Wednesday, September 18, 2013

வருவார் அழைத்துவாடா

வருவார் அழைத்துவாடா

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

அருள்வார்என் றுலகத்தே புகழும் பல்இறைவரும்
புழுவாய் நெளியக் கண்டேன் அவர்களை

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

எந்தை இடத்தைக்கொண்டு அருட்ஜோதி ஆடக்கண்டு
    இறந்தவரெல் லாரும்விண்டு இனியஅமிழ்தினை உண்டு
சிந்தை கலங்காமலே சாகாமலிருக் கலாம்அங்கே
    சாதியுமதமும் சதியும்விதியுமாய் சகதியில்வீழ்ந்தீரே இங்கே

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

அடுக்கி வைத்தபே ரண்டமுண்டு பக்திசெய்ய
    உலகெலாம் உணர்ந்த உத்தமராம வர்சபையுமுண்டு
தடுக்கி விழுந்தவரெலாம் தானேஎழுகின் றாரென்னால்
    தூய்மைபெற்றார் உண்மையிது தாய்மையிது என்றுசொன்னால்

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

தொல்லியல் வேதங்களும் தொல்லைபல சடங்குகளும்
    தோல்விகண்டு மாளவும் தனித்தஇறை ஓங்கவும்
பல்லியல் கடவுளெல்லாம் பலன்காணும் மார்க்கமிது
    பன்மார்க்கமும் கூடும் பார்சுத்தசன்மார்க்கம் என்றபோது

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி

தலைவனானவன் (வள்ளலார்) இவ்வுலகில் இறைவன் என்று கருதி புகழும் (உண்மையில் இவர்கள் புழுவின் தரத்தில் உண்மை இறையின் பாதத்தில் ஓர் தூசிஎன ஒட்டிக்கொண்டிருப்பதாக கூறுவார், வள்ளலார்) பல மூர்த்திகளிடம் தனது தோழனை (தலைவனின் மனம்) தூதாக அனுப்ப எண்ணினார். தோழனான நான் அழைத்தால் அம்மூர்த்திகள் வருவரோ என்று எண்ணினான். அதனால் அவனை நோக்கி, 'வருவார் அழைத்துவாடா' என்று உரிமையாக சொல்லி, அழைத்து வரப்படும் இடமான 'வடலூர் ஞான சபையின்' உண்மையினையும் சொல்லி அழைப்பதாக இப்பாடல் அமைக்கப்பெற்றது.

'வருவார் அழைத்து வாடி' என்ற திருஅருட்பா பாடலை தழுவி எழுதப்பட்டது.

அன்பர்களே! மேற்கண்டவாறு பல மூர்த்திகளையும் அழைத்த வள்ளலார் உங்களையும் அழைக்கிறார். நாம், இறைவன் என்று வணங்கக்கூடிய மூர்த்திகளெல்லாம் நம்மைப் போன்ற மனித தேகம் என்று எடுப்போம் என்று ஏங்குகின்றனர். எனவே நமக்குக் கிடைத்த இந்த அற்புத மனித தேகத்தை வீணே அழியவொட்டாமல் தடுக்க, மாதப் பூச தரிசனம் காண விரைந்திடுங்கள். வடலூர் ஞானசபை மட்டுமே நமக்கு ஆன்ம இலாபத்தைக் கொடுத்து நம்மை மரணமிலா பெருவாழ்வை அளிக்கும். பெருவாழ்வை அடைய முயன்று பாருங்கள். ஒருவேளை உலகியல்பால் சிக்கிக்கொண்டு இறப்பை அடைந்தாலும், நம்மை வள்ளலார் எழுப்பி அருள்வார், இது திருஅருட்பா அடிகளில் கண்ட சத்தியம்.

மாத பூச நாள்: 29.09.2013 ஞாயிறு. நன்றி.
  

   
   


   
   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.