Saturday, August 1, 2015

இராமலிங்க அந்தாதி - 4

அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  


https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWOGNLaEJDdkIxNms/view?usp=sharing
               இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா

அண்ட விரிவென்னும் அனந்த அலையை
பிண்டத்தின் உள்ளே பாரப்பா - உண்பது
அனைத்தும் அந்த அண்டமே ராமலிங்கமே
கனையாகி அதனைக் கடந்தான்.

கடவுள் நிலையறிய கருணை வேண்டும்
அடங்கலு மறிய அம்மயமாவாய் - சடங்குகளைக்
கட்டி அழக் கூடாதே ராமலிங்கமே
விட்டதினால் பெற்றதே வரம்.

வரம் வேண்டுபவர்க்கு வம்புகள் எதற்கு
சிரம்நாடி யவனை சிக்கெனப்பிடி - மரக்கறி
உணவே வரமா யிருக்க ராமலிங்கமே
பிணக்கறி உண்டால் பிணிதான்.

பிணிமூப்பு மரணப் பயல்களை தடுக்கவே
மணிமன்றில் ஏறி மன்றாடு - பணிசெய்
திருந்தால் பிணி இல்லையென ராமலிங்கமே
குருவாகி சொன்னான் கனித்து.

கனிந்த எக்கவியும் கடவுள் அருளன்றி
இனிக்குமோ கனிந்து என்பயன் - சனி
பாம் பிரண்டிற்கு பயந்தோ ராமலிங்கமே
நாம் சன்மார்க்கம் நடத்துவது.

நடக்கும் செயலெலாம் நாதன் அறிவான்
மடமென்று மாளிகை மாயைஏன் - அடங்க
மறுக்கும் மாயா மடத்தை ராமலிங்கமே
அறுக்கும் தந்திரம் அறிவான்.

அறிவிக்க அறிந்த உண்மை சிலவே
பறித்தறிய வேண்டியது பலவாம் - குறிபார்த்து
அடிக்கும் இடம் எதுவென ராமலிங்கமே
நடித்த அருட்பாவில் நாடுவாய்.

நாடுகின்ற எல்லாம் நலந்தருமோ உன்
வீடு சொந்தமாக வேண்டாமா - சாடுகின்ற
எதையும் விட்டா யெனில் ராமலிங்கமே
அதைச் செய்வான் அன்று.

அன்றென்றும் இன்றென்றும் என்றென்றும் கூறும்
தன்னிலையை மறப்பதே தயவு - அன்பனாகி
சுத்த சன்மார்க்க செயலால் ராமலிங்கமே
பித்தமெனும் காலம் போக்குவான்.

போக்கெல்லாம் தெரிய போகத்தை விட்டு
ஆக்கையை நிறுத்து ஆங்கே - தூக்கத்தை
தடுக்க ஒரு தந்திரத்தை ராமலிங்கமே
விடுத் தென்னை விடுவி.                           310

விடுக்க நினைத்தும் வந்து ஒட்டுமிந்த
சடுகுடு ஆட்டம் சகிக்குமோ - கடுகடுத்து
சொல்லினும் ஆசை சீறி ராமலிங்கமே
கொல்லி வைக்கக் குலையுதே.

குலையும் உடம்பை குருவருளால் நாம்
கலை யாக்குவதே காருண்யம் - சிலை
வணங்கி மலை வலம்வர ராமலிங்கமே
குணம் மாறுமோ கூறு.

கூறும் குற்றமெலாம் கலைந்த சாதுவிற்கு
தூறும் சன்னியாசம் தேவையில்லை - ஊறும்
கருணை யுடைய காயத்தார்க்கு ராமலிங்கமே
அருளி வெள்ளாடை உடுத்துவான்.

உடுத்த மூவாசையில் உறவுள்ள சித்தர்கள்
கடுத்த காவிஉடை கட்டவேண்டும் - விடுத்த
பேரார்கள் தயவைப் பெற ராமலிங்கமே
பூரா ஞானம் பொழிவான்.

பொழிகின்ற மழையின் பாதையை அறிந்தால்
ஒழிகின்ற தேகம் ஓங்குமே - பழிக்கின்ற
உலகில் நாமும் உயர ராமலிங்கமே
மலங்கள் மூன்றும் மாய்ப்பான்.

மாய உலகிடையே மேய வந்ததுபோல்
காய தேகத்தில் காமம்வந்ததே - தூய
மாசு போக்கி மாண்புற ராமலிங்கமே
பேசும் ஒருவார்த்தை போதுமே.

போது மென்பது பலமில்லாதான் சொல்லே
சூது செய்தேனும் சாதுவாகு - மோது
உயிருள்ள வரை உருக ராமலிங்கமே
லயித்து தருவான் லாபம்.

லாபமென்பது ஞானதேக லட்சிய மடைய
ஆபத்தைக் கடக்கும் அனுபவம் - சாபமெலாம்
சாம்பலாக்க அருட் ஜோதி ராமலிங்கமே
ஆம்மென்று வருவான் அன்பர்க்கு.
அன்பர்க்கே ஞானசித்தி அறுபத்து நாலாயிரமும்
தன் சுதந்திரத்தில் தருவான் - என்நிலை
எதுவென நீ உரைத்து ராமலிங்கமே
அதுவாக்கி எனை ஆள்வாய்.

ஆளுவது மூளையாமன அலையா என்றே
மாளுவதில் காலம் மார்ச்சாலம் - நாளும்
எனை நீயே ஏற்று ராமலிங்கமே
உனைப்போல் அனாதி யாக்கு.                       320

அமைதி எங்கும் அமையட்டும் பிண்ட
சுமையை ஆன்மாவே சுமக்கட்டும் - நமை
நல்லதே அண்டட்டும் நாளும் ராமலிங்கமே
இல்லத்தில் என்று மிருக்கட்டும்.

கட்டுச் சோற்றுடன் காடுமேடு செல்லினும்
விட்டுப் போகுமோ வினை - எட்டடி
ஆழ்குழியும் அரையடியும் ராமலிங்கமே
ஊழ்வினையாலும் விரும்பேன் உண்மை.

உண்மை அறிந்துமதை உணரும் பக்குவம்
கண்ணிமைபோல் மறைத்துக் காட்டும் - எண்ணில்லாத
சித்தர்கள் கூடு சிதைத்ததைப்போல் ராமலிங்கமே
அத்தவற்றை நான் இழையேன்.

இழைத்தப் பிழையெலாம் இரங்கி பொறுப்பானென
விழைந்து பிழையை வளர்க்காதே - மழையும்
விழுமிடம் பொறுத்தே வாழும் ராமலிங்கமே
அழுமிடம் வந்து அருளாய்.

ஆய்ந்த மதங்களிலே இந்து மதமொன்றே
தாய்மதம் தந்தையே தெய்வம் - ஆயினும்
பேய்யென பிடிக்கப் பார்த்தால் ராமலிங்கமே
நாய்யென அடிக்க நீட்டு.

நீடுகின்ற வானில் நடிக்கின்ற அண்டங்கள்
வீடுபோய் சேரும்நேரம் வந்தது - ஆடுகின்ற
சேவடிகளின் பஞ்ச சேவைகள் ராமலிங்கமே
பூவது பூப்பது போன்றது.

அதுவாகும் ஆசையில் அத்தை நாடியே
மெதுவாகச் சென்றால் மறணந்தான் - சதுர்
மறையும் காணா மருந்தை ராமலிங்கமே
குறையின்றி அதிவேகத்திற்கு கொடுத்தான்.

கொடுக்கின்ற பாக்களை கரத்தினால் ஏந்தி
தொடுக்கின்றேன் அய்யன் தயவில் - சொடுக்கின்ற
காலத்தில் பல கதிர்களை ராமலிங்கமே
தூல தேகத்தில் தந்தாய்.
தந்ததை தன்மயமாக்க தயாசக்தி யெனும்
விந்தையை புரிய வாரும் - சிந்தை
மகிழ தயா மூலமான ராமலிங்கமே
அகிலமதை இன்பமாய் இயக்கு.

இயங்கும் உள்ளுடம்பு அசுத்தமின்றி நீடிக்க
தயங்காது கரிசாலைத் தருவாய் - உயர்ந்த
தூதுளை தினம் தந்தால் ராமலிங்கமே
மாதுளைப் போன்று மூடிடுவான்.                    330

மூடிய ஞானசபை மறையவன் வருகையால்
ஆடியேத் திறக்கும் என்றாய் - கூடியே
திறந்து ஜோதி திருவருளை ராமலிங்கமே
உறவாய்க் கேட்கிறோம் உதவுவாய்.

உதவும் கரணத்தால் உவட்டா இன்பத்தை
நிதமும் அனுபவிக்க நினைத்தேன் - பதம்பர
அமுதை எனக்கே அளிக்க ராமலிங்கமே
அமுதல் உவரை அறிவித்தான்.

அறிந்த சன்மார்க்கம் அனந்தமாகி அதில்
அறிந்த அனுபவம் அனந்தம் - குறித்த
சுத்த சன்மார்க்க சூழலை ராமலிங்கமே
இத்தருணத்தில் தர இரங்காய்.

இரக்கம் தருகின்ற இறவாதிருக்கும் பெரும்
வரத்தை வேறேது வழங்கும் - மரந்தரும்
கனியை சுவைக்கும் கண் ராமலிங்கமே
தனித்திருக்க தன்னையேத் தா.

தாமறை பொருளெல்லாம் தந்தால் தானே
தாமரை மலரும் தன்னுள்ளே - தாமதம்
என்றால் செய்வது ஏது ராமலிங்கமே
அன்றைய உன்புலம்பலா யானேன்.

ஆன வரையில் அழுது விட்டாய்
கானம் பலவும் காட்டிவிட்டாய் - தானம்
நிறைய செய்தும் நீஏன் ராமலிங்கமே
சிறை சென்றாய் சித்திவளாகத்தில்.

சித்திகொடுக்க தீட்சி செய்யவே பலர்
கத்தி அழைப்பதை காண்மினோ - புத்தி
அற்றார் மும்மலம் அறுப்பரோ ராமலிங்கமே
கற்றாரை கற்றாரே காமுறுவர்.

காமுறும் காந்தக் கண்களும் உன்புன்னகை
பூமுகமும் காணாமல் போவேனோ - பாமுகம்
பலகாட்டி உனைப் புகழ ராமலிங்கமே
கலகலவெனும் சிரிப்பைக் கேட்டேன்.
கேட்டதெலாம் உடன் கொடுத்தாய் பாடும்
பாட்டெலாம் ஏற்று புகழ்ந்தாய் - பூட்டெலாம்
திறந்து உள்ளே தரிசித்தால் ராமலிங்கமே
இறந்து பிறப்பது இல்லை.

இல்லாதன அல்லஇங்கே எம்மார்க்கமும் ஓர்
நல்மார்க்கமே கருணை நாட்டத்தால் - கல்லாத
சாகாக் கல்வியை சார்ந்தால் ராமலிங்கமே
ஆகாவென வாழ்த்தி ஆடுவான்.                     340

ஆடுமாடு தின்போர்க்கு ஆளும் தெய்வமேது
நாடுவிட்டு போனப்பின் நரகந்தான் - கூடுதுடிக்க
குருதி பிடித்து குடிப்பானை ராமலிங்கமே
திரும்பா நரகத்திலிட்டுத் திருத்து.

திருக்குறள் கூறியும் திருந்தா ஜென்மங்கள்
இருந்தென்ன லாபம் இங்கு - விருந்தென்று
புலை எனும் பிணத்தை ராமலிங்கமே
விலை கொடுத்து வாங்குவார்.

வாங்கின ஊறுகாயில் விழுந்தப் புழுவால்
ஓங்கிநீ கோப முறுகிறாய் - ஆங்கேநீ
புழுத்த உணவாம் புலாலை ராமலிங்கமே
கொழுக்க உண்ணுகையில் கோபமெங்கே.

எங்குமாய் விளங்கி எவ்வுயிரும் பெறும்
அங்கமாய் இருப்பான் இறைவன் - சிங்கமும்
ஊன் உண்பது இயற்கையோ ராமலிங்கமே
மீன் உண்பவனா மனிதன்.

மனித இயல்புக்கு மாறாக விலங்கினத்தின்
இனிய உயிரெடுத்து உண்ணலாமோ - கனியும்
காயும் பல்வகை கீரையும் ராமலிங்கமே
தூய உணவாம் தயவுடையார்க்கு.

தயவு உடையார்யாரும் தன்னுயிராய் பிற
அயலுயிரை மதித்து ஆள்வர் - மயங்கியப்
பலர் புழுத்த புலாலை ராமலிங்கமே
கலத்திலிட்டு உண்பது கொடுமை.

கொடுமை இதுபாரீர் கொடுத்துதவி நம்மில்
ஒடுங்கும் உயிரை எடுப்பதோ - அடுக்குமோ
புலால் உண்ணும் பழக்கமதை ராமலிங்கமே
அலாது யார் தடுப்பார்.

தடுப்பார் யாருமின்றி தருதலையால் கொலை
படுமிந்த விலங்கினங்களைப் பாராய் - விடுமுயிர்
வலியால் துடிக்க வலிந்து ராமலிங்கமே
பலி கொடுப்பதோ புசிக்க.
புசிக்கவே உயிரினங்களை பரிந்து வளர்த்து
பசிக்கு ருசிக்க பலியிடுவதோ - வசிக்கும்
உயிரின் உரிமை இழக்க ராமலிங்கமே
பயிற்று வித்ததெலாம் பாழோ.

பாழுமிந்த உலகில் பிறந்த உயிரெல்லாம்
வீழும் கொடுமை வீழாதோ - வாழும்
இன்பங்கள் தடை யுறாது ராமலிங்கமே
அன்பின் அலையாய் இரு.                          350

இரும்பு மனமோ உந்தன் வீட்டில்பிறந்து
அரும்பிய உயிரை அறுக்கலாமோ - வரும்
பிறவியெலாம் நல் பிறவியுற ராமலிங்கமே
அறத்தை ஊட்டு அகிலத்தார்க்கு.

அகிலமெலாம் இன்ப மன்றி துன்பத்தை
சகித்திடாது உயிர்ச் சரங்கள் - பகிர்ந்து
உண்ணக் காய்கறி உணவே ராமலிங்கமே
உண்மை உணர்ந்தோர்க்கு உணவாம்.

உணவுச் செய்து உண்ணவே மறுக்கின்றாய்
பிணங் கிடக்கையில் புசிக்கலாமோ - குணங்கெட்டு
சதைப் பிணத்தை சமைத்து ராமலிங்கமே
அதை வீட்டினிலுண்பது எஞ்சனம்.

சனங்களில் ஒருபிரிவைச் சாடியவன் மாடு
தினந்தின்பான் எனத் தொடமறுப்பாய் - இனத்தாரில்
ஆடுதின்பாரைத் தொடுவ தெப்படி ராமலிங்கமே
காடுகூட இவர்களைக் கொள்ளாது.

கொள்ளும் கொலைசெய்தக் கவல உணவை
கள்வனின் சுகம்போலக் கொள் - தள்ளியே
இருப்பாய் புற இனத்தாரிடம் ராமலிங்கமே
திருவாய் மலர்ந்தான் திடமாய்.

திடமாய் இருக்கவே தழைகளை உண்ணும்
உடல்களைத் தின்பது உயர்வோ - அடஅந்தத்
தழைகளை நாமும் தின்றால் ராமலிங்கமே
உழைக்கும் தேகம் உறுதி.

உறுதிகொள் நெஞ்சே உயிரெல்லாம் பிறப்பது
அறுத்துநாம் உண்பதற்காக அல்ல - உறும்வினை
நீக்கவே உடலெடுத்து நின்றதை ராமலிங்கமே
ஆக்கியதை தின்ப தாகாது.

ஆகாரமென நண்டுகோழி ஆடுமாடுகளைத் தின்றால்
போகாத் துயர்பட்டுப் போவாய் - நாகாக்க
சொன்ன வள்ளுவன் சொல்லை ராமலிங்கமே
பொன்னென பொறித்தான் பாட்டில்.
பாட்டியும் தாத்தாவும் படைத்த குலதெய்வமென
ஆட்டினை படைத்து அடிக்கின்றாய் - பாட்டியின்
சிற்றறிவா உனது அறிவும் ராமலிங்கமே
பெற்ற பேறறிவைப் பெறுவாய்.

பெறுகின்ற பேறால் பெற்றவள் மகிழ்வாள்
அறுபடு முடலாலிறைவன் அழுவான் - பொறுப்புடன்
இருவரும் மகிழ அகஇனமாக ராமலிங்கமே
திருவருள் மகிழத் தருவான்.                        360

தருகின்ற அனந்த தேகங்களில் மனித
உருவமே லேசில் எடுக்கப்படாது  - வருகின்ற
மாற்று தேகத்தை மாய்க்க ராமலிங்கமே
கூற்றின் செயலைக் கற்றோம்.

கற்றதனா லாயபயன் காசுபணஞ் சேர்ப்பதா
பெற்றதினா லானப்பயன் பாவங்களா - சற்றேனு
மிரங்கி உயிர்களைக் கொல்லாது ராமலிங்கமே
சரண மென்று சிந்தித்திரு.

சிந்திய ரத்தங்கள் சிதறிய உடல்களின்
விந்தும் நாதமும் வெந்ததே - அந்தக்கறிக்
கடை உயிரைக் கொல்லுதே ராமலிங்கமே
தடைசெய்ய உனக்கென்னத் தடை.

தடைபட்ட பிறவிகளை தயவுடன் பார்க்கும்
படைஎன்பதே மனிதப் பண்பாகும் - கடையுறும்
எறும்பும் அதனினும் அணுவும் ராமலிங்கமே
உறுபயன் காண உத்தமனாகும்.

உத்தமனாகும் உயிர்களை ஊன் உணவாக்கி
செத்ததைத் தின்று சுத்தமென்பாய் - வித்தையாய்
பட்டையை நெற்றியில் போட்டு ராமலிங்கமே
கட்டையை வாங்குவார் கறிக்கடையில்.

கறிக்கடையில் வெட்டும் கறியெலாம் நாம்
அறியாத நமதுஇன உறவுகளே - நெறியான
வாழ்வில் நாம் வாழ்வதற்கு ராமலிங்கமே
ஊழ்வினையே வாழ்வினை ஆகும்.

ஆகுமென இருந்தேன் ஆவிப்போக உடல்கள்
போகுதே கொலையுண்டு போகுதே - சாகும்
வரை துடிதுடிக்க வைத்து ராமலிங்கமே
அரைவீதியில் வைத்து ஆள்வர்.

ஆள்கின்ற ஞானசித்தன் ஆட்சியில் இன்னும்
வாள்கொண்டு உயிரை வெட்டுவதோ - நாளிரண்டு
சென்று கலியுகமும் சாய ராமலிங்கமே
வென்று சன்மார்க்கயுகம் வந்தது.
வந்தாரை வாழ வைக்கும் பூமியில்நாம்
நொந்தாரை உண்ணும் நோக்கமேன் - அந்தமுடன்
ஆதியைத் தேடும் உயிரினை ராமலிங்கமே
பாதியில் வெட்டி பசியாறுவர்.

பசிக்கு நல்உணவாம் பயிர்கள் அதுவல்லாது
நசித்து உண்ணும்ஊன் நாறும் - வசிக்க
வரும் உயிர்களை வெட்டி ராமலிங்கமே
தருகின்ற விருந்தெல்லாம் தவறு.                    370

தவறான பழக்கத்தில் தலைமுறை வளர்வதை
அவதானிக்க மறுத்தல் அவமானம் - இவனென்
சொல்வது என்று சென்றால் ராமலிங்கமே
பொல்லாத புலை போகாது.

போகாதே புறஇனமுன் பந்தசொந்தமே யாகினும்
ஆகாதே அவரின் உறவுநமக்கு - சாகாத
வாழ்வு பெற்றதமிழ் வானன் ராமலிங்கமே
ஏழ்பிறப்பும் நானானேன் அகஇனம்.

அகஇனம் என்றும் அசைவம் தொடாது
உகம்பல செல்லினுமிது உண்மை - நகக்
கண்சிறிது காயங் கண்டாலும் ராமலிங்கமே
கண்கள் சொல்லும் கருணை.

கருணை சிறிதுமின்றி கடைதனில் சென்று
கருக்கொழி முட்டை கேட்கின்றீர் - விரும்பி
உண்ண கருவை அழிக்கின்றீர் ராமலிங்கமே
எண்ணம் இழிவே எண்ணும்.

எண்ணத்தில் அறிவிருந்தால் எண்ணுவையோ உயிர்
வண்ணத்தை அழிப்பதா வாழ்க்கை - உண்ணும்
உணவினை சுத்த மாக்கு ராமலிங்கமே
பணம் பண்ணுவதெல்லாம் பாவம்.

பாவங்களின் பட்டியலைப் படித்தும் நம்அகம்
பாவம் போகவில்லை பாரும் - தூவும்
மழைச் சாரலாய் மேவும் ராமலிங்கமே
பிழையென்பது நம் பிணி.

பிணிபோக்க மருந்துண்டு பாரினில் இரக்கமே
அணியெனக் கொள்வதே அது - பணிந்து
ஆன்ம நேயம் உணர்ந்தால் ராமலிங்கமே
தான்னென உணர்ந்து தயவாவாய்.

தயவு மட்டுமே தலைதப்பும் உளவை
நயமாய் உரைக்கும் நாளும் - பயம்
போகப் புலை போகும் ராமலிங்கமே
ஏகமேபரம் பொருள் ஆகும்.
ஆகாத மூவாசை அடுத்தடுத்துப் போகவே
போகாத புலையாசையும் போனது - சாகாதத்
தலை ஒன்றைத் தந்தான் ராமலிங்கமே
மலையென நினைத்தது முடிந்தது.

முடிந்தன ஆசைகள் மயங்கியே வீழக்
குடித்தவன் எழுந்துக் குளித்தான் - படித்தவன்
போலினி புலையைப் போக்கி ராமலிங்கமே
கோலெனக் கண்டு கொண்டேன்.                     380

கொண்ட புழுப்புலையும் கொலைச் செயலும்
விண்டு சென்றநானே வீரன் - தொண்டு
செய்யு மோர் சித்தினை ராமலிங்கமே
மெய்யன்புடன் தந்து மகிழ்ந்தான்.

மகிழக் கண்டேன் மண்ணுயிரெலாம் இங்கே
நெகிழ்ந்து இறையாவது நிச்சயம் - பகிர்ந்த
அன்பெல்லாம் பண் பலையாய் ராமலிங்கமே
என்னகத்தில் சூழ எழுந்தேன்.

எழுந்த எழுத்தெல்லாம் என்னவன் சொல்ல
விழுந்த சன்மார்க்க வரமே - பொழுதெலாம்
உன்னையே பாடி எழுத ராமலிங்கமே
புன்படா உடம்பை பணித்தான்.

பணிகின்றேன் அவன் பொற்பாத அழகை
கணிதங் கடந்து களிக்கின்றேன் - மணிகள்
ஒன்பதும் ஒலித்து ஓங்கின ராமலிங்கமே
நன்னெறி பிடித்தேன் நன்றி.

நன்னன்று என்பதை நாடிலேன் தன்னையே
நன்னென்று அறிய நான்இல்லை - துன்பெலாம்
போயின என்று பேசின ராமலிங்கமே
தாயினும் தயவைத் தூண்டின.

தூண்டுமென் இதயத் திருக்கதவம் திறக்க
வேண்டுமென் அய்யாவே வருக - தீண்டும்
தீக் கதிர்களின் தன்மையை ராமலிங்கமே
ஆக்கமாய் அளித்தருள் அகத்து.

அகத்தே அசிங்கம் ஆயிரங்கோடி இருக்க
இகத்தே நல்லவன்போ லிருந்தேன் - வகர
தகரவித்தை கற்றுத் தெளிய ராமலிங்கமே
உகரமும் அகரமும் ஊட்டு.

ஊட்டியத் திருக்குறள் அருட்பாவால்
பூட்டிய வல்லவன் போனான் - காட்டிய
எல்லாம் சுத்த அறிவாகி ராமலிங்கமே
வல்லவன் என வாய்ந்தது.
வாய்மை மறைத்து வல்லானிட்டப் பூட்டை
தாய்மையால் உடைத்த தயாளன் - தூய்மை
எங்கும் தயவாகி ஓங்க ராமலிங்கமே
சங்கம் நடத்தி சார்ந்தான்.

சார்ந்ததின் பொருளான சுத்த சன்மார்க்கம் 
ஈர்த்தன எல்லாமினி ஓர்மார்க்கம் - பார்த்த
சாதியும் மதமும் சாய்ந்தன ராமலிங்கமே
வீதிதோறும் நிறைந்து விளங்கினான்.                 390

விளங்கிய விருப்பு வெறுப்பு எல்லாம்
களவாடி சத்துவமயம் கண்டேன் - களத்திரப்
பற்று தேகப் பற்றெல்லாம் ராமலிங்கமே
தொற்று நோயெனத் தெளிந்தேன்.

தெளிந்த நிலையில் தன்னை யறிந்து
வெளியும் கண்டு வியந்தேன் - துளியும்
அஞ்சேன் இனி என் ராமலிங்கமே
பஞ்சமகா பாவங்கள் போனதே.

போனதே ஆசாரவகை பற்றெலாம் சென்று
ஆனதே தலைவனின் அணுக்கம் - ஞான
தேக மதைத் தேடியே ராமலிங்கமே
வேகமாக நான் விரைந்தேன்.

விரைந்த தினாலன்று வந்தென் உயிரில்
கரைந்ததினால் கரை கண்டேன் - நரை
காணா உடலைக் காணவே ராமலிங்கமே
வாணாள் ஆகுமோ வீணாள்.

நாள் பதினைந்தாயிரம் நான் கண்டும்நின்
தாள் காணாது தவிக்கின்றேன் - தோளும்
ஆறடி ஆனது இன்னும் ராமலிங்கமே
கூறத்தான் என்னுளது குறித்து.

குறித்ததை அடையாது காலம் போகும்
அறிகுறி யன்றுஒன்று மறிகிலேன் - வறியவன்
பிழை தனையே பழியாக்கி ராமலிங்கமே
அழையாமல் விடுவதோ அறம்.

அறம் பயின்றே னாயினும் அதனைப்
புறம்காண நடக்கப் பழகிலேன் - திறமின்றி
சன்மார்க்கம் என்றே சொல்லி ராமலிங்கமே
துன்பமுற்று தினம் துயில்கின்றேன்.

துயில்வதையே தினம் துன்பமின்றி நான்
பயின்று சன்மார்க்கம் பழித்தேன் - குயிலாய்க்
கூவும் அருட்பாக் கேளாது ராமலிங்கமே
காவும் சினிப்பாடல் கேட்டேன்.
கேட்டதெலாம் கொடுத்துக் கெடுக்கும் தந்தையை
வீட்டளவில் கண்டு வளர்ந்தோம் - கூட்டளவில்
நான் கேட்பது நின்னையே ராமலிங்கமே
ஏன்உனைப் பெறவே ஏங்கினேன்.

ஏங்கியது ஏனெனில் ஏழ்பிறப்பும் அடி
வாங்கியே நான் வளர்ந்தேன் - ஓங்கிய
இனிய உன் அடியால் ராமலிங்கமே
கனிந்திருக்க கண்டேன் கனவு.                       400




(இராமலிங்க அந்தாதி - தொடரும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.