Friday, November 8, 2013

வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம்

வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம்



பேரன்புடையீர்! வணக்கம்!

நமது தமிழ் மொழியில் பாடப்படும் பாவகைகளில் "மாலைமாற்று" என்ற ஒரு நடை உண்டு. இது சித்திரக்கவியில் ஒருவகை எனப்படுகிறது. மாலைமாற்று என்பது எந்த திசையில் இருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.

ஜப மாலையை முன்னிருந்து பின்னும், பின்னிருந்து முன்னுமாக உருட்டும் முறையினை இப்பாவகை அமைந்திருப்பதால் இதனை மாலைமாற்று என்று தமிழில் கூறுகிறோம்.

'அணியிலக்கணம்' என்னும் ஐந்திலக்கண நூல்பிரிவில் இதைப்பற்றிய விளக்கத்தைக் காணலாம். தமிழில் நான்குவகைக் கவிகள் உள்ளன.

1. ஆசுகவி

2. மதுரகவி

3. சித்திரக்கவி

4. வித்தாரக்கவி

இவற்றுள் சித்திரக்கவி வகையில் மாலைமாற்றுக் கவிகள் அடங்கும்.

மாலைமாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட பழைய மாலைமாற்றானது கி.மு.79ஐச் சேர்ந்த இலத்தீன் சொல்லான Sator Arepo Tent Opera Rotas என்பதாகும்.
 
               
தமிழ் மொழியில்

விகடகவி,
திகதி,
குடகு,
தேருவருதே,
தேளு மீளுதே
போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும்.

 ஆங்கில மொழியில்

Civic,
Radar,
Level,
Madam,
Malayalam,
Pop,
Noon,
Refer,
Anna,
Hannah,
Ada,
Bob,
Eve,
Rotor,
Minim,
Mahamaham,
Tamat,
Tattarrattat,
Was it a cat I saw?,
Do gees see God?
A Toyota's a toyota,
A nut for a jar of tuna,
Madam - I am adam,
Ablewasiereisawelba - (எல்பாவைப் பார்க்கும் வரைக்கும் நான் வல்லமையுடையவனாக இருந்தேன் - எல்பா என்பது ஒரு தீவின் பெயர். இதனை நெப்போலியன் கூறிய வாசகம் என்பர்)

போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும்.

பொதுவாக மாலைமாற்றுத்தொடர்களில் வரும் இடைவெளிகள், நிறுத்தக்குறிகள், பேரெழுத்து, சிற்றெழுத்து வேறுபாடு போன்றவை கவனிக்கப்படுவதில்லை.

தமிழில் நமக்குத் தெரிந்த வரையில் இதுவரை மூன்று புலவர்கள் மட்டுமே இவ்வகை மாலைமாற்று நடையில் பாவினை இயற்றியுள்ளனர்.

1. திருஞானசம்பந்தர் இயற்றிய திருமுறைகள்.

2. மாதவச்சிவஞான யோகிகள் இயற்றிய காஞ்சிபுராணம்.

3. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருநாகைக் காரோணப் புராணம்

ஆகிய தமிழ் இலக்கியங்களில் மாலைமாற்றுப்பாக்கள் உள்ளன.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலைமாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.

கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று,

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாக

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாய

·         இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.

·         பாடலின் பொருள்

·         யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா

·         நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா

·         யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே

·         காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று

·         காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று

·         காழீயா-சீர்காழியானே

·         மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ

·         மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவன

இப்படிப் பத்துப் பாடல்கள் உள்ளன. இப்போது ஒரு எளிய பாடலையும் காணலாம்,

தேரு வருதே மோரு வருமோ

மோரு வருமோ தேரு வருதே

·         இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும்                 

·         பாடலின் பொருள்

·         வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.


இவ்வகையில் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் - சிதம்பரம் இராமலிங்கம் அவர்களை நாயகனாக / இறைவனாக போற்றி பாடப்பட்ட 10 மாலைமாற்று பாடல்கள் எம்மை கருவியாக வைத்து திருவருள் சம்மதத்தால் இயற்றப்பட்டன. இப்பாடலில் உள்ள நிறைகளையும் குறைகளையும் இறைஅன்பு என்றும் பொருட்படுத்தாது, வாழ்த்துகளையே வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இங்கு வெளியிடுகின்றேன்.


வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம்
 

திருஅருமரு தூராகாரா வாடாகரு ணாசாகா
காசாணாரு கடாவாரா காராதூரு மருஅருதி     (1)

 தாபாதா தாமருத ராலூடவ மேதவமே
மேதவமே வடலூரா தருமதா தாபாதா                (2)

 யாரிது காளாவ டுகூகையோ கியோ
யோகி யோகைகூடு வளாகா துரியா                     (3)

 யாகாஆகாங் லிமராயா காயமாமாய
யமாமாய காசயாரா மலிங்கா ஆகாயா              (4)

 யாபாசனஞானா மதாதீதா ஓதாநாதா சாதாகாசா
சாகாதாசா தாநாதாஓதா தீதாமனா ஞானசபாயா (5)

யாதிஜோதியா ராவாராக சீவசாதீயா மசனாபோ
போனாசமயாதீசா வசீகரா வாராயாதி ஜோதியா (6)

 யாசாயாமா சாபூதைவாதே காமலாலீ காமுறுஆ
ஆறுமுகா லீலாமகா தேவாதைபூசா மாயாசாயா (7)

காலபாதீ சோகாடபாப தீதாஈராநீ யாடிமுடிய
யடிமுடியா நீராஈதா தீபபாடகா சோதீபாலகா     (8)

 ராகாவியா விகாடாமடு கூவிலக திருகு
குருதிகலவி கூடுமடா காவியா விகாரா                (9)

 யகழ்வா களையா கருணீகா சமரசா
சாரமச காணீருக யாளைக வாழ்கய                   (10)

 
இனி இப்பாடல்களுக்காண பொருளை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஒரு பாடலுக்கு இதுதான் பொருள் என்று சரியாக கூறிவிடயியலாது. யாம் நினைத்த பொருள் ஒன்றாகவும் மற்ற அருளாளர்கள் அதே பாடலை படிக்கும்போது அதற்கு வேறு ஒரு பொருளையும் தாங்கி நின்று அணிவகுப்பதுதான் நமது தமிழ் பாடல்கள். எனவே இங்கு எமது பொருள் என்பது இறுதியானது என்று கூறமுடியாது.

 'நீடுவாழ்வார்' என்ற திருவள்ளுவரின் சொற்களுக்கும், 'உலகெலாம்' என்ற சேக்கிழாரின் சொற்களுக்கும் சரியான பொருளைக் கூற, இறைவன் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நமது வள்ளலாரை அனுப்பியது போன்று மிகவும் சிறப்புடையது நமது தமிழ் மொழி.

 திருஅருமரு தூராகாரா வாடாகரு ணாசாகா
காசாணாரு கடாவாரா காராதூரு மருஅருதி (1)

 திருஅரு - திரு அருள்
மருதூரா - மருதூரில் பிறந்தவரே
காரா - கருமேகம் போன்று அருளை பொழிபவரே
வாடா - வாடாத, என்றும் தன்நிலை மாறாத
கருணா - கருணையுடையவரே
சாகா - சாகா வரம் பெற்றவரே
காசா - தலைவரே
ணாரு - நாணுதல் / தன்நிலை உணர்ந்து தாழ்ந்து
கடா - வினா / சந்தேகம்
வாரா - வராமல் / இல்லாமல்
காரா - கருமை / இருள்நிலையினை
தூரு - சேறு / உலகியல் என்னும் புழுதி
மரு - வாசனை / பிறவிதோறும் வருகின்ற வினை
அருதி - முழுமையானவர்.

முழுமை பொருள்:

திருவருளால் மருதூரில் பிறந்தவரே, மேகம் போன்று அருளை பொழிபவரே, என்றும் தன் நிலைமாறாத கருணையுடையவரே, சாகா வரம் பெற்றவரே, எங்கள் தலைவரே, தன் நிலை உணர்ந்து தன்னை தாழ்த்தி, வினா வரும்படி இல்லாமல் தன்னுடைய இருள் நிலையினை, உலகியல் என்னும் புழுதியினை, பிறவிதோறும் வருகின்ற வாசனா மலத்தை அற்று அருதியானவரே / முழுமையானவரே / நித்தியமானவரே.

தாபாதா தாமருத ராலூடவ மேதவமே
மேதவமே வடலூரா தருமதா தாபாதா (2)

தா - தாருங்கள்
பாதா - பாதமாக நம்மை தாங்கும் இறைவா
தா - தாருங்கள்
மருத - வயல் சார்ந்த நிலம்
ஆலூ - வில்வ மரம்
தவமே - யோகமே
தவமே - யோகப் பயனே
மேதவமே - மேலான தவமே
வடலூரா - வடலூர் தலைவா
தரும - தருமசாலை
தாதா - உரியவனே
பா - பாடல்
தா - தாருங்கள்.                             

முழுமை பொருள்:

தாருங்கள் இறைவா! தாருங்கள், வயல் சார்ந்த நிலத்தில் வில்வமரமாய், யோகமாக அந்த யோகப் பயனாக மேலான தவத்தால் எங்களுக்குக் கிடைத்த வடலூர்வாழ் வள்ளலே, தருமச்சாலைக்கு உரியவனே, உம்மைப் புகழ்ந்துப்பாட தமிழ்ப் பாடலைத் தாருங்கள்.

யாரிது காளாவ டுகூகையோ கியோ
யோகி யோகைகூடு வளாகா துரியா (3)

யாரிது - யார் இவர்?
காளா - காளாஞ்சி - வெற்றிலை துப்பும் களம்
வடு - தழும்பு
கூகை - ஆந்தை
யோகியோ - முனிவனோ?
யோகி - தியானித்து
யோகை - புணர்தல்
கூடு - கூடுதல்
வளாகா - இடமானவனே
துரியா - சுத்தமானவனே

முழுமை பொருள்:

இவர் யாரோ? வெற்றிலை துப்பும் இடமான, அசிங்கமான தழும்பாக உள்ள இடத்தில், இரவு நேரத்தில் உணவுத் தேடும் ஆந்தைப்போன்று, இரவு நேரத்தில் அவ்விடத்தில் யோகம் செய்கின்ற முனிவரோ? தியானத்தால் இறைவனை புணர்ந்து கூடுகின்ற இடமாக மாற்றிய, சித்தி கூடுகின்ற இடமாக்கிய சித்திவளாக வள்ளலே, சுத்தனே.

யாகாஆகாங் லிமராயா காயமாமாய
யமாமாய காசயாரா மலிங்கா ஆகாயா (4)

யாகா - யாராக இருப்பினும்
ஆகாங் - ஆகாத
லிமராயா - எமராயா - எமன் சூழம்
காயமாமாய - புண் என்னும் பெரிய மரணம் மரணிக்க
யமா - எமன்
மாய - மரணிக்க
காசயா - பொன்மேனியனே
ராமலிங்கா - இராமலிங்கம் என்னும் திருப்பெயருடையோனே
ஆகாயா - ஆகாயமானவனே - விண்வெளிக்கு வயதோ சாவோ கிடையாது, தடைகளோ, முடிவோ கிடையாது - எனவே ஆகாயம் போன்ற சித்தனே.

முழுமை பொருள்:
எவ்வுயிராகினும் அவற்றிக்கு ஆகாதது எமனின் சுற்றம், எமனின் சுற்றம் நமக்கு மரணம் என்னும் மிகப்பெரிய ஆறாத புண்ணை தந்தாலும் அதனையும் ஆற்றியவனே, அந்தப்புண் வரக் காரணமான நோய்கிருமியான அந்த எமனையும் அழித்தவனே, எமனை அழித்ததின் மூலம் தமது காயத்தையே பொன்மேனியாக மாற்றியவனே, இராமலிங்கம் என்னும் திருப்பெயருடையோனே, வயதோ சாவோ தடைகளோ முடிவோ அற்ற, எல்லாவற்றையும் தன்னுள் கொண்டுள்ள அந்த ஆகாயம் போன்றவனே.

யாபாசனஞானா மதாதீதா ஓதாநாதா சாதாகாசா
சாகாதாசா தாநாதாஓதா தீதாமனா ஞானசபாயா (5)

யா - மரம்
பாசன - வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சுதல்
ஞானா - அறிவுடையோனே
மதாதீதா - மதங்களைக் கடந்தவனே
ஓதாநாதா - ஓதாமல் அனைத்தையும் அறிந்த ஞானியே
சாதா - பொதுவான
காசா - தலைவனே
சாகாதாசா - இறப்பொழித்த சுத்தசன்மார்க்க அடிகளாரே
தா - குறையின்றி
நா - நாவினால் உனைப்பாடும் வல்லமையினை
தா - கொடுங்கள்
ஒதாதீதா - உலகியல் படிப்பை வெறுத்தவனே
மனா - மனமானவனே
ஞானசபாயா - ஞானசபை ஜோதியே

முழுமை பொருள்:
மரம் தழைக்க நீர் பாய்ச்சுவதைப்போன்று நாங்கள் நீடுதழைக்க அறிவை பாய்ச்சுபவனே, மதங்களையும் அதன் பொய்கருத்துகளையும் கடந்தவனே, கற்காமலேயே அனைத்து அறங்களையும் அறிந்த ஞானியே, உலகியர் அனைவருக்கும் பொதுவான தலைவனே, இறப்பை ஒழித்த சுத்தசன்மார்க்க அடிகளாரே, எங்களுக்கு குறைவின்றி உன்னை நாவினால் பாடும் வல்லமையினை கொடுங்கள், உலகியல் படிப்பை வெறுத்தவனே, எங்கள் மனதில் ஒன்றியவனே, ஞானசபையில் ஒளிர்ந்து அருளும் அருட்பெருஞ்ஜோதியனே.

யாதிஜோதியா ராவாராக சீவசாதீயா மசனாபோ
போனாசமயாதீசா வசீகரா வாராயாதி ஜோதியா (6)

யாதி - ஆதி - தொடக்கம்
ஜோதியா - அருட்பெருஞ்ஜோதியனே
ராவா - இராவணன்
ராக - இராகம்
சீவ - உயிர்
சாதீயா - இனமானவனே
மசனா - மசனம் - மயக்கம்
போ - செல்
போனா - சென்றான்
சமயா - சமய வழியில் செல்லாமல்
தீசா - ஈசா - தலைவா
வசீகரா - ஆட்கொள்பவனே
வாரா - வாராய்
யாதி - ஆதி - சூரியன்
ஜோதியா - ஒளிர்பவனே.

முழுமை பொருள்:

எங்களது ஆத்மாவின் உருவாக்கத்தன்றே எங்களுல் அருட்பெருஞ்ஜோதியாக அமர்ந்தவனே, இராவணனின் இராகத்தில் மயங்கிய அவனது எதிரிபோன்று அல்லாமல் ஜீவசாதியாக அதாவது சீவாத்மவாக இருக்கும் எங்களுக்கு, எங்கள மயக்கிக்கொண்டிருக்கும் இந்த உலகமாயை என்னும் மயக்கத்தை போகச்செய்வாயாக, அவ்வாறு சென்ற, சமயச் சிக்கலை விடுத்த எங்களது தலைவா வள்ளலே, எங்களையெல்லாம் வசியப்படுத்தும் / ஆட்படுத்தும் ஆற்றலைக்கொண்டுள்ளவனே, சூரியன் போன்று ஒளிர்பவனே வாருங்கள்.

யாசாயாமா சாபூதைவாதே காமலாலீ காமுறுஆ
ஆறுமுகா லீலாமகா தேவாதைபூசா மாயாசாயா (7)

யாசா - ஆசாரம்
யாமா - கிரியைபூசை செய்தல்
சா - மாய்த்தல்
பூதை - அம்பு
வாதே - வாதாடுதல்
காமலாலீ - ஆசையின் தாலாட்டு
காமுறுஆ - காமுறா - ஆசையில்லா
ஆறுமுகா - ஆறுமுக நாவலர்
லீலா - விளையாட்டு
மகாதேவா - யாவருக்கும் இறைவனே
தைபூசா - தை மாதம் பூசநட்சத்திரத்தில் மறைந்தவனே
மாயாசாயா - மாயமாய் இருப்பவனே நிழலாய் தொடர்பவனே

முழுமை பொருள்:
சமயாசாரம், மதாசாரம் போன்ற ஆச்சாரங்களையும் பூசை முறைகளையும் மாய்த்தவனே, அம்பு போன்ற தனது வாதாடும் திறமையால், வாதாடும் ஆசையின்றி தாலாட்டுப் பாடுவதைப்போன்று தனது பாட்டால் ஆறுமுக நாவலரின் எதிர்ப்பை விளையாட்டாய் வென்றவனே, யாவருக்கும் இறைவனாக இருப்பவனே, தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று எங்கள் பார்வையிலிருந்து மறைந்து மாயமாய் இருப்பவனே, எங்களை நிழலாய் தொடர்பவனே.

காலபாதீ சோகாடபாப தீதாஈராநீ யாடிமுடிய
யடிமுடியா நீராஈதா தீபபாடகா சோதீபாலகா (8)

காலபாதீ - காலத்தில் இரண்டிலொரு பகுதியாக
சோ - அரண்
காட - ஆட
பாபதீதா - பாவத்தை தீர்த்தவா
ஈரா - மழைக்கு உரிய குணவா
நீ - நீ
யாடிமுடிய - ஆடிமுடிய
யடிமுடியா - அடிமுடியுமாய்
நீரா - நீரினை
ஈதா - ஈந்த
தீப - தீப ஜோதி
பாடகா - பாடியவன்
சோதிபாலகா - சிறுவயதிலேயே ஜோதியினை கண்டவன்

முழுமை பொருள்:
காலத்தை இருபகுதியாக பிரித்து அதில் ஒரு பாதியினை தனதாக்கிக்கொண்டு, காலம் உள்ளவரை அதனுடன் சேர்ந்து தானும் இருக்கும் வகை செய்துக்கொண்ட "காலபாதீ" யானவனே, மதம், இனம், சாதி போன்ற மதில்சுவர்களையெல்லாம் ஆட வைத்து விழவைத்து அப்பாவங்களையெல்லாம் தீர்த்தவனே, மழைக்கு உரிய குணத்தை தான் பெற்று அருள்மாரி பொழிபவனே, அப்படிப்பட்ட நீ இவ்வுலகில் ஆடிமுடியும் போது அடிமுடியுமாய் முழுப்பொருளாய் ஆனவனே, தண்ணீரை ஈந்து தீபஒளியேற்றி பாடல் பாடியவனே, இளம் பிள்ளை பருவத்திலேயே, ஓரிறைகொள்கையுடன் அருட்பெருஞ்ஜோதியினை கண்டவனே.

ராகாவியா விகாடாமடு கூவிலக திருகு
குருதிகலவி கூடுமடா காவியா விகாரா (9)

ராகா - இராகம்
வியா - வியாசன்
விகடா - செருக்குள்ளவன்
மடு - குளம்
கூ - உலகம்
விலக - அகல
திருகு - குற்றம்
குருதி - ரத்தம்
கலவி - புணர்ச்சி
கூடுமடா - செயல்கூடுமடா
காவியா - திருஅருட்பா காவியம் படைத்த
விகாரா - ஆலயமே

முழுமை பொருள்:
இராகத்தைப்போன்ற நம்மை மயக்குகின்ற வேதத்தை எழுதிய செருக்குள்ள வியாசன் குளத்து நீருக்கு ஒப்பாவான். உலகத்திலிருந்து அக்குற்றமான வேதம் அகல, இறை இரத்தத்துடன் புணர்ந்து எல்லாம் செயல்கூடுமளவில் திருஅருட்பா காவியம் / சுத்தசன்மார்க்க வேதம் படைத்த எங்கள் ஆலயமே.

யகழ்வா களையா கருணீகா சமரசா
சாரமச காணீருக யாளைக வாழ்கய (10)

யகழ்வா - அகழ்வா - அடியோடு
களையா - பிடுங்கி எறிதல்
கருணீகா - கருணையை ஈகின்றவனே
சமரசா - நடுநிலையாளனே
சாரமச - சாரம் அச - ஆசாரங்கள் அனைத்தும் அசைந்து விழுவதை
காணீ - காணீர் - வியப்புக்குறிப்பு
ருக - அருக - தகுதியுடைய
யாளைக - ஆளைக - கொல்லாமை
வாழ்க - வாழ்க
ய - 'தமிழ்' எனபதின் குறியீடு

முழுமை பொருள்:
உள்ளத்தில் உள்ள மாயையினை ஆழ்ந்து பிடுங்கி எறிந்து பிறகு கருணையினை வழங்குபவனே, உலகியர்களுக்கு நடுநிலை வகிப்பவனே, சாரம் என தாங்கி நின்றுக்கொண்டிருந்த உளுத்த ஆசாரங்கள் எல்லாம் சாய்ந்து விழ ஆச்சரியத்துடன் காணுங்கள், எங்களையும் அகஇனத்திற்கு தகுதியுடையனவாய் ஆக்கிக்கொள்ள கொல்லாமையினை ஏற்கச்சொன்ன எம்தலைவனே நீ வாழ்க... என்றென்றும் தமிழ் உள்ளவரை நீ வாழ்க...

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

2 comments:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.