ச.மு.கந்தசாமி பிள்ளை குடும்ப வாரிசு விவரங்கள்
அ.திருநாவுக்கரசு- பிறப்பு: 21-03-1947 இறப்பு: 05-06-2021 (74)
தாவரங்களிலோ அல்லது விலங்கினங்களிலோ கலப்பினங்களை உருவாக்கும் போது ‘வம்சாவளித் தேர்வு’ என்ற முறையைப் பயன்படுத்துவோம் (Pedigree selection – Bing translate இதை குடிவழி என்றும் கூறுகிறது சிறந்த தமிழ்ச்சொல்லைப் பரிந்துரைத்தால் மிக மகிழ்ச்சியுறுவேன்)
நம் கையில் இருக்கும் ஒரு செடி அல்லது இரகத்தின் பெற்றோரையும் ஆதிப் பெற்றோரையும் இந்த முறையில் எத்தனைத் தலைமுறையானாலும் எளிதில் கண்டறிய முடியும். இதற்காக, தனியே குறிப்பேடு ஒன்றும் பராமரிக்கப்படும்-அதற்குப் பெயர் ‘வம்சாவளிப் பதிவு’ (pedigree record). ஒவ்வொரு கலப்பினத்தையும் உருவாக்க குறைந்தது 10 ஆண்டுகள் பிடிக்கும் என்பதாலும் ஒரே ஆய்வாளர் பல கலப்பினங்களை பராமரிக்கக் கூடும் என்பதாலும் இந்த வம்சாவளிப் பதிவு இன்றியமையாத ஒன்று.
படம்: வம்சாவளி விளக்க அட்டவணை; விக்கிமீடியா காமன்ஸ்
ஆனால், ‘எத்தனைத் தலைமுறை மரபணுக்கள் கடத்தப்பட்டிருக்கும்’ என்ற கேள்வியைத் தாவரப் பயிர்ப்பெருக்க நிபுணர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. காரணம், பெரும்பாலான பயிர்கள் தன்மகரந்தச்சேர்க்கை புரிவதாகவோ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அயல் மகரந்தச்சேர்க்கையுடனோ விளைவிக்கப்படுவதால் எத்தனைத் தலைமுறையானாலும் தாய் மற்றும் தந்தையின் பண்புகள் ஒட்டிக்கொண்டே இருக்கும்.
ஆனால், மனித மரபியலாளர்கள் மத்தியில் இந்தக் கேள்வி முக்கியமானது. மரபியல் சார்ந்த நோய்களைக் கண்டறிவதற்கும் பிற ஆய்வுகளுக்கும் இந்த அறிவு முக்கியம்.
அப்படியே விடைக்கு வருவோம்.
ஒரு கணக்கு உண்டு. எல்லாருக்கும் பழக்கமானதுதான்…
ஒரு குழந்தைக்கு, தாயிடமிருந்து 50 சத மரபணுக்களும் தந்தையிடமிருந்து 50 சத மரபணுக்களும் வரும் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே. இந்தக் கணக்குப்படி, அடுத்தடுத்தத் தலைமுறை செல்லும் போது நம் மூதாதையரின் மரபுத்தகவல் பாதியாகக் குறையும்.
இதன்படி, ஒரு பத்துத் தலைமுறையுடைய மரபணு வேண்டுமானால் நம் உடலில் தங்கியிருக்கலாம்.
அவ்ளோதானா?
இல்லை. இயற்கை எப்போதும் 50:50 என்று வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வதில்லை. நான் கொஞ்சம் தாத்தா போலவும் உடன்பிறப்பு கொஞ்சம் தூக்கலாக பாட்டி சாயல் கொண்டிருப்பதும் இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்று.
இதற்குக் காரணம் உண்டு: ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உருவாகும் போது மரபணுப்பகுதிகள் குறிப்பிட்ட வீதம் என்றில்லாமல் சமவாய்ப்பு முறையில் கடத்தப்படும். பாட்டியினுடையது அதிகமாகவும் தாத்தாவினுடையது குறைவாகவும் என்றோ, சிலநேரங்களில் ஏதேனும் மூதாதையருடைய மரபுத்தகவல்கள் முற்றிலும் கடத்தப்படாமலும் போயிருக்க வாய்ப்பு உண்டு. இதனால், மேற்குறிப்பிட்ட 10 தலைமுறைகளைத் தாண்டிய குடும்பத்தாரின் மரபணு கூட நம்முடன் ஒட்டிக்கொண்டு கிடக்கும்.
எனவே, இந்தக் கேள்விக்கான பதில் ‘பெற்றோரைத் தவிர எத்தனைத் தலைமுறையினரின் மரபுத்தகவல்கள் நம்முடன் உள்ளன என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது’ என்பதே.
கீழே பார்க்கவும்…
(படம்: நியாண்டர்தால் மனிதன்; விக்கிமீடியா காமன்ஸ்)
40,000 வருடங்கள் முன்பு வரை ஆதிகால மனிதர்களுடன் இந்தப் புவியைப் பகிர்ந்த இந்த நியாண்டர்தாலின் மரபுப்பகுதிகள் கூட நவீன மனிதர்களின் மரபணுவுடன் பரவிக்காணப்படுவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆக, நாம் எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு மக்களே!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.