"அந்தோ ஈது அதிசயம்"
1872ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25ஆம் நாள் வடலூரில் சத்திய ஞானசபையில் முதல் ஜோதி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. வள்ளல் பெருமானே முன்நின்று விழாவைச் சிறப்புற நடத்துகின்றார்.
பாமர மக்கள் கண்டு களிக்கும் வகையில் ஒருபுறம் வாணவேடிக்கைகள் நடைபெற்றன. இஃது வள்ளல் பெருமானுக்கு உடன்பாடான செய்கையாய் இருந்திராது என்பதானாலோ என்னவோ, அதிர்வேட்டுகளை வெடித்துக் கொண்டிருந்த 'கூனன்' ஒருவனை அதிர்வேட்டு ஒன்று வெடித்து தென்னைமர உயரத்திற்குமேல் தூக்கிப்போட்டது. வேகமாய் வந்து விழுந்த கூனன் மூச்சுப் பேச்சு அற்று மரணம் அடைந்தவனாய்க் கிடக்கின்றான். முதல் ஜோதிவழிபாடே இப்படி ஆயிற்றே என வருத்தப்பட்டனர் பலர்.
கேள்வியுற்று வந்த வள்ளல் பெருமானார் கூனனின் அருகில் வந்து, கண்களால் நோக்கி, கைகளால் தலை முதல் கால்வரை தடவிக்கொடுத்தார். 'அன்பனே எழுந்திரு' என்கிறார். அங்குதான் ஆச்சரியம் நிகழ்ந்தது; அதிசயம் நடந்தது; கூனன் எழுகிறான்; எவ்வித ஊனமும் இன்றி.
வெடிவிபத்தில் ஏற்பட்ட ஊனமும் மறைந்தது பிறப்பில் வளைந்த கூனும் நிமிர்ந்தது. இஃது கட்டுக்கதையோ புராணக் கதையோ, சோடனை செய்து மக்களை ஏமாற்ற நடிக்க வைத்த நாடகமோ அல்ல; உண்மை சம்பவம்; நடந்த நிகழ்ச்சி. இந்த அற்புதக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் சபாபதி குருக்கள், பெருமானாரின் அணுக்கத் தொண்டர்களாகிய கல்பட்டு இராமலிங்கர், காரணப்பட்டு கந்தசாமியார், தொழுவூர் வேலாயுதனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த அற்புத நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்த பாக்கியவான் காரணப்பட்டு கந்தசாமியார், வள்ளலாரின் சரித்திரக்கீர்த்தனைப் பாடல் ஒன்றில் இந்நிகழ்ச்சியை விவரித்துள்ளார்.
மதிநிலை பெறும்வகை உணராமல்
மயங்கும் எங்களை, அவத்தில்
மாளாவகை வகுத்திட்ட வடல்சபை
மகத்து ஆம்பூச நட்சத்திரத்தில்
அதிர்வெடி, தூக்கிஎறிய, கூனன் தேகம்
ஆகாயம் போய்க்கீழ் விழவும் குணமாக
ஆக்கியநின் அருள்கண்டவர் வியந்திடும்
அருமை அறிந்தோமை, ஒண்தவர் நயந்திடும்
கதிபெற்று உய்யக் கடைக்கண்பார் ஐயா,
"இராமலிங்க ஐயா"
கருணை செய்ய இங்கு எமக்கு யார் ஐயா!
(ச.மு.க.பிரபந்தத்திரட்டு - இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - 8)
நமது வள்ளல் பெருமானாரின் கண்கள் பார்த்து கை பட்டதும் பிறப்பில் இருந்த 'கூனன்' என்ற ஊனம் மறைந்தது. நமது அகத்தில் உள் ஒன்று வைத்துள்ள ஊனம் மறைந்து ஞானம் அடைந்து மோனம் பெற்றிட வள்ளல் பெருமானாரின் வழிகாட்டுதலை விட்டால் வேறுவழியே இல்லை என்பதை, அறிந்து அறிவு விளங்குவதற்குக் காரணமான திருவருட்பாவை ஓதி உணர்ந்து வழிபடவேண்டும்.
('அருட்பா அருணாசம்' அவர்கள் எழுதிய 'உள்ஒன்று வைத்து...' - என்ற நூலில் இருந்து...)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.