Wednesday, August 30, 2023

சுத்த சன்மார்க்க வெற்றி

 சுத்த சன்மார்க்க வெற்றி

கலித்தாழிசை

(தி.ம.இராமலிங்கம்)

அரைநொடிப் பொழுதினிலே அருட்பெருஞ் ஜோதியிலே
நரைதிரை போக்கியே நடந்துவந்தப் பாதையிலே
இரையற்ற உடம்பிலே இறைகண்ட களிப்பிலே
துரைஎன்று உரைத்து தண்டனிட்டு அழுகின்ற
 
காலமதைப் பாரேனோ! - 1

இத்தேகம் அழியாமல் எண்சாணும் என்னதடி
உத்வேகம் எழுந்ததடி உண்பதெலாம் அமுதமடி
வித்தெல்லாம் முளைக்க விண்ணாகி வியக்கின்றேன்
முத்தேகம் ஆனதடி முயங்கிய சன்மார்க்கத்தில்
 
கண்டதெல்லாம் இன்பமடி! 2

கண்ணும் கருத்தும் உன்மேலிருக்க இறையே
மண்ணும் நெருப்பும் மெய்யில் மேவுமோ
விண்ணருள் எல்லாம் விண்டேன் இத்தருணம்
எண்ணமும் அற்று என் கண்ணம்மா!
 
என்னவனைப் பாரேனோ! 3

வல்லானென சன்மார்க்கர் வாயார உரைக்க
கல்நெஞ்ச  உலகரெல்லாம் கருத்தி லிசைந்து
கொல்லாமை புலாலுண்ணாமை நிலை பெற்று
எல்லா உயிர்களும் என் கண்ணம்மா!
 
இன்புற்றிருக்கப் பாரேனோ! 4 

மனமெனும் பேயை மணந்து வந்தேன்
இனமான மாயையில் வாழ்ந்து வந்தேன்
சினமெனும் நாயை வளர்த்து வந்தேன்
தினமும் சாயைஉலகில் என் கண்ணம்மா
 
திக்குமுக்காட வந்தேனோ! 5
 
தித்திக்கும் திருவருட்பா தினமும் படித்தாலும்
சித்திக்கும் முத்திக்கும் சிந்தனை செய்தாலும்
பத்திக்கும் பாவைமுகம் பார்த்து விட்டால்
எத்தனை ஜென்மமடி என் கண்ணம்மா!
 
தனித்திருக்க மாட்டேனோ! 6