வள்ளலார் - 200
கருணை மிகுந்த சுத்த சன்மார்க்கிகளுக்கு வந்தனம்.
வள்ளலார் வருவிக்கவுற்ற தினத்தின் 200-ஆம் ஆண்டு
கொண்டாட்டம் என்பது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாக இவ்வுலக உயிர்களுக்கும், சுத்த
சன்மார்க்கிகளுக்கும் இருப்பதில் ஆச்சரியமில்லை.
வள்ளலாரின் 200 கொண்டாட்டம் என்பதை தமிழக அரசு ஒரு
வருடத்திற்கு அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளதும், ஐயாவின் வருவிக்கவுற்ற
நாளை “தனிப்பெருங்கருணை நாள்” என்று தமிழக அரசு அறிவித்ததும், வடலூரை சர்வதேச மையமாக
ஆக்கவிருக்கும் தமிழக அரசின் திட்டமும், வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலார்
மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு முனைவதும் சாலச் சிறந்ததாகவே இருக்கின்றது, இத்திட்டங்களில்
ஒரு சில நிகழ்வுகள் சன்மார்க்கத்திற்கு புறம்பாக இருந்தாலும் பொதுவாக வரவேற்கலாம்.
ஆனால், சுத்த சன்மார்க்கிகளில் சிலர் ஐயாவின்
200 –ஐ கொண்டாடுகின்றோம் என்ற நோக்கில், மிக பிரம்மாண்டமான வள்ளலார் சிலை அமைக்கப்போகின்றோம்
என்றும், சில சன்மார்க்க குழந்தைகள் 200 வள்ளலார் பொம்மைகளை செய்து அதனை 200 கோயில்களில்
வைக்கப்போகின்றோம் என்றும் கூத்தாடுகின்றார்கள். இவர்களை என்னவென்று சொல்வது? வள்ளலார்
வருவிக்கவுற்று 200 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒருவரும் தேரிலர். கடையை விரித்தோம் கொள்வாரில்லை…
என்ற வள்ளலாரின் வாக்கு அவரது 200-ஆவது ஆண்டிலும் கனீரென்று ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
சிலை வழிபாட்டிற்கு மாறாக ஜோதி வழிபாட்டையும், ஜீவ
காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் போதித்து, அவ்வாறே தானும் நடந்துக்கொண்டிருக்கின்ற
வள்ளலாருக்கு நாம் சிலை வைத்து வழிபடுவது சிறந்ததா?
வள்ளலாரை தமிழக மக்களுக்கு இன்னும் தெரியவில்லையாம்.
அதனால் நாம் அவரது சிலையை செய்து அதனை 200 கோயில்களில் வைத்துவிட்டால், கோயிலுக்கு
வரும் மக்கள் வள்ளலாரை பார்த்து, யார் இவர்? என்று விசாரித்து, பிறகு அவரது போதனை என்ன?
என்று விசாரித்து, பிறகு திருவருட்பா வாங்கிப் படித்து, பிறகு அவர்கள் சன்மார்க்கத்திற்கு
வந்து ஜோதி வழிபாட்டை பின்பற்றுவார்கள் என்பது இவர்களது வாதமாக உள்ளது.
திருவள்ளுவர் சிலையை மிக பிரம்மாண்டமாக கன்னியாக்குமரியில்
வைத்தால், அதைப்பார்த்து தமிழக மக்களும் உலக மக்களும் திருவள்ளுவரின் போதனையை தெரிந்து
அதன்படி நடப்பார்கள் என்று தமிழக அரசு அன்று சிலையை நிறுவிவிட்டது. ஆனால், நடப்பது
என்ன? அச்சிலையால் ஒருவரும் தேரிலர். அச்சிலையை பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் செலவாவதுதான்
மிச்சம்.
திருவள்ளுவர் சிலையைப் போன்று வள்ளலார் சிலையையும்
மிகப்பிரம்மாண்டமாக அமைத்தால் என்ன நிகழும்? அண்ணனுக்கு ஏற்பட்ட நிகழ்வுதான் தம்பி
வள்ளலாருக்கும் ஏற்படும். ஒருவரும் இதனால் தேரமாட்டார்கள். ஆனால் சுற்றுலா தலமாக மாறும்.
வள்ளுவரும் வள்ளலாரும் மக்களுக்கு காட்சிப் பொருளா என்ன? அவர்கள் உலக உயிர்களின் வாழ்க்கைக்கான
அருளல்லவா?
அல்லா மற்றும் முகமது நபி என்கின்ற பெயரைச் சொன்னாலே
உலகம் முழுதும் சும்மா அதிருது இல்ல…? உருவ வழிபாட்டை மேற்கொள்ளாமலேயே உலக மக்களிடையே
இஸ்லாம் பரவியது எப்படி? என்று கேட்டால்…
நமது சன்மார்க்கிகள், எதற்கு எதனை ஒப்பீடு செய்கிறீர்கள்?
இஸ்லாம் புலால் உண்ணும் மார்க்கம். அதனை நமது சன்மார்க்கத்தோடு ஒப்பிடுவது தவறு என்று
வாதிடுகிறார்கள்.
புலால் உண்பவர்களே, ஒரு கட்டுப்பாட்டுடன் முகமது
நபி சொன்னதை மட்டுமே தலைமேல் வைத்து வழிநடக்கும்போது, சுத்த ஆகாரமான தாவர உணவை மட்டுமே
உண்ணும் சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் சொன்னதிற்கு மாறாக நடக்கலாமா? என்பதை மறந்துவிட்டார்கள்.
அனைத்து மதங்களும் பொய் என்று சொன்ன வள்ளலாரை சிலை
செய்து, மதங்களின் வழிபாட்டு தலமான கோயில்களில் வைத்தால், அது எவ்வாறு வள்ளலாருக்கு
சிறப்பு சேர்க்கும்? முதலில் சிலை செய்வதே தவறு. அதற்காக வள்ளலாரை வணங்கக்கூடாது என்பதில்லை
எனது வாதம். வள்ளலாரை வணங்காமல் சுத்த சன்மார்க்கம் சிறக்காது. ஆனால், அவரை வரைபடத்துடன்
நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சரி…. நீங்கள் சிலை செய்ய ஆவலாக உள்ளீர்கள் என்றால்,
அந்த 200 சிலைகளையும் சுத்த சன்மார்க்க சங்கங்களில் வைய்யுங்கள். மாறாக கோயில்களில்
வைத்தால் அங்கே வள்ளலாருக்கு அவமரியாதையே நிகழும். மேலும் கோயில்களில் உள்ள எந்த தெய்வத்தைவிடவும்
வள்ளலார் கோடான கோடி உயர்ந்த நிலையில் அருட்ஜோதி கடவுளாக உள்ளார். அவரை கோயிலில் வைத்து
இரண்டாந்தர வணக்கத்திற்கு உட்படுத்துவது சன்மார்க்க ஒழுங்கீனமாகும்.
வள்ளலாரின் 200-ம் ஆண்டை கொண்டாட வேண்டுமெனில் நாம்
அனைவரும் சேர்ந்து இந்தியா முழுதும் அல்லது உலகம் முழுதும் அல்லது தமிழகம் முழுதும்
200 புதிய சுத்த சன்மார்க்க சங்கங்களை உருவாக்கலாமே! அதைத்தானே வள்ளலார் விரும்புகின்றார்.
உலக மக்களை நல்வழி படுத்த சன்மார்க்க சங்கங்களை உருவாக்கி அதன் மூலம்தான் வள்ளலாரை
மக்களிடையே காண்பிக்கப்பட வேண்டும். மாறாக பொது மக்களின் அறியாமையையும், பலவீனங்களையும்
அறிந்துக்கொண்டு, அவர்களுக்கு ஏற்ப கோயிலில் வள்ளலாரை கொண்டு சேர்ப்பது என்பது பனை
மரத்தடியில் பாலை வைத்தது போன்று ஆகிவிடும்.
பொது மக்களின் அறியாமைகளையும், பலவீனங்ளையும் எதிர்த்துதான்
சுத்த சன்மார்க்கம் காண வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்ப நடப்போம் என்று சுத்த சன்மார்க்க
உண்மையை மீறக்கூடாது. புலால் உண்பவர்களால் ஒரு தெய்வ வழிபாடும், அருவ வழிபாடும் செய்ய
முடியும்போது, சுத்த ஆகாரம் உண்ணும் சுத்த சன்மார்க்கிகளால் செய்ய முடியாதா? புலால்
உண்பவர்கள் தன் மார்க்கத்தை மீறி நடவாமல், அதே சமயம் உலகம் முழுதும் தன் மார்க்கத்தை
மக்களிடையே பரவச் செய்யும்போது, சுத்த ஆகாரம் உண்ணும் சுத்த சன்மார்க்கிகள் தன் மார்க்கத்தை
மீறி நடக்காமல், சன்மார்க்க சங்கங்களின் மூலம் உலக மக்களிடையே வள்ளலாரையும் அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரையும் எடுத்துச் செல்ல முடியாதா? முடியும். சத்தியம் சாத்தியமே.
=====================
தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com
சரியான கருத்து..
ReplyDeleteவள்ளலார் உருவ வழிபாட்டை எதிர்த்தார்.
சிறுதெய்வ வழிபாட்டை எதிர்த்தார்.
அவரையே உருவம் கொண்டு வழங்குவது அவரது போதனைக்கு எதிரானது அதற்கு பதில் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்ற ஜீவகாருண்யம் கருத்தை ஏற்று உணவளிக்க வேண்டுகிறேன்...
சன்மார்க்கம் உருவானதன் நோக்கம் நிறைவேறாது போய்விடும்.
நன்றி ஐயா...
Delete