Monday, September 14, 2015

வேட்டவலத்தால் வந்த வடலூர்



வேட்டவலத்தால் வந்த வடலூர்
(தி.ம.இராமலிங்கம்)

விழுப்புரத்திலிருந்து கெடார் என்ற ஊர்வழியாக திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள ஒரு பேரூராட்சி "வேட்டவலம்" ஆகும். திருவருட்பிரகாச வள்ளலாருக்கும் வேட்டவலத்திற்கும் தொடர்பு உண்டு. வேட்டவலத்தில் உள்ள ஜமீன் குடும்பத்தார்களின் நோய்களை தீர்ப்பதற்காக திருவருட்பிரகாசர் அந்த ஊருக்கு சென்றிருக்கின்றார். அந்த ஜமீன் குடும்பம் இன்றும் அங்கே சிறப்போடு வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட அவ்வூருக்கு சென்ற 13-09-2015 அன்று எனது தந்தை, தாய், சகோதரி, சகோதரருடன் நானும் சென்று தரிசித்துவிட்டு வந்தேன்.

மிகப்பெரிய பெரிய கூழாங்கற்களை ஒன்றாக ஆங்காங்கு கொட்டிவைத்தது போன்ற மலைகளும், பசுமை நிறத்து வயல்களும் சூழ்ந்த ஒரு அற்புதமான இயற்கை சூழ்ந்த இடமாக காட்சியளித்தது வேட்டவலம். வள்ளலாரின் திருவடி பட்டமண் என்பதால் அவ்வூரில் ஒரு சன்மார்க்க சங்கமும் இயங்கி வருகின்றது. அதுவல்லாமல் "வள்ளலார் அடிமை திரு.ந.சுப்பிரமணிய பாரதியார்" என்பவரும் தனிப்பட்ட முறையில் சன்மார்க்க இயக்கத்தை பெரிய அளவில் “வள்ளலார் திருச்சபை” நிறுவி அதன்மூலம் நடத்தி வருகின்றார். அவர் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், நாங்கள் திரு.ந.சுப்பிரமணிய பாரதியார் இல்லத்திற்கு முதலில் சென்று அவரை தரிசித்து ஆசிபெற்றோம். வள்ளலார் இங்குள்ள ஜமீனுக்கு வருவதற்கு முன்னரே பலமுறை இந்த வேட்டவலத்திற்கு வந்து, இங்குள்ள மலை மற்றும் முட்புதர்களுக்கிடையில் தவம் புரிந்துள்ளார்கள். இந்த வேட்டவலம் நினைத்ததை கொடுக்கக்கூடிய ஒரு புண்ணிய இடமாக வள்ளலார் பார்வையில் பட்டதால், அவர் இங்கு பல முறை வந்து தவம் செய்துள்ள செய்தியைக் கூறி எங்களை ஆச்சரியப்பட வைத்தார். பின்பு அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, ஜமீன் மாளிகை சென்றோம்.


வள்ளலாரின் அற்புதங்களைக் கண்ட அந்த அற்புத மாளிகையின் அழகைக் காணப்போகிறோம் என்ற பேரவா என்னுள் பற்றிக்கொண்டது. அடுத்த சிலநிமிடங்களில் ஜமீன் வளாகத்தில் சென்றடைந்தோம். அங்கே திரு.சுகுமார் என்கிறவரை (ஜமீன் கணக்காளர் மற்றும் மேலாளர்)   சந்தித்து, வள்ளலார் வந்திருந்த மாளிகை எதுவென வினவினோம். அவர் அதோ அந்த மாளிகைதான் என அங்கே இருந்த ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டி சென்று பார்த்து வாருங்கள் என்றும் அனுமதி வழங்கினார். வள்ளலாரின் திருவடிப்பட்ட அந்த ஜமீன் மாளிகை தற்போது பாழடைந்திருந்தது. வள்ளலார் வந்து சென்றதனின் நினைவாக அவ்விடம் புனிதமாக ஜமீன் வாரிசுகளால் பராமரிக்கப்பட்டு இருக்கும் என்ற எனது நினைவும் பாழடைந்துவிட்டது. ஏனோ தெரியவில்லை அவ்விடத்தை தற்போதுள்ள ஜமீன் வாரிசுகள் பராமரிப்பே இன்றி அப்படியா போட்டுவிட்டார்கள். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.






வள்ளலாரின் உருவம் புகைப்படம் எடுக்க முடியா அளவில் ஞான தேகம் பெற்றிருந்தபடியால், அவரை சிறந்த ஓவியர் மூலம் தத்ரூபமாக வரைந்துவிட வேண்டும் என்று அப்போதிருந்த ஜமீன் திரு.அப்பாசாமி பண்டாரியார் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக வள்ளற் பெருமானை தற்போது பாழடைந்துள்ள அதே மாளிகைக்கு முன்பு நிற்க வைத்து, சிறந்த ஓவியர் மூலம் வரைந்தும் உள்ளார். அப்படம் இன்றும் காணக்கிடைக்கின்றது.


அந்த பாழடைந்த இடத்தில் அன்றைய காலத்தில் உபயோகப்படுத்திய மரக்கட்டில், ஊஞ்சல், பல்லக்கு, தொட்டில், நாற்காலிகள் என பலபொருட்கள் பராமரிப்பின்றி கொட்டிக்கிடக்கின்றன. திரு.அப்பாசாமி பண்டாரியார், வள்ளலாரை சோதனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட அந்த இரண்டு ஒரே மாதிரியான நாற்காலிகளும் அங்குதான் இருக்குமோ என எனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. என்ன வேதனைப் பாருங்கள். அப்படிப்பட்ட அந்த நாற்காலிகளைக் கூட எதிர்கால சந்ததிகள் பார்க்கமுடியாத வண்ணம் செய்துவிட்டார்கள் தற்போதுள்ள ஜமீன் வாரிசுதாரர்கள். திரு.அப்பாசாமி பண்டாரியார் தனது இறுதி காலத்தில் வடலூர் சாலையில் வந்து வள்ளலாருடனே தங்கிவிட்டதால், இந்த வரலாற்றை எதிர்காலத்தில் எடுத்துச்செல்லும் மனப்பாண்மை அவருக்கு இல்லாமல் போயிருக்கும் என எண்ணுகின்றேன். நான் அங்கு தேடியதில் இரண்டு நாற்காலிகள் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதனால் என்ன பயன். அதனை தொட்டுக்கூட பார்க்க முடியாதவாறு அதனுடன் சேர்ந்து பல மரச்சாமான்கள் குவிந்துக் கிடக்கின்றது. அதனை அப்படியே புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன்.


(2015 - ஆம் ஆண்டு இவ்விடத்தை தரிசித்தேன். இன்று தான் (04-03-2020) வள்ளற்பெருமான் அமர்ந்த நாற்காலி கிடைக்கப்பெற்றதாக அறிந்தேன். உடனே அந்நாற்காலியின் புகைப்படத்தை இங்கு வெளியிட்டுள்ளேன்.)



பிறகு அக்கட்டத்திற்கு அருகில் ஒரு இயற்கையான குளமும் நீர் நிறைந்து காணப்பட்டது. மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அந்தக் குளம் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. அந்தக் குளத்தை அப்போதய ஜமீன் குடும்பத்தினர் குளிக்க பயன்படுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. தற்போது அதுவும் பயன்பாடு இன்றி கிடந்தாலும் அழகாகவே காட்சியளிக்கின்றது.

குடிதண்ணீருக்கு வழிகாட்ட வேண்டுமென, வள்ளற்பெருமானிடம் அப்போதய ஜமீன் திரு.அப்பாசாமி பண்டாரியார் வேண்டிக்கொள்ள, உடனே வள்ளற் பெருமான் அங்குள்ள ஓரிடத்தில் விபூதியை போட்டு, இந்த இடத்தில் கிணறு தோண்டுங்கள் குடிநீர் கிடைக்கும் என திருவாய் மலர்ந்தார். அந்த இடத்தில் கிணறு வெட்டியபோது நீரும் கிடைத்துள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை அக்கிணற்று நீர் வற்றாமல் இருப்பதுடன், நல்ல தரத்துடன் நற்சுவையுடனும் இருக்கின்றது. வள்ளலாரின் அருள் நிறைந்த அக்கிணற்றையும் சென்று பார்த்தோம். அக்கிணறும் பராமறிப்பு இன்றி இருந்தாலும், அது குடிநீர் என்பதாலும், சுவையாக இருப்பதாலும் அக்கிணற்று நீரையே குடிநீருக்காக மட்டும் இன்றும் அந்த ஜமீன் குடும்பத்தினர் மோட்டார் உதவியுடன் அத்தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது மகிழ்ச்சியை கொடுத்தது. குடிநீருக்காக அன்றி மற்ற உபயொகத்திற்கு இந்த நீரை உபயோகிப்பதில்லை என்றும் அறிந்தோம்.



வேறு யாரும் வந்து அந்நீரை பயன்படுத்தாத வண்ணம் அந்த கிணற்றின் வாயிலில் இரும்பு கம்பி வலை அமைந்துள்ளார்கள். எனினும் நாங்கள் கேட்டுக்கொண்டதால் ஜமீன் மேலாளர் திரு.சுகுமார் அவர்கள் வந்து அக்கிணற்று கம்பி வலையை திறந்து நீர் முகந்து கொடுத்தார். அந்த நீர் உண்மையிலேயே மிக அற்புத சுவை நிரம்பியதாக இருந்தது. என்னால் முடிந்தவரை குடித்தேன். வள்ளலாரே அமுதம் ஊட்டியது போன்றதொரு உணர்வு அப்போது எனக்குக் கிடைத்தது. வள்ளலார் வந்ததன் நினைவாக இக்கிணற்றை மட்டும் தற்போதும் பராமரிப்பில் வைத்துள்ளனர் அக்குடும்பத்தினர். இக்கிணற்று நீரை எங்களுக்கு வழங்கியதற்காக ஜமீன் குடும்பத்தார்களுக்கும், மேலாளர் திரு.சுகுமார் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டோம். இந்த அமுத நீரை என்றும் குடிக்கும் பாக்கியத்தை வள்ளற்பெருமான் அந்த ஜமீன் குடும்பத்திற்கு அளித்திருக்கின்றார் என்றால் அவர்கள் செய்த புண்ணியம்தான் என்னவோ?

மேலும் ஜமீன் அப்பாசாமி பண்டாரியார் அவர்கள், தனது இரண்டு மனைவிகளின் துயரினை போக்கிய வள்ளற் பெருமானுக்காக பார்வதிபுரத்தில் எந்த உபயோகமும் இன்றி இருந்த இடத்தை வள்ளற் பெருமான் பெயரில் இனாமாக எழுதிவைத்து தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார். அதுவே தற்போதய வடலூர் பெருவெளியாகும். (வடலூர் பெருவெளி, வடலூர் மக்களால் வள்ளலாருக்கு இனாமாக கொடுக்கப்பட்டது என்பது உண்மை அல்ல. . எனினும் அன்றைய சில அரசியல் சிக்கல் காரணங்களுக்காக அவ்வாறு சட்டப்படி உருவாக்கப்பட்டது. எனவே சட்டப்படி வடலூர் மக்களால் அவ்விடம் கொடுக்கப்பட்டது என்பதே சரியாக இருந்தாலும், உண்மையில் அவ்விடம் முழுதும், ஜமீன் வள்ளலாருக்குக் கொடுத்த பரிசே ஆகும்.) வேட்டவலம் ஜமீன் இல்லையெனில் இவ்வுலகிற்கு இன்றைய வடலூர் பெருவெளி கிடைத்திருக்காது. வள்ளலார் மறைவிற்கு பின்பு அவ்விடம் (வடலூர் பெருவெளி) மீண்டும் திரு.அப்பாசாமி பண்டாரியார் அவர்களின் பராமரிப்பிற்கு / அதிகாரத்திற்கு வந்ததே இதற்கு சாட்சி.  எனவே சுத்த சன்மார்க்கிகள் யாவரும் வேட்டவலம் ஜமீன் குடும்பத்திற்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டவர்களாவர். வருங்காலத்தில், சுத்த சன்மார்க்க நிகழ்ச்சிகளில் அக்குடும்பத்தார்களுக்கு அதர்க்கான கெளரவிப்பினை அளிக்க எவ்வகையிலேனும் நாம் முயல வேண்டும்.

இதற்கிடையில் மாலை ஐந்து மணியாகியது. அந்த ஜமீன் மாளிகைக்கு எதிரே உள்ள ஒரு சிறிய மலைமேலே ஒரு பழங்கோவில் காணப்பட்டது. அந்தக் கோவிலும் வள்ளற்பெருமான் திருவடிப்பட்ட இடம்தான். நாம் கண்ட அந்த குடிநீர் கிணற்றுக்கு மிக அருகில் உள்ள மலையில் அக்கோவில் அமைந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆட்சி அங்கு நடைபெற்ற போது அவர்களால் கட்டப்பட்ட ஒரு மசூதிதான் அது. அது சிறியதாக இருந்தாலும் அந்த கட்டடக்கலை வியப்பாக இருந்தது. இஸ்லாமிய கட்டடக்கலை என்றோ இந்து கட்டடக் கலை என்றோ அதனை சொல்ல முடியா வண்ணம் விக்தியாசமாக அக்கோவில் கோபுரம் காணப்பட்டது. தற்போது அம்மசூதி கோவிலாக மாறிவிட்டது. மனோன்மணி தேவி கோவில் என்பதே தற்போதய பெயர்.



அன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாள், ஜமீன் குடும்பப் பெண்ணை யாரோ ஒருவரோ அல்லது பலரோ துரத்திக்கொண்டு வந்ததாகவும், அப்போது அப்பெண்மணி இந்த மசூதிக்குள் சென்றுவிட்டார் எனவும், அதன்பிறகு வெளியே வரவேயில்லை, அங்கேயே மாயமாய் மறைந்துவிட்டதாக கூறுகின்றார்கள். அதனால் அந்த மசூதி, ஜமீன்தாரர்களின் கட்டுப்பாட்டில் வந்ததெனவும், அங்கு மனோன்மணி என்ற தெய்வத்தை வைத்து அவர்கள் பூசை செய்து வருவதாகவும் சொல்கின்றார்கள். பொதுமக்கள் இக்கோவிலுக்கு வந்து சென்றாலே, அவர்கள் நினைத்தது கட்டாயம் நடக்கின்றது என்றும் சொல்கின்றார்கள். இங்குள்ள கருவரையில் உற்சவரே மூலவராக இருப்பது சிறப்பு. மேலும் பல குடும்பங்களுக்கு இந்த மனோன்மணி தெய்வம் குலதெய்வமாக இருப்பதையும் அறிந்தோம்.

மேலும் வள்ளற்பெருமானாரால் கொடுக்கப்பட்ட ஒரு மரகத லிங்கம் இக்கோவிலில் இருப்பதாகவும், அந்த லிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்தால், அப்பால் நீல நிறமாக மாறிவிடும் என்றும் அப்பாலை அருந்தினால் தீராத நோய்கள் முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். தினமும் காலை 08.30 மணியிலிருந்து 10.00 மணிவரையிலும், மாலையில் 05.00 மணியிலிருந்து 06.30 மணிவரையிலும் அக்கோவிலில் பூசை நடைபெறும். மற்ற நேரங்களில் கோவில் பூட்டி இருக்கும். அப்பூசை வேளையில் நாம் இந்த மரகத லிங்கத்தையும் காணலாம்.

மாலை ஐந்து மணியளவில் அக்கோவில் குருக்கள் வந்து அருள்மிகு மனோன்மணி கோவிலைத் திறந்து பூசைக்கான ஏற்பாட்டினை செய்தார்கள். அருகே உள்ள பெட்டகத்திலிருந்து அந்த அற்புதம் நிறைந்த பச்சை நிறமுள்ள மரகத லிங்கத்தை எடுத்து பூசை செய்தார்கள். இறுதியில் பாலினைக்கொண்டு அந்த லிங்கத்தை அபிசேகம் செய்து முடித்தார்கள். நாங்கள் நினைத்தவாறு அந்தப் பால் நீல நிறமாக மாறவில்லை. எனினும் அந்தப்பாலை அருந்தும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. அந்த லிங்கத்தின் வரலாற்றினை அங்குள்ள குருக்களிடம் கேட்டறிந்தேன்.

நீங்கள் நினைப்பது போன்று இந்த லிங்கம் வள்ளற்பெருமான் கொடுதத்து அன்று. இந்த லிங்கம் காஞ்சி சங்கராசாரியார் ஜமீனுக்கு கொடுத்ததாக (காஞ்சி பெரியவருக்கும் முன்னர் இருந்த ஒரு சங்கராசாரியார்) கூறினார். இந்த லிங்கத்தை சில காலத்திற்கு முன்பு (1997-ஆம் ஆண்டு) ஒருவன் திருடி சென்று ஒரு சேட்டுவிடம் ஒரு லட்சத்திற்கு விற்று விட்டதாகவும், பின்பு காவல் துறை உதவியுடன் அதனை கண்டுபிடித்து மீண்டும் எடுத்துவந்து இந்தக் கோவிலில் வைத்துள்ளதாகவும் அந்த கோவில் குருக்கள் எங்களுக்கு இதன் உண்மை உரைத்தார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க அருள்மிகு மனோன்மணி திருக்கோவிலும் பராமரிப்பு இன்றியே காணப்படுகின்றது.

அதன் பிறகு, அக்காலத்தில் ஜமீன்தாரர் தம்மக்களிடும் வழக்கிற்கு தீர்ப்பு கூறும் இடத்தினையும் சென்று பார்த்துவிட்டு நாங்கள் கடலூர் திரும்பினோம்.

இதன்மூலம் திரு.அப்பாசாமி பண்டாரியாரின் வாரிசுதாரர்களுக்கு நான் விடுக்கும் விண்ணப்பம் ஒன்றே ஒன்றுதான்,

ஏற்கனவே உங்கள் இடத்தில்தான் (வடலூர்) தருமச்சாலையும், ஞானசபையும் இயங்கிக்கொண்டு வருகின்றது. எனினும் வள்ளலார் உங்கள் மாளிகைக்கு (வேட்டவலம்) எழுந்தருளியதால், அது சம்பந்தப்பட்ட தடயங்களை எல்லாம் கண்டுபிடித்து அதனை புதுப்பித்து, அந்த மாளிகையையும் புதுப்பித்து அதனை ஒரு வள்ளலாரின் நினைவிடமாக உருவாக்கி, பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டும். இதற்கான பொருளாதாரத்தை இறைவன் உங்களுக்கு ஏற்கனவே அளித்துள்ளான். அதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தற்போது உங்களுக்கு இல்லை என்பதனை அறிகின்றேன். அந்த எண்ணத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மிக விரைவில் உங்களுக்கு அருளுவான். அவன் அருளிய வண்ணம் மிக விரைவில் ஒரு நினைவிடத்தை அங்கே உங்களிடத்தில் அமைக்க வேண்டுகின்றேன்.

வேட்டவலம் ஜமீனுக்கும் வள்ளலாருக்கும் இருந்த உறவை, வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் நேரடியாகவே கண்டதையும், ஜமீன் அப்பாசாமி பண்டாரியரிடம் கேட்டு அறிந்ததையும், அவர் தனது பிரபந்தத்திரட்டு என்னும் நூலில், திருவருட்பிரகாசரின் சரித்திர பகுதியில் உரைநடையாகவும், கீர்த்தனைப் பகுதியில் பாடலாகவும் பாடி குறித்துள்ளதை இங்கே கீழே உங்களுக்காக அளித்துள்ளேன். திரு.ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் வள்ளலாரிடம் நெருக்கம் கொண்டொழுகிய மொத்தம் 48 அன்பர்களிடம் நேரில் நடந்தவற்றைக் கேட்டும் அவர்கள் எழுதிவைத்த குறிப்பினைக் கண்டும், வள்ளலாரின் சரித்திரத்தை எழுதி முடித்தார்கள். அதில் 36-ஆவது அன்பராக வேட்டவலம்-ஜமீன்தாரர் அப்பாசாமி பண்டாரியார் பெயரினையும் குறிப்பிட்டு, அவருக்கு நன்றியினை தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஜமீன்தாரின் முழுப்பெயர், "அருணாசல வசந்த கிருஷ்ணவாணாதிராய அப்பாசாமி பண்டாரியார்" என்பதாகும். நயினார் வகுப்பை சார்ந்தவர். வள்ளலார் தாளிட்டக்கொண்டப் பிறகு முறைப்படி அடிகளாரின் தெய்வநிலையங்கள் வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டது. அவர் 05.03.1883 ஆண்டு காலமானார். அதன்பின்னர் அவரது தம்பி சர்க்கரய்யா பண்டாரியாருக்கு பட்டா மாற்றப்பட்டது.

ச.மு.க எழுதிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலிலிருந்து....

இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்

வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்க்கு மனைவியர் இருவர். ஒருவரை பிரம்மராசஷசி பற்றிக்கொண்டிருந்தது, மற்றொருவருக்கு மகோதரம். இத்துன்பங்கள் நீங்க மந்திரவாதிகள் கூறுகின்றபடி உயிர்க்கொலை பலசெய்தும் குணமாகவில்லை. வள்ளலாரது மகிமையைப் பிறராலறிந்த பண்டாரியார் வள்ளலாரை அழைத்துவரும்படி தக்க முதியோரை அனுப்பி, தன் மனத்தில் தோன்றியபடி இரண்டு ஒரேமாதிரியான நாற்காலிகளை அமைத்து அவ்விரண்டில் தான் குறித்த நாற்காலியில் உட்காருவராயின் மஹான் எனத் தீர்மானிக்கலாமென்று எண்ணியிருந்தனர்.

       வள்ளலார் வீட்டிற்குள் நுழையத் தெருவாயிற்படியில் வரும்போதே பிரமராசஷசி பிடித்தமனைவியார் வந்துவணங்கி "உத்தரவு கொடுக்க வேண்டும் நான் போய் வருகிறேன்" என்று கூறி விபூதி பெற்றனர். வள்ளலார் உட்சென்று பண்டாரியார் மனத்தில் எண்ணிய நாற்காலியில் அமர்ந்தனர். பண்டாரியார் இவரே உள்ளபடி மஹான் எனத்தெளிந்து தன் துன்பங்களை முறையிட்டனர். வள்ளலார் அவரது இளையமனைவியர்க்கு மூன்று வேளை விபூதி கொடுத்துக் குணமாக்கினர். அன்றியும் அக் குடும்பத்தாரைச் சுத்த போஜனமுடையராய்ச் செய்தனர்.

                அங்குள்ள பிடாரனொருவனுக்குச் சம்பளம்கொடுத்து ஊரிலுள்ள பாம்பு, தேள் முதலிய விஷ ஜீவஜெந்துக்களைப் பிடித்துக் கொண்டுபோய் ஊர்க்கு வெளியில் விட்டுவரும்படி ஆக்யாபித்தனர். காளிபூசைக்கு வழக்கமாகக் கொடுக்கும் பலியைமாற்றிப் பால் பொங்கல் செய்யக் கட்டளையிட்டனர். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் 103 & 104)

கூடலூர் தேவநாயகம் பிள்ளையின் புதல்வர் ஐயாசாமிபிள்ளை வியாதியால் கஷ்டப்பட்டு, உயிர் நீங்கும் போலிருந்தது. தேவநாயகம் பிள்ளை இரவில் மிகவருந்தியிருக்கிற தருணத்தில் வடலூரில் பிரசங்கஞ்செய்து கொண்டிருந்த வள்ளலார் அத்தருணமே சென்று கதவைத்தட்ட, தேவநாயகம் பிள்ளை கதவு திறந்தனர். வள்ளலார் உட்சென்று விபூதி தடவிக் கண்விழிக்கச்செய்து சிறிது நேரத்திற்குள் உட்காரச் செய்துவிட்டு உடனே அவ்விடம் விட்டு நீங்கினர். மறுநாட் காலையில் தேவநாயகம் பிள்ளை, ஐயாசாமிப் பிள்ளையை வண்டியில் அழைத்துக்கொண்டு வடலூர் வந்து சேர்ந்தனர். தருமச்சாலையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த வள்ளலார் வெளியில்வந்து விபூதிகொடுத்து "ஆண்டவன் செய்த திருவிளையாட்டே ஆதலால் அதை வெளியிட வேண்டாம்" என்றுகூறி உட்புகுந்தார். இரவு முழுவதும் வள்ளலார் அன்று சாலையிலே, பிரசங்கஞ்செய்து கொண்டிருந்த செய்தியை அறிந்து அவரது சிவாநுபவப் பெருக்கை வியந்து தேவநாயகம் பிள்ளையும் மற்றையரும் துதித்தனர். அப்பால் வேட்டவலம் ஜமீன்தார் முதலிய அன்பர் பலரும் அங்கேயே குடியிருக்க லானார்கள். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் 112 & 113)

இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை

நவில்கல்லக்குறிச்சி நமச்சிவாய
                     நயினார்தெரி சித்துவணங்கி
              நண்ணும்வேட்ட வலத்துக்கெழுந்தருள
                     நாடிடவவ் வன்பர்க்கிணங்கி
                           நணுகச்சமீன்தா ரோர்மனைவிநெடு
                           நாள்பிர்மராட்சசன் செய்யுந்துன்பம்விடு
                           நாளிதுவென்ன நடத்தியவருமை
120                         நல்லோர்சொலவு மறிந்தயாம்பெருமைக்           கதி    110

வேட்டவலம்பண் டாரியார்வள்ளனின்
                     வியன் மகிமையைத்தெரிய
              மிக்கவெழிலுள்ள விருநாற்காலிகள்
                     விடுதியினில் வைத்துரிய
                           மேன்மைபெறுமிந் நாற்காலியில்வதியில்
                           மேலோரென்றெண்ணி யிருக்குமத்ததியில்
                           விரும்பியவண்ணமுட் கார்ந்திடவணங்கும்
121                         விதமுமறிந்தோமைச் சேர்ந்திடவிணங்கும்         கதி    111

              மந்திரவாதிக ளெவரையும்வீட்டுக்குள்
                     வாராதவகையாய் விரட்டி
              வாய்விடவொண்ணா வலங்கோலக்கோரணி
                     மனஞ்சென்ற வழியரட்டி
                           மருட்டிவரநும் பூதியினாலேக
                           மற்றோர்மனைவியின் வல்வினையும்போக
                           மகிழ்ந்துபண்டாரியா ரடிமையாகப்பெற்ற
122                         மகிமையறிந்தவடி யேம்பவமற்ற                 கதி    112

             

மிக்கவளநிறை செல்வர்கள்வாழும்
                     வேட்டவலத் ததிபதியாம்
              மேதகுவேங்கட்ட ராயபண்டாரியார்
                     வேண்டிக்கொள்ள ஞானநிதியாம்
                           வித்தகநுந்திரு வுள்ளங்கொண்டாங்கு
                           வீற்றிருக்கபுலை யொழுக்கமீங்கு
                           விளைந்திருப்பதைத் தெரிந்துமாற்ற
123                         வேண்டுமென்றெண்ணி யெங்களுக்கேற்ற          கதி    113

              சீர்பெறும்பண்டாரியா ரிடமன்போடு
                     ஜீவகாருண் யத்தின்பெருமை
              சிற்போதுநன்றா யுட்பதியப்போதிக்கத்
                     தேர்ந்தொடுங்கி யிவ்வருமை
                           தீனனேற்கும்பெருங் கருணைகூர்ந்து
                           செப்பவுமெத்தவஞ் செய்தேனென்றோர்ந்து
                           தேவரீரைவலம் வந்தடிவணங்கும்
124                         தீவரமறிந்து மெய்த்தவரிணங்கும்                 கதி    114


              இன்றுமுதலொன்றுங் கொல்லாவிரதங்கொண்
                     டெழிற்சைவ நெறியிலங்க
              எங்கணுநின்றேயத் தென்றிடவவ்வணம்
                     இசைந்தவ் வொழுக்கந்துலங்க
                           எல்லாத்தேயத்திலும் பறையறைந்திட
                           எல்லவருந்தம்பாற் சைவநிறைந்திட
                           இருக்கச்செய்து குருநெறியினின்ற
125                         இதமறிந்த வெம்பவமதகன்ற                     கதி    115

              கொடுந்தேளரவு முதலியவுயிரைக்
                     கொல்லாத வகையிற்றடுத்துக்
              கூலியைப்பெற்றுப் பிடித்துவிடுந்தொழிற்
                     கொண்ட பிடாரனைவிடுத்துக்
                           குலதெய்வத்துக்குப்பாற் பூசையைச்செய்யும்
                           கொள்கைவிளங்கிடச் செய்வித்துத்தாமுய்யும்
                           குணநிறைந்த பண்டரியார்பெருமை
126                         கொண்டதறிந்த வடியோமையருமைக்             கதி    116

கூடலூர்வாழ்தேவ நாயகமாலின்
                     குமரன் அய்யாசாமிக்குற்ற
              கொடும்பிணிக்குச் சிகிச்சைசெய்துஞ்சனி
                     கொண்டிறக்குங் காலம்பெற்ற
                           குறிப்பினாற்றந்தை நும்மைமனதிற்கொள்ளக்
                           கூடலூர்வந்து கதவைத்தட்டமெள்ளக்
                           குருவென்றுமத்தி யிரவிற்றிறந்திடக்
195                         கொண்டபடிகண்டெம் பந்தமிறந்திடக்                     கதி    185

              அடியற்றமரமென வடியில்விழுந்திட
                     அன்போ டெழுந்திடப்புரிந்தே
              அய்யாசாமிச்சிறுவன் பக்கலுட்கார்ந்தே
                     அரிய விபூதியைப்பரிந்தே
                           அங்கமெலாநுந் திருக்கரத்தாற்பூசி
                           அக்கணமேயவ் வினைநீக்கிமாசி
                           லாவகைசெய்தும் வடலிலுமிருந்த
196                         அதிசயமறிந்த வெம்மனந்திருந்த                  கதி    186



அன்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி மின்னூலாகவும் இதனைப் படிக்கலாம். நன்றி.
http://www.vallalarspace.com/user/c/V000018712B
  (or)

https://vallalarr.blogspot.com/2024/02/
 

17 comments:

  1. Kanden jotheai mahizhithen manam kulera.sivaya nama.!

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  2. Iyyaa Thanks for your message. GOD BLESS YOU. ARUTPERUNJOTHI THANIPERUM KARUNAI.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  3. Ungal pathivai padithen En Aathmaa kulirnthathu. God bless you. Vallal perumaan Arul Ungalukku Enrum Undu.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  4. நான் அறியாத தகவல்கள்...அருமை... நன்றி... அருட்பெருஞ்சோதி...அருட்பெருஞ்சோதி...தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி....

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் நன்றி

    ReplyDelete
  6. உங்களின் சொல்லாடல் அப்படியே அந்த காலத்திற்கே அழைத்து சென்றது உங்களுக்கு வள்ளல் பெருமான் ஆசி உள்ளதாலேயே இத்தனையும் சாத்தியம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Ayya வடலூர் பெருவெளி புகழ் பெற்றது

    ReplyDelete
  8. அருமை, அரிய தகவல்கள்

    ReplyDelete
  9. வள்ளலார் பெருமகனாரின் மேனி உயரம் என்னவாக இருந்திருக்கும்? ஓர் ஆய்வுக்காகத் தேவை. அறிந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வள்ளற்பெருமானின் திருப்பாதுகையின் அளவு 20 செ.மீ. தான் இருக்கும். அந்த அளவிற்கு மிகச்சிறிய பாதமாக உள்ளது. அப்பாதத்தை வைத்துப் பார்த்தால் ஐயா அவர்கள் குள்ளமாகத்தான் இருந்திருக்க வாய்ப்புள்ளது. (20 X 8 -= 160 செ.மீ உயரம்)

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.