Monday, July 25, 2022

வள்ளலார் - 200

                                                                         வள்ளலார் - 200



கருணை மிகுந்த சுத்த சன்மார்க்கிகளுக்கு வந்தனம்.

 

வள்ளலார் வருவிக்கவுற்ற தினத்தின் 200-ஆம் ஆண்டு கொண்டாட்டம் என்பது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாக இவ்வுலக உயிர்களுக்கும், சுத்த சன்மார்க்கிகளுக்கும் இருப்பதில் ஆச்சரியமில்லை.

 

வள்ளலாரின் 200 கொண்டாட்டம் என்பதை தமிழக அரசு ஒரு வருடத்திற்கு அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளதும், ஐயாவின் வருவிக்கவுற்ற நாளை “தனிப்பெருங்கருணை நாள்” என்று தமிழக அரசு அறிவித்ததும், வடலூரை சர்வதேச மையமாக ஆக்கவிருக்கும் தமிழக அரசின் திட்டமும், வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலார் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு முனைவதும் சாலச் சிறந்ததாகவே இருக்கின்றது, இத்திட்டங்களில் ஒரு சில நிகழ்வுகள் சன்மார்க்கத்திற்கு புறம்பாக இருந்தாலும் பொதுவாக வரவேற்கலாம்.

 

ஆனால், சுத்த சன்மார்க்கிகளில் சிலர் ஐயாவின் 200 –ஐ கொண்டாடுகின்றோம் என்ற நோக்கில், மிக பிரம்மாண்டமான வள்ளலார் சிலை அமைக்கப்போகின்றோம் என்றும், சில சன்மார்க்க குழந்தைகள் 200 வள்ளலார் பொம்மைகளை செய்து அதனை 200 கோயில்களில் வைக்கப்போகின்றோம் என்றும் கூத்தாடுகின்றார்கள். இவர்களை என்னவென்று சொல்வது? வள்ளலார் வருவிக்கவுற்று 200 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒருவரும் தேரிலர். கடையை விரித்தோம் கொள்வாரில்லை… என்ற வள்ளலாரின் வாக்கு அவரது 200-ஆவது ஆண்டிலும் கனீரென்று ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

 

சிலை வழிபாட்டிற்கு மாறாக ஜோதி வழிபாட்டையும், ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் போதித்து, அவ்வாறே தானும் நடந்துக்கொண்டிருக்கின்ற வள்ளலாருக்கு நாம் சிலை வைத்து வழிபடுவது சிறந்ததா?

 

வள்ளலாரை தமிழக மக்களுக்கு இன்னும் தெரியவில்லையாம். அதனால் நாம் அவரது சிலையை செய்து அதனை 200 கோயில்களில் வைத்துவிட்டால், கோயிலுக்கு வரும் மக்கள் வள்ளலாரை பார்த்து, யார் இவர்? என்று விசாரித்து, பிறகு அவரது போதனை என்ன? என்று விசாரித்து, பிறகு திருவருட்பா வாங்கிப் படித்து, பிறகு அவர்கள் சன்மார்க்கத்திற்கு வந்து ஜோதி வழிபாட்டை பின்பற்றுவார்கள் என்பது இவர்களது வாதமாக உள்ளது.

 

திருவள்ளுவர் சிலையை மிக பிரம்மாண்டமாக கன்னியாக்குமரியில் வைத்தால், அதைப்பார்த்து தமிழக மக்களும் உலக மக்களும் திருவள்ளுவரின் போதனையை தெரிந்து அதன்படி நடப்பார்கள் என்று தமிழக அரசு அன்று சிலையை நிறுவிவிட்டது. ஆனால், நடப்பது என்ன? அச்சிலையால் ஒருவரும் தேரிலர். அச்சிலையை பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் செலவாவதுதான் மிச்சம்.

 

திருவள்ளுவர் சிலையைப் போன்று வள்ளலார் சிலையையும் மிகப்பிரம்மாண்டமாக அமைத்தால் என்ன நிகழும்? அண்ணனுக்கு ஏற்பட்ட நிகழ்வுதான் தம்பி வள்ளலாருக்கும் ஏற்படும். ஒருவரும் இதனால் தேரமாட்டார்கள். ஆனால் சுற்றுலா தலமாக மாறும். வள்ளுவரும் வள்ளலாரும் மக்களுக்கு காட்சிப் பொருளா என்ன? அவர்கள் உலக உயிர்களின் வாழ்க்கைக்கான அருளல்லவா?

 

அல்லா மற்றும் முகமது நபி என்கின்ற பெயரைச் சொன்னாலே உலகம் முழுதும் சும்மா அதிருது இல்ல…? உருவ வழிபாட்டை மேற்கொள்ளாமலேயே உலக மக்களிடையே இஸ்லாம் பரவியது எப்படி? என்று கேட்டால்…

 

நமது சன்மார்க்கிகள், எதற்கு எதனை ஒப்பீடு செய்கிறீர்கள்? இஸ்லாம் புலால் உண்ணும் மார்க்கம். அதனை நமது சன்மார்க்கத்தோடு ஒப்பிடுவது தவறு என்று வாதிடுகிறார்கள்.

 

புலால் உண்பவர்களே, ஒரு கட்டுப்பாட்டுடன் முகமது நபி சொன்னதை மட்டுமே தலைமேல் வைத்து வழிநடக்கும்போது, சுத்த ஆகாரமான தாவர உணவை மட்டுமே உண்ணும் சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் சொன்னதிற்கு மாறாக நடக்கலாமா? என்பதை மறந்துவிட்டார்கள்.

 

அனைத்து மதங்களும் பொய் என்று சொன்ன வள்ளலாரை சிலை செய்து, மதங்களின் வழிபாட்டு தலமான கோயில்களில் வைத்தால், அது எவ்வாறு வள்ளலாருக்கு சிறப்பு சேர்க்கும்? முதலில் சிலை செய்வதே தவறு. அதற்காக வள்ளலாரை வணங்கக்கூடாது என்பதில்லை எனது வாதம். வள்ளலாரை வணங்காமல் சுத்த சன்மார்க்கம் சிறக்காது. ஆனால், அவரை வரைபடத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

சரி…. நீங்கள் சிலை செய்ய ஆவலாக உள்ளீர்கள் என்றால், அந்த 200 சிலைகளையும் சுத்த சன்மார்க்க சங்கங்களில் வைய்யுங்கள். மாறாக கோயில்களில் வைத்தால் அங்கே வள்ளலாருக்கு அவமரியாதையே நிகழும். மேலும் கோயில்களில் உள்ள எந்த தெய்வத்தைவிடவும் வள்ளலார் கோடான கோடி உயர்ந்த நிலையில் அருட்ஜோதி கடவுளாக உள்ளார். அவரை கோயிலில் வைத்து இரண்டாந்தர வணக்கத்திற்கு உட்படுத்துவது சன்மார்க்க ஒழுங்கீனமாகும்.

 

வள்ளலாரின் 200-ம் ஆண்டை கொண்டாட வேண்டுமெனில் நாம் அனைவரும் சேர்ந்து இந்தியா முழுதும் அல்லது உலகம் முழுதும் அல்லது தமிழகம் முழுதும் 200 புதிய சுத்த சன்மார்க்க சங்கங்களை உருவாக்கலாமே! அதைத்தானே வள்ளலார் விரும்புகின்றார். உலக மக்களை நல்வழி படுத்த சன்மார்க்க சங்கங்களை உருவாக்கி அதன் மூலம்தான் வள்ளலாரை மக்களிடையே காண்பிக்கப்பட வேண்டும். மாறாக பொது மக்களின் அறியாமையையும், பலவீனங்களையும் அறிந்துக்கொண்டு, அவர்களுக்கு ஏற்ப கோயிலில் வள்ளலாரை கொண்டு சேர்ப்பது என்பது பனை மரத்தடியில் பாலை வைத்தது போன்று ஆகிவிடும்.

 

பொது மக்களின் அறியாமைகளையும், பலவீனங்ளையும் எதிர்த்துதான் சுத்த சன்மார்க்கம் காண வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்ப நடப்போம் என்று சுத்த சன்மார்க்க உண்மையை மீறக்கூடாது. புலால் உண்பவர்களால் ஒரு தெய்வ வழிபாடும், அருவ வழிபாடும் செய்ய முடியும்போது, சுத்த ஆகாரம் உண்ணும் சுத்த சன்மார்க்கிகளால் செய்ய முடியாதா? புலால் உண்பவர்கள் தன் மார்க்கத்தை மீறி நடவாமல், அதே சமயம் உலகம் முழுதும் தன் மார்க்கத்தை மக்களிடையே பரவச் செய்யும்போது, சுத்த ஆகாரம் உண்ணும் சுத்த சன்மார்க்கிகள் தன் மார்க்கத்தை மீறி நடக்காமல், சன்மார்க்க சங்கங்களின் மூலம் உலக மக்களிடையே வள்ளலாரையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் எடுத்துச் செல்ல முடியாதா? முடியும். சத்தியம் சாத்தியமே.   

=====================

தி.ம.இராமலிங்கம்

9445545475

vallalarmail@gmail.com

      


 

 

Wednesday, July 13, 2022

சுத்த உணவிற்காக குடும்பம் துறத்தல்

சுத்த உணவிற்காக குடும்பம் துறத்தல்







சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்.

வள்ளற்பெருமான் சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்த காலத்திலிருந்தே நமது குடும்பங்களில் உணவு முறைகளை கடைபிடித்தல் அடிப்படையில் பல பிரச்சனைகள் வரத்துவங்கிவிட்டன என்று சொல்லலாம்.

ஒரு குடும்பம் என்றால், தந்தை, தாய், மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோர்கள் இருப்பார்கள். அல்லது கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியோர்கள் இருப்பார்கள். சுத்த சன்மார்க்கத்தினால் கணவன், மனைவி, பிள்ளைகள் இருக்கும் ஒரு குடும்பத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்த்தோமானால்,

முதலில் உணவு பழக்கத்தில் மாற்றம் நடைபெறுகின்றது. பிறகு ஒரு தெய்வ வழிபாடும், ஜோதி வழிபாடும் நடைமுறையில் வரத்துவங்குகின்றது. இம்மாற்றங்கள் பெரும்பாலும் கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒரு சேர சுத்த சன்மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால் எவ்வித பிரச்சனைகளும் இன்றி நடந்தேறுகின்றன. பிள்ளைகள் பெற்றோர்களின் வழியினை பின்பற்ற துவங்குகையில் அக்குடும்பம் சுத்த சன்மார்க்க குடும்பமாக மாறுதல் அடையும்.

ஆனால், நடைமுறையில் பெரும்பாலும் அவ்வாறு நிகழ்கின்றதா? என்றால், இல்லை. வள்ளற்பெருமான் இங்கேதான் நமது குடும்பத்தில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றார். இக்குழப்பம் தெளிவை உண்டாக்குவதற்கே என்று நமக்கு தெரிவதில்லை.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் திடீரென சுத்த சன்மார்க்கப் பாதையை பின்பற்றுகின்றேன் என்று, தான் இதுவரை உண்டு வந்த அசுத்த உணவுகளான புலால் உணவுகளை அறவே விட தீர்மானித்து அதன்படி விட்டும் விடுகின்றார். சுமார் 30 வருடங்களாக பழகி வந்த அசுத்த உணவினை விட்டுவிட்டு தற்போது திடீரென சுத்த ஆகாரங்களான தாவர உணவுகளை மட்டுமே எடுக்கத் துவங்குகின்றார்.

 

அடுத்ததாக என்ன நிகழும், தன்னைப்போலவே தனது மனைவி மற்றும் பிள்ளைகளும் சுத்த உணவினை மட்டுமே உண்ண வேண்டும் என அன்பாகவோ அல்லது கட்டளை இடுவதன் மூலமாகவோ தமது வீட்டில் தமது நிலையை நிலைநிறுத்த முயல்வார். புலால் உணவுகளை இனி நமது வீட்டில் சமைக்கக்கூடாது என்றும், மாமிசங்களை இனி நான் வாங்கிவர மாட்டேன் என்றும், நமது வீட்டில் இனி கோழி, ஆடு, மாடு, வாத்து, பன்றி, முயல், மீன், மற்ற பறவையினங்கள், மற்ற எவ்வித உயிரினங்களும் வளர்க்கப்படக்கூடாது என்றும் தடையிடுவார்.

அவரது சுத்த சன்மார்க்கப் பாதைக்கு மேற்சொன்ன தடைகள் நியாயமான ஒன்றாகக் கருதப்படவேண்டும். ஆனால், நடைமுறையில் குடும்பங்களில் என்ன நிகழ்கின்றது? ஒரு பூகம்பம் வெடிக்க ஆரம்பித்து அது என்றும் அனையாமல் குமுறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலையை நாம் காண்போம். ஏனெனில், நமது ஆன்மாவைப்போன்று, நமது மனைவி மற்றும் பிள்ளைகளின் ஆன்மா தங்களது உணவுப் பழக்கத்தை கைவிடத் துணியாமல்,  புலால் உணவான அசுத்த உணவினை தொடர்ந்து உண்பதற்கு வரும் தடைகளை உடைத்தெறிய முயலும்.

நீங்கள் வேண்டுமானால் சாப்பிடாமல் இருங்கள், எங்களை ஏன் தடை செய்கின்றீர்கள்? நீங்கள் 30 வருடம் அந்த அசுத்த உணவினை உண்டு வளர்ந்தீர்கள் அல்லவா!  அதுபோல நமது பிள்ளைகளும் உண்டு சத்தாக வளர வேண்டாமா? என்று மனைவியின் சப்தம் அக்குடும்பத்தை ஆட்டம் காண வைக்கும். அக்குடும்பத்தில் உள்ள நான்கு ஆன்மாக்களுக்குள்ளே நேயம் தடைபடும்போது, கணவன் ஆன்ம நேயத்தை அங்கே எவ்வாறு போதிக்க முடியும்?

ஒரு புறம் சுத்த சன்மார்க்கம் என்கின்ற உண்மை வழியும், மறுபுறம் குடும்பம் என்கின்ற சமுதாய உண்மையும் அக்கணவனை தணறடிக்கும். இறுதியில் அந்த கணவனானவன்,  பெரும்பாலும் இவ்வாறே முடிவை எடுப்பார். அதாவது, தான் மட்டும் அசுத்த உணவை எடுக்காமல் விட்டு விடுவோம். மனைவியும், பிள்ளைகளும் அவர்கள் வழிக்கே விட்டு விடுவோம் என்று அசுத்த இல்லத்தில் சுத்தத்தை கடைபிடிக்கும் ஒரு விசித்திர ஆன்மாவாக கணவன்மார்கள் செயல்படுவார்கள். இந்நடைமுறை எந்த வகையில் சிறந்தது என்று இறுதியில் பார்ப்போம்.

இப்போது, நாம் அதே குடும்ப அமைப்பில் உள்ள மனைவியானவள் மட்டும் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நபராக பரிணாமம் பெறுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது அக்குடும்பத்தில் என்ன நிகழும்? ஒரு சுனாமியே அக்குடும்பத்தில் பொங்கி எழும். ஏனெனில், அம்மனைவியானவள், இனிமேல் எனது கையால் அசுத்த உணவினை சமைக்கப்போவதில்லை. அதேபோல் எனது வீட்டில் புலால் உணவுகள் உள்ளே வரக்கூடாது, ஆகையால் நீங்கள் அனைவரும் சுத்த உணவான தாவர உணவை மட்டுமே உண்ண வேண்டும்! என கட்டளையிட ஆரம்பிப்பார்கள்.

இந்தத் தடையை கணவனும், பிள்ளைகளும் ஏற்க மறுக்கும் தருவாயில்… அம்மனைவியானவள், சுத்த சன்மார்க்க வழியா அல்லது நமது அன்பு குடும்பமா? என்று இரண்டில் எதை தேர்ந்தெடுத்து நடைபயில்வது? என்ற கேள்வி இடியாக இடித்துக்கொண்டே இருக்கையில், முடிவில் நாம் மட்டும் அசுத்த உணவு உண்பதை நிறுத்திவிடுவோம். நமது குடும்பத்திற்காக அசுத்த புலால் உணவினை சமைத்து தருவோம்… என முடிவெடுத்து அசுத்த இல்லத்தில் சுத்தத்தை கடைபிடிக்கும் ஒரு வினோத மனைவியாக அக்குடும்பத்தை வழிநடத்தி செல்லும் நிர்பந்தம் ஏற்படும். இந்த நடைமுறை எந்த வகையில் சிறந்தது என்றும் பார்ப்போம்.

மூன்றாவது வகை சுத்த சன்மார்க்க குடும்பங்களும் உள்ளன. இக்குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகளும் சுத்த ஆகாரத்தையே உண்பார்கள். புலாலை அறவே கைவிட்டு வள்ளற்பெருமானின் வழியில் நடைபோடுவார்கள். ஆனால், இவர்களது சொந்தங்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் அசுத்த உணவை உண்ணும் அசுத்த இல்லங்களில் வசிப்பவர்களாக இருப்பார்கள். அவ்வில்லங்களுக்கு அடிக்கடி சொந்தக்காரர்கள் என்கின்ற வகையில் இவர்கள் சென்று தங்கி வருவார்கள். அல்லது அவ்வில்லங்களில் செல்லுகையில் அங்கே உணவு உட்கொள்ளும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். 

அங்கே இவர்கள் சுத்த சைவ உணவுதான் உண்பார்கள். ஆனால் அவ்வில்லம் அசுத்த இல்லம் என்பதில் இவர்களுக்கு அச்சம் எழுவதில்லை. காரணம் அவர்கள் நமது சொந்தங்கள் என்கின்ற மாயை அவர்களை சமாதானப்படுத்திவிடும். இவர்களின் இந்தச் செயல்கள் எந்த வகையில் நியாயம் என்றும் பார்ப்போம். 

நான்காவதாக, சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் 99% சதவிகிதத்தினர்கள் நாங்கள் சைவர்களாக இருக்கின்றோம் என்றும் புலால் உண்பதில்லை என்றும் சொல்லிக்கொண்டு அதன்படியும் நடக்கின்றார்கள். ஆனால், இவர்கள் தாவர உணவை மட்டுமே உண்பவர்களாக இருக்க மாட்டார்கள். அதாவது விலங்கிலிருந்து பெறக்கூடிய பால், மோர், தயிர், வெண்ணை, நெய் போன்றவைகளையும், இவைகள் கலந்த மற்ற பொருட்களையும் உண்பவர்களாக இருப்பார்கள். இவ்வாறு இவர்கள் மிருகங்களின் பால் அருந்துவதால், அம்மிருகங்களுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக ஹிம்சையினை செய்யும் ஆன்மாக்களாக உள்ளார்கள். இந்த நடைமுறை எந்த வகையில் நல்லது என்றும் பார்போம்.

தீர்வுகள்:

முதல் பிரச்சனைக்கான தீர்வு: கணவன் மட்டும் சுத்த ஆகாரத்திற்கு மாற்றம் அடைந்துவிட்டால், அவன் மாற்றமடைந்த முதல் ஆறு மாதங்களில் அவனது மனைவி மற்றும் பிள்ளைகளையும் தனது அன்பினால் அல்லது சன்மார்க்க சங்கங்களின் அறிவுறைகளால் மாற்றம் காண வைத்துவிட வேண்டும். மிரட்டிச் சொல்லி பணியவைத்தல் இவ்விடயத்தில் அறிவுடமையாகாது. ஆகையால் மிரட்டிச் சொல்லக்கூடாது. ஆறு மாதங்களுக்கு மேலும் தனது மனைவியும், பிள்ளைகளும் தன் வழி வரவில்லை எனில், கணவனானவன் இவர்களை விட்டு தனித்து வாழ்தலே சிறந்தது. ஆன்ம நேயத்தைவிட தனது ஆன்ம நேயமற்ற குடும்பம் முக்கியமல்ல என்கின்ற ஞானம் உதயமாக வேண்டும். தனித்து வாழும் துணிவும், தனது குடும்பத்தை பற்றிய பல்வேறுபட்ட சமுதாய பயத்தை நீக்கும் துணிவும் கொண்டு சுத்த சன்மார்க்க வாழ்க்கை வாழவேண்டும். தனது குடும்பத்திற்கான பொருளாதார தேவைகளை மட்டும் அடுத்த சில ஆண்டுகளுக்கு (பிள்ளைகள் ஊதியம் ஈட்டும் வரை) தான் விருப்பட்டால் தந்து உதவலாம். கட்டாயம் அல்ல. 

இவ்வாறு தனித்து வாழ துணிவில்லாமல், தனது அசுத்த குடும்பங்களிலேயே ஒன்றி சுத்த சன்மார்க்கம் காண்பது அறிவுடைமை ஆகாது. எனவே இப்படிப்பட்ட குடும்பங்களில் உள்ள கணவன்மார்கள், குடும்பம் என்கின்ற அசுத்த வினைகளை இனியும் ஏற்று வாழாமல், தனித்து வாழும்போது உங்கள் பாதுகாப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்பார். ஜீவகாருண்ய அருள் உங்களை என்றும் பாதுகாக்கும். உங்கள் மனைவி, பிள்ளைகளால் ஏற்படும் நன்மைகளை காட்டிலும் கோடானகோடி நன்மைகள் நீங்கள் தனித்து வாழுகையில் கிடைக்கும். இடையில் உங்கள் குடும்பம் திருந்திவாழ உங்களை அழைக்கையில் மீண்டும் நீங்கள் சுத்த சன்மார்க்கக் குடும்பமாக வாழ வழிவகையும் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. எனவே துணிந்து தனித்து நில்லுங்கள்.

இரண்டாவது பிரச்சனைக்காண தீர்வு: மனைவி மட்டும் சுத்த ஆகாரத்திற்கு மாற்றம் அடைந்துவிட்டால், மேற்சொன்னது போன்று நீங்களும் உங்கள் குடும்பத்திற்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுங்கள். உங்களது அன்பினாலோ, அல்லது சுத்த சன்மார்க்க சங்கங்களின் அறிவுரைகளாலோ உங்களது கணவனை மற்றும் பிள்ளைகளை திருத்த முயலுங்கள். முடியாத பட்சத்தில், அந்த அசுத்த கருமங்களை செய்யாமல், அந்த அசுத்த இல்லத்தை துறந்து தனித்து வாழுங்கள். பெண்கள் தனித்து வாழுதல் இச்சமுதாயதில் சிக்கலான ஒன்றாகும். ஆனால் துணிந்தால் முடியாதது அல்ல. உங்களுக்கென ஒரு வேலையை உருவாக்கிக்கொள்ளுங்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு வேண்டும்.

ஆன்ம நேயமற்ற ஒரு இல்லத்தில் இல்லத்தரசியாக வாழ்வதைவிட தனித்தல் சிறந்தது. உங்கள் நிலமைக்கேற்ப உங்களது தனித்த வாழ்வை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். எதனையும்விட சுத்த சன்மார்க்கப்பாதை முக்கியம். நமது ஆன்மா புனிதமாவது முக்கியம். நீங்கள் தனித்து வாழுகையில் எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும், ஜீவகாருண்ய அருளும் உங்களை என்றும் கவசமாக பாதுகாக்கும் என்ற சத்தியத்துடன் தனித்து வாழுங்கள். இடையில் உங்கள் குடும்பம் திருந்தி, உங்களை மீண்டும் அழைத்தால், சுத்த சன்மார்க்கக் குடும்பமாக மீண்டும் இணைந்து வாழச் செல்லுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லை எனில் தனித்து துணிந்து நில்லுங்கள்.

மூன்றாவது பிரச்சனைக்குத் தீர்வு: சுத்த சன்மார்க்க குடும்பங்களில் வசிக்கும் பலர் தங்களது சொந்தக்காரர்கள் இல்லங்களில் சென்று உணவு உண்பதை தவிர்க்கமாட்டார்கள். அதாவது சொந்தங்கள் புலால் உண்ணும் சொந்தங்களாக இருப்பார்கள். இவர்களது இல்லங்களில் சென்று ஒருபோதும் உண்ணுதல் கூடாது. நான் அங்கே சைவம் மட்டுமேதான் சாப்பிடுவேன் என்றும் சொல்லக்கூடாது. புலால் உண்ணும் இல்லங்களில் சுத்த சன்மார்க்கிகள் உணவு உண்பது பெரும் பாவம். புலால் உண்பவர்கள் சொந்தமோ, நட்போ நாம் அங்குச்சென்று உணவு உண்பது சுத்த சன்மார்க்க தருமம் ஆகாது.  நமது தாய்வீடாகினும் அங்கே சென்று உண்ணக்கூடாது. உறவு முறைகள் நம்மை விட்டு சென்றாலும் பரவாயில்லை. கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே நமக்கு உண்மையான சொந்தம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சொந்தம் நம்மைவிட்டு அகலாமல் இருக்க வேண்டுமெனில், புலால் உண்ணும் சொந்தக்காரர்களில் இல்லங்களில் உண்ணாமல் இருங்கள்.

நான்காவது பிரச்சனைக்குத் தீர்வு: சுத்த சன்மார்க்கிகள் யாவரும் தாவர உணவுகளை மட்டுமே உண்டு மரணமிலா பெருவாழ்விற்கு முயலுதல் வேண்டும். விலங்கிலிருந்து பெறக்கூடிய பால், மோர், தயிர், வெண்ணை, நெய், தேன் போன்ற பொருட்களை அறவே தவிருங்கள். அதுபோல பட்டாடைகள், தோல் பொருட்கள் போன்றவைகளை அணிதல் கூடாது. ஜீவ ஹிம்சை நேரிடாதவகையில் தங்களது உணவு, உடைகள், இடங்களை தேர்ந்தெடுத்து வாழுபவர்களே சுத்த சன்மார்க்கிகள்.

சுத்த உணவிற்காக குடும்பம் துறத்தல் நல்லது.

சுத்த உணவிற்காக பால் பொருட்களை துறத்தல் நல்லது.

நன்றி.

தி.ம.இராமலிங்கம் – கடலூர்.

9445545475