரங்களாலும் உய்த்துணர்ந்து தெளியப்படுமென்றும் கண்களும் மனமும் அதி கரணோபாதான சம்பந்தமுடையதென்றும், மத்திய பூத தூல சூக்கும காரியமென்றும், இதனால் மனத்திற்கு விஷயமாவது கண்களுக்கும் விஷயமாகுமென்றும், கண்களுக்கு விஷயமாவது மனத்திற்கும் விஷயமாகுமென்றும்" சுவாமிகள் சொல்லினர்.

அந்த சமயத்தில் இவைகளைக் கேட்டு சூழ நின்ற திருவயிந்திபுரம் வைஷ்ணவப் பிராமண பண்டிதர்களும், ஸ்மார்த்த பண்டிதர்களும் அந்தச் சபையில் உட்புகுந்திருந்து சுவாமியை நோக்கி "மனத்திற்குப் புலப்படுவது கண்களுக்கு எப்படிப் புலப்படும்?" என்று வினவினார்.

ஒரு பொருளில் ஸ்தூலப் பிரகிருதி சூக்கும பிரகிருதி, காரணப்பிரகிருதி மகா காரண பிரகிருதி, மூலப் பிரகிருதி என ஐவகைப் பிரகிருதி அங்கங்களுண்டென்றும் அவைகளில் காரணப் பிரகிருதி மகாகாரண பிரகிருதியங்கள் மனத்திற்கு விஷயமாகும் என்றும் இவை சாதாரண கரணமென்றும் அசாதாரண லட்சணத்தில் கண்ணறிவு, பலமுறை சாதன லட்சியத்தால் நுட்பவறிவாகி மனத்திற்கு விஷயமாகின்ற காரண மகாகாரண பிரகிருதியங்களையும் அறியும் என்றும் இவ்வாறு அறிவது சாத்தியமே என்றும் இதனை யோக சாதன முதலிய வழிகளாலும் தத்துவ சாத்திரங்களாலும் அநுமான முதலிய பிரமாணங்களாலும் அறிந்து கொள்ளலாம் என்றும்

அன்றி, மனத்திற்குப் புலப்படுவது பிரபஞ்சம் - அது கண்களுக்கும் புலப்படுமென்றும்" சுவாமிகள் சொல்லினர்.

"மனத்திற்குப் பிரமம் புலப்படாதோ?" என்று பண்டிதர் வினவினார்கள்.
"பிரமம் மாயாதீதமாதலால் மாயாகாரியமாகிய மனத்திற்குப் புலப்படாது" என்றும் சுவாமிகள் சொல்லினர்.

ஆனால் பிரமத்தை எப்படி எல்லாம் அறியலாம்? என்று பண்டிதர் வினவினார்கள்.
"ஆன்மஞானத்தால் அறியலாம். என்று சுவாமிகள் சொல்லினர். பின்னர் சம்மதித்தவர்களாக பண்டிதர் சும்மா இருந்தார்கள்.

அதன்மேல் அங்கிருந்தவர்களிற் சிலர் நாயக்கரைப் பார்த்து "சும்மா இருக்கப்படாது, தருணநேரிட்டபோதே உத்தரிக்க வேண்டும்" என்றார்கள். நாயக்கர் வழக்கப்படி "லிகித மூலமாக உத்தரிக்கிறேன்" என்று சொல்லினர். அதுகேட்டு அந்தச் சபையிலுள்ளவர்களும் அதன் புறத்து நின்றவர்களும் சிறிது சிரித்தார்கள். அதுபொறாமல் நாயக்கர் "இன்னும் எட்டு தினத்திற்குள் இவ்விடத்தில் என்னைச் சிரித்தவர்களை எல்லாம் நான் சிரிப்பிக்கின்றேன்" என்று சபதம் கூறினர்.

அது கேட்டு அந்தச் சபையில் உணர்வுந் தயவுமுடைய ஒருவர் "இதென்ன கெர்வித வார்த்தை" என்றனர்.

அதுபொறாமல் நாயக்கர் அளவிறந்த கோபாவேசத்தொடும் கண்கள் சிவப்ப, தேகம் பதைப்ப வாயாற் சில பழிபடு வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே திடீரென்று எழுந்து இடி முழக்கினாற்போல் ஆரவாரித்தனர். இவருக்குச் சகாயமாய்ப் பின்வந்தவர்களும் நெருப்பில் நெய்விட்டதுபோல் கோபமூண்டு கோடித்தனர்
.
அத்தருணத்தில் சுவாமிகள் நாயக்கருக்கும் மற்றவர்களுக்கும் கோபம் தணியத்தக்க நல்ல வார்த்தைகளைச் சொல்லி எழுந்தவரை மீளவுமிருக்க வைத்து "ஐயா! நாயக்கரவர்களே! கெர்வித வார்த்தையென்ற சத்தத்தின் லட்சியத்தை நாம் உள்ளபடி அறிந்தால் இவ்வளவு தீவிரம் நேரிடுமென்று எனக்குத் தோன்றவில்லை.

ஆயினும் போனது போக இனியாவது இச்சபையார் அறிய பிரமம் மனத்திற்கு விஷயமாகாதென்று நான் தெரிவித்தபடி, தாங்களும் சம்மதிக்கின்ற பட்சத்தில் சம்மதமென்று சொல்லிச் சும்மாவிருக்க வேண்டும். சம்மதியாத பட்சத்தில், பிரமாணத்தாலும் யுக்தியாலும் அனுபவத்தாலும் தங்கள் கோட்பாட்டை நிறத்துவீர்கள்" என்று சொல்லினர்.

நாயக்கர் "இப்போது என்னை விட்டுவிட்டால் பின்பு லிகித மூலமாக வாதிக்கின்றேன்!" என்று சொல்லினர்.
"எதிர் நின்று வாதிப்பதற்குக் கூடாமையால் லிகித மூலமாய் வாதிப்பீர்கள் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் லிகித மூலமாய் வாதிப்பது தர்க்கலட்சண மரபு அல்லவென்று முன்னரே குறித்திருக்கின்றேன்" என்றும் சொல்லி முடித்து பின்னர்

அந்தச் சபையில் சிலரை நோக்கி "பிரம்மானுபவம், விக்கிரக ஆராதனை செய்தாலல்லது வாராதென்றும், விக்கிரகம் என்பது விசேஷ இடம் என்று பொருள்படும் என்றும், ஆன்மா இருப்பதன் கிரகம். மனிதர் முதலிய ஜீவதேகங்களென்றும் பிரம்ம பிரகாசமிருந்து வெளிப்படுவதற்கு விக்கிரகம் தேவ தேகங்களென்றும் அந்தத் தேவ தேகங்களாகிய விக்கிரகங்களில் விதிப்படி பக்தியோடு உபாசிக்கில் பிரம்மப்பிரகாசம் எளிதில் வெளிப்பட்டு அனுக்கிரகிக்கும் என்றும் அவ்வாறு விசேட இடமென்று சொல்லப் படுகின்ற விக்கிரகங்களில் பிரம்மப்பிரகாசம் வெளிப்பட்டு அனுக்கிரகித்ததற்கு அடையாளம் சிலகாலத்திற்கு முன் விக்கிரக ஆராதனம் செய்த பக்தர்கள் குஷ்டம், குன்மம் முதலான தீராத வியாதிகளைத் தீர்த்தும், இறந்தவர்களை எழுப்பியும், அசாத்தியமான அநேக மகத்துவங்களை நடத்தியும் இருந்ததே போதுமானதென்றும் இப்போதும் விக்கிரக ஆராதனை செய்கின்ற பக்தர்கள் சில மகத்துவங்களைச் செய்து வருகிறார்களென்றும் பிரம்மசமாஜத்தார் வேத சமாஜத்தார் அந்த அடையாளங்களை உடையவர்களாய்த் தோன்றவில்லை என்றும், 

நாமெல்லாம் நமது பக்குவத்திற்குத் தக்கபடி விக்கிரக ஆராதனை செய்து, அதனால் அருளைப் பெற்று, அதனால் அறிவு விளங்கி, அதனால் பிரம்ம சுகத்தை அனுபவிக்கலாமென்றும் சுவாமிகள் சொல்லிக் கொண்டே எழுந்தனர்