Friday, March 28, 2014

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

                          சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்!



சமரசம்-என்பது, இவ்வுலகில் உள்ள வெவ்வேறு வகைப்பட்ட மதங்களையும், மார்க்கங்களையும் பின்பற்றும் அன்பர்கள், இறைநிலை தெரிந்து தாங்கள் இதுவரை பின்பற்றிவந்த மதக்கொள்கையினை அறவே விட்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே உளர் என்ற, ஓர்இறைக்கொள்கையில், சுத்த சன்மார்க்கத்தில் ஒன்றுபடுவதாகும்.

சுத்தம்-என்பது, தூய்மை, ஒன்றுமில்லாமை எனப்பொருள்படும். ஆகையால் மற்ற மதக்கொள்கைகள், வழிபாட்டு முறைகள், சின்னங்கள், குறியீடுகள், உருவங்கள், விழாக்கள் போன்றவைகளை, சுத்த சன்மார்க்கத்தின்மூலம் நீக்கி சுத்தம் செய்வதைக் குறிக்கும்.

சன்மார்க்கம்-என்பது, சத்தான பாதை எனப்பொருள்படும். இங்கு 'சத்து' என்பது, மானிடரின் மரணத்தை தடுக்கக்கூடிய சத்தினை அளிக்கக்கூடியதாகவும், அச்சத்தினை பெறும் வழிமுறையினை, தயவு வழிநின்று, வகுத்தளிக்கும்படியாகவும் சுத்த சன்மார்க்கம் விளங்குகின்றது.

சத்தியம்-என்பது, காலத்தாலும், மாயையாலும், வேறு எதனாலும் மாற்றமுடியாத, அழிக்கமுடியாத ஆகாயம் போன்று யாருக்கும் பிடிபடாத, எவற்றுள்ளும் இருக்கின்ற உண்மை எனப்பொருள்படும். அப்படிப்பட்ட உண்மையினையே சுத்த சன்மார்க்கம் பெற்றிருக்கிறது.

சங்கம்-என்பது, மேற்கண்ட சமரசத்தையும், சுத்தத்தையும், சன்மார்க்கத்தையும், சத்தியத்தையும் ஒருங்கே தமது வாழ்வில் கடைபிடித்து நீடுவாழ அடிகோளும் மானிடர்கள் ஒன்றுகூடுமிடம். மேற்கண்டவைகள் குறித்து சத்விசாரம் செய்யுமிடமாக சங்கம் விளங்கி சுத்த சன்மார்க்க முடிபை பெற ஏதுவாக அமைந்துள்ளது.

அன்பர்களே! நமக்கு முதலில் சமரசம் வரவேண்டும், அடுத்து சுத்தம் வரவேண்டும், அதற்கடுத்து சன்மார்க்கம் வரவேண்டும், அதன்பிறகு சத்தியம் வரவேண்டும், இவை நான்கையும் கடந்தப்பிறகுதான் சங்கத்திற்கே வரவேண்டும் என்பதை நம்பெருமானார் எவ்வளவு அற்புதமாக படிநிலை வைத்து தமது சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளார் என்பதை எண்ணும்போது மெய்சிலிர்க்கிறது இல்லையா!

ஆனால், நாம் முதல்படியாக சங்கத்திற்கு சென்று அமர்ந்துவிடுகிறோம். நமக்குள் சமரசம் இருக்கின்றதா? சுத்தம் இருக்கின்றதா? சன்மார்க்கம் இருக்கின்றதா? சத்தியம் இருக்கின்றதா? என்றால் இல்லவே இல்லை என்பதே பதில். அதனால்தான் பல சங்கங்கங்களின் நடைமுறைகளில் சமரசம் இல்லை, சுத்தம் அறவே இல்லை, பிறகு எப்படி அங்கு சன்மார்க்கம் விளங்கும்? சத்தியம் நிலைபெறும்?

எனவே சங்கத்திற்கு நாம் வருவதற்குமுன்னர், நம்பெருமானார் சொன்ன மேற்கண்ட முதல் நான்கு படிகளை கடந்தப்பின்னர் வருகைபுரிந்தால் மட்டுமே அது நம்மை இறவா நிலைக்கு இட்டுச்செல்லும். அச்சங்கத்தில் நடுவேதான் நம்பெருமானும் கூடி குலாவுவார். அச்சங்கத்தைத்தான் நம்பெருமானார் நடத்தி முன்கொண்டுச்செல்வார் என்பதனை நாம் உணர்ந்து தெளிவோம்.

இக்கொள்கையினை, தங்களது ஊழால் கடைபிடிக்க முடியாநிலையில்தான் 99 விழுக்காடு மக்கள் இன்று இவ்வுலகில் உள்ளனர். அவர்களெல்லாம் அவரவர் மதங்களை மார்க்கங்களை கடைபிடித்து பிறகு எப்போது உண்மைநிலை தெரியவருகிறதோ, அதாவது நமது மத மார்க்கங்கள் பொய் எனத்தெரியவருகிறதோ, அப்போது சமரசத்தை கடைபிடித்து படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதே நம்பெருமானாரின் நிலைபாடு.

எனவே சமரசம் இல்லாமல் தொடங்கப்படும் சங்கங்கள் யாவும் வீணே. மேலும் அவை நம்பெருமானாரின் மார்க்கத்தை சத்து இல்லாமல் சொத்தை யாக்கிவிடும். சங்கங்களுக்கு மக்கள் கூட்டம் தேவையில்லை, சமரச நிலையில் ஒருவர் வந்தாலும், அவர் வெகுசீக்கிரம் சுத்தமடைந்து சன்மார்க்கத்தையும், சத்திய நிலையினையும் அடைந்தால் அதுவே, நாம் நம்பெருமானாரின் கொள்கைக்கு நன்றி செலுத்துவதாக அமையும். எனவே சாகாமலிருக்க சமரசத்தை நாடுவோம், சமரசத்தை சுத்தத்தில் காண்போம், சுத்தத்தை சன்மார்க்கத்தில் நிலைநிறுத்துவோம், சன்மார்க்கத்தை சத்தியத்தில் தொடர்வோம், சத்தியத்தை சங்கத்தின்மூலம் பரப்புவோம். அதுவே நம்பெருமானார் உலகுக்கு வகுத்தளித்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" ஆகும். இவ்வாறே நாம், நம்பெருமானார் துவக்கிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை" யினையும், "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை" யினையும் காணவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

Tuesday, March 25, 2014

மடந்தையர்களுடன் கூடுவோம்

                                           மடந்தையர்களுடன் கூடுவோம்

அன்பர்களே! வள்ளலார் மடந்தையர்களுடன் கூடிய நிகழ்வை நாம் இப்போது பார்ப்போம்,


'ஒரு பெண் வலிந்து வந்து என்னைக் கலந்தாள், அதை நினைத்து நான் உளம் வருந்தி அயர்ந்து இருந்தேன். அப்போது வந்து, 'இது கெட்ட காரியம் இல்லை, மகனே! என்று ஆறுதல் கூறிய பெருந்தகை நீ' என்று இறைவனைப்பற்றி அருள்விளக்க மாலையில் அடிகள் கூறுகிறார். 'எனக்கு மடந்தையர்கள் மீது மையல் சிறுது ஏற்பட்டதும் மடந்தையர்களைத் தாமே வலிந்து வரச்செய்து எனக்கு மாண்புடைய நண்பன் ஆனாய்' என்று பாடியிருக்கிறார்.

ஒருமடந்தை வலிந்தனைந்து கலந்தகன்ற பின்னர்
    உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
    பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மார்இருவர் என் எதிரே நடிக்கச்
    செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
    காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே (4136)

மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
    வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே (4158)

அடிகளுக்குப் பெண்மீது விருப்பம் ஏற்பட்டவுடனே இறைவன் நட்புடன் ஒரு மடந்தையை அடிகள்பால் அனுப்பினான் என்று கூறினால் அது நகைப்பிற்கு இடமளிக்கும்.

திருஅருட்பா பாடல்களில் வரும் தமிழ் வார்த்தைகளை நேரடியாக பொருள் கொண்டுவரும் பாடல்கள் பல. மேற்கண்டவாறு மறைமுக பொருள்கொண்டுவரும் பாடல்களும் சில உள்ளன.

உலகியலில் ஆடவர்தான் பெண்களை வலிய கலப்பார்கள். அதற்கு உலகியலில் தண்டனை உண்டு. ஆனால் வள்ளலார் இப்பாடலில், தன்னை ஒரு பெண் வலிய வந்து கலந்தாள் என்கிறார். இது எப்படி உலகியலில் பொருந்தும்! ஆகையால் இதற்கு ஏதோ ஒரு மறைபொருள் உள்ளது என்பதை அறியவேண்டும்.

வள்ளலார் தன்னைமறந்து இருக்கையில், ஒரு பெண் பலாத்காரமாகக் கூடி இன்பமுற்ற பின்பு பிரிந்து போனதைப் போன்ற உணர்வை தனது புருவமத்தியில் உணருகிறார். அதன் உண்மை உணராது ஒரு பெண் என்னை வலிய கலந்து இன்புற்றாளே! இது என்ன கொடுமை, நான் தவறு செய்துவிட்டேனோ? என கலங்குகிறார்.

அப்போது இறைவன், உண்மையில் நீ எந்த தவறும் செய்யவில்லை, வருந்தாதே. நீ அனுபவித்த இன்பம் ஆண் பெண் கூட்டுறவால் ஏற்பட்ட கீழ்த்தரமான இன்பம் அல்ல. உனது சிரசின் உச்சிக்குக்கீழே நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. இது நமது திருவிளையாடல் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு ஆறுதல் கூறுகிறார்.

அடுத்ததாக, இரண்டு பெண்கள் தன்முன்னால் நடனம் செய்தனர், என்கிறார் வள்ளலார். பெண்களின் நடனத்தை ரசித்ததால் எனது குறைகளெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தீர்த்ததாகவும் கூறுகின்றார். பெண்களின் நடனத்தை ரசிப்பதால் நமது சிறுமைகள் போகுமென்றால், நான் ஒரு நல்ல ரசிகனாக இருந்திருப்பேன், அதைவிட வேறென்ன முக்கியவேலை எனக்கு இருக்கிறது, ஏன் நீங்களும் கூட அவ்வாறே இருந்திருப்பீர்கள். ஆனால் அது அப்படியல்ல. அதாவது நம் தலையில் மூன்று சுரப்பிகள் உள்ளன. அவைகளில் இரண்டு சுரப்பிகள் ஒன்றோடொன்று எதிர்ரெதிர் செயல்புரிகிறபோது ஏற்படுகிற இன்பத்தாலும், தெளிவாலும் வள்ளலாரின் சிறுமைகள் நீங்கின என்பது கருத்து.

'உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள், தெள்ளிகுடைந்து நின்று ஆடார், வினை கெடார்' என்பது திருமந்திரம். நம் தலையினுள் மூன்று சுரப்பிகள் உள்ளன. அவை, பிணியல் (Pineal), பிட்டுடரி (Pituitari), கரோடிட் (Carotid), எனபன. இச்சுரப்பிகள் முறையே பெருமூளைக்கும், சிறுமூளைக்கும் இடையே ஒன்றும், அன்னம் என்கிற மேல்வாய்க்கு அருகில் ஒன்றும், குரல்வளைக்கு அடுத்து ஒன்றுமாக இருக்கின்றன. இந்த மூன்று சுரப்பிகளைத்தான் மூன்று மடந்தைகளாக ஞானிகள் குறிப்பிடுவார்கள்.

'பிளாவட்ஸ்கி' அம்மையார் எழுதிய மறைஞானம் என்ற நூலில், இச்சுரப்பிகளில் ஒன்றை 'பெண்உடம்பு' என்றே குறிப்பிடுகிறார். பெண் உடம்பு என்பது மூளையிலுள்ள பெண்குறிதான் என்கிறார். 'The uterus of the Brian' என்பது அம்மையார் திருவாக்கு. இந்த சுரப்பிகள் இயக்கத்தால் உண்டாகிற இன்ப மயக்கம், ஆண் பெண் கூட்டுறவால் உண்டாகிற இன்ப மயக்கம் போன்று இருக்கும்.

ஆண் பெண் கூட்டுறவால் பிறக்கிற பிள்ளை அணுபட்ச சிருட்டியாகும். அணு என்பது தூலப் பொருள். விபு என்பது ஒளிக்கதிர். விபுபட்ச சிருட்டியினை வள்ளலார் குறிக்கிறார். சிரநடு சிற்றம்பலத்திலுள்ள தெய்வீக உள் ஒளியாலும் சிந்தனையாகிய நம் மனமெனும் எண்ணத்தின் விளைவான உயிர் ஒளிகூட்டுறவாலும் உண்டாவது விபுபட்ச சிருட்டியாகும்.

எனவே நாமும் இந்த விபுபட்ச சிருட்டியை நமது மடந்தையர்களுடன் கூடிபெற்று இன்பம்அடைவோம். நம்பெருமானாருக்கு இறைவனே இச்சுகத்தை வலிய கொடுத்ததுதான் மற்ற ஞானிகளுக்கும் நம்பெருமானாருக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். மற்ற ஞானிகளெல்லாம் இதனை தேடியடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி 
 


 

Tuesday, March 18, 2014

வள்ளலார் உணர்த்தும் ஒருமைப்பாட்டுரிமை

                            வள்ளலார் உணர்த்தும் ஒருமைப்பாட்டுரிமை

                                                          தி.ம.சதீஷ்கண்ணன்
           விரிவுரையாளர், தாவரவியல் துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி)
                                மன்னன்பந்தல், மயிலாடுதுறை - 609 305.
                                                                                                                                                                    



  நம் பாரதத் திருநாடு உலகளாவிய ஆண்மிக ஞானிகளை உருவாக்கிய நாடு. அந்த ஞானிகள் அனைவரும் உலகிற்கு ஏற்ற உயரிய வழிகளை ஒருமைப்பாட்டு நெறியில் எடுத்துக் காட்டியுள்ளனர். 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் தோன்றிய வள்ளல் பெருமான் சிதம்பரம் இராமலிங்கர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். தொடக்கத்தில் அவர் சைவத்தில் வேரூன்றிப் பின்னர் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து, தத்துவங்கடந்த அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங் கடவுளை உலகோர் அறியுமாறு கண்டு காட்டிய உயர்ந்த ஞானியாகத் திகழ்கின்றவர்.

உயரியக் குறிக்கோள்

    வள்ளல் பெருமானார் சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்தில் "எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதிற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்...." என சமயங்கள், மதங்கள், மார்க்கங்களைத் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்குத் தடைகள் என்று கூறி உள்ளார்கள். அதுவும் முக்கிய தடைகள் எனவும் மேலும் எக்காலத்திற்கும் என்றும் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ள இக்கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

    இதைப்போலவே தாம் அருளிய சத்திய பெருவிண்ணப்பத்தில் "வாலிபப்ப்ருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகளென்றும், உள்ள படியே எனக்கறிவித்து அச்சமயா சாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்தருளினீர்" என வெளிப்படையாகவும் திண்ணமாகவும் எடுத்துரைக்கின்றார்.

ஒருமைப்பாட்டுணர்வு

    வள்ளற்பெருமான் சிதம்பரம் இராமலிங்கத்தின் உயரிய நோக்கம் உலகோர் அனைவருக்கும் பொதுவானவை, அவர் உயிரிரக்கத்தைப் பெரிதாகப் போற்றியவர். அன்பும், அருளும், கருணையும் வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் எனப் பல வகையில் வலியுறுத்தியவர். உலக மக்களிடையே ஒருமைப்பாடு காண விழைந்தவர். சமரச சுத்த சன்மார்க்கமே வாழ்வியல் நெறியாகும் என உறுதியாகவும், இறுதியாகவும், அறுதியாகவும் எடுத்தியம்பியவர். தயவு என்னும் பெருங்கருணைத் திறமே தம்மை ஏறாத மேல்நிலைக்கு ஏற்றி வைத்தது என உலகிற்கு உண்மையை உரைத்தவர்.

    வள்ளலார் மேலும் தமது திருமுறையில் அநேக இடங்களில் சாதி, மதம், சமயம் முதலிய்வற்றைப் பற்றிக்குறிப்பிடுகையில்

    "சாதிமதம் சமயமெனும் சங்கடம்விட்டறியேன்
     சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம்விட்டறியேன்..." (3319-வது பாடல்)

என சாதி மத சமயங்களைச் சங்கடமாகவும், சஞ்சலமாகவும் கருதுகின்றார்.

    "கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்
      கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார்வீனே
     நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
     நீடுலகில் அழிந்திவிட நினைதேனோ..." (3766-வது பாடல்)

    "சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
     சாத்திரக் குப்பையும் தணந்தேன்..." (4075-வது பாடல்)

என நமக்கெல்லாம் கோடிட்டுக் காட்டுகின்றார்.

    "நால்வருணம் ஆசிரமம் ஆசாரம்முதலா
     நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளைய யாட்டே..." (4174-வது பாடல்)

என மிகத் தெளிவாக எடுத்து இயம்புகின்றார்.

    "மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக்
     கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார்..." (4728-வது பாடல்)

எனவும்,

    "குலத்திலேசமயக் குழியிலே நரகக்குழியிலே குமைந்து வீண் பொழுது
     நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து நிற்கின்றார்..." (4728-வது பாடல்)

என்றும் நம் அவலநிலையைச் சுட்டுகின்றார்.

    "சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
     சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
     ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
     அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே..." (5566-வது பாடல்)

என நம் செயலால் நாம் அழிவது அழகல்லவே என மிக்க கவலை கொண்டு இயம்புகின்றார்.

மேலும்,

    "...பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில்
     புகுதாதீர்..." (5595-வது பாடல்)

என நம்மை எச்சரிக்கையும் செய்கின்றார்.

    "சாதி சமயக் சழக்கெலாம் அற்றது
     சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது" (4913-வது பாடல்)

என்றும்,

    "சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்
     சோதியைக் கண்டே னடி - அக்கச்சி
     சோதியைக் கண்டே னடி" (4949-வது பாடல்)

என சாதி மத சமயங்களை தவிர்த்ததால் தாம் பெற்ற பேற்றை நமக்குப் பூரிப்போடு தெரிவிக்கின்றார்.

    இங்ஙனமாக வள்ளற்பெருமான் மேற்கண்ட பாடல் அடிகள் போல் பல இடங்களில் அறுதியிட்டு உறுதியிட்டு நமக்குத் தெரிவித்தப்பிறகு நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

பேருமதேசம்

    மேற்கண்ட பாடல்கள் போலவே ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7ஆம் தேதி (22-10-1873) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடிகட்டினவுடனே நடந்த நிகழ்ச்சியின் குறிப்பில் பேறுபதேசமாகத் தெரிவித்தது என்னவெனில்,

    "இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்... சைவம், வைணவம், முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம், முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில் அவைகளிலும், அவ்வச்சமய மதங்களிலும் அற்பப்பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆண்ம அனுபவத்தைப் பெற்று கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும் இவைகளுக்கு எல்லாம் சாஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவுவென்று அளவு... சொல்லமுடியாது. அது பட்டனத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாஷிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற ஸ்தோத்திரங்களே போதும்..." என சைவத்தில் முன்னர் வைத்திருந்த பற்றுகளையும் அவற்றால் யாதொரு பயனும் பெறவில்லை என்பதையும் சுட்டுக்காட்டியுள்ளார்.

    மேலும் தமது பேருபதேசத்தில், "இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலை மேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்... நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை. என்னை ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது யாதெனில் "தயவு" "தயவு" என்னுங் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தால் பெரிய நிலைமேல் ஏறலாம்.... நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்" என்கிறார் வள்ளற்பெருமான்.

    அவர் மேலும் கூறும்போது, எமது மார்க்கம் இறப்பொழுக்கும் சன்மார்க்கம் என்கிறார். அதற்கு சாட்சியும் அவரே. இறைவன் பெருங்கருணையைப் பெறுவதற்குப் பெருங்கருணையாகிய பசிப்பிணி போக்குதலே சிறந்த தீர்வாகும் என வலியுறுத்துகிறார். அனைத்து தத்துவங்களை ஒருங்கே பெற்ற உயரறிவுடைய இம்மனித தேகத்தின் மூலம் வெளிமுழுவதும் பூரணமாகி விளங்குகின்ற கடவுளின் உண்மை/இயற்கை உண்மையை ஒருமைபாட்டுடன் கண்டறிந்து பேரின்ப வாழ்வை வாழ்வொமாக.

                                                                    (முற்றும்)

குறிப்பேடு:

1. திருஅருட்பா - ஊரணடிகள் பதிப்பு
2. திருஅருட்பா - உரைநடைப்பகுதி, வள்ளலார் தெய்வநிலையப்பதிப்பு, வடலூர்.

Thursday, March 13, 2014

சாதாரன மனிதனுக்கும் சன்மார்கிக்கும் என்ன வித்தியாசங்கள்



சாதாரன மனிதனுக்கும் சன்மார்கிக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளது என்பதை வரிசைப்படுத்தி கூறமுடியுமா? - முகநூல் நண்பர்    திரு.வினோத்குமார்-சேலம்

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

அன்பென்றால் அதுஆண்டவன் ஒருவனுக்கே உடையது
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது பெண்பாலுடையதென்பான்

ஆன்றபுறானங்கள் ஆகமங்கள் இதிகாசவேதங் களையனைத்தும்
ஏன்னென்பான் சன்மார்க்கி அற்றவன்அது உயிரென்பான்

இன்னுயிரை கொய்துஊன் உண்ணும்மாக்களை புறஇனம்
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது வாழ்வாதாரமென்பான்

ஈன்றபிறவியால் இனங்களில் உயர்வேதுசாகாத இனமேஉயர்ந்த
ஊன்இனமென்பான் சன்மார்க்கி அற்றவன்அது உரிமைஎன்பான்

உன்தெய்வம் என்தெய்வம் என்பதேது அருட்பெருஞ்ஜோதி
ஒன்றேஎன்பான் சன்மார்க்கி அற்றவன்அது மதமென்பான்

ஊன்றியசமய மதமார்க்கங்கள் எல்லாம்பிள்ளை விளையாட்டென
சான்றளிபான் சன்மார்க்கி சகத்தவன்அது மேலேரும்வீதிஎன்பான்

என்உடல் பொருளாவி அனைத்தும்எம் தந்தையுடையது
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது என்னுடையதென்பான்

ஏன்என்று விசாரனையில் இருந்துக்கொண்டு உயிர்களெல்லாம்
தான்னென்பான் சன்மார்க்கி தவிர்த்தவன்அது விதிஎன்பான்

ஐன்சிங்வங் பங்அம்சிவவசி ஓம்அரிஅர இவைபரிபாஷை
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது மந்திரமென்பான்

ஒன்றென காணும்காட்சியும் ஒன்றெனஅறியும் அறிவும்வேண்டும்
என்பான் சன்மார்க்கி அற்றவன்அது வியர்த்தமென்பான்

ஓன்றவன் கட்டளையை ஏற்றுஇறந்தாரை புதைக்கவேண்டுமென்
பான்சன்மார்க்கி மற்றவன் பயந்துஅது வழிவந்ததென்பான்

ஒளவஎய்தும் சன்மார்க்க ஒழுக்கங்களை நம்உயிரைபிடிக்க
கெளவவேண்டுமென்பான் சன்மார்க்கி கடுத்தவன்அது வீணென்பான்

ஃதொருமாடத்தில் ஏறிஅகத்துள் ஆடும்ஜோதியை காணசகத்துள்
ஈதொருமார்க்கமென்பான் சன்மார்க்கி அற்றவன்அது புறத்தேஎன்பான்


Monday, March 3, 2014

சதாவதானி செய்குதம்பிப் பாவலர்

சதாவதானி செய்குதம்பிப் பாவலர்


சென்னையில் வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அருட்பா - மருட்பா சொற்போர்கள் மக்களை ஈர்த்தன. ஒரு சாரார் வள்ளலார் பாடியவை அருட்பா இல்லை. மருட்பா என்று வாதிட்டனர். வள்ளலாரின் பக்தர்கள் அதை மறுத்து, சுவாமிகள் பாடியது அருட்பாவேதான் என்று எதிர் வாதமிட்டனர். அருட்பா கட்சியில் மறைமலையடிகள், தொழுவூர் வேலாயுத முதலியார் (இவர் வள்ளலாரின் மாணவர்) ஆகியோர் இருந்தனர். மருட்பா கட்சியில் பெரும்புலவர் கதிர்வேல் பிள்ளையும் அவர் மாணாக்கர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. வும் இருந்தனர். (கதிர்வேல்பிள்ளை காலமாகியப்பின் திரு.வி.க. பின்னர் அருட்பா கட்சிக்கு மாறிவிடுகிறார்)

ஒரு மன்றத்தில் நடைபெற்ற இந்த சொற்போரில் ஒரு முறை புலவர் கதிர்வேல் பிள்ளை ஆரவாரமாக,

'நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே
  நாணும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே...'

என்று வள்ளலார் பாடியதைப் பழித்தும் இழித்தும் பேசினார்.

பக்தர்கள் ஆண்டவரின் பாதார விந்தைகளையே அடைய விரும்புவர், ஆனால் வள்ளலார் இம்மரபுக்கு முரணாக ஆண்டவன் முடிமீது சென்று அமர ஆசைப்படுகின்றார். இது ஆணவம் அல்லவா? இது அடுக்குமா? இது போன்ற பாடல்களை எப்படி அருட்பா என்று கூறமுடியும்? வள்ளலார் மருட்சியுற்று இப்படிப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். எனவே அவை மருட்பாவே என்ற ஆவேசமாகப் பேசி முடித்தார். செய்குத்தம்பிப் பாவலரால் இந்தப் பேச்சைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. உடனே விறுவிறுவென்று மேடைக்குச் சென்றார். தலைவரின் அனுமதியை வேண்டி பெற்றபின் இப்படி பேசினார்.

புலவரின் (கதிர்வேல் பிள்ளை) ஆழ்ந்த புலமைக்கும் சொல்லாற்றலுக்கும் தலை வணங்குகின்றேன். அதே சமயம் அவருடைய கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். பிள்ளையவர்கள் எடுத்துக்காட்டிய பாடலில் 'நாதர் முடி' என்பது அச்சுப்பிழையாக இருக்க வேண்டும். வள்ளலார் 'நாத முடி' என்றுதானே பாடியிருக்கிறார்.

நாதம் என்பதற்குப் பிரணவம் என்பது பொருந்தும். அந்த நாதத்திற்கு மேல் சந்திரமண்டலம் இருக்கிறது, அந்தச் சந்திரமண்டலத்தில் போய் அமர்ந்திருக்க தாம் விரும்புவதாக வள்ளலார் கூறுகிறார். இதில் என்ன பிழை இருக்க முடியும்?

நாதம் முடிமேல் என்பது சைவசித்தாந்தம் கூறும் 36 தத்துவங்களில் நாத தத்துவத்தின் மேல் நிலையைக் குறிக்கிறது. அந்த மேல் நிலை பரவெளி எனப்படும் அதை 'சிவானந்தப் பெருவெளி' என்றும் கூறுவர், தாம் அப்பெருநிலையை அடைய வேண்டுமென்பதையே 'நாத முடிமேல் அங்கு நானும் வர வேன்டுகிறேன்' என்று பாடினார்.

பிள்ளையவர்கள் குறிப்பிட்டது திருஅருட்பா ஆகும். திருமுறையில் வெண்ணிலாவை முன்னிலைப்படுத்திப் பாடும் பாடலில் உள்ள இரண்டாவது கண்ணி இந்தக் கண்ணியாகும். இந்தக்கண்ணியின் முன் பின் கண்ணிகளையும் நோக்கிப் பொருள் கொள்ள வேண்டும். அந்தக் கண்ணியில்,

'சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே - நானும்
  தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே'

என்றார், இதில் 'தாழ்ந்து விழ வேண்டுகின்றேன்' என வேண்டியது வள்ளலாரின் பணிவைத்தானே காட்டுகிறது. அவர் ஒன்றும் ஆணவத்தால் தடுமாறவில்லை என்று பேசி முடித்தார். புலவர் கதிர்வேல் பிள்ளையின் முகத்தில் அசடு வழிந்தது. வள்ளலாரின் அன்பர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கதிர்வேல் பிள்ளையின் எதிர்வேல் பிள்ளை என அவர்கள் செய்குத்தம்பிப் பாவலருக்கு பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். சதாவதானி செய்குதம்பிப் பாவலர் பிறப்பால் இஸ்லாமியரான போதும் வள்ளலாரின் பாடல்களில் மிகப்பெரும் ஈடுபாடு உடையவர் என்பதை அன்று தன் பேச்சால் நிறுவினார்.