Friday, May 20, 2016

தேர்தல் அவசரம்



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:

தேர்தல் அவசரம்

என் இனிய அன்பர்களே! வந்தனம்!

வருகின்ற 16-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒருவிதமாக அனைத்துக் கட்சிகளும் தனியாகவோ அல்லது ஏதோ சில பிரதான கட்சிகளுடன் இணைந்தோ மக்களாகிய நம்மை நோக்கி ஓட்டு கேட்டு வந்தவண்ணம் உள்ளன. சென்ற தேர்தல் போல இந்தத் தேர்தலில் இலவசங்கள் என்கிற கவர்ச்சித் திட்டங்கள் எக்கட்சியிலும் காணப்படவில்லை. (நான் இப்பகுதியினை எழுதும்வரை ஒரு பிரதானக் கட்சி மட்டும் இன்னும் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. அத்தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் எனத்தெரியாது.)
அனைத்துக் கட்சிகளுமே மதுவினை ஏதோ ஒரு வகையில் ஒழிக்க முன்வந்துள்ளன என்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால் ஊழல் இலஞ்சங்களை ஒழிப்பதாகவும் அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே முழங்குகின்றன. முழக்கத்தின் இடையில் கோடி கோடியாக ஊழல் பணம் தேர்தல் ஆணையத்திடம் பிடிபட்டுக்கொண்டே உள்ளது. யாருடைய பேச்சிலும் வாய்மை என்பதில்லை. "வாய்மையே வெல்லும்" என்ற நமது அரசின் அதிகார வாசகம் பொய்த்துப்போய் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தத் தேர்தலிலும் வாய்மை வெல்வதற்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.
சாதி, மதங்களை ஒழிப்பதற்காக எண்ணத்தின் அளவில் கூட எந்த கட்சியும் நினைத்துப் பார்க்கவில்லை. சாதியும் மதமும் அரசு ஏட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் என்பது சுத்த சன்மார்க்கிகளின் கொள்கை. ஆண், பெண் என்று மட்டுமே மக்களை பிரிக்க வேண்டுமே தவிர சாதிகளாலும் மதங்களாலும் மக்களை பிரிப்பதை நம்மை ஆளும் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.  இதற்கான சட்டத்தை இயற்றும் கட்சிகளை இதுவரை நம்மால் பார்க்க முடியவில்லை.
இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!
                                    - பாண்டியன் பரிசு-56; 17-18

என்று பாரதியாரும் பாடிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பல விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்பும் இன்னும் இந்த சாதி இருக்கின்றது என்பது, கேலிக்கு உரியவையாக தென்படவில்லை. 

சாதி மதம் தமிழ் இல்லை - அந்தச்
சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை!
                                    -பன்மணித்திரள்.

என்று பாரதிதாசனும் பாடிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இன்றும் அந்த சாதி மதத்தை தமிழன் கொண்டுள்ளானே! இதனை அவன் அசிங்கமாகப் பார்க்கவில்லை.

சுத்த சன்மார்க்கிகள் என்று ஆட்சியை ஆளுகின்றனரோ... அன்றுதான் சட்ட புத்தகத்திலிருந்து சாதிகளும் மதங்களும் தூக்கி எரியப்படும். கருணையுள்ள ஆட்சி அன்றுதான் இவ்வுலகில் தொடங்கும். அதுவரை அன்பர்களே... யாருக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது நமக்கு சிக்கலாகவே இருக்கும். குறைந்த பட்சம் அக இனத்தாருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவ்வாறு வேட்பாளர்கள் பெரும்பாலும் யாரும் இல்லை. புற இனத்தார்க்கு வாக்களிப்பதைவிட நாம் "நோட்டா"வுக்கு வாக்களிப்பது சிறந்தது என்று நினைக்கத் தோன்றுகிறது.

அன்பர்களே! உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதனை செய்யுங்கள். நான் ஓட்டுக்கு பணம்  வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஓட்டு போடாமல் இருக்கமாட்டேன் என்றும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு எதிரியாக இருந்தாலும், இச்சமுதாயத்திற்காக நான் அந்த நல்ல வேட்பாளரையே தேர்ந்தெடுப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் ஒரு நல்ல ஆட்சி இம்மாதத்தில் தமிழகம் உட்பட மற்றுமுள்ள மாநிலங்களில் அமையட்டும்.

தமிழகத்திலும் மற்றுமுள்ள மாநிலங்களிலும் புதிய ஆட்சியினை கொடுக்க இருக்கும் கட்சிகளுக்கு சன்மார்க்க விவேக விருத்தி தமது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறது. 
-       தி..இராமலிங்கம்.


or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

மே தின வாழ்த்துக்கள்



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்த மே தின வாழ்த்து.

மே தின வாழ்த்துக்கள்

1880 - ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 - ஆம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம்.

பெரும் போராட்டங்கள்தான் மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தன. இன்றைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. "உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!' என்பதுதான் மே தினம் நமக்கு அளிக்கும் முழக்கமாகும்.

ஆனால், இந்த எட்டு மணி நேர உழைப்பு நிர்ணயம் என்பது பெரும்பாலும் படித்தவர்களுக்குத்தான் உதவுகிறது. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எனப்படும் கல்லுடைக்கும் கொத்தடிமைகள், தோட்டத் தொழிலாளர்கள், ஆலை ஊழியர்கள், நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தினக் கூலிகள் என கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் ஒரு வேளை உணவுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

எத்தனையோ குழந்தைகள், பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள், டீ கடைப் பணியாளர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, ஹோட்டலில் மேசை துடைப்பவர்களாக, கட்டிட வேலைகளில் மண்ணும் கல்லும் சுமப்பவர்களாக எத்தனையோ கடுமையான வேலைகளைச் செய்துவருகிறார்கள். அவர்களது பெற்றோர்களுக்கு, அவர்களைப் படிக்க வைக்கக்கூடிய அளவு சம்பாத்தியம் இருப்பதில்லை. படிப்பு என்ன, தங்கள் பிள்ளைகளுக்குப் போதுமான உணவு கொடுப்பதற்குக்கூட முடியாத அளவில்தான் அவர்களது வருமானம் இருக்கிறது. அதனால்தான் அந்தச் சிறுவர்கள் வேலைக்கு வருகிறார்கள். சிறுவர்கள் வேலை செய்ய சட்டம் தடை செய்துள்ளதால் தற்போது அந்நிலை சற்று மாறுபட்டுள்ளது.

இது எல்லோருக்குமான உலகம். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? இந்த மே தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கேள்வி இது!  நன்றி-தினமணி


or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

ஞானசபையும் நடராஜரும்



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்த தலையங்கம்.

ஞானசபையும் நடராஜரும்

ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு. அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு. அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு. ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.

-       திருவருட்பிரகாச வள்ளலார்


மனித உயிர்க்கு நான்கு அறிவுகள் இருக்கும் என வள்ளற்பெருமான் பறைசாற்றுகிறார். அவை, 1.இந்திரிய அறிவு, 2.மன அறிவு, 3.ஜீவ அறிவு, 4.ஆன்ம அறிவு என்பதாகும்.  முதல் மூன்று அறிவையும் கடந்து நான்காவது அறிவான ஆன்ம அறிவைக்கொண்டவன் சுத்த சன்மார்க்கி.

1. இந்திரிய அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளின் பெயர் என்ன? அப்பொருளின் வடிவம் என்ன? அப்பொருளின் குணம் என்ன? அப்பொருளின் குற்றம் என்ன? என்று விசாரிக்காமலும், தெரியாமலும் - அப்பொருள் எப்படி இருக்கிறதோ அதுவே உண்மை என்று அறிதல் இந்திரிய அறிவு.

2. மன அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளின் பெயரினை தெரிந்துக்கொள்ளுதல், அப்பொருளின் வடிவத்தை தெரிந்துக்கொள்ளுதல், அப்பொருளின் குணத்தை தெரிந்துக்கொள்ளுதல், அப்பொருளால் வரும் குற்றத்தை தெரிந்துக்கொள்ளுதல் - இவ்வாறு அப்பொருளின் பெயர், வடிவம், குணம், குற்றம் இவைகளை தெரிந்துக்கொண்டு அவையே உண்மை என அறிதல் மன அறிவு.

3.ஜீவ அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளினால் நமக்கு என்ன உபயோகம் என்று, அப்பொருளை நாம் நமக்கு சாதகமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது, பாதகம் என்றால் அதனை விட்டு விலகுவது என்ற அறிவை அறிவது ஜீவ அறிவு.

4.ஆன்ம அறிவு:-
            ஒருவன் தனக்கு எதிரில் உள்ள ஒரு பொருளைக் காணும்போது, அப்பொருளின் உண்மை என்ன? என்பதை அறிவது ஆன்ம அறிவு.

இந்த நான்கு அறிவினையும் ஒரு சினிமாப் பாடல் மூலம் விளக்கலாம்.

"நீயும் பொம்மை... நானும் பொம்மை... நினைத்துப்பார்த்தால் எல்லாம் பொம்மை..." என்ற பாடல் வரிகளை பாடியவர், மேற்கண்ட நான்கு அறிவில் எந்த அறிவு கொண்டு இந்தப் பாடலை அவர் இயற்றியிருப்பார் என்று சிந்தித்தால்..., அது இந்திரிய அறிவு கொண்டு இப்பாடலை இயற்றியிருப்பார் எனத் தோன்றுகிறது.

ஏனென்றால், அவர் மனிதர்களாகிய நம்மையும், மற்ற உயிர்களையும், இறைவனையும் பொம்மையாகவே பார்க்கிறார். இவருக்கு உயிரற்ற பொம்மையே இவ்வுலகில் உண்மை எனத் தோன்றுகிறது. அதற்கு மேற்பட்டு இவ்வுலகில் ஏதுமில்லை என்கிறது இவரது இந்திரிய அறிவு. பொம்மைகளே உண்மை என்று அதனை வைத்து விளையாடுகின்ற குழந்தைகளின் அறிவினை ஒத்தது இவ்வறிவு.

மேற்காணும் அதே பாடலை பாடியவர், மன அறிவுக்கொண்டும் அதனை பாடியிருக்கலாம் எனத்தோன்றுகிறது.  அதாவது அந்த பொம்மையின் பெயர் மனித பொம்மை, அதன் வடிவம் மனித வடிவம், அதன் குணம் மனித குணம், அதன் குற்றம் மனித குற்றம் என்பதனை அறிந்து, மனிதனானவன் யாரோ ஒருவர் ஆட்டுவிக்க ஆடுகின்ற பொம்மையே என்பதனை புரிந்துக்கொண்டு அவ்வாறு பாடல் இயற்றியிருக்கலாம். அவ்வாறு அந்த பொம்மையின் குணத்தையும் குற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இப்பாடல் இருப்பதால், இப்பாடலாசிரியர் மன அறிவு உடையவர் என்று அறிந்துக்கொள்ளலாம். பொம்மைகளின் வடிவம் அறிந்து அது ஆணா, பெண்ணா, அதன் ரூபம் மனித ரூபமா? விலங்கு ரூபமா? என்றெல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்க விளையாடும் இளைஞனின் அறிவினை ஒத்தது இவ்வறிவு.

மேற்காணும் அதே பாடலை பாடியவர், ஜீவ அறிவைக்கொண்டும் அதனை பாடியிருக்கலாம் எனத்தோன்றுகிறது. மனிதனின் நிலையினை பாடுவதற்கு உவமையாக நாம் எதனை தேர்ந்தெடுக்கலாம்? என்று நினைக்கையில், அப்பாடலாசிரியருக்கு 'பொம்மை' என்கிற பொருள் தம் அறிவுக்கு தோன்றுகிறது. இப்படி அந்த பொம்மையின் உபயோகம் என்ன? அதன் இயல்பு என்ன? என்று தெரிந்துக்கொண்டு அப்பொம்மை போல் மனிதனும் உபயோகமற்றவன் என்கிறார். அதேசமயம் இறைவனும் பொம்மை என்ற வடிவிலே வழிபடப்படுகிறான். எனவே இவ்வுலகில் எல்லாம் பொம்மைதான், என்று பொம்மையின் உபயோகத்தை தெரிவிப்பதனால், அப்பாடலாசிரியர் ஜீவ அறிவை பெற்றிருக்கிறார். பொம்மையின் உபயோகம் தெரிந்துக்கொண்டு அதனை வழிபாட்டுக்கு கொண்டுவந்த கலைஞர்களின் அறிவை ஒத்தது இவ்வறிவு.

மேற்காணும் அதே பாடலை பாடியவர், ஆன்ம அறிவுக்கொண்டும் அதனை பாடியிருக்கலாம் எனத்தோன்றுகிறது. ஒரு பொம்மையின் உண்மை என்ன? அது வெறும் சடப் பொருளாக, வடிவமாக உள்ளது. அதன் உண்மைப் பொருள் உயிரோடு வேறு எங்கோ உள்ளது? அந்த உண்மைப் பொருளை தேடுங்கள். வெறும் பொம்மையோடு விளையாடுவதை நிறுத்துங்கள். நிறுத்தாவிடில் நாமெல்லாம் பொம்மைகளே! என்று எச்சரிக்கை விடுவதாகவும் இப்பாடல் பொருள் கொள்கிறது. அதாவது குரங்கு வடிவ பொம்மையை கண்டு அதனை மரத்தில் வைத்து விளையாடுவதைவிட, அதன் உண்மை என்கிற 'குரங்கு' என்ற உயிரினம் இவ்வுலகில் உயிருடன் உள்ளது. அது உண்மையிலேயே மரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனைக் காணவேண்டும் என்பதனை அப்பொம்மை நமக்கு உணர்த்துவதாக  உள்ளது. பொம்மையின் உண்மை தெரிந்துக்கொண்டு அதன் உண்மையினை, அந்த பொம்மையைவிட்டு வேறுஇடத்தில் தேடிகண்டுபிடிக்கும் சித்த அறிஞர்களின் அறிவை ஒத்தது இவ்வறிவு.

            ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது. இவ்வுலகில் ஞானசபை அல்லது சிற்சபை என்பது ஒரு பொம்மை. அதன் உண்மை ஆன்ம பிரகாசமாக நம்முள்ளே உள்ளது.

இவ்வுலகில் நடராஜர் மற்றும் நடனம் என்பது பொம்மைகள். அதன் உண்மை, நமக்குள் உள்ள ஆன்ம பிரகாசகத்திற்குள் உள் உள்ள பிரகாசமே நடராஜர் என்கிற கடவுள். அந்த உள் பிரகாசத்தின் அசைவே நடனம். 

நமக்குள்ளே உள் பிரகாசத்தையும், அதன் அசைவையும் காண்பவன் ஆன்ம அறிவு கொண்டவன். இந்த உண்மை தெரியாது புறத்தில் உள்ள நடராஜரையும் நடனத்தையும் கண்டு அதுவே உண்மை என சொல்பவன் மற்ற மூன்று அறிவுகளையும் ஒருங்கே கொண்டுள்ளார்கள் எனப்பொருள் கொள்கிறார் வள்ளற்பெருமான்.

இதனை படிக்கும் நாம், எந்த அறிவினை கொண்டுள்ளோம் என்பது இப்போது நமக்குத் தெரிந்திருக்கும்.

ஞானசபையும், சிற்சபையும் எங்கே உள்ளது?

வடலூர் மற்றும் சிதம்பரம் என்று சொன்னால், நீங்கள் இன்னும் பொம்மை வழிபாட்டை விட்டு உண்மையினை காணவில்லை எனப்பொருள். மாறாக, அவையிரண்டும் எனது ஆன்ம பிரகாசத்தில் உள்ளது என்று சொன்னால் நீங்கள் ஆன்ம அறிவினைக்கொண்டு உண்மை கண்டுள்ளீர்கள் எனப்பொருள்.

நடராஜரும், நடனமும் எங்கே உள்ளது?

சிதம்பரத்தில் உள்ளது என்று சொன்னால், நீங்கள் இன்னும் பொம்மை விழிபாட்டை விட்டு உண்மையினை காணவில்லை எனப்பொருள்.
மாறாக, அவையிரண்டும் எனது ஆன்மபிரகாசத்திற்குள் உள் பிரகாசமாகவும், அதன் அசைவாகவும் இருக்கிறது என்று சொன்னால், நீங்கள் ஆன்ம அறிவினைக் கொண்டு உண்மை கண்டுள்ளீர்கள் எனப்பொருள்.

'சிதம்பரம் இராமலிங்கம்' என்று வள்ளற்பெருமான் கையொப்பம் இடுவதையும் நாம் ஆன்ம அறிவினைக்கொண்டு நோக்கினால், அதன் உண்மை என்ன? என்பது புரியவரும். 

 மக்கள் எல்லோரும் ஆன்ம அறிவினை பெறவேண்டும் என்பதே இந்த சன்மார்க்க விவேக விருத்தியின் குறிக்கோளாக உள்ளது.
-       தி.ம.இராமலிங்கம்.


or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

Sunday, May 1, 2016

"சன்மார்க்க விவேக விருத்தி" - மே-2016

வந்தனம்!

வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்க உண்மைகளை எடுத்தியம்பும் "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழ் காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை மூலம் வெளியிடப்படுகின்றது. மே-2016-க்கான மின்னிதழினை அன்பர்கள் கீழே உள்ள இணைப்பிலிருந்து பெற்று படிக்கலாம். நன்றி.


http://www.vallalarspace.com/user/c/V000020798B

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

இதுவரை வெளிவந்த அனைத்து மின் நூல்கள் அனைத்தையும் கீழ் காணும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

https://ta.wikipedia.org/s/4scl