Sunday, February 26, 2017

வாஸ்து

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

வாஸ்து
=========

வீட்டை கட்டிப்பார்! கல்யாணம் செய்து பார்! என்ற பழமொழிக்கேற்ப இவை இரண்டு செயல்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பெருஞ்சாதனைகளாக கருதப்படும். அந்த அளவிற்கு இவை இரண்டும் நன்கு ஆராயப்பட்டு திட்டமிட்டு தங்களது பொருளாதார எல்லைக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டியதாக உள்ளது. நன்கு ஆராயாமல், நன்கு திட்டமிடாமல், தங்களது பொருளாதார எல்லைக்குள் அடக்காமல் செய்யக்கூடிய மேற்காணும் இரண்டு செயல்களும் பாழாகிவிடும்.

        அதற்காக வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பதும், திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதும் சுத்த சன்மார்க்கப் பாதைக்கு முரணானதாகும். சாஸ்திரங்கள் எல்லாம் குப்பைகள் என்று சாடியவர் வள்ளலார். அதனால் நாமெல்லாம் வீடுகட்டும்போது மனையடி சாஸ்திரம் பார்ப்பது மூடபழக்கமாகும். நமக்கு எவ்வளவு இடம் உள்ளது, அதில் எவ்வளவு இடம் கட்டடம் அமைய வேண்டும். அக்கட்டடத்தில் எத்தனை அரைகள் இருக்க வேண்டும். இதுபோன்ற நமது வசதிகளை நாமே அவ்விடத்திற்கேற்ப தீர்மானம் செய்வதே அறிவு மார்க்கமாகும். அல்லது கட்டட வல்லுநரைக் கொண்டோ, அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ தீர்மானிக்கலாம். இதைத் தவிர சுத்த சன்மார்க்கத்திற்கு ஒவ்வாத எவ்வித செயலிலும் சன்மார்க்கிகள் ஈடுபடுவது கூடாது.  

        வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம் போன்ற குப்பைகளிலிருந்து  சன்மார்க்க அறிஞர்கள் விலகிவிடவேண்டும். வீட்டில் என்னென்ன வசதிகள் எங்கெங்கு அமைக்க வேண்டும் என்பதனை நாமே சொந்த புத்தியைக்கொண்டு தீர்மானிக்கலாம். தீர்மானித்து கட்டி முடித்துவிட்டு, அதன் பிறகு நமக்கு வருகின்ற இன்ப துன்பங்கள் இந்த வீட்டினால்தான் வருகின்றது என்று முடிவு செய்வதும் அறியாமையே. இந்த அறியாமையால், கட்டிய வீட்டை இடித்து பகுதி பகுதியாக இடித்து மாற்றி கட்டும் மூட வழக்கம் மக்களிடையே பெரும்பாலும் இருந்து வருகின்றது. வீட்டினை மாற்றி அமைப்பதினால் செலவுகள் கூடுமே தவிர வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களும் நேர்ந்திடாது.

        எந்த சாஸ்திரங்களும் இன்றி மேலை நாடுகளிள் கட்டப்படும் வீடுகளில் வசிக்கும் மக்கள் நம்மைவிட மிகவும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறந்து ஓங்குவதை கவனியுங்கள். இதன் பிறகும் சிலர் பிழைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சாத்திரக்குப்பைகளை நம்பித்தான் வாழவேண்டுமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள். சன்மார்க்கிகளுக்கு தீர்மானிக்கும் உரிமைகூட கிடையாது. ஏனெனில் அவர்கள் சாஸ்திரத்தைவிட்டு சன்மார்க்கம் தொட்டவர்கள். எனினும் நம்மிடையே பழகும் உறவினர்களின் கட்டாயத்தால் நாம் தவறுதல் இயல்பு. அந்த தவறுதலை விழிப்புணர்வுடன் தவிர்ப்பவனே சன்மார்க்கி. எனவே சாஸ்திர சந்தடிகளில் மாட்டிக்கொள்ளாமல் எதிலும் தனித்திருப்போம். சன்மார்க்கிகளாக வாழ்வோம்.


--தி.ம.இராமலிங்கம்.

பெண்ணரசி

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

பெண்ணரசி
==========

      

      இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்த பெண் என்கின்ற சாதனை படைத்த நமது தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த மாதம் டிசம்பர் மாதம் 05-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

        செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் டிசம்பர் 05-ஆம் தேதி இரவு வரை அவரை யாராலும் சந்திக்கமுடியாத நிலையில், அவரது மரணம் ஒரு மர்மமாகவே மக்களிடையே பேச வைத்துவிட்டது.

        அவரது மறைவால், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியும், முதலமைச்சர் பதவியும் வெறுமையானதைவிட, அ.தி.மு.க. வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்கின்ற பதவி அவரைவிட்டு நிரந்தரமாக பிரிந்ததைத்தான் அவரது கட்சித் தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனிடையில் 06-ஆம் தேதி திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் புதிய முதல்வராக பதவியேற்றார். அதே நாளில் மறைந்த முதல்வரின் உடல், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அவர்களின் அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுமார் 280 கட்சித்தொண்டரகள் அவரது மறைவை எண்ணி மாண்டு போனார்கள்.

        மறைந்த முதல்வர் அவர்கள் கடந்த 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி தென்னாற்காடு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கடலூரை தலைநகராக்கொண்டு “தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்” என்று பெயர் சூட்டி, வள்ளலார் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதையும், வள்ளலார் ஏற்படுத்திய அன்னதானத் திட்டத்தை விரிவுப்படுத்தி அதனை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தியதையும், கோயில்களில் உயிர்பலி இடக்கூடாது என்ற தடைசட்டத்தை அமல்படுத்தியதையும் சன்மார்க்கிகள் யாரும் மறந்துவிடமுடியாது. 

        மக்களாட்சி முறையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி புரிந்தாலும், மன்னராட்சி முறையிலேயே மறைந்த முதல்வர் அவர்கள் தமது ஆட்சி நிர்வாகத்தை அமைத்துக்கொண்டார். அவரது தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை எல்லோரையும் தமது காலடியில் விழச்செய்தார். அவ்வகையில் அவர் ஒரு மகாராணியாகவே ‘நான்’ என்கிற தனி அடையாளத்துடன் ஆட்சிபுரிந்து அவ்வாறே அவரது மரணத்திலும் ‘நான்’ என்பது செயல்பட்டு, தனிமையில் என்ன நடந்தது என்று உலகிற்கு தெரியாமலேயே மர்மமான முறையில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.  அவரின் ஆன்மா இறைவனடியில் அமைதியடைய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இந்த சன்மார்க்க விவேக விருத்தி மூலம் வேண்டுகின்றேன்.
       
          இதற்கிடையில் அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக 29-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் திருமதி.வி.கே.சசிகாலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.


               

--தி.ம.இராமலிங்கம்.

2017 – ஆம் வருடம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

                               2017 – ஆம் வருடம்

முன்னம் செய்த தவப்பலனால் இவ்வுலகில் பிறந்து, இறவா வரம் வேண்டி தங்களை சுத்த சன்மார்க்க பாதையில் இணைத்து, சாதிகளையும், மதங்களையும், இனங்களையும், குலங்களையும், சடங்குகள், சாத்திரங்கள், ஆசாரங்கள் இவைகளையெல்லாம் விடுத்து சுத்தனாக, உலகியலிலிருந்து தனித்து வாழும் எம் அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும் எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகியலில் இருந்துக்கொண்டே, உலகியல் சிறிதும் உளம் பிடியா வண்ணம் வாழும் முறைதான் சுத்த சன்மார்க்கம். தண்ணீரிலே தாமரை இலை இருந்தாலும் அது தனித்துதான் இருக்கும், உடலிலே உயிர் இருந்தாலும் அது தனித்துதான் இருக்கும் அதுபோல இவ்வுலகால் வருகின்ற இன்ப துன்பங்களை, நாடகத்தில் நடிப்பவன் போல் ஏற்று தனித்து நடைபயிலுங்கள். நாடகத்தில் நடிப்பது போல் என்பது இவ்வுலகிற்காக, தனித்து நடப்பது அந்த இறை அனுபவத்துக்காக என்று கொள்ளுங்கள். இறைவனின் சோதனை என்பது உங்களை பொறுத்த மட்டில் மரணம் தான். அதனால் அந்த சோதனையை அவனது அருளால் கடக்க முயன்றுகொண்டே இருங்கள். அதற்கு முக்கியம் ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம் என்கின்ற திறவுகோலைக்கொண்டு நீங்கள் இறை வீட்டினுள்ளே நுழைவீர்களாக.
வருகின்ற நாட்கள் எல்லாம் சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் உங்கள் எண்ணங்களில் நிறையட்டும். எண்ணங்களால் செயல் ஓங்கட்டும். எங்கொரு தீமையும் உங்களை தொடரா வகை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காக்கட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே உங்கள் வேண்டுதலாக இருக்கட்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத்தடைகள் எல்லாம் உங்களை விட்டு விலகட்டும். சுத்த சன்மார்க்கத்தின் முடிபுகள் எல்லாம் உங்களை உள்ளும் புறமும் நின்று சூழட்டும். தயவே வடிவாக உங்களது உடலும் உயிரும் மாறட்டும்.

        மேற்காணும் மலர்ச்சிகளை எல்லாம் இந்த 2017-ஆம் ஆண்டு உங்களுக்கு வாரிவழங்கும் என்று வாழ்த்தி மீண்டும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டு, தங்களது ஒவ்வொருவரின் வாழ்த்துக்களும் அருட்பெருஞ்ஜோதியின் வாழ்த்துக்களாகவே நானும் ஏற்று உங்களுடன் நடைபயில்கின்றேன்.

        சன்மார்க்க விவேக விருத்தியின் சார்பாக நமது வள்ளற்பெருமானும் அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்களும், கல்பட்டு ஐயாவும், தொழுவூர் வேலாயுதனார் அவர்களும் என்றும் நம்மை வாழ்த்திக்கொண்டே இருக்கின்றார்கள். நாமும் அவர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். நன்றி.
  

-தி.ம.இராமலிங்கம்.

மும்மல பேதமும் சிருஷ்டியும்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

மும்மல பேதமும் சிருஷ்டியும்
======================

      ஆணவம் மாயை கன்மம் என மலம் மூன்று. இதில் பக்குவம் 3. அபக்குவம் 3. ஆக 6. இவை ஒவ்வொன்றும் மும்மூன்றாக விரிதலின் 18 ஆம். இந்தக் கன்ம பேதத்தால் அருட்சத்தியின் சமுகத்தில் எழுவகைத் தோற்ற முண்டானது. மேற்படி கன்ம மல்த்தால் சிருட்டி உண்டாகும் விவரம் வருமாறு:- பக்குவ ஆணவம், பக்குவமாயை. இவ் இரண்டினாலும் விஞ்ஞானகலர்பேதம். அபக்குவமாயை, அபக்குவகன்மம், அபக்குவஆணவம் கூடியது. தேவ நரக பைசாசங்கள். பக்குவமாயை, அபக்குவ கன்மம் கூடியது ஜீவர்கள். அபக்குவகன்மம், அபக்குவகன்ம ஆணவம், அபக்குவகன்ம மாயை, இவை கூடியது தாவர உயிர்கள். இதை விரிக்கில் பெருகும்.

                              ---திருவருட்பிரகாச வள்ளலார்.

        மலம் உள்ளது ஆன்மா, மலமற்றது பரமான்மா என்று நமக்கெல்லாம் தெரியும். மலம் மூன்று வகையானது என்பதும் நமக்குத் தெரியும். அவை ஆணவம், மாயை, கன்மம் என்று மூன்று. இந்த மூன்று மலங்களால்தான் ஆன்மாக்கள் இவ்வுலகம் மட்டுமன்றி இது போன்ற பல உலகங்களில் உடம்பினை எடுத்து பிறப்பினை எய்துகின்றன. இவ்வுலகிடையே தன்னை இழக்காமல் இருத்தல் ஆணவம், இவ்வுலகிடையே தன்னை இழத்தல் மாயை, இவ்வுலகிடையே தான் செயல்படுதல் கன்மம் ஆகும். இந்த மூன்று மலங்கள் இருக்கும்வரை ஒவ்வொரு ஆன்மாக்களும் ஏதேனும் ஒரு உலக வாழ்வினை விரும்பிக்கொண்டே இருக்கும்.

       ஆன்மாவின் உலக விருப்பத்திற்கிணங்க, அதனதன் கன்ம பேதத்தால் இறைவனிடம் உள்ள அருட்சத்தியின் இடையே ஏழுவிதமான தோற்றங்கள் இயற்கையாகவே உருவாகின. வெளியில் எப்படி காற்று அனாதியாய் தோன்றியதோ அவ்வாறு இறைவனிடத்தில் அருட்சத்தி அனாதியாய உருவாயிற்று. அந்த அருட்சத்தியின் இடையே ஆன்மாக்களின் கன்ம பேதத்தால் தோன்றிய ஏழுவகையான தோற்றங்களே சிருஷ்டிகளாக உலகங்களில் பிறக்கின்றன.

      ஏழு வகையான உடல் தோற்றங்கள்:- தேவன், மனிதன், நரகன், மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் ஆகியவனவாகும். இதில் தேவன், மனிதன், நரகன் இவை மூன்றும் மனித தேகத்தையே குறிக்கும். மனிதர்களில் குணங்களின் அடிப்படையில் இவை மூன்றும் வழங்கப்படுகின்றன. மிருகம், பறவை, ஊர்வன, தாவரங்கள் இவைகளில் அவ்வவ்குணங்களுக்கு ஏற்ப அதன் உடல்கள் பலவகையாக ஆக்கப்பட்டுள்ளன. மனித உடலுக்கு மட்டும் குணங்களுக்கு ஏற்ப உடல்கள் வகைபடுத்தப்படவில்லை. வகைப்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்று எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் ஏன் நரகனுக்கு ஒருவகையான உடல், மனிதனுக்கு ஒருவகையான உடல், தேவனுக்கு ஒருவகையான உடல் என்று வகைப்படுத்தப்படவில்லை என்றால், இந்த மனித உடல்கள் கொண்டு இதே ஜென்மத்தில் நரகன் தேவனாகலாம், தேவன் நரகனாகலாம் என்கின்ற வாய்ப்பை இந்த மனித உடலுக்கு இறைவன் வழங்கியப்படியால், மனித தேகத்திற்கு மட்டும் ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு அடையாளமுடைய தேகத்தை அருட்சத்தி வழங்கவில்லை.

        பக்குவ ஆணவமும் பக்குவ மாயையும் சேர்ந்து விஞ்ஞான கலாபேதம் ஏற்படுகின்றது. விஞ்ஞான கலாபேதம் என்பது சுத்தமாயா உலகில் பிறப்பெடுக்கக்கூடிய ஆன்மாக்கள். இவர்கள் மொத்தம் 66 வகையினர். 

        பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர், திரிகலர், அரர், பசுமர், விபு, கோபதி, அம்பிகை, சருவருத்திரர், பிரசேசர், சிவர், அச்சுதர், திரிமூர்த்தி, உதாசனர், வைச்சிரவனர், பிரபஞ்சனர், வீமர், தருமர், உக்கிரர், ஆதித்தர், விக்கினேசர், சசி, உருத்திரர்கள், அனாதிருத்திரர், தசாருணர், நிதனேசர், வியோமர், தேசர், பிரமெசர், சருவோத்தமர், அனந்தர், பிரசாந்தர், சூலி, ஆலயேசர், விந்து, சிவநிட்டர், சோமதேவர், சீதேவி, தேவவிபு, சிவர், பரமேசர், பார்ப்பதி, பதுமபூ, உதாசனர், பிரசாபதி, நந்திகேசர், மகாதேவர், வீரபத்திரர், பிருகற்பதி, தசீசி, கவசர், இலளிதர், சண்டேசர், அசம்பாதர், நிருசிங்கர், உசனர், சம்வர்த்தர், மகாகாளர் என 66 விஞ்ஞான கலாபேத தேகத்தை பக்குவ ஆணவமும், பக்குவ மாயையும் உடைய ஆன்மாக்கள் அடைகின்றன.

        அபக்குவ மாயை, அபக்குவ கன்மம், அபக்குவ ஆணவம் இவைகளுடன் கூடிய ஆன்மாக்கள் தேவர்கள் மற்றும் நரகர்களாக (பைசாகங்கள் – பேயின் குணத்தை பெற்ற நரகர்கள்) இப்பூவுலகில் மனித உடல் எடுத்து பிறக்கின்றனர்.

        பக்குவ மாயை, அபக்குவ கன்மம் இவைகளுடன் கூடிய ஆன்மாக்கள் மனித ஜீவர்களாக மனித உடலெடுத்து இப்பூவுலகில் பிறக்கின்றனர்.

        அபக்குவ கன்மம், அபக்குவ கன்மத்தில் ஆணவம், அபக்குவ கன்மத்தில் மாயை இவைகளுடன் கூடிய ஆன்மாக்கள் இப்பூவுலகில் தாவர வர்க்கங்களாக பிறப்பெடுக்கின்றன.

        இவ்வாறு இந்த பிறப்பின் சூத்திரம் விரிந்துக்கொண்டே செல்கின்றது.

        மும்மல பேதமும் சிருஷ்டி வகைகளையும் இங்கே உள்ள வரைபடம் மூலம் கண்டு தெளியவும்.

தி.ம.இராமலிங்கம்.


சமய நூல்களின் உண்மை

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

சமய நூல்களின் உண்மை
=====================

பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களை அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற செளராதி சண்டை பரியந்தமும் தத்துவமேயாம். சைவ புராணம், விஷ்ணு புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே.

ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிக்கு இடமாக ஆலயங்களை அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள்.

மேற்குறித்த நாயன்மார்கள் முதலியவர்களின் உண்மையனுபவ தார்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும்.

இதுபோலவே திருவிளையாடல், பாரதம், பாகவதங்களும் அமைத்துக்கொள்க. ஒருவாறு கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல. புராணங்களி னிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-375)

                                         ======

தத்துவம் என்பது என்ன? என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்வோம். தத்துவம் என்பது நிழலைப்போன்றது. நிழல் என்பதனை ஒரு பொய்த்தோற்றம் என்று சொல்லிவிடமுடியாது. ஆனாலும் பொய்தோற்றம் போன்றதுதான். ஏனெனில் நிஜம் என்ற ஒன்று இல்லையேல் நிழல் இல்லை. நிழல்கள் எல்லாம் நிஜத்திலிருந்து தோன்றுகின்றன. அதாவது மெய்யின் பொய்த்தோற்றம் என ஒருவாறு சொல்லலாம்.

ஒரு பெரிய திடலில் சிறைச்சாலை அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்திடலில் ஓரிடத்தில் மிகநீண்ட உயரத்தில் கண்காணிப்பு கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்கோபுர உயரத்திலிருந்து பார்த்தால் அப்பெரிய சிறைச்சாலைத் திடல் முழுவதும் தெரியும். ஆனால் சிறைகூடத்திலிருந்து பார்த்தால் அப்பெரிய கோபுரத்தின் உச்சி தெரியாது. சிறையில் இருக்கும் கைதிகளை அக்கோபுர உச்சியிலிருந்து காவலர்கள் கண்காணிப்பார்கள். இது தெரிந்து சிறைக்கைதிகள் அனைவரும் எந்த ஒரு தவறும் செய்யாமல் தங்களை கட்டுப்படுத்தி ஒழுங்குடன் இருப்பார்கள். அந்த கோபுரத்தில் காவலர்கள் யாரும் இல்லாத நேரத்திலும், அந்த கோபுரமே அவர்களை பயமுறுத்தி, தாங்கள் கண்காணிப்பில் உள்ளோம் என்று உணர்த்தி அவர்களை ஒழுங்குடன் இயங்கவைக்கும். இதன் காரணமாக நன்னடத்தை சான்று பெற்று அவர்கள் விரைவில் வெளியில்வரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

இப்படி யாருமில்லாத நேரத்திலும் அந்த கோபுரமானது எவ்வாறு சிறைகைதிகளை ஒழுங்குடன் நடத்தியது? இப்படித்தான் நமது அரசு இயந்திரங்களும் இயங்குகின்றன. நாம் தவறு செய்தால் காவல் துறை தண்டிக்கும் என்கிற பயத்தால் மனித சமூகம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகின்றது. நம்மை எந்த காவலரும் கண்காணிக்கவில்லை. சுதந்தரமாகத்தான் உள்ளோம். ஆனாலும் நாம் எங்கோ இருக்கின்ற காவல் நிலையத்திற்கு பயந்து ஒழுங்குடன் வாழ்க்கையினை நடத்துகின்றோம். இது எப்படி நிகழ்கின்றது. அதுதான் தத்துவம். யாருமே இல்லாத அந்த கண்காணிப்பு கோபுரம் ஒரு தத்துவம். அதுபோல எங்கோ இருக்கின்ற காவல் நிலையமும் நமக்கே தெரியாத சட்ட விதிகளும் ஒரு தத்துவம்.

கண்காணிப்பு கோபுரங்கள், காவல் நிலையங்கள், சட்ட விதிகள் இவைகள்யாவும் உயிரற்றவை, நிழல்கள், தத்துவங்கள். ஆனாலும், உயிரற்ற அவற்றிற்கு உயிருள்ள மனிதர்களை ஒழுங்குபடுத்தும் சக்தி உள்ளதல்லவா? மேற்குறித்தவைகள் யாவும் மனிதனது கற்பனையில் உருவானவைதான்.

இவ்வாறே கடவுள் நிலையினை அறிவதற்கு கடவுளின் நிழலாக பல தத்துவங்கள் கற்பனைகளாக மனிதர்களால் உருவாக்கப்பட்டன. அத்தத்துவங்கள் மனிதர்களை ஆன்மிக ஒழுக்கங்களுக்குள் இழுத்தன. அதன் மூலம் சில சித்துகள் கைவரப்பெற்றன. ஆனாலும் மனிதர்களால் நிஜம் என்கின்ற கடவுளை அறியமுடியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு சித்தினை/பயனை மட்டுமே அளித்தன. அதாவது கண்காணிப்பு கோபுரம் என்றால் அதனால் என்ன பயனோ, அதனை மட்டுமே அது மனிதர்களுக்கு அளிக்கும். காவல் நிலையம் என்றால், அதனால் என்ன பயனோ அதனை மட்டுமே மக்களுக்கு அளிக்க முடியும். இவ்வாறுதான் தத்துவங்கள் எதுவும் முழுமையான நிஜத்தை காண வழிவகை செய்யவில்லை, செய்யமுடியவில்லை.

தத்துவம் என்பதற்கு வள்ளற்பெருமான் கூறும் பொருளையும் சற்று பார்ப்போம், “தத்துவமென்பது, தத்+த்வம்=தத்துவம். தத் – அது. அது என்பது சிவம். த்வம் – அதன் தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-390)

        அதாவது ‘சிவம்’ என்பது, உண்மை என்றால், அந்த சிவத்தின் நிழல்தான் அதனது ‘தன்மை’ என்பதாகும். தத்துவம் என்பது சிவம் என்கின்ற நிஜம் அல்ல. நிஜத்தின் தன்மை/குணம்/பயன்பாடு/நிழல் எனலாம்.

        வள்ளற்பெருமான் ‘சிவம்’ என்பதற்கு என்ன பொருள் கூறுகின்றார் என்பதனையும் பார்ப்போம், “சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம். சச்சிதானந்த மென்பது சத்து, சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம்; சிகரம் எல்லாமுள்ளதாய் விளங்குவது. வகரம் எல்லாம் விளங்குவதாக உள்ளது. மகரம் இரண்டினாலும் நிரம்பிய இன்பம். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-385)

        எனவே, சச்சிதானந்தத்தின் தன்மை எதுவோ அதுவே தத்துவம். அப்படியென்றால் சச்சிதானந்தத்தின் தன்மைதான் என்ன? எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! என்பது சத்து. திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்க… என்பதுதான் சித்து. இவ்வாறு எல்லாமுடைய சத்து நம் சித்தத்தே விளங்கினால், அதன் மூலம் மற்றெல்லாம் விளங்கி சித்தியாகும். இதனால் நமக்கு கிடைப்பது பேரானந்தமான மரணமிலாப் பெருவாழ்வும், கடவுள் நிலையறிந்து அம்மயமாதலும் ஆகும். இப்படி சச்சிதானந்தத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் பயன்களையே/தன்மைகளையே நாம் தத்துவம் என்கின்றோம்.

        இப்படிப்பட்ட தன்மைகளை பெறுவதற்காக சில மகான்களால் கற்பனைகளாக உருவாக்கப்பட்டதுதான் பல்வேறுபட்ட தத்துவங்கள். அதாவது வழிமுறைகள். அதாவது பெரிய தத்துவத்தை அடைய பல சிறிய தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எந்த ஒரு தத்துவங்களாலும் அந்த பெரிய தத்துவப் பயனான கடவுள் நிலையினை அறிய முடியவில்லை, அம்மயமாக ஆக முடியவில்லை.

        இவ்வுலகில் இயங்கிவரும் அனைத்து மதங்களிலும் பல்வேறுபட்ட தத்துவங்கள் பல்வேறுவிதமாக அந்தந்த மக்களை இயக்கிவருகின்றன. அப்படித்தான் பெரியபுராணத்தில் வருகின்ற 63 நாயன்மார்களின் கதைகளும் தத்துவங்களாகவே விளங்குகின்றன. நாயன்மார்கள் என வழங்கிவரும் பெயர்கள் யாவும் உண்மை அல்ல. அவர்களின் செயல்கள் யாவும் உண்மையில் நிகழ்ந்தது அல்ல. எல்லாம் கற்பனைக் கதைகளே. அந்த கண்காணிப்பு கோபுரம், காவல் நிலையம் போன்று யாவும் நிழல் தத்துவங்களேயாகும். 63 நாயன்மார் கதைகளில் நமக்கு பிடித்த நாயன்மார் கதையினைப் பின்பற்றி நடைபயின்றால் நாமும் அந்த நாயன்மார் கதாபாத்திரம் அடைந்த நிலையினை அடையலாம்.  இப்படி 63 நிழல்களில் நாமும் ஒரு நிழலில் இளைப்பாறலாம்.   

        தேவாரம், திருவாசகம் முதலியன யாவும் பெயரே தெரியாத சில மகான்களால் இயற்றப்பட்டு, இயற்றியதற்கேற்ப அவ்வவ்விடங்களில் அதற்கான கோயில்களை அமைத்து, ஒவ்வொரு சித்திகளைப் பெறுவதற்கான பொருத்தமான தத்துவ தத்துவி (ஆண்பால், பெண்பால்) என்று உருவாக்கி அவைகளை தெய்வங்களாக்கி, அத்தெய்வத்திற்கான பெயர்களையும் சூட்டி, அந்த சித்திக்கான தகுந்த காலம், தினம், கருவி முதலியனவற்றை வகுத்து அந்தந்த கோயில்களுக்கு திருவிழா என்று கொண்டாடி, அதனை வழக்கத்தில் வருவித்தனர்.  

இப்படிப்பட்ட நாயன்மார்கள் தத்துவ சித்திகள் எல்லாம் அக்கதைகள் அல்லது அந்த தத்துவங்கள் இயற்றப்படும் முன்பே இருந்தது. அதற்கு பின்பும் இருந்தது. எப்போதும் இருக்கும். நாம் இந்த நாயன்மார்களின் தத்துவங்களை பின்பற்றினால், நாமும் அந்த குறிப்பிட்ட நாயன்மார்களின் பதவியை அடையலாம். ஆனால் மேலான தத்துவமான சிவத்தின் ‘தன்மை’யினை அடைதல் இவற்றால் முடியாது. இப்படி தத்துவங்கள் வழியில் நாம் நடைபயின்றால் மொத்தம் 96 தத்துவங்களை நாம் படிப்படியாக கடந்தாக வேண்டும். அப்படிக் கடந்தால்தான் நாம் அந்த சிவத்தின் தன்மையினை அடைய முடியும். அதற்கு நமது ஜீவ காலம் போதாது. ஆகவே தத்துவ வழி தேவையில்லை என்பது வள்ளலாரது அனுபவ முடிபு. இந்த 96 தத்துவங்களும் தற்போது இவ்வுலகில் வழங்கிவருகின்ற அனைத்து மதங்களிலும் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன.

          இதுபோல சைவசமயத்தில் சொல்லுகின்ற சூரிய வழிபாடு முதல் சண்டேசுவர வழிபாடு வரை யாவும் உண்மையல்ல, தத்துவங்களே. மேலும் சைவ புராணம், விஷ்ணு புராணம், சூரபத்மன் யுத்தம், திருவிளையாடல், பாரதம், பாகவதம், கணபதி, சுப்பிரமணியம், மற்ற புராணங்கள் எல்லாமே உண்மையான நிகழ்வு கிடையாது. இவைகள் யாவும் மனிதர்களை நல்வழி படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு மகான்களால் இயற்றப்பட்ட கற்பனைகளே, அல்லது தத்துவங்களே ஆகும்.  

இவற்றின்/தத்துவங்களின் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் இன்னும் விரிவாக வருங்காலத்தில் வெளியாகும் என வள்ளற்பெருமான் அருளியிருக்கின்றார். 

                                             தி.ம.இராமலிங்கம்.