Friday, November 20, 2015

தேனெனும் மழையில்...!!!

தேனெனும் மழையில்...!!!
            (தி.ம.இராமலிங்கம்)

 எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


மூன்றுநாள் தொடர் மழையிலே தமிழகம்
    மூழ்கிப் போச்சு அரசினை
ஏன் என்று கேட்கவும் ஆளில்லை
    எங்கள் கதியைப் பார்த்து
நான் இருக்கிறேன் என்றவர் அடியும்
    நீர் நிலத்தில் படவில்லை
வான் படைத்தக் கடவுள் இவரென
    வீண் போயினர் மக்களே.                1

மக்களின் வரிப் பணத்தால் இயங்கும்
    மக்க ளாட்சியில் மழைநீரில்
சிக்கியே மக்கள் மாள்வதோ அய்யகோ
    சவங்களுக்கு சில லட்சம்
முக்கிய அமைச் சர்களின் நிவாரணம்
    முழுங்கின சில லட்சம்
மக்கித் தவிக்கும் மக்களின் நிரந்தர
    மறதியால் பிழைக்கும் அரசே.            2

அரசின் நிர்வாக அலங்கோலம் எல்லாம்
    ஆட்டங் கண்டது அன்றோ
இரக்கம் இருப்பின் இணையும் நதிகள்
    இங்கு இருப்பதை சுருட்டும்
அரக்க அரசால் அடைந்தன கால்வாய்
    ஆழ் குளங்களும் ஏரியும்
நரக வாசிகளால் நகரமாயின நீள்
    நதியும் வழியில்லாது விழித்ததே.        3

விழித்திருக்க இயலாது வளர்ந்த சமூகம்
    விதிவழி செல்லுதே ஆண்டுகள்
கழிந்தும் இன்னும்நாம் வசிக்கும் இடம்
    குளங்குட்டை சாக்கடை என்றால்
அழிக்க எழுவாய் அரசினை மனிதா
    ஆள்வதும் நாம்தானே அசிங்கம்           
இழிவாய்ப் பாட எனக்கும் உண்டே
    இனிஇயங்காய் சன்மார்க்கர் ஆளவே.        4




ஆள்பவர் கோடிகோடியாய் அள்ளிச் செல்ல
    ஆட்சியை பிடித்து நடிப்பார்
நாளெல்லாம் நல்லன நாடிச் செய்வார்
    நயமாய் அதில் காசும்பார்ப்பார்
தாளிலே வீழ்ந்து கையிலே கொடுத்து
    தவறாது ஓட்டும் கேட்பார்
காளி பூசையில் ஆட்டின் கதியாய்நாம்
    கையூட்டு பெற்றால் இக்கதிதானே.        5

தானே புயலால் தலைகள் உருண்டினத்
    தடயங் கண்டும் நம்மரசு
மானே போல்ஆண்டு மென்ன கடலூர்
    மக்கள் மாண்டு போனரே
தேனே போல்வந்த மழையும் நம்மை
    தேள்என கொட்டிய தென்ன
வானே போல்அர செங்கும் ஊழலால் 
     வளர வாழ்கநம் ஆட்சியே.            6

ஆட்சியர் வந்தார் அமைச்சரும் வந்தார்
    ஆடிய வீட்டுக்குள் ஆமைபோல
கூட்டத்தில் இருப்போர் கூப்பாடு போட்டதும்
    கூசாமல் சாப்பாடும் போட்டனர்
நாட்டாமை சொன்னதால் நானிங்கு வந்தேன்
    நீட்டுதல் கூடாது என்னிடத்திலென
மாட்டாமல் கூறிமதி கெட்டு ஓடினர்
    மக்களும் மழையாய்க் கொட்டினரே.        7

கொட்டின மழைக்கு கூடாரம் எங்கேநம்
    கைகள்வெட்டின கால்வாய் எங்கே
மொட்டையாய் நின்ற ஏரிகள் எங்கே
    மலர்ந்தநீர்த் தேக்கங்கள் எங்கே
கொட்டையால் விளைந்த மரங்கள் எங்கே
    கட்டையில் போகிறவன் காசுக்கு
பொட்டைப் போல் விற்றானே இனிநாம்
    பட்டைக்கு போவதுதான் எங்கே.            8

எங்கேஅந்த வள்ளுவர் எங்கேஅந்த வள்ளலார்
    ஏனிந்த அவலம் தமிழனுக்கு
சங்கேமுழங்க ஆண்ட அரசெல்லாம் பார்த்த
    சீர்போற்றும் இனம் இன்று
சங்கேஊத தூக்கிச் செல்லும் சடமானதே
    சென்னை வாசிகளும் மாரியால்
மங்கியே போனரே இனிஇலவசம் கொடுத்து
    மிரட்டும் அரசை மதியீரே.                9

மதியிருக்கு நமக்குஅதை மறவாதே இனியும்
    மதுஉண்டு மாண்டுப் போகாதேநம்
விதிஎன்று சொல்லும் வல்லான் காலை
    வணங்காதே நதிகளை இணைக்க
நிதி கொடுப்பாரை ஆட்சியில் நிறுத்தினால்
    நலங் கொடுக்கும் நமக்குவேறு
கதியில்லை சொன்னேன் உனக்கு சன்மார்க்கக்
    கலை ஆளும்நாளே நன்னாள்.             10


https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWcnprelVSNDQ1OUU/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.