Sunday, September 24, 2023

பிணி நீக்கும் பதிகம் - சர்வ ரோக நிவாரணப் பதிகம்

நெய்வேலி திருமதி.பி.சாவித்திரி அவர்கள் கேட்டுக்கொண்டதனால், அவரது தலைச்சுற்றல் நோய் குணமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, வள்ளற்பெருமானை, காரணப்பட்டாரை வேண்டி அருளிய பதிகம் இது.

இப்பதிகத்தை படிப்பதனால் தலைச்சுற்றல் நோய் மட்டுமல்ல அனைத்து நோய்களும் நீங்கும். ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் இப்பதிகத்தை படித்துவர வேண்டும் என்பது முக்கியம். 

 

பிணி நீக்கும் பதிகம்

(சர்வ ரோக நிவாரணப் பதிகம்)

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

தி.ம.இராமலிங்கம்

 

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை          அருட்பெருஞ்ஜோதி


கலை எல்லாம் கற்கின்றேன் என்னிரு
        கண்மணி போல் நின்திரு வடியை
நிலையெனக் காக்கின்றேன் என்னுள் நீ
        நடமிடும் இடமதைக் கண்டு அந்தோ
மலையென வியக்கின்றேன் இருந்து மென்
        மதிகெட் டு உடல் நொந்து என்றும்
தலைச் சுற்றல் நோயால் பிடியுண்டேன்
        தயவுடன் தந்தைநீ எனை காப்பாயே.    (1)
 
சன்மார்க்கத் திருமுறை ஏழும் உணர்ந்து
        சாகாம லிருக்க ஆசை வைத்தேன்
துன்மார்க்க மெல்லாம் ஒழிந்து பிறவித்
        துயரமும் போக வளர்ந்து வந்தேன்
இன்னமுதே என்கண்ணே என்னுயிரே என
        அருள் வள்ளலே உனையே போற்றி
முன்னின்று வணங்கியும் தலைச் சுற்றலால்
        மயங்கி வாடுமென் நோய் தீர்ப்பாயே.  (2)
 
தந்திரம் அறியேன் மந்திரமும் மறந்தேன்
        தானே பிறக்கவும் இறக்கவும் கற்றேன்
சந்திரன் சூரியன் அறியேன் இரண்டும்
        சந்திக்கும் இடமும் தெரியேன் தாவும்
மந்தி நியாயமும் பிடியேன் அடங்கும்
        மனமும் தருமவழியும் அறியாது நான்
முந்திசெய் வினையால் தலைச்சுற்றல் நோயால்
        மாய்வதைத் தடுத்தெனை ஆட் கொள்வாயே.  (3)
 
காதலாகி சிந்தும் கண்ணீரால் அன்பே
        கால மெல்லாம் நினைந் துருகி
ஈதலும் ஈட்டலும் இரண்டும் விடுத்து
        உனையே உயிராய் உடுக்கும் நிலை
யாதலும் கைகூடி மகிழ்ந்திருக்க ஓர்
        ஆணை வழங்க வருவாய் வள்ளலே
சாதலும் உடல் சாய்வதும் தலைச்
        சுற்றலு மின்றி சுகம் தருவாயே.   (4)
 
காரணப்பட்டு கந்தசாமி புலவ னவன்
        காயத்தில் தலைச் சுற்றலை நீக்கி
 பூரணமாய் அவன் மெய்யில் வந்தமர்ந்த
        பூத மைந்தினையும் நின்னருளால் ஜீவ
காருண்யம் செய்ய பணித்த வள்ளலே
        காணும் என்தலை சுற்றலை நீயும்
ஈரமே ஓருவாய் விளங்கும் பேரொளியே
        எனது நோயையும் நீக்கி அருள்வாயே.  (5)
 
தஞ்சம் அடைந்தாருக்கு சாமி நானென்று
        திருச்சொல் புகன்ற திருவருட் பாவை
நெஞ்சுருக உணர்ந்தோர்க்கு எந்த நோயும்
        நாடாது காணும் உடம்பி லுறும்துளி
நஞ்சும் பஞ்செனப் பறந்திடும் இராமலிங்காய
        நமஎன்றிட எமபயமும் இல்லை இல்லை
வஞ்சக வாழ்க்கையில் தலைச் சுற்றலென்ன
        வடலூர் வந்திட்டால் வாட்ட மில்லையே.  (6)
 
காரணப்பட்டு அருள் நிலையம் நோயகற்றும்
        காரணம் அதுவாமே எனத் தெளிந்து
ஓரணியில் திரண்டுவர எந்நோயும் ஓடிடும்
        ஆணும் பெண்ணும் வந்து தொழுதிட
பேரருள் கைகூடும் தலைச் சுற்றலும்
பெருஞ் ஜோதி அருளால் விலகிடும்
பாரிது பாரென அதிசயம் நிகழ்ந்திடும்
        பாரினில் ஓங்கும் அருள் நிலையமே.  (7)
 
புற்று நோய்களெல்லாம் இப்பதிகத்தை வேறு
        பற்றற்று படித்திட பறந்திடும் பாரும்
வெற்று கூச்சலும் அடங்கிடும் அருட்பா
        வென்றிடு மென்றே சாகாக் கல்வி
கற்றிடும் சான்றோர் சொல்லிடும் சொல்லை
        கருத்தோடு கேட்டிடில் உடம் பதில்
சுற்றிடும் நோய்களும் தலைச் சுற்றலும்
        சற்று மிராது சன்மார்க்கம் காணுமே.  (8)
 
அருளும் பொருளும் அளித்தாய் போற்றி
        அன்பும் பண்பும் கொடுத்தாய் போற்றி
இருளும் ஒளியும் ஆனாய் போற்றி
        இன்பம் துன்பம் அற்றாய் போற்றி
இரக்கம் உயிராய் நின்றாய் போற்றி
        அல்லல் பிணியும் ஆற்றுவாய் போற்றி
உருக்கும் உடம்பில் தலைச் சுற்றலால்
அடித்தது போதும் அணைப்பாய் போற்றியே.  (9)
 
நல்ல மருந்து மருந்து காற்றடைத்தப் பையில்
        நஞ்சை நீக்கும் மருந்து மருந்து
வல்லானுனைப் பாடும் பாடல் மருந்து
        வஞ்ச வினைகளெல்லாம் போக்கும் மருந்து
இல்லையொரு மருந்தென ஏங்கு வோர்க்கு
        இம்சை போக்கும் மருந்து பிறவித்
தொல்லை நீக்கும் மருந்து தலைசுற்றல்
தீர்க்கும் மருந்து சித்திவளாக மருந்தே.  (10)

  

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை          அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

24-09-2023

 


இராமலிங்க அபயம் இராமலிங்க அபயம்
                    என்று சொன்னால் இரத்த அழுத்தம்
            வராமல் செய்வான் எரிச்சலும் மனபதட்டமும்
                    வந்தவழிச் செல்லும் எவ்வித வலியும்
            தராமல் நீரிழிவு நோயையும் குணஞ்செய்து
                    தலைச் சுற்றலும் பயமும் முற்றும்
            இராமல் பூஜ்ஜிய மாக்கும் வைத்தியன்
                    அருள் வேண்டி அபயம் ஆனேனே.  (1)