Sunday, October 13, 2013

ஈத் அல்-அதா / ப‌க்‌ரி‌த்


 

ஈத் அல்-அதா / ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்‌!

இஸ்லாமியர்களின் பெருநாட்கள் இரண்டு. ஒன்று ஈகைத் திருநாள், மற்றது தியாகத் திருநாள். தியாகத் திருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் யாவரும் இறை தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களின் புனித வாழ்வை கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள்.

தியாகத் திருநாள் (Eid al-adha,  عيد الأضحى  ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.

ஆம், நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்த்து நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. நாமும் இப்றாஹீம் (அலை)அவர்களின் உன்னத தியாகத்தை சற்று நினைவு கூர்வோமா..

நபி ஆதம் அலைஹிவஸல்லம் முதல் முகம்மது நபி அவர்கள் வரைக்கும் மக்கள் நிலைமை சீர் குலைந்து சின்னாபின்னமாகும் போதெல்லாம் இறைவன் மக்கள் குலத்திலிருந்தே ஒரு நேர்மையாளரை தேர்ந்தெடுத்துத் தனது நேர்வழியையும், அதைப் புறக்கணிப் போர்க்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்யவதையும் நபி(தூதர்) மூலமாக அவ்வப்போது போதித்து வந்துள்ளான்.

இப்படி தோன்றிய நபிமார்கள் பலரும் ஏக காலத்தில் அல்லாது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் தோன்றினார்கள். இவர்களுள் சுமார் 4,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக மன்னன் நம்ரூது என்பவனது சமகாலத்தில் தோன்றிய நபி இப்றாஹீம் அவர்களுக்கு இறைவன் தனதரும் தூதுவத்தை அளித்தான்.

கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும் பயப்படாது ஏக இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்றாஹீம் அவர்கள் அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். இறைவனே எல்லாம், அவனுக்கு ஈடு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்த நபி இப்றாஹீம் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தபோதும் குழந்தை கிடையாது. இந்நிலையில்தான் இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் இருகரம் ஏந்தி தூஆ செய்தார்கள்.

ஒன்றுக்கு இரண்டு தாரம் இருந்தும் எனக்கு ஏன் பிள்ளைப் பாக்கியத்தைக் கொடுத்தருளவில்லை. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் ஓர் உற்ற தோழரையாவது எனக்களித்தருள்புரிவாயாக என உளமுருக பிரார்த்தனை செய்தார்கள்.

இப்றாஹீம் நபியுடைய இந்த இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான் அல்லாஹ். இப்றாஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு இறையருளால் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்கள். மட்டில்லா மகிழ்வு கொண்டார்கள் இப்றாஹீம் (அலை) அவர்கள். இறைவன் மீது அவரது பற்றுருதி மென்மேலும் பெருகியது.
இறைவன் இப்றாஹீம் நபி(அலை) அவர்களை ஒவ்வொரு முறை சோதித்தபோதும் இறை நிந்தனை செய்யாது எல்லா சோதனைகளிலும் வென்றார்கள். இறுதியாக மாபெரும் சோதனை நபி இப்றாஹீம் அவர்களுக்கு வந்தது.

ஓரிரவு இப்றாஹீம்(அலை) அவர்கள் ஒரு கனவுக் கண்டார்கள். ஆம் தன் மகனை தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போல இப்றாஹீம் (அலை) அவர்கள் கனவு கண்டார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் அர்ப்பணித்த இப்றாஹீம் நபி(அலை) அவர்கள் தாம் கண்ட கனவை செல்ல மகனிடம் அறிவித்தார்கள். இஸ்மாயில் அவர்களும் தம் தந்தையிடத்தில் இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி பணித்தார்.

தன்னைப் பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ எனக்கருதிய இஸ்மாயில் நபியவர்கள் தந்தையின் கண்களைக் கட்டினார். கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார். ஆனால் இறைவன் அந்த நரபலியைத் தடுத்து அவர்களின் தியாகத்தை மெச்சி, இதன் ஞாபகார்த்தமாக ஒரு ஆட்டை பலியிட்டு அவர்களையும் மற்றவர்களையும் புசிக்குமாறு கூறுகின்றான்.

பல பிள்ளைகளைப் பெற்றவனே தன் ஒரு பிள்ளையை இழக்க சஞ்சலப்படும்போது, ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்றாஹீம் அவர்களின் தியாகத்தை என்னவென்பது?

இப்புனிதப் பெருநாளில் நாமும் இப்றாஹீம் நபியவர்களின் தியாகத்தை மனதில் நிறுத்தி, புத்தாடை பூண்டு, அதில் நறுமணம் தடவி, பள்ளி சென்று இறைவனை இதயம் கனிந்து தொழுது உற்ற நண்பர்களுடன் உறவாடி உற்றார் உறவினர்களுடன் உளப்பூரிப்போடு நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் ஏழைகளைப் போற்றி இறைபணிந்து வாழ்வோம்.

அன்பர்களே! அப்படியே தொடர்ந்து இந்தக் கதையினையும் படியுங்கள்,

“நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி, கணபதீஸ்வர ஆலயத்திற்கு விரைந்தார்.

திருக்கோயிலில் இருந்த அத்திமரத்தின் கீழே அந்த அகோரி உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட சிறுத்தொண்டர், தம் இல்லம் வந்து உணவு சாப்பிட அழைத்தார். (இது நடந்தது சுமார் கி.பி.650 ஆம் ஆண்டு, தமிழ் மன்னன் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலம்)

“நான் வருவது இருக்கட்டும், நீதான் சிறந்த சிவதொண்டரா.? அதனால்தான் உன்னை சிறுத்தொண்டர் என்று மக்கள் அழைக்கிறார்களா.?” என்றார் அகோரி.

“அப்படியெல்லாம் இல்லை சுவாமி. சிவதொண்டர்களுக்கு விருந்து தந்து உபசரித்து அவர்கள் சாப்பிட்ட பிறகே நான் சாப்பிடும் வழக்கம். ஆதனால் என்னை சிறுத்தொண்டர் என்று அழைக்கிறார்கள்.” என்றார் பவ்யமாக.

“நான் வடதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் சாப்பிடுவதை உன்னால் தரமுடியாது. அதனால் இங்கிருந்து நீ போய்விடு. வேறு யாராவது ஒரு பிச்சைக்காரன் நீ தரும் உணவை சாப்பிட வருவான். அவனை அழைத்து போ.” என்று அலட்சியமாக சிறுத்தொண்டரிடம் பேசினார் அகோரி்.

“நீங்கள் இவ்வாறு சொல்ல கூடாது சுவாமி. உங்களுக்கு எந்த வகை உணவு வேண்டும் என்று சொல்லுங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றார் சிறுத்தொண்டர்.

“நான் பசுமாமிசம் சாப்பிடுவேன். உன்னால் அதை சமைத்து தரமுடியுமா.? என்றார் அகோரி.

“இவ்வளவுதானே. என்னிடம் பசு, எருமை, ஆடு போன்றவை இருக்கிறது. உங்களுக்கு எந்த வகை பசுவின் மாமிசம் வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.“ என்றார் சிறுத்தொண்டர்.

பலமாக சிரித்தார் அகோரி.

“நான் கூறும் பசுமாமிசம் என்பது, பசுமாடு மாமிசம் அல்ல. நரமாமிசம். அதுவும் ஐந்து வயது பாலகனாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த மகனாக இருக்க வேண்டும். அவன் உடலில் எந்த ஊனமும் இருந்திருக்கக் கூடாது. அத்துடன் அந்த பாலகன் உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும். அவனை பெற்ற தாயே அவனை பிடித்துக்கொண்டு, அந்த பிள்ளையின் தகப்பன் அந்த பாலகனை வெட்ட வேண்டும். அப்படி வெட்டபட்ட பாலகனின் மாமிசத்தை அவனை பெற்றவளே சமைக்க வேண்டும். அப்படி சமைக்கும் போது, அழுது கொண்டே சமைத்தால் நான் சாப்பிடமாட்டேன்.” என்றார் அகோரி.

சிறுதொண்டர் எதுவும் பேச முடியாமல் நின்றார்.

“என்ன யோசிக்கிறாய். உன்னால் எனக்கு உணவு தர முடியாதல்லவா. அதனால்தான் சொல்கிறேன். இங்கிருந்து போய்விடு.” என்றார் அகோரி.

“அப்படியில்லை சுவாமி. உங்கள் உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன்.”

“அப்படியென்றால் நான் இங்கேயே இருக்கிறேன். நான் கேட்ட உணவுக்கு ஏற்பாடு செய்த பிறகு வந்து கூப்பிடு. நான் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்.” என்றார் அகோரி.

யோசனையோடு கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்தார் சிறுத்தொண்டர்.

அகோரி கூறியதை அனைத்தும் ஒன்றுவிடாமல் தன் மனைவியிடம் சொன்னார். “அகோரி கேட்ட உணவு நம்மால் தரமுடியுமா.? உன் மகனை கொடு நான் சமைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர்களிடமும் நாம் கேட்கமுடியும்.? அப்படியே கேட்டாலும் அது பெரும் பாவத்தை அல்லவா நமக்கு சேர்க்கும். அகோரி ஏன் நம் வீட்டிற்கு உங்களை தேடி வந்தார்?. வந்தவர் எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறார்?. உங்கள் சிவதொண்டில் பாதகம் விளைவிக்க விதி விளையாடுகிறதோ?. இனி என்ன செய்ய போகிறீர்கள்?.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார்.

“நீ சம்மதித்தால் என் சிவதொண்டுக்கு எந்த பங்கமும் வராது“ என்ற சிறுத்தொண்டர், “நம் பிள்ளையை அந்த அகோரிக்கு உணவாக படைக்கலாம். நீ இதற்கு சம்மதிப்பாயா?.“ என்றார்.

“உங்கள் கேள்விக்கு நம் பிள்ளைதான் பதில் சொல்ல வேண்டும்.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார்.

பள்ளிக்கு சென்றிருந்த மகன் சீராள தேவனை அழைத்து வந்தார்கள். அவனிடம் விஷயத்தை சொன்னார்கள். “உங்கள் விரும்பமே எனது விருப்பம்” என்றான் தயக்கம் இல்லாமல்.


சிறுதொண்டரின் வாரிசு, சிவபக்தியில் தன் தந்தைக்கு குறைந்தவனில்லை என்பதை நிரூப்பித்தான். மகன் வெட்டப்பட்டான். பிள்ளைகறியை நன்றாக கழுவி சமைக்க ஆரம்பித்தாள். தலை கறியை அகோரி சாப்பிட மாட்டார் என்ற எண்ணத்தில் தலைகறியை சமைக்காமல் தனியாக எடுத்து வைத்தாள்.

சமையல் தயாராகிவிட்டது. நீங்கள் சிவதொண்டரை அழைத்து வாருங்கள் என்றாள் தன் கணவரிடம் திருவெண்காட்டு நங்கையர்.

கணபதீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைந்தோடி வந்தார் சிறுத்தொண்டர். அகோரியை வணங்கி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

மகன் எங்கே?

வாழையிலையின் முன்பு அமர்ந்தார் அகோரி. இலையில் பிள்ளைகறி இருப்பதை கண்டார். அவர் முகம் மாறியது.

“சிறுத்தொண்டனே. என்னை ஏமாற்றுகிறாயா. எங்கே தலைகறி.? பசியில் எனக்கு முன்னதாகவே சாப்பிட்டு விட்டீர்களா?” என்றார் கோபமாக அகோரி.

“சிவசிவா.. அப்படியில்லை சுவாமி. தலைகறி நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் என்று நினைத்து தனியாக வைத்திருக்கிறோம்.” என்றார் சிறுத்தொண்டர்.

“நாம் அதையும் சாப்பிடுவோம். கொண்டு வா.” என்றார் அகோரி.

பணி பெண்ணான சந்தன நங்கையார், சமையலறைக்கு சென்று உடனடியாக தலைகறியை சமைத்து எடுத்துவந்து இலையில் பரிமாறினாள். அகோரி சாப்பிடாமல் இருந்தார்.

“சுவாமி. ஏதேனும் குறையா.? ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்.” என்றார் சிறுத்தொண்டர்.

“எனக்கும் உன்னை போல் ஒரு பழக்கம் இருக்கிறது. நான் சாப்பிடும் போது என் அருகில் ஒரு சிவதொண்டரையும் அமர வைத்து அவருடன் சாப்பிடுவது என் வழக்கம். நீ போய் ஒரு சிவதொண்டரை அழைத்து வா.” என்றார் அகோரி.

“சுவாமி. ஏனோ தெரியவில்லை இன்று ஒரு சிவதொண்டரையும் காண முடியவில்லை. இறைவன் அருளால் நான் சிவதொண்டரான தங்களை மட்டும்தான் இன்று தரிசித்தேன்.” என்றார் சிறுதொண்டர்.

“ஓ அப்படியா. பரவாயில்லை. நீயும் சிவதொண்டன்தானே. வா. வந்து அமரு. நீயும் என்னுடன் சாப்பிடு.” என்றார் அகோரி.

அகோரியின் அருகில் அமர்ந்தார் சிறுத்தொண்டர். அவருக்கு வாழையிலையில் உணவு பரிமாறினாள் திருவெண்காட்டு நங்கையார்.

சிறுத்தொண்டர் உணவில் கை வைக்கும் போது, அவரின் கையை பிடித்து தடுத்தார் அகோரி.

“ஆமாம். உனக்கு ஒரு மகன் இருப்பதாக கேள்விப்பட்டேனே… எங்கே அவன். அவனையும் அழைத்து வா. ஒன்றாக சாப்பிடுவோம்.” என்றார் அகோரி.

“சுவாமி..அவன் வர மாட்டான்.” என்றார் சிறுத்தொண்டர்.

“ஏன் வர மாட்டான். போய் கூப்பிடு வருவான்.” என்றார் அகோரி.

தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்கள் சிறுத்தொண்டரும் அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும், பணிப் பெண் சந்தன நங்கையாரும்.

“வெளியே நின்று வாயை மூடிக்கொண்டிருந்தால் எப்படி?. வாய் திறந்து உன் மகனை கூப்பிடு வருவான்.“ என்று வீட்டுக்குள் இருந்தபடி அதட்டினார் அகோரி.

சிறுத்தொண்டரும், அவருடைய மனைவியும், “மகனே சீராள தேவா.. ஓடிவா. சிவதொண்டர் உன்னை காண அழைக்கிறார்.” என்று கதறினார்கள் சிறுத்தொணடரும் அவர் மனைவியும்.

அப்போது, “இதோ வந்துவிட்டேன் அம்மா.” என்று குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள்.

மகன் சீராள தேவன் எங்கிருந்தோ ஓடிவந்தான். தன் தாய்-தந்தையை கட்டி அணைத்துக்கொண்டான்.

சிறுத்தொண்டருக்கும் அவர் மனைவிக்கும், பணிபெண்ணுக்கும் தாங்கள் காண்பது கனவா நிஜமா என்றே நம்ப முடியவில்லை. வெட்டி கறியாக சமைக்கப்பட்ட மகன், உயிருடன் வந்து நிற்பதை கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். அவர்களின் துக்க கண்ணீர், ஆனந்த கண்ணீராக மாறியது. மகனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

வீட்டுக்குள் அகோரி இல்லை. அவருக்கு சமைக்கப்பட்ட பிள்ளைகறியும் இல்லை. மீண்டும் வெளியே வந்து அகோரியை தேடினார்கள்.

சிவதரிசனம்

அப்போது வானத்தில் சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் தோன்றினார்கள்.

“சிறுத்தொண்டனே. அகோரியாக வந்தது நாமே, உன் சிவதொண்டு உலகறியவே இச்சோதனை தந்தோம். நம் தொண்டர்களில் சிறந்தவன் நீ என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள். உனக்கும் உன் மனைவி திருவெண்காட்டு நங்கையாருக்கும், மகன் சீராள தேவனுக்கும், பணிப்பெண்ணான சந்தன நங்கையாருக்கும் நாம் அருள் புரிந்தோம். எல்லா வளங்களையும் பெறுவீர்களாக” என்று ஆசி கூறினார்.”

இறைவனை நம்பினால் சோதனைகள் யாவும் கடந்து வந்துவிடலாம். இறைவன் தரும் சோதனைகளை அனுபவங்களாக தாங்கினால், ஒருநாள் உலகபுகழும் கிடைக்கும். பொறுமை என்ற வரத்தை எல்லோருக்கும் தந்தே இருக்கிறார் இறைவன். அந்த வரத்தை நாம்தான் பயன்படுத்த வேண்டும். இன்னல்களை கண்டு மனம் கலங்காமல் பொறுமை என்கிற வரத்தை பயன்படுத்தினால், நீங்காத பெருமை சேரும் என்ற உண்மையை நமக்கெல்லாம் உணர்த்தினார் பரஞ்சோதியார் என்கிற சிறுத்தொண்ட நாயனார்.

அன்பர்களே! இப்போது நாம் 4000 வருடங்களுக்கு முன்பு தற்போதய ஈராக்கில் நடைபெற்ற இறைவனின் திருவிளையாடலையும், 1363 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த இறைவனின் திருவிளையாடலையும் படித்தோம்.

இவையிரண்டிலும் இறைவன் / இறையடியவர் பிள்ளைக் கறியினை விரும்பியதாக அறிகிறோம். முதல் கதையில் இறைவன் விரும்பியப்படி பிள்ளையினை பலி கொடுக்கவே இல்லை. மாறாக ஒன்றுமறியாத ஆட்டினை பலிகொடுக்க இறைவன் கூறியதால், அவ்வாடு பலியானது.

இரண்டாம் கதையில், இறையடியவர் ஐந்து வயது பிள்ளையினை பலி கேட்க, தனது பிள்ளையினையே வெட்டி பலி கொடுத்து சமைத்து சாப்பிடத் துவங்கியதை படித்தோம். இந்த இருகதைகளிலும் இருந்து நமக்கு இறைவன் கூறும் உபதேசம் / உண்மைதான் என்ன?

இரண்டாம் கதையில் நடந்த தியாகத்தை, ஏன் நாம் முதல் கதையில் நடந்த தியாகத்தை நினைவு கூறும்படி இன்று நடக்கும் திருவிழாவினைப் போன்று கொண்டாடவில்லை?

இவை இரண்டில் எந்த இறை தொண்டர் உண்மையில் 'தியாகம்' செய்தார் என்பதனை இந்த இருகதைகளையும் மீண்டும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆட்டை தியாகம் செய்தவரா? தனது பிள்ளையினை தியாகம் செய்தவரா?

உணவில் சைவ பழக்கத்தை மேற்கொண்டவர், இறையடியவருக்காக தனது பிள்ளையைக் கொன்று சமைத்தவர் செய்த தியாகம் பெரிதா? அல்லது உணவில் அசைவ பழக்கத்தை மேற்கொண்டவர், இறைவனுக்காக ஒன்றுமறியாத ஆட்டைக் கொன்றவரின் தியாகம் பெரிதா?

இறையடியவர் சாப்பிடவேண்டும் என்று தனது மகனை தியாகம் செய்தது பெரிதா? தாங்கள் பங்கிட்டு சாப்பிடுவதற்காக ஆட்டை தியாகம் செய்தது பெரிதா?

எந்த இறைவன் பெரியவன்? என்று கேட்கமுடியாது. ஏனெனில் இரண்டு நிகழ்ச்சியிலும் திருவிளையாடல் செய்தது, ஒரே இறைவனாகத்தான் இருக்கமுடியும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால் அதன் உண்மையினை அறியாமல், நாம் நமக்கு வசதியானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை திருவிழாவாக தொடர்ந்து சடங்குகளாக கொண்டாடிவருகிறோம் என்பதுதான் சகிக்கமுடியாமல் உள்ளது.

ஆட்டினை வெட்டு தியாகம் செய்தார் என்பதற்காக, நாம் இவ்வுலகில் அதேபோல் ஆட்டினை வெட்டி பலியிட்டு உண்பதனை திருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். ஒருவேளை அந்த அடியார், இறைவன் கனவில் கூறியவாறு தனது மகனை பலியிட்டு தியாகம் செய்திருந்தால், உலக மக்களாகிய நாமும் அதே போன்று பலியிட்டு அந்த அடியவரின் தியாகத்தை வருடாவருடம் திருவிழாவாகக் கொண்டாடியிருப்போமா?

அன்று பலியிட்டது ஒரு ஆடுதான். அதற்காக அன்றைய வருடத்திலிருந்து இந்த வருடம்வரை எத்தனை கோடி கோடி ஆடுகள் இறைவன் பெயரால் பலியிட்டு உண்ணப்பட்டன? என்று அந்த இறைவன் கண்டிப்பாக அறிவான். இறைவன் ஆட்டை பலியிடசொன்னது அந்த அடியவரின் பக்தியினை சோதிப்பதற்காகத்தான். நம்மையெல்லாம் எந்த இறைவன் வந்து பலியிடசொன்னான் என்று தெரியவில்லை.

அந்த அடியவரின் பக்தி உண்மையானது எனில், அவர் நேரில் வந்த இறைவனிடம், "ஏதும் அறியாத இந்த ஆட்டினை பலிகொடுப்பதில் என்ன தியாகம் இருக்கப்போகிறது? எம் இறைவா! அதனால் தாங்கள் கனவில் கூறியபடி எம்மகனையே பலி கொடுத்து தியாகம் செய்ய விரும்புகிறேன்" என்றுதானே கூறியிருக்க வேண்டும். இந்த பதிலையே இறைவனும் அந்த அடியவரிடம் எதிர்பார்த்திருப்பான். ஆனால் நடந்தது வேறு, இன்று நடப்பதும் வேறாக உள்ளது. நம்முடைய நாவின் சுவைக்காக பலியிட்டு உண்டு ஏப்பமிடுவதற்க்காக, வசதியாக நமக்கு நாமே விதிகளை அமைத்துக்கொண்டு, இறைவன் கூறினான் என்று அவன் மீதே பழியினை போட்டு விழாக்களை கொண்டாடி வருகின்றோம் என்பதே உண்மை.

இறைவன் இவ்வுலகில் பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறுபட்ட அடியவர்களை / தீர்கதரிசிகளை அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கின்றார் என்று நாம் நம்புகின்றோம். நாளையும் பல இறையடியவர்கள் இம்மண்ணில் பிறப்பார்கள். இவர்களில் பலரது உபதேசங்களில், புலால் உண்பது தவறு என்றும், இறைவனின் பெயரால் பலியிடுவது தவறு என்றும் கூறியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

பல மதத்தவர்கள் பலியிடுவதெல்லாம், தன்னுடைய உணவிற்க்காகத்தானே அன்றி இறைவனை மகிழவைக்க அல்ல. துன்புறுத்தும்போதும் கொலையுறும்போதும் உடம்பில் தோன்றும் வலியும், உணர்வில் தொன்றும் வலியும், உயிரில் தோன்றும் வலியும், நரம்பில் தோன்றும் வலியும், எலும்பில் தோன்றும் வலியும், பாசப்பிணைப்பினால் வரும் வலியும் எல்லா உயிர்களுக்கும் ஒன்றாகவே ஓரிறைவன் படைத்துள்ளான் என்பதை அறிய எந்த இறைதூதரும் / இறையடியவரும் / நீங்களும் / நானும் / எவரும் தேவையில்லை, நமது மனசாட்சியே / அறிவே போதும். மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் எவ்வுயிருக்கும் துயரம் கொடுக்காமல் வாழ்ந்து அந்த ஓரிறைவனின் உலகை அடைவோம். இறைவனை நினைக்கும் பொருட்டு மகிழ்ச்சியாக நாம் கொண்டாடும் விழாக்களில், எவ்வுயிரையும் அழவைக்க வேண்டாமே.

உலக மக்களுக்கு எமது ஈத் அல்-அதா / ப‌க்‌ரி‌த் நல்வாழ்த்துகள்.  நன்றி.

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி

     

 

 

  

 

  

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.