Sunday, March 6, 2022

”பக்தி இசை” என்னும் கொடூரம்

 

             பக்தி இசைஎன்னும் கொடூரம்




பக்திக்காகவும், இசைக்காகவும் மிருகங்களை கொலை செய்ய வேண்டுமா?

சுத்த சன்மார்க்க, அனைத்து மதங்களின் சமூக மற்றும் கலாச்சார மரபுகளில் தோல் மேளங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து சுத்த சன்மார்க்கம் ஏன் குரல் கொடுக்க வேண்டும்?

இந்தியா முழுதும் அல்லது உலக நாடுகள் முழுவதும், இந்து மதம் உட்பட அனைத்து மதங்களிலும் அதன் சமூக பழக்க வழக்கங்களில் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நாட்டுப்புற கலைகளில் தோல்களினால் ஆன மேள தாளங்கள் பரவலாக பயன்பாட்டில் உள்ளன. பொதுவாக மங்களகரமானதாக கருதப்படும் பண்டிகைகளிலும், துக்க நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும், நாம் கேட்டு மகிழும் சினிமாப் பாடல்களிலும், திருவருட்பா போன்ற தமிழ் திருமுறைகளின் கருணையே வடிவான பாடல்களை இசை வடிவாக கேட்டு மகிழும்போதும் நாம் இதுவரை உணராத வன்முறை அரங்கேரிக்கொண்டிருக்கின்றது. மனதை மயக்கும் இசையில் ஒலிக்கக்கூடிய மேள தாளங்களின் சப்தங்கள் உண்மையில் பல விலங்குகளின் அழுகையாகவும், இரத்தக் களறியாகவும், படுகொலையாகவும் இருப்பதை நாம் மறந்தே விடுகின்றோம். விலங்குகளின் தோலை உரித்து அதில் செய்யப்படுகின்ற பாரம்பரிய மேள தாளங்கள் வழியாக வருகின்ற இசையானது எவ்வாறு உண்மையான பக்தி உணர்வை, உண்மையான மன உருக்கத்தை நமக்குக் கொடுக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?

விலங்குகள் இறைச்சிக்காக மட்டுமல்ல, அதன் தோலுக்காகவும் கொல்லப்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். விலங்குகளின் தோலில்தான் மேளங்கள் செய்யப்படுகின்றன என்பதை நம்மில் இன்னும் பலர் உணரவில்லை. இது பொது மக்களுக்கு உணர்த்தப்படாத கொடூரமான உண்மையாகும். இது சுத்த சன்மார்க்க கொள்கைக்கும் மற்றும் இந்து மதம் போன்ற மற்ற எந்த மதக்கொள்கைக்கும் எதிரானது. மேலும் இயற்கைக்கு உட்பட்டு வாழந்து இறக்கக் கூடிய ஒரு மிருகத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது.

கடவுளை புகழ்ந்து பாடுவது என்பது ஒரு பாரம்பரிய நடைமுறையாக அனைத்து மதங்களிலும் இருந்து வருகின்றது. தாளத்துடன் இசையாக கடவுளின் புகழை பாடுவது அனைத்து கலாச்சாரங்களிலும் முதன்மையான நடைமுறையாகவும் இருந்துவருகின்றது. சுத்த சன்மார்க்கத்திலும் திருவருட்பா இசைக் கச்சேரிகள் பல சன்மார்க்க சங்களிலும், வடலூர் பெருவெளியிலும், பல கோவில்களிலும் நடைபெற்று வருகின்றன. 

பெரும்பாலும் அனைத்து பாரம்பரிய தாள கருவிகளும் விலங்குகளின் தோலால் செய்யப்பட்டவையாகும். மிருதங்கம், (Mridangam) மத்தளம், (Madhalam) தபலா, ( Tabla)  கோல், (Khol) தவில்,( Thavil) தோள், (Dhol) தோலக், (Dholak) டமரு, (Damaru) செந்தா, (Chenda)  திமிலா, (Timila) உடுக்கை,(Udukkai) பகவஜ்,   (Pakhavaj) பறை (Parai) போன்ற நாட்டுப்புற வாத்தியங்கள் மற்றும் பல நாட்டுப்புற இசைக் கருவிகள் அனைத்தும் ஏதுமறியாத மிருகத்தின் தோலினால் செய்யப்பட்டவை. மாடு, ஆடு, எருமை மற்றும் கன்றுகளின் இரத்தக் கறை படிந்த தோலினால் செய்யப்பட்டவையாகும். இடக்கா (Idakka) போன்ற மேளங்கள் அவற்றின் கட்டுமானத்தில் பசுவின் குடல் சவ்வைப் பயன்படுத்துகின்றார்கள். மற்றும் கஞ்சிராவில் (Kanjira) பல்லிகளின் தோலைப் பயன்படுத்தி தயாரிக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட அனைத்து இசைக்கருவிகளும் விலங்குகளின் தோலினால் ஆனது என்ற உண்மை அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட பொது மக்களில் சிலர் மட்டுமே அதனை அறியாமல் இருக்க முடியும். தோலினால் ஆன இசைக்கருவிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? என்பதை பொதுமக்கள் அனைவரும் யூட்யூப் போன்ற தளங்களிலும் விக்கிபீடியா போன்ற தளங்களிலும் கண்டு அதன் உண்மையை அறியலாம்.

படுகொலை கூடங்களிலிருந்து இந்த விலங்குகளின் தோல்கள் வருகின்றன. மேளங்கள் தயாரிப்பவர்கள் இறைச்சி விலங்குகளின் தோலை வாங்கி, அவற்றை பதப்படுத்தி, இந்த மேளங்களை தயாரிக்கின்றார்கள்.

மேளம் வாசிப்பவர்கள் கூறும் சாக்கு போக்குகள் என்னவென்றால்?, கிளாசிக்கல் இசைக்கலைஞர்கள், பக்திப் பாடகர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் போன்றவர்களின் இசைக்கருவிகள் எதனால் ஆனது என்று பொதுமக்களால் கேள்வி கேட்கப்படுவதில்லை. மிக அரிதாக யாரேனும் கேள்வி கேட்டாலும், அவர்கள் பாரம்பரியத்தை சாக்கு போக்காகக் கூறுவார்கள் அல்லது விசித்திரமான சாக்கு போக்குகளைக் கொண்டு வருவார்கள். அதாவது, இந்த விலங்குகள் இறந்த பிறகும் கடவுளுக்கும் மனித குலத்திற்கும் சேவை செய்கின்றன அல்லது இயற்கையாக இறந்த விலங்குகளிலிருந்து பெறப்பட்டது அல்லது விலங்கின் இறைச்சி எடுத்தப்பிறகு அவ்விலங்கின் தோல் வீணாகத்தானே இருக்கும். அதனை ஏன் பயன்படுத்தக்கூடாது? என ஏதேனும் சாக்கு போக்குகள் (Excuses) கூறுவாகள்.  

சாக்கு போக்குகள் போன்றவை காரணங்கள் அல்ல. அவற்றை நிராகரிக்க வேண்டும். (Excuses are not reasons. Reject them):

மரபுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை மற்றும் அனைத்து மரபுகளும் ஒரு மதத்தின் கொள்கைகளுக்கு இணங்க வேண்டிய அவசியமில்லை. இவ்விடயத்தில், இது சுத்த சன்மார்க்கத்திற்கும் இந்து மதம் மற்றும் அன்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மதங்களுக்கும் எதிரானது. நாம் பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால், கால்நடைகளை வளர்ப்பது மனிதர்களே தவிர, கால்நடைகளும் மற்ற விலங்குகளும் மனிதர்களின் கீழ் அடிமைப்படும் ஓர் நரகமான  வாழ்க்கையை விரும்புவதில்லை. அனைத்து விலங்குகளும் மனிதர்களைபோல சுதந்தரமான வாழ்க்கையையே விரும்புகின்றன. மனிதன் கண்டுபிடித்த காரணங்களுக்காக எந்த விலங்கும் தன் உயிரை உவந்து கொடுக்காது. எனவே நாம் இப்படிப்பட்ட இசைக்கருவிகளை நிராகரிக்கவே வேண்டும்.

தற்கால இந்து மதம் உட்பட அனைத்து சமகால சித்தாந்தங்களும் உணவிற்காக அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் விலங்குகளை படுகொலை செய்வதிற்கு எதிராகவே உள்ளன.  இந்து சமுதாயத்தில், பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்கள் பரவலாக பயணம் செய்து தங்கள் கலையை நிகழ்த்துகின்றனர். இந்து நாட்காட்டியின் புனித மாதங்களில், கோயில்கள், மற்றும் சபாக்களில் பிரமாண்டமான முறையில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றார்கள். பெருவாரியான பொதுமக்கள் அவற்றைக் கண்டும் கேட்டும் இரசிக்கின்றனர். மேலும் பலர் தொலைக்காட்சிகளில் கண்டு இரசிக்கின்றனர்.

யார் குற்றவாளிகள்?:

ஆச்சரியம் என்னவென்றால், அனைத்து இசைக்கலைஞர்களும் தங்கள் கச்சேரிகளில், தனி நிகழ்ச்சியாக அல்லது துணையாகப் பயன்படுத்தும் மேளங்களில் விலங்குத் தோல்களால் செய்யப்பட்டவை என்பதை அறிந்திருக்கின்றார்கள். நன்றாகத் தெரிந்திருந்தும், அவர்கள் எப்படி இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்து அதனை புறக்கணிக்க முடியும்? அவர்கள் அதை வாழ்வாதாரத்திற்காகவோ, கலையில் தேர்ச்சி பெறுவதற்காகவோ அல்லது அவற்றும் விரும்பும் புகழுக்காகவோ செய்தார்களா என்பது முக்கியமில்லை. இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள கொடுமையை எந்தக் காரணமும் நியாயப்படுத்த முடியாது. மிக உயர்ந்த தேசிய விருதுகள் மற்றும் விருதுகளைப் பெற்ற பிரபல இசைக்கலைஞர்கள்கூட இந்த கொடூரத்தை அமைதியாகவோ அல்லது அலட்சியமாகவோ இருந்துவிடுகின்றனர். பக்தி பாடலை அடிப்படையாகக் கொண்ட சங்கீர்த்தன இயக்கங்கள் மற்றும் சுத்த சன்மார்க்க திருவருட்பா இசை இயக்கங்கள் போன்றவைகளும் தங்களது இசை நிகழ்ச்சிகளில் இப்படிப்பட்ட கொடூரமான இசைக் கருவிகளுக்கு தடை விதிப்பதில்லை என்பது அநீதிக்கு உறியது. எந்த ஒரு உணர்வுள்ள உயிரினத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுத்தும் தீங்கு குற்றமாகும். அதை வேண்டுமென்றே செய்பவர்களும் நிச்சயமாக குற்றவாளிகளே. அக்குற்றவாளிகள் புகழ்பெற்ற நிறுவனங்களாகவோ புகழ்பெற்ற குடிமக்களாகவோ அல்லது சாதாரண மக்களாகவோ இருக்கலாம். மத குருமார்களும், ஆன்மிகத் தலைவர்களும், சுத்த சன்மார்க்கிகளும் தங்களின் தலையீட்டின் கீழ் நடக்கும் இந்தக் குற்றத்தை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், ஒரு மிருகத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலைத் தேர்ந்தெடுத்த, இசைக்கருவிகளை தயாரிக்கும் தயாரிப்பாளர்கலிருந்து தொடங்கி, பாரம்பரிய இசைக் கலைஞர்கள், பக்தி பாடகர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் மற்றும் இந்தக் கொடுமையைத் தொடர அனுமதித்த கோவில் நிர்வாகிகள் அமைப்பாளர்கள், சுத்த சன்மார்க்க இயக்கங்கள் மற்றும் எவ்வகை அமைப்பாகினும் இவர்கள் அனைவரும் குற்றவாளிகளே. இவ்வுண்மை அறிந்து அவ்விசையை கேட்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளே. மேலும் உண்மையை அறியாத கேட்போரை குற்றத்தில் பங்குதாரராகவும், தவிர்க்க முடியாத கர்மா பெறுபவராகவும் ஆக்குவதற்கும் அவர்களே பொறுப்பு.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மிருகத்தின் தோலில் இருந்து எந்தவிதமான தெய்வீக ஒலி அதிர்வும் உண்மையாக எழாது. அத்தகைய இசையில் புனிதமான அல்லது மங்களகரமான எதுவும் இருக்க முடியாது. இந்த மேளங்களின் தாளத்தையும் முழக்கத்தையும், இசையாக அல்லது ஒரு ஊடகமாக அல்லது கடவுள் பக்தியை வெளிப்படுத்தும் பிரசாதமாக நாம் இரசிக்கும்போது, மிருகம் அனுபவித்த கொடூரமான துன்பங்களுக்கு நாம் ஒரு காரணமாகிவிடுகின்றோம்.

இதற்கான மாற்று என்ன?

விலங்குகளின் தோலில் செய்யப்பட்ட இசைக்கருவிகளுக்குப் பதிலாக தற்போது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அனைத்துவிதமான இசைக்கருவிகளும் சந்தையில் விற்கப்படுகின்றன. (synthetic cruelty free components ) அதனைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். எவ்வித குற்றமும் இன்றி தயாரிக்கப்படுகின்ற இசைக்கருவிகள் விற்கும் இடங்களைப்பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளேன். அவ்விடம் தொடர்புகொண்டு வாங்க்கிக்கொள்ளலாம்.

மேளங்கள் தயாரிப்பவர்கள் மிருகத் தோலினை பயன்படுத்துவதை விடுத்து, எவ்வித கொடூரச் செயலும் இல்லாத செயற்கை பட்டைகளைப் பயன்படுத்தி மேளங்கள் தயாரிக்க வேண்டும். சுத்த சன்மார்க்க சங்கங்கள், வடலூர் பெருவெளி, கோவில்கள் போன்ற மற்ற மத வழிபாட்டுத் தளங்கள் யாவும் தோலினால் செய்யப்பட்ட இசைக்கருவிகளுக்கு தடை செய்விக்க வேண்டும். சாதாரண மக்கள் தாங்கள் நடத்தும் விழாக்களில் தோல் இசைக்கருவிகளை இசைக்க அனுமதி அளிக்கக்கூடாது. இந்த குற்றத்திற்கு கண்மூடித்தனமாக இருக்கும் இசைக்கலைஞர்கள், மத தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடன் சாதாரண மக்களாகிய நாம் விவாதிக்கலாம். இதனால் அவர்கள் கலாச்சார, பக்தி மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் தோலினால் செய்யப்பட்ட இசைக்கருவிகளை தவிர்க்க முன்வருவார்கள். புறக்கணிப்பதின் மூலம் ஒருவர் குற்றத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம். தோலினால் செய்யப்பட்ட கருவிகளின் தேவையானது புறக்கணிக்கும் ஒரு நபரால் குறையும்.

இவ்வாறு ஒவ்வொரு நபராக, அதிகமான மக்கள் புறக்கணிக்கும்போது, தோல் மேளங்கள் தயாரிப்பு வீழ்ச்சியடையும். அதற்கான மாற்றம் சமுதாயத்தில் வேகமாக வளரும். ஒருவரின் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான நியாயமான வழிமுறையாக கொடுமையைஏற்றுக்கொள்ள முடியாது. கலையை அல்லது பக்தியை வளர்க்கும் ஒரு ஊடகமாக கொடுமையை ஏற்க முடியாது. எந்த ஒரு பாரம்பரியத்திலும் கொடுமையை அனுமதிக்கக்கூடாது. இந்த கொடுமைக்கு முற்று புள்ளி வைக்க நாம் அனைவரும் ஒருங்கே குரல் கொடுக்க வேண்டும்.

 நன்றி: Avaduta.

 




There are synthetic percussions available

Karunya musicals is one of them who make it.

https://karunyamusicals.com/

 

Vegan options are available for music instruments...

https://youtu.be/P5zJSJkmGc4

 

https://youtu.be/tgCEW8astKc


 ---T.M.RAMALINGAM

CUDDALORE - WHATSAPP: 9445545475