Tuesday, March 18, 2014

வள்ளலார் உணர்த்தும் ஒருமைப்பாட்டுரிமை

                            வள்ளலார் உணர்த்தும் ஒருமைப்பாட்டுரிமை

                                                          தி.ம.சதீஷ்கண்ணன்
           விரிவுரையாளர், தாவரவியல் துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி)
                                மன்னன்பந்தல், மயிலாடுதுறை - 609 305.
                                                                                                                                                                    



  நம் பாரதத் திருநாடு உலகளாவிய ஆண்மிக ஞானிகளை உருவாக்கிய நாடு. அந்த ஞானிகள் அனைவரும் உலகிற்கு ஏற்ற உயரிய வழிகளை ஒருமைப்பாட்டு நெறியில் எடுத்துக் காட்டியுள்ளனர். 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் தோன்றிய வள்ளல் பெருமான் சிதம்பரம் இராமலிங்கர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். தொடக்கத்தில் அவர் சைவத்தில் வேரூன்றிப் பின்னர் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து, தத்துவங்கடந்த அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங் கடவுளை உலகோர் அறியுமாறு கண்டு காட்டிய உயர்ந்த ஞானியாகத் திகழ்கின்றவர்.

உயரியக் குறிக்கோள்

    வள்ளல் பெருமானார் சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்தில் "எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதிற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்...." என சமயங்கள், மதங்கள், மார்க்கங்களைத் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்குத் தடைகள் என்று கூறி உள்ளார்கள். அதுவும் முக்கிய தடைகள் எனவும் மேலும் எக்காலத்திற்கும் என்றும் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ள இக்கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

    இதைப்போலவே தாம் அருளிய சத்திய பெருவிண்ணப்பத்தில் "வாலிபப்ப்ருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகளென்றும், உள்ள படியே எனக்கறிவித்து அச்சமயா சாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்தருளினீர்" என வெளிப்படையாகவும் திண்ணமாகவும் எடுத்துரைக்கின்றார்.

ஒருமைப்பாட்டுணர்வு

    வள்ளற்பெருமான் சிதம்பரம் இராமலிங்கத்தின் உயரிய நோக்கம் உலகோர் அனைவருக்கும் பொதுவானவை, அவர் உயிரிரக்கத்தைப் பெரிதாகப் போற்றியவர். அன்பும், அருளும், கருணையும் வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் எனப் பல வகையில் வலியுறுத்தியவர். உலக மக்களிடையே ஒருமைப்பாடு காண விழைந்தவர். சமரச சுத்த சன்மார்க்கமே வாழ்வியல் நெறியாகும் என உறுதியாகவும், இறுதியாகவும், அறுதியாகவும் எடுத்தியம்பியவர். தயவு என்னும் பெருங்கருணைத் திறமே தம்மை ஏறாத மேல்நிலைக்கு ஏற்றி வைத்தது என உலகிற்கு உண்மையை உரைத்தவர்.

    வள்ளலார் மேலும் தமது திருமுறையில் அநேக இடங்களில் சாதி, மதம், சமயம் முதலிய்வற்றைப் பற்றிக்குறிப்பிடுகையில்

    "சாதிமதம் சமயமெனும் சங்கடம்விட்டறியேன்
     சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம்விட்டறியேன்..." (3319-வது பாடல்)

என சாதி மத சமயங்களைச் சங்கடமாகவும், சஞ்சலமாகவும் கருதுகின்றார்.

    "கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்
      கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார்வீனே
     நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
     நீடுலகில் அழிந்திவிட நினைதேனோ..." (3766-வது பாடல்)

    "சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
     சாத்திரக் குப்பையும் தணந்தேன்..." (4075-வது பாடல்)

என நமக்கெல்லாம் கோடிட்டுக் காட்டுகின்றார்.

    "நால்வருணம் ஆசிரமம் ஆசாரம்முதலா
     நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளைய யாட்டே..." (4174-வது பாடல்)

என மிகத் தெளிவாக எடுத்து இயம்புகின்றார்.

    "மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக்
     கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார்..." (4728-வது பாடல்)

எனவும்,

    "குலத்திலேசமயக் குழியிலே நரகக்குழியிலே குமைந்து வீண் பொழுது
     நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து நிற்கின்றார்..." (4728-வது பாடல்)

என்றும் நம் அவலநிலையைச் சுட்டுகின்றார்.

    "சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
     சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
     ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
     அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே..." (5566-வது பாடல்)

என நம் செயலால் நாம் அழிவது அழகல்லவே என மிக்க கவலை கொண்டு இயம்புகின்றார்.

மேலும்,

    "...பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில்
     புகுதாதீர்..." (5595-வது பாடல்)

என நம்மை எச்சரிக்கையும் செய்கின்றார்.

    "சாதி சமயக் சழக்கெலாம் அற்றது
     சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது" (4913-வது பாடல்)

என்றும்,

    "சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்
     சோதியைக் கண்டே னடி - அக்கச்சி
     சோதியைக் கண்டே னடி" (4949-வது பாடல்)

என சாதி மத சமயங்களை தவிர்த்ததால் தாம் பெற்ற பேற்றை நமக்குப் பூரிப்போடு தெரிவிக்கின்றார்.

    இங்ஙனமாக வள்ளற்பெருமான் மேற்கண்ட பாடல் அடிகள் போல் பல இடங்களில் அறுதியிட்டு உறுதியிட்டு நமக்குத் தெரிவித்தப்பிறகு நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

பேருமதேசம்

    மேற்கண்ட பாடல்கள் போலவே ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7ஆம் தேதி (22-10-1873) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடிகட்டினவுடனே நடந்த நிகழ்ச்சியின் குறிப்பில் பேறுபதேசமாகத் தெரிவித்தது என்னவெனில்,

    "இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்... சைவம், வைணவம், முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம், முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில் அவைகளிலும், அவ்வச்சமய மதங்களிலும் அற்பப்பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆண்ம அனுபவத்தைப் பெற்று கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும் இவைகளுக்கு எல்லாம் சாஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவுவென்று அளவு... சொல்லமுடியாது. அது பட்டனத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாஷிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற ஸ்தோத்திரங்களே போதும்..." என சைவத்தில் முன்னர் வைத்திருந்த பற்றுகளையும் அவற்றால் யாதொரு பயனும் பெறவில்லை என்பதையும் சுட்டுக்காட்டியுள்ளார்.

    மேலும் தமது பேருபதேசத்தில், "இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலை மேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்... நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை. என்னை ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது யாதெனில் "தயவு" "தயவு" என்னுங் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தால் பெரிய நிலைமேல் ஏறலாம்.... நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்" என்கிறார் வள்ளற்பெருமான்.

    அவர் மேலும் கூறும்போது, எமது மார்க்கம் இறப்பொழுக்கும் சன்மார்க்கம் என்கிறார். அதற்கு சாட்சியும் அவரே. இறைவன் பெருங்கருணையைப் பெறுவதற்குப் பெருங்கருணையாகிய பசிப்பிணி போக்குதலே சிறந்த தீர்வாகும் என வலியுறுத்துகிறார். அனைத்து தத்துவங்களை ஒருங்கே பெற்ற உயரறிவுடைய இம்மனித தேகத்தின் மூலம் வெளிமுழுவதும் பூரணமாகி விளங்குகின்ற கடவுளின் உண்மை/இயற்கை உண்மையை ஒருமைபாட்டுடன் கண்டறிந்து பேரின்ப வாழ்வை வாழ்வொமாக.

                                                                    (முற்றும்)

குறிப்பேடு:

1. திருஅருட்பா - ஊரணடிகள் பதிப்பு
2. திருஅருட்பா - உரைநடைப்பகுதி, வள்ளலார் தெய்வநிலையப்பதிப்பு, வடலூர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.