Friday, February 14, 2020

அட்டாங்க வள்ளல்

அட்டாங்க வள்ளல்
  
அன்பர்களுக்கு வணக்கம்,

”இராமலிங்க அடிகளும் கிறிஸ்துவமும்” என்ற தலைப்புடைய நூல் எனக்கு, என்னுடைய நெட்வொர்க் மார்க்கட்டிங் (BIONEY POWER) நண்பர் திரு.A.S.விக்டர் அவர்கள் மூலம் கிடைத்தது. (விழுப்புரம் - கோலியனூரை சேர்ந்தவர்) 18 பக்கங்களைக் கொண்ட மிகச்சிறிய நூல் இது. இதனை எழுதியவர் மறைத்திரு.டாக்டர்.எஸ்.லாரன்ஸ் அவர்கள். இந்நூலை வெளியிட்டவர்கள் - தமிழ்நாடு இறையியல் கல்லூரி  - மதுரை ஆகும். முதல் பதிப்பு 1988-ல் ரூ.3.50/- விலையில் இப்புத்தகம் வெளியாகியுள்ளது. 


இந்நூலில் எனதளவில் சில ஒற்றுமைகளும் சில முரண்பாடான கருத்துக்களும் இருக்கவே செய்கின்றன. அதில் என்னை மிகவும் ஈர்த்தது எதுவெனில்...? எண்கோண அமைப்பிலான கிறுஸ்துவ சபையாகும். எண்கோணத்தை பற்றியே நாம் இங்கு காண உள்ளோம். 

மேற்காணும் நூலில் என்னை ஈர்த்த அந்த இரண்டு வரிகளை கீழே அளித்துள்ளேன். அதற்கான விளக்கங்கள் திரு.சேலம் குப்புசாமி ஐயாவில் சொற்பொழிவின் துணை கொண்டும் மற்றும் வலைதளங்களின் துணைகொண்டும் கொடுத்துள்ளேன். 

"ஞானசபையின் வடிவம் எண்கோண அமைப்புடையது. தோற்றத்திலும் வடிவத்திலும் சத்திய ஞான சபை இயேசுக் கிறிஸ்துவின் வாழ்வில் மையமாகக் கொண்ட எருசலேம் தேவாலயத்தை நினைவூட்டுகின்றது. (இராமலிங்க அடிகளும் கிறிஸ்துவமும் - பக்கம் - 3)


மேற்காணும் மூன்று வரிகள்தான் அப்புத்தகத்தில் என்னை ஈர்த்த வரிகள் ஆகும். எருசலேம் தேவாலயம் எப்படி இருக்கும் என்று வலைதளத்தில் எனது தேடல் ஆரம்பமானது. அவ்வாலயத்தை பார்க்கும்போது அக்கருத்து உண்மை என்றே தோன்றுகின்றது.இதோ அந்த தேவாலயத்தை பாருங்களேன்...







எருசலேம் 5000 வருடங்கள் பழமையான நகராகும். பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்தாகும். (Jerusalem - World Heritage). இங்கு அர்மீனியக் குடியிருப்புகள், கிறித்துவக் குடியிருப்புகள், யூதக் குடியிருப்புகள் மற்றும் இஸ்லாமியக் குடியிருப்புகள் என நான்கு குடியிருப்புகள் உள்ளன. மத்திய ஆசியாவில் உள்ள இசுரேல் நாட்டில் உள்ள நகரந்தான் இந்த எருசலேம் ஆகும். உலகின் சர்ச்சை நிறைந்த இடமாக எருசலேம் உள்ளது. காரணம் பாலத்தீன நாடும் எருசலேம் தங்களுடையது என தனது இறையான்மையை அங்குச் செலுத்துகின்றது.

விவிலியம் பழைய ஏற்பாட்டின்படி எருசலேம் நகரை கி.மு.1000 ஆம் ஆண்டளவில் யூதர்கள் தங்களது தலைநகராக ஆக்கினார்கள். தாவீது மன்னரின் மகன் சாலமோன் எருசலேமில் புகழ்வாய்ந்த கோவிலைக் கட்டினார். அதனால் யூதர்களுக்கு இன்றும் எருசலேம் புனித நகரமாக உள்ளது.

விவிலியம் புதிய ஏற்பாட்டின்படி இயேசு சுமார் கி.பி.30-ஆம் ஆண்டு எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையுண்டு இறந்தார். அவர் உயிர்நீத்த சிலுவையை கான்ஸ்டண்டைன் மன்னனின் தாய் புனித ஹெலென் என்பவர் கி.பி.300 ஆம் ஆண்டளவில் எருசலேமில் கண்டெடுத்தார். எருசலேம் தேவாலயத்தில்தான் இயேசு இறந்தார், மீண்டும் உயிர் பெற்றார் என்று கிறுஸ்துவர்கள் நம்புவதால், இன்றும் எருசலேம் கிறுத்துவர்களுக்கு புனித இடமாக உள்ளது.

கி.பி.610-இல் இஸ்லாமியர்கள் எருசலேமை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். கி.பி.620-இல் முகமது நபி எருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் மேற்கொண்டு திரும்பினார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். எனவே மெக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் இசுலாமியர் எருசலேமைத் தங்கள் புனித நகரமாக கருதுகின்றனர்.

இவ்வாறு இஸ்லாம், கிறுத்துவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனிதத்தலமாக ஜெருசலேம் விளங்கி வருகின்றது.எனவே இவர்களில் யார் ஜெருசலேத்தை கைப்பற்றுவது என்பதில், இன்றைக்கும் போர் மேகம் சூழ்ந்த இடமாக இது இருக்கின்றது.

மேலே உள்ள கட்டடம் தற்போது இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக, மசூதி என்கின்ற பெயரில் உள்ளது. ஆனால் இவர்கள் ஆளுகைக்கு முன்னர் இக்கட்டடம் கிறுத்துவர்களின் தேவாலயமாக இருந்தது. எனது கருத்துபடி இக்கட்டடம் தேவாலயம் என்பதில் சந்தேகமில்லை. 

எண்கோண கட்டட அமைப்பு வள்ளற்பெருமான் கண்டுபிடித்த ஓரு புதிய வடிவம் என நான் இதுநாள் வரை எண்ணியிருந்தேன். ஆனால் மேற்காணும் நூலை படித்ததிலிருந்து எண்கோண கட்டட அமைப்பு கிறுத்துவர்களுக்கே சொந்தமுடையது என தற்போது நான் கருதுகின்றேன்.

ஆனால், வள்ளற்பெருமான் எருசலேம் தேவாலயத்தை மாதிரியாகக் கொண்டோ அல்லது வேறு எந்த கிறுத்துவ சபைகளை மாதிரியாகக் கொண்டோ ஞானசபையை கட்டியிருக்க மாட்டார் என்பது எமது கருத்து.ஏனெனில் சிதம்பரம் கோயிலை புதுபிக்கும் நோக்கத்தில் இருந்த வள்ளலார், அதனை வடலூரில் உத்தரஞான சிதம்பரம் என்கின்ற பெயரில் செய்து காட்டினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். மேலும் மனித உடம்பின் ஆகாய விளக்கமான தலைப்பகுதியை உருவகப்படுத்தியே ஞானசபையை உருவாக்கினார் என்பதும் வரலாறு.  


“சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்...” என்பது வள்ளற்பெருமானின் வாக்கு. எண்கோண கட்டடத்தை வள்ளற்பெருமான் தமது மனதுள் கண்டார் என்பதே உண்மையாய் இருக்க, புற உலகில் உள்ள எந்த தேவாலயமும் அதற்கு காரணமாக இருக்க முடியாது. 


“அடிகளும் சென்னையில் இருந்த ஒரு கிறிஸ்தவருக்கும் இருந்த தொடர்பு குறித்து காஞ்சிபுரம் த.வடிவேல் என்பவர் எழுதிய “சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சரிதம்” என்ற நூலில் (1958) 56-ஆம் பக்கத்தில் காணலாம். அதன் பின்பு அடிகள் சித்தி வளாகத்தில் தங்கி இருந்த காலத்தில் டேனிஷ் மிஷின் என்ற கிறிஸ்துவ அமைப்பினால் சமயப் பிரச்சாரம் செய்யப்பட்டது. ரெவரெண்டு மத்தேயு (Reverend Matthew) என்பவர் அடிகளை அடிக்கடி சந்தித்து கிறிஸ்துவைப்பற்றி உரையாடுவார் என்ற குறிப்பினை டென்மார்க்கு நாட்டு ஜான் ஆண்டெர்சன் (Jon Anderson) தமது நூலில் (Bushanam En Indisk praest - 1944 - Page 19) குறிப்பிடுகின்றார். (இராமலிங்க அடிகளும் கிறிஸ்துவமும் - பக்கம் - 17)


சுத்த சன்மார்க்கத்திற்கும் கிறித்துவத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இறந்தாரை புதைத்தல், செத்தார் எழுதல், வழிபாட்டு இடத்திற்கு சபை என்கின்ற பெயர் இடுதல் போன்றவற்றை சொல்லலாம். ஆனால் இவைகள் எல்லாம் வள்ளலாருடன் பழகிவந்த கிறிஸ்துவ அன்பர்களால் வெளிப்படுத்தப்பட்ட சுத்த சன்மார்க்க கருத்துக்கள் என்று சொல்லிவிட முடியாது. வள்ளலார் கிறித்துவத்தை பற்றி தமது உரைநடை நூலில் ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதுவும் அதிலுள்ள பிழையை எடுத்துக்காட்டியுள்ளார்...

“இந்து வேதத்தின் முக்கியாமிசத்தை... கிறிஸ்தவர்கள் 7 நாளில் இந்த உலகத்தைப் படைத்ததாகச் சொல்லுவதின் உண்மை - அது வல்ல - யாதெனில்: சில அனுபவ விஷயங்களை அது விரிக்கின்றது. கைந்நொடிப்பொழுதில் 60-ல் 7 பாகம் கலையில் முடிந்தது. மேற்படி கலைகளாவன பெண்பாகத்தில் 4, ஆண்பாகத்தில் 3 - ஆக 7. ஒவ்வொரு கலையில் தாது அணுவாய்ச் சேர்ந்து, 7-வது கலையில் கரு சம்பூர்ணமாய்ச் சப்த தாதுவுங் கூடிய பிண்டாகும்." (திருவருட்பா உரைநடை நூல் - பக்கம் - 356)

சில அனுபவ விஷயங்களை கிறிஸ்த்தவர்கள் 7 நாட்களில் உலகை படைத்ததாக கூறுகின்றார்கள். அதுவும் அந்த அனுபவ விஷயம் இந்து மதத்தின் முக்கிய கூறாகவுள்ளது என்றும் வள்ளலார் குறித்துள்ளதை கவனிக்க வேண்டும். எனவே எண்கோண சபையானாலும், மற்ற சுத்த சன்மார்க்க கொள்கையானாலும், வள்ளலாரை தனித்தன்மையோடு காண்பதே சிறந்தது.       


திரு.சேலம் குப்புசாமி ஐயா அவர்கள், எண்கோண கட்டடத்திற்கு தமது சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார், அதனை ஒருவாறு இங்கே அளித்துள்ளேன்.

அகரம் உகரம் 8 + 2

சிதம்பரம் கோயிலிலே சிற்சபை பொற்சபை இருக்கின்றது. சிற்சபை என்பது சிதம் தரும் சபை சிற்சபை. ”சிதம்” என்றால் ”ஞானம்”. சிற்சபைக்கு மேலே பொற்சபை உண்டு. தங்கஓட்டால் அமைந்துள்ளது பொற்சபை. கீழே சிற்சபை, மேலே பொற்சபை. இதனை வள்ளலார் வடலூர் ஞான சபையில் மாற்றியமைக்கின்றார். ஒரு பக்கத்தில் சிற்சபை, மறுபக்கத்தில் பொற்சபை, நடுவிலே ஞானசபை. அதாவது அக்கு (ஃ) வடிவிலே மாற்றுகின்றார். அக்கு என்பது நெற்றிக்கண்ணை குறிக்கும். இடக்கண், வலக்கண், நடுக்கண் ஆகிய மூன்று கண்களும் ஒருவருக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் அவர் சித்தனாகின்றான்.

கண்ணகி கோவலன் இறந்தவுடனே மன்னனிடம் நீதி கேட்க, மன்னன் இறக்க, என் கணவன் கள்வனா? என சூரியனையும், பஞ்ச பூதங்களையும் கேட்டு மிரட்டுகின்றாள்! மதுரை தீப்பற்றி எரிகின்றது! காரணம், கண்ணகி என்றால்... நெற்றிக்கண்ணை திறந்துக்கொண்டவள் எனப் பொருள். கண்+ஃ+கி = கண்ணகி (கி - பெண்பால் விகுதி).

உகரமான ”2” என்பது நமது உடம்பிலே அமுதக்காற்றாகவும், விஷக்காற்றாகவும் - நாம் விடுகின்ற மூச்சுக்காற்றாக வந்துச் செல்கின்றது.

அகரமான “8” நமது உடம்பிலே மூளைப்பகுதியைக் குறிக்கும். அதாவது கபாலப் பகுதி 8 எலும்புகளால் ஆனது. இந்த கபால வடிவத்தையே வள்ளலார் ஞான சபையாக எண் கோண வடிவில் கட்டி காண்பித்துள்ளார். சிதம்பரத்தில் ஒரு அம்பலம்தான். வடலூரில் எட்டு அம்பலம் உள்ளதாக சொல்லி சிதம்பரத்து இறைவனை அழைத்துவரச் சொல்வார் வள்ளலார். வடலூரை பெருவெளி என்பார் வள்ளலார். புறமுகமாக பார்த்தாலும், சிதம்பரம் 80 ஏக்கர் மட்டுமே. வடலூர் 120 ஏக்கர் உடைய பெரு வெளியாகும்.

சிதம்பரம் என்பது யோக நிலை. வடலூர் என்பது ஞான நிலை. சிதம்பரத்தில் 36 தத்துவத்தின் இறுதிநிலையான ”நாத” நிலையில் பூஜை செய்யப்படுகின்றது. அக அனுபவத்தில் நாத நிலை காணும் ஒருவருக்கு தச நாத ஒலிகள் கேட்கும். அதனையே முற்காலத்தில் (தற்போது கைவிடப்பட்டது) சிதம்பரத்தில் 10 விதமான இசைக் கருவிகள் வாசித்து பூஜை செய்வார்கள்.

ஆனால் வடலூரிலே எந்த நாதமும் கேட்காது. எந்த வாத்தியமும் கிடையாது. ஏனெனில் வடலூர் ”விந்து” நிலையில் வழிபாடு நடைபெறும். பர நாதத்திற்கு அப்பால் உள்ளது விந்து நிலை. சைவ சித்தாந்தம் நாதத்துடன் முடிவுறும். வடலூரிலே வள்ளலார் சைவ தத்துவத்தைக் கடந்துச் செல்கின்றார். விந்து என்பது ஒளி எனப்படும். ஒலியைத் தாண்டி ஒளிக்குச் செல்கின்றார். வடலூரிலே முக்கண் பார்வை முக்கியத்துவம் பெறுகின்றது.

வடலூர் ஞானசபை முழுதும் அகரத்தால் கட்டப்பட்டது. எட்டு என்கின்ற எண்ணால் கட்டப்பட்டது. கட்டட வடிவம் மேலே எண்கோண வடிவம், அதைச்சுற்றி வேலிபோல சிறு சிறு தூண்கள் எண்கோண வடிவில் உள்ளன. அந்தத் தூண்களிலிருந்து ஞானசபையைச் சுற்றி இரும்புச் சங்கிலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களுக்கு பிறகு எண்கோண பிரகாரம் உள்ளது. அதற்கு அடுத்து எண்கோணத்தில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவற்றில் எட்டு வாயில்கள் உள்ளன. வாயில்களுக்கு அருகில் 8+8 = 16 ஜன்னல்கள் உள்ளன. இவ்வாறு எல்லாம் 8 -ன் மயமாக ஞானசபை அமைந்துள்ளது.

யார் ஒருவன் அகரத்தின் உண்மை தெரிந்துக்கொள்கின்றானோ அவன் கடவுள் ஆகின்றான். ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.” இதனை வள்ளலார், அகரம் = ஆதிபகவன் என மாற்றுகின்றார். அகரம் என்கின்ற எழுத்து ரோம் சாம்ராஜ்ஜியத்தில் ஒலிக்கின்றது. இயேசு பிறப்பதற்கு 40 / 50 ஆண்டுகளுக்கு முன்பே ஜூலியஸ் சீசர் வருகின்றார். அவனுடைய அக்காவின் மகன் அகஸ்டஸ் சீசர். ஆக்டேசியர் எனப்பெயர். ஆக்டோ என்றால் எட்டு எனப்பொருள். எண்கோணத்தை அட்ட கோணல் என்பார்கள். அட்டமேல் சபை என்பார் வள்ளலார். இந்த அகஸ்டஸ் என்பவர் தன்னுடைய பெயரை ஆகஸ்ட் மாதத்தில் புகுத்துகின்றார். ஆகஸ்ட் மாதம் எட்டாவது மாதம்.

ஜூலியஸ் சீசர் கொலையுண்டப் பிறகு தளபதியாக இருந்த அவரது நண்பர் ஆண்டனி ஆட்சி செய்கின்றார். அப்போது சிறுவனாக இருக்கும் அகஸ்டஸ் சீசர் ஆண்டனியை வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கின்றான். அகஸ்டஸ் சீசரின் ஆட்சி பொற்காலம் என வரலாறு குறிப்பிடுகின்றது. சரித்திரத்தில் 8 என்கின்ற எண் முக்கியத்துவம் பெறவேண்டும் என்பதற்காக அகஸ்டஸ் சீசர் பல முயற்சிகளை எடுத்தார். 8 என்பது ஒரு தேவதை, ஒரு தெய்வம். இந்து மதத்தில் கண்ணன் பிறந்தது அஷ்டமத்தில் அதாவது 8-ஆம் தேதி பிறந்தார். ஆனால் நமது ஜோசியத்தில் அஷ்டமி, நவமி வேண்டாம் எனச் சொல்லி நம்மை யாரும் மேல் நிலைக்கு போகக்கூடாது என சதி செய்துவிட்டார்கள். அகஸ்டஸ் சீசருக்குப் பிறகு இயேசு வருகின்றார். கிறிஸ்துவம் உலகப்புகழ் பெறுகின்றது. பெரிய பெரிய தேவாலயங்கள் எழுப்பப்படுகின்றன. கிறிஸ்தவர்களின் பழக்கங்களில் ஒன்றாக, புனித நீராட்டுதல் உண்டு. குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் மீது மந்திர நீர் தெளிப்பார்கள். அல்லது சிறு குளத்தில் குழந்தையை முக்கி எடுப்பார்கள். அவ்வாறெ இயேசு குழந்தையையும் புனித நீரில் முக்கி எடுத்தார்கள். புனித நீர் தெளிப்பின் பிறகு இரண்டாவது பிறவியை அக்குழந்தை அடைந்துவிட்டது எனப்பொருள். அதாவது ஞானப்பிறவி பெற்றார்கள் எனப்பொருள். இதற்கு  ஞானஸ்தானம் எனவும் பெயர். இப்படி தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்யப்படுகின்ற இடத்தின் மேல் கூரைகள் வடலூரில் உள்ளது போலவே எண்கோண அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது அகரவடிவில் இருக்கும். இத்தாலி - பிளாரன்ஸ் நகரத்திலே கி.பி.1296 ஆம் கட்டப்பட்ட Church Cathedral Santa Maria del Fiore in Florence, Italy எண் கோண அமைப்பில் காணப்படுகின்றது.

அவர்களுடைய கடவுளான ”யாவே” என்பவர் இவ்வுலகத்தை ஆறு நாட்களில் படைக்கின்றார். ஏழாவது ஓய்வெடுத்துக்கொள்கின்றார். எட்டாவது நாளில் இறந்துபோனவர்களுக்கு எல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கின்றார். இப்படி இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நாள் எட்டாவது நாளாகும். இந்த எட்டாவது நாளை குறிப்பிடும் வகையில் ஞானஸ்தானம் செய்கின்ற இடங்களை எண்கோண அமைப்பில் கட்டினார்கள். ஆக, எட்டு என்கின்ற எண் எதைக் கொடுக்கும் என்றால்? உயிரைக் கொடுக்கும். செத்தவர்களை எழுப்பும் என்கின்ற நம்பிக்கை இயேசு பிறப்பிற்கு முன்பே அகஸ்டஸ் சீசர் காலத்திலேயே இருந்திருக்கின்றது.

இந்த அகரத்தின் முக்கியத்துவம் நமது திருக்குறள் வழியாகவே யவனர்களுக்கு சென்றிருக்க வேண்டும். தமிழர்களுக்கும் யவனர்களுக்கும் வணிகம் நடைபெற்றது. அவ்வணிகத்தின் வாயிலாக திருக்குறளும் அகரமும் அங்குச் சென்றிருக்க வேண்டும். தமிழகத்தின் மயில் தோகைகள் ரோம் சாம்ராஜ்ஜியத்தில் உண்டு. ரோம் சாம்ராஜ்ஜியத்தின் கஜானா எல்லாம் தமிழகத்திற்கு சென்றுக்கொண்டிருக்கின்றது... முதலில் அதனை நிறுத்துங்கள் என அன்றைக்கே ரோமில் குரல் எழுந்தது. அவ்வளவும் மிளகு, ஏலக்காய், பட்டை போன்ற வாசனை பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதியாகின. அப்படியே திருக்குறளின் அகரமும் ஏற்றுமதியாகின. எட்டு என்ற எண் இறந்தவர்களை எழுப்பும் என்கின்ற நம்பிக்கை யூத மதத்தில் உண்டு, கிறிஸ்துவ மதத்திற்கும் உண்டு. இந்நம்பிக்கை தமிழ்நாட்டின் சித்தர் மரபிலிருந்து அங்குச் சென்றது.

அப்படி வடலூர் 8-ன் சபையான ஞானசபையும் இறந்தவர்களை எழுப்பும் வகையில் கட்டப்பட்டதுதான். அங்கு எழுவார் மேடையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ”எட்டு” என்கின்ற எண் மனிதர்களுக்கு ”இறவா வரம்” கொடுக்கும் என்று, இன்னும் அதீத நிலையில் வள்ளலார் எடுத்தியம்புகின்றார்.   


இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் கட்டப்பட்ட எண்கோண தேவாலய படத்தை பார்ப்போம்...




எண்கோண தேவலாயங்களில் கடல்கொள் நிகழ்வால் அழிந்து அகழ்வராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தைப் பற்றி தற்போது காண்போம்...

கப்பர்நாகும் (Capernaum) என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பாலஸ்தீன கடற்கரை நகரமாகும். கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்குப் பின் கப்பர்நாகும் கடல் கொண்டது.19-ஆம் நூற்றாண்டில் நிகழ்த்திய அகழாய்வுகளில் பயனாக இந்நகரம் தற்போது வெளியுலகத்திற்கு தெரியவந்திருக்கின்றது. இரு பொதுப்பயன்பாட்டுக்குக் கட்டடங்களும் ஒரு யூத தொழுகைக்கூடமும் எண்கோண வடிவில் அமைந்த கிறித்துவக் கோவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இச்செய்திகளால் கிறுத்துவ தேவாலயங்கள் பல எண்கோண அமைப்புகளில் இருந்தன... இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாகின்றது.

1634-54 -ஆம் ஆண்டு கட்டப்பட்ட முகலாயர்களின் கட்டடமான உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் உட்கூடம் எண்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

தாஜ்மகாலைப் போல ஞானசபையும் தெற்கு வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்துமதக் கோவில்களிலும் அமைந்துள்ள விமானங்களில் சில எண்கோண விமானத்தை கொண்டுள்ளன. (அஷ்டாங்க விமானம்)

இவ்வாறு 8 - என்கின்ற எண் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏதோ ஒரு குறியீட்டை தாங்கி நின்று வருகின்றது.

மதங்களைக் கடந்த சுத்த சன்மார்க்கத்தில் 8 - என்கின்ற எண் இறவா வரத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. வள்ளற்பெருமானின் இறைவன் பெயரும் எட்டெழுத்தான “அருட்பெருஞ்ஜோதி” என்பதே ஆகும். தமிழ் என்னும் சொல்லுக்கு உரையும் “அ” (8) என்ற எழுத்து உற்பத்தி விவரங்களையும் வள்ளற்பெருமான் தமது உரைநடையில் தெரிவித்திருப்பதை இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.  

எண்கோணம் பற்றிய மேலும் செய்திகள் இருப்பின் அன்பர்கள் இங்கே பகிரலாம். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 

அன்புடன் தி.ம.இராமலிங்கம்





13 comments:

  1. அருமை. நன்றாக ஆராய்ந்துள்ளீர்கள்.
    ஒரு சிறு நெருடல். பெருமானின் வாக்குகளோடு கிருத்துவத்தையோ இஸ்லாம் யூதத்தையோ ஒப்பிடுதல் ஏற்புடையதன்று.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... கவனத்தில் கொள்கின்றேன்.

      Delete
  2. அறுமையான விளக்கம்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. அருமை. நன்றிகள்

    ReplyDelete
  5. தமிழுக்கு முன்னரே கிருஸ்து & முஸ்லிம்ஸ் 8 வடிவம் உருவாக்கி விட்டார்கள் என்கிறாயா? முட்டாளே 8 என்பது வடிவம் அல்ல, அது தமிழில

    அகரம் எனவும் உகரம் எனவும் குறிப்பிடுவர். இதனையே தமிழ் எண்கள் அடிப்படையில், “எட்டும் இரண்டும் அறியாத என்னை, எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி” என்பார் திருமூலர். தமிழ் எண்களில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். அ+உ+ம் என்பதன் கூட்டே ஓங்காரம். அகரம் சிவத்தையும் உகரம் சிவத்தின் சத்தியையும் மகரம் மாயையையும் குறித்து நிற்கின்றது என்பர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... கவனத்தில் கொள்கின்றேன்.

      Delete
  6. Read this book ---> Bogar janana sagaram book

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.