Monday, April 11, 2016

புத்தம்



 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த புத்தம்


புத்தர் தமது எண்பது வயது வாக்கில் கி.மு.483-ல் மரணம் அடைந்தவர். புத்தர் நூலேதும் எழுதவில்லை. பெளத்த நூல்கள் எதுவும் அவர் வாழ்நாளில் எழுதப்படவில்லை. எனினும் மிகப் பரந்து விரிந்த அளவில் பழமையான பெளத்த நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதில் மிகப்பழமையான நூல் "பிடகம்" (கூடை) என்பது. இதில் புத்தரின் உரைகள், பொன்மொழிகள், அவர் குறித்த கவிதைகள் மற்றும் கதைகள் ஒழுக்க முறைமைகள் ஆகியவை உள்ளன. இப்படிப்பட்ட பிடகங்கள் மூன்று உள்ளன. அவை திரிபிடகங்கள் என்று அழைக்கப்படும்.

வினயபிடகம், சுத்தபிடகம், அபிதம்ம பிடகம் என்பனவே திரிபிடகங்களாகும். புத்தரின் போதனைகள் ஆர்ய சத்யங்கள் எனப்படும். நான்கு புனித உண்மைகளாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆர்ய சத்யங்கள், பிரதிஷ்ய சமுத்பாதங்கள் எனப்படும். உலக உற்பத்திக் கருத்தோடு தொடர்புடையவை எனக் காட்டப்படுகின்றன. அத்தோடு உலக வாழ்வில் துக்கத்துக்கான பன்னிரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த சங்கிலித் தொடர்ச்சியான காரணங்கள் துவாதச நிதானங்கள் என்றழைக்கப்படுகின்றன. நிர்வாணம் எனப்படும் விடுதலை பற்றியும் பேசப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அநித்யவாதாம் (அநித்யக் கொள்கை), அனாத்மவாதம் (ஆன்ம மறுப்புக் கொள்கை) ஆகிய புரட்சிகரமான கருத்துகளும் இந்நூல்களில் உள்ளன. நான்கு புனித உண்மைகள் (ஆர்ய சத்யங்கள்) வருமாறு, 1. எல்லாமே துக்கமயமானது. 2. துக்கத்திற்குக் காரணம் உண்டு. 3. துக்கத்திற்கு நிவாரணம் உண்டு. 4. நிவாரணத்திற்கு வழி உண்டு. 

"நான் சாந்தி நிலையை அடைந்துவிட்டேன். நிர்வாணத்தை அடைந்துவிட்டேன்". என்று கூறிய புத்தர், "சத்தியத்தின் சாம்ராஜ்யத்தை நிறுவ நான் காசிக்குச் செல்கிறேன். உலகில் சூழ்ந்துள்ள இருளின் நடுவே நித்தியத்துவத்தை நான் பறைசாற்றுவேன்" என்று கூறினார். அதன்படி இந்த ஆர்ய சத்யங்களையே, வாரணாசியில் (காசி) புத்தர் வழங்கிய புகழ்வாய்ந்த பேருரையாக அமைந்தது.

"பிட்சுக்களே! துக்கத்தைப் பற்றிய புனிதமிக்க உண்மை இதுதான். பிறப்பு துக்கமானது. அன்பிலார் தம்முடன் உறவு துக்கமானது. அன்புடையாரிடமிருந்து பிரிவு துக்கமயமானது. விரும்புவதைப் பெற முடியாதது துக்கமானது. சுருக்கிச் சொல்வதானால் ஐந்து வகையான பற்றுக்கள் துக்க மயமானவை."

"பிட்சுக்களே! துக்க காரணத்தைப் பற்றிய புனிதமிக்க உண்மை இதுதான்; வாழ்வதற்கான வேட்கையே அது. அது பிறவிதோறும் தொடர்கிறது. காமமும் ஆசையும் உடன் தொடர்கின்றன. அது இன்பங்களுக்கான ஆசை வாழ்வதற்கான ஆசை. அதிகாரத்திற்கான ஆசை."

"பிட்சுக்களே! துக்க நிவாரணத்திற்கான புனித உண்மை இதுவே. ஆசையை முற்றிலும் ஒழிப்பது. அதைப் போக விடுவது அதிலிருந்து விலகிக்கொள்வது. அதற்கு இடங்கொடாமை ஆகியவையே."

"பிட்சுக்களே! துக்க நிவாரணத்திற்கான வழி இதுவே! நன்னம்பிக்கை, நல்லுறுதி, நல்வாக்கு, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சிந்தனை மற்றும் நற்தியானம் ஆகிய அஷ்டாங்க மார்க்கமே அது."

மார்க்ஸ் கூறுகிறார்..., "சமூக முழுமைக்கும் ஆர்ய சத்தியத்தை முறைபடுத்த முடியாது. எனவே பபஜ்ஜம் மற்றும் உபசம்வாதம் ஆகிய கட்டளைகளைக் கடைபிடியுங்கள். அதாவது சமூகத்தை விட்டு வெளியேறி பிட்சுக்களின் சங்கத்தில் சேருங்கள் என்று மக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்."

அடிப்படையில் இச்சங்கங்களில் தனியுடமை இல்லை. சமத்துவமும் ஜனநாயகமும் அங்கே ஒன்றாய் நிலவின. பழைய இனக்குழுச் சமூகத்தின் எளிமையான ஒழுக்க முறையைப் பாதுகாத்து வளர்க்க இத்தகைய சங்களால்தான் முடியும். புத்தர் உண்மையில் இத்தகைய நிலைக்காகவே வாதாடினார். வர்க்க சமூகத்தின் மடியில், வர்க்க மற்ற சமூகமாக உருவாயிற்று. அதுவே இதயமில்லாத இந்த உலகில் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலையில் ஆன்மாவாகவும் ஆக முடிந்தது. அச்சங்கத்தில் தனியொருவனுக்கே சொந்தம் என்று எதுவுமில்லை, சொந்தமில்லாது என்றும் எதுவுமில்லை.

மகாவீரர்

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த சமணம்



மகாவீரர்

     புத்த பெருமானின் சமகாலத்தவரும் (கி.மு.599-527) சமண மதத்தின் 24-ஆவது மற்றும் இறுதி தீர்த்தங்கரராகவும் விளங்குபவர் மகாவீரர். இவரை சமண சமயப் புத்தங்களில் வர்த்தமானர், வீரா, வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்றும் அழைப்பர். இவரின் தந்தை சித்தார்த்தன், தாய் திரிசாலா என்கிற பிரியாகர்ணி. இவரின் பரம்பரை இஷ்வாகு என்பதாகும். வைசாலி அருகே உள்ள குன்டலகிராமா என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய சின்னம் சிங்கம். இவர் 72 ஆண்டுகள் வாழ்ந்து பீகாரில் உள்ள 'பாவா' என்னுமிடத்தில் காலமானார்.


     அரச குடும்பத்தில் பிறந்து செல்வாக்காக வாழ்ந்தாலும் சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டார். எனினும் யசோதரை என்ற பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டு இல்லறத்திலும் இணைந்தார். ஆனாலும் ஆன்மீக நாட்டம் அவரை அதிகம் இழுக்கவே சமண மதத்தில் ஈடுபாடு கொண்டு தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை விட்டு துறவறம் பூண்டார்.

     அதன் பிறகு 12 ஆண்டுகள் ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டு "சாலா" என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் 'மகாவீரர்' என்று அழைக்கப்பட்டார். தான் உடுத்தியிருந்த துணிகளுக்கு விடுதலை அளித்தார். வெற்று மேனியாக இந்தியா முழுதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு தான் கண்ட உண்மைகளை எடுத்துரைத்தார். அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டு அவரது போதனையை கேட்டு ஏற்றுக்கொண்டனர். அதனால் இந்தியா முழுதும் சமண மதம் தீவிரமாக பரவத்தொடங்கியது. இதனால் சமண குருமார் வரிசையில் இவர் 24-வது தீர்த்தங்கரராக போற்றப்பட்டார்.

ஒவ்வொரு ஆன்மாவும் தங்களது கர்மாவால் இன்பங்களிலும் பொருள் ஈட்டுதலிலும் கவரப்படுகின்றன. இவற்றின் தேடுதலில் அந்த ஆன்மாவிற்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன.

     இவற்றிலிருந்து விடுபட, சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை தேவை என்பதை மகாவீரர் வலியுறுத்துகிறார். இதனை கடைபிடிக்க ஐந்து உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

1. வன்முறை தவிர்த்தல் / அகிம்சை - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது.
2. வாய்மை / சத்தியம் - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்.
3. திருடாமை / அஸ்தேயம் - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக்கொள்ளாது இருத்தல்.
4. பாலுறவு துறவு / பிரமச்சரியம் - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்.
5. உரிமை மறுத்தல் / பற்றற்றிருத்தல் - மக்கள், இடங்கள் மற்றும் பொருளியல் பற்று அற்று இருத்தல்.

     இந்த ஐந்தையும் கடைபிடித்தால்தான் சரியான நம்பிக்கையும், அறிவும், நடத்தையும் வரும் என்கிறார் மகாவீரர். ஆனால் இதனை அனைவராலும் கடைபிடிக்க முடியாது. ஆனால் ஆண் மற்றும் பெண் துறவிகள் கட்டாயம் இதனை கடைபிடிக்க வேண்டும். பிறர் அவர்களால் எவ்வளவு இயலுமோ அந்த அளவிற்கு கடைபிடிக்க வேண்டும் என்பது மகாவீரரின் போதனையாகும்.

     இவர் வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகள உருவாக்கினார். சமுதாயத்தில் கடைநிலையில் இருந்தவர்கள் கூட இதனை பின்பற்றினர். ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்) மற்றும் பொதுமகள் (ஷ்ராவிக்). இதனை சதுர்வித ஜைன சங் என்று அழைக்கலாயினர்.

     19-04-2016 - இன்று அக இனத்தின் மகான் மகாவீரரின் அவதாரத் திருநாள் ஆகும். இன்றைய நாளில் சன்மார்க்க விவேக விருத்தி அவரது திருவடிகளை போற்றுகிறது.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- கிறுஸ்து



பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த கிறுஸ்து

                         ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

ஓ... இறைவா... உனது அருள் பார்வை எங்கே சென்றது? உனது அன்புக் கரங்கள் எங்கே சென்றது? உனது குறைகேட்கும் காது எங்கே சென்றது? இவ்வுலகில் மனிதர்களாக பிறந்த நாங்கள் சுகமாக வாழ முடியாமல் அல்லலில் தவிக்கிறோமே! எங்களை துன்பத்திலிருந்து தூக்கிவிட மறுத்து, உனது கைகள் குறுகிப்போகின்றதா? எங்களது துயர வார்த்தைகளைக் கேட்கமுடியாதபடி உனது காதுகள் மந்தமாகிவிட்டதா?

இறைவனுடன் பேசவே ஆசைப்பட்டேன் பேசினும்               

       குறையொன் றுள்ளதடி - கிளியே
       குரல்கேட்க வில்லையடி.  (ருட்பிரகாசர்-கிளிக்கண்ணிகள்-31)


நான்பேசினும் என் நாயகன் பேசவில்லை
       ஏன்என கேட்பாயடி - கிளியே
       என்நிலை விளக்காயடி.          32

2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

ஜீவகாருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் போன்றவைகளை கடைபிடிக்காமல், இவ்வுலகில் அக்கிரமங்களே மிக அதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் நமக்கும் இறைவனுக்கும் இடையில் நீண்டதொரு பிரிவினை உண்டாகியுள்ளது. நாம் செய்யும் பாவச்செயல்களே, நமது வேண்டுதல்கள் மற்றும் குறைகள் இறைவனின் காதுகளில் விழுந்துவிடாதபடி தடுக்கின்றன.

பேசும்மொழி அறியலையோ பாசமது புரியலையோ
       வீசுகாற்றும் விளக்குமடி - கிளியே
       வன்தமிழ் அறியுமடி.               33
3. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

நாம் உண்பதற்காகவும் விரோதத்தினாலும் பிற உயிர்களை கொலை செய்வதினால்  நமது கைகள் இரத்தத்தாலும் பாவத்தாலும் கறைபடிந்துக் காணப்படுகிறது. பொருளாசையால் நமது உதடுகளும் நாவும் பொய்யே பேசுகின்றன.

வீதியோரக் கடைகளிலே விலங்கினங்கள் ஓலமிட்டு
     நீதிக்கேட்டு கத்துதடி - கிளியே
     நியாயம்கேட்டு மாளுதடி.         35

கொதிக்கின்ற நீரினிலே கோழிதனை மூழ்கடிப்பார்
     கொதிப்பார் இல்லையடி - கிளியே
          கடவுளும் கருதாரடி.             36

4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

மநுநீதிசோழன் ஆண்ட இம்மண்ணில் இன்று, நீதியை தேடவேண்டியுள்ளது. வழக்காடு மன்றங்களில் சத்தியத்திற்கு வேலையில்லை. உலகமாயையில் சிக்கிக்கொண்டு நாமெல்லாம் சுயநலத்திற்காகவும் சாதிமதங்களுக்காகவும் பொய்யே பேசி அதன்மூலம் தீமையையும் நமக்குள் விரோதங்களையும் இவ்வுலகில் பெருமளவில் விதைக்கிறோம்.

பொய்கள் பொலிந்துப் புறத்திருக்க உண்மை
     தொய்ந்திருப்பது ஏனடி - கிளியே
          தலைவனைக் கேளடி.           61

சாகாக் கல்விஅருளிச் சாகாவரம் தரவே
     ஆகாயன் வருவாண்டி - கிளியே
          ஆதாயம் தருவாண்டி.              90