Sunday, June 5, 2022

வீடுகள் தோறும் தருமச்சாலை – திட்டம்

                                 வீடுகள் தோறும் தருமச்சாலைதிட்டம்




ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு.

கடலூர் மாநகரில் வீடுகள் தோறும் தருமச்சாலைத் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதன் விவரங்களை இங்கே நாம் இப்பதிவில் காண்போம். ஜீவகாருண்யத்தின் சாதனம் தருமச்சாலை. தருமச்சாலையின் சாதனம் தயவு உள்ளம் படைத்த சமுசாரிகளின் இல்லங்கள்தான்.

உண்பதற்கு ஆகாரமில்லாமல் சோர்வடைந்த சீவர்களுக்குச் சீவகாருணியத்தால், அந்தச் சீவர்களுக்கு அகத்தினித்தும் முகத்தினிடத்தும் தழைந்து பொங்கித் ததும்புகின்ற இன்பமும், அது கண்டபோது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறுண்டகின்ற இன்பமும், ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்திற் பூரணமாகத் தோன்றும்.

பசியினால் வருகின்ற துன்பங்கள், ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க, அத்துன்பங்களும் நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியதுக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறிய வேண்டும்.

நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்றுதின்ற பசியென்கின்ற பாவி இன்றும் வருமே! இதற்கு என்ன செய்வோம்! என்று ஏக்கங் கொள்கின்ற ஏழைச் சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் சீவகாருண்யம்.

நடந்து நடந்து காலும் சோர்ந்தது. கேட்டுக் கேட்டு வாயுஞ் சோர்ந்தது. நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்து இனி இப்பாவி வயிற்றுக் கென்ன செய்வோம்! என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே சீவகாருண்யம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற சாதன சகாயங்களை வேண்டாமல், சீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும், உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.

அன்றியும், சீவகாருணிய ஒழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல் பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகளெல்லாம் சர்வசக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள். சீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள். அவர்களை ஆன்மவிளக்கமுள்ளவர்களாகவும் நினைக்கப்படாதுசீவகாருணிய மில்லாது செய்யப்படுகிற செய்கைக ளெல்லாம் பிரயோஜன மில்லாத மாயாசாலச் செய்கைகளே யாகுமென்று அறியவேண்டும்.

எனவே தயவு உள்ளம் படைத்த சமுசாரிகள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பை வள்ளலார் வழங்குகின்றார். வீடுகள் தோறும் தருமச்சாலை திட்டத்தில் இணைந்திட வாருங்கள்.   

சன்மார்க்க இல்லங்கள் அல்லது தாவர உணவை மட்டுமே சமைக்கின்ற உண்ணுகின்ற இல்லங்கள் மட்டும் இத்திட்டத்தில் இணைய வேண்டும். இத்திட்டத்தின்படி  தினசரி குறைந்தது 1 கிலோ அரிசி சாதம் (தயிர் சாதம் கண்டிப்பாகக் கூடாது. கசாம்பார் சாதம் எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற வெரைட்டி ரைஸ்) 10 எண்ணிக்கை கொண்ட உணவு பொட்டலங்கள் பார்சல் செய்து காலை 10.30 மணிக்கு தயாராக வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

உங்கள் இல்லம் தேடி எங்கள் குழுவில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் வந்து நீங்கள் அளிக்கும் உணவு பொட்டலங்களை வாங்கிச் செல்வார்கள். இப்படி பல சன்மார்க்க குடும்பங்களிலிருந்து வாங்கி வரும் உணவு பொட்டலங்களை தீபத்தின் முன் குவித்து இறைவனிம் ஆணை பெற்று, அந்த உணவுப் பொட்டலங்கள் அனைத்தும் கடலூர் நகர் முழுதும் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு நேரடியாகச் சென்று வழங்குவார்கள்.

இதனால் இத்திட்டத்தில்  இணைந்த குடும்பங்களில் உள்ள அனைவருக்கும் ஆன்ம இலாபம் கிடைப்பது உறுதி. மேலும் உங்கள் குடும்பம் வடலூர் சத்திய தருமச்சாலை போன்று தினமும், பசியை நீக்க முடியாது வருந்துகின்ற ஏழை மக்களுக்கு உணவை அளிக்கும் தருமத்தின் சாலைகளில் நடைபயிலும் ஓர் ஒப்பற்ற மாண்பினை பெறும் என்பதில் ஐயமில்லை.

இத்திட்டத்தில் சேரும் அன்பர்கள் கடலூர் நகருக்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். தாவர உணவாளர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மட்டும் 9445545475 என்கின்ற வாட்ஸாப் எண்ணில் உங்கள் இல்லத்தின் முகவரி மற்றும் உங்களது பெயரினை தெரிவிக்கவும்.

இதற்காக வாட்சாப் குரூப் துவங்கப்பட்டு, அதில் மற்ற விவரங்கள் அனைத்து பகிரப்பட்டு இத்திட்டம் இனிதே நடைபெற ஆவண செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீடுகள் தோறும் தருமச்சாலைத் திட்டம் தமிழகத்தில் சில நகரங்களில் இயங்கி வருகின்றன. தற்போது சன்மார்க்கர் சாது ஹரி அவர்களின் சீரிய கருத்துருவில் இத்திட்டம் நமது கடலூர் மாநகரில் நடைபெற உள்ளது. நன்றி.

தி.ம.இராமலிங்கம்

கடலூர்

9445545475


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.