சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் -
3
அன்பர்களுக்கு வணக்கம்!
நாம் தற்போது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த
பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான "சிவவாக்கியார்" அருளிய "சிவவாக்கியம்"
என்னும் நூலில் உள்ள தத்துவக் கருத்துகளையும், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாழையடி
வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபில் ஒருவரான "வள்ளலார்" அருளிய
"திருஅருட்பா" என்னும் அருள்வாக்கியத்தில் உள்ள தத்துவக் கருத்துகளையும்
ஒருங்கிணைத்து சற்றே உரசிப்பார்ப்போம்.
என்னகத்துள் என்னைநான் எங்கும்நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தன்மையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றியாதும் ஒன்றுமில்லையே. (சிவவாக்கியம்)
நான் யார்? என்ற கேள்வி சிவவாக்கியாருக்கு எழுகிறது.
அதற்கான பதிலைத் தேட எங்கும்நாடி ஓடுகிறார். நம்மைப் போல் புறத்தில் தேடி ஒடவில்லை.
தனது அகத்துள் தன்னை தேடுகிறார். ஒருவழியாக தேடுதல் முடிவுற்றது. தமது அகத்தில் தன்னை
அறிகிறார், தான் யார் என்பது அவருக்கு தெரிந்துவிடுகிறது, ஆனால் தான் யார் எனத் தெரிந்தப்பின்,
தன்னகத்துள் தன்னையன்றி வேறுயாரும் இல்லை என்கிறார் சிவவாக்கியார்.
நான் யார்? எனத் தேடி தன்னை அறிவதே ஒரு பெரிய ஆன்மீக
நிலை அனுபவம் ஆகும். அந்த நிலையினை சிவவாக்கியார் அடைந்துவிட்டார். அந்த அனுபவ நிலையினை
மட்டும் தமது பாடலில் வெளிப்படுத்தியிருக்கலாம். அது அருமையாக இருந்திருக்கும்.
ஆனால் இங்கே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றால்,
இருக்கிறான் எனப்பொருள், அதுபோன்ற பொருளை இது உருவாக்குகின்றதா? என்று எண்ணத்தோன்றுகிறது.
ஆனால், என்னை அன்றி என்னகத்துள் வேறுயாரும் இல்லை என்று சொல்வதைக்காட்டிலும் இல்லையே
எனப் பாடியது ஆழ்ந்த பொருள் இருப்பதாகவும் உள்ளது.
ஒருவேளை இவர் 'துவைத' தத்துவத்தை பின்பற்றுபவராக இருந்திருக்கலாம்.
13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்துவாச்சாரியரால் 'துவைதம்' பரவியது.
துவைதம் என்பது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு எனக்கொள்ளத்தக்க வாதம். இறைவன்
ஒருவனே சுதந்தரமானவன். உயிரான ஜீவாத்மா பரத்திலிருந்து வேறுபட்டது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும்
ஒன்று சேர இயலாது, இரண்டும் எப்போது இரண்டாகவே இருக்கும் என்பன போன்ற வாதத்தை மார்க்கத்தை
பரப்பியவர் மத்துவர். இங்கே சிவவாக்கியார் மத்துவரின் தத்துவத்தை எடுத்து விளம்பியதாகத்
தோன்றுகிறது.
தன்னகத்தே என்னுடைய ஜீவாத்மா மட்டுமே உள்ளது, அங்கே பரமாத்மாவை
நான் பார்க்கவில்லை என்று அன்றைய 'அத்வைத' ஆதரவாளர்களுடன் மோதியிருக்கிறார் என்றே யாம்
கருதுகின்றோம். 'துவைதம்' என்பதும் உண்மைநிலைதான். ஒருவர் ஆன்மீக நிலையில் முன்னேறும்போது
'துவைதம்' என்ற உண்மை 'அத்வைதம்' என்ற பேருண்மைக்கு இட்டுச்செல்லும்.
8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் உபதேசித்ததே 'அத்துவிதம்'
என்ற உயரிய அனுபவம். இதற்கு இரண்டற்ற நிலை என்று பொருள். 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஆதிசங்கரர் உபதேசித்ததே 'அத்துவிதம்' என்ற உயரிய அனுபவம். இதற்கு இரண்டற்ற நிலை என்று
பொருள். அதாவது மனம் என்ற த்வைதம் மறைவதே அத்வைதம். ஜீவன் என்கிற ஜீவாத்மா, இறைவன்
என்கிற பரமாத்மாவோடு ஒன்றியபிறகு அங்கு ஜீவனும் இன்றி பரமும் இன்றி இரண்டற்ற நிலையான
தனிநிலை / திருநிலையினை காண்பது அத்துவிதம் ஆகும்.
இனி வள்ளலாரின் தத்துவ மரபானது அத்வைதமா? துவைதமா? என
இங்கே சற்றே உரசிப்பார்ப்போம்,
என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய் (திருஅருட்பா-3694)
என்னிலையாகிய 'நான்' பெறுகின்றது என்னவெனில், நின்னிலையாகிய
(நீ) இறைதன்மையதாம், 'நான்' 'நீ' என்கிற இருநிலைகளும் ஒரு நிலையாகிய 'நாம்' என அறியவேண்டும்.
'நாம்' என்பது நானுமல்ல, நீயுமல்ல. இரண்டற்ற ஒன்றாகிய 'திருநிலை' ஆகும். 'என்னையும்
நின்னையும் ஓர் உரு ஆக்கியான்' என்று அகவலில் வள்ளற்பெருமான் தான் இறையுடன் இணைந்ததை
மிக அழகாக கூறுவார். என்னுள் நீ, உன்னுள் நான் என்கிற இணையும் மார்க்கமாகிய 'அத்வைத'
தத்துவத்தையே வள்ளற் பெருமான் எடுத்துரைத்திருப்பதை பார்க்கமுடிகிறது.
ஜீவனும், பரமும் இணையும் அனுபவம் எவ்வாறு இருக்கும்?
என்ற வேதியியல் அனுபவத்தை வள்ளற்பெருமானார் அனுபவித்தார்,
'தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி
அன்பே' என அகவுவார். மேலும் த்வைதம் அத்வைதமாகும் போது கீழ்கண்ட அனுபவம் நமது உடலில்
ஏற்படும் என வள்ளலார் தமது அகவலில் கூறியுள்ளார்,
1. தோல் - குழைந்திடும்
2. நரம்புகள் - மேலெலாம்
கட்டவை விட்டு விட்டு இயங்கிடும்
3. எலும்புகள் - நெக்கு
நெக்கு இயலிடை நெகிழ்ந்திடும்
4. தசைகள் - மெய்புறத்
தளர்ந்திடும்
5. இரத்தம் - உள் இறுகிடும்
6. சுக்கிலம் - உரத்திடை
பந்தித்து ஒருதிரள் ஆயிடும்
7. மூளை - மடல் எல்லாம்
மலர்ந்திடும்
8. உடல் - அமுதம் ஊற்றெடுத்து
ஓடி நிரம்பிடும்
9. ஒண்ணுதல் - வியர்த்திடும்
10. முகம் - மலர்ந்திடும்
11. உயிர் - சாந்தம் ததும்பிடும்
12. உண்ணகை - தோற்றிடும்
13. உரோமம் - பொடித்திடும்
14. கண்கள் - நீர் பெருகி கால்வழிந்தோடிடும்
15. வாய் - துடித்து அலரிடும்
16. செவிகள் - கும்மெனக் கொட்டிடும்
17. மெய் - குளிர்ந்திடும்
18. மார்பு - பசைந்திடும்
19. கைகள் - குவிந்திடும்
20. கால்கள் - சுலவிடும்
21. மனம் - கனிந்து உருகிடும்
22. மதி - நிறைந்து ஒளிர்ந்திடும்
23. சித்தம் - இயைந்து களித்திடும்
24. அகங்காரம் - ஆங்காங்கு அதிகரிப் பமைந்திடும்
25. உள்ளம் - தழைத்து மலர்ந்திடும்
26. அறிவுறும் அனைத்தும் - ஆனந்தம் ஆயிடும்
27. பொறிகள் - ஆன்மதற் போதம் போயிடும்
28. தத்துவம் - தாம் ஒருங்கி ஒழிந்திடும்
29. சத்துவம் - தனித்து நின்று ஓங்கிடும்
30. உலகம் எல்லாம் - விடயம் உளவெலாம் மறைந்திடும்
31. அருள் - ஆசைமேல் பொங்கிடும்
32. உள்ளம் - எழுந்திடும்
33. உயிர் எல்லாம் -
மலர்ந்திடும்
இப்படிப்பட்ட அனுபவம் 'த்வைத' மார்க்கத்தார்களுக்கு
கிடைப்பது கிடையாது. 'அத்வைத' மார்க்கத்திற்கு இது செயல் கூடும்.
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் (திருஅருட்பா-4515)
வள்ளற்பெருமான் தான் எப்படி 'அத்வைதம்' ஆகினேன் என்று
மேற்கண்ட அடிகளில் மிகத்தெளிவாக கூறுவதையும் இங்கே பார்க்கமுடிகிறது.
இந்த அனுபவத்தை சற்றே மனித தரத்தில் புரிந்துக்கொள்ளும்படி
கூறவேண்டுமானால், பாரதியார் பாடிய பாடலை எடுத்துக்காட்டாக கூறலாம்,
'எங்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ?'
கணவன் மனைவி என்ற இருவருக்கும் உள்ள உறவினை இல்லறத்தில்
அத்வைதம் எனலாம். இதனையே 'ஈருடல் ஓருயிர்' என்பார்கள். தனித்தனியாக இரண்டு விளக்குகள்
இடைவெளி குறைவாக ஒன்றுக்கொன்று மிக அருகில் எரிகின்றன. எரிகின்ற தீபங்கள் இரண்டு, ஆனால்
அவைகள் தம்முள் இருந்த ஒளியினை வெளிப்படுத்துவதில் இணைந்துவிட்டன. இரு விளக்கின் ஒளியும்
ஒன்றாகவே இணைந்துவிட்டன. இது அந்த விளக்கின் ஒளி என்று அடையாளப்படுத்த முடியாதவாறு
இரண்டும் ஒளியால் கலந்துவிட்டன. இதுவே அத்வைதம்.
வள்ளற்பெருமானார் 'த்வைத' நிலையினை பேசினாலே தமது உள்ளம்
எரிகிறது என்று பாடுகிறார்.
'பிரிந்தினிச் சிறிதும் தரிக்கிலேன் பிரிவைப்
பேசினும்
நெய்விடுந் தீப்போல்
எரிந்துளங் கலங்கி மயங்கல்கண் டிலையோ' (திருஅருட்பா-3823)
'திவைத' தத்துவத்தை கூறிய மத்துவர், இறைவன் ஒருவனுக்கே
சுதந்தரம் உள்ளது என்று கூறுவார். அது நூறு சதவிகிதம் உண்மையும் கூட. ஆனால், அந்த ஏக
சுதந்தரத்தை இறைவன் 19ம் நூற்றாண்டில் பிறந்த 'சிதம்பரம் இராமலிங்கம்' என்பரிடத்தில்
கொடுத்துவிட்டார்,
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
தூயநல் உடம்பினில்
புகுந்தேம்
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக்
கலந்தனம்.... (திருஅருட்பா-3851)
இறைவனின் ஏக சுதந்தரத்தை வள்ளற்பெருமான் பெற்ற அதே நொடி
இறைவன் அவர் உடம்பில் கலந்துவிட்டார்.
என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
இன்னுயிர் ஆயினீர் வாரீர்
என்னுயிர் நாதரே வாரீர் (திருஅருட்பா - 4416)
ஒருமை நிலையில் இருமையும் தந்த
ஒருமையி னீர்இங்கு வாரீர் (திருஅருட்பா - 4443)
எல்லாம்செய் வல்லான் என்னுள் அமர்ந்து இசைக்கின்றான்
(திருஅருட்பா-5588)
கற்பூரம் மணக்கின்ற
தென்னுடம்பு முழுவதும்
கணவர்திரு மேனியிலே
கலந்தமணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று
கண்டாய்
இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார்
உலகர்
புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும்
தோழி
நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே. (திருஅருட்பா-5723)
'என்சாமி எனதுதுரை என்உயிர்நா
யகனார்
இன்றுவந்து நான் இருக்கும்
இடத்தில் அமர்கின்றார் (திருஅருட்பா-5818)
நான் இருக்கும் இடத்தில்
என்னையன்றி வேறு யாருமில்லை எனக் கண்டவர் சிவவாக்கியார். நான் இருக்கும் இடத்தில் இறைவன்
அமர்ந்திருப்பதை கண்டவர் வள்ளலார். ஆக இருவருக்கும் இங்கு மோதல் மிக அதிகமாகவே இருக்கிறது.
இனி சிவவாக்கியாரின் அடுத்த ஒரு பாடலுக்குச் செல்வோம்... தொடரும்....