Thursday, October 10, 2013

தொழுவூர் வேலாயுத முதலியார்


தொழுவூர் வேலாயுத முதலியார்

 
வணக்கம்.

 கடந்த திருஅருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் (05-10-2013) அன்று  யாம் திருவொற்றியூர் சென்றிருந்தேன். யமது முக்கிய நோக்கம், வள்ளலாரின் முதன்மை மாணாக்கர் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களது சமாதி நிலையத்தை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்பதே ஆகும்.

முதலில் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் உள்ளேயும், வெளியேயும் வள்ளலாரின் பிறந்தநாள் வாழ்த்துப் படங்கள், அங்கேயுள்ள சன்மார்க்க சங்கத்தவர்களால் அழகுபட வைக்கப்பட்டிருந்தன. கோயிலின் உள்ளே, அரசிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சிறப்பு அன்னதானமும் சன்மார்க்கச் சங்கத்தவர்களால் சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருந்தது.

 பிறகு, அங்கிருந்து 'பட்டினத்தார்' சமாதி நிலையம் சென்று தரிசித்தோம். திருவொற்றியூர் கடற்கரையோரம் இவரது சமாதி அமைந்துள்ளது. தற்போது அங்கு புதியதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பட்டினத்தாருக்கும் வள்ளலாருக்கும் சமாதி கிடையாது என்று அங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. பட்டினத்தார் அடிக்கடி தன்னை மறைத்து பிறகு வெளிபடுவார். அவர் இறுதியாக தன்னை மறைத்துக்கொண்ட இடத்தைதான் நாம் சென்று பார்க்கும் இடமாக உள்ளது. 'காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது காண்', 'தீபம் இருக்க நெருப்பை தேடுவானேன்' போன்ற தத்துவ வரிகளை அங்கே காணமுடிந்தது.

 



அடுத்து, நாம் 'இராமலிங்கசாமி மடாலயம்' சென்றோம். ஜோதி வழிபாடு முடிந்தது. அங்குள்ள சிறிய மாடத்தில் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அப்படம் தெளிவாக இல்லை. இருப்பினும் அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அங்கிருந்த உள்ளூர்வாசியிடம் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களின் சமாதி எங்குள்ளது? என வினவினோம்.

 


அவ்விடம் அடுத்த தெருவில் ஒரு பள்ளிக்கூடத்தினுள் அமைந்துள்ளது. அதனை தற்போது பார்க்கமுடியாது. நாங்கள் இரவு நேரத்தில் சென்றதால் அதனை பார்க்க முடியவில்லை. பள்ளிக்கூடம் இயங்கும் நேரத்தில் மட்டுமே அங்குச் சென்று  வழிபடமுடியும் என்று கூறினார். தொழுவூராரின் சமாதி நிலையம் எல்லாம் அந்தக்காலத்தில் இடுகாடாக இருந்தது என்றும் அவ்விடம் தற்போது, 'கலைஞர் எம்.எஸ்.முத்துகிருஷ்ணன் தொடக்கப்பள்ளி' என்ற ஒன்று இயங்கி வருவதாகக் கூறினார். பகல் பொழுதில் மாணவர்களும் ஆசிரியர்களும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள் என்றும் கூறினார். பிறகு இராமலிங்கசாமி மடாலயத்தில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள தொழுவூராரின் சமாதி அமைந்துள்ள பள்ளிக்கூடத்தை சென்று வெளியிலிருந்துக்கொண்டே வணங்கிவிட்டு வந்தோம்.

 


வள்ளலார் அவர்களே வலிந்துச் சென்று ஆட்கொண்ட 'இராமலிங்கம்' என்கின்ற கல்பட்டு அய்யா அவர்கள், வள்ளலாருடன் இருந்துக்கொண்டே தவம் இருந்துக்கொண்டு ஜீவகாருணய பணியினை செய்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களது சமாதி நிலையம் வடலூரில் உள்ளது என்பதனை நாம் அறிவோம்.

இதுவரை வள்ளலாருக்கெனத் தனியாக பாசுரங்களை பெருமளவில் இயற்றியவர், வள்ளலாரின் அனுக்கத்தொண்டர் 'காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை ஆவார்கள். இவர் இயற்றிய 'பிரபந்தத் திரட்டு' என்ற நூலில் மொத்தம் 3466 பாடல்களை வள்ளல் அருளால் பாடியருளியிருக்கிறார்கள். இவர் படிப்பறிவு அற்றவர். வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, அவரது அருள்பெற்று பாடிய பாக்களே அன்றி, அவரது முயற்சியால் பாடப்பட்டவை அன்று. இவரது சமாதி நிலையம் காரணப்பட்டில் உள்ளது.

 அதற்கு அடுத்து, தனது படிப்பால் தமது புலமைத் திறத்தால் வள்ளலாரை பாடியவர் நமது வள்ளலாரின் முதன்மை மாணாக்கர், உபய கலாநிதிப் பெரும்புலவர் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' ஆவார்கள். 'உபய கலாநிதி' என்ற பட்டம் வள்ளலார் அவர்களே இவருக்கு வழங்கிய பட்டமாகும். 'திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறையீடு' என்ற இவரது நூலில் மொத்தம் 215 பாடல்கள் மூலம் வள்ளலாரை பாடியுள்ளார்.

தொழுவூர் வேலாயுத முதலியார் கி.பி 1832 ல் (நந்தன, ஆவணி 9) செங்கற்பட்டு மாவட்டம், திருவள்ளூர் கூற்றம், ஈக்காட்டுக் கோட்டம், சிறுகடல் என்னும் சிற்றூரில் தோன்றியவர்.

 தந்தையார் தொழுவூர் செங்கல்வராய முதலியார், தாயார் ஏலவார் குழலி ஆவார்கள், (தொழுவூர் அஞ்சல் நிலையம் பக்கம் அமைந்ததே சிறுகடல்).

தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மாகராஷ்டிரம், இந்துஸ்தானி ஆகிய பல மொழிகளில் புலமை பெற்றவர்.

 இவரின் மனைவியார் ஸ்ரீ சீரங்கம்மாள், மகன் திரு நாகேச்சுரன், மகள் சிவகாமி அம்மை,

1849 இல் இவர் தந்தையாரின் நண்பரான காளவாய் குப்பண்ண முதலியார் என்பவரால் வள்ளற் பெருமானிடம் சேர்ப்பிக்கபட்டார்,
பெருமானும் 'புதியவனல்லன்; நம்பிள்ளை நமக்கே கிடைத்தான்' என இவரை ஏற்றுக்கொண்டார்கள்.

பின்பு பலகாலம் பெருமானோடு வடலூரிலும், மேட்டுக்குப்பத்திலும் குடும்பத்தோடு தங்கி இருந்து தொண்டு செய்தார், பெருமானாரின் அருள் உபதேசங்களை பெற்றவர்,
நமது பெருமானாரின் தலைமை மாணவர் என்னும் உயரிய தகுதியினை பெற்றவர்,

நமது பெருமானாரின் கட்டளைக்கு ஏற்ப முதன் முதலாக திருக்குறள் வகுப்பை நடத்தியவரும் இவரே,
இறுக்கம் இரத்தினம் முதலியார் போன்றோரது முயற்சியால் பெருமானின் பாடல்கள் முதல் நான்கு திருமுறைகளாக 1867 இல் அச்சிடப்பட்ட போது, அப்பாடல்களுக்குத் "திருஅருட்பா" என்றும், அதன் பகுதிகளுக்குத் திருமுறை என்றும், இராமலிங்க அடிகள் என்னும் பெயருக்கு சிறப்பு பெயராக "திருஅருட்பிரகாச வள்ளலார்" என்றும் பெயரிட்ட பெருமை தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களையே சாரும்,

அவர் பாடிய திருஅருட்பா வரலாறு என்னும் நூலில் இவற்றை பற்றி விளக்கமாக அறியலாம்.
தொழுவூரார் பாடிய பல பக்தி பாடல்களை வள்ளற் பெருமானார் கண்ணுற்றருளி, 'நமது முதலியாரப்பா மதுர வாக்கிது', 'வித்துவான் பாட்டிது', 'அமுதப் பாட்டிது' எனப் பாராட்டி 'உபய கலாநிதி' எனப் பட்டமும் தந்தருளினார், பெருமானால் பட்டம் சூட்டப்பட்ட பெருமைக்கு உரியவர் இவர்.

பெருமான் சித்தி பெற்ற பிறகு பிரம்ம ஞான சபையின் அன்பர்களுக்கு, பெருமானைப்பற்றி வாக்கு மூலம் தந்தார்,
திருஅருட்பா ஐந்தாம் திருமுறையை 1880 இல் வெளியிட்டு சன்மார்க்க பெரும்பணி செய்தவரும் இவரே.

சென்னை 'பிரசிடென்சி' கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்,
முதல் மனைவியும் மகளும் இறந்து போய் விட்டதால் ஸ்ரீ சுவர்ணம்மாள் என்பவரைத் திருமணம் செய்து செய்து கொண்டார், இவர்களுக்கு மகன் செங்கல்வராயர்,

1889 இல் (சர்வதாரி, மாசி 12) இவர் திருவடிப்பேறு எய்தினார், திருஒற்றியூரில் வேலாயுத நகர், ஈசானமூர்த்தி தெரு, முத்து கிருஷ்ண தொடக்கப்பள்ளி வளாகத்தினுள் சமாதி உள்ளது.
இவர் பல உரை நடை நூல்களையும் விநாயகர், முருகர், சிவன், அம்பிகை, திருஞானசம்பந்தர், மயிலம் சிவஞான பாலையர் ஆகியோரின் மீதும் பல செய்யுள் நூல்களை செய்துள்ளார்.

திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை (முறையீடு) என்னும் நூலினை பாடி வள்ளல் பெருமானாரை போற்றியுள்ளார்,
அந்நூலின் பகுதிகள் இவை

1. சற்குரு துதிகள் (4 பாடல்கள்)

2. திருப்பள்ளி எழுச்சி (12 பாடல்கள்.

3. நாம சங்கீர்த்தனம் (11 பாடல்கள்)

4. சரண மஞ்சரி (24 பாடல்கள்)

5. அருணாம மந்திராமிர்தம் (10 பாடல்கள்)

6. திவ்விய நாமாமிர்தம் (10 பாடல்கள்)

7. போற்றி சங்கீர்த்தனம் (10 பாடல்கள்)

8. முறையீட்டு விண்ணப்பம் (11 பாடல்கள்)

9. குறையிரந்த விண்ணப்பம் (11 பாடல்கள்)

10. அற்பித்த விண்ணப்பம் (10 பாடல்கள்)

11. திருக்கழற் சந்நிதி விண்ணப்பம் (3 பாடல்கள்)

12. மங்கள வாழ்த்து (5 பாடல்கள்)

13. வாழ்த்து திருவிருத்தம் (1 பாடல்)

14. அலங்காரம் (90 பாடல்கள்)
என 215 பாடல்கள் அமைந்துள்ளன, இது 1912 ஆம் ஆண்டு சனவரி மாதம் அவரது பிள்ளைகளால் தனி நூலாக வெளியிடப்பட்டது.

(Reference: கடலூர்
புலவர் ஞானப்பிரகாசம் அவர்கள்)

சதபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் ஆனால் அது நூரு பொருளை தரும், அதுபோல

தசபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் அது பத்து பொருளை தரும், தசபங்கியை இங்கு

வெளியிட்டுள்ளோம் சத பங்கி கிடைக்க வில்லை.

சத பங்கிக்கு உரை காணும் பொருட்டு சில தமிழ்ச் சான்றோர்களை அணுகினோம்,
ஆனால் இது மிகவும் இலக்கண கடினம் உடையதாக அவர்கள் தெரிவித்தார்கள்,
தமிழக இலக்கிய வரலாற்றில் இப்படி ஒரு நூல் செய்யப்பட்டது இல்லை என்றும்,
வள்ளல் பெருமானாரின் மீது கொண்ட பற்றே தொழுவூர் - வேலாயுத முதலியாரை இவ்வாறு பெருமானார் மீது மிக உயர்ந்த இலக்கியங்களை செய்ய தூண்டியது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதன் உரை விரைவில் வெளிப்பட பெருமானார் அருள் புரிவாராக!

 தசபங்கி

கட்டளைக் கலிப்பா

1 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த் தோன்

       விரைந்த செய்கை மேனந்திய

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணி வண்ணம்

      புரைந்தம் மேனிவானம் பெறு

புண்ணதாக் கன்னோய் விளைத்தக் கோன்மன்ன

      பொன்னைப் புரிந்து நேரா மானம்வடல்

நண்ணியே யாய்வதென்னா நானென்ன செய்வன்

      பரிந்தேவாழி வாநம் பியே.

வஞ்சித் துறைகள்

2 வெண்ணிலாவே எண்ணமேதோ புண்ணதாக்க நண்ணினாயே

3 தீயைவீசும் பாயிளங்கா னேய்விளைத்த ஆய்வதென்னாம்

4 மீனம்முயர்த்தோன் றானண்ணிவண்ணம் கோன்மன்னபொன்னை

நானென்னசெய்வன்

5 விரைந்தசெய்கை புரைந்தம்மேனி புரிந்துநேரா பரிந்தேவாழி.

6 மேனந்தி வானம்பெறு மானம்வடல் வாநம்பியே.

வஞ்சி விருத்தம்

7 வெண்ணிலாவே தீயைவீசும் எண்ணமேதோ பாயிளங்கால்

புண்ணதாக்கன் னோய்விளைத்த நண்ணினாயே யாய்வதென்னே.

நேரிசை வெண்பா

8 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம் முயர்த்தோன்
எண்ணமேதோ பாயிளங்காறா - னண்ணிவண்ணம்

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னை

நண்ணினாயே யாய்வதென் னாம்.


வஞ்சி விருத்தம்

9 விரைந்த செய்கைமே னந்திய புரைந்தமேனி வானம்பெறு

புரிந்துநேரா மானம்வடல் பரிந்தேவாழி வாநம்பியே.
கட்டளைக் கலித்துறை

10 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த்தோன் விரைந்த

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணிவண்ணம் புரைந்த

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னைப்புரிந்து

நண்ணினாயே யாய்வதென்னா நானென்ன செய்வன் பரிந்தே.

                                                                           - தொழுவூர் - வேலாயுத முதலியார்.

(Reference: www.vallalarspace.com)

ன்பர்களே, வள்ளலாருடன் மாணக்கர்களாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் மூன்று அருளாளர்கள் எனலாம். அவர்களில் இரண்டு அருளாளர்களுக்கு தனியாக வழிபாட்டு இடமாக, அவர்களது சமாதி கொண்ட இடம் விளங்கிவருகின்றது. அங்கு அனையாதீபமும் விளங்கிவருகின்றது. ஆனால் வள்ளலாரின் முதன்மை மாணாக்கர் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களின் சமாதி இடம் ஒரு பள்ளியின் கட்டுப்பாட்டில் அமைந்திருப்பது, சுத்த சன்மார்க்கிகள் மத்தியில் மிகவும் வருத்தத்தை கொடுத்து வருகின்றது. அவ்விடம் வெகுவிரைவில், பள்ளியின் கட்டுப்பாட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு வரவேண்டும். அங்கும் ஓர் அனையாதீபம் ஒளிரவேண்டும் என்பதே யமது வேண்டுகோளாகும். திருவருள் சம்மதம் விரைவில் கிடைக்கும் என நம்பி இக்கட்டுரையினை முடிக்கிறேன். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி

   

 

 

 

 

 

      

5 comments:

  1. திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை நூல் கிடைக்குமா?

    ReplyDelete
  2. ஐயா, தற்போதி இந்நூல் கிடைக்கவில்லை. ஆனால் வள்லலாரின் மற்றொரு அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் இயற்றிய "பிரபந்தத்திரட்டு" என்னும் நூல் வடலூரில் கிடைக்கின்றது.

    ReplyDelete
  3. மிக மிக அருமையான, அவசியமான பதிவு

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  4. சுத்த சன்மார்க்கம் அனைவரின் கோரிக்கையை ஏற்று மாறுதல் ஏற்படுத்தும் இது நடந்தேறும் காலம் அருகாமையில் வந்து விட்டது

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.