இறை சோதனை
வாழ்வு முடிந்தது வென்றவர் வாழ்க!
வீழ்ந்து விடாதவர்
வீரமும் வாழ்க!
நன்றி நவின்றிட்ட
நல்லவர் வாழ்க!
என்னை வளர்த்திட்ட
என்னவர் வாழ்க!
சுவாசங்கள் நின்றது
சுகமெலாம் சூழ்க!
நிவாரண மில்லை நீர்த்துளி
சூழ்க!
ஆழ்துயில் கொண்டதால்
அமைதியே சூழ்க!
தாழ்கொண்ட கண்களில்
தயவொளி சூழ்க!
ஊழ்வினை விதியெனும்
உறவுகள் வீழ்க!
ஏழ்பிறப் பெடுக்கும்
ஏந்தலும் வீழ்க!
நாயகன் பயந்திடும்
நரகமும் வீழ்க!
ஆயகலை களும் அவர்தாள்
வீழ்க!
பிறப்புறும் நிகழ்வும்
புண்ணிய மில்லை!
இறப்புறும் நிகழ்வும்
இனியது மில்லை!
இடைப்பட்ட நாட்களில்
இறைவனு மில்லை!
விடைபெற்றுக் கொண்டவர்
விண்டது மில்லை!
பிறந்தவர் இறைவனை
பார்க்கவு மில்லை!
இறந்தவர் இறைவனை
அடையவு மில்லை!
புண்ணியன் கணக்குகள்
புரியவு மில்லை!
மண்ணினில் மனிதர்கள்
மறக்கவு மில்லை!
மதங்களும் பூமியில்
மரணிக்க வில்லை!
அதனால் இறைவன் அருளுவ
தில்லை!
தலைவனின் தருமம்
தவறிய தில்லை!
வலையெனும் மாயையை
விட்டவ ரில்லை!
இலையுதிர் மரங்களும்
அழுதிட வில்லை!
கலையுறும் கற்களும்
கலங்கிட வில்லை!
உறவுறும் நினைவுகள்
உறங்கிட வில்லை!
மறதியைப் போலொரு
மாமருந் தில்லை!
வந்தனம் புகன்ற
வாய்மொழி எங்கே?
சந்தனம் தடவிய சொந்தங்கள்
எங்கே?
கருணைக் கொண்ட கண்ணொளி
எங்கே?
நருமணம் பூசிய நாயகன்
எங்கே?
திருமணம் புரிந்த
தருமனும் எங்கே?
குருவென வணங்கிய
குணங்களும் எங்கே?
என்னுடல் தழுவிய
என்னவன் எங்கே?
தன்னையே எனக்குத்
தந்தவன் எங்கே?
கன்னங்கள் வருடிடும்
கைகளும் எங்கே?
என்மடி சுவைத்திடும்
உதடுகள் எங்கே?
உச்சியை முகர்ந்திட்ட
உத்தமன் எங்கே?
எச்சிலை உண்டிட்ட
அச்சிலை எங்கே?
கண்ணென வணங்கிய
கால்களும் எங்கே?
உண்டு உறங்கிய உறவோன்
எங்கே?
மோகம் கொண்டிட்ட
மன்னவன் எங்கே?
தேகம் புதையுண்ட
தடங்களும் எங்கே?
மரணமிலா தொரு மார்க்கமும்
எங்கே?
சரணம டைந்தேன் சற்குரு
எங்கே?
ஜீவ காருண்ய ஜீவனும்
எங்கே?
பாவ புண்ணியம் பகர்ந்தவர்
எங்கே?
செத்தாரை எழுப்பிடும்
சித்தனும் வருக!
நித்திரை யாளரை
நிறுத்திட வருக!
மாண்டவர் எழுந்திட
மருந்தோடு வருக!
ஆண்டவர் கட்டளை
ஆமென்று வருக!
மரணம் தவிர்த்த
மன்னவன் வருக!
பரமா காச பரவொளி
வருக!
அருட்பெருஞ் ஜோதி
அளித்திட வருக!
பருஉடம்பி னுள்உயிர்
புகுத்திட வருக!
தனிப்பெருங் கருணை
தலைவன் வருக!
பனித்துளிபோல் துயர்
போக்கவே வருக!
சித்தெல்லாம் செய்யும்
சித்தன் வருக!
சுத்த சன்மார்க்க
சுகந்தர வருக!
அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் - கடலூர்.
9445545475
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.