வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள்
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWTi1LNkZqVmpYdzg/view?usp=sharing
வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் எனவும் முருகதாசர் எனவும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சங்கரலிங்கம்
ஆகும். இவர் 28-01-1839 ஆம் ஆண்டு, சைவ வேளாளர் மரபில் தோன்றிய செந்தில்நாயகம் பிள்ளைக்கும்
பேச்சி முத்தமாளுக்கும் மகனாக திருநெல்வேலியில் பிறந்தார். சிறுவன் சங்கரலிங்கம் தனது
ஆறரை வயதில் தனது தந்தையாரை இழந்தார். தனது பெரிய தந்தையார் மூலம் தென்காசியை அடுத்த
சுரண்டையில் கல்வி பயின்றார். அவ்வூரில் உள்ள பூமிகாத்தாள் என்னும் அம்மனை தனது எட்டு
வயதில் நேரிசை வெண்பாவால் பாடத்தொடங்கினார். அன்றுமுதல் பாடல்களை பனை ஓலைகளில் புனையத்தொடங்கினார்.
சங்கரலிங்கத்தின் குருவான சீதாராம நாயுடு விநாயக மந்திரம், லட்சுமி மந்திரம், ஆறெழுத்து
மந்திரம் போன்ற மந்திரங்களை உபதேசித்தார். சங்கரலிங்கத்தின் மடை திறந்த வெள்ளம் போலப்
பாடும் திறனைக் கண்ட ஆசிரியர், அவரை "ஓயா மாரி" என அழைத்து பெருமை செய்தார்.
ஊர் மக்கள் அவரை முருகதாசர் என அழைத்தனர். திருப்புகழ் சந்தப் பாக்களையும், வண்ணப்
பாடல்களையும் பாடியதால் வண்ணச் சரபம் எனவும் அழைக்கப்பட்டார்.
அவரது கனவில் முருக பெருமான் தோன்றி காட்சி
கொடுத்ததால், அவர் குமரன் குடிகொண்ட இடங்களுக்கு சென்று வழிபட்டார். வள்ளியூர் மலைக்குச்
சென்று முருக பெருமானின் சன்னதியில் கல்லாடை, இலங்கோடு, கவுபீணம், ருத்ராச மாலை, தண்டம்
ஆகியவற்றை வைத்து வணங்கி, அவற்றை அணிந்து கொண்டார். அன்று முதல் அவர் தண்டபாணி சுவாமிகள்
என அழைக்கப்பட்டார். யாரும் இவருக்கு முறைப்படி தீட்சையளித்து துறவியாக்கவில்லை. ஒரு
முறை தென்காசி அருகிலுள்ள திருமசை குமாரசாமி கோயில் சந்நிதியில் நின்று, முருக பெருமான்
தன்னை ஆட்கொள்ள வேண்டும் என பணிந்து வேண்டினார். இறையருள் கிடைக்காததால், இனி உயிருடன்
இருந்து பயனில்லை என்று மலையிலிருந்து விழுந்து புரண்டார். ஆனால் முருகன் அருளால்,
இடது தோளில் புண் ஏற்பட்டதைத் தவிர அவருக்கு வேறு பெரிய தீங்கு நேரவில்லை. தமக்குத்
திருவருள் துணை மிகுதியாக இருப்பதை உள்ளுணர்வால் உணரத் தொடங்கினார். தண்டபாணி சுவாமிகள்
எழுத்தாணி கொண்டு எழுதத் தொடங்கினால், இவர் மனம் செல்லும் வேகத்துக்கு எழுத்தாணியால்
எழுத இயலாது. இவர் தமது பாடல்களில் முற்பிறவியில் தாம் அருணகிரியாகப் பிறந்தவர் என்றும்,
இதை முருகபெருமானே தம்மிடம் பலமுறை கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.
சுவாமிகள்
திருப்பரங்குன்றம், மதுரை, சிதம்பரம், திருமயிலை ஆகிய திருத்தலங்களை வழிபட்டு சென்னையில்
இருந்த சமயம் யாழ்பாணத்து நல்லூர் ஞானப்பிரகாசம் வழிவந்த ஆறுமுக நாவலரை கண்டு உரையாடி
மகிழ்ந்தார். திருநெல்வேலியில் இருந்தபோது முருகனின் கட்டளைப்படி பிரபந்தங்கள் பாடினார்.
முருகனின் காட்சி கிடைக்காததால், தாம் இயற்றிய பிரபந்தங்களை பொருநை ஆற்றில் கிழித்தெறிந்தார்.
இப்படி அவசரப்பட்டு செய்தமைக்காக வருந்திய அவர், பதினாறு வகையான நூல்களைப் புனைந்து,
திருச்செந்தூரில் இறையன்பர்கள் கூடியிருந்த அவையிலே அரங்கேற்றினார். கடலூரில் இருந்தபோது,
திருவருட்பிரகாச வள்ளலாரை ஒரு அன்பர் வீட்டில் சந்தித்து, இருவரும் தங்களின் உறவுகளைப்
பரிமாறிக் கொண்டனர். அப்போது சுவாமிகள் வள்ளலாரிடம், "தாங்கள் தாயுமானவராக முற்பிறப்பில்
இருந்தவர்" என்றுணர்த்தினார். வள்ளலாரும் "இருக்கலாம்" என்றனர்.
வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் அருளிய பிரபந்தத்திரட்டு
என்னும் நூலின் சிறப்புப்பாயிரத்தில், இரண்டு நேரிசை வெண்பாக்களையும் தண்டபாணி சுவாமிகள்
இயற்றியுள்ளார்கள். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 5)
முருகதாச சுவாமிகளென்றுந், திருப்புகழ் சுவாமிகளென்றும் விளங்கிய
ஸ்ரீமத்-தண்டபாணிசுவாமிகள் அருளிச்செய்த
நேரிசை வெண்பா.
வடலூரா னண்பர்களில் வாய்மைகல்வி ஞானத்
திடமார்ந் தவிர்தருமோர் செல்வன் - கடல்சூழ்
பாருலுக முய்வதற்காப் பாடுமிசைப் பாடலமு
தாருமவர்க் குண்டே யருள்.
அந்தண் வடலூரா னன்பர்களிற் சீரியனாங்
கந்தசுவாமிக் கவிப் புலவ - னிந்த
வுலகத் தினர்மகிழ வோதுமிசைப் பாட
லிலகற்குஞ் சாட்சிதெய்வ மே.
காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் தாம் அருளிய பிரபந்தத்திரட்டில் தண்டபாணி
சுவாமிகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார், "திருநெல்வேலியில் சைவவேளாண் மரபில் உதித்து ஒன்பது வயது முதல் முருகப்பெருமானைச்
செந்தமிழ்ச்சுவை பொலிந்த திருப்புகழ்களால் தம்காலம் முழுவதும் துதித்த தண்டபாணி சுவாமிகள்
என்று வழங்கும் முருகதாசர் ஒருகால் வடலூர்க்கு வந்து வள்ளலாரிடம் சிலநாள் தங்கி முருகரது
திருவருளை வியந்து கொண்டிருந்தனர். முருகதாசர் தாம்பாடிய திருப்புகழ்களை
வள்ளலார்க்கு எடுத்துக் காட்டிக்கொண்டேவர, வள்ளலார் ஏடுகளை ஒருசிறிது தள்ளினர். அதனால் அலட்சியங் கொண்டதாக அவர் எண்ணவே, வள்ளலார் முருகதாசரை அருணகிரிதாசரே என்று சிறப்பித்துப் பேசினர். எனினும் அவர்க்குத் திருப்தியில்லை. ஏடுகளைத் தள்ளினதால் கணக்கிலாமற்பாடிக்
கொண்டிருப்பதோடு அனுபவஞானம் இருத்தல் வேண்டும் என்று வள்ளலார் எண்ணினரோ என்று அவர்
ஐயமுற்றனர். பின் ஒருகால் முருகத் தியானத்தி லிருந்தபோது வள்ளலார்
தாயுமானவரே யென்று அவர்க்கு விளங்கியது. ஒருநாள் முருகதாசர் உஷ்ணவாயுவால் சிறிது
அபக்குவம் அடைய, வள்ளலார் கேட்க, வினையால் விளைந்தது என்றனர். வள்ளலார், "இங்கேயும் வினையுண்டோ?" என்று முருகதாசர்க்குக் கூறிச் சந்நியாசிகளை
வினைதாக்குமோ என்பதைக் குறித்துப் பிரசங்கஞ் செய்தார். வள்ளலாரைக்குறித்து வினாப்பதிகமும் அனுபவப் பதிகமும்பாடி ஜீவகாருணிய மூர்த்தியாகிய
முருகதாசர் தமது நூல்களில் பல விடத்தும் ஜீவகாருணியம் விளக்கவந்த வள்ளலாரைப் புகழ்ந்திருக்கின்றனர். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு
பதிப்பு - பக்கம் - 129)
நெடுங்குளம்
என்ற ஊரில் ஒரு வீட்டில் உணவருந்திய பின், அந்த அம்மையார் கேட்ட "தருமம் என்பதன்
உண்மையான வடிவம் யாது?", உயிர்கள் இறைவனிடம் பெறும் பயன்களுல் மேலானது எது?"
என்ற வினாக்களுக்கு சுவாமிகள், "தன்னைப் போன்ற உயிர்களிடத்துப் பதில் உதவியை விரும்பாமல்
உதவுவதே உயர்ந்த தர்மம்" என்றும் "மற்றொரு தாய் வயிற்றில் பிறவாமல் ஒன்றுபடும்
பர முக்தியே தெய்வத்தால் பெறப்படும் பயனில் மேலானது" என்றும் விடை பகிர்ந்தார்.
தலப் பயணத்தின்போது புதுச்சேரி வேலாயுதம் பிள்ளை - திருமலையம்மை என்னும் இணையருக்கு
மூன்றாவது மகளாகப் பிறந்த சுந்தரம்மை என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
சுவாமிகள் நெல்லையில் இருந்தபோது
அங்கே தவச்சாலை தொடங்க, இலங்கைக்குச் சென்று, கண்டி கதிர்காமம் போன்ற இடங்களில் சமயச்
சொற்பொழிவுகள் நிகழ்த்தி பொருளீட்டினார். பழனிமலை அடிவாரத்தில் ஆவினன்குடியில் சரவண
பொய்கைக்கு அண்மையில் சுவாமிகள் ஒரு மடம் அமைத்தார். சுவாமிகள் அங்கேயிருந்தபோது, கொங்குநாடு
சரவணம்பட்டிக்கு வடக்கேயுள்ள சாமக்குளம் வெங்கடரமணதாசருடன் தொடர்பு ஏற்பட்டது. இன்னிசை
சொற்பொழிவாளராக விளங்கிய சாமக்குளத்தாருக்கு சுவாமிகள் தாம் இயற்றிய "தியானாநூபூதி"
நூலை வழங்கினார். வேங்கடரமணதாசரிடமிருந்து இதனைப் பெற்ற இராமானந்தர், அதனை ஊன்றி கற்ற
பின், அப்பனுவை இயற்றிய தண்டபாணி சுவாமிகளை குருவாக கொள்ள வேண்டும் என்ற வேட்கையில்,
பழனியம்பதி சென்று, சுவாமிகளை சந்தித்து வணங்கி தனது விருப்பத்தை வெளியிட்டார். பக்குவமடைந்த
இராமானந்தரின் தகுதிப்பாட்டை பார்த்த அளவிலேயே, தண்டபாணி சுவாமிகள், அவரது வலது செவியில்
ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்து தலையின் மீது வலது கரம் வைத்து ஆசி வழங்கி, கெளமாரத்தின்
ஆறு பேதங்களையும் சமய சமர்த்தையும், சமயாதீதத்தையும், எல்லா சமயங்களும் கெளமாரத்திற்கு
உடன்பாடே என்பதையும் விளக்கி, வாழையடி வாழையென கெளமார நெறியை பரப்புமாறு தண்டபாணி சுவாமிகள்
தமது சீடரான இராமானந்தரை பணித்தார்.
பல தலங்களுக்கு சென்ற பின், புதுச்சேரிக்கு அருகிலுள்ள மதுரப்பாக்கம்
வந்த சுவாமிகள், அங்கிருந்து விழுப்புரத்திற்கு வடமேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள
திருவாமத்தூரில் தங்கினார். தற்காப்பிற்கு பசுக்களுக்கு கொம்பு வேண்டியபோது,
"கவி பாடுவதை பின்னர் பார்க்கலாம்; அருளைப் பெறும் முயற்சியில் முதற் கண் ஈடுபடுக"
என ஈசன் அருளினார். "உனதருளைப் பெறுகின்ற வரையிலும் இவ்வூர் எல்லையைத் தாண்ட மாட்டேன்"
என்று ஆறெழுத்து மந்திரத்தை மனதில் செபிக்கத் தொடங்கினார். அப்பொழுது விழுப்புரத்திலே
வட்டாச்சியராக பணியாற்றிய பணியாற்றிய சண்முகப் பிள்ளைக்கு வந்த கடுமையான வயிற்று வலியை
சுவாமிகள் போக்கியதால் மனம் மகிழ்ந்த சண்முகம் பிள்ளை திருவாமத்தூரில் புறம்போக்கு
நிலங்களை இனாமாக வழங்க ஏற்பாடு செய்தார்.
அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பலருடைய ஒத்துழைப்பால் திருவாமத்தூரில்
கெளமார மடாலயம் எழுப்பினார். விளம்பி ஆண்டு பிறந்தது. சுவாமிகள் ஐயாயிரம் பிரபந்தம்
என்னும் நூலை இயற்றத் தொடங்கினார். பாடல் பாடுவதிலும் இறை வழிபாட்டிலும் கழித்த சுவாமிகளின்
உடலில் சூடு மிகுந்து உடல் தளர்ந்தது. பல்லாயிரம் பாடல்கள் பாடி தொண்டு செய்த தண்டபாணி
சுவாமிகள் (05-07-1898) விளம்பி ஆண்டு ஆனித் திங்கள் 23-ஆம் நாள் (1898-ஆம் ஆண்டு) செவ்வாய் கிழமை
திருவோண நட்சத்திரத்தில் வீடுபேறடைந்தார். அப்போது சுவாமிகளுக்கு 59 வயதாகும். சரவணபுரம்
கெளமார மடாலயத்தின் தலைவர் தவத்திரு இராமானந்த சுவாமி, தம் குருவின் உடல் நல்லடக்கம்
செய்யப்பட்ட இடத்தில் தண்டபாணி கடவுள் திருவுருவத்தினை பிரதிஷ்டை செய்தார். நாள் வழிபாடுகள்
நடைபெறவும் ஏற்பாடு செய்தார். இவ்வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேவார மூவர், அருணகிரிநாதருக்குப் பிறகு அதிகமான பதிகங்கள் பல பாடிய
பெருமை தண்டபாணி சுவாமிகளுக்கு உண்டு. முருகப்பெருமான் விநாயகர், சிவன், அம்பிகை, திருமால்,
சூரியன் மற்றும் கிராம தெய்வங்கள் மீது சமயாதீத நிலையில் ஒரு லட்சம் பாடல்களுக்கும்
மேல் கவி புனைந்துள்ள இவர், முருக பெருமான் மீது ஊடல் கொண்டு கடலிலும், தீயிலும் எறிந்தது
போக, தற்போது உள்ளவை 49,722 பாடல்களே. இதில் பாதிக்கு மேல் அச்சில் வராமல் சுவடியிலேயே,
கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயப் பாதுகாப்பில் உள்ளன.
தண்டபாணி சுவாமிகள் உபதேசிக்கும்
கெளமாரம் என்னும் முருக வழிபாடு ஆழமான தத்துவச் செறிவுமிக்க ஒரு மெய்யியற் கோட்பாடு
ஆகும். முருகன் முதலிய ஆறுசமய வடிவங்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு பண்புகளை உருவகப்படுத்தும்
கற்பணைகள் என்பதுவும், இவற்றுள் எதனை வழிபட்டாலும் அவ்வழிபாட்டை ஏற்றுப் பயன் தரும்
பரம்பொருள் ஒன்றே என்பதுவும், அது தனக்கெனத் தனிப் பெயரோ, வடிவமோ இல்லாத ஒன்று என்பதுவும்
இவருடைய அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். உருவ வழிபாட்டோடு ஒரே தெய்வ உபாசனையில் உறுதியாக
நின்றால் சமரசம், சமயாதீதம் ஆகிய மேல் நிலைகள் தாமே இயல்பாக அவன் மாட்டு வரும் என்பது
இவரது கொள்கை.
தன்னால் வழிபடப்படுகின்ற
தெய்வம்தான் உண்மையானதும், மேலானதும் ஆகும்; மற்ற தெய்வங்கள் யாவும் பொய்யானவை என கருதுவது
சமய வாழ்க்கையின் பொதுவான தொடக்க நிலை. இதனை இளம் பக்குவம் என்பார். இந்த நிலையில்
பக்தியோடு வழிபாடு ஆழம் காண காண அநுபவ முதிர்ச்சி ஏற்பட்டு, தன் வழிபாடு தெய்வம்தான்
பிற சமய வழிபாடுகளையும் ஏற்று அருள் வழங்குகிறது என்ற எண்ணம் உண்டாகி, பிற சமயங்களையோ,
தெய்வங்களையோ பழிக்காத தன்மை தோன்றும். இந்த நிலை சமரசம் எனப்படும். இவ்வாறு சமரச நிலையை
அடைந்த ஒருவன், சமய வாழ்வில் அநுபவம் முதிர முதிரப் பரம்பொருள் ஒன்றே என்றும், அந்தப்
பரமே தன் வழிபாட்டு தெய்வம் உள்ளிட்ட எல்லா வடிவங்களையும், பெயர்களையும் தாங்கி அருள்
புரிகிறது என்றும் உணர்வான். இந்த நிலையே சமயாதீதம், சமயங்களை கடந்த நிலை ஆகும். இந்த
நிலையிலிருந்து சொல்லும்போதுதான், எம்மதமும் சம்மதம் என்பது முழுமையான பொருள் பொதிந்ததாக
அமையும்; சமரச சமயாதீத நிலைகளை அடையாமல் கூறப்படுகின்ற "ஒருவனே தேவன்" என்ற
கூற்று பொருளற்ற வெற்றுக் கூப்பாடே என்கிறார் தண்டபாணி சுவாமிகள்.
ஒருவன் மனைவியோடு சேர்ந்து
நடத்தும் இல்லறமே நல்லறமாகும். கொடைக்குணம், இரக்கம், கல்வி, உறவுண்மை எனும் இவற்றைப்
பெற்ற இல்லறத்தானின் புகழே நிலைத்து நிற்கும். பிறன் மனை நோக்காத பேராண்மை, முயற்சியுடைமை,
நன்றியுடைமை, சினமின்மை இவற்றை பெற்று வாழ்வானின் புகழ் வானம் போன்று உயர்ந்தோங்கும்.
உணவளித்தலில் நல்லார் பொல்லார் என்று பாராது, கீழ்மக்களுக்கும் உணவு வழங்க வேண்டும்.
மனதை
அடக்கி ஒழுகுதலே சீரிய துறவு. புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும்
உள்ள பற்றை அறவே விடுவது துறவு. மனிதனின் புற உறுப்பினும், அக உறுப்பாகிய நெஞ்சம் தூய்மையதாய்
இருப்பது நல்லது. பற்றில்லாத பரம்பொருளைப் பற்றுபவரே உலகியலை முழுவதுமாகத் துறக்க முடியும்.
நாய் போல் அலைதல், பெண்ணைப் பார்த்து உருகுதல், பேய்போல் பறத்தல், தளர்ச்சி கொள்ளுதல்,
சினமுண்டாதல் இவ்வியல்பு உடையோர்க்குத் துறவறம் கைகூடாது. இயன்ற வரை கொடுத்தல், புகழை
நிலை நிறுத்துதல், முது நூல் அறியும் தன்மை, அன்பு செய்தல் எனும் பொதுமறை எல்லோருக்கும்
உகந்த அறம்.
உறவு
முறையிலும் ஒரே சாதியிலும்
திருமணம் செய்வது தொன்றுதொட்டு
நிகழ்ந்து
வரும் சமுதாயப் பழக்கம் கலப்பு திருமணம் நிகழுமாயின் சாதியை ஒழிப்பதற்கு உரிய வழியுண்டாகும்.
சாதையை உடைத்தெறியக் காதலானது களம் அமைத்து உதவுகின்றது என்று சுவாமிகள் உறுதியாக நம்பினர்.
திருமணங்களால் சென்ற
நூற்றாண்டில் மகளிர்
பெரும்
இளமைத்
துன்பங்களுக்கு
ஆளாயினர். இளம் பருவத்திலேயே கணவனை இழந்து வறுமையில் வாடியும், பிறரால் துன்புறுத்தப்பட்டும்
பெண்கள் அலைகழிக்கப்பட்டனர். தண்டபாணி சுவாமிகள் விதவைகள் மறுமணம் குறித்து துணிந்து
பேசுவது அவர்தம் சமுதாய மறுமலர்ச்சி எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது. கெளமார முறைமை
என்ற நூலில் சுவாமிகள் கணவனை இழந்த பெண் காம வேட்கையால் கெட்டுப் போவதனை விடவும் மறுமணம்
செய்து கொளலே நன்று என்பார். "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" என்ற
சூழ்நிலை அக்காலத்தில் நிலவியது. சுவாமிகள் தமிழ்ச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால்
பெண்கள் கல்வி பெற வேண்டும்; சான்றோர்கள், அருளாளர்களின் நூல்களைக் கற்றுத் தேற வேண்டும்
என்றும் வலியுறுத்துகிறார்.
தண்டபாணி
சுவாமிகள் திருக்குறள் வலியுறுத்தும் அறங்களின் அடிப்படையில் உயிரிரக்கம் என்னும் கொல்லாமைக்
கோட்பாட்டை வலியுறுத்துகிறார். நம் முன்னைய இறைநெறிச் சான்றோர்களின் எண்ணங்களைச் சுவாமிகள்
உள்வாங்கிக் கொண்டு, அறுசமயக் கடவுளிடத்தும் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும்
உலகில் நிலைக்க வைக்க வேண்டுமென மனமுருகி வேண்டினர். வேதத்தின் கரும காண்டம் வேள்வியில்
உயிர்ப் பலி இடுவதனை ஏற்றுக் கொள்கிறது. இதனை மறுத்துச் சுவாமிகள் கொல்லா நெறியை தம்முடைய
நூல்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஆங்கிலேயர் வருகையினால்
உயிர் கொலை புரிதலும், ஊன் உண்ணுதலும் நாட்டில் தங்குதடையின்றி பெருகின. இவற்றைக் கண்ட
சுவாமிகள் மனம் நொந்து ஆங்கிலேயர் அந்தாதி வாயிலாகவும், ஏனைய நூல்கள் வாயிலாகவும் தம்
உயிர்க் கொள்கையான கொல்லாமையுணர்வை வெளிப்படுத்தினார். மக்களின் அறியாமையைப் போக்கிப்
பிற உயிர்க்குத் தீங்கு செய்தலும், புலால் அருந்தும் புன்மைச் செயலும் இறைவனுக்கு உகந்தவை
அல்ல என்று மக்களிடம் கூறினார். இக்கொல்லாமைக் கோட்பாட்டைச் சுவாமிகள் தம் காலத்திலே
பல இடங்களில் செயற்படுத்தி, ஆடு, மாடு பசுக்களைப் பலி இடுதலைத் தாமே நேரிற் சென்று
தடுத்துள்ளார்.
சுவாமிகளின்
பாடல்களில் சமுதாயத்திற்கும், தனிமனிதனுக்குமான ஆக்கபூர்வமான சிந்தனைகளே மிகுந்திருந்தன.
கலை வாழ்க்கைக்காகவே என்று குரல் எழுப்புகிறார். மருத்துவம் போன்ற அறிவு நூல்களை நல்ல
காவியங்களை எழுதிய பின்பே எழுத வேண்டும்; எடுத்த எடுப்பிலேயே எழுதினால் குற்றப்படும்
என்கிறார். மனிதர்கள் குறிப்பாகக் கவிஞர்கள் காகங்கள் போல பகுத்துண்டு கூடி வாழ வேண்டுமேயன்றி,
நாய்கள் போல் ஒன்றை ஒன்று வெறித்துப் பிரியக் கூடாது. தமிழ்ப் புலமையை வெளிகாட்ட காமச்
சுவையை மிக விரித்தும், பச்சையாகவும், கொச்சையாகவும் பாடுவோரின் புலமையால் நாட்டுக்கோ,
மொழிக்கோ ஆக்கபூர்வமான பயன் இல்லவேயில்லை என்கிறார். தமிழைத் தாழ்த்தும் ஒரு தெய்வம்
உண்டெனில், அது தெய்வமே அல்ல, பேயை விடத் தாழ்ந்தது என்றும் தீர்ப்பளிக்கிறார்.
தண்டபாணி
சுவாமிகள் ஒரு தீர்க்கதரிசியைப் போன்று ஆட்சியாளர்கள் பற்றிய சிந்தனைகளைக் கொண்டுள்ளார்.
ஆட்சியாளர்கள் கடவுளுக்குப் பயந்து நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை
உணர்ந்து நீதியாக நடக்க வேண்டும். நீதி வழுவாமல் வழக்கை முடித்து வைக்க வேண்டும். பெரியோரின்
அறிவுரை கேட்டு நடத்தல் வேண்டும். ஆணவம் இன்றியும், நீதியுடனும் ஆட்சி புரிதல் வேண்டும்.
செம்மையாக ஆளுதல் வேண்டும். ஆட்சியாளர் குடிமக்களின் காட்சிக்கு எளியராய் இருத்தல்
வேண்டும். குடிமக்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்துத் தீர்வு காண வேண்டும். நாட்டில்
உண்மை நிலைபெறுதல், பருவ மழை அளவாகப் பெய்தல் அல்லது பொய்த்தல், தீய சக்திகள் ஓங்குதல்
இவற்றிக்கு ஆட்சியாளரே பொறுப்பு என்கிறார். சுவாமிகள், குடிமக்கள் செய்கிற பாவங்களில்
ஒரு சிறு பங்கு ஆட்சியாளருக்கு சேரும். தற்காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெடித்து
வரும் வன்முறை நல்லதை அழித்து விடலாம்; ஆனால் வன்முறை தானே அழியும் என்கிறார் சுவாமிகள்.
குடும்பமே
ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கும் தலையாய சமுதாய நிறுவனமாகும். ஒவ்வொரு மனிதனின் பிறப்பு
முதற்கொண்டு தேவைகள் எல்லாம் குடும்பத்தின் மூலமே நிறைவேற்றப்படும். எனவே, எந்தவொரு
துன்பத்திற்கும் இடந்தராத இன்ப இருப்பு நிலையமாக குடும்பத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்கு தந்தை, தாய், குழந்தைகள், உடன் பிறந்தோர் போன்றோரின் உறவில், குடும்பம் வலிமை
பெற்றதாக திகழ்தல் வேண்டும்; சுற்றம் காத்து உறவு முறையால் விரிய வேண்டும். மேலும்
உறவாகா வேறு சமூக நபர்களையும் நட்பால் உறவு கொண்டு சமூக நலமும் பேணுவதாகக் குடும்ப
நலம் விரிந்து தழைக்க வேண்டும் என்கிறார்.
தியானானுபூதி
எனும் இவரது பாடல்களில் தியானத்தின் மேன்மையையும், அதன் மூலம் அடையும் பயன்களும் விரிவாகக்
கூறப்பட்டுள்ளன. தியானம் என்பது மனித ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி இறைவனை எண்ணி தியானிப்பது.
அநுபூதி என்பது அது கைவரப்பெறும் நிலையாகும். நினைத்தவுடன் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திப்பது
தியானம் அல்ல. தியானம் என்ற சொல்லைப் பயன்படுத்தும்போதே அதற்கான பலன் இன்னதென்று அறிந்து
அதன்படி நடத்தலே ஆகும். பக்தியில் சிறந்தவனாக இருந்தாலும், கல்வி கேள்விகளில் சிறப்புற்று
இருப்பினும், தியானம் கற்க விரும்பின் குருவின் கீழ் நின்று படித்தல் வேண்டும் என்பது
இவரது கூற்றாகும்.
தெய்வ
சிந்தனையே தியானத்திற்கு வழியாகும். சித்தி, முத்தி எனும் இரு பேறும் அடைவதற்கு தெய்வச்
சிந்தனை வேண்டும். ஒரு கடவுளின் திருவுருவத்தை மட்டும் மனக்கண் முன்னால் நிறுத்தி,
எப்போதும் ஒரே முறையில் நினைத்து தியானிப்பதே மிகுந்த பலனைத் தரும். "தியானத்தில்
ஈடுபடுவதன் மூலம் இறைவனிடத்தில் மிக தொடர்பு கொண்டு இறைவனோடு பேச முடியும். இவ்வாறு
தொடர்பு கொண்டு இறைவன் தோன்றி மறையும்போது அது கண்டு செருக்கடைதல் கூடாது". எனும்
கருத்தை ஆழமாகக் கூறுகிறார். தியானம் செய்வதற்கு மன வலிமை வேண்டும். எந்நிலையிலும்
தியானத்தை கைவிடலாகாது என்றும் கூறுகிறார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
நன்றி: தவத்திரு குமரகுருபர
சுவாமிகள், சிரவையாதீனம், சரவணம்பட்டி, கோவை. 98421-66373 / 9842260609
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWTi1LNkZqVmpYdzg/view?usp=sharing
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.