காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி
2017 ஆம் மாதம் வெளிவந்தவை:
சமய
நூல்களின் உண்மை
=====================
பெரியபுராணத்தில்
குறித்த 63 நாயன்மார்களை அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல
சைவத்தில் சொல்லுகின்ற செளராதி சண்டை பரியந்தமும் தத்துவமேயாம். சைவ புராணம், விஷ்ணு
புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய
யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே.
ஒவ்வொரு மஹான்கள்
சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிக்கு இடமாக
ஆலயங்களை அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி,
அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ
காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள்.
மேற்குறித்த
நாயன்மார்கள் முதலியவர்களின் உண்மையனுபவ தார்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும்
இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும்.
இதுபோலவே திருவிளையாடல்,
பாரதம், பாகவதங்களும் அமைத்துக்கொள்க. ஒருவாறு கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே
தவிர வேறல்ல. புராணங்களி னிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில்
விவரமாய் வெளியாகும். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-375)
======
தத்துவம் என்பது
என்ன? என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்வோம். தத்துவம் என்பது நிழலைப்போன்றது. நிழல்
என்பதனை ஒரு பொய்த்தோற்றம் என்று சொல்லிவிடமுடியாது. ஆனாலும் பொய்தோற்றம் போன்றதுதான்.
ஏனெனில் நிஜம் என்ற ஒன்று இல்லையேல் நிழல் இல்லை. நிழல்கள் எல்லாம் நிஜத்திலிருந்து
தோன்றுகின்றன. அதாவது மெய்யின் பொய்த்தோற்றம் என ஒருவாறு சொல்லலாம்.
ஒரு பெரிய திடலில்
சிறைச்சாலை அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்திடலில் ஓரிடத்தில் மிகநீண்ட உயரத்தில் கண்காணிப்பு
கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்கோபுர உயரத்திலிருந்து பார்த்தால் அப்பெரிய சிறைச்சாலைத்
திடல் முழுவதும் தெரியும். ஆனால் சிறைகூடத்திலிருந்து பார்த்தால் அப்பெரிய கோபுரத்தின்
உச்சி தெரியாது. சிறையில் இருக்கும் கைதிகளை அக்கோபுர உச்சியிலிருந்து காவலர்கள் கண்காணிப்பார்கள்.
இது தெரிந்து சிறைக்கைதிகள் அனைவரும் எந்த ஒரு தவறும் செய்யாமல் தங்களை கட்டுப்படுத்தி
ஒழுங்குடன் இருப்பார்கள். அந்த கோபுரத்தில் காவலர்கள் யாரும் இல்லாத நேரத்திலும், அந்த
கோபுரமே அவர்களை பயமுறுத்தி, தாங்கள் கண்காணிப்பில் உள்ளோம் என்று உணர்த்தி அவர்களை
ஒழுங்குடன் இயங்கவைக்கும். இதன் காரணமாக நன்னடத்தை சான்று பெற்று அவர்கள் விரைவில்
வெளியில்வரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
இப்படி யாருமில்லாத
நேரத்திலும் அந்த கோபுரமானது எவ்வாறு சிறைகைதிகளை ஒழுங்குடன் நடத்தியது? இப்படித்தான்
நமது அரசு இயந்திரங்களும் இயங்குகின்றன. நாம் தவறு செய்தால் காவல் துறை தண்டிக்கும்
என்கிற பயத்தால் மனித சமூகம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகின்றது. நம்மை எந்த
காவலரும் கண்காணிக்கவில்லை. சுதந்தரமாகத்தான் உள்ளோம். ஆனாலும் நாம் எங்கோ இருக்கின்ற
காவல் நிலையத்திற்கு பயந்து ஒழுங்குடன் வாழ்க்கையினை நடத்துகின்றோம். இது எப்படி நிகழ்கின்றது.
அதுதான் தத்துவம். யாருமே இல்லாத அந்த கண்காணிப்பு கோபுரம் ஒரு தத்துவம். அதுபோல எங்கோ
இருக்கின்ற காவல் நிலையமும் நமக்கே தெரியாத சட்ட விதிகளும் ஒரு தத்துவம்.
கண்காணிப்பு
கோபுரங்கள், காவல் நிலையங்கள், சட்ட விதிகள் இவைகள்யாவும் உயிரற்றவை, நிழல்கள், தத்துவங்கள்.
ஆனாலும், உயிரற்ற அவற்றிற்கு உயிருள்ள மனிதர்களை ஒழுங்குபடுத்தும் சக்தி உள்ளதல்லவா?
மேற்குறித்தவைகள் யாவும் மனிதனது கற்பனையில் உருவானவைதான்.
இவ்வாறே கடவுள்
நிலையினை அறிவதற்கு கடவுளின் நிழலாக பல தத்துவங்கள் கற்பனைகளாக மனிதர்களால் உருவாக்கப்பட்டன.
அத்தத்துவங்கள் மனிதர்களை ஆன்மிக ஒழுக்கங்களுக்குள் இழுத்தன. அதன் மூலம் சில சித்துகள்
கைவரப்பெற்றன. ஆனாலும் மனிதர்களால் நிஜம் என்கின்ற கடவுளை அறியமுடியவில்லை. ஏனெனில்
ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு சித்தினை/பயனை மட்டுமே அளித்தன. அதாவது கண்காணிப்பு கோபுரம்
என்றால் அதனால் என்ன பயனோ, அதனை மட்டுமே அது மனிதர்களுக்கு அளிக்கும். காவல் நிலையம்
என்றால், அதனால் என்ன பயனோ அதனை மட்டுமே மக்களுக்கு அளிக்க முடியும். இவ்வாறுதான் தத்துவங்கள்
எதுவும் முழுமையான நிஜத்தை காண வழிவகை செய்யவில்லை, செய்யமுடியவில்லை.
தத்துவம் என்பதற்கு
வள்ளற்பெருமான் கூறும் பொருளையும் சற்று பார்ப்போம், “தத்துவமென்பது, தத்+த்வம்=தத்துவம்.
தத் – அது. அது என்பது சிவம். த்வம் – அதன் தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின்
தன்மை.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-390)
அதாவது ‘சிவம்’ என்பது, உண்மை என்றால், அந்த
சிவத்தின் நிழல்தான் அதனது ‘தன்மை’ என்பதாகும். தத்துவம் என்பது சிவம் என்கின்ற நிஜம்
அல்ல. நிஜத்தின் தன்மை/குணம்/பயன்பாடு/நிழல் எனலாம்.
வள்ளற்பெருமான் ‘சிவம்’ என்பதற்கு என்ன பொருள்
கூறுகின்றார் என்பதனையும் பார்ப்போம், “சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம். சச்சிதானந்த
மென்பது சத்து, சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம்;
சிகரம் எல்லாமுள்ளதாய் விளங்குவது. வகரம் எல்லாம் விளங்குவதாக உள்ளது. மகரம் இரண்டினாலும்
நிரம்பிய இன்பம். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-385)
எனவே, சச்சிதானந்தத்தின் தன்மை எதுவோ அதுவே
தத்துவம். அப்படியென்றால் சச்சிதானந்தத்தின் தன்மைதான் என்ன? எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரே! என்பது சத்து. திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்க… என்பதுதான் சித்து.
இவ்வாறு எல்லாமுடைய சத்து நம் சித்தத்தே விளங்கினால், அதன் மூலம் மற்றெல்லாம் விளங்கி
சித்தியாகும். இதனால் நமக்கு கிடைப்பது பேரானந்தமான மரணமிலாப் பெருவாழ்வும், கடவுள்
நிலையறிந்து அம்மயமாதலும் ஆகும். இப்படி சச்சிதானந்தத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும்
பயன்களையே/தன்மைகளையே நாம் தத்துவம் என்கின்றோம்.
இப்படிப்பட்ட தன்மைகளை பெறுவதற்காக சில மகான்களால்
கற்பனைகளாக உருவாக்கப்பட்டதுதான் பல்வேறுபட்ட தத்துவங்கள். அதாவது வழிமுறைகள். அதாவது
பெரிய தத்துவத்தை அடைய பல சிறிய தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எந்த ஒரு தத்துவங்களாலும்
அந்த பெரிய தத்துவப் பயனான கடவுள் நிலையினை அறிய முடியவில்லை, அம்மயமாக ஆக முடியவில்லை.
இவ்வுலகில் இயங்கிவரும் அனைத்து மதங்களிலும்
பல்வேறுபட்ட தத்துவங்கள் பல்வேறுவிதமாக அந்தந்த மக்களை இயக்கிவருகின்றன. அப்படித்தான்
பெரியபுராணத்தில் வருகின்ற 63 நாயன்மார்களின் கதைகளும் தத்துவங்களாகவே விளங்குகின்றன.
நாயன்மார்கள் என வழங்கிவரும் பெயர்கள் யாவும் உண்மை அல்ல. அவர்களின் செயல்கள் யாவும்
உண்மையில் நிகழ்ந்தது அல்ல. எல்லாம் கற்பனைக் கதைகளே. அந்த கண்காணிப்பு கோபுரம், காவல்
நிலையம் போன்று யாவும் நிழல் தத்துவங்களேயாகும். 63 நாயன்மார் கதைகளில் நமக்கு பிடித்த
நாயன்மார் கதையினைப் பின்பற்றி நடைபயின்றால் நாமும் அந்த நாயன்மார் கதாபாத்திரம் அடைந்த
நிலையினை அடையலாம். இப்படி 63 நிழல்களில் நாமும்
ஒரு நிழலில் இளைப்பாறலாம்.
தேவாரம், திருவாசகம் முதலியன யாவும் பெயரே
தெரியாத சில மகான்களால் இயற்றப்பட்டு, இயற்றியதற்கேற்ப அவ்வவ்விடங்களில் அதற்கான கோயில்களை
அமைத்து, ஒவ்வொரு சித்திகளைப் பெறுவதற்கான பொருத்தமான தத்துவ தத்துவி (ஆண்பால், பெண்பால்)
என்று உருவாக்கி அவைகளை தெய்வங்களாக்கி, அத்தெய்வத்திற்கான பெயர்களையும் சூட்டி, அந்த
சித்திக்கான தகுந்த காலம், தினம், கருவி முதலியனவற்றை வகுத்து அந்தந்த கோயில்களுக்கு
திருவிழா என்று கொண்டாடி, அதனை வழக்கத்தில் வருவித்தனர்.
இப்படிப்பட்ட
நாயன்மார்கள் தத்துவ சித்திகள் எல்லாம் அக்கதைகள் அல்லது அந்த தத்துவங்கள் இயற்றப்படும்
முன்பே இருந்தது. அதற்கு பின்பும் இருந்தது. எப்போதும் இருக்கும். நாம் இந்த நாயன்மார்களின்
தத்துவங்களை பின்பற்றினால், நாமும் அந்த குறிப்பிட்ட நாயன்மார்களின் பதவியை அடையலாம்.
ஆனால் மேலான தத்துவமான சிவத்தின் ‘தன்மை’யினை அடைதல் இவற்றால் முடியாது. இப்படி தத்துவங்கள்
வழியில் நாம் நடைபயின்றால் மொத்தம் 96 தத்துவங்களை நாம் படிப்படியாக கடந்தாக வேண்டும்.
அப்படிக் கடந்தால்தான் நாம் அந்த சிவத்தின் தன்மையினை அடைய முடியும். அதற்கு நமது ஜீவ
காலம் போதாது. ஆகவே தத்துவ வழி தேவையில்லை என்பது வள்ளலாரது அனுபவ முடிபு. இந்த 96
தத்துவங்களும் தற்போது இவ்வுலகில் வழங்கிவருகின்ற அனைத்து மதங்களிலும் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன.
இதுபோல சைவசமயத்தில் சொல்லுகின்ற சூரிய
வழிபாடு முதல் சண்டேசுவர வழிபாடு வரை யாவும் உண்மையல்ல, தத்துவங்களே. மேலும் சைவ புராணம்,
விஷ்ணு புராணம், சூரபத்மன் யுத்தம், திருவிளையாடல், பாரதம், பாகவதம், கணபதி, சுப்பிரமணியம்,
மற்ற புராணங்கள் எல்லாமே உண்மையான நிகழ்வு கிடையாது. இவைகள் யாவும் மனிதர்களை நல்வழி
படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு மகான்களால் இயற்றப்பட்ட கற்பனைகளே, அல்லது தத்துவங்களே
ஆகும்.
இவற்றின்/தத்துவங்களின்
உண்மை சுத்த சன்மார்க்கத்தில் இன்னும் விரிவாக வருங்காலத்தில் வெளியாகும் என வள்ளற்பெருமான்
அருளியிருக்கின்றார்.
தி.ம.இராமலிங்கம்.
அருமையான பதிவு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_6.html?m=1