01-05-2016
: 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:
தாயுமானவர்
தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கேடிலியப்ப
பிள்ளை என்னும் சைவ வேளாளர் வாழ்ந்து வந்தார்.
வேளாண்மை குலத்தொழில் என்றாலும் எல்லையற்ற சிவபக்தியால் அவ்வூரின் சிவஸ்தலத்தின்
நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்.
ஆலயம் புதிய ஒழுங்குக்கு வந்தது. அப்போது
நாயக்கர் ஆட்சிக் காலம். திருச்சியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார்.
அவர் கடல் நீராடி வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க எண்ணி அங்கே வருகை புரிந்தார். கேடிலியப்ப பிள்ளை மன்னரை முறைப்படி வரவேற்று மரியாதைகள்
எல்லாம் செய்து தரிசனமும் செய்து வைத்தார்.
கோவில் வழிபாட்டில் இருந்த நியமங்களையும், கோயிலின் சுத்தத்தையும், ஒழுங்கான
முறையான நிர்வாகத்தையும் கவனித்த அரசர் நிர்வாகியான கேடிலியப்ப பிள்ளையின் கல்வித்தேர்ச்சியையும்
கவனித்துக்கொண்டார். இத்தனை திறமை வாய்ந்த
அவர் இருக்குமிடம் இதுவல்ல என முடிவு செய்த அரசர் அவரைத் திருச்சி அழைத்தார்.
கேடிலியப்ப பிள்ளையைத் திருச்சிக்கு
வந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் பெருங்கணக்கர் பணியை ஏற்றுக்கொள்ள ஆணையிட்டார்.
கோயிலின் நிர்வாகத்தைத் தக்க நபரிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்கு வரும்படி கேட்டுக்
கொண்டார். கேடிலியப்ப பிள்ளைக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. கோயிலைத் தக்க மனிதர்களிடம் ஒப்படைத்துவிட்டுத்
திருச்சிக்குச் செல்லத் தீர்மானித்தார். கேடிலியப்ப
பிள்ளைக்கும் அவர் மனைவியான கெஜவல்லி அம்மைக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான். ஆனால் கேடிலியப்ப பிள்ளையவர்களின் அண்ணாவான வேதாரண்யம்
பிள்ளைக்கு மகப்பேறு வாய்க்காததால் சிவசிதம்பரம் என்னும் பெயர் கொண்ட தம் மகனைத் தம்
அண்ணனுக்கே முழு மனதோடு சுவீகாரம் செய்து கொடுத்திருந்தார் கேடிலியப்ப பிள்ளை. பின்னரே திருச்சிக்கு மனைவியோடு வந்தார்.
அங்கே மலைக்கோட்டையில் வீற்றிருந்த தாயுமானவரைத்
தினம் தினம் தரிசனம் செய்து வந்தார். அவர்
மனைவியும் அவருடன் செல்வார். ஈசன் தாயுமானவராகச் செட்டிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துத்
தாயும் ஆன கதையை நினைந்து நினைந்து மனம் நெகிழ்வார். ஏற்கெனவே பிறந்த பிள்ளையை அண்ணனுக்குக்கொடுத்துவிட்டதால்
தனக்கு இன்னொரு மகன் பிறக்க வேண்டும் என ஈசனிடம் முழு மனதோடு வேண்டினார். சிறிது காலத்தில் அவர்களுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான்.
தாயுமானவர் அருளால் பிறந்த அந்தப்பிள்ளைக்குத் தாயுமானவர் என்ற பெயரையே பெற்றோர் சூட்டினார்கள். குழந்தை பிறந்த உடனேயே அதன் அங்க அடையாளங்களில்
நிறைநிலைகள் பல தென்பட்டன. அதோடு குழந்தை ஒரு
ஞானியாக, யோகியாக பர நாட்டத்தில் மேன்மை அடைவான் என ஜோதிடரும் கணித்துச் சொல்லவே பெற்றோர்
மனம் மகிழ்ந்தனர். குழந்தைக்கு வயது ஐந்து ஆயிற்று. பெற்றோர்கள் குழந்தைக்கு வித்யாரம்பம் பண்ணி வைத்தார்கள்.
திருச்சியில் சிறப்பான பாடசாலை ஒன்றில்
கல்வி கற்றார் தாயுமானவர். தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் தாயுமானவர்
நிபுணராக விளங்கினார். சைவத்தில் அதிகம் ஈடுபாடுடன் தேவாரம், திருவாசகம், சைவ ஆகமங்கள்,
அருணகிரியாருடைய திருப்புகழ் போன்றவற்றையும் நன்கு கற்று வந்தார். தினம் மலைக்கோட்டையில் மலை ஏறித் தாயுமானவன் ஆன சிவனைத் தரிசனம் செய்துவிட்டுப் பின்னர் திருவானைக்கா
சென்று அகிலாண்ட நாயகியை வழிபடுவதைத் தன் நித்திய கர்மமாக வைத்திருந்தார் தாயுமானவர். ஒருநாள் மலைக்கோட்டை தரிசனம் முடிந்து கீழே இறங்கிக்
கொண்டிருந்தவரை வழியில் ஒரு முனிவர் கண்டார்.
அவரைப் பாரத்ததுமே உடலும், உள்ளமும் அவர் பால் ஈர்த்தது தாயுமானவருக்கு. அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார். அதிகம்
பேசாமல் மெளனமாக இருந்ததால் மெளன குரு என அழைக்கப்பட்டு வந்தார் அந்த முனிவர். அவருடைய வாயினின்று எப்போதேனும் அபூர்வமாகவே சொற்கள்
வெளிவரும். மேலும் அவர் திருமூலர் மரபில் வந்தவராகவும்
கூறுகின்றனர். அதை ஒட்டியே தாயுமானவர் தம்
பாடல்களில் "மூலன் மரபில் வரு மெளனகுருவே" என்று போற்றி இருப்பதாகவும் தெரிய
வருகிறது. தாயுமானவர் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு
அவருக்கு ஆட்பட்டார்.
குருவால் ஆட்கொள்ளப்பட்ட தாயுமானவர் ஆன்ம சாதனங்களில் வெகு
விரைவில் முன்னேற்றம் அடைந்தார். ஆச்சாரியருக்கு பக்திபூர்வமாகப் பணிவிடைகள் புரிந்தார்.
குருவிடம் மாறாத பக்தியும், பாசமும் வைத்திருந்த தாயுமானவருக்குச் சில காலம் குருவைப்
பிரிய நேரிட்டது. பிரிந்திருக்கும் காலத்தில்
மனம்குழம்பித் தவித்தார் தாயுமானவர். குருவோ
இதற்கெனக்கவலைப்பட வேண்டாம் எனவும், சீடன் தனது கர்மாக்களின் பெரும்பகுதியைப் பூர்த்தி
பண்ண வேண்டியே இப்பிரிவு எனவும், அதன் பின்னர் அமையப்போகும் குரு-சீடன் உறவு மிக மிகச்
சிறப்பாக அமையும் எனவும் உறுதிமொழி கூறியதோடு அல்லாமல் சீடனுக்குப் பிரியும் வேளையி,
"சும்மா இரு" எனும் மந்திர உபதேசம்
செய்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து அதையே
பீஜ மந்திரமாய்க் கொண்ட தாயுமானவ சுவாமிகள் தன் அனைத்துப் பாடல்களிலும் இந்த உபதேச
மொழியை முக்கியக் கருத்தாக அமைத்திருப்பது தாயுமானவரின் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுவோர்க்கு
நன்கு விளங்கும்.
இவ்வுலகத்தின் பந்த பாசங்களில் அகப்பாடமல்
இருக்க வேண்டி எந்நாளும் இறைவனைப் பிரார்த்தித்துப் பற்றற்ற வாழ்க்கை வாழ விரும்பிய
தாயுமானவரை அவரின் பெற்றோர்கள் திருமணக் கோலத்தில் காண விரும்பினார்கள். தாய், தந்தையரின் விருப்பத்தைத் தட்ட முடியாத தாயுமானவர்
மட்டுவார் குழலில் என்னும் பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இல்லறம் மேற்கொண்ட பிறகு அதற்குரிய கடமைகளைச் செவ்வனே
நிறைவேற்றுவதே தர்மம் எனப் புரிந்த தாயுமானவர் மனைவியோடு அறவழியில் இல்லறத்தை நடத்தி கனகசபாபதி என்னும் பெயருடைய ஆண் மகவு ஒன்றையும்
பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்த சில
காலத்திலேயே தாயுமானவரின் மனைவி மட்டுவார் குழலி அம்மை காலமானார். தாயுமானவர் வேறொரு திருமணம் செய்து கொள்ளாத நிலையில்
அவரின் மகனை வளர்க்கும் பொறுப்பைத் தாயுமானவரின் தமையனார் சிவசிதம்பரமும், அவரின் மனைவியும்
ஏற்றுக் கொண்டனர். அத்தோடு ஆத்மசாதனைக்குத்
தடை என நினைத்த தாயுமானவரின் இல்லற வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது.
இதனிடையே தாயுமானவரின் தந்தையார் கேடிலியப்ப
பிள்ளையும் மரணமடையவே திருச்சி அரசு மீகாமன் இல்லாத கப்பல் போலத் திண்டாடியது. அரசர்
தாயுமானவரே இந்த மாபெரும் பொறுப்பை ஏற்க வல்லவர் என்றுணர்ந்து அவரை அழைத்துத் தகப்பனாரின்
பதவியில் தாயுமானவர் அமர்ந்து அரசருக்கும், அரசாட்சிக்கும் உதவும்படி கேட்டுக்கொண்டார். தந்தை மூலம் இந்த விஷயங்களில் ஓரளவு பயிற்சியும்
பெற்றிருந்த தாயுமானவர் அரசரின் சொல்லைத் தட்ட முடியாமல் பொறுப்பை ஏற்றார். வெகு விரைவில் இதில் திறமை பெற்றவராகித் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்ற
ஆரம்பித்தார். நாளடைவில் மன்னனும் மடிய அவன்
மனைவியான ராணி மீனாக்ஷி பட்டத்தை ஏற்றாள்.
ராணி மீனாக்ஷிக்குத் தாயுமானவரின் இளமையும், தேஜஸும் கண்டு மனம் பேதலித்தது. ஆனாலும் வெளிப்படையாகச் சொல்லாமல் தக்க தருணத்திற்குக்
காத்திருந்தாள். ஒருநாள் அரசாங்க வேலைகளைப்
பனை ஓலைகளில் குறிப்பெடுத்து வைத்துச் சரிபார்த்துக்கொண்டிருந்த தாயுமானவர் திடீரென
முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர் அதைக் கசக்கித் தூர எறிந்தார். இதைக் கவனித்த ராணி மீனாக்ஷி காரணம் கேட்க, அப்போதே தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர்
, திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், அதைத் தாம்
அணைத்ததாகவும் கூறினார். இதை நம்பாத ராணி மீனாக்ஷி
கோயிலுக்குச் சென்று உண்மையை அறிந்துவரச் செய்தாள்.
உண்மையில்
அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது குறித்துத் தெரிந்ததும் ராணிக்கு இவர் எவ்வளவு
பெரிய மஹான் என்பது புரிந்தது. தாயுமானவருக்கும்
அரசல் புரசலாக ராணியின் தகாத ஆசை தெரிந்திருந்ததால் தான் பதவியை விட்டு விலகுவதே சரி
என்றும், தீர்மானித்து விட்டார். உடனே அரசியிடம்
தன் மனம் இவ்வுலக வாழ்வை நாடவில்லை என்றும்,
தன் போக்கில் செல்லத் தன்னை அனுமதிக்குமாறும் கூறி அரசுப் பதவியை விட்டு விலகிவிட்டார். வெளியேறி வந்த தாயுமானவருக்கு மீண்டும் தம் குருவின்
தரிசனமும் கிட்டி அவர் மூலம் சந்நியாச ஆசிரமமும், உபதேசமும் கிடைக்கப் பெற்றது. அன்று முதல் கோவணாண்டியாகவே இருந்து கொண்டு அதே
திருச்சியில் வசித்து வந்தார். அவர் இருந்த
உத்தியோகத்தின் மேன்மையையும் செல்வாக்கையும், செல்வநிலைமையையும், இப்போது இருக்கும்
நிலையையும் பார்த்த அன்பர் ஒருவர் அவருக்குக் குளிர்காலத்திற்குப் போர்த்திக்கொள்ளவென
ஒரு அழகான காஷ்மீரப் பட்டுச் சால்வையைப் பரிசளிக்க அவரோ அதை உடுத்த உடை இல்லாதிருந்த
ஒரு பிச்சைக்காரிக்குக் கொடுத்துவிட்டார்.
தாம் கொடுத்த சால்வை எங்கே எனக் கேட்ட அன்பரிடம், அகிலாண்டேஸ்வரிக்கே கொடுத்துவிட்டதாய்ப்
பதிலளித்தார். இப்படிப் பார்க்கும் பெண்களிடத்தில்
எல்லாம் இறையைப் பார்த்த தாயுமானவர், யாத்திரையாகக்
கிளம்பி ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் காலையில் ராமநாதபுரத்திற்கு வெளியே லக்ஷ்மிபுரம்
என்னும் ஊரில் சமாதி அடைந்தார். இவரின் காலம்
பதினெட்டாம் நூற்றாண்டாகும். இவர் 56 தலைப்புகளில் 1452 பாடல்களை பாடியுள்ளார். திருவருட்பிரகாச
வள்ளலார் இவரை, ஒரு மத சன்மார்க்கி என புகழ்வார். இவரின் பாடல்களே வள்ளற்பெருமானின்
பாடல்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. (நன்றி - திருமதி. கீதா சாம்பசிவம்)
or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing
