பிறந்தநாள் கொண்டாடலாமா?
வள்ளற்பெருமானை பின்பற்றும் சுத்த சன்மார்க்கிகள் தங்களது பிறந்தநாளையோ அல்லது பிறருடைய பிறந்தநாளையோ கொண்டாடலாமா? என்றால் கொண்டாடக்கூடாது.
அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு பிறந்தநாள் என்பது, ஒரு பிறவிக்கு ஒரு முறைதான் வரும். அதாவது தன் தாயின் வயிற்றிலிருந்து இப்பூமியில் வந்து விழுந்தோம் அல்லவா! அந்த ஒரு நாள் மட்டுமே ஒவ்வொருவருடைய பிறந்த நாளாகும். அப்பிறந்த நாள் 24 மணி நேரத்தில் முடிந்துவிடும். அதன் பிறகு அடுத்த ஜென்மத்தில் எப்போது பிறப்பெடுக்கின்றோமோ அன்றுதான் அச்சீவனுக்கு அடுத்த பிறந்த நாளாகும்.
ஆனால், நாமெல்லாம் இவ்வுலக மாயையில் சிக்கிக்கொண்டு அறிவின்றி பிறந்தநாளை கொண்டாடுவதும், மற்றவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ஆண்டு தோறும் கூறுவதும் தவறான நடைமுறையாகும்.
யூதர்கள் மற்றும் கிறுத்துவர்கள்தான் தங்களது பிறந்தநாளையும் மற்றவர்களுடைய பிறந்தநாளையும் கொண்டாடும் வழக்கமுடையவர்கள். இஸ்லாமியர்கள் பிறந்தநாள் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நாளையும் அதாவது திருமண் நாள், மரண நாள் இப்படி எதனையும் கொண்டாடுவதில்லை. இந்துக்களும் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. காலப்போக்கில் கிறுத்துவத்தை பின்பற்றியே தற்போது கொண்டாடி வருகின்றோம். ஆனால் இந்துக்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரத்தை கணக்கிட்டு ஆண்டுதோறும் அந்நாளில் நட்சத்திர சாந்தி, தன்வந்திரி மந்திரம், பஞ்ச சாந்தி, மிருத்யுங்க மந்திரம் போன்ற அவர்களுக்கு பிடித்த மந்திரங்களை ஓதி அன்று மிக அமைதியாக இருந்து அந்த நாளை வழிபடுவார்கள்.
இவ்வாறு நட்சத்திரத்திரத்தை பின்பற்றி வழிபடுவதும் மாயைதான். இந்த விஷயத்தில் இஸ்லாமியர்கள் மிகச்சரியாக நடக்கின்றார்கள் எனலாம்.
தற்போது ஒவ்வொருவர் கைகளிலும் சோசியல் மீடியா வந்துவிட்டதால், சுத்த சன்மார்க்கிகளும் விழித்திருக்க மறந்து, மாயையில் விழுந்து தங்களுடைய பிறந்த நாளையும், தங்களது வீட்டார்களின் பிறந்த நாட்களையும், மீடியாவில் பதிவிட்டு, அதற்கான வாழ்த்துக்களை பிறரிடமிருந்து பெறுகின்றார்கள். மேலும் பிறருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்கின்றார்கள். இவை இரண்டும் சுத்த சன்மார்க்கிகள் தவிர்க்க வேண்டும். அறிவு விளங்கிய உலக மக்களும் தவிர்க்க வேண்டும்.
நேரம் செல்ல செல்ல, ஆண்டுகள் செல்ல செல்ல மரணத்தை நோக்கி நகர்கின்றோம் என்கின்ற உண்மை புரிந்துவிட்டால் கொண்டாடங்களில் மனம் செல்லாது. மரணமிலா பெருவாழ்வு பெற முடியாமல் இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டதே… இன்னும் நமக்கு எவ்வளவு நேரமோ தெரியாது என கலங்கி நமது இலக்கை அடைய தேவையான இறையருளை பெறவே நாம் நமது நேரத்தை பயன்படுத்த வேண்டும். அவ்வாறே உலக மக்களும் மரணம் தன்னை நெருங்குவதை நினைத்து இறையருளை பெற தங்கள் நேரத்தை பயன்படுத்த வேண்டும்.
நிறைவாக
சுத்த சன்மார்க்கிகளுக்கு தெரிவிப்பது என்ன வென்றால், பிறந்தநாள்
கொண்டாடக்கூடாது, கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கூடாது. அதுபோலவே
ஒருவரின் திருமண நாள், ஒருவரின்
மரண நாள் இப்படி எந்த நாளாக இருந்தாலும் அதனை கொண்டாடவோ, அல்லது
துக்க நாளாகவோ அனுசரிக்கக் கூடாது.
இவ்வளவு சொல்லியும் உங்கள் மனம் சஞ்சலமாகின்றது என்றால், உங்களது பிறந்த நாளன்று, உங்கள் பிறந்தாளை பிறருக்கு தெரிவிக்காமல் வறியவர்களுக்கு அன்னதானம் மட்டும் செய்து மன திருப்தி அடையுங்கள்.
வருடந்தோறும் வருகின்ற தைப்பூசம், மாதந்தோறும் வருகின்ற மாதப்பூசம், ஞானிகளின் குருபூஜைகள் போன்ற நாட்களில் பொதுமக்கள் வழிபட வேண்டியிருப்பதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கலாம். மேலும் வள்ளற்பெருமானின் பிறந்த நாள் என்பது நம் பிறப்பு போன்றல்ல. இறைவனால் வருவிக்கவுற்ற நாள் என்பதால் ஐயாவின் வருவிக்கவுற்ற நாளை நாம் கொண்டாடுவதில் தவறில்லை.
அரசியலில் இருப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், தனியார் துறையில் வேலை செய்பவர்கள் அனைவரும், தங்களுடைய விருப்பம் இன்றியே தங்களது மேல் அதிகாரிகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல வேண்டிவரும். அவர்கள் உலகியல் நடத்துவதற்காக வாழ்த்துக்களை கூறத்தான் வேண்டும். முடிந்தால் தவிற்கவும். ஆனால் இவர்களும் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடமல் இருக்க வேண்டும்.
நன்றி.
தி.ம.இராமலிங்கம்
9445545475