Tuesday, November 24, 2015

விடு நீறே

திருவருட்பிரகாச வள்ளலாரின் வழியை நாடுபவர்கள் முதலில் சமயமத சடங்குகளை விடுத்தல் வேண்டும். விபூதி பூசுதல் சைவ சமயத்திற்கு உகந்தது. சன்மார்க்கம் அதனைக் கடந்தது. தயவு செய்து சன்மார்க்கிகள் அதனைக் கடந்து வரவேண்டும். பழக்கம் நம்மை அதிலே இழுக்கும். பல ஆயிரங்கணக்காண கற்பங்களின் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். ஜீவ காருண்ய தயவு வந்தால் எல்லாவற்றையும் விட்டு அக்கணமே விடுபடலாம். 

                                                                    விடு நீறே
                                                         (தி.ம.இராமலிங்கம்)

                                                              கலி விருத்தம்

அருட் பெருஞ்ஜோதி அருள் செய்கையில்
குருவருள் எல்லாம் கூடி வருகையில்
மருள்நெறி எல்லாம் மருண் டோடுகையில்
திருநெறி மார்க்கத்தில் தீதாம் விடுநீறே.        1

சுத்த சன்மார்க்கம் சுகந் தருகையில்
நித்தம் நினைக்கும் நெஞ்சம் வருகையில்
சித்த மார்க்கமெலாம் சுருண்டோ டுகையில்
பித்த னெனப்படும் பதரை விடுநீறே.            2

ஞான சபையுள் ஞானம் வருகையில்
வானத்தின் மீதுமயில் வந்தா டுகையில்
கான மதமெல்லாம் குதித்தோ டுகையில்
ஈன சாம்பலை இகழ்ந்து விடுநீறே.            3

வடலூர் பூசம் வந்து பார்க்கையில்
மட மாதர் மயக்கம் தீர்கையில்
இடர் உலக இச்சை விடுகையில்
சுடலை மறக்க சினந்து விடுநீறே.            4

எமபயம் கடந்து எல்லாந் தானாகையில்
நமசிவாய மந்திர நிலை கடக்கையில்
சமயமத வழக்கெலாம் சட மாகையில்
கமலம் மலர்ந்து கூடவே விடுநீறே.            5

ஜீவ காருண்யம் ஜீவனில் இருக்கையில்
ஈவதெனும் மூன்றும் அவனுக்கு அளிக்கையில்
பாவமெனும் மரணம் படுகுழி வீழ்கையில்
சாவதெனும் பழி சாராது விடுநீறே.            6

சாகாக் கல்வியைசுத்த சன்மார்க்கம் அளிக்கையில்
வேகாக்காலை சன்மார்க்க விவேகம் தருகையில்
போகாப்புனலை சன்மார்க்க போகம் விழைகையில்
ஏகாதிபதி அப்பனை இசைந்து விடுநீறே.        7

எல்லா உயிரும் இன்புற்று இருக்கையில்
நல்லான் நடுவில் நெற்றிக்கண் திறக்கையில்
வல்லான் பூட்டை வள்ளல் திறக்கையில்
பொல்லான் பூசும் பூதியாம் விடுநீறே.            8

மாட விளக்கு மாண்புற எரிகையில்
நாட அதனையே நடனம் காணுகையில்
வேடம் போடும் வித்தை மறைகையில்
கூட வருவாரவர் கூடவே விடுநீறே.            9

பொது மார்க்கம் பாரினில் பரவுகையில்
இதுஅது எனஉரைப்பது அரிதா கையில்
மது மயக்கமாம் மதம் ஒழிகையில்
சது மறைகளும் சாய்ந்திட விடுநீறே.            10

For e-book....



https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWdU1seXlWQm9LYjg/view?usp=sharing



 

Friday, November 20, 2015

தேனெனும் மழையில்...!!!

தேனெனும் மழையில்...!!!
            (தி.ம.இராமலிங்கம்)

 எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


மூன்றுநாள் தொடர் மழையிலே தமிழகம்
    மூழ்கிப் போச்சு அரசினை
ஏன் என்று கேட்கவும் ஆளில்லை
    எங்கள் கதியைப் பார்த்து
நான் இருக்கிறேன் என்றவர் அடியும்
    நீர் நிலத்தில் படவில்லை
வான் படைத்தக் கடவுள் இவரென
    வீண் போயினர் மக்களே.                1

மக்களின் வரிப் பணத்தால் இயங்கும்
    மக்க ளாட்சியில் மழைநீரில்
சிக்கியே மக்கள் மாள்வதோ அய்யகோ
    சவங்களுக்கு சில லட்சம்
முக்கிய அமைச் சர்களின் நிவாரணம்
    முழுங்கின சில லட்சம்
மக்கித் தவிக்கும் மக்களின் நிரந்தர
    மறதியால் பிழைக்கும் அரசே.            2

அரசின் நிர்வாக அலங்கோலம் எல்லாம்
    ஆட்டங் கண்டது அன்றோ
இரக்கம் இருப்பின் இணையும் நதிகள்
    இங்கு இருப்பதை சுருட்டும்
அரக்க அரசால் அடைந்தன கால்வாய்
    ஆழ் குளங்களும் ஏரியும்
நரக வாசிகளால் நகரமாயின நீள்
    நதியும் வழியில்லாது விழித்ததே.        3

விழித்திருக்க இயலாது வளர்ந்த சமூகம்
    விதிவழி செல்லுதே ஆண்டுகள்
கழிந்தும் இன்னும்நாம் வசிக்கும் இடம்
    குளங்குட்டை சாக்கடை என்றால்
அழிக்க எழுவாய் அரசினை மனிதா
    ஆள்வதும் நாம்தானே அசிங்கம்           
இழிவாய்ப் பாட எனக்கும் உண்டே
    இனிஇயங்காய் சன்மார்க்கர் ஆளவே.        4




ஆள்பவர் கோடிகோடியாய் அள்ளிச் செல்ல
    ஆட்சியை பிடித்து நடிப்பார்
நாளெல்லாம் நல்லன நாடிச் செய்வார்
    நயமாய் அதில் காசும்பார்ப்பார்
தாளிலே வீழ்ந்து கையிலே கொடுத்து
    தவறாது ஓட்டும் கேட்பார்
காளி பூசையில் ஆட்டின் கதியாய்நாம்
    கையூட்டு பெற்றால் இக்கதிதானே.        5

தானே புயலால் தலைகள் உருண்டினத்
    தடயங் கண்டும் நம்மரசு
மானே போல்ஆண்டு மென்ன கடலூர்
    மக்கள் மாண்டு போனரே
தேனே போல்வந்த மழையும் நம்மை
    தேள்என கொட்டிய தென்ன
வானே போல்அர செங்கும் ஊழலால் 
     வளர வாழ்கநம் ஆட்சியே.            6

ஆட்சியர் வந்தார் அமைச்சரும் வந்தார்
    ஆடிய வீட்டுக்குள் ஆமைபோல
கூட்டத்தில் இருப்போர் கூப்பாடு போட்டதும்
    கூசாமல் சாப்பாடும் போட்டனர்
நாட்டாமை சொன்னதால் நானிங்கு வந்தேன்
    நீட்டுதல் கூடாது என்னிடத்திலென
மாட்டாமல் கூறிமதி கெட்டு ஓடினர்
    மக்களும் மழையாய்க் கொட்டினரே.        7

கொட்டின மழைக்கு கூடாரம் எங்கேநம்
    கைகள்வெட்டின கால்வாய் எங்கே
மொட்டையாய் நின்ற ஏரிகள் எங்கே
    மலர்ந்தநீர்த் தேக்கங்கள் எங்கே
கொட்டையால் விளைந்த மரங்கள் எங்கே
    கட்டையில் போகிறவன் காசுக்கு
பொட்டைப் போல் விற்றானே இனிநாம்
    பட்டைக்கு போவதுதான் எங்கே.            8

எங்கேஅந்த வள்ளுவர் எங்கேஅந்த வள்ளலார்
    ஏனிந்த அவலம் தமிழனுக்கு
சங்கேமுழங்க ஆண்ட அரசெல்லாம் பார்த்த
    சீர்போற்றும் இனம் இன்று
சங்கேஊத தூக்கிச் செல்லும் சடமானதே
    சென்னை வாசிகளும் மாரியால்
மங்கியே போனரே இனிஇலவசம் கொடுத்து
    மிரட்டும் அரசை மதியீரே.                9

மதியிருக்கு நமக்குஅதை மறவாதே இனியும்
    மதுஉண்டு மாண்டுப் போகாதேநம்
விதிஎன்று சொல்லும் வல்லான் காலை
    வணங்காதே நதிகளை இணைக்க
நிதி கொடுப்பாரை ஆட்சியில் நிறுத்தினால்
    நலங் கொடுக்கும் நமக்குவேறு
கதியில்லை சொன்னேன் உனக்கு சன்மார்க்கக்
    கலை ஆளும்நாளே நன்னாள்.             10


https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWcnprelVSNDQ1OUU/view?usp=sharing

Saturday, November 7, 2015

இராமலிங்க அந்தாதி - 6



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                          இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா


இந்தியவர் யாவரும் இணைந்து சன்மார்க்க
சிந்தனை வயத்தாலே சிறப்பர் - நிந்தனை
மயலுறும் தீய மதுவினை ராமலிங்கமே
தயவற ஒழிப்பதேநல் தேசம்.

தேசம் ஆள்பவர் தன்குடி மக்களிடம்
வேசமிட்டு ஓட்டு வாங்குவர் - நீசமான
மதுக் கடை மயக்கத்தில் ராமலிங்கமே
பொது எனப்போனது போதை.

போதைதரும் மதுவின் பொல்லாத அந்தப்
பாதையில் பணம் பார்ப்பதாஅரசு - சீதையர்
சீரழிந்து குடும்ப சோகமுற ராமலிங்கமே
வேரறுக்கும் அரசு வேண்டாம்.

வேண்டாமிந்த பழம் வேதாந்த ஆட்சியைக்
கூண்டோடு ஒழிக்கக் கூடுவோம் - ஆண்டாண்டு
காலம் மதுவைக் காட்டுவித்து ராமலிங்கமே
கூலம் ஆக்கினர் கூத்தாடிகள்.

கூத்தனும் மானமின்றி காட்டிய லிங்கத்தால்
கூத்தியும் தோற்றக் கதையாச்சு - சாத்திர
மதுவால் மயங்கின மக்களை ராமலிங்கமே
எதுவெனச் சொல்லி ஏற்றுவேன்.

ஏற்றுமிந்த போதையை ஊட்டுகின்ற அரசினை
வீற்றிருக்க விடுவதா விவேகம் - மாற்றுமிந்த
மதிகெட்ட அரசை மாய்க்க ராமலிங்கமே
விதியொன்று செய் வந்து.

வந்தாரெலாம் சட்டமியற்றி வன் மதுவினை
சந்தைப்படுத்தும் அரசைச் சார்ந்தார் - மந்தை
மனிதனும் சிந்திக்க மறந்து ராமலிங்கமே
கனியெனக் கொல்லியைக் கொண்டனர்.

கொண்ட கொள்கையைக் கைகழுவி காசுக்காக
கண்டதை விற்கும் காட்டரசு - முண்டங்கள்
அதைவாங்கிக் குடித் தாடுவர் ராமலிங்கமே
கதை என்றாச்சுதிருக் குறள்.
குறள் படிக்கலையோதிருக் குறள்என்று சிலர்
அறவோன்போல் மக்களிடை ஆடுவர் - மறக்காது
அவர் மதுவாலை ஏந்திடுவார் ராமலிங்கமே
இவரும் அமைச்சரானார் இங்கு.

இங்கு மங்குமோடி உழைத்தப் பணம்குடும்ப
மங்கையர்க்கே என முழங்கிடு - எங்குமாய்
விளங்கும் மதுக்கடை வில்லியை ராமலிங்கமே
களத்திலிருந்து ஓடக் காட்டு.                  510

காட்டிலோர் குரங்கும் குடும்பத்தைக் காத்திட
வாட்டமாய் இருந்து வாழும் - நாட்டிலே
மனிதன் மட்டும் மதுகுடித்து ராமலிங்கமே
இனிதானக் குடும்பத்தை அழிக்கிறான்.

அழிப்பதில் மதுவிற்கோர் இணை வேறில்லை
விழித்திருந்து அதனை வெல்வாய் - இழிவான
வாழ்வினை ஏனோ விரும்பினாய் ராமலிங்கமே
ஊழ்வினை என்பதிலில்லை உண்மை.

உண்ணாமை வேண்டும் உலகியலர் மதுவினை
எண்ணாத நிலையருள வேண்டும் - கண்ணான
மனைவியை அடிக்கும் மனிதனை ராமலிங்கமே
நினைத்தாலே நெஞ்சு நடுங்கும்.

நடுநடுங்கி ஒடுங்கி நடுத்தெருவில் நாயென
கடுஞ்சொல் ஏந்திக் கிடப்பாய் - விடுவதாய்
இல்லை மதுகுடித் தாடுவதை ராமலிங்கமே
தில்லையும் காணாத துள்ளாட்டமிது.

ஆட்டங்காணும் அரசுகளே ஆண்மை இருப்பின்
ஓட்டு மிந்தமதுவாம் அரக்கனை - ஓட்டுக்காக
நாட்டிலே நல்லவனாய் நடித்து ராமலிங்கமே
காட்டு விலங்கும் கட்சிநடத்தும்.

நடந்தவனின் வேட்டி நழுவிகால் தடுக்கிக்
கிடந்தான் வீதியில் கடவுளே - மடமான
சமுதாய வீதியில் சன்மார்க்கமா ராமலிங்கமே
அமுதந் தரினும் ஆருக்குவேணும்.

வேணுமா இந்தஉறவு வெள்ளாடை மனிதரில்
காணுவ தெல்லாம் கயமைதானே - நாணுவாய்
நாட்டினில் மதுவிற்க நாணுவாய் ராமலிங்கமே
வீட்டினைப் போன்றதே வீதியும்.

வீதிக்கொரு நூலகம் வேண்டும் விரைவான
நீதியை மக்கள்பெறும் நாடுவேண்டும் - சாதி
வேரினை பிடுங்க வேண்டும் ராமலிங்கமே
பாரினில் மதுஒழியப் பார்க்கவேண்டும்.
பார்க்கு மிடமெல்லாம் பாழும் மனிதன்
வேர்க்க உழைத்து வாடுகிறான் - ஈர்த்து
அவன் பணத்தை அடித்து ராமலிங்கமே
கவருமிந்த அரசுமதுக் கடை.

கடைவிரித்து அதற்கு காவலும் காத்து
மடைதிறந்து வருகிறது மது - தடை
விதிக்க அரசு விழிக்க ராமலிங்கமே
மதிகெட்டது மக்கள் மாண்பு.                  520

மாண்புள்ளோர் மனமும் மாதுவின் காமத்
தூண்டிலில் சிக்கித் துடிக்குமே - வீணெனத்
தெரிந்தும் காமத் துயரால் ராமலிங்கமே
எரிந்து வீழ்வர் அனுதினம்.

தினந்தினந் தோன்றும் தீயக்கனலாம் காமம்
வனத்தீப் போலப்பரவி வாட்டும் - சினங்
கொண்டு அதனைக் களைய ராமலிங்கமே
வெண்டும் உனது வல்லபம்.

வல்லானை நினைந்து வடலூர் சென்றுவர
பொல்லாத காமம் பொடிபொடியாகும் - நல்
அடியாரின் பார்வை ஆழ்ந்திட ராமலிங்கமே
படியாத எதுவும் படிந்திடும்.

படிந்திடா மனத்தால் பாரினில் காமுகர்கள்
தடித்து செய்யும்செயல் துடித்திடும் - கடிந்து
தண்டனை யுற்றாலும் துளிரும் ராமலிங்கமே
கண்ணென இருந்தால் களையும்.

களையும் வகைசொல்வேன் கேளாய் காமம்
விளைகையி லவன்நாமம் விழைந்திடு - துளை
சீழ்க்குழி உனை சீரழிக்கும் ராமலிங்கமே
கீழ்விழும் மார்க்கம் காமம்.

காமத்தால் எழுந்தக் கடவுள்சிலை காண்பதும்
நாமத்தை சொல்வதும் நன்னன்று - தாமதம்
ஆனாலும் அருள்ஜோதி ஒன்றே ராமலிங்கமே
தானாகவந்து காமம் தணிக்கும்.

தணிந்த தாகம்போல் தணிவதல்ல காமம்
அணியான வாழ்க்கையை அழித்திடும் - பணி
புரியும் இடத்தில் பாய்ந்திடும் ராமலிங்கமே
நரிபோல் நாய்போல் நேரிடும்.

நேரிட்ட காமத்தை நயமாய் அறுத்திட
போரிட்டு அழித்தால் போமோ - காரிட்ட
மழை போல் மனத்தில் ராமலிங்கமே
இழையா யிருக்ககாம மறும்.
அறுத்தோட வேண்டும் ஆங்கே மல்லிகை
நறுமணம் வந்தாலும் நில்லாதே - மறுத்து
நின்றால் காமத்தின் நிழலால் ராமலிங்கமே
தன்னொளி நீங்கி இருளும்.

இருளால் வருமிந்த இன்பக் காமத்தைஅவ
னருளால் நீக்குவதே அறம் - பொருளால்
பரத்தியை தழுவப் பார்த்தால் ராமலிங்கமே
நரகில் புழுவாய் நெளிவாய்.                         530

நெளிகின்ற கண்களால் நிகழுமிந்த காமத்தால்
தெளிவில்லாதோர் அடைவர் துயர் - களிக்கக்
கள்ளுண்டோரை பிடிக்கும் காமம் ராமலிங்கமே
பள்ளிக் கூடப்புனிதம் போகும்.

போகின்ற பெண்பின்னால் போகின்ற புத்திக்கு
யோகியானும் போகியாகினும் யாரோ - ஆகிய
காமம்உனை யாரென்று காட்டும் ராமலிங்கமே
பூமனத்தாருக்கிது தீட்டு பாரும்.

பார்த்தப் புராணக்கதை பலவும் காமத்தைச்
சார்ந்த பாலியல்புதை சகதியே - நீர்அதனை
புனிதநூல் என்றால் புவியில் ராமலிங்கமே
மனிதம் விரைந்து மறையும்.

மறையட்டும் காமத்து மலர்கள் எங்கும்
நிறையட்டும் அன்பின் நிரல்கள் - பறை
ஒலி முழங்க ஒளியான ராமலிங்கமே
கலிபுருடன் ஓய்ந்தானெனக் கூறும்.

கூறுகின்ற சித்தரெல்லாம் காம நினைவை
சீறுகின்றார் தடுக்கவே சாடுகின்றார் - வீறு
கொண் டெழும் காமத்தை ராமலிங்கமே
மண்மூடிப் போகவே முழங்கு.

முழங்கிய அருட்பா முண்டைகள் என்றே
அழகாய் காமத்தை அறுக்கும் - குழலூதி
குறும்புகள் செய்யும் கதையை ராமலிங்கமே
மறுத்தால் இல்லை மோகம்.

மோகமும் காமமும் மதுவால் எழுகின்ற
நாகவிஷ மெனவேஅதை நாடாதே - தாகம்
தீர்க்க மேகத்தைத் துளைப்பதோ ராமலிங்கமே
சீரிளம் பெண்களைச் சீராட்டு.

ஆட்டும் கோலினா லழைத்து மங்கையர்
தீட்டுச்சீழினை தொடும் தீயவர் - காட்டும்
காமத்தில் இல்லை கருணை ராமலிங்கமே
நாமசமரச பஜனையே நலம்.
நலமாவெனக் காமப்பயல் நாடுவான் அவனை
மலமாகவே நீயும் மதித்திடு - குலத்தை
அழிக்கும் காமத்தை அழிக்க ராமலிங்கமே
வழியொன்று சொல்லாய் வந்து.

வந்த மனிதருள் வாழ்ந்தோரெல்லாம் இங்கு
அந்தக் காமத்தால் அழிந்தாரே - சொந்தமாய்
உரைக்கின்றேன் கேளீர் உலகீர் ராமலிங்கமே
கரை சேர்க்கும்நல் காமம்.                          540

காமமுறும் செயல் கொடுமையால் பலர்
தாமதியாது கொலை தீர்ப்பர் - ஈமத்தை
செய்வாரும் இந்தச் செயலை ராமலிங்கமே
பேயும் செய்யாதென பழிப்பர்.

பழிக்கு ஆளாக்கும் படுபாதகக் கொலைக்கு
வழியாகும் மங்கையர் விழிகள் - இழித்துப்
பேசி யதனைப் பற்றாது ராமலிங்கமே
கூசியிருப்பார்க்கு இல்லை குற்றம்.

குற்றமே யானாலும் கொலை செய்வார்
கற்ற நூல்காமக் கதையானால் - சுற்றமே
எனினும் கொலைக்கு அஞ்சார் ராமலிங்கமே
கனிரசம் செய்விக்கும் கொலை.

கொலை செய்வான் கொற்ற வனாகினும்
வலைபடுவார் நரக வாயிலில் - தலை
வெட்டுங் கூட்டம் வெட்க ராமலிங்கமே
ஏட்டுமதக் கல்வியை எதிர்.

எதிரியை அழிக்க ஏந்திய ஆயுதத்தால்
சதிசெய்து கொலை செய்வர் - அதிவீரர்
எனவே நாடும் எண்ணும் ராமலிங்கமே
சினங் கொண்டார் சிறப்பதேது.

ஏது கொள்கின்றீர் எல்லையென வகுத்து
வாது புரிந்து வருகின்றீர் - மாதுக்காக
கொலை புரிந்த கயவனாய் ராமலிங்கமே
பாலைக்காக புரிதலும் பாழாம்.

பாழாகப் போகுமிந்தப் பாரினில் மனிதன்
வீழாத நாளில்லை வீணினில் - தாழாத
அன்பினால் ஓர் உலகத்தை ராமலிங்கமே
தன்னதாய் காண்பவன் தலைவன்.

தலைக்குத் தலை தலைவனென ஆயுத
மலை குவித்து மாள்வர் - கொலை
செய்ய ஆயுதம் செய்வித்து ராமலிங்கமே
நய்ய புடைப்பர் நாடுகளை.
நாடென்று உலகத்தில் நாட்டி உலகரை
சாடென்று பிரித்து சாய்ப்பர் - கூடொன்று
காணார் போர்க் கொலையால் ராமலிங்கமே
வீணாக மனிதர் வீழ்ந்தனர்.

வீழ்த்தும் மனிதன் வீரரே ஆனாலும்கொலை
ஆழ்த்தும் விசேஷபாவத்தில் அவரை - ஏழ்
பிறவியும் கொலை பாவம் ராமலிங்கமே
உறக்கமின்றி செய்யும் உன்னை.                     550

உன்னோடு வாழும் ஈஎறும்புகொசு எலிகளைக்
கொன்றாலும் கொலை குற்றமே - என்றாவது
தேள்பாம்பு பூராண் தீண்டினாலும் ராமலிங்கமே
வாளென கொல்லுதல் வேண்டாம்.

வேண்டுமே உயிரோடுறவும் வயிறார உணவும்
ஆணோடு பெண்ணும் இன்பமே - காணும்
உயிர்கள் கொலை உறாது ராமலிங்கமே
பயிலுதல் வேண்டுமிப் பாரினில்.

பாரினில் மனிதரெல்லாம் பசியாற பயிரினை
ஊரினுள் விளைத்து உண்க - காரிருள்
கண்டிடும் உயிர்க் கொலையால் ராமலிங்கமே
அண்டிடும் வினைகள் ஆயிரம்.

ஆயிரங்கோடி உயிர்கள் ஆனந்தமாய் பூமியில்
தாயெனும் தயவில் தழைக்கும் - ஆயினும்
அதனை கொலைசெய்து உண்ண ராமலிங்கமே
இதனை கண்டிப்பார் இல்லை.

இல்லை என்பதில்லை என்னும் மளவிற்கு
கல்வியும் அறமுமாய்க் கண்உண்டு - எல்லாம்
வல்ல இறையான வெளியுண்டு ராமலிங்கமே
அல்லலுறும் கொலையும் உண்டு.

உண்ணக் கொலைசெய்த ஊன்எனும் பிணம்
மண்காணாது வயிற்றில் மாண்டது - எண்
கோணம் புகவே கொலையை ராமலிங்கமே 
ஆணையிட்டு தடுத்தான் அன்று.

அன்று உணவிட்டு இன்று உணவாக்குவதற்கு
அன்பின்றி செய்வர் உயிர்க்கொலை - தன்னூன்
பெருக்க என்னும் பாடலை ராமலிங்கமே
உருகிப் படிப்போருக்கே அருள்.

அருளுக வெனவே ஆடிமாதம் முழுதும்கோவில்
கருவறையில் கற்பூரம் காட்டுவான் - பருத்த
கோழியாடு மாடுபலி கொடுக்க ராமலிங்கமே
ஆழிப்பொங்கி அழித்து ஆடும்.
ஆடுகின்றார் அருள்வந்த தெனஉளறி கோவிலில்
ஆடுவெட்டும் அறிவிலி எல்லாம் - கூடுவிட்டுப்
போனதைக் கூடி பிணந்தின்னிகளாம் ராமலிங்கமே
ஈனப் பிழைப்பிற்குபெயர் அருளாம்.

ஆம்என்று தலையாட்டுதாம் ஆடுஅதை கொலை
தாம்செய்யவதே அம்மன் தயவாம் - நாம்
கேட்பதை அம்மன் கேட்பதாய் ராமலிங்கமே
ஆட்படுத்தும் பக்தி அசிங்கம்.                        560

அசிங்க மென்று அறிந்தும் பிறரின்
பசி போக்கும் பருப்பினை - ருசிக்க
விடாது பதுக்கும் வீனரை ராமலிங்கமே
தொடாது போகுமோ துயர்.

துயரறுக்க நாம் தலை எடுத்ததைஓர்
மயக்கத்தா லிதை மறந்து - கயவுச்
செயலை இங்கே செய்ய ராமலிங்கமே
தயவுசெய் அதைத் தடுத்து.

தடுத்த மனமதைத் தாண்டி பிறர்பொருளை
எடுக்கத் துணிந்தேன் அந்தோ - கொடுக்கும்
பண்பிலேன் இந்தப் பயலை ராமலிங்கமே
எண்ணினும் திருந்துமோஎன் எண்ணம்.

எண்ணத்தில் களவை ஏந்தி புறத்தில்நல்
வண்ணமாய் நடந்த வில்லன் - தண்ணீரில்
நடந்தேனும் பிறர் நயக்க ராமலிங்கமே
உடமையைத் திருடி உழன்றேன்.

உழலும் வாழ்க்கையின் உண்மை தெரியாது
அழகாய் இருக்க ஆசைப்பட்டு - இழவு
வீட்டிலும் கைக்கு வந்ததை ராமலிங்கமே
கூட்டித் திருடியே கூத்தடித்தேன்.

அடித்தத் தந்தையின் ஆடையில் இருந்த
மடித்தப் பணத்தைத் திருடியே - குடிக்கப்
போன இந்தப் புலையனும் ராமலிங்கமே
தானமிடும் மனிதனும் திருடன்.

திருடனுக்குக் கூட திருவென்ற மரியாதையை
அருளுடன் கொடுக்கும் தமிழ் - பொருள்
உடையார் யாரும் உவந்தால் ராமலிங்கமே
உடைத்துத் திருட உளம்வராது.

உளத்திலே திருஆடன் ஊன்றி ஆடுகையில்
களவிலே மனம் செல்லுமோ - களவாய்
ஆட்கொள்வான் நம்மை அந்த ராமலிங்கமே
காட்டிக் கொடுப்பான் கடவுளை.

கடவுளைக் காட்டும் குருநாதர் நானென்று
மட மாந்தரை மயக்குவர் - நடங்காணாது
நடராஜ சிலையை நாதனென ராமலிங்கமே
தடமில்லாது சொல்வர் திருடர்.

திருடும் தொழில் தனக்கில்லை என்பார்
குருடனிடமும் லஞ்சம் கேட்டு - கருணை
யுடனே அவனுக்கு உதவுவார் ராமலிங்கமே
விடம் குடித்தாலுமிவர் வீழார்.                      570

வீழாத நெஞ்சும் வினைஎனைப் பற்றிடா
பாழாத வாழ்வுக்கும் பணிந்தேன் - தாழாத
நிலையில் எனை நிறுத்தும் ராமலிங்கமே
வலையில் களவாடவே வந்தேன்.

தேனென இனிக்கஅதனைத் திருடவே வந்தேன்
ஏனென எனைக்கேட்பார் உண்டோ - நானென
நீயிருக்கும் நிலை வேண்டும் ராமலிங்கமே
தீயிருக்கும் நடுவைத் திறவாய்.

திறந்துக் கிடந்தும் திருவை அடையாது
இறந்து வீணே இளைத்தேன் - மறந்தும்
இனிஉனைப் பிரியேன் இனிய ராமலிங்கமே
தனித்திருந் துனைத் திருடுவேன்.

திருட்டுப் பொருளை தீண்டி அனுபவிக்க
இருட்டு இடத்தில் இருந்தேன் - குருட்டுப்
பயலின் நடுவிழிப் பார்க்க ராமலிங்கமே
தயவால் என்னுள் தெரிந்தான்.

தெரியாம லாசையால் திருடியப் பொருளால்
உரிமை யுடையாரை அழச்செய்தேன் - நரியென
இருந்த வர்கூடவே அழுதேன் ராமலிங்கமே
வருத்த முற்றவன்போல் வாடினேன்.

வாடியப் பயிரால் வாடியோரைக் கண்டு
கூடியே சிரித்துக் களித்தேன் - ஓடினேன்
திருடி விட்டு  திக்கெட்டும் ராமலிங்கமே
அருளடிக்கு ஆசை ஒன்றிலேன்.

ஒன்றினில் ஒன்றிலேன் ஒன்பது ஓட்டையுள்
நன்றியோடு இருந்திலேன் நான் - என்றும்
பிறதேகம் திருடி பிறந்தேன் ராமலிங்கமே
இறவாத தேகம்எனக் கிதுதான்.

இதுதான் நான்திருடிய இறுதி தேகம்
அதுபெயரும் நின்பெயரும் ஒன்றே - மது
அருந்தி பிழற்றுபவன் அல்லன் ராமலிங்கமே
உருமறைவேன் இங்கு உனைப்போல்.

உனைப்போல் வாழ உரிமை எனக்குண்டென்று
எனையேத் திருடி ஒளிந்தேன் - ஞானதேகம்
எனக்கும் அருளி எனைஏற்றிய ராமலிங்கமே
உனக்கும் எனக்குமோர் உறவு.

உறவை பிடிக்கும் உளவான களவை
மறக்குமோ எனது மனம் - உறங்காது
உறங்குவேன் தினம் உன்னை ராமலிங்கமே
மறக்காது இருப்போர் மனதில்.                       580

மனசாட்சி எல்லாம் மனிதருக்கு அன்றோ
தினம்பொய் சாட்சிசொல்லித் திரிவேன் - இனம்
எம்மினம் எதுவென்று அறியேன் ராமலிங்கமே
வம்பிற்கே சென்றேன் வன்மத்தோடு.

வன்மம் மனதிலே வாய்மை தெரியலே
கன்மம் புரியலே காமம் - என்றாலே
கண்ணும் தெரியல காதலை ராமலிங்கமே
எண்ணும் போதும் எரிகிறது.

எரித்த முப்புறமும் எழுந்து வந்துஎன்
துரியத்தை யடைந்து துள்ளுது - சரிந்த
பொய்மேனி போல் போமோ ராமலிங்கமே
ஒய்யார தேகமாய் ஒளிர்வேன்.

ஒளியே ஆனானென ஒருபொய் சொல்ல
வெளியேப் போவென விரட்டாய் - வளியாகி
என்னுடல் வெளியும் உள்ளும் ராமலிங்கமே
தன்மூச்சை சுவாசிக்கத் துனிந்தேன்.

துனிந்துப் பொய்யே துயரறுக்கப் பாடினேன்
இனிய வாழ்வளிப்பாய் என்றே - கனியப்
பாடு மிந்தப் பாடலெல்லாம் ராமலிங்கமே
கூடுவிட்டுப் போகாது காக்கும்.

காக்கும் மந்திரமாய் காட்டும் அந்தாதியை
நாக்கால் பாடிட நலமுண்டாம் - வாக்கில்
பொய் உரைப்பினும் புண்ணிய ராமலிங்கமே
வாய் திறப்போர்க்கு வாய்ப்பளிப்பான்.

வாய்த் திறந்தால் வீட்டைக் காக்கும்
நாய்கூட குலைக்கும் நாயக - தாய்யென
நீயிருக்க என்வீடு நீடுவாழ ராமலிங்கமே
கோயிலென காவலாய் குடியிரு.

குடியிருக்கும் கோயில் கண்டேன் அங்கே
அடியிருக்கும் இடம் கண்டேன் - முடியிருக்கும்
இடமும் கண்டேன் இங்கே ராமலிங்கமே
நடமிடும் சபையும் நான்தான்.

நானில்லை அவனில்லை நீடுலகும் இல்லை
வானில்லை இறையில்லை வாழும் - தானில்லை
ஏனில்லை என்போரும் இல்லை ராமலிங்கமே
ஊனில்லை உயிரில்லை இல்லை.

இல்லை என்பார்க்கு அறிவுதான் இல்லை
கல்லைக் காணிணும் கடவுளாமே - எல்லை
இல்லா அண்டமும் உயிரும் ராமலிங்கமே
வல்லானென வசிக்கும் வீடு.                              590

வீடுதான் எத்தனையோ விடுத்து வந்ததால்
காடுசெல்லும் பாதை கூடுமோ - மாடுபோல
உழைத்தாலும் மரண அடியை ராமலிங்கமே
விழைந்து ஏற்குதேஎன் வினை.

வினைதான்என் செய்யும் வம்மின் உலகீர்
எனைப்போல் ஏறுமின் என்றீர் - பனைபோல்
வளர்ந்தப் பாவியுன் வரத்தை ராமலிங்கமே
உளமாற ஏற்காது உழன்றேன்.

உழன்ற உலகியல் உண்மையை உணர்ந்தும்
கழல மனமின்றி கலங்கினேன் - நிழலை
நிஜமென்று நம்பும் நிலை ராமலிங்கமே
பஜனைப் பாடினால் பறக்கும்.

பறக்கவே நாள் பார்த்து நானிருக்கும்
உறவான உடம்பை ஒடுக்கித் - துறந்தால்
என்னைப் போலொரு எதிரியை ராமலிங்கமே
என்னுடம்பு பார்த்திராது இல்லையா.

இல்லை எனாது எனக்காக என்னுடன்
நல்லபடி வளர்ந்த நல்லுடலை - அல்லலுற
விடுவனோ நானும் விண்ணில் ராமலிங்கமே
சடுதியில் உடலுடன் சேர்வேன்.

சேர்ந்தேன் திருக்கூட்ட சேர்ப்பில் நானும்
கூர்ந்து கற்றேன்சாகாக் கல்வியை - நேர்நின்று
அருளாளர் வருகின்ற அத்தினம் ராமலிங்கமே
பொருள் யாவும் பெறுவேன்.

பெறுவேன் என்றில்லை பெற்றேன் யாவும்
சிறுவயதில் எனினும் சிறியேன் - உறும்வயதில்
நரையும் பெற்று நாணினேன் ராமலிங்கமே
கரை சேர்ப்பாயெனை கறையின்றி.

கறை யொன்றும் காணேன் கதிரொளியால்
மறையின்றி கண்டு மலைத்து - சிறை
பட்டுப் போனேன் புண்ணிய ராமலிங்கமே
சிட்டுக் குருவிக்கு சிறகெதற்கு.

சிறகின்றி பறக்கும் சித்தனென ஆனேன்
விறகின்றி சமைக்கும் வித்தையால் - திற
என்றவுடன் திறந்தன எல்லாம் ராமலிங்கமே
நன்றி சொல்லுமென் நாளும்என்நா.

நாவினால் உனைப்பாடி நாளும் அழுதே
ஆவியோடு ஆக்கையும் இணைய - சாவிபெற்று
வந்தேன் பெருவாழ்வு வாழ ராமலிங்கமே
எந்தை சிந்தையில் என்றும்நில்.                           600


FOR PDF FILE, YOU CAN GO TO BELOW LINK...



https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWlktcVZ4Q25OZkE/view?usp=sharing

(இராமலிங்க அந்தாதி - தொடரும்)