வள்ளலார் கண்ட திருஅண்ணாமலை ஜோதி தரிசனம்
அன்பர்களே! இன்று மாலை (17.11.2013) திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் ஆதிமலையின் மீது ஜோதி தரிசனம் காண இருக்கிறோம். இந்த ஜோதியினை வெறுமனே புறத்தில் நடக்கும் நாடகக் காட்சியாக நாம் காண்பதைவிட இதன் தத்துவம் என்ன? என்பதனை வள்ளலார் வழியில் சுருங்கக் காண்போம்.
புராணக்கதைகளில், பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடியையும் முடியையும் காணாது திகைக்கின்ற போது இறைவன் ஜோதி சொருபமாய் எழுந்தருளிய இடமே தற்போது ஆதிமலையாக உள்ளதாக கூறுகிறார்கள்.
இதனையே வள்ளலார் "மால்யன் தேடும் மருந்து" என்று இந்த திருவண்ணாமலையினைப் பற்றி குறிப்பிடுகின்றார். மால் என்றால் விஷ்ணு, அயன் என்றால் பிரம்மா, இவர்களில் விஷ்ணு அடியையும், பிரம்மா முடியையும் கண்டுபிடிக்க புறப்பட்டனர். திருவண்ணாமலை என்னும் இறைவனின் அடியையும் முடியையும் தேடுவதாகக் கதை அமைந்துள்ளது. இன்னும் இருவரும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று கூறுகிறார் வள்ளலார்.
இதன் உண்மை என்னவென்றால், மனதாலும் நான் என்கின்ற அகங்காரத்தாலும் இறைவனைக் காணமுடியாது. எப்போது காணமுடியும் என்றால், நான் என்கின்ற அகங்காரம் மனத்தில் அடங்கி, மனம் ஜீவனில் அடங்கும் போது இறைவன் வெளியாவான். இரண்டறக்கலப்பது என்பது அப்போதுதான் நடைபெறும். ஜீவனிலிருந்து எழுந்து மனமும், மனதிலிருந்து எழுந்த அகங்காரமும் அந்த தாய்வீடான ஜீவனிடத்தில் ஒடுங்குவதற்கு நாம் கற்கவேண்டியது "சாகாக் கல்வி" ஆகும். இந்த சாகாக்கல்வியினை கற்றவனுக்கு இறைவனான ஜோதி சொருபம் தெரியும். அவனே அடிமுடியினை கண்டவனாகிறான், என்ற தத்துவத்தை புறத்தே செய்துகாட்டுவதுதான் திருவண்ணாமலை ஜோதி தரிசனம் ஆகும்.
மாலும் அயனும் இன்னும் தேடிக்கொண்டிருக்கும் இறைவனின் அடிமுடியினை தாம் கண்டுவிட்டதாக வள்ளலார் கூறுவதை பாருங்கள்,
"படிமுடி கடந்தனை பாரிது பாரென அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி" என்று இறைவனே, 'பார் என்னை முழுதும் பார்' என்று தன்னை வெளிப்படுத்தியதாக, வள்ளலார் முழங்குகிறார். எப்படி கண்டார்? புறத்திலா? இல்லை. தனது அகத்தில் கண்டார். நான் என்ற அசுரனும், மனம் என்னும் குரங்கும் ஜீவன் என்னும் ஆலயத்தில் ஒடுங்கும் போது காணக்கூடியதே ஜோதி தரிசனம்.
உலகியர் உள்ளத்தில் ஜோதி விளங்கிட எமது திருவண்ணாமலை ஜோதி தரிசன வாழ்த்துகள்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.