Wednesday, July 27, 2016

கரும காரியங்கள்



01-07-2016 - சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளிவந்த "கண்மூடி வழக்கம்" என்ற தலைப்பில்...

 


                                          கரும காரியங்கள்

 

நாம் எந்த ஒரு மதத்தை சார்ந்தவர்களாகினும், நாம் இறந்தவுடன் மத சடங்குகள் செய்வது உறுதி. நாம் இங்கு பெரும்பாண்மையாக இந்து மதத்தில் இருப்பதால், அம்மத சடங்குகள் என்னவென்று நமக்கெல்லாம் தெரியும். நாம் முற்காலத்தில் செய்த சடங்குகள் எல்லாம் தற்போது காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டாலும் அச்சடங்குகளை முற்றிலும் விட்டபாடில்லை. கணவன் இறந்தால் மனைவியை தீயிட்டு கொளுத்தும் சடங்குகளை எண்ணிப் பாருங்கள். இக்கொடுமைகள் எல்லாம் தற்போதய இந்து மதத்தில் இல்லை.

 

எனினும் இன்னும் நாம் மதங்களும் சமயங்களும் கூறும் கற்பனை கதைகளுக்கு முன்னுரிமை வழங்கி அதன்படி நடந்து கொண்டுதான் உள்ளோம். இச்சடங்குகள் எல்லாம் தேவையற்றவை என்று வள்ளற்பெருமான் கண்டிக்கின்றார். இச்சடங்கினால் இறந்தவர்களின் ஆன்மாவிற்கோ அவர்களது வாரிசுகளுக்கோ சொந்தகளுக்கோ யாதொரு நன்மையும் கிடையாது.

 

"பிணத்திற்கு சடங்கென்று நாட்டி

 பிராமணர் செய்த தெல்லாம்

 வெற்றுப் பிழைப்புக்காய் மட்டும்தான்;

 வேறெதிலும் இல்லை வரும்படி!

 மற்றபடி வேதங்களின் ஆசிரியர்கள் மூவர் யாரெனில்

 வெற்றுக் கோமாளி, புரட்டன் மற்றும் திருடனே."

                   - Quoted in the Seva-Darsana-Samgraha.ch.i

 

என்று சர்வ தர்சனா சம்ஹிரகா கூறுகிறது. நாம் பிராமணர்களை மட்டுமே இதற்காக குற்றம் சொல்ல முடியாது. இறுதி சடங்குகள் என்று கண்ணை மூடிக்கொண்டு வழி வழியாக செய்வதை நாமும் செய்கிறோம் என்று செய்கின்ற நாம்தான் முட்டாள்கள் என்பதை நாம் அறிவதில்லை. இறந்த தேகத்தை வேதம் கூறுகின்றது என்று எரித்துவிடுகிறோம். அல்லது தேகத்தை புதைப்பவர்களும் ஏதேதோ சடங்குகளில் மூழ்கி அல்லல் உறுகிறார்கள்.

 

பின்பு ஒரு நாள் குறித்து பத்திரிக்கை அடித்து சொந்தகளுக்கு எல்லாம் அனுப்புவார்கள். அப்பத்திரிக்கையில் ஒரத்தில் ஒரு சிறு கருப்பு பட்டையால் அடையாளம் வேறு. எந்த புத்திசாலி இதனை கண்டுபிடித்தான் எனத் தெரியவில்லை. எல்லா பத்திரிக்கையிலும் அந்த கருப்பு முனை இடம்பெற்றிருக்கும். எதற்காக இது என்றால்? கருப்பு துக்கத்தை தெரிவிக்கும் அடையாளம் என்பர். நாமும் அப்பத்திரிக்கை வந்தவுடனே அந்த கருப்பு முனையை முதலில் கிழித்து எரிந்துவிடுவோம்! அது ஏன் எனத் தெரியவில்லை. நம் வீட்டில் இறந்தால் மட்டுமே நமக்கு துக்கமாம். மற்ற சொந்தக்காரர்கள் யார் இறந்தாலும் நமக்கு துக்கம் இல்லை சந்தோசமே என்பதால் நாம் அதனை கிழிக்கிறோமா? எனத் தெரியவில்லை.

 

கருமாதி, திதி இவற்றையெல்லாம் ஏன் செய்கிறோம் என்றால்? இறந்த ஆன்மா அமைதியுறவும், நமது துக்கத்தை கொண்டாடவும்தான் என்பர். மகிழ்ச்சியினை தான் கொண்டாடுவர். நாம் தான் புத்திசாலி ஆயிற்றே! துக்கத்தையும் கொண்டாடுகிறோம். இறந்தவருக்கு என்னென்ன பலகாரம் பிடிக்குமோ அல்லது நமக்கு என்னென்ன பலகாரம் பிடிக்குமோ அதனை எல்லாம் செய்து சொந்தங்களைக் கூட்டி ஓர் நாளில் சாப்பாடு போட்டு சில வேத வித்தகங்கள் செய்து அதாவது அன்றைய தினம் இறந்தவர்களின் பிள்ளைகளுக்கும் பங்காளிகளுக்கும் இருக்கும் மீசையை எடுத்துவிடுவார்கள். பாவம்... மீசையின்றி அந்த ஆசை முகத்தை பார்க்க சகிக்காது யார்க்கும்! என் தந்தை இறந்தால் எனது மீசையை ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்கும் விழிப்புணர்வு உடையோர் யாருமில்லை இங்கு! இவ்வாறு இன்னும் சில வேத சடங்குகளுடன் அய்யர் நம்மை விடுவிப்பார். பிறகு ஊர் கூடி சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவதோடு கரும காரியம் முடிவுக்கு வருகிறது.

 

          இதற்கிடையில் தலை கட்டுகிறோம், வால் கட்டுகிறோம் என்று சொந்த பந்தங்களின் அன்பளிப்பு மழையில் நனைவது இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு ஒரு தனிச்சுகம் உண்டாகும். இச்சடங்குகளுக்கெல்லாம் ஏதேனும் ஒரு காரணத்தை கூறுவர் நமது பெரியோர்.

 

நமது கூடப்பிறந்தவர்கள் அல்லது நமது பங்காளிகளின் உறவுகள் அல்லது எப்படிப்பட்ட உறவுகள் ஆனாலும் அல்லது தெரிந்தவர்கள், நட்புகள் போன்றவர்களின் பொருட்டு நடத்தப்படும் அவர்களின் திதி, கருமாதி போன்ற மூட சடங்குகளில் சுத்த சன்மார்க்க பாதையை பின்பற்றும் நாம் அச்சடங்கில் கலந்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உறவுகளின் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். சன்மார்க்க பாதையே நமக்கு முக்கியம். எதிர்ப்புகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

 

கருமாதி அல்லது நினைவு நாட்களில் ஆண்டு தோறும் தர்ப்பணம் செய்தல் போன்ற சடங்குகள் அனைத்தும் முழு மூடர்களின் செயல்கள்.

 

நமது மூதாதையர்களின் நினைவு நாட்களின் நாம் தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆன்மா அமைதியடையும் அல்லது அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று சிலர் சூதாக சொல்லிவிட்டனர். சூது என்றால் பணத்திற்காக ஒரு தீய செயலை செய்தல் அல்லது மற்றவர்களை செய்வித்தல் ஆகும். அப்படி ஒரு சூதாட்டமாக விளையாடுவதுதான் இந்த தர்ப்பணம் செய்தல், கருமாதி செய்தல் போன்றவைகளாகும்.

 

நமது மூதாதையர்களின் ஜீன் நம்மிடம் வழிவழியாக வரவில்லையா? நமது தாத்தா அல்லது கொள்ளுதாத்தா, எள்ளு தாத்தா, தந்தை போன்றவர்களின் குணாதிசயங்கள் உடல் கூறுகள் அப்படியே நம்மிடம் அமைகின்றதல்லவா? அதன் மூலம் நம்மிடம் நமது மூதாதையர்கள் வாழ்ந்துக்கொண்டுதானே உள்ளார்கள்! அதனால் அவர்களின் நினைவு நாட்களில் நாம் அவர்களை நினைத்து வழிபட சில சடங்குகளை செய்தால் என்ன? அது அவர்களை சென்றடையும் அல்லவா? என்றெல்லாம் அறிவியல் பேசுவதின் மூலம் சிலர் இந்த மூடர்களின் செயலை ஆதரிக்கின்றனர்.

 

ஜீன் வழியாக ஒருவரின் உடற்கூறுகளின் சாயை பல தலைமுறைகள் தாண்டியும் பின்தொடரத்தான் செய்யும். அது முற்றிலும் அறிவியல் சார்ந்தது. நமது தந்தையின் சாயலில்தான் நமது உடல் உருவம் அமைகின்றது. ஒரு நாள் நமது தந்தை காலமாகின்றார். அதற்காக நாம் அவரது நினைவு நாளில் மூட சடங்குகளால் வழிபாடு செய்தால் அவ்வழிபாட்டால் எவ்வாறு நமது தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் அல்லது அமைதி அடையும் அல்லது சந்தோஷம் அடையும் என்று சிந்திக்க வேண்டாமா? நமது தந்தையின் ஜீன் அவரது விந்தணுக்காளால் நம்மிடம் கடத்தப்பட்டுள்ளது உண்மைதான்ஆனால் நமது தந்தையின் ஆன்மா தன் தேகத்தை விட்டவுடன், அதன் மறு பிறவியில் எந்த தேகத்தை எடுக்கும் என நமக்குத் தெரியாது. அவர் செய்த நற்காரியங்களால் ஒரு மனித தேகத்தையே எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த மனித தேகம் தனது முற்பிறவியில் எடுத்த மனித தேகத்தை ஒத்திருக்குமா? என்றால் முற்றிலும் இருக்காது. ஏனெனில் இப்போது அவருக்கு யார் தந்தையோ அவரின் ஜீன்னை பின்பற்றி ஒரு முற்றிலும் மாறுபட்ட மனித தேகத்தைதான் அவர் எடுப்பார். அப்போது அவருடைய அதாவது நமது தந்தையின் ஆன்மா வேறு ஒருவரின் மூதாதையர்களின் ஜீனைப்பெற்று அதற்குத் தக்க தனது உடம்பை எடுத்திருப்பார். ஆக, தற்போது நமது தந்தையின் ஆன்மா நமது குடும்பத்திற்கு யாதொரு தொடர்பும் இல்லாத இடத்தில் முற்றிலும் மாறுபட்ட ஜீன்னுடன் குழந்தையாக பிறந்து வளரும்.

 

இந்த உண்மையை சற்று சிந்தித்து தெளிந்தால் போதும். நாம் இந்த மூட சடங்குகளை எல்லாம் அறவே விட்டுவிடுவோம். ஜீன் என்பது பரம்பரை பரம்பரையாக இடம் பெயரும் அறிவியல் தன்மை கொண்டது. ஆனால் ஆன்மா என்பது ஒவ்வொரு பிறவியிலும் தனது ஜீன்னை மாற்றிக்கொண்டு வெவ்வேறு தேகங்களில் பிறவி எடுக்கும் ஆன்மிக தன்மை கொண்டது.

 

அதனால் இந்த உண்மையை புரிந்துக்கொண்டு, இனியும் நாம் மூட பழக்கங்களை தொடராமல் அறிவுடை மக்களாக இந்த சமுதாயத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நமது மன திருப்திக்காக வேண்டுமானால், நமது மூதாதையர்களின் நினைவு நாட்களில் வறுமையில் உள்ளோர்களுக்கு அன்னதானம் செய்து நாம் ஆன்ம லாபம் அடையலாம். அப்போதும் இந்த அன்னதானம் நமது ஆன்மாவிற்குதான் லாபத்தை கொடுக்குமே அல்லாது நமது மூதாதையர்களின் ஆன்மாவிற்கு எவ்வித பயனும் தராது.

 

மேலும் சனிக்கிழமை ஒருவர் இறந்துவிட்டால் அந்த ஆத்மா வேறொரு ஆத்மாவை அழைக்கொண்டுதான் செல்லும் என்ற மூட நம்பிக்கை இப்போதும் மூடர்களிடையே மிகையாக உள்ளது. அதனால் சனிக்கிழமை இறந்தவர்களின் பிணத்தை எடுத்துச் செல்லும் பாடையில் கோழியை கட்டி தொங்க விடுவார்கள். அக்கோழி இடுகாடு செல்லும் வரையில் அய்யோ அய்யோ என கத்திக்கொண்டே செல்லும். இச்சடங்கை செய்யும் யாருக்கும் உயிர் இரக்கம் என்பதே சிறுதும் இல்லை. மிகக் கடின சித்தமுடையவர்களாக உள்ளார்கள்.   

 

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் பல கோடி உடல்கள் (மனிதர்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும்) தங்களது ஆன்மை விட்டு சடலங்களாக பிணங்களாக மாறுகின்றன. அவைகள் இயற்கையாகவோ, நோய்கள் மூலமாகவோ, விபத்துக்கள் மூலமாகவோ, கொலை செய்யப்படுவதின் மூலமாகவோ, தற்கொலைகளாலோ மரணமடைவது இயல்புதான். இதில் குறிப்பிட்டு சனிக்கிழமை மட்டும் உயிர்விடும் தேகங்களை பார்த்து நாம் பயப்படுவது எதனால்? இதன் பின்னனியில் இருப்பவர் யார்?

 

கோழியோ, சேவலோ, ஆடுகளோ இவைகள் யாருக்கு தேவைப்படுகின்றது? இடுகாட்டில் இவைகளை யார் எடுத்துச் செல்கின்றார்? வெட்டியான்தான் அதனை உணவிற்காக கொலை செய்ய தனது வீட்டிற்கு எடுத்துச்செல்வான். அவனுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த கொலை சடங்குகளாகும். உண்மையில் எந்த ஆன்மாவிற்கும் பிற ஆன்மாவை விடுவிக்கும் சக்தி கிடையாது. தினமும் இவ்வுலகில் எவ்வாறு மரணங்கள் நிகழ்கின்றனவோ அவ்வாறே சனிக்கிழமை அன்றும் நடைபெறுகின்றது.

 

சனிக்கிழமைப் பிணம் துணை தேடுமென்றால், அப்பிணத்திற்கு அருகில் பாடையில் கட்டித் தொங்கவிடப்படும் கோழி, இடுகாடு செல்லும் முன் இறந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் இறக்க வில்லை.

 

தனது வாழ்நாளில் புலால் உண்ணாத சைவ குடும்பத்தில் வாழ்ந்த ஒருவர், சனிக்கிழமை இறந்தார் என்ற ஒரு காரணத்தால், அவரது பாடையிலும் கோழியை தொங்கவிடும் மிகக் கொடூரமான செயல் சமூகத்தில் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது.

 

வள்ளலார் காலம் முதல் அவருடன் அணுக்கத்தொண்டராக இருந்த காரணப்பட்டு .மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் வழித்தோன்றல் மற்றும் சைவ குடும்பத்தை வழிவழியாகக் கொண்டொழுகும் எனது தந்தை திரு..திருநாவுக்கரசு அவர்கள் சனிக்கிழமை அன்றுதான் (கொரோனா முழு அடைப்பு காலத்தில் 05-06-2021 – மாலை 04.00 மணி)  காலமானார். பலரது சலசலப்பிற்கு பின்பு கோழிகட்டும் சடங்கு தவிர்க்கப்பட்டது. ஆனால் எனது சித்தப்பா திரு..முருகாநிதி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் சனிக்கிழமை அன்றுதான் (03-12-2022 – காலை 09.30 மணி) காலமானார். அவரது பாடையில் கோழி கட்டப்படுகின்றது என்ற காட்சியை கண்டவுடன் நான் மிகுந்த கோபத்துடன் அவ்விடத்தைவிட்டு எமது வீட்டிற்கு வந்துவிட்டேன். இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை. மேலும் கருமாதி, திதி போன்ற எந்த சடங்குகளிலும் இனி யாருடைய வீட்டிற்கும் செல்வதில்லை என்று தீர்மானித்து அவ்வாறே அவருடைய கருமாதி முதல் அதனை நடைமுறை படுத்த தொடங்கிவிட்டேன்.     

 

          வள்ளற்பெருமானின் வழிநடக்கும் சுத்த சன்மார்க்கள் இச்சடங்குகளை துச்சமென எண்ணி இச்சமுதாயத்தில் நம்மை யார் எதிர்த்தாலும், நம்மை இழிவாகப் பேசினாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி வள்ளற்பெருமானின் கொள்கைகளுக்கே முன்னுரிமை அளித்து, அதனை நமது வாழ்க்கையில் செயலில் கொண்டுவரவேண்டும்.   கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டும் என்பதை நாம் நமது நடத்தைகளின் மூலம் நிரூபிக்க வேண்டும். எனவே இதனை வாசிக்கும் நீங்கள் தற்போது எந்த வயது காரர்களாக இருப்பினும் உடனே கீழ்காணும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக்கொள்வது உங்கள் சன்மார்க்க கடமைகளுள் மிக முக்கியமான ஒன்றாகும். இதுபோன்ற ஆவணங்களை சுத்த சன்மார்க்க சங்கங்கள் அச்சடித்து தங்களது ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அளித்து, பூர்த்தி செய்த ஆவணங்களின் பிரதி ஒன்றினை வாங்கி தங்கள் சங்க ஆவணங்களாக பாதுகாத்து வருதல் வேண்டும்.    

 

          நாம்  பூர்த்தி செய்ய வேண்டிய ஆவணத்தின் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

 

 

சுத்த சன்மார்க்கமே நமது சமுதாயத்தில் பரவ வேண்டும். அதற்கு யாதொரு தடையும் இல்லை. தடைகள் இருந்தால் அது அனைத்தும் நம்மால் வரக்கூடியதாகத்தான் இருக்கும். எனவே முதலில் நாம் மாறினால் போதும். உலகம் தன்னால் மாறும். அருட்பெருஞ்ஜோதி.      


          நாம்  பூர்த்தி செய்ய வேண்டிய ஆவணத்தின் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

எனது சுத்த சன்மார்க்க கட்டளை

---------------- என்கிற நான் என்னால் இயன்றவரை திருவருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து ஒழுகுகின்றேன். ஆகையால் சாதி, சமயம், மதம் என்கிற ஒன்றிலும் நான் இல்லை. 30-03-1871-ஆம் ஆண்டு வள்ளற்பெருமான் நமக்கு ஆணையிட்ட "சாமாதிக் கட்டளை" என்பதை நான் முழுமையாக கடைபிடிக்க விருப்பம் கொண்டுள்ளேன். எனவே எனக்கு கர்ம கால முதலிய பேதங்களால் தேக ஆனி (மரணம்)நேரிட்டால் என்னை தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். அச்சமயம் என்னை நினைந்து யாரும் அழுகுரல் எழுப்பக்கூடாது. எனக்கு யாதொரு சடங்கும் செய்யாது (எனது தேகத்தை குளிப்பாட்டுதல், விபூதி அல்லது திருமண் அணிவித்தல், மாலை அணிவித்தல் போன்றவை)நான் உடுத்திய ஆடையை மாற்றாமல் அதே துணியின் மீது ஒரு புதிய வெள்ளாடை மட்டும் சுற்றி என் தேகத்தை சமாதி செய்வித்தல் வேண்டும்.

          நான் இறந்த பிறகு எனது மனைவியின் தாலியினை கழற்றும் சடங்குகள் உட்பட எதனையும் செய்யக்கூடாது. எனது மனைவி எப்பொழுதும் போல் பூ, பொட்டு, தாலியுடன் இச்சமுதாயத்தில் இறுதிவரை நடமாட வேண்டும்.

          எனது மனைவி இறந்தால் நான் மறுமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்றும் உறுதிகூறுகின்றேன். எனது மனைவிக்கும் யாதொரு சடங்கும் இன்றி மேற்சொன்னவாறு தகனஞ் செய்யாது அடக்கம் செய்வேன். இவ்வாறே எனது பிள்ளைகளுக்கும் தேக ஆனி நேரிட்டால் செய்வேன்.

          நான் இறப்பினும், எனது மனைவி இறப்பினும், எனது பிள்ளைகள் இறப்பினும் யாருக்கும் திதி, கருமாதி போன்ற கர்ம காரியங்களை யாரும் செய்தல் கூடாது. சன்மார்க்க முறைபடி செய்கிறேன் என்று உறவினர்களை கூட்டி வேறு பெயர் கொண்டு வேறொரு வடிவிலும் இந்த சடங்குகளை செய்தல் கூடாது. மாறாக அந்நாட்களில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டிலோ அல்லது தருமச்சாலைகளிலோ அன்ன விரயம் மட்டும் செய்யவும்.

          எனது சொந்தங்களோ அல்லது என் வழித்தோன்றல்களோ அல்லது என் உரிமை நண்பர்களோ அல்லது என் மதிப்பிற்குரியவர்களோ அல்லது எவராயினும் மேற்காணும் எனது சுத்த சன்மார்க்க கட்டளையை என்னளவில் மீறி நடத்தல் கூடாது.

    இறையருளால் சனிக்கிழமை அன்று நான் பரிபூரணன் ஆனால், சில மூடர்களின் நம்பிக்கைப்படி எமது இறுதி வாகனத்தில் கோழி, சேவல் போன்ற எமது ஆன்ம உறவுகளை கட்டி இடுகாடு வரை அழைத்துவரும் மூட பழக்கங்கள் அறவே கூடாது. எல்லா உயிர்களும் இன்புற்று இவ்வுலகில் வாழ வேண்டும் என்பதே என்னைப்போன்ற சன்மார்க்க ஆன்மாக்களுக்கு விருப்பமாகும். மேலும் எந்த ஒரு ஆன்மாவிற்கும் இன்னொரு உயிரை பறிக்கும் அதிகாரம் கிடையாது என்பதை உங்கள் அறிவு கொண்டு அறியவும்.  

      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணைகொண்டு, இக்கட்டளைக்கு  ஒப்புதல் அளித்து நானும் எனது குடும்பத்தினரும் சுய நினைவோடு  கையொப்பமிட்டு வள்ளற்பெருமானின் ஆணையினை நிறைவேற்றுகின்றோம்.

1. தந்தை பெயர் மற்றும் கையொப்பம்
2. தாய் பெயர் மற்றும் கையொப்பம்
3. பிள்ளைகள் பெயர் மற்றும் கையொப்பம்
4. பேர பிள்ளைகள் பெயர் மற்றும் கையொப்பம்
 (இறுதியாக ஒப்புதல் அளித்த தேதியினை குறிப்பிடவும்)

மேற்காணும் வாசகங்களை கையால் எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ கையொப்பமிட்டு அதனை சொத்து பத்திரம் போல பாதுகாக்க வேண்டும். அதன் பிரதியினை நீங்கள் சார்ந்துள்ள சன்மார்க்க சங்களில் கொடுத்து வைத்துவிட்டால், உங்கள் ஆணை எதிர்காலத்தில் மீறப்படாமல் இருக்க சங்கங்கள் உறுதுணையாக இருக்கும். சாதி சமய மத சடங்குகளை தவிர்ப்போம்...  வாருங்கள் சன்மார்க்க உலகம் படைப்போம். 

T.M.RAMALINGAM
9445545475






3 comments:

  1. Vallalar avarkal yaarayum manam thunpapaduvathupole Pesiyathilai endru Padithirukiren, neengal Eluthiyathai padikum pothu oruvarai patri thi ti eluthiyathu pole ullathu.

    ReplyDelete
    Replies
    1. கண் மூடிப் பழக்கெமெல்லாம் மண் மூடிப்போக... என வள்ளலார் சொல்லுவதை இன்னும் பலரால் ஏற்க முடியவில்லை. கண் மூடிப் பழக்கங்களை அவர்களால் விட முடியவில்லை. அவ்வகையில் வள்ளலார் உபதேசமானது அவர்களது மனதை துன்பப்படுத்தான் செய்யும். வள்ளலாரின் புரட்ச்சிக் கருத்துக்கள் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் மக்களின் மனதை துன்பப்படுத்தவே செய்யும். அத்துன்பம் மக்களின் சிந்தனைகளையும் போக்கினையும் மாற்றம் செய்யவே உதவும். நன்றி.

      Delete
  2. R. இளங்கோவன்அய்யர்வீரசைவர்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.