Monday, September 7, 2026

முற்பிறவி உண்டா?

முற்பிறவி உண்டா?


 வணக்கம் மக்களே…. 

நாம் இன்று பார்க்கப்போவது இவ்வுலக ஜீவிகளுக்கு முன் பிறவி இருந்ததா? மற்றும் அடுத்தப் பிறவி உண்டா? என்பது பற்றிதான். 

பொதுவாக அனைத்து மதங்களிலும் இதைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 

நாம் இதைப்பற்றி வள்ளலார் என்ன கூறியிருக்கிறார் என்று இந்த நாளில் பார்ப்போம்.

மக்களே, உங்கள் அருகில் வள்ளலார் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா? ஆம், வள்ளலார் இதோ இங்கே நம்மிடையேதான் இருக்கிறார். அவரை வரவேற்கும் பொருட்டு, உற்சாகமாக ஒரு முறை எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள் மக்களே.

அனைவரும் எழுந்து கரவொலி எழுப்புகிறார்கள்.

நன்றி மக்களே.

ஒருவன், தான் குடியிருக்க, புதியதாக ஒரு வீட்டைப் பார்த்து வாடகை கொடுத்து குடியிருக்கிறான். அவன், இந்த புதிய வீட்டிற்கு வரும் முன்பே ஏதோ ஒரு வீட்டில் குடியிருந்திருக்க வேண்டும் அல்லவா?, முன்பு இருந்த வீட்டை விட்டுவிட்டுத்தானே, அவன் புதியதாக தற்போது குடியிருக்கும் இந்த வீட்டிற்கு வந்திருக்க முடியும். ஏதோ ஒரு காரணத்தினால் அவன் பழைய வீட்டை விட்டு, புதிய வீட்டிற்கு வந்திருக்கிறான்.

அது போல், அவன் தற்போது இருக்கும் வீடும் பழுதடைந்துவிட்டால், அவன் தனது எதிர் கால வாழ்க்கைக்காக, வேறு ஒரு புதிய வீடு தேடி குடியேறுவான் அல்லவா?  

அதுபோல், நமது ஆன்மாவானது, ஆகாரம் என்னும் வாடகை கொடுத்து, இந்த மனித தேகத்தில் ஜீவிக்கிறது. இந்த ஜீவன் இதற்கு முன்பும் ஏதோ ஒரு தேகத்தில் ஜீவித்திருக்க வேண்டும். அந்த முன் தேகத்திற்கு பழுது ஏற்பட்டதால், அந்த ஆன்மாவானது தற்போதுள்ள இந்த மனித தேகத்திற்கு ஆகாரக் கூலி கொடுத்து வசித்துவருகிறது. 

தற்போதுள்ள தேகத்திற்கும் பழுது நேரிடும் பொழுது, அந்த ஆன்மாவானது எதிர்காலத்தில் வேறு ஒரு தேகம் எடுப்பது நிச்சயம். ஏனெனில் தேகம் இல்லாமல் ஆன்மாவனது ஜீவித்திருக்க முடியாது.

எனவே, நமக்கெல்லாம் முன் பிறவிகள் இருந்திருக்கின்றன, அடுத்த பிறவிகளும் நிச்சயம் உண்டு, என அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார்.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழும். அதாவது, நாம் நமது பழைய வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையினை ஞாபகம் வைத்துக்கொள்வதுபோல, ஏன், நமக்கு முற்பிறவியின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஞாபகம் வருவதில்லை, என்பதுதான் அந்தக் கேள்வி.

இதற்கும் வள்ளலார் பதில் கூறுகிறார். நாம் எவ்வாறு நமது குழந்தைப் பருவ செயல்களை கால ஓட்டத்தில் நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லையோ, அது போல், நாம் நமது முற்பிறவியின் செயல்களையும் கால ஓட்டத்தில் மறந்துவிடுகிறோம்.  

யார் ஒருவர் இந்தப் பிறவியில் மரணமில்லா பெருவாழ்வு பெற்று தனது தேகத்தை ஞான தேகமாக, நித்திய தேகமாக மாற்றுகிறோரோ, அவருக்கே அடுத்தப் பிறவி என்பது கிடையாது. நித்திய தேகத்திற்கு குடிக்கூலி கிடையாது, அதாவது ஆகாரம் கொடுக்க வேண்டாம். அது அவருக்கு என்றும் பழுதே ஏற்படாத, சொந்த வீடாகிவிடுகிறது. அவர் எதிர்காலதில் வாழ, அடுத்த வீடு தேடி செல்ல வேண்டியதில்லை.

எனவே மக்களே, நீங்கள் குடியிருக்கும் இந்த தேகம் என்னும் வீட்டினை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், நித்திய தேகமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் பிற ஜீவன்களை துன்புறுத்தி, அவர்கள் வாழும் தேக வீட்டினை இடித்து பாழ் செய்யாமலிருந்தால்தான், உங்களுக்கு நித்திய வீடு கிடைக்கும் என்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள். Mind It. 

நாம் தயவுடன் இருப்போம். நன்றி மக்களே…

அருட்பெருஞ்ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.