Showing posts with label ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 48 – ஆம் நாள் நிறைவு மண்டல பூஜை. Show all posts
Showing posts with label ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 48 – ஆம் நாள் நிறைவு மண்டல பூஜை. Show all posts

Tuesday, July 25, 2017

ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 48 – ஆம் நாள் நிறைவு மண்டல பூஜை

25-07-2017 செவ்வாய் கிழமை அன்று 48-ஆவது மண்டல நிறைவு நாள் பூஜை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையத்தில் நடைபெற்றது. சென்னையிலிருந்து வந்திருந்த சன்மார்க்கர் திரு.சச்சிதானந்தம் மற்றும் திருவாரூரிலிருந்து வந்திருந்த சன்மார்க்கர் திரு.சக்திவேல் ஆகியோர்களின் முன்னிலையில் சன்மார்க்க கொடி கட்டியதைத் தொடர்ந்து, வள்ளற்பெருமானின் திருவடிகளின் முன்னிலையில் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. சிறுவந்தாடு சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்திருந்த திருமதி முத்தாளம்மாள், திருமதி கோவிந்தம்மாள், திருமதி சுசீலா அம்மாள் ஆகியோர்கள் தலைமையில் திரு அகவல் ஓதப்பட்டது.
         
அனையா தீபத்தின் முன்னிலையில் சன்மார்க்கர் திரு.அருட்பா அருணாசலம் ஐயா அவர்கள் வள்ளற்பெருமானின் சன்மார்க்க கருத்துக்களையும், காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் சன்மார்க்க பணிகளையும் மிக விரிவாக எடுத்துரைத்து சொற்பொழிவை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை அன்னதான செம்மல் சன்மார்க்கர் திரு.நந்தி சரவணன் அவர்கள் “ஜீவகாருண்யத்தில் பசி தவிர்த்தல்” பற்றி மிகச் சுவையாக சொற்பொழிவினை ஆற்றினார். சொற்பொழிவோடு மட்டுமல்லாமல் மா, பலா, வாழை என்கிற முக்கனிகளையும் அன்பர்களுக்கு வழங்கினார்.
         
உலகெலாம் ஒளிநெறி பெற்றிட காரணப்பட்டு அருள் நிலையத்தில் ஜோதி வழிபாடு மிகச்சிறப்பாக நடந்தேறியது. அருள் நிலைய நிர்வாகி திரு.இர.நடராஜன் ஐயா அவர்கள் ஜோதி வழிபாட்டை நடத்த, காரணப்பட்டு கிராம மக்களும் சன்மார்க்க அன்பர்கள் பலரும் இவ்வழிபாட்டில் கலந்துக்கொண்டார்கள். இந்த மண்டல நிறைவு பூஜையின் உபய தாரர்களான காரணப்பட்டு திரு.K.V.S.இராமலிங்கம் – ஜெயந்தி மற்றும் திரு.T.V.சிவசுப்ரமணியன் – உஷா ஆகியோர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.  காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயாவின் வழித்தோன்றல்களான திரு.அ.திருநாவுக்கரசு – மல்லிகா, திரு.அ.மணிவண்ணன், திரு.அ.முருகாநிதி – சரஸ்வதி ஆகியோர்களும் கலந்துக்கொண்டனர்.
         
காலையில் சிற்றுண்டியும், மதியம் அன்னதானமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.  இன்றைய நிறைவு பூஜையினை மன நிறைவாக செய்த  காரணப்பட்டு திரு.K.V.S.இராமலிங்கம் – ஜெயந்தி மற்றும் திரு.T.V.சிவசுப்ரமணியன் – உஷா அவர்களை அருள் நிலையம் வாழ்த்துகின்றது.
         
கடந்த 08-06-2017 திறப்பு விழாவினைத் தொடர்ந்து இன்றைய நாளான 25-07-2017 வரையுமான 48-நாளும் அருள் நிலையத்தில் சிறப்பு ஜோதி வழிபாடும், சிறப்பு அன்ன தானங்களும் நடந்தேறின. இம்மண்டல பூஜைகளை சிறப்புற நடத்திய அனைத்து உபய தாரர்களையும் காரணப்பட்டு அருள் நிலையம் வாழ்த்துகின்றது. அருட்பெருஞ்ஜோதியின் அருள் என்னென்றும் அவர்களுக்கு உரித்தாகட்டும். மண்டல ஜோதி வழிபாடுகளில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களுக்கும் வள்ளற்பெருமானின் அருளும் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயாவின் அருளும் என்றென்றும் உரித்தாகட்டும். இச்செய்தியினை ஊடகங்களின் மூலம் படித்து வாழ்த்திய உங்களுக்கும் அருள் நிலையத்தின் அருள் உரித்தாகட்டும். அனைவருக்கும் நன்றி.