Thursday, August 29, 2013

அறிவிலான் அடிகள்

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

      அறிவிலான் அடிகள்

          (நேரிசை வெண்பா)



அருளினால் கிடைத்த அருட்பாவை அறியாமல்
பொருளினால் கிடைத்த கல்வியைஎன் - இருளினால்
கற்றேன் அக்கல்வியால் காமமதையே விரும்பி
விற்றேன் பெற்றேன் விழியிலேனே.         (1)

விழித்திருக்க அறியேன் வழியிருந்தும் துணியேன்
மழித்திருக்க விரும்பேன் வீண்காலம் - கழித்திருக்க
விழைந்தேன் உலகியல் விந்தைபல புரிந்தேன்
குழைந்தேன் நாயினும் களித்தேனே.        (2)

களித்த நாளெல்லாம் காமமேயன்றி எம்காயம்
அளித்த சுகம்வேறு அறியேன் - இளித்த
வாய்காட்டி முகம்காட்டி வாய்த்த மனைவியால்
தாய்காட்டி யதந்தையானேன் தயவறியேனே.    (3)

அறியேன் தவம்புரிதலை அகத்து எண்ணங்களை
எறியேன் மதத்தவர்போல் அலைந்தேன் - வெறியேன்
பூசைகள் கல்லிலேசெய்து பக்தன் என்றே
ஆசைகள் நீக்கறியா அறிவிலேனே.        (4)

அறிவேன் சாதிஇனங்களை அறிந்துக் கூடிய
சிறியேன் இரக்கமற்ற புலையேன் - வறியேன்
ஆனாலும் மற்றவர்புகழ ஆடிய பொய்யேன்
போனாலும் போக்கற்ற பிழையேனே.        (5)

பிழைக்க தெரிந்தேன் உலகியலில் பிணிகளை
அழைக்க தெரிந்தேன் சாகத்தெரிந்தேன் - தழைக்க
ஓங்கும் சுத்தசன்மார்க்கத்தால் என்றும் உடலுடனுயிர்
தங்கும் உலவினை தெரிந்திலேனே.        (6)

தெரிந்த பல்லாயிரம் தொகுத்த பாக்களிலே
புரிந்த ஒன்றேனும் பரமாகுமோ - விரிந்த
பல்சமய மதங்களும் சரிய சன்மார்க்கமேமோங்க
நல்சமய மதையறியாதகல் நெஞ்சனனே.        (7)

நெஞ்சம் நெகிழ்தறியேன் நடுவு நிலையறியேன்
வஞ்சம் மறந்தறியா வன்கொடியேன் - மஞ்சம்
மோக மலத்தில் மயங்கும் நாயினும்பெரியேன்
ஏக நிலையறியா இருளனனே.            (8)

இருள் சூழ்மனதிலே உந்தன் திருஒளி
அருள் சூழதவம்தான் எய்வேனோ - பொருள்
புகழ் தேடியலைவேனோ புண்ணியா உம்மை
இகழ்ந் தேகளிப்பேனோஏதும் அறிந்திலேனே.    (9)

அறிவே எம்பொருளே அன்பே எம்அருளே
குறியே எம்குருவே கருப்பொருளே - நெறியே
எந்தை உயிரே அருட்பெருஞ் ஜோதியே
சந்தை உலகியலையாம் சாராதுஅருளே.        (10)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.