அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்!
வள்ளலாருடன் இணைந்து சுத்த சன்மார்க்கத்தை இவ்வுலக உயிர்களுக்கெல்லாம் எடுத்துச் சென்ற எங்கள் பாட்டனார் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் சன்மார்க்கப் பணியினை அவரது நூற்றாண்டு குருபூஜை விழாவில் நினைவு கூர்வோம்.
தனது மனைவி “தங்கம்’ என்பவர் காலம் சென்ற பிறகு, தனது வாழ்நாளை சுத்த சன்மார்க்கத்தை பரப்ப ஒப்புக்கொடுத்தார். தனது ஒரே பெண் பேராசிரியர் ஜானகி அம்மாள் அவர்களுக்கு திருமணம் செய்விக்காமல், சன்மார்க்கத்தை பரப்ப தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று, தந்தையும் மகளுமாக சன்மார்க்க பஜனை மற்றும் சன்மார்க்க சொற்பொழிவுகள் ஆற்றி தமிழக மக்கள் பலரையும் சன்மார்க்கத்திற்கு அழைத்து வந்தார்கள். இவர்களால் பல சன்மார்க்க சங்கங்கள் இந்திய சுதந்தரத்திற்கு முன்பே தமிழகத்தில் முளைத்தன.
முதன் முதலில் அருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரத்தை இவ்வுலகிற்கு 1924-ஆம் ஆண்டு, தாம் பதிப்பித்த திருவருட்பா நூலில் வெளிகொணர்ந்தார். வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட பிறகு 50-ஆவது வருடத்தில்தான் மஹா மந்திரமே உலகிற்கு தெரிய வந்தது. அவ்வாறே சன்மார்க்கக் கொடியின் விளக்கத்தையும் முதன் முதலில் அதே நூலில் வெளியிட்டவரும் இவரே. இத்திருவருட்பாவினை சென்னை திரு. வெங்கட் ஐயா அவர்கள் 2014-ஆம் ஆண்டு மறுஅச்சு செய்து மேட்டுக்குப்பத்தில் வெளியிட்டார்.
அதுபோல், வள்ளலாரின் முழுமையான வரலாற்றையும் அவரின் அற்புதங்களையும் 1923-ஆம் ஆண்டு தாம் இயற்றிய “பிரபந்தத்திரட்டு” என்னும் நூலில் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார். இந்நூலினை எமது தந்தையார் திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் மறுபதிப்புச் செய்து, சுத்த சன்மார்க்க நூலில் ஏழாம் திருமுறை என வகுத்து, 06-01-2015 அன்று வடலூரில் கருணீகர் இல்லத்தில் வெளியிட்டார். இந்நூல் வெளிவர நிதியுதவி அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
எமது தாயார் மேலழிஞ்சிப்பட்டு திருமதி தி.மல்லிகா திருநாவுக்கரசு அவர்கள் 1987-ஆம் ஆண்டு காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் அணையா தீபம் ஒன்றினை ஏற்றிவைத்து அதனை வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். இவ்விளக்கிற்கு எண்ணை வாங்கும் செலவிற்காக அன்றைய கடலூர் சன்மார்க்க சங்கத்தினர்களும், முக்கியமாக கடலூர் சாமிக்கண்ணு ஐயா, வாசுகி சாமிக்கண்ணு அவர்களும் பெரும் உதவி புரிந்தனர். சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லாது எங்களது உறவினர்களில் சிலரும் உதவி புரிந்தனர். அவர்களது பெயர்களும், நன்கொடை தொகையினையும் பழைய ச.மு.க. அருள் நிலைய சுவற்றில் நானே பெயிண்ட் கொண்டு எழுதி வைத்தேன். அப்பெயர்களெல்லாம் சேமிக்காமல் தவறிவிட்டன. அவர்களுக்கெல்லாம் இந்நூற்றாண்டில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தற்போதுள்ள ச.மு.க. அருள் நிலையத்தை கட்ட பொருளுதவிச் செய்த பொதுமக்கள், சன்மார்க்கர்கள், எங்களது உறவினர்கள், காரணப்பட்டு கிராமத்தார்கள் அனைவருக்கும் இந்நூற்றாண்டில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். ச.மு.க. அருள் நிலையத்தில் பூஜை செய்து வந்த காலஞ்சென்ற திரு.பழநி ஐயா, மற்றும் தற்காலத்தில் பூஜை செய்து வரும் காரணப்பட்டு திரு.நடராஜன் கெளசல்யா அவர்களுக்கும் நன்றி.
திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை - நூலினை இந்நாளில் வெளியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால் உரை முழுதும் நிறைவேறவில்லை, மேலும் திருவருள் சம்மதமில்லை. எனினும் விரைவில் வெளியிட இறை ஆணை வரும் என நம்புகின்றேன்.
நூற்றாண்டு குருபூஜை விழாவிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், வள்ளலார் உட்பட உங்கள் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றோம். சுபம்.
இங்ஙனம்
திரு மருதூர் இராமலிங்க பிள்ளை.
9445545475
குருபூஜை அழைப்பாளர்கள்;
மல்லிகா திருநாவுக்கரசு - கடலூர்
9445545475 / 9865125751
அ.மணிவண்ணன் பிள்ளை, விஜயலட்சுமி மணிவண்ணன் - சென்னை
9360094957 / 9940359596
சரஸ்வதி முருகாநிதி - காரைக்காடு
7904872983 / 7010303239
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.