Sunday, January 12, 2014

அகஜோதி காணுங்கள்!!


அகஜோதி காணுங்கள்!!

 

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!

 

"ஞான சபை என்பது ஆன்மப்பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் இருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகின்றது."

 

நடராஜர் என்பவர் யார்? என்று மிகத்தெளிவாக இங்கே வள்ளலார் கூறுகிறார். அதாவது உள்ளொளின் அசைவை சைவ சமயத்தில் நடராஜ சிலையாக சிதம்பரத்தில் வைத்து வழிபடுகிறார்கள். ஆனால் இங்கே வள்ளலார் அதே உள்ளொளியின் அசைவை சுத்த சன்மார்க்கத்தில் "ஆன்மக் கொடியாக" வைத்து உண்மையிலேயே நித்தமும் அசைய வைத்து அசத்திவிட்டார்.

 

அப்படிப்பட்ட நடன அசைவுள்ள உள்ளொளி இருக்கும் நமது ஆன்மாவினை ஏழு திரைகள் மறைத்துள்ளன என்பார் வள்ளலார்.

 

"இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில், நான் ஆன்மா, சிற்றணு வடிவன். அந்த சிற்றணு கோடி சூரிய பிரகாசமுடையது. அதன் இருப்பிடம் லலாடஸ்தானம். அதன் வண்ணம், கால் பங்கு பொன்மை முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகளுண்டு. அவை,

1. கறுப்புத்திரை - மாயாசத்தி

2. நீலத்திரை - கிரியாசத்தி

3. பச்சைத்திரை - பராசத்தி

4. சிவப்புத்திரை - இச்சாசத்தி

5. பொன்மைத்திரை - ஞானசத்தி

6. வெண்மைத்திரை - ஆதிசத்தி

7. கலப்புத்திரை - சிற்சத்தி"

 

என்று நம்பெருமானார், நான் யார்? என்று நாம் கேட்கும் கேள்விக்கு மிக அற்புதமாக பதில் உரைத்துள்ளார்கள். மேலும் 'நான்' என்கிற நமது ஆன்மாவினை மறைத்துள்ள ஏழு திரைகளைப் பற்றி தாம் எழுதிய அகவலில் கீழ்காணுமாறு விளக்கியுள்ளார்,

 

கரைவின் மாமாயைக் கரும்பெருந் திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

 

பேருறு நீலப் பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

 

பச்சைத் திரையால் பரவெளி அதனை

அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

 

செம்மைத் திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

 

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை

அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

 

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

 

அந்த சிற்றணுவான ஆன்மா என்பது ஒரு சவ்வாக தொங்குகிறது என்றும் நம்பெருமானார் கூறுகிறார்,

 

"நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும்."

 

தமது அனுபவத்தால் தனது ஆன்மாவினைக் கண்ட நம்பெருமானார், அவ்வான்மா உள்ள நிலையினையே தமது மார்க்கத்திற்கு கொடியாக வைத்து அருளினார். அந்த ஆன்மாவின் உள்ளொளியே நடராஜ நடனம் ஆகும்.

 


இந்த ஏழு திரைகளையும் எவ்வாறு விலக்குவது? அந்த நடராஜ நடனத்தை எவ்வாறு நாம் காண்பது? என்று நம்பெருமானார் பேருபதேசத்தில் விளக்கியுள்ளார்,

 

"பரலோக விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது."

 

"ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது."

"இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், "தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்".

"அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்."


"ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது."

 

"ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்றத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்."

 

எனவே ஆன்மநேயர்களே! நம்மை மறைத்துக்கொண்டிருகிற பச்சைத் திரையினை விலக்குவது நமது முயற்சியினால் மட்டுமே முடியும். அதனை நம்பெருமானார் கூறியபடி கூடிய சீக்கிரம் விலக்கிக்கொண்டால் மற்றத் திரைகளை இறை அருளால் மட்டுமே விலக்க முடியும் என்பதால் அதனை இறையருள் வெகுசீக்கிரம் விலக்கிவிடும் என்றும் நம்பெருமானா கூறியிருப்பதால் நாம் நல் முயற்சியுடன் இருப்போம். இதன் பொருட்டு நாம் தவம் ஏதும் செய்யவேண்டியதில்லை என்றாலும் தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்யும் தவமும், இடைவிடாது இறைவனை நினைக்கும் தவமும் நாம் செய்தே ஆகவேண்டும். எவ்வளவு எளிமையான வழியினை நமக்கு சுட்டிகாட்டுகிறது நமது சுத்த சன்மார்க்கம் என்பதை எண்ணி அதன் வழியில் நடப்போம்.

 

ஆன்மநேயர்களே! நம்பெருமானார் தனது ஊன் உடம்பை ஞானதேகமாக 1872ஆம் ஆண்டிற்கு முன்பே மாற்றிவிட்டார், அவர் தனது ஞானதேகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு இப்பூமியில் தொன்றியும் தோன்றாமலும் இருந்துவந்தார். இறுதியாக 1874 ஆம் ஆண்டு தைப்பூச நன்நாள் அன்று நமது பெருமானார் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் பலர் முன்னிலையில் திருக்காப்பிட்டுக்கொண்டு தன்னை ஒளித்துக்கொண்டார். தம்மை மறைத்துக்கொண்டார். இன்றும் அன்புடையவர்களு தமது ஞான தேகத்துடன் வெளிப்பட்டு வழிநடத்துகின்றார்.

 

பிளாவட்ஸ்கி என்கிற ரஷ்யப் பெண்மணியும் கர்னல் ஓல்காட் என்கிற அமெரிக்கரும் 1892 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் "தியாசபிகல் சொசைட்டி" (பிரம்மஞான சங்கம்) என்ற ஒரு அமைப்பினை ஆரம்பித்தார்கள். அவர்கள் தொழுவூர் வேலாயுதனாரை அழைத்து சிதம்பரம் இராமலிங்கம் குறித்து விளக்க வேண்டினர். நீதிபதிகள் முன்னர் தொழுவூரார் சொன்ன செய்திகள் பதிவு செய்யப்பட்டது. அப்போது நம்பெருமானார் 1874 ஆம் ஆண்டு மேட்டுக்குப்பத்தில் திருக்காப்பிட்டுக்கொண்டார், என்றும் அத்திருக்கதவினை பூட்டியவர்களுள் நானும் ஒருவன் என்றும் விளக்கம் அளித்தார் தொழுவூரார். அதுகேட்டு அச்சங்கத்தவர்கள், இந்த பிரம்மஞான சங்கத்தை தோற்றுவிக்க செயதவர்களுள் வள்ளற்பெருமானும் ஒருவர் ஆவார் என்று உறுதி அளித்தனர், மேலும் வள்ளற்பெருமான் இட்ட கையெழுத்தைக் காட்டினர். தொழுவூரார் அதனைக் கண்டு வியந்துபோனார். நம்பெருமானார் திருக்காப்பிட்டுக் கொண்டப்பின் நிகழ்த நிகழ்வு இது. 

 

எனவே, ஞானதேகம் என்பது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். அது நித்திய தேகம். காலம் கடந்த வான் பொழுதைக் கொண்டது. வான், எங்குமாய் விளங்கினாலும், அது தன்னை வெளிப்படுத்தாமல் உள்ளதைப் போன்றது இந்த ஞான தேகம். இந்த அற்புத தேகத்தைப் பெறவேண்டுமானால் நாம் நம்மைக் காணவேண்டும். நாம் எப்படி ஆன்மாவாக இருக்கிறோம் என்பதனை நம்பெருமானார் மேற்கண்டவாறு தமது அனுபவத்தில் கண்டு கூறியதை, ஞானசபையாக இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார். அதனையே யாம் இங்கே படமாக / சித்திரமாக ஆக்கியுள்ளோம். இப்படத்தில் உள்ளதைப்போன்றுதான் நமது ஒவ்வொருவர் உள்ளும் ஆன்மாவாகிய உயிர் உள்ளது. அதனை காண முயற்சி செய்வோம்.

 

ஞான நிறைவினை குறிக்குப்பதே தைப்பூசம் ஆகும். அப்படிப்பட்ட தைப்பூசத்தன்று ஏழு திரை நீக்கி ஞானசபையில் அருள்ஜோதி காட்சியினை காண இருக்கிறோம். நமது அகத்திலும் அதே செயல்முறையினை செயல்படுத்தி அகஜோதியினை காண முயல்வோம். இனி நமக்கென்று ஆறடிமண் தேவையில்லை, நாமும் ஒளிந்துக்கொள்ள ஒரு அறையினை தேர்ந்தெடுப்போம்.

 

உலகியர் அனைவரும் வருகின்ற 17.01.2014 அன்று வடலூர் வந்திருந்து ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனத்தை கண்டு ஆன்ம ஒளியினை தங்கள் உள்ளுக்குள் காண விழையுமாறு அன்புடன் அழைக்கிறோம். அனைவருக்கும் தைப்பூச ஞானநாள் வாழ்த்துகள். நன்றி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.